நாமெல்லாம் வயிறு நிறைய உண்கிறோம், உண்ட உணவு நம்மையறியாமல் ஆயிரக்கணக்கான தாக்கங்களுக்குட்பட்டு செரிமானமடைந்து கடைசியில் மலமாகின்றது. அதனை அடுத்த நாள் இலேசாக கழித்து விடுகிறோம். இதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை. ஆனால், இந்த பதிவில் வரும் ஜெஸிக்காவைப் போன்று இந்த உலகில் வாழ்கின்ற பல ஆயிரம் பேருக்கு இது ஒரு பாரமான சுமை. வயிற்றில் இருக்க வேண்டிய மலத்தை மடியில் சுமப்பது, அதுவும் 24 மணிநேரமும் மடியில் சுமப்பது....
இந்தப் பூமியில் ஒருவன் 10 தசாப்தங்கள் தான் வாழ்ந்தாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களை விட 10 மாதங்கள் கர்ப்பத்தில் வாழ்கின்றபோது விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் என்கிறது மருத்துவ உலகம் ஒரு குழந்தை சாதாரணமாய் பிறக்கின்றதென்றால் அது விபத்துக்களில் இருந்து தப்பிப் பிறந்த அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.
அதற்காக நாம் இறைவனுக்கு நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் சில சிசுக்கள் விபத்துக்களில் சிக்கிவிடுவதுடன் அதன் பாதிப்பு பிறந்தது முதல் மரணிக்கும் வரை அவர்களில் நிலைத்திருந்து நோயாளியாய் வாழ்ந்து மரணிப்பதும் நாம் காணும் யாதர்த்த நிலை.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்(Birmingham) என்ற மாநகரில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை ஜெஸிக்கா அந்நகரிலுள்ள பிரபலமானதொரு மருத்துவமனையில் சாதாரணமாகப் பிறந்தது. இந்த மருத்துவமனையில் சில மாதங்கள் நானும் கடமைபுரிந்தேன்.
சாதாரண கர்ப்பம்,சுகமான பிரசவம்.அழகிய பெண்குழந்தை பிறந்துவிட்டது. பிறந்த குழந்தை அழுதது,பால் குடித்தது. கண்களை விரித்துப் பார்த்துத் தான் வந்து சேர்ந்த இந்த விசித்திரமான பூமியை ஒருமுறை நோட்டமிட்டு விட்டு மீண்டும் தூங்கியது. குழந்தைகளுக்குரிய பண்புகளான அழுவது,பால்குடிப்பது,தூங்குவது என்ற வட்டத்திற்குள் இந்தக் குழந்தையும் வாழ்க்கையைத் துவங்கியது.பொற்றோரும் உற்றார் உறவினரும் இந்தக் குழந்தைச் செல்வம் கொண்டு வந்த பாசத்தின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஜெஸிக்கா பிறந்து இரண்டாவது நாள் மாலை வேளை குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருந்தனர்.
வீடு செல்லுவதற்கு முன்னர் சிறுவர் நோய் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்து திருப்தியடைந்த பின்னரே மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது வழக்கம். வழமைப்போல் அன்று மாலை எனக்கு தாதியிடமிருந்து அழைப்பு வந்தது: “குழந்தை ஜெஸிக்காவின் பெற்றோர் வீடு செல்ல ஆயத்தமாயிருக்கின்றனர். தயவுசெய்து குழந்தையைப் பரிசோதித்து விட்டுச் செல்லுங்கள்.”
குழந்தையை பரிசோதிப்பதற்கு முன்னால் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
“ குழந்தை பால் குடிக்கின்றதா?”
“ ஆமாம், ஒரு பிரச்சினையும் இல்லை”
“ அதிகம் அழுகிறதா?”
“இல்லை, சாதாரணமாய் இருக்கின்றது”
“சிறுநீர் கழித்ததா?”
“ ஆமாம் பலமுறை. கீழாடை (Nappy) ஈரமாய் இருந்ததால் மாற்றி விட்டோம்” என்று பதிலளித்த தாய். அடுத்த கேள்விக்கு அளித்த பதில் கதையை தலைகீழாய் புரட்டிவிட்டது.
“ குழந்தை மலம் கழித்ததா?”
“இன்னும் இல்லை டாக்டர்” என்று பதில் வந்தது பதில். இரண்டு நாட்களாகி விட்டது; குழந்தை மலம் கழித்திருக்க வேண்டுமே!” என்று சொன்னவாறு நன்றாகப் பரிசோதிக்க ஆரம்பித்தேன்.
" Everything OK?-எல்லாம் சரிதானா?” என்று கேட்டார் அந்தத் தாய்.
“ஆம்” என்று சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆதங்கம் இருந்தபோதும்....
“இன்னும் மலம் கழிக்கவில்லை என்று சொன்னீர்கள். துரதிஷ்டவசமாக குழந்தையின் விருத்தியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஜெஸிக்கா மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் பிறந்திருக்கிறாள்” என்று சொன்னபோது “What? What? What?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.
“ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?”
கருப்பையில் வளரும் சிசுவின் குடல் விருத்தியடையும் போது வாயில் ஆரம்பித்த துவாரம் மலம் கழிக்கும் பின் துவாரம் வரை ஒரு குழாய்(Tube) போல் விருத்தியடையும்.
வாய் என்ற துவாரத்தில் ஆரம்பிக்கும் செரிமானத் தொகுதி, உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல் என்ற அமைப்பாக மாறி ஒவ்வோர் அமைப்பும் தனக்கேயுரிய தொழிற்பாட்டைச் செய்ய, உணவு செரிமானமடைய கடைசியாக மலமாக மாறும். அது பெருங்குடலின் எல்லையான குதம் (Anus)என்ற மலம் கழிக்கும் துவாரத்தினூடாக வெளியேற்றப்படும். தேவையானபோது துவாரத்தைத் திறப்பதற்கும் பின்னர் அதனை மூடிவிடுவதற்கும் இறுக்கமான மூடி(Anal Sphineter) அந்த இடத்தில் இருக்கிறது.
இதுதான் இயற்கையாக இறைவன் ஏற்படுத்திருக்கும் அற்புதமான அமைப்பு. இயற்கையான இந்த அமைப்பில் சில விபத்துகள் ஏற்படும்போதுதான் படைப்பின் அற்புதத்தை, அவசியத்தை உணர முடிகின்றது.
ஜெஸிக்காவிற்கு என்ன நடந்தது? பெருங்குடல் தனது எல்லையான உடலின் வெளிப்புறத் துவாரம் (Anus) வரை விருத்தியடையவில்லை. மாறாக வயிற்றுக்குள்ளே இடையில் மூடப்பட்டுவிட்டது. அதாவது பெருங்குடலின் கடைசி 4-5 செ.மீ. தூரம் குடல் இல்லை. இதனால் செரிமானமடையும் பால் மற்றும் உணவு வெளியேற்றப்படாமல் குடலில் தேங்கி குடல் விரிந்து விரிந்து பெரிதாகி வீங்கும். மலம் கழிக்கும் வெளிப்புறத் துவாரம் எதுவும் இல்லாமல் சாதாரண தோலால் மூடப்பட்டு உடலின் ஏனைய பகுதிபோன்று சாதாரண தோலாக இருக்கும் இது(Imperforate Auns) என்று அழைக்கப்படுகிறது.
|
வளர்ச்சியற்ற பெருங்குடல் |
“ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?” என்று ஆச்சரியத்தோடும் ஏமாற்றத்தோடும் கண்ணீர் மலகக் கேட்டார் அந்தத் தாய்.
“ஆம் 5000 இல் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்க முடியும்.என்று சொன்னபோது தடுமாறிப்போன அந்தத் தாயின் வாய் வார்த்தைகள் இன்றி மெளனமாகிப் போனது.
“ஜெஸிக்கா எப்படி மலம் கழிப்பாள் டாக்டர்?” சில நிமிடங்கள் மெளனமாய் இருந்துவிட்டு மீண்டும் கேட்கிறாள் அந்தத் தாய்.
ஜெஸிக்காவின் தாயிடம் பதிலளிக்க ஆரம்பித்தேன். “ஜெஸிக்காவின் பெருங்குடலில் கடைசி 4-5 செ.மீ. விருத்தியடையவில்லை.குதம் வயிற்றுக்கு வெளியே வராமல் வயிற்றுக்குள்ளேயே மூடப்பட்டு விட்டது. இதனால் மலம் குடலில் தேங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே,கவனமாக மலத்தை வெளியேற்றி நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து ஜெஸிக்காவைப் பாதுகாப்பதற்காகவும் மலம் கழிக்கம் ஏற்பாட்டை செய்வதற்காகவும் வயிற்றில் ஒரு துவாரமிட்டு குடலை அந்தத் துவாரத்தினூடாக இழுத்து வந்து மலத்தை வயிற்றுக்கு வெளியே கழிக்கும் ஓர் அமைப்பைச் செய்ய வேண்டும். இதற்காக அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று சொன்னதும் அந்தத் தாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
|
மலப்பை(Colostomy Bag) யோடு குழந்தை |
இந்த அறுவைசிகிச்சை (Colostomy) என்று அழைக்கப்படுகின்றது. வயிற்றில் ஏற்படுத்திய இந்தத் துவாரத்தினூடாக மலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கொஞ்சம் கொஞ்சமாய் வந்து கொண்டிருக்கும். சாதாரணமான நிலையில் குடலின் எல்லைக்கு வரும் மலம் Rectum என்ற குடலின் பகுதியில் நாம் மலம் கழிக்கும் வரை தேங்கியிருக்கும். ஆனால், இத்தகைய நோயாளிகளுக்கு Rectum இல்லாதிருப்பதால் மலம் தேங்க முடியாது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
இதனை வயிற்றுக்கு வெளியே சேர்த்தெடுப்பதற்கு வயிற்றில் ஏற்படுத்திய துவாரத்தில் ஒருவகைப் பை(Colostomy Bag) ஒன்று ஒட்டி வைக்கப்படும். இந்தப் பை நிறையும்போது அதனை எடுத்து வீசிவிட்டு புதிய பையை இணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு சிலவேளைகளில் 5-6 பைகள் மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு விட்டால் பாவம் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும்.
|
மலப்பை(Colostomy Bag) |
“ எனது குழந்தை வாழ்நாள் முழுவதும் மலத்தை மடியில் சுமக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்டார் அந்தத் தாய்” மலத்தை மடியில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏன் எனது குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று சொல்லியவாறு அழுது கொண்டிருந்தார் அந்தத் தாய்.
அடுத்த நாள் அவசரமாக Colostomy அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. உடலின் கீழ்ப்புறத்தில் மறைந்திருக்க வேண்டிய இயற்கைத் துவாரம் இல்லாமல் வயிற்றில் இடதுபுறமாய் துளைக்கப்பட்டு செயற்கையான துவாரம் ஏற்படுத்தப்பட்டு Colostomy Bag இணைக்கப்பட்டது.
“இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கப்படுத்தாமல் உடலின் கீழ்ப்புறம் அதற்கேயுரிய இடத்தில் ஏன் செயற்கையான துவாரம் ஏற்படுத்த முடியாது? தயவுசெய்து அப்படியான ஒரு ஏற்பாட்டையாவது செய்யுங்கள்? என்று மன்றாடினாள் அந்தத் தாய்.
இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கமாக்கி அதனை ஒரு மலகூடமாய் மாற்ற மருத்துவர்களுக்கும் உடன்பாடில்லை. இருந்தபோதும் வேறுவழியில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழல்.
உடலின் கீழ்ப்புறம் மறைந்த இடத்தில் துவாரமிட முடியும். ஆனால் குடல் 4-5 செ.மீ. குள்ளமாக இருப்பதால் அதனை கீழ்ப்புற எல்லைக்கு கொண்டு வர நீளம் போதாது. மேலும் கீழ்ப்புறமாய் துவாரமிட்டால் தொடர்ந்தும் 24 மணிநேரமும் சேரும் மலத்தை சேர்த்தெடுக்கும் Colostomy Bag ஐ கீழ்ப்புறத்தில் இணைப்பதற்கு ஒரு ஆதாரம் (Base) இல்லை ஒரு ஆதாரம் இல்லாமல் Bag ஐ இணைக்க முடியாது. இப்படி பல பிரச்சினைகள் இருப்பதால் மலங்கழிக்கும் துவாரத்தை வயிற்றில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இரண்டாவது நாள் இன்பமாய் வீடு செல்ல வேண்டிய ஜெஸிக்காவின் பெற்றோரும் உறவினரும் இரண்டு வாரங்களுக்குப் பின் ஜெஸிக்கா மலத்தை மடியில் சுமக்க,ஜெஸிக்காவை சுமந்தவாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றபோது...
மலத்தை மடியில் சுமந்து வயிற்றை மலகூடமாக்கும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமானவனாக என்னை வாழ வைக்கும் இறைவனுக்கு எனதுள்ளம் பல நூறு தடவைகள் (அல்ஹம்துலில்லாஹ்) நன்றி சொல்லிக் கொண்டது.
நன்றி Dr.முஸ்தபா ரயீஸ் (MBBS,DCH,MD,MRCPH)
Peadiatric Intensivst, Cardiac PICU
Hariey street Hospital,London
நன்றி அல்ஹஸனாத் மாத இதழ்