Friday, August 26, 2011

அநியாயமான மரணதண்டனைக்கு எதிராக போராடுவோம்.

பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.


தன் மகனுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 20  வருடங்களாக தண்டனை அனுபவித்து விட்டார். அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெளிவாக கூறுகிறார் பாருங்கள். அவரை தீவிரவாதி, கொலையாளி என்று ஊடகங்கள் எப்படி தவறான பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள் என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக ஊடகக் காரர்களை நோக்கி அவர் கோபமாக வைக்கும் கேள்விகளுக்கு விடை இல்லை.



இதே போல் கோயமுத்தூர் குண்டுவேடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வாடும் அப்பாவி சிறைக்கைதிகளின் தாயின் குடும்பத்தாரின் கண்ணீரை பாருங்கள்.

ராஜீவ் காந்தியையும், பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அப்பாவி பொதுமக்களையும் கொன்றவர்கள், கோயமுத்தூரில் பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்று இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் குற்றமற்றவர்களை தண்டித்து விடாதீர்கள்.

Monday, August 22, 2011

'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு


பிலால், இறைத்தூதரின் நெருங்கிய தோழர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டிடும் இறைத்தூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாக இருந்து, விடுவிக்கப்பட்டு, இஸ்லாமிய வரலாற்றின் நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால்(ரலி) அவர்கள் தன் குரலிலேயே கூறினால் எப்படி இருக்கும்...? ஹெச்..எல்.க்ரெய்க் இந்நூலினை அமைத்திருக்கும் விதம் வரலாறு வாசிப்பில் ஒரு புத்தனுபவம்.


இந்த புத்தகத்தை படிக்க கையிலேடுத்தவன் கிழே வைக்க மனமில்லை வார்த்தைகள் அழகாக கோர்க்கப்பட்டு அழகு தமிழ் நடையில் உண்மையில் வாசிப்பில் புது அனுபவத்தை உணர்ந்தேன் அதனை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.


பிலால் அடிமை எனும் நிலையில் அவரின் வார்த்தைகள்.

எதையும் அறிந்தவனல்ல அடிமை. அவன் எப்போதும் எதிர்பார்த்திருப்பவன். எஜமானின் குரலை ஒத்த வேறு குரல் ஏதும் அவனுக்கில்லை. எஜமான் அழைக்கும் போது அவனது குரலோசையிலிருந்து ஒளிந்துக் கொள்ள முடியாது. அவன் அழைக்கும் தொனிக்க்குள் அல்லது அவனது விழிக்குள் இல்லாது போனால் நீ ஒழிந்தாய். அவன் உன்னை வாங்கியுள்ளான்,அதன் விலை-உனது எஞ்சியிருக்கும் வாழ்க்கை.

பிலால் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்ட போது


இஸ்லாத்தை ஏற்ற அம்மார் எனும் அடிமை சித்ரவதை செய்வதற்காக என் எஜமானனிடம் கொண்டு வரப்பட்டபோது அங்கு சுவரில் சாய்ந்து நின்றேன் நான்.அம்மாரிடம் என் எஜமான் “முஹம்மது உமக்கு என்ன போதிக்கிறார்?”
 “உலகத்து மக்கள் அனைவரும், ஒரு சீப்பின் பற்களைப் போல இறைவன் முன் சமமானவர்கள்.”


இந்த சில சொற்கள் கேட்டு, சுவரில் சாய்ந்திருந்த ஓர் அடிமை, பிலால் ஆகிய நான் என் உடல் முழுவதும் குளிர்ந்து நடுங்குவதை உணர்ந்தேன். முகம் சிவந்தவராக என் எஜமான் பிழம்பானதையும் உணர்ந்தேன். எஜமானுக்குரிய அதே நாடித்துடிப்பு அடிமைக்கும் இருப்பதில்லையே!
“என்ன எஜமானுக்கு அடிமை சமம் என்றா சொல்கிறாய்...?” சலசலக்கும் பட்டின் அசைவொலியோடு அம்மரை நெருங்கிய என் எஜமான் உமையா வினவினான்.

இஸ்லாத்தை ஏற்று சுகந்திர மனிதராக இறைத்தூதருடன் பிலால்


என் கரம் பற்றிய முஹம்மது, முதன் முதலாகத் தன் அருகே அமர்வதற்காக என்னை இழுத்தார். நான் தயக்கம் காட்டியிருக்க வேண்டும். என் வாழ்நாளில் ஒருபோதும் குறைஷிய(உயர் குலத்தைச் சேர்ந்த) வம்சத்தவர் எவர் முன்னாலும் அமர்ந்திருந்ததில்லை. நிற்பது மட்டுமே என் உரிமை. தயங்கினேன் நான். அதை முறிக்கவென முஹம்மது கூறினார்:"நாம் நின்று கொண்டிருந்தால் அலீ தமது வித்தைகளை காட்டமாட்டார்" அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது தொடங்கியது எம் தோழமைத்துவம்.

உத்தமர் அபூபக்கர் பிலாலின் அடிமை சிந்தனையை தகர்த்து ஏறிதல்.


"ஆ பிலால்...பிலால்... நீர் செய்வதற்குப் புதிய அலுவல் ஒன்று உண்டு. இதுவரையும் உழைக்காத வகையில் நீர் இனி உழைப்பீரா?”

நான் என்ன பதில்தான் கூறலாம்? "அப்படியே எஜமான்!"என்றேன்.

என் பதில் அவரைத் துயருத்தியது. என் சொந்த இருளுலகில் மீண்டும் நான் பாதம் பதித்து, அவரது பார்வையிலிருந்து மறைந்து விட்டேன். என் முன்னைய அடிமைத் தனத்துள் மீண்டும் மூழ்கி விட்ட நான் அளித்தது அடிமையின் விடை - 'அப்படியே எஜமான்!'.நான் தலை தாழ்த்தி நின்றது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்தது.

அபூபக்கர் அவர்கள் கையில் வைத்திருந்த பால் வாளியைக் கிழே வைத்து, எனது இரு செவிகளையும் பற்றிய அபூபக்கர் தனது நெற்றியை எனது நெற்றியில் முட்டியவராகக் கூறினார்: "நான் சொல்வதைக் கேளும் பிலால்! நீர் ஒரு சுகந்திர மனிதர். உமக்கு எஜமானர்கள் இல்லை. ஆனால் சுகந்திரவானாக இருக்க நீர் கற்க வேண்டும்."

நெற்றியின் மோதுதலது தாளத்துக்கேற்ப ஆம்... ஆம்... என்றேன் நான்.

சட்டேன சிரித்து அவர் என் செவிகளை விடுத்தார். “நான் உமக்கு என்னதான் கற்பிப்பேன்? உம்மை யாரும் அழைக்கும்போது கலவரம் அடையாதிருக்க... பிறர் முகங்களை தயக்கமின்றி ஏறிட்டு நோக்கிட... உமது நிழல் நிச்சயமாக உமதே என்ற உணர்வு கொள்ள... ஆம்... இவையேல்லாம் முக்கியமானவை.”

இப்படி புத்தகம் முழுவதும் பிலால் (ரலி) அவர்களின் வரலாறு அழகான கோணத்தில் நாம் முன் விரிகிறது.

வெளியிடு
மெல்லினம் பதிப்பகம்
ஆங்கில ஆசிரியர்
ஹெச்.ஏ.எல்.க்ரெய்க்
தமிழில்
அல்-அஸுமத்

Sunday, August 21, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம்-2)

இமாம் புகாரி(ரஹ்) அவர்களைப் பற்றியும்.
அவர்களின் பல நூல்களில் ஒரு நூலான புகாரி கிதாபை பற்றியும்.
இந்த நூலை இமாமவர்கள் ஏன் தொகுத்தார்கள் என்பது பற்றியும். 
புகாரி நூலில் அப்படி என்ன சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றியும்.

இனி விரிவாகப் பார்ப்போம்.





முதலில் இமாம் புகாரி அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். 'இமாம் புகாரி' இவர்கள் யார்? இவர்களின் பெயரென்ன? அனைவராலும் புகாரி என்று அழைக்கப்படுகிறார்களே? ஆனால் அவர்களின் சொந்தப் பெயர் புகாரி அல்ல. 'புகாரி' என்பது அவர்கள் பிறந்த ஊரின் பெயர். 'புகாரா' என்ற ஊரில் பிறந்தார்கள். 'புகாரி' என்றால் அரபியில் 'புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்' என்று பொருள். சரி அவர்களுடைய சொந்த பெயரென்ன? அவர்களின் சுருக்கமான பெயர் 'முஹம்மத்'. முழுப் பெயர் 'முஹம்மத் இப்னு இஸ்மாயில் இப்னு இபுராஹீம் இப்னு முகீரா'

இமாம் புகாரி அவர்கள் அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அவர்கள் அரபியும் அல்ல. ஆனால் அரபிகள் மட்டுமல்ல, எவரும் செய்ய முடியாத மாபெரும் பணியை இஸ்லாத்திற்காக செய்திருக்கிறார்கள். தன் முழு வாழ்வையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தார்கள். தமிழகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருக்கும் நாத்திக/கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிலர் அறியாமையில் தமிழ் முஸ்லிம்கள் அரபியர்களுக்கு அடிமையாக இருப்பதாக அள்ளி விடுகின்றனர். 

ஆனால் இன்றைய உஸ்பெக்கிஸ்தானில்/ அன்றைய ரஷ்யாவில் பிறந்த இமாமவர்கள் முழு இஸ்லாமிய உலகிற்கும் (அரபியரையும் சேர்த்து) ஒப்பற்ற ஒரு நூலை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமான 6 ஹதீஸ் கிரந்தங்களையும் எழுதியவர்கள் ஒரிஜினல் அரபிகள் அல்ல. அரபிகளின் வழித்தோன்றல்கள் கூட கிடையாது. ஆகவே இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது; எல்லா இனத்திற்கும் உரியது என்பதுதான் உண்மை. 

இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குகிறான். வரும் காலங்களிலும் உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

இமாம் புகாரி அவர்களுக்கு அபார நினைவாற்றல்களை இறைவன் வழங்கியிருந்தான். அது அன்று தேவைப்பட்டது. அந்த ஆற்றல்கள் இன்று காண‌க் கிடைக்காது. அக்காலம் கணினி காலமல்ல. அக்கால அறிஞர்களின் மூளைகள் கணினிகளாக ஆக்க‌ப்பட்டிருந்த. எனவே இலட்சக்கண‌க்கான ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசைகளுடன் மனனம் செய்திருந்தார்கள்.

இன்று யோசித்துப் பாருங்கள்! நாம் ஒரு 5000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் மன‌னம் செய்ய முடியுமா? ஏன்.. இமாமவர்கள் பல இலட்சம் ஹதீஸ்களை ஆய்வு செய்து, தரம் பிரித்து, தேர்ந்தெடுத்த 7000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் நம்மால் மன‌னம் செய்ய முடியுமா? ஆனால் புகாரி இமாமவர்கள் அந்த ஹதீஸ் துறையிலேயே முழு வாழ்வையும் செலவழித்து நமக்கு பேருதவி செய்திருக்கிறார்கள்.
இமாமவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் தனது 10 வயதில் முழுமையாக மன‌னம் செய்திருந்தார்கள். இமாம் புகாரி அவர்களின் மாணவர், அவர்களின் எழுத்தாளர் 'முஹம்மது இப்னு அபீ ஹத்தீம் அர்வர்ராஹ்'என்பவர் தன் ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் கூறுகிறார்:

"ஒருமுறை, தாங்கள் எத்தனை வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே ஹதீஸ்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இயற்கையாக அதிகமாக இருந்தது என்றார்கள். அப்போது உங்களுக்கு எத்தனை வயதிருக்கும் என்று வினவினேன்? 9 அல்லது 10 வயது இருக்கும் என்றும், 16 வயதில் ('அப்துல்லாஹ் இப்னு முபராக்' என்பவர் இமாமவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த ஹதீஸ் துறையில் புலமைப் பெற்ற மிகப்பெரிய அறிஞர் ஹிஜ்ரி 181 ல் மரணித்தவர்கள்) அந்த அறிஞரின் நூலை முழுமையாக மன‌னம் செய்திருந்தேன் என்றும், அதேபோல இமாம் ஷாஃபி அவர்களின் பிரபல ஆசிரியரான 'வக்கியா இப்னு ஷர்ரா' அவர்களின் சட்ட நூல்களையும் மன‌னம் செய்திருந்தேன் என்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அந்த சமகாலத்தில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட 'முஹ்தஜ்லாக்கள்' என்ற பிரிவினரின் வாதங்கள், தர்க்கங்கள், அவர்கள் முன் வைக்கின்ற நியாயங்கள் இவைகளையும் அவர்களின் நூல்களையும் கற்றுக் கொண்டார்கள்".

(இன்று பார்க்கிறோம் இறைநம்பிக்கை கொண்டவர்கள் இறையியல் சார்ந்த நூல்களை மட்டுமே படிக்கிறார்கள். எதிர்க்கொள்கைக் கொண்ட நூல்களை படிப்பதில்லை. அவர்கள் என்ன வாதங்களை முன் வைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்வதில்லை. 'அசத்தியத்தை/பொய்யை அறியாதவன் உண்மையை/சத்தியத்தை (ஹக்கை) அழித்துவிட்டான் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். எனவே சகோதரர்களே! நாமும் அனைத்து நூல்களையும் படிப்போமா? முயற்சியுங்கள்! இமாமவர்களின் மாதிரியை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!)

இமாமவர்கள் தனது 16 வது வயதில் சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் முழு அறிவு பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அன்னைய‌வர்கள், மேலும் கற்றுக் கொள்வதற்காக புகாரி அவர்களுடைய சகோதரர் 'அஹமது' என்பவரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றார்கள். ஹஜ் செய்வது மட்டும் நோக்கமல்ல. அங்கு, மக்காவிலும் மதீனாவிலுமுள்ள அறிஞர்களிடமும் கல்வி கற்பதற்காகவும்தான். ஹஜ் முடிந்த பிறகு இமாம் புகாரி அவர்களை அரபு மண்ணில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி விடுகிறார்கள்.

தொடரும்

Thursday, August 4, 2011

வானம் வசமானதா? விஷமானதா?

து என்னுடைய மீள்பதிவு. 
சில ஜன்மங்கள் பதிவுலகில் புகழுக்காகவும். ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் புனிதமான நாட்களையும் தன்னுடைய வாழ்வையும் கெடுத்து கொள்கிறார்கள். அது போன்ற பொது கழிவறையில் கிறுக்கும் அசிங்க பேர்வழிகளுக்காக மறுபடியும் இந்த மீள் பதிவு.


விண்மீன்கள் கண்சிமிட்டும் வான்வெளியில் வியாபித்திருக்கும் சாட்லைட்கள் யுகத்தில் தொழில் நுட்பத்தின் தவிர்க்க முடியாததுமான வலையுகத்தில் விரும்பியோ (விரும்பாமலோ) வெறுத்தோ வாழ்கிறோம். வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.

இணையத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிவுக்களஞ்சியம். கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதம் என்ற
கற்பனையை விஞ்சக்கூடிய தேடு பொறிகள். இறைக்க இறைக்க நீர் சுரக்கும் கிணறு.
இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.


நம் உள்ளம் கவர்ந்த உரைகள்.  கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள். ஆச்சரியமூட்டும் அசையும் காணொளிகள். மனம் கிளரும் ஒளிப்படங்கள். இவற்றை கேட்பதோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


அன்றாட தமிழ் பத்திரிக்கையின் (பிராடு) மற்றும் உண்மைசெய்திகள்
வித்தியாசமான நாடு கடந்த நண்பர்களால் நடத்தப்படும் குழுமங்கள்
எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள். 
வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள். 
யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
உபயோகமான இணையதோழமைகள்.

இணையத்தின் விஷம் தேய்ந்த மறுபக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.


அரசியலில் அடாவடித்தனம் செய்பவர்கள், தம் சுயத்தை
இழந்து நடிப்பு,விளையாட்டு விளம்பரத்துறைகளில் விலைபோனவர்கள்,
மேக்-அப் மன்னர்கள், வெகுளி வேடம் தரித்தவர்கள், ஆபாசப் பேர்வழிகள், சமூக விரோதிகள், கீழமை எண்ணம் கொண்டவர்கள், இவர்களின் பாதுகாப்பான புகலிடமாக இணையம் மாறிபோயிருக்கிறது.


இணையம் ஒரு திறந்த ஊடகம். தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது.இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு.


தன் சொந்த வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருப்பவர்கள் (பஸ் ஸ்டாண்ட்) பொது கழிவறையை அசிங்கப்படுத்துபவர்கள். யார் வந்தார்கள் அசிங்கமாக கிறுக்கினார்கள் என்று யாருக்கும் முகம் தெரியாது. 


பொது கழிவறையில் பொறுப்பில்லாமல் கிறுக்குபவர்களை விட மூர்க்கமான வக்கிர ஆபாச பேர்வழிகள் திறந்த இணைய ஊடகத்தில் இறைந்து கிடக்கிறார்கள்.
தன் வீட்டை தன் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருடுகிற திருட முயற்சிக்கிற கேடு கெட்டவர்களுக்கு இணையம் எளிமையான பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
புகழ் பெற வேண்டும் என்பதற்காக இணையத்தில் பொறுப்பில்லாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க தயங்காத விளம்பர பிரியர்களின் விளம்பரங்கள் குப்பைபோல் கொட்டி கிடக்கின்றன.



ஒரு பெண்ணும் இளைஞனும் சாட்டிங்கில் நீண்ட நாட்களாக (அசிங்கமான) நட்பாக பழகியதில் அந்த இளைஞனின் ரோமண்டிக்கான பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நகரின் மத்தியுள்ள பூங்காவில் சந்திக்க திட்டமிட்டனர்.அடையாளம் கண்டுக் கொள்ள welcome  என்ற பெயர் பொறித்த சிகப்பு கலர் டி சார்ட் அணிந்து வர வேண்டும் என்று முடிவெடுத்து சந்தித்தார்கள். சந்தித்த பிறகு தான் தெரிந்தது இத்தனை நாள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞன் தன்னுடைய மகன் என்று.
இது அமெரிக்காவில் 2006-ல் நடந்த உண்மை சம்பவம்.



தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான் வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.