இதன் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
இன்று நம் நாட்டிலும் உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Globalisation).
உலகமயமாக்கலோடு சேர்த்து அலசப்படுகின்ற சொற்களாக தலமயமாக்கல் (localisation), தாராளமயமாக்கல் (Libralisation), தனியார்மயமாக்கல் (Privatisation) ஆகியவற்றையும் சொல்லலாம். இந்த நான்கும் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் உலகெங்கும் மிக அதிகமாக அலசப்படுகின்ற, பேசப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சொற்களாக இருக்கின்றன.
எதோ கேட்பதற்கு எந்தவிதமான தொல்லையும் தராத, தீங்கற்ற, முற்போக்கான,வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற மயக்கத்தில் ஆழ்த்தக் கூடிய கவர்ச்சியான சொற்களாக இவை தோன்றுகின்றன. ஆனால் இந்த நான்கு சொற்களுக்கும் பின்னணியில் தனி வரலாறே இருக்கின்றது; வானளாவிய நோக்கங்கள் இருக்கின்றன.
சென்ற பதிவில் உலகமயமாக்கல்,பொருளாதாரம்,வெளிநாட்டு வணிகம், இவைகளை பார்த்தோம். இனி வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை குறித்து பார்ப்போம்.
வெளிநாட்டு உறவுகள்.
அடுத்ததாக, வெளியுறவுத் துறையை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளுடனான பரஸ்பர உறவுகளையும், அந்த உறவுகளின் கனம், பரிமாணம்,நீடித்து நிலைக்கின்றதன்மை போன்றவற்றையும் தீர்மானிக்கின்ற உரிமை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மறுக்க முடியாத உரிமையாகும்.
எந்த நாட்டுடன் நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது, எதனுடன் உறவை நீட்டிப்பது, எதனுடன் உறவைத் துண்டித்துக் கொள்வது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற உரிமையும் இதில் அடங்கும். இவையெல்லாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கின்றன.
ஒரு நாட்டின் சுதந்திரம், சர்வதேச கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற விவகாரங்கள் இவை. ஆனால் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளும் இவற்றையும் உலகமயமாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றன.
பின்தங்கிய, நலிவுற்ற நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் தம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானாலும், அவற்றோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றே செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் தம் அண்டைநாட்டு அதிபர்களுடன் தொலைபேசியில் பேச நினைத்தாலும் உலக அரங்கில் பெரிய தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் முகக்குறிப்பை அல்லது கண் அசைவைப் பார்த்தே தொலைபேசி எண்களைத் தட்டத் தொடங்குவர்.
சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நடத்துகின்ற கட்டப் பஞ்சாயத்து இது.தலைதாழ்த்தி,வாய் பொத்தி,கூழைக் கும்பிடு போட்டு ஒழுங்காக நடந்து கொண்டீர்கள்... தப்பித்தீர்கள்.திமிறி நிமிர்ந்தாலோ கதை கந்தல்தான்.
விதவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் முகத்தில் வீசப்படும். வட்டார ஒத்துழைப்புக் கான நிறுவனங்கள், இருதரப்பு,முத்தரப்பு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் என பல்வேறு ஒப்பந்தங்களில் கட்டிப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். மனித உரிமை பாதுகாப்பு என்கிற கூப்பாடு,பயங்கரவாதத்தைத் தடுப்போம் என்கிற சாக்குப் போக்கு என இவை போன்ற பால்வேறு வழிமுறைகளைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.
இவ்வாறாக, தம்முடைய வெளியுறவுகளை சுயமாகத் தீர்மானிக்கின்ற உரிமை அந்த நாடுகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்ற உரிமையும் இல்லாமல் போகும் போது அந்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான மதிப்பும் செல்வாக்கும் எஞ்சி இருப்பதில்லை அது பொம்மை அரசாகத் தேங்கிப் போகும்.
பாதுகாப்பு.
அடுத்து இருப்பதிலேயே பொறுப்பு வாய்ந்த மிக முக்கியமான பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு நாட்டுக்கு இருந்தே தீர வேண்டிய முக்கியமான உரிமை இது. இந்த உரிமையையும் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பறித்து வருகின்றார்கள். என்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வது? எந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது? இவற்றையெல்லாம் தீர்மானிகின்ற உரிமை. அவற்றையும் உலகமயமாக்கல் என்கிற பெயரில் பறித்து விடுவார்கள்.
அணு ஆயுதங்கள் இல்லாத நிலப்பரப்பு (Nuclear Free Zone) என்று சொல்வார்கள். சி.டி.பி.டி என்பார்கள்.என்.பி.டி என்பார்கள். விதவிதமான ஒப்பந்தங்களின் மூலமாக உங்களின் சுயாட்சியையும் கண்னியத்தையும் முடக்கிப் போடுவதற்கும் வளைத்துச் சாய்ப்பதற்கும் முயல்வார்கள். இவையெல்லாமே அமெரிக்காவின் விரல் அசைவில் போடப்படுகின்ற ஒப்பந்தங்கள்.
போதக்குறைக்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பி வேரூன்றியிருக்கும் படைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதையும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையும் தன்னுடைய கிடுக்குப் பிடியில் இறுக்கி வைத்திருப்பதில் அமெரிக்க வெற்றி பெற்றிருக்கின்றது. அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எதனையும் தீர்மானிக்கின்ற உரிமையும் சுதந்திரமும் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது.
பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தேசப் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டாலே அமெரிக்காவிடமிருந்தும் அதன் நேச நாடுகளிடமிருந்தும் மிரட்டல்களும் உருட்டல்களும் வரத் தொடங்கி விடுகின்றன.
இவ்வாறாக,நாட்டின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் தம்முடைய உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக இழந்து நிற்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக குவைத்,சவூதி அரேபியா, மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகள்,சோவியத் யூனியன் சிதறிய பிறகு தோன்றிய ஒன்பது மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம்,
இவ்வாறாக, ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பொருளாதாரம், வெளிநாட்டு வணிகம், வெளியுறவுகள்,பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயலாற்றுகின்ற உரிமை பறிக்கப்படும்போது இந்தத் துறைகள் யாவும் இவை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உலகமயமாக்கப்படும்போது அந்த அரசின் அந்தஸ்தும் அதிகாரமும் நகராட்சியளவுக்கு சுருங்கிவிடுகின்றது.
கொரிய எழுத்தாளர் ‘ஜெரீமி சி புரூக்’ மிகச் சரியாக தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்: உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லா பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கொதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது.