Monday, July 22, 2013

தீவிரவாதம் தீர்வை தருமா? (மீள்பதிவு )



இன்றைய தமிழக சூழல், அரசியல் கொலைகள் மனதுக்கு வருத்தத்தை தருவதால் இந்த பதிவின் அவசியம் கருதி மீள்பதிவாக தருகிறேன். கொலைகள் வன்மையாக கண்டிக்கப் படவேண்டியவை.

“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)

Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.

 ‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற  “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’

நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!

இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக்  கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.

இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)

இறைவன் கூறுகிறான் திருக்குர்ஆனில்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.


தீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.

எனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: மிஷ்காத்)

அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.
அநீதிக்கு அறமே தீர்வு.

(Reference :நூல்: எங்கெ அமைதி )

Friday, July 19, 2013

நூல் அறிமுகம் : பாட நூல்களில் பாசிசம் வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.



பாசிசம் எப்போதும் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து இயங்குகிறது. 1930களில் இத்தாலியில் பாசிஸ்ட்டுகள் நடத்திய ’பலில்லா’ அவான் கார்டி பள்ளிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இவற்றை நேரில் சென்று பார்த்து வியந்து குறிப்புகள் எழுதியதும் இதற்காக முசோலினையை நேரடியாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பச்சை மனங்களில் விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்கள் இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடு.செத்துப்போனவர்களும் இறந்தகாலங்களும் இன்று வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. இந்துத்துவவாதிகளுக்கு வரலாறு ஒரு பாதுகாப்பான ஆயுதம்.

’நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். சின் குருஜி கோல்வால்கர். இந்துத்துவ பா.ஜ.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக அவர்கள் இந்தக் கருத்துக்களை தமது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் பயிற்றுவித்து வந்தனர். வித்யா பாரதி, சரஸ்வதி சிசு மந்திர் முதலான பெயர்களில் நாடெங்கும் சுமார் 60.000 பள்ளிகள் வரை அவர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின்னர் மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிய உடன் மாநில அரசுப் பள்ளிகளுக்கான பாடநூற்களை இந்த நோக்கில் உருவாக்கினர்.

பாடநூற்களைப் பரிசீலிப்பதற்காக Ncert யால் (கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழு ) நியமிக்கப்பட்ட தேசியக் குழு (National Steering Commitee of Text Books - 1996) இவர்களது பாடநூற்களைக் குறித்து கடுமையாக எச்சரித்தது. தேச பக்தி என்ற பெயரில் படிப்படியாகப் பச்சைக் குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைப்பதே இந்நூற்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது என்று மதிப்பீட்டுக் குழு இவர்களது பாடநூற்களைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தவுடன் தீவிர இந்துத்துவாதியும் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குக் குருபூஜை செய்பவருமான முரளி மனோகர் ஜோஷி வசம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. UGC (பல்கலைக் கழக மாணியக் குழு) ncert, cbse (உயர்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம்), ICHR (வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு) முதலான உயர்கல்வி அமைப்புகளில் இருந்த மதச்சார்பற்ற கல்வியாளர்களையும், வரலாற்றறிஞர்களையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் வகுப்பு வெறியர்களையும் ஜோஷி நியமித்தர்.

இந்த நூல்

வரலாற்றைக் கையிலெடுத்தார்கள்

இல்லாத குதிரைகளில் சவாரி செய்யும் இந்துத்துவம்

வரலாற்றின் பெயரால் முஸ்லிம் வெறுப்பு

மீண்டும் மீண்டும் கொலை செய்யப்படும் காந்தியடிகள்


இப்படி நான்கு தலைப்புகளில் இந்நூலில் மிக ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறார். பாடப்புத்தங்களில் இருக்கும் அபத்தமான வரலாற்று திரிபுகளை அறிய வாசிக்க வேண்டிய நூல்.

நூல் :
பாட நூல்களில் பாசிசம். வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு : சுயமரியாதை இயக்கம்

Monday, July 15, 2013

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை (நூல் அறிமுகம்)



இந்த நூலை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று மறுவாசிப்பு செய்தேன். மனதில் பல மற்றங்களை ஏற்படுத்தவல்ல சக்திகொண்ட நூல் இது.

இந்த நூலிருந்து ஒரு சில வரிகள்.

இறைவேதத்தின் மீது கொடுமை புரிவதின் விளைவு: என்கிற தலைப்பிலிருந்து..

குர்ஆன் நன்மைக்கும் நற்பேறுகளுக்கும் அது ஓர் ஊற்று. தீயதையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியதல்ல அது. ஒரு சமுதாயத்தவர் இறைவனுடைய திருமறையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்றால். அவர்கள் உலகில் கேவலத்தையும் அவமானத்தையும் நிச்சயமாக அடைய மாட்டார்கள். அவரகள்மற்றவர்களின் காலடியில் நசுக்கப்படவும் மாட்டார்கள். அவர்களின் கழுத்தில் அடிமைத்தனத்தின் முத்திரை இருக்கவும் முடியாது; அவர்களின் குடுமியை மற்றவர்கள் பிடித்து அவர்களை ஆடு மாடுகளைப் போல விரட்டவும் முடியாது.

இந்த விளைவுகளெல்லாம் திருமறைக்கு அநீதி இழைக்கப்படும்போதுதான் ஏற்படுகின்றன. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் அடைந்த இழிநிலை உங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது. ‘தவ்ராத்’ ’இன்ஜீல்’ எனும் இறைநூல்கள் அவர்களுக்கு அருளப்பட்டிருந்தன. அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது.

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنجِيلَ وَمَا أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; (திருக்குர்ஆன் 5:66 )

ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.(திருக்குர்ஆன் 2:61 ) 

ஆகவே இறைவேதத்தை தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் கேவலமான நிலையிலும், அடிமைத்தனத்திலும், தலைதூக்க முடியாத சூழலிலும் இருக்கிறார்களென்றால், அவர்கள் தின்னமாக இறைவேதத்திற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இழிவுகளெல்லாம் அந்த அநீதியான செயல்களால் ஏற்பட்ட கதிதான் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனுடைய இந்தக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழியைத் தவிர வேறு வழியில்லை அதாவது இறைவேதத்திற்கு அநீதி இழைப்பதை விட்டு விட்டு அதன் கட்டளைகளை முறைப்படி நிறைவேற்ற வேண்டும். இந்த பெருங்குற்றத்திலிருந்து நாம் விலகவில்லை என்றால், இந்த இழிநிலை மாறவே மாறாது - நீங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கல்லூரி திறந்தாலும், உங்கள் வழித்தோன்றல்கள் எல்லோரும் பட்டதாரிகளானாலும், யூதர்களைப் போல் வட்டித் தொழிலில் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் சரியே!

குர்ஆனை அறிவதும் அதன்படி செயல்படுவதும் கட்டாயமாகும்:

நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றை கொண்டு வந்து படிக்க உட்காருகிறான். அதனை படித்தால் மட்டுமே நோய் நீங்கிப்போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அவனுடைய மூளை கெட்டுப் போய்விட்டது - பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அவனை அனுப்புங்கள்” என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா?

குர்ஆனையும் இந்த நிலையில் தான் வைத்திருக்கிறீர்கள் அதனை ஓதுவது மட்டும் போதும் அதனுடைய அறிவுரைக்குத் தக்கபடி நடக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்கள். இப்படியிருக்கும்போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்த தீர்ப்பை வழங்குகிறீர்களோ, அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை.

இப்படியாக அழகிய உவமைகளுடன் மனதை பிடித்து உலுக்கும் கேள்விகளுடன் கூடிய நூல் வாசித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.