Sunday, January 27, 2013

பல்பு எரிகிறதா என்று பாருங்கள்


பங்காளிப் பகைவர்களை மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற உத்வேகத்தில் ஏகப்பட்ட விளக்குகளைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் விடுவது நம்ம ஊர்ப் பண்ணையார்கள் மட்டுமல்ல, பணக்கார உலகத்துக்கே பொதுவான குணம் இது என்கிறார், லீ பில்லிங்ஸ் (ஸீட் மாகசீன்).
நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் உயரத்திலிருந்து செயற்கைக் கோளின் விழி வழியே நம்மை நாமே பார்க்கும்போது, மனித நாகரீகத்தின் உன்னதமான சில தருணங்கள் தென்படுகின்றன : சீனப் பெருஞ் சுவர், எகிப்தின் பிரமிடுகள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மைலாப்பூர் ரயில் நிலையம். பச்சை- பழுப்பு செஸ் கட்டம் போல் வயல்கள்; அவற்றின் நடுவே நேராக ஓடும் நெடுஞ்சாலைகள்… இதனுடன் கூடவே பல மனித அநாகரீகங்களும் தென்படுகின்றன. புகை கக்கும் தொழிற்சாலை சிம்னிகள், ராட்சச வாய் கடித்த சமூசா போல் கல் குவாரி காண்ட்ராக்டர்களால் சேதப்பட்ட குன்றுகள் என்று பலவற்றை கூகிள் எர்த்தில் பார்க்க முடிகிறது.
தென்கொரியாவும், வடகொரியாவும்
அரை புத்திசாலி, அரை முட்டாள் இனம் ஒன்று இந்த கிரகத்தில் வாழ்வதற்கான அடையாளங்கள் அனைத்தும் சாட்டிலைட்டிலிருந்து தெரிகின்றன. ஆனால் அந்த செயற்கைக் கோள் அரை சுற்று சுற்றி இரவின் கருமைக்குள் போய்விட்டால், நம் நாகரீகத்துக்கு அடையாளமாக ஒன்றே ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிகிறது: மின்சார விளக்குகள்.
1962-ல் விண்வெளிக்குப் போன (சே !) முதல் அமெரிக்கர் ஜான் க்ளென். அவர் ஆஸ்திரேலியாவிற்கு மேலாகப் பறந்தபோது, பெர்த் நகரின் மக்கள் ஒரு பரிசோதனை செய்தார்கள். தங்கள் ஊரில் எல்லோரிடமும் சொல்லி வைத்து, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளக்குகளை ஆன் பண்ணி வைத்தார்கள். ஜான் இதை மேலிருந்து கவனித்து, வெளிச்சத் தீவு ஒன்று தெரிவதை உறுதிப்படுத்தினார்.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுவதற்கு, அவர்கள் இரவில் எரிக்கும் மின்சார லைட்களின் எண்ணிக்கை ஒரு முக்கியமான அளவுகோல். உதாரணமாக, தென் கொரியாவில் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றுச் செல்வ வளம் கொழிக்கிறது. இரவு நேரத்தில் சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஜோதி மயமான முந்திரிப் பருப்பு மாதிரி இருக்கிறது. ஆனால் பாவம், கம்யூனிஸ்ட் பிடியில் சிக்கிய வட கொரியாவோ இருளடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் வசிக்கும் வீடுகளில் மட்டும்தான் விளக்கு எரிகிறது.
இது ஃபோட்டோ; அன்றைய பொருளாதார நிலவரம். பல வருடங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் ஒரு நாடு முன்னேறியிருக்கிறதா, பின்னேறியிருக்கிறதா என்பதை ஊகிக்க முடியும். சோவியத் யூனியனின் சோசலிச ஏழ்மை நீங்கி, ரஷ்யா படிப்படியாக சுபிட்சம் பெற்ற வரலாறே சாட்டிலைட் படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற, இரவு நேர வெளிச்சங்களும் அதிகரிக்கின்றன.
இத்தனைக்கும் இந்தப் படங்கள் அமெரிக்க விமானப் படையின் வயசான சாட்டிலைட்கள் எடுத்தவை. ஒரு சதுர கிலோமீட்டருக்குக் குறைவான பொருட்கள் அதன் கண்ணுக்குத் தெரியாது !
ப்ரௌன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார வல்லுனர்கள் ஹெண்டர்ஸன், வேய்ல் என்பவர்கள், தங்கள் மாணவர்களை மாடு மாதிரி வேலை வாங்கி, கடந்த பல வருட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் : ஒரு நாட்டின் GDP என்னும் மொத்த உற்பத்தியும் மின்சார விளக்கு எரிப்பதும் நேரடியாகத் தொடர்பு உடையவை.
இதில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உபயோகமான புள்ளி விவரம் இருக்கிறது. ஏழை நாடுகளில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படாத இண்டஸ்ட்ரியில்தான் நடக்கின்றன; பில் போடாமல் டாக்ஸ் கட்டாமல் சந்துக்கு சந்து நடத்தப்படுகிற  கம்பெனிகள்தான் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. அரசாங்கப் புள்ளி விவரங்கள் எல்லாம் இருநூறு சதவீதம் தள்ளித்தான் காட்டும்! எனவே செயற்கைக்கோள் படங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார அளவீடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்
1992 முதல் 2003 வரை உள்ள தகவல்களைப் பார்த்தால், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்க அறிக்கைகள் யாவும் அழுது வடிந்தன; நாட்டின் ஜி.டி.பி சுருங்கிக் கொண்டே வருவதாகத் தெரிவித்தன. ஆனால் இரவு நேர சாட்டிலைட் படங்கள் சொல்லும் கதையே வேறு; காங்கோவின் பொருளாதாரம் உண்மையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தனையும் வரி கட்டாத நிழல் பொருளாதாரம் ! இதற்கு நேர் மாறாக, மியான்மர் சர்வாதிகாரிகளைக் கேட்டால், ‘இந்த சூ-சியைப் பிடித்து ஜெயிலில் போட்ட அன்றிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தால் நாளுக்கு நாள் நாடு இருளடைந்து வருவது தெரிகிறது.
கிராமப்புறத்து வயல்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் வருடங்களில், அருகிலுள்ள நகரங்களில் விளக்குகளின் பிரகாசமும் அதிகரிக்கிறது. விவசாயிகள் உபரி வருவாயில் ட்ராக்டர் முதல் டி.வி வரை வாங்குகிறார்கள். நைட் க்ளப்களிலும் மதுக் கடைகளிலும் விடிய விடியக் கூட்டம் இருக்கிறது. மாறாக, வான் பொய்த்து விவசாயி வாடினால் சிட்டியில் விளக்கணைந்து விடுகிறது !
பழங்கால மிலிட்டரி செயற்கைக் கோள்களை அவ்வளவாக நம்ப முடியாதுதான். மேகம் மறைப்பது, நிலா வெளிச்சம், மின்னல் என்று பலவிதத் தொந்தரவுகளால் சாட்டிலைட் படங்கள் மாசடைகின்றன. இருந்தும், புள்ளி விவரங்களே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை அளவிட ஏதோ ஒரு ஆதாரம் இருப்பது நல்லதுதானே? இதனால் நாஸாவிடம் கேட்டு இரவு நேர விளக்குகளை இன்னும் தெளிவாகப் படம் எடுப்பதற்காகவே ‘நைட்சாட்’ என்று ஒரு செயற்கைக் கோள் விடுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நைட்சாட் வந்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நம் ஊரின் கரண்ட் இல்லாமல் விளக்குகள் எப்படி ஒளிர்ந்து மங்குகின்றன என்று கவனிப்பது சுவாரசியமான பொழுது போக்காக இருக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)


Friday, January 25, 2013

அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.


அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”


அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். 

ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா குழந்தைகளை கொன்றதில்லையா?? அமெரிக்காவை விட வெறு யாரும் கொன்றதில்லை என்பது தான் உண்மை.

பலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக்காட்டிலும் படுமோசமாக உள்ளது
”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….
“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…
“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.
பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.
ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.
அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people.... You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.
கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010 

Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது

விஸ்ரூப களவானித்தனம்

ஜனவரி 25 அன்று திரையிட இருக்கின்ற கமலின் விஸ்வரூபம் படத்தைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எதிர்ப்புகள்! முன்னோட்ட காட்சி படிமங்களை பார்க்கும் போதே ஆழமாக ஒரு செய்தியை, ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தி வட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. முன்னோட்ட காட்சிகளை வைத்து முடிவுக்கு வர முடியாது என்பதாலும் கமலஹாசன் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல, படத்தைப் பார்த்து விட்டு வருத்தப்பட போகிறீர்கள் என்பதாக எல்லாம் சொன்னார்.

 21.01.2013 அன்று இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். கமல் "வருத்தப்படுவீர்கள்" என்று சொன்ன சரியான அர்த்தத்தை அன்றுதான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலின் விஸ்வரூபம் படங்களை பார்த்துதான் புரிந்துக் கொள்ள வேண்டுமா அவரின் முந்தைய போக்குகளை பார்த்தாலே புரிந்துக் கொள்ளலாமே? ஒவ்வொருவருக்கும் எதாவது வகையிலான கொள்கை இருக்கும். அது இயல்புதான். கமலுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூடியவர். அதையாவது என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறரா? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்று தான் சொல்கிறேன் என அசினிடம் வலிவது போல் காட்சிகளை தசாவதாரத்தில் வைக்கவில்லையா? அதுதான் கமலின் உண்மையான நேர்மையற்ற களவானித்தனம்.

விருமாண்டியில் விடிய விடிய மரணதண்டனை தவறு என்று பெரும் மனிதாபிமான அறிவுஜீவிபோல் பாடம் எடுத்தவர் அப்படியே அவருடைய அடுத்த படமான உன்னை போல் ஒருவனில் அந்தர் பல்டி அடித்து என்கவுண்டர்களையும் மரணதண்டனைகளையும் நியாயப்படுத்தினாரே? தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம், இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை. 

‘ஹே ராம்’திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை.. படத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட இளைஞனின் பார்வையில்தான் பிரச்சினையைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் கலவரம் செய்யும் காட்சியுடன்தான் படமே தொடங்குகிறது. வசனங்கள் சில ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துவது போல அமைத்திருக்கலாம். ஆனால் அவை ரசிகனைச் சென்றடையாது. காட்சிப் படிமங்கள்தான் திரைப்படம் என்பது உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ் திரைப்படம்.

“ இது குதர்க்க வாதம். முஸ்லிம் மக்களை, முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இந்து வெறியர்கள் வேட்டையாடியதும் படத்தில் இடம் பெறத்தான் செய்கிறது. இறுதிக் காட்சியில் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் இந்து மதவெறிக் குண்டர்கள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்துகின்றனர்.ஆர்.எஸ்.எஸ் காரனாக வரும் ஸ்ரீராம் அபயங்கர் முஸ்லிம் மக்களைக் கொலை செய்வதை ‘வேட்டை’ என்று ஒரு ஓநாய் ரத்த வெறியுடன் கூறுகிறான்.இவையனைத்திற்கும் மேலாக, மத நல்லிணக்கத்துக்காப் பாடுபட்டகாந்தியைக் கொன்றவன் யாரோ ஒரு இந்துவல்ல; பார்ப்பனந்தான் காந்தியைக் கொன்றான் என்ற உண்மையைத் தைரியமாக அம்பலப்படுத்தியிருக்கிறார் கமலஹாசன். 

இறுதியில் இந்து மதவெறி பிடித்த கமலஹாசனை அம்ஜத் (ஷாருக்கான்) என்கிற முஸ்லிம் நண்பன் தன் உயிர்த் தியாகத்தால் நெறிப்படுத்துகிறான். இந்த காட்சியும் முஸ்லிம்களை நியாயமாகவும், சரியாகவுமே சித்தரிக்கிறது. எனவே இது பார்ப்பன இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் தான் என்றும் யாரையும் ஒரு முடிவுக்கு வரவிடமுடியாமல் காய் நகர்த்துவதில் கமல் கில்லாடி.ஹே ராமில் முஸ்லிம்களை வேட்டையாட வருமாறு ஆர்.எஸ்.எஸ்காரன் ஸ்ரீராம் அபயங்கர் அழைக்கும்போது “நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை” என்று மறுக்கிறான். இருப்பினும் சாவர்க்கரின் புத்தகத்தை வாங்கி, மேல் அட்டைப் போட்டு மறைத்து படிக்கிறான்.

’ஹே ராம்’ மகாராஷ்டிராவிலும் டில்லியிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டபோது காந்திக்கெதிரான வசனங்களை ஸ்ரீராம் அபயங்கர் பேசும்போது கைதட்டி பா.ஜ.க. ரசிகர்கள் வரவேற்ற அதேநேரத்தில் கம்யூனிஸ பத்திரிக்கைகள் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்தும் இந்தப் படம் ஒருவேளை தடை செய்யப்படுமானால் அதற்குக் காரணம் சங்கர மடத்தின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று எச்சரித்தன.

கமலின் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உலகமயமாக்களை எதிர்க்கிற மார்க்சிய,கம்யூனிஸ, நாத்திகத்தை போதிக்கும் திரைப்படம் என்று கம்யூனிஸ பத்திரிக்கை தீக்கதிர் உச்சி மோந்திருந்த அதேவேளையில், உலகமயமாக்களின் ஒன்னாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் இல.கணேசனும் சிறந்த ஆன்மீக படம் என்று பாராட்டினாரே? இதுதான் கமல்.

வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 50,100 அபராதம் கட்டிய கம்யூனிஸ ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட நீயும் கடவுள், நானும் கடவுள் என்கிற அத்வைத ஆன்மீகக் கொள்கை கொண்ட திரைப்படம் காட்டப்பட்டது. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையாளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.
தேவர்மகன் திரைப்படத்தில் தென்மாவட்ட அருவா கலாச்சாரத்தையும்,ஜாதி வெறியையும்,கலவரங்களையும் சாடுவதாக அவைகள் தவறு என்று சொல்லும் தோணியில் படம் துணிந்து எடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் அப்போது பாராட்டின. ஆனால் இன்றும் எனது தென்மாவட்ட ராமநாதபுர கிராமங்களில் நடக்கும் தேவர்சமூக திருமண பத்திரிக்கைகளிலும் டிஜிட்டல் கல்யாண பேனர்களிலும் தெருவில் ஒட்டப்படும் போஸ்ட்டர்களிலும் கமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அரிவாளோடு நிற்கிற தேவர்மகன் ஸ்டில்களைதான் போடுகிறார்கள். அவர்கள் திருவிழாக்களில்,கல்யாண பந்தல்களில் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல்கள் ஒலிக்கிறது எனில்.இதில் கமல் பிராண்ட் களவாணித்தனம் தெரியவில்லையா?

விஸ்வரூபமும் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அமெரிக்காவிற்கு எதிரான காட்டமான வசனங்களும், அமெரிக்கா அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொல்வதாக காட்சிகளும் இருக்கும், அந்த தைரியத்தில் தான்  படத்தைப் பார்த்தால் எனக்கு பிரியாணி வாங்கி தருவீர்கள் என்றார், மறுபுறம் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.

எல்லோரும் முட்டாள்கள், நான் சகலகலா வல்லவன் அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

பின்குறிப்பு:
Auro 3 தேர்ந்த இசை, தேர்ந்த நடிகர்கள்,துல்லியமான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,பெரும் பொருட்செலவு... எல்லாம் சரிதான். பிச்சை எடுப்பதற்கு யானை வாங்க வேண்டுமா?