இமாம் புகாரி(ரஹ்) அவர்களைப் பற்றியும்.
அவர்களின் பல நூல்களில் ஒரு நூலான புகாரி கிதாபை பற்றியும்.
இந்த நூலை இமாமவர்கள் ஏன் தொகுத்தார்கள் என்பது பற்றியும்.
புகாரி நூலில் அப்படி என்ன சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றியும்.
இனி விரிவாகப் பார்ப்போம்.
முதலில் இமாம் புகாரி அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். 'இமாம் புகாரி' இவர்கள் யார்? இவர்களின் பெயரென்ன? அனைவராலும் புகாரி என்று அழைக்கப்படுகிறார்களே? ஆனால் அவர்களின் சொந்தப் பெயர் புகாரி அல்ல. 'புகாரி' என்பது அவர்கள் பிறந்த ஊரின் பெயர். 'புகாரா' என்ற ஊரில் பிறந்தார்கள். 'புகாரி' என்றால் அரபியில் 'புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்' என்று பொருள். சரி அவர்களுடைய சொந்த பெயரென்ன? அவர்களின் சுருக்கமான பெயர் 'முஹம்மத்'. முழுப் பெயர் 'முஹம்மத் இப்னு இஸ்மாயில் இப்னு இபுராஹீம் இப்னு முகீரா'
இமாம் புகாரி அவர்கள் அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அவர்கள் அரபியும் அல்ல. ஆனால் அரபிகள் மட்டுமல்ல, எவரும் செய்ய முடியாத மாபெரும் பணியை இஸ்லாத்திற்காக செய்திருக்கிறார்கள். தன் முழு வாழ்வையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தார்கள். தமிழகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருக்கும் நாத்திக/கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிலர் அறியாமையில் தமிழ் முஸ்லிம்கள் அரபியர்களுக்கு அடிமையாக இருப்பதாக அள்ளி விடுகின்றனர்.
ஆனால் இன்றைய உஸ்பெக்கிஸ்தானில்/ அன்றைய ரஷ்யாவில் பிறந்த இமாமவர்கள் முழு இஸ்லாமிய உலகிற்கும் (அரபியரையும் சேர்த்து) ஒப்பற்ற ஒரு நூலை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமான 6 ஹதீஸ் கிரந்தங்களையும் எழுதியவர்கள் ஒரிஜினல் அரபிகள் அல்ல. அரபிகளின் வழித்தோன்றல்கள் கூட கிடையாது. ஆகவே இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது; எல்லா இனத்திற்கும் உரியது என்பதுதான் உண்மை.
இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குகிறான். வரும் காலங்களிலும் உருவாக்கிக் கொண்டே இருப்பான்.
இமாம் புகாரி அவர்களுக்கு அபார நினைவாற்றல்களை இறைவன் வழங்கியிருந்தான். அது அன்று தேவைப்பட்டது. அந்த ஆற்றல்கள் இன்று காணக் கிடைக்காது. அக்காலம் கணினி காலமல்ல. அக்கால அறிஞர்களின் மூளைகள் கணினிகளாக ஆக்கப்பட்டிருந்தன. எனவே இலட்சக்கணக்கான ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசைகளுடன் மனனம் செய்திருந்தார்கள்.
இன்று யோசித்துப் பாருங்கள்! நாம் ஒரு 5000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் மனனம் செய்ய முடியுமா? ஏன்.. இமாமவர்கள் பல இலட்சம் ஹதீஸ்களை ஆய்வு செய்து, தரம் பிரித்து, தேர்ந்தெடுத்த 7000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் நம்மால் மனனம் செய்ய முடியுமா? ஆனால் புகாரி இமாமவர்கள் அந்த ஹதீஸ் துறையிலேயே முழு வாழ்வையும் செலவழித்து நமக்கு பேருதவி செய்திருக்கிறார்கள்.
இமாமவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் தனது 10 வயதில் முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். இமாம் புகாரி அவர்களின் மாணவர், அவர்களின் எழுத்தாளர் 'முஹம்மது இப்னு அபீ ஹத்தீம் அர்வர்ராஹ்'என்பவர் தன் ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் கூறுகிறார்:
"ஒருமுறை, தாங்கள் எத்தனை வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே ஹதீஸ்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இயற்கையாக அதிகமாக இருந்தது என்றார்கள். அப்போது உங்களுக்கு எத்தனை வயதிருக்கும் என்று வினவினேன்? 9 அல்லது 10 வயது இருக்கும் என்றும், 16 வயதில் ('அப்துல்லாஹ் இப்னு முபராக்' என்பவர் இமாமவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த ஹதீஸ் துறையில் புலமைப் பெற்ற மிகப்பெரிய அறிஞர் ஹிஜ்ரி 181 ல் மரணித்தவர்கள்) அந்த அறிஞரின் நூலை முழுமையாக மனனம் செய்திருந்தேன் என்றும், அதேபோல இமாம் ஷாஃபி அவர்களின் பிரபல ஆசிரியரான 'வக்கியா இப்னு ஷர்ரா' அவர்களின் சட்ட நூல்களையும் மனனம் செய்திருந்தேன் என்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அந்த சமகாலத்தில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட 'முஹ்தஜ்லாக்கள்' என்ற பிரிவினரின் வாதங்கள், தர்க்கங்கள், அவர்கள் முன் வைக்கின்ற நியாயங்கள் இவைகளையும் அவர்களின் நூல்களையும் கற்றுக் கொண்டார்கள்".
(இன்று பார்க்கிறோம் இறைநம்பிக்கை கொண்டவர்கள் இறையியல் சார்ந்த நூல்களை மட்டுமே படிக்கிறார்கள். எதிர்க்கொள்கைக் கொண்ட நூல்களை படிப்பதில்லை. அவர்கள் என்ன வாதங்களை முன் வைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்வதில்லை. 'அசத்தியத்தை/பொய்யை அறியாதவன் உண்மையை/சத்தியத்தை (ஹக்கை) அழித்துவிட்டான் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். எனவே சகோதரர்களே! நாமும் அனைத்து நூல்களையும் படிப்போமா? முயற்சியுங்கள்! இமாமவர்களின் மாதிரியை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!)
இமாமவர்கள் தனது 16 வது வயதில் சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் முழு அறிவு பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அன்னையவர்கள், மேலும் கற்றுக் கொள்வதற்காக புகாரி அவர்களுடைய சகோதரர் 'அஹமது' என்பவரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றார்கள். ஹஜ் செய்வது மட்டும் நோக்கமல்ல. அங்கு, மக்காவிலும் மதீனாவிலுமுள்ள அறிஞர்களிடமும் கல்வி கற்பதற்காகவும்தான். ஹஜ் முடிந்த பிறகு இமாம் புகாரி அவர்களை அரபு மண்ணில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி விடுகிறார்கள்.
தொடரும்