Wednesday, January 22, 2014

வடிவேலு மறந்து போகக்கூடிய கலைஞன் அல்ல...!

லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன்.

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.

இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார். தன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும். ஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.

வடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.
“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.

கடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ?” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.
இப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.

தீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.

“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”
தன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.

500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.

தன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.

“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
வெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.
வடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.

வடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு. 

அவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை. ஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.
“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. .? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம். அவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

(நன்றி: http://www.kalachuvadu.com/issue-169/page118.asp காலச்சுவடு )

Sunday, January 19, 2014

சர்க்கரை வள்ளி கிழங்கு சமைப்பது எப்படி??

நாங்களும் சமையல் குறிப்பு பதிவு போடுவோம்லே...


ஒன்னும் இல்லைங்க சோறு ஆக்குகிற ரைஸ்குக்கர் மேல் ஒரு தட்டு இருக்கும் அதில் அளவுக்கு தகுந்த மாதிரி வெட்டி அடுக்கி விட்டு மூடி விடுங்கள் சோறு வெந்து முடித்தவுடன் கிழங்கும் சரியான பக்குவத்தில் வெந்து இருக்கும். அப்படியே எடுத்து சாப்பிட்டு விட வேண்டியதுதான்.(இப்படித்தான் நான் செய்கிறேன்)

பின்குறிப்பு: 
வெளிநாட்டில் இருக்கும் தனிநபர்களுக்காக இந்த சமையல் 

அப்புறம் இந்த கிழங்கில் நிறைய சத்து இருக்காம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..

இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-.

சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள்- 90
பேட் -0 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் -21 கிராம்
புரதம் -2 கிராம்
நார்ச்சத்து -3கிராம்
சோடியம் -36 மில்லிகிராம்
வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு
ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் -1 மில்லிகிராம்
வைட்டமின் பி- 61 மில்லிகிராம்
வைட்டமின் சி- 20 மில்லிகிராம்
வைட்டமின் ஈ -1 மில்லிகிராம்
கால்சியம் 3-8 மில்லிகிராம்
மாங்கனீஸ் -1 மில்லிகிராம்
கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் -475 மில்லிகிராம்
மாக்னீஷியம்- 27 மில்லிகிராம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.


Wednesday, January 8, 2014

இதுதாண்டா தமிழக போலீசு...

கோயில் பூசாரி,பஞ்சு மிட்டாய் விக்கிரவாய்ங்க இவிய்ங்க மாதிரி நம்ம அடிச்சது எல்லாம் சாப்ட் கேரக்டர்களை என்று ஒரு படத்தில் நகைச்சுவை வசனம் வரும் அது அப்படியே நமது தமிழக போலீசுக்குதான் பொருந்தும் என நினைக்கிறேன். 

முருங்கக் கீரை திருடியவரை 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியது. திருட்டுக் குற்ற வழக்கில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட கொசுவலை அடிக்கும் தொழிலாளி ஹுமாயூன் என்பவரை காவல்நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொன்றது. சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்டது என சாதனை தொடர்கிறது.

தமிழக போலீசின் சாதனைகள் விரிவாக இதோ:

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.
திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

திருடப்பட்டது கீரை... புறப்பட்டது போலீஸ்தனிப்படை! சென்னை கொட்டி வாக்கத்தில் உள்ளது முன்னாள் டி.ஜி.பி வெங்கடேசன், இவரது மனைவி ராணி (முன்னாள் எம்.எல். ஏ ) இவர்களது மருமகந்தான் தென் சென்னை கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ். முன்னாள் டிஜிபி வெங்கடேசன் வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் கடந்த 5 -ம் தேதி முருங்கை இலை பறிக்க சென்ற சக்தியும் செல்வமும் மரம் முறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் விழுந்து காவலாளி கத்தவும் ஓடி விடுகின்றனர். தப்பியோடிய இருவர் மீதும் இதுவரை எந்த விதமான குற்றவழக்குகளும் இல்லை. ஏரியாவிலும் கெட்ட பெயர் இல்லை. ஆனால் தப்பியோடிய முருங்கை இலை மெகா திருடர்களைப் பிடிக்க ராஜேஸ்தாஸ் உத்தரவில் 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்ட அயோக்கிய ஆய்வாளர் புஷ்பராஜ்.


நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவனை பயமுறுத்துவதற்காக கழுத்தில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியபோது துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.


சென்னை நீலாங்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சபீனாபேகம். இவரது மகன் தமீம்அன்சாரி (16). 6-ம் வகுப்புடன் படிப்பை முடித்த அன்சாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்துவந்தாராம். நீலாங்கரை காவல் துறையினர் பலமுறை அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டருகே இருந்த ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது.

தொண்டையில் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி

இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் தமீம்அன்சாரியை நீலாங்கரை போலீஸார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.


அங்கு சிறுவனிடம் பல காவலர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் தமீம்அன்சாரி, 'நான் திருடவில்லை' என்று திரும்பத் திரும்ப கூறினாராம். இதனால் நொந்துபோன போலீஸார் முடிவில் நீலாங்கரை குற்றவியல் ஆய்வாளர் புஷ்பராஜிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் புஷ்பராஜிடமும், 'நான் திருடவில்லை' என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அன்சாரியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கழுத்தில் காயம்பட்ட சிறுவன் ரத்தம் வழிந்த நிலையில் காவல் நிலையத்துக்குள்ளேயே மயங்கி விழுந்தார். விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அன்சாரியை உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.


துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் அடையாறு துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்களாம்.

பெரும் கொலைகாரன் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கொள்ளைக்காரர்களுக்கு ராஜமாரியதை அளித்துக் கொண்டே சாதாரண அப்பாவிகளிடம் வீரத்தைக் காட்டுவது என போலீஸ் அமைப்பே சீர்குலைந்து கிடக்கிறது தமிழக அரசே தேவை நடவடிக்கை சீர்திருத்தம்.

Tuesday, January 7, 2014

வெளிநாட்டு சாவு: விமானநிலைய பிணம் திண்ணிப் புழுக்கள்!


சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!


உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள். 
பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள். 

அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்" செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
 எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்! 

ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். 

அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது. 

அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே. நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள்.

தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள்

இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே...

(நன்றி-காரைக்குடி மக்கள் மன்றம்)