Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Tuesday, January 7, 2014

வெளிநாட்டு சாவு: விமானநிலைய பிணம் திண்ணிப் புழுக்கள்!


சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!


உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள். 
பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள். 

அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்" செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
 எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்! 

ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். 

அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது. 

அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே. நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள்.

தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள்

இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே...

(நன்றி-காரைக்குடி மக்கள் மன்றம்)

Monday, February 6, 2012

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!

உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139073