Friday, July 29, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம் - 1)

றைவன் குர்ஆனில் நபிமார்களைப் பற்றியும், இறைவனின் அருள் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும், அநியாயக்கார சமூகத்தினர்கள் பற்றியும் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான், எதற்காக? நாம் பழங்கதைகளை தெரிந்துக் கொள்வதற்காகவா? இல்லை அதன்மூலம் படிப்பினைப் பெறுவதற்காகவா? பழங்கால மனிதர்கள் செய்த தவறுகள் நவீன வடிவில் நம்மிடம் இன்று இருந்தால் படிப்பினைப் பெற்று நம்மை திருத்திக் கொள்வதற்காகத்தான் இறைவன் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான்.


இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்ற‌வற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வளவு ஏன்? இமாம் புகாரி அவர்களின் இயற்பெயர் பெரும்பாலான நம்முடைய சகோதரர்களுக்கு தெரிவதில்லை.

இதை விடக் கொடுமை, சிலர் இமாம் புகாரி அவர்களைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். 'புகாரி ஷரீப் ஓதும் விழா'என்று சொல்லிக் கொண்டு 25, 30 வருடங்களாக அரபியில் ஒன்றும் புரியாமல் வேக வேகமாக ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

புகாரி ஷரீப் ஒதும் விழா


சரி, அரபியில் ஓதிவிட்டு அதற்கான விளக்கத்தை தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மாறாக இமாம் அவர்களைப் பற்றியும் புகாரி நூலைப் பற்றியும் தவறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு கீழுள்ள இந்த செய்தியைப் பாருங்கள். (இது புகாரி ஷரீப் ஓதியவர்களின் ப்ளாகிலிருந்து எடுத்தது).

"அவர்களின் இப்புனிதமான கிரந்தம் பெரும் சிறப்புகளைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவன் தனது கடற்பயணத்தைத் தொடர்ந்தால் அவனது வாகனம் கடலில் ஒருபோதும் மூழ்கிவிட மாட்டாது. மழை இல்லாத கிராமத்தில் இந்தக் கிரந்தத்திலுள்ள நபிமொழிகள் பாராயணம் செய்யப்பட்டால் அங்கே அழ்ழாஹ்வின் அருள் மழை இறக்கப்படும். பஞ்சம், வறுமையுள்ள இடங்களில் இக்கிரந்தம் ஓதப்படும்போது அங்கே அழ்ழாஹ்வின் அருள் பரக்கத் இறங்கும்". 


இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாமவர்களின் மீது இட்டுக்கட்டி (மேற்கண்ட‌) இப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.



இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! "இன்று இறைவேதமான‌ குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்."



எனவே நாம், புகாரி இமாம் என்றால் யார்?
இந்த நூலை ஏன் அவர்கள் தொகுத்தார்கள்?
இந்த நூலில் என்னென்ன விஷயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
வாசிக்கப்படுக்கின்ற ஹதீஸ்கள் நடைமுறையில் நாம் பின்பற்றுகிறோமா?
அல்லது வெறும் புத்தகம் வாசித்து முடிப்போம் என்ற ரீதியில் வாசிக்கிறோமா?




போன்ற விஷயங்களை (இன்ஷா அல்லாஹ்) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

Tuesday, July 26, 2011

என் குடும்பத்தில் நடந்த வரதட்சணை ஒழிப்பு,நபிவழி திருமணம்

சென்ற மாதம் நான் விடுமுறையில் ஊரில் இருந்தபோது உருப்படியாக செய்த இரண்டு காரியங்கள். ஒன்று சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தது. இரண்டு என்னுடைய குடும்பத்தில் நடந்த இஸ்லாமிய வரதட்சணை ஒழிப்பு திருமணம்.

மணமகன் என்னுடைய நண்பர் இஸ்லாமிய ஒரிறைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அவருடைய இன்றைய பெயர்
அப்துல்லாஹ்

மணமகள் என்னுடைய அண்ணன் மகள்

அண்ணன் சவூதியில் இருப்பதால் நான் தான் பெண்ணிற்கு வலீயாக
(பொறுப்புதாரீயாக) சிறிய தந்தை என்ற முறையில் நின்று மணமுடித்துக் கொடுத்தேன்.

திருமணம் சென்னையில் நடந்தது. ஆடம்பரம், பகட்டு எதுவுமின்றி எளிமையாக மணமகனின் செலவில் நடந்தது. இஸ்லாத்திற்கு முரனான எந்த சடங்கும், மாலை,தொரணை எதுவும் இல்லை புகைப்படங்களை பாருங்கள்.

மணமகன் வெள்ளை சட்டை
அனிந்து இருக்கிறார்


என்னுடைய அண்ணன் மகளை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த வரதட்சணையும் கொடுக்காமல் உங்களிடம் மஹர் பெற்றுக் கொண்டு மணமுடித்து கொடுக்கின்றேன் ஏற்றுக் கொண்டீர்களா? என்று சொல்லி மணமுடித்து கொடுத்த காட்சி.


என்னுடைய அண்ணன் மகள் ஏற்றுக் கொண்டு மணஒப்பந்தத்தில் கையேழுத்திட்ட காட்சி.

மணமக்களுக்காக அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனிடம் துஆ(பிரார்த்தனை) செய்யுமாறு சகோதர சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 20, 2011

(18+) வரதட்சிணை எனும் அவமானம்.புத்தக அறிமுகமும்,எனது மலேசியா சிறை அனுபவமும்.

   18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்:
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


'நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு. இங்கே அழுத்துங்கள் .

மலேசியா கள்ளக்குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

அது ஒரு தொடர் (அது இப்பதான் எனக்கு ஞாபகம் வருகிறது)

2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்

மலேசியாவில்
சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்
டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்

போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.

                                       சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Sunday, July 17, 2011

மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்?ஃபஸாதிகளா? ஜிஹாதிகளா?

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. 






ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் 
இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. என்று செய்தி வெளியிட்டன தினமலரின் அரசியல் அனைவரும் அறிந்த ஒன்று தான். 


என்றாலும் இந்த முறை உள்துறைக்கே யார் குண்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தினமலர் அதே உள்துறை பெயரைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்ட்டு இருப்பது தான் ஆச்சரியம். இந்த செய்தியை காண்பவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதே தினமலரின் நோக்கம். முஸ்லிம்கள் மீது பகையுணர்வும், வெறுப்பும் கொள்ளச் செய்வதே அதன் திட்டம்.


அடுத்தப்படியாக தினமனியில். இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுகிறார். 


சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

குண்டு வேடிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வண்மையாக கண்டிக்க தக்க செயல் தான் ஆனால் இன்ன பிரிவினர் தான் என்று சொல்வதின் மூலம் இவர்கள் எதற்காக அவசரப்படுகிறார்கள் என்று அம்பலப்பட்டு போயி விடுகின்றனார். இவ்வளவுக்கும் ராமகோபாலன் ரா உளவுப்பிரிவின் உயர் அதிகாரியும் இல்லை.

ஆனால் ரா மற்றும் பல உளவுப் பிரிவுகளை வைத்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.

மும்பை தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை: .சிதம்பரம்

First Published : 14 Jul 2011 11:00:22 AM IST
Last Updated : 14 Jul 2011 11:33:08 AM IST

மும்பை, ஜூலை.14: மும்பை தாக்குதல் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல் எதுவும் வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட உள்துறை அமைச்சர் .சிதம்பரம், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியும் இருக்கலாம் என்றார்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்காக பொதுமக்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சிதம்பரம், இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய தகுதி உள்ள அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடத்தகுந்த உளவுத் தகவல் எதுவும் வரவில்லை. அதுபோன்று தகவல்கள் வந்தபோதெல்லாம் அதை அந்தந்த மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம்.

முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவதிகளாக தேசத் தூரோகிகளாக சித்தரிக்க நினைக்கின்ற அதனை பிரச்சாரம் செய்வதில் பல ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் துணை நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் (Criminal Laws) கடுமையானவை என்று விமர்சிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைக்கும், சட்டம் அனுமதிக்காத ‘வெளிப்படை வன்முறை’(Overt Violence)க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிரது.

அதிலும் அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற சமுதாயத்திற்கும் முன்னதாக வழங்கப் பட்டதாகக் கூறுகிறது. அதனால் அனைவரும் பின்பற்றக் கூடிய பொதுசட்டமாக அதனை அறிவிக்கிறது. இதோ திருக்குர்ஆன்:


“கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும்,ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்ம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.(அல்குர்ஆன் 5:32)

ஆகவே நியாயமான காரணங்களுக்காக நீதிபரிபாலன முறையில் வழங்கப்படும் தண்டனையை தவிர்த்து ஓர் உயிரைக் கொலை செய்வது அனைவரையும் கொலை செய்வதற்கு சம்மாகும் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஒருபடிமேல் சென்று ஓர் உயிரைக் காப்பாற்றுபவன் அனைவரையும் வாழ வைப்பவன் போலாவான் என்றும் முழங்குகிறது.

அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை. அப்பாவி மக்களை கொன்று பூமியில் குழப்பத்தை விளைவிப்பவர்களை “வரம்பு மீறியவர்கள்” என்று குர்ஆன் கண்டிப்பதை பாருங்கள். அவர்கள் "அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள்"என்றும் அடுத்த வசனத்தில் அது சாடுவதுடன், அவர்களுக்குரிய தண்டனை என்ன என்பதையும் குர்ஆன் வரையறை செய்கிறது. இதோ குர்ஆன் பேசுகிறது :

கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்.அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.(5:33)


அப்பாவி மக்களை எந்தக் காரணமும் இன்றி கொலை செய்து நாட்டில் கலவரங்களைத் தூண்டி குழப்பங்கள் விளைவிக்கும் கொடூரமான குற்றத்துக்கு மிகக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தும் திருக்குர்ஆன், அதனை எந்த சந்தர்ப்பத்தில் (Context) விதியாக்கியது என்பதையும் அறிவிக்கிறது. அதற்கு  குர்ஆனின் 5:32 வது வசனம் “இதன் காரணமாகவே” என்ற சொற்றொடருடன் ஆரம்பமாகி முன் வசனங்களின் கருத்துடன் இணைக்கிறது.

ஆதமுடைய புதல்வர்களான காபில் (Cain) ஹாபில் (Abel) இருவரிடையே எழுந்த சர்ச்சையில் ஒரு பாவமும் அறியாத அப்பாவியான ஹாபிலை காபில் கொலை செய்து கொன்று விடும் வரலாற்றுப் பின்னணியிலேயே மேற்கண்ட தண்டனை சட்டம் வழங்கப்படுகிறது.

ஆகவே அப்பாவி மக்களைக் கொல்வது எவ்வளவு பாவமானது, கொடூரமானது, இழிவானது என்பதை இதை விடவும் வன்மையாகவும் கடுமையாகவும் கண்டிக்க முடியுமா? இல்லை, குர்ஆனுக்கு நிகராக வன்முறையைக் கண்டிக்கும் வேதங்களையோ அல்லது சமூக வாழ்வியல் நூல்களையோ காட்ட முடியுமா?


ஆகவே நாட்டில் நடக்கும் குற்றங்களுக்குப் பெயர் ஜிஹாது(அறப்போர்) அல்ல. அதற்கு பெயர் 'ஃபஸாது'(குழப்பவாதிகள்) அதைச் செய்பவர்கள் ஜிஹாதிகளும் அல்ல. முஜாஹித்தீன்களும் அல்ல. அதனைச் செய்பவர்கள் ஃபாஸதிகள். (குழப்பவாதிகள்) ஃபாஸாது என்னும் அரபுச் சொல் உருதுவிலும் ஹிந்தியிலும் ஏன் தமிழ் முஸ்லிம்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. ஆகவே இது போன்ற குற்றங்களை வர்ணிப்பதானால் ஊடகங்கள் இனி அந்த வார்த்தையைப் பயன்படுத்தட்டும். சரியான வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் இருக்கும். முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரு அரபிச் சொல்லை பயன்படுத்திய திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.

திவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சட்டத்தை கையிலேடுத்து சதி செயல் செய்பவர்கள் இஸ்லாமியரும் அல்ல. இதனை இஸ்லாமிய வரலாறும் நபிகளாரின் வாழ்வும் நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மைகள்.

இஸ்லாத்தின் இரண்டாவது கஃலீபா (மக்கள் பிரதிநிதி) உமர் அவர்கள். சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பாலஸ்தின் என்று 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி புரிந்த மிகப்பெரிய ஆட்சியாளர். அவர்களை தொழுதுக் கொண்டிருக்கும் போது எதிரி ஒருவன் கத்தியால் ஆழமாக குத்தி விட்டு ஒட முயற்சிக்கும் போது உமரின் மகன் அவனை தடுத்து நிறுத்தி வெட்டுவதற்காக வாளை ஒங்கிய போது.   உமர் அவர்கள் வெட்டு காயத்தோடு தடுத்து மகனே நீ அவனை தண்டிக்க முடியாது இஸ்லாமிய அரசாங்கம் இருக்கிறது கோர்ட் இருக்கிறது அவர்களுக்கு தான் தண்டிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அவனை பிடி என்றார்கள். அந்த காயத்தினால் உமர் ரலி அவர்கள் இறந்தார்கள். குத்தியவனுக்கு கோர்ட் மரணதண்டனை கொடுத்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவன் உண்மை முஸ்லிமல்ல.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா,நூல்: முஸ்லிம் 73)

Tuesday, July 12, 2011

மது ஒரு பொதுத்தீமை

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது


மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது.

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.


டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 

கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே
மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

Monday, July 4, 2011

சீரியல்களை பார்க்கவிட்டால் ஏற்படும் விளைவுகள்



என்ற பதிவில், 'என்னுடைய மனைவி சொந்தமாக காய்கறி, கீரைத் தோட்டம் போட்டிருக்கிறார், அதைப் பற்றி அவருடைய வலைப்பூவில் எழுதுவார்' என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் அவர் எழுத மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் 'நேரமில்லை, நான் ரொம்ப பிஸி.' சரி, சீரியல் பார்ப்பதேயில்லை, அந்த நேரத்தில் பிளாக் எழுதலாம் என்று சொல்லிப் பார்த்தேன். பிளாக்கரும் சீரியலும் ஒன்றுதான், இரண்டுமே நமது நேரத்தை தின்றுவிடும் என்றார். அதற்கு மேல் நானும் வற்புறுத்தவில்லை.

ஏனென்றால் அவர் உண்மையில் ரொம்ப பிஸியாகத்தான் இருக்கிறார். அதுவும் பயனுள்ள முறையில். தோட்டம் வளர்ப்பது, கோழி, ஆடு வளர்ப்பது இவைகளை மனம் விரும்பி ஆர்வத்தோடு செய்கிறார்.

கீழே எங்கள் தோட்டப் படங்கள்



கொத்து கொத்தாய் முருங்கைகாய்

எங்கள் வீட்டு சீதா பழம்

.

கொழுந்து முருங்கை இலை


அகத்திக் கீரை

எலுமிச்சை செடி

கை சிவக்க மருதாணி

தோட்டத்தின் ஒரு பகுதி

தோட்டத்தின் இன்னொரு பகுதி


சண்ட சேவல்

முட்டை போடும் கோழி


பாசமாக முட்டும் ஆடு 

Saturday, July 2, 2011

இணைய விபச்சாரமும் வரலாற்றுப் படிப்பினையும்.

டுநிசி
மக்க மாநகர் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.அன்று பவுர்ணமியாதலால் பட்டப் பகல்போல் நகரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. என்றாலும் ஆங்காங்கு இருந்த வீடுகள் நிழலுள் மூழ்கியும் நிழலைப் பரப்பியும் மவுனமொழி பேசின.

நான் என்னை ஒரு போர்வைக்குள் மறைத்துக் கொண்டும் நிழல்களுக்குள் ஒளித்துக் கொண்டும் சந்து பொந்துகளில் நடந்து சென்றேன். பின் முக்கிய வீதியொன்றில் முன்னேறி இலக்கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டேன்.



குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கியே என் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் பலரும் மக்காவை விட்டு வெளியேறிய பின்னரும் நான் மக்காவிலேயே தங்கியிருப்பதற்குக் காரணம் இருந்தது.

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை இரவில் யாருக்கும் தெரியாமல் மீட்டு மதீனாவுக்குக் கொண்டு சேர்ப்பதே என் பணியாக இருந்தது. அதற்காகவே நான் நடுநிசியில் தன்னந்தனியாக குறைஷிகளின் கூடாரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

அன்று இரவு ஒரு முஸ்லிம் தோழரை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அவரும் எனக்காக கண் விழித்துக் காத்துக் கொண்டிருந்தார். முக்கிய வீதியில் சென்ற நான் எதிரில் ஆள் நடமாட்டம் தெரிய அருகிலிருந்த வீட்டின் நிழலுள் நிழலானேன்.

எதிரில் ஒர் உருவம் தென்பட்டது. அது நானிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது யாரெனப் பளிச்செனத் தெரிந்தது. அது ஒரு பெண் அவள் பெயர் அனாக்.  அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவளையும் பலருக்குத் தெரியும். அவள் ஒரு பாலியல் தொழிலாளி; பசப்பி.

அவளுக்கு நான் ஒரு வழமைச் சவாரி, ஒரு காலத்தில்; அவளைப் போன்றவர்களையெல்லாம் அப்பால் தள்ளி விட்டு இப்பால் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கண்டபடின் வாழ்ந்த காலங்களெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட நிலையில் நான் இப்போது ஒர் உண்மை முஸ்லிம்.

அவள் என்னைப் பார்த்து விட்டால் எனக்கு இருவகை இழப்புகள் ஏற்படலாம். ஒன்று என் செயல் குறித்து அறிந்தால் அவள் மூலம் எதிரிகளின் தொல்லை வரலாம். பணி தடைபடலாம். இரண்டு, என்னை அவள் தன் திசைக்கு அழைக்கலாம். இரண்டுமே நடைபெறாமல் இறைவன் என்னைக் காப்பற்ற வேண்டும் என எண்ணிய நான் என்னையறியாமல் தும்மினேன்.

தும்மலைக் கேட்ட அனாக் திரும்பிப் பார்த்து “யாரது! இருளின் மடியில்...!” எனக் கேட்ட படி என்னை நோக்கி வந்தாள். அவளின் மடி என் நினைவுக்கு வந்தது .இறைவன் என்னை காப்பாற்றுவான். நான் பதில் பேசாமல் நின்றபடி போர்வையால் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டேன்.

“எனக்குத் தெரியாதவர் மக்காவில் யாருமே இருக்க முடியாது... யார் நீ” எனக் கேட்டபடி அருகில் வந்து என் போர்வையை வேகமாக உருவினாள். என் முகம் இப்போது நன்றாக தெரிய வர, “மர்ஸத் நீங்களா? என் மனங்கவர்ந்தவர்களில் ஒருவரான நீங்கள் ஏன் என்னிடமிருந்து மறைய வேண்டும்?” எனக் கேட்டபடி அருகில் வந்து என் கையைப் பற்றினாள். நான் கைகளை உதறினேன்.


எனக்கு நா வறண்டது. என்ன பதில் கூறுவது என எனக்குத்தோன்றவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். கண்களிலும் நீர் தளும்பியது.


“ மர்ஸத், ஏன் பேச மறுக்கிறீர்கள்? ஏன் இப்போது உங்கள் கரங்கள் உதறுகின்றன? மெல்லிய காற்று வீசும் சூழலில் எப்படி வந்தன உங்கள் முகத்தில் வியர்வைத் துளிகள்?”


“அனாக்! நான் இப்போது ஒரு முக்கிய வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் தான்...”


"என்ன வேலைக்காக தாங்கள் பதுங்கிப் பதுங்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்னைக் கண்டு பேசுவதை விட அவ்வேலை என்ன அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது!"


" அதைப் பற்றி நான் இப்போது உன்னிடம் பேச முடியாது"


" ஏன்? என் மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? திருடச் செல்கிறீர்களா? இல்லை, யாரையும் கொலை செய்யப் போகிறீர்களா? அப்படிப்பட்ட ஆளில்லையே நீங்கள்... என்னிடம் சொல்லுங்கள்; இல்லையேல் பரவயில்லை" என்ற அவளின் பேச்சில் என மனம் குளிர்ந்தது.

அனாக் விலை மகளாயிருந்தாலும் அவள் அநியாயத்துக்கு விலை போக மாட்டாள் என எண்ணி, "நான் குறைஷியர் சிறைப்பிடித்துள்ள முஸ்லிம் ஒருவரை மீட்கப் போய்க் கொண்டிருக்கிறேன்" என்ற உண்மையைச் சொன்னேன்.

“நல்ல வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. என்றாலும், இன்று நீங்கள் என்னோடு தங்கிச் செல்ல வேண்டும்” என அனாக் என்னிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

"அனாக்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன். எனவே, நான் உன் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். அல்லாஹ் தவறான பாலியல் உறவைத் தடை செய்துள்ளான். அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனியாவது தெரிந்து கொள். இனி நீ கூட அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு ஒரே மனிதருடன் வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.”

“அதெல்லாம் கதைக்குதவாத வீண் பேச்சு.வீடு கட்டிக் கொண்டு வாழ்வதெல்லாம் என்னைப் பொறுத்த வரை வீண் வேலை. எனக்குக் கூடாரமே போதும். அதனால் இப்போது நீங்கள் எனக்கு வேண்டும்.”

“நீங்கள் என்னுடன் வர சம்மதிக்கவில்லையானால், நான் கூச்சலிட்டுக் குறைஷிகளிடம் உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்” என அவள் என்னை எச்சரித்த போதே என் கால்கள் ஒட ஆரம்பித்தன. அவள் கத்தத் தொடங்கினாள்.

“கூடாரக்காரர்களே! நீங்கள் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை மீட்பதற்காக இதோ ஒருவர் வந்து விட்டுத் தப்பித்து ஒடுகிறார். அவரை விரைந்து பிடியுங்கள்” என அனாக் கூச்சலிட நான் சிட்டாகப் பறந்தேன்.

குதிகால் பிடரியில் பட ஒடிய நான் திரும்பிப் பார்த்தேன். எட்டுப் பேர் என்னைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருந்தார்கள். அனாக் தூரத்தில் புள்ளியாய் நின்று கொண்டிருந்தாள்.

ஒடினேன்; ஒடினேன்.... ஒடிக் கொண்டே இருந்தேன். ஒடிக் கொண்டிருந்த நான் கந்தமா எனும் மலைக் குகையின் அடிவராத்தில் சென்று மறைந்து கொண்டேன். தேடி வந்த எட்டுப் பேரும் குகையின் மேல் நின்று எட்டுத் திக்கும் எட்டிப் பார்த்திருப்பர் போலும், பேச்சொலி கேட்டது.

பதுங்கியிருந்த என் தலை மேல் சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு வகை நாற்றம் மூக்கைத் துளைத்தது. அவை உதட்டில் பட உப்புக் கரித்தது. குகை மேலிருந்து அவர்கள் பெய்த சிறுநீர் என்னைப் பெருமைப்படுத்தியது போலும்! ஏதும் கூற முடியாத நிலையில் அமைதி காத்தேன்.

தேடி வந்தவர்கள் திரும்பிய பின் நீண்ட நேரங்கழித்து மூன்றாம் ஜாமத்தில் என் பணியை மீண்டும் தொடர்ந்தேன். பவுர்ணமி நிலவு கீழ் வானத்தில் போர்வை போர்த்திப் படுத்துக் கிடந்தது. முஸ்லிம்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கூடார மைதானத்தை அடைந்தேன்.

குறட்டை ஒலியே கேட்டது காவலிருந்த குறைஷிகள் குடித்திருந்த காரணத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் குறிப்பிட்ட கூடாரத்தை அடைந்தேன். நான் மீட்கச் சென்ற நபர் என்னை எதிர்பார்த்திருந்தார். அவர் கால்களில் காயம்: கைகளில் விலங்கு.

நான் குனிந்து அவரை என் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கனத்த சரீரம் கொண்ட அவரை என்னால் நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவரின் விலங்கை உடைத் தெறிந்தேன். அவருக்கு ஒரளவு வலுகூடியது போலிருந்தது. என்றாலும் கால்களில் இருந்த காயங்களால் தரையில் காலுன்றி நடக்க முடியவில்லை.

மீண்டும் அவரைப் பேரீச்சை மூட்டையைச் சுமப்பது போல் சுமக்க ஆரம்பித்தேன். நகர எல்லையைத் தாண்டியபோது வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பறவைகள் கிறிச்சிட்டுக் கொண்டு பறக்க தூரத்தில் இடி முழக்கங்கள்.

என் கால்களும் கைகளும் வலுவிழந்தன. சுமையோடு விழுந்து விடுவேனோ எனப் பயம் வந்தது. அருகிலிருந்த ஈச்ச மரத்தோப்பில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் பயணத்தை இரவில் தொடரலாம் என எண்ணினேன். என் முதுகிலிருந்த நண்பரும் நான் எண்ணியதையே செயல்படுத்தச் சொன்னார்.

நண்பரைக் கிழே இறக்கி வைத்து விட்டு தோப்பை ஆராய்ந்தேன். அங்கே ஆளரவம் இல்லை. தோட்டத்தின் பின்புறம் ஒர் உயர்ந்த மணல் மேடு இருந்தது. அம்மணல் மேட்டின் மறைவில் நாங்கள் வீழ்ந்து கிடந்தோம். பசி அரை மயக்கம் அசதி எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை நீண்ட தூக்கத்தில் ஆழ்த்தின. கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உச்சியில் இருந்தான்.

மர்ஸத், உங்கள் உதவிக்கு நன்றி. நம்மிருவரையும் இஸ்லாமிய உறவு இணைத்ததோடு அல்லாஹ்வின் அருள் நமக்கு எவ்வளவு வலுவைத் தந்திருக்கிறது பார்த்தீர்களா? எனத் தோழர் உரைக்க, “ஆம் நண்பரே!” எனக் கூறி சபலங்களிலிருந்தும் நான் தப்பித்ததையும் அதற்கு அண்ணலாரின் வழிமுறைதான் காரணம் என்பதையும் கூற மாலை மதியமும் வீசுதென்றலும் வந்து சேர்ந்தன.


பசியும் அசதியும் வலியும் சென்ற இடம் தெரியவில்லை. நாங்கள் மதீனாவை நோக்கிச் செல்ல ஆயத்தமானோம்!



(அபூதாவூத், நஸயீ ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சகோதரர் தாழை மதியவன் அவர்களால் எழுதப்பட்ட நடை ஒவியம். நன்றி)


உலகிலேயே ஆபத்தான இடம் எது என்று ஒரு மாணவியிடம் பொது நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட போது. இணையம் என்று பதில் சொன்னார் அதற்கு அரங்கில் நீண்ட நேரம் ஒலித்த கைத்தட்டல்கள். இணையத்தின் பாதிப்பை உண்மைப்படுத்தின.

இன்று பதிவுலகில் சகோதர, சகோதரி(மர்ஸத்)கள் அனைத்து சபலங்களையும் வென்று நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் "அனாக் " குகள் ஆயிரகணக்கில் இணையத்தில் வழிகெடுக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த "அனாக்" களிடமிருந்து இறைவன் "மர்ஸத்"களை காப்பற்றுவானாக.