மனிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.
இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தை வேண்டுமென்றே கைகளால் மூடிக் கொண்டு இருள் என்பதுபோல் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மதங்களின் மீதான இத்தகைய விமர்சன ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.
குர்ஆனில் சில வசனங்களை காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது பாருங்கள் என்று வரலாறு தெரிந்து கொள்ளாத தெரிந்துக் கொள்ள முயற்சிக்காத பிரிவினைவாத கூட்டத்தினர் தவறான விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன அந்த வசனம் இறங்கிய பிண்ணனி என்ன? என்பதை பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. வகுப்புவாதிகள் பாமர மக்களின் இதயத்தி நஞ்சை விதைக்க திரித்துக் கூறும். இரண்டாம் அத்தியாயத்திலுள்ள் 191 வது வசனம் இது.
இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.
இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?
போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.
நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?
திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?
சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.
நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.
இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)
தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)
முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்
போரின் இலக்கணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் மற்றொரு நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக் குர்ஆன் 2:192)
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக் குர்ஆன் 4:75, 22:39-40)
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
* மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9).
(நன்றி சகோதரர் பிஜே அவர்களின் தழிழாக்க குர்ஆனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.
ReplyDelete