Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

Saturday, March 21, 2015

காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா?

னிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.

இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தை வேண்டுமென்றே கைகளால் மூடிக் கொண்டு இருள் என்பதுபோல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதங்களின் மீதான இத்தகைய விமர்சன ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.


குர்ஆனில் சில வசனங்களை காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது பாருங்கள் என்று வரலாறு தெரிந்து கொள்ளாத தெரிந்துக் கொள்ள முயற்சிக்காத பிரிவினைவாத கூட்டத்தினர் தவறான விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன அந்த வசனம் இறங்கிய பிண்ணனி என்ன? என்பதை பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. வகுப்புவாதிகள் பாமர மக்களின் இதயத்தி நஞ்சை விதைக்க திரித்துக் கூறும். இரண்டாம் அத்தியாயத்திலுள்ள் 191 வது வசனம் இது. 

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும். 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும். 

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது. 

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்
 போரின் இலக்கணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் மற்றொரு நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக் குர்ஆன் 2:192)
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக் குர்ஆன் 4:75, 22:39-40)
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
* மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9).

(நன்றி சகோதரர் பிஜே அவர்களின் தழிழாக்க குர்ஆனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Thursday, February 28, 2013

பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்?


முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு.
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.
 1) இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளைத் திரித்துக் கூறுதல்
2) பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும், பொறாமையையும், குரோதத்தையும் ஏற்ப்படுத்துதல்.
பிரீட்டிஷாரின் சதி
ஒரிசாவின் முன்னாள் ஆளுநரும், இந்நாள் ராஜ்யசபை உறுப்பினருமான பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படித் திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும் பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார் :
பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும். எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளர் “வுட்” எழுதியக் கடிதத்தில்,
“ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்திமூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்ப்படுத்தித் தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என எழுதியுள்ளார்.
கர்ஸான் பிரபுவுக்கு ஜார்ஜ் பிரான்ஸிஸ் ஹாமில்டன் பின்கண்டவாறு எழுதியுள்ளார் :
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துள்ள இருக் கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப்புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்.”
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன. மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பதுப் போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
பொருளாதாரத் தாக்குதல் :
இரண்டவதாக, பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை ஏற்ப்படுத்த முனைந்தனர். வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்களாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன. டாக்டர். டபிள்யூ. டபிள்யூ .டபிள்யூ. ஹண்டர் பின்வறுமாறு எழுதுகிறார் :
“நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவான்தார்களாக மாற்றுவதே. அன்று வரை முக்கிய பதவிகளில்  இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்தி விட்டது. முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களை எல்லாம் இந்த இந்து ஏவலாளர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quoted The Meaning of Pakistan By F,K. Khan Durrani)
நிதி நிர்வாக விஷயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இரானுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பின் என்ற பத்திரிக்கை 1867ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும்,
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாரையும் ஒரே விதமாக பாவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்கு தங்களின் கெஜட்டுக்களிலிருந்து முஸ்லிம்களை பகிழரங்கமாக நீக்கி விட்டிருக்கிறது. சமீபத்தில் சுந்தர்பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாகின. இதைப் பற்றி கமிஷ்னர், அரசாங்க கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரப்பட மாட்டாதென அறிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கிணித்தே வைத்திருந்தது. இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்குள் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
 மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
சிப்பாய் கலகத்திற்குப் பின்
இந்நிலையில், 1857 ஆம் வருடத்தில் பசுமாட்டின் கொழும்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய் கலகம் துவக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்துக் கொண்டனர். அக்கலம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஆயுதத் தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தனர். இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்களின் மீது விழுந்தது.
சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டனர். ஸையித் அஹ்மது கான், 1887 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பக்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,
“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது? இந்துக்கள் அதனை ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுபட்டனர். இறுதியில் இந்துக்கள், கங்கையில் மூழ்கித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசிந்து நாசமடைந்தன” என குறிப்பிட்டுள்ளார்.     (பாகிஸ்தான் விளக்கம் : By எப். கே. துர்ரானி)
சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்து தீவிரவாதிகளின் போக்கு :
1867-ல் காசியிலுள்ள இந்துத் தலைவர்கள் உருது மொழிக் கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1875-ல் “இந்தியா இந்துக்களுக்கே” என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்யசமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.
 1890-ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்” எனக் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், முஸ்லிம்கள் குர்பானிக் கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.
 1882-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஆனந்த மடம்’ எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார். அதில் தான் வந்தேமாதரம் என்ற கீதம் வருகிறது. அதில் இந்தியாவை “காளி” என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்லுகிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.
இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒருவகையான பயஉணர்ச்சியை ஏற்ப்படுத்தின. அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியது.
காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்
இந்நிலையில், 1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது. அதன் முன்னோடித் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே, அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் தூவிய வேற்றுமை விஷ வித்துக்களுக்கு பலியான இந்து மதத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை  நடத்த விரும்பினர். விளைவு? 1906ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் சர். ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதன் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”
(Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)
 Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.
முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.
    (A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.
முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும், லீக்கிலும் இருந்தனர். மேளலானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினை பிரச்சாரம் யார் துவக்கியது?
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்கும் இடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.
இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
 இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள்; அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது.
“முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில் தான் முதன்முதலில் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்துவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால், “ரேடியன்ஸ்” வார இதழில் (13-6-87) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இன்று R.S.S போற்றிப் புகழும் V.D சாவர்க்கார், இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N. அகர்வால் தனது the national movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
குர்தகி மட சங்கராச்சாரியார், “இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம்களை எச்சரித்தனர்.
அகில இந்திய சிவில் சர்வீசில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu – Muslim state is sheer nonsense “இந்து – முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது ஒரு முட்டாள்தனம்” என உரத்துச் சொன்னார்.
1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தரைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல். அதன் முக்கியக் குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே; வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை. என்பதே இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. 1924-ல் லாஹுரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இஸ்லாமியர்களைப் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் நிலை
இவ்விதம் இந்துமதத் தலைவர்களில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917ல் இருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார். அதுவரை அவர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார். The ambassador of Hindu-Muslim Unity” என்று சரோஜினி நாயுடுவால் பரப்பப்பட்டவர், 1933-ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பற்றிக் குறிப்பிட்ட பொழுது An Impossible Dream’ நடைபெற இயலா கனவு என்றார் ஜின்னா.
 1906 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக் 1940 ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை, 1945, 1946-ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.
ஏன் கேட்டார் தனி நாடு ?
தனிநாடுக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.
“பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.
வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆணாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார். (Quoted in a Short History of India and Pakistan).
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கலவி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)
இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940-ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது :
ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6-ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940-ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.
“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலைத் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.
R.S.S-யை நோக்கி ஒரு கேள்வி?
இன்று இந்தியாவைத் துண்டாடிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே; பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினார்களே; பிரிக்கவேக் கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய் படேல் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S என்ன செய்தது? இன்று பாரதமாதாவை துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? இல்லையே ஏன்?
முஸ்லிம் லீக்கை, ஜின்னாசாஹிபை. காயிதேமில்லத்தை, முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினை வாதிகள் எனச் சொல்வது இல்லையே ஏன்?
இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்; விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!
மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?
* பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.
* இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.
* முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.
* இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை. மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புகிறோர் H.M. Sreevai partition of India : legend and Reality என்ற நூலையும், The Dialogue Between Hindus and Muslim என்ற நூலையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  
நன்றி: கணியூர் நாஜி நீடுரி அவர்கள்
நன்றி: http://annajaath.com/?p=5468