Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, July 20, 2014

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்...!

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
த்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை  கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
(நன்றி - வினவு )

Thursday, November 22, 2012

ஆசிரியர் அமைவதெல்லாம்...!


நல்ல ஆசிரியர் என்பவர் யார் ? நன்றாகக் கற்பிப்பது எப்படி ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெளிவாக இல்லை என்கிறார் அமண்டா ரிப்ளி (http://www.theatlantic.com/doc/201001/good-teaching). அதை ‘ஆமாண்டா’ என்று ஆமோதிக்கிறார் ஜனாதிபதி ஒபாமா. அவரும் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர் என்பதால், உலகில் நல்ல வாத்தியார்கள் கிடைப்பது அரிது என்ற விஷயம் ஒபாமாவுக்குத் தெரிந்திருக்கிறது. அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 430 கோடி டாலர் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார். சந்தையில் மற்ற எல்லாச் சரக்குகளும் போலவே கல்வியும் தனியார் மயமாகிவிட்ட சூழ்நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் வரலாறு காணாத முயற்சி இது !
வாஷிங்டனில் ஐந்தாம் வகுப்புப் பையன்கள் இரண்டு பேர். இருவரும் ஒரே மாதிரி ஏழைக் குடும்பம். ஒரே மாதிரி கணக்கில் ஃபெயில் மார்க். அதில் ஒரு பையன், மிஸ்டர் டெய்லர் என்ற திறமையான ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். மற்றவன், ஒரு சாதா பள்ளிக்கூடத்தில் சாதா ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். வருடக் கடைசியில் இரண்டாமவன் கணக்குப் பாடத்தில் அதே முட்டை வாங்கிக் கொண்டிருக்க, டெய்லரிடம் படித்தவனிடம் அபாரமான முன்னேற்றம். அதற்கு வாத்தியார்தான் முழுக் காரணம். டெய்லரின் வகுப்பில் படித்த அத்தனை பேருமே சராசரியிலிருந்து முன்னேறி, பிரகாசிக்கும் மாணவர்கள் என்ற வரிசையில் சேர்ந்துவிட்டார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.
பெற்றோர்கள் எல்லோருமே தத்தம் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் ராத்திரி நாலு மணிக்குப் போய் விண்ணப்ப கியூவில் நிற்கிறார்கள். பி.எஃப்பில் லோன் போட்டு நன்கொடை கட்டுகிறார்கள். இருந்தும் பள்ளிக் கூடம், பாடத் திட்டம் எல்லாவற்றையும் விட சாக்கட்டித் தூசி படிந்த கையுடன் குழந்தைகளின் எதிரே நிற்பவர்தான் முக்கியம்.
வாஷிங்டன் பரிசோதனையில் கவனிக்கப்பட்ட இரண்டு பையன்களும் இன்னும் நாலைந்து வருடத்துக்குத் தத்தம் ஆசிரியர்களிடம் படித்தால், அவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிடும். அவர்கள் ஹைஸ்கூலுக்கு வரும்போது நல்ல ஆசிரியர் - அல்லாத ஆசிரியர்களால் தொடர்ந்து ஏற்பட்ட மொத்த விளைவுகளும், பிறகு என்ன செய்தாலும் மாற்ற முடியாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.
இதையே வேறு விதமாகச் சொல்லலாம் : ஏறக் குறைய குப்பத்திலிருந்து வந்த மாணவர்கள் தொடர்ந்து டெய்லர் போன்ற ஆசிரியரிடம் படித்தால், அவர்களுக்கும் நகர்ப்புறத்தின் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கும் அறிவில் திறனில் வித்தியாசமே இருக்காது !
டஃபா (Teach For America) என்ற தன்னார்வ அமைப்பு, பத்து வருடங்களாக லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்கள் விடை கண்டு பிடிக்க விரும்பும் கேள்வி - ‘சில ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் மட்டும் வேகமாக முன்னேறிவிடுகிறார்களே, அதன் ரகசியம் என்ன ?’
இந்த அமைப்பு பட்டதாரிகளை இரண்டு வருட காண்ட்ராக்டில் ஆசிரியர் பணியில் அமர்த்தி, பொருளாதார வசதியில் குறைந்த பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறது. பெரும்பாலும் கறுப்பு-அமெரிக்க, லத்தீன்-அமெரிக்கக் குழந்தைகள். கிராமத்தில் நடவு, நாற்று என்றால் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு ஜூட் விட்டுவிடும் ! 5 லட்சம் மாணவர்கள், 7300 ஆசிரியர்களின் ஜாதகத்தையே கம்ப்யூட்டரில் சேகரித்திருக்கிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு, பயிற்சி ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொண்டு மறுபடி மறுபடி பரிசோதனை செய்கிறார்கள்.
டஃபா ஆரம்பித்த போது, பேச்சுத் திறமை, முன் அனுபவம், கல்லூரிச் சாதனைகள் போன்ற 12 கோணங்களில் அலசி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு டேட்டாவை வைத்துக்கொண்டு பின்னோக்கிப் பார்த்தார்கள். மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்று தெரிய வந்தவர்களுக்கெல்லாம், ஆரம்பத்தில் பொதுவான அம்சங்கள் என்ன இருந்தன ?
முதலாவதாக, விடா முயற்சி. பையன்கள் என் மீது பேப்பர் ராக்கெட் விட்டாலும் சரி, பெஞ்சுக்கு அடியில் குனிந்துகொண்டு பூனை மாதிரி கத்தினாலும் சரி, எது எப்படிப் போனாலும் என் மாணவர்களை முன்னேற்றியே தீருவேன் என்று பல்லை நற நறவென்று கடித்துக்கொண்டு களத்தில் இறங்கும் ஆசிரியர்கள் நல்ல ரிசல்ட் தருகிறார்கள்.
ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் இல்லை, புத்தகம் இல்லை, ஹெட் மாஸ்டர் வண்டை வண்டையாகத் திட்டுகிறார், போர்டில் சாக்கட்டி கீச்சுகிறது என்பது போன்ற எந்தப் பிரச்னையும் அவர்கள் பணியை பாதிப்பதில்லை. எடுத்த வேலையை முடித்து விட்டுத்தான் மறு வேலை.
தங்கள் மாணவர்களுக்கு அவர்கள் பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறார்கள். வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும், அடுத்த வாரத்துக்கு என்ன பாடம் என்று வித விதமாக அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். தினமும் ஏதோ தாங்கள்தான் பரீட்சைக்குப் போவது போல முற்றிலும் தயாரிப்புடன் வகுப்பறையில் நுழைகிறார்கள்.
தாங்கள் செய்வதையும் அதற்குப் பலன் இருந்ததா என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து அவ்வப்போது தக்கபடி கியரை மாற்றிக் கொள்கிறார்கள்.
‘பொங்கல் செலவெல்லாம் எங்கோ போய்விட்டது’ என்று எப்போதும் மூக்கால் அழும் ஆசிரியர்களைவிட, உற்சாகமே வடிவாக, எப்போதும் பாஸிட்டிவ் ஆக வாழ்க்கையை அணுகும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள். தன் வாழ்க்கையை நினைத்துத் திருப்தியுடன் மலர்ச்சியாக இருப்பவர்களின் உற்சாகம், குழந்தைகளையும் தொத்திக் கொள்கிறது.
தங்கள் கல்லூரிப் படிப்பின்போது கை நிறைய மார்க் வாங்கின ஆசிரியர்களின் பின்னாள் மாணவர்களும் அதே போல் நிறைய மார்க் வாங்குகிறார்கள்.
லீடர்ஷிப் : ஒரு என்.சி.சி அணிக்காவது தலைமை ஏற்று வழி நடத்தின அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்களைச் சரியாகத் திருப்பி ஓட்டிக்கொண்டு போக வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மற்றபடி பி.எட், எம்.எட் படிப்பெல்லாம் பைசா பிரயோசனமில்லை என்று தெரிவிக்கின்றன டஃபா ஆராய்ச்சிகள். (அடிக்க வராதீர்கள், சொன்னது நான் இல்லை !)
போன வருடம் 35,000 விண்ணப்பங்களைப் பரிசீலித்து 4,100 புதிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது டஃபா. 30 பரிமாணங்களில் அவர்களின் தகுதியை அலசி பாயிண்ட் கொடுக்கிறார்கள். வருடா வருடம் இந்த மதிப்பிடும் முறையைப் பிழை திருத்திக் கூர் தீட்டிக் கொள்கிறார்கள். இண்டர்வியூவின்போது கற்பனை வகுப்புக்குப் பாடம் நடத்தச் சொல்லியும் கவனிப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களைக் கண்காணித்து அவ்வப்போது அவர்களுக்கு உக்கிரமான ட்ரெயினிங். அவர்கள் செய்யும் தப்புக்களையெல்லாம் திருத்தி வெற்றி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொருவருக்கும் அளவெடுத்துத் தைத்தது போல் தனிப்பட்ட பயிற்சி கொடுக்கிறார்கள்.
டஃபாவில் வகுப்புக்குப் போவதற்கு முன்பு நாடக ஒத்திகை போல நன்றாகத் தயார் செய்துகொண்டுதான் போக வேண்டும். எங்கள் தியாகராசன் சார் மாதிரி ட்ரிக்னாமெட்ரி கணக்கைப் பாதியில் சொதப்பி வளைத்து வளைத்து போர்டு பூரா எழுதியும் விடை வராமல் திருதிருவென்று முழித்தால் வேலை போய்விடும் !
அமெரிக்க அரசாங்கம் இத்தகைய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக Race to the top என்ற ப்ராஜெக்டை ஆரம்பித்து, முன்னே சொன்ன மில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது. அமெரிக்கா நல்ல காரியங்களுக்காகப் பர்ஸைத் திறப்பது அபூர்வம் என்பதால் இந்தப் பணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒபாமாவுக்கும் டஃபாவில் இருப்பவர்கள்தான் ஆலோசகர்கள். இந்த வருடத்திலிருந்து வாஷிங்டன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கும் பரீட்சை. நூற்றில் ஐம்பது மார்க், அவர்களுடைய மாணவர்கள் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. மற்ற ஐம்பது மார்க், வருடம் முழுவதும் அவ்வப்போது வகுப்புக்கு வந்து அமர்ந்து கவனிக்கும் இன்ஸ்பெக்டர்கள் போடும் மார்க்.
இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளும் அதிகம். ‘மாணவர்கள் வாங்கும் மார்க்குக்கு ஏற்பத்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்’ என்று சொன்னபோது ஆசிரியர் யூனியன்கள் பல்லாலும் நகத்தாலும் எதிர்த்தன. ‘கல்வி பிசினஸ், மாநில அரசுகளின் பிசினஸ். அதில் மத்திய அரசு தலையிடுவதாவது’ என்று ஒரு பக்கம் அரசியல் கலகக் கொடி. இது வரை எதற்கும் அசரவில்லை ஒபாமா. போகப் போக என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும்.
கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர்களால் பாழாய்ப் போன வாழ்க்கைகள் எத்தனையோ கோடி. அதே சமயத்தில் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்னை செதுக்கியவர் இவர்தான் என பெருமையோடு அறிமுகப்படுத்தி மனமகிழ்ச்சியடைந்து நினைவு கூறும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
Reference : http://www.theatlantic.com/doc/201001/good-teaching 
ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

Wednesday, November 21, 2012

அறிவே ஆயுதம்

பயங்கரவாத நாடான இஸ்ரேல். சுற்றிலும் அரபு நாடுகள் சூழ தனித்து நின்று நான் முரடன், பெரும்ரவுடி, பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிக்க தனது ஆயுத பலத்தை இக்கட்டுரை எழுதும் இந்நேரத்தில் கூட நிருபித்துக் கொண்டு இருக்கிறது. யூதர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சுற்றியுள்ள அரபுக்கள் (முஸ்லிம்கள்) ஏன் வலிமை குன்றிப் போயுள்ளனர்? என்பதையும் பார்ப்போம்.

இந்த உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர் ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள் முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.

நாசரேத்தில் இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன் ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.

பெஞ்சமின் ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார் ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின் தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன் லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க் ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ் என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

பெர்னார்டு கட்ஸ் நரம்புத் திசு மாற்ற ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார். ஆண்ட்ரூ ஸ்கேலி ‘ என் டோக்ரினாலஜி’ ஆய்வில் நோபல் பரிசைப் பெற்றார். ஆரோன் பெக் உளவியல் சிகிச்சையை கண்டு பிடித்தவர். கிரிகரி பின்கஸ் மாத்திரையை முதலில் உருவாக்கியவர். வால்ட் என்பவர் கண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஸ்டேலி கோஹன் கருவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றார். வில்லம் கோஃப் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் யூதர்கள் ஆவர்.

கடந்த 105 வருடங்களில் 1.41 கோடி உள்ள யூதர்கள் 180  நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 140 கோடி உள்ள முஸ்லிம்கள் மூன்று நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளனர். (அமைதிக்காகத் தரப்படும் விருதுகள் நீங்கலாக.)

யூதர்கள் ஏன் வலிமையுடன் திகழ்கின்றனர்?  ஸ்டேன்ஸி மெஸார் முதல் மைக்ரோ சிப்பைக் கண்டு  பிடித்தவர். லியோ ஸலார்ட் முதன் முறையாக நியூக்ளியர் சங்கிலித் தொடர்பைக் கண்டுபிடித்தார். பீட்டர் ஸ்கல்ட்ஸ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்; சார்லஸ் அட்லர் - போக்குவரத்து சிக்னல் விளக்கு; பென்னோ ஸ்ட்ராஸ் - ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்; ஐசடோர் கிஸி - ஒலித் திரைப்படங்கள்; எமைல் பெர்லினர் - தொலைபேசி மைக்ரோ ஃபோன்; சார்ல்ஸ் கின்ஸ்பர்க் - வீடியோ ஒளிப்பதிவுக் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.

ரால்ஃப் லாரன் (போலோ), லீவிஸ் ஸ்ட்ராஸ் (லீவிஸ் ஜீன்ஸ்), ஹோவர்டு ஸ்கல்ஸ் (ஸ்டார்பக்ஸ்), செர்ஜிபிரின் (கூக்ளி), மைக்கேல் டெல் (டெல் கம்யூட்டர்), லேரி எல்லிசன் (ஓராகள்), டொன்னா கரண் (DKHY),இர்வ் ராப்பின்ஸ் (பாஸ்கின்ஸ் & ராபின்ஸ்), பில்ரோசன்பர்க் (டன்கின் டொனட்ஸ்) ஆகியோர் தொழில் உலகில் முன்னணி முதலீட்டாளர்கள் ஆவர்.

(2006 ல் அதிகாரத்தில் இருந்த யூதர்கள் மட்டும் )ரிச்சர்டு லெவின்,யேல் பல்கலைக்கழகத் தலைவர் ஒரு யூதர். அவரைப் போன்றே  ஹென்ரி கிஸ்ஸிங்கர் (அமெரிக்கா உள்துறைச் செயலாளர்). ஆலன் கிரீன்ஸ் பான், ஜோசப் லிபர்மேன், மெடலின் ஆல்பிரைட் காஸ்பர் வீன்பர்கள், மேக்ஸிம் லிட்வினோவ். டேவிட் மார்ஷல் (சிங்கப்பூரின் முதல் முதலைமைச்சர்), ஐசக் இஸாக்ஸ் (ஆஸ்திரேலிய காவ்ர்னர் ஜெனரல்), பெஞ்சமின் டிஸ்ரேலி, யெவ்ஜனி பிரிமா கோவ் (ரஷ்யப் பிரதமர்), பாரி கோல்டு வாட்டர், ஜார்ஜ் ஸாம்போய் (போர்ச்சுகல் அதிபர்), ஜான் டெட்ஸ் (CIA, இயக்குநர்), ஹெர்ப் கிரே (கனடா துணைப் பிரதமர்), பியர்ரி மென்டஸ் (பிரான்ஸ் பிரதமர்), மைக்கேல் ஹோவர்டு (இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்), புரூனோ கிரிஸ்கி (ஆஸ்திரிய வேந்தர்), ராபர்ட் ரூபின் (அமெரிக்க நிதிச் செயலாளர்) ஆகியோரும் யூதர்களே.

ஊடகத் துறையில், வோல்ஃப் பிளிட்சர் (CNN), பார்பரா வால்டர்ஸ் (ABC News), யூகின் மேயர் (வாஷிங்டன் போஸ்ட்), ஹென்ரி கிரன்வால்ட் (TIme - எடிட்டர்), காதரின் கிரஹாம் (வாஷிங்டன் போஸ்ட் அதிபர்), ஜோசப் லெலிட் (நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்), மேக்ஸ் ஃப்ரான்கல் (நியூயார்க் டைம்ஸ்) ஆகிய யூதர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற மிகச் சிறந்த ஐரோப்பா கொடையாளரின் பெயரை உங்களால் கூற முடியுமா? அவர்தான் ஜார்ஜ் ஸோரஸ். ஒரு யூதர். இதுவரை அவர் 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வாழங்கியுள்ளார். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வால்டர் அனன்பர்க் என்ற மற்றோரு யூதர் 2 பில்லியன் டாலர்களை வழங்கி 100 நூலகங்களைக் கட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். லென்னி கிரேஸல்பர்க் மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர். ஸ்பிட்ஸ், கிரேசில் பர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோர் யுதர்களே.

இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர். ஒவ்வொரு யூதருக்கும் 100 முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனாலும் பலம் குன்றிப் போயிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் (OIC)  57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து 500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும் இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.

2004 இல் ஷாங்காய் ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YNDP தகவல்படி கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15 நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40% மட்டுமே.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230 விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000 விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள் அந்தந்த நாடுகளின்  மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.

முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.

1000 மக்களுக்கு எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன. சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள், எகிப்தில் 20 மட்டுமே.

முஸ்லிகள் ஏன் வலிமை குன்றி உள்ளனர்? நாம் அறிவை உற்பத்தி செய்யவில்லை.

முஸ்லிம்கள் ஏன் அதிகாரமின்றி உள்ளனர்? நாம் அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை.

முஸ்லிம்கள் ஏன் பலத்தைப் பெறவில்லை? நாம் அறிவை பயன்படுத்தவில்லை.

அறிவு சார்ந்த சமூகத்திற்குத்தான் எதிர்காலம் என்பதை நாம் கவனத்தில் கொண்டு, கல்வி அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போதுதான் நாம் வலிமையானவர்களாய் திகழ முடியும்.