Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Tuesday, February 26, 2013

எண்ணெய்: தண்ணீரில் கலக்காது ஆனால் அழிக்கும்.

‘தங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியாதவர்கள் அதே தப்பையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்’ என்று ஓர் ஆச்சரியகரமான பொன் மொழி இருக்கிறது. கற்றுக்கொள்ளத் தவறியவர்கள்/ மறந்தவர்கள் என்றெல்லாம் சொல்லாமல் ‘முடியாதவர்கள்’ என்ற வார்த்தையைப் போட்டதில்தான் பொடி வைத்திருக்கிறது என்று ஒரு பெரியவர் சொன்னார். ஒரு சமூகமே இப்படி ‘முடியாமல்’ போகும்போதுதான், ஏதாவது விஷ வாயு கசிந்து வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிய பிறகும் ‘அந்த ஆளைப் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா’ என்று இன்னும் விவாதித்துக் கொண்டிருப்போம்.

கடந்த வருடங்களில் நாம் திரும்பச் செய்த தப்பு, மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கசிவு. பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ‘ஆழ்கடல் தொடுவானம்’ என்ற துரப்பண மேடையில் வெடி விபத்து ஏற்பட்டு ஐயாயிரம் அடிக் கடலில் முழுகி விட்டது. 11 பேரைக் காணவில்லை. ஏதோ பைப் புட்டுக்கொண்டு, உள்ளிருந்து தள்ளும் மீத்தேன் வாயுவின் அழுத்தமும் சேர்ந்துகொண்டு, ஒரு நாளைக்கு 60,000 பாரல் எண்ணெய் கடலில் கலக்கிறது. (அடப் பாவிகளா, இங்கே நான் கடைசிச் சொட்டு வரை ஸ்கூட்டரை சாய்த்துச் சாய்த்து உதைத்துக் கொண்டிருக்கிறேனே!)

வளைகுடா கடற்கரையில் மெக்ஸிகோ தேசத்தின் அத்தனை சலவைக்காரிகளும் திரண்டு வந்தாலும் சுத்தம் செய்ய முடியாத எண்ணெய்க் கறை. எத்தனையோ உயிரினங்களின் வீடான சதுப்பு நிலங்கள் நாசம். கரையோர இரால் பண்ணைகள் சேதம். நண்டு நத்தைகள், சிப்பிகள் மரணம். எண்ணெயில் குளித்த பெலிக்கன் பறவைகள் கருகிப் போன போண்டா மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.
எனக்கென்னவோ இந்த விவகாரத்தில் உள்ள பொருளாதார, தொழில் நுட்ப, சுற்றுச்சூழல் கோணங்களை விட, சிந்திய எண்ணையைச் சுற்றி மனிதர்கள் எப்படியெல்லாம் நடனமாடினார்கள் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இதில் நாடு மொழிகளைக் கடந்த ஒரு அடிப்படை மனித இயல்பைப் பார்க்க முடிகிறது.
“என் கையில் அதிகாரம் இருந்தால் முதலில் அந்த ஆசாமிக்கு சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் மறு வேலை!” என்று பொருமினார் ஒபாமா. பிபியின் தலைவரான டோனி ஹேவார்டைப் பற்றித்தான் இந்த காமெண்ட். உடனே தங்கள் ஜாதிக்காரனை எப்படித் திட்டலாம் என்று பிரிட்டிஷ்காரர்களுக்கு சுருசுருவென்று கோபம் வந்துவிட்டது. “நாங்கள் பிரிட்டிஷ் கம்பெனி என்பதால்தானே இப்படி அனத்துகிறீர்கள்? உங்கள் ஊரில் உள்ள எக்ஸான், என்ரான், கார்பைட் எல்லாருடைய லட்சணமும் தெரியாதா?” என்று பத்திரிகைகள்தோறும் பச்சை மிளகாய்த் தலையங்கம்.
பிபி நிறுவனம் பாதுகாப்பில் சிக்கனம் பிடித்ததுதான் காரணம் என்று மற்ற போட்டிக் கம்பெனிகள் எல்லாம் அதைக் கண்டித்தன. பிறகு நிருபர்கள் தூண்டித் துருவியதில், எல்லோருமே ஒரே குட்டை மட்டைகள்தான் என்பது தெரிந்தது. உதாரணம் : எல்லா எண்ணைய்க் கம்பெனிகளுமே விபத்து நடந்தால் உடனே கூப்பிடுவதற்கென்று ஆழ்கடல் வல்லுநர் ஒருவருடைய போன் நம்பரை அச்சடித்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரே பிரச்னை, மேற்படி வல்லுநர் காலமாகி ஐந்து வருடம் ஆகிறது.
பிபியிலும் விபத்துக் காலங்களுக்காக ஒரு பாதுகாப்புக் கையேடு உண்டு. அதில், ஆயில் கொட்டிவிட்டால் உடனே வால்ரஸ் மிருகங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. என்ன இது! மெக்ஸிகோ வளைகுடாவின் மண்டை காய்கிற வெயிலில் வால்ரஸாவது, பெங்குவினாவது ?.. ஏதோ துருவப் பிரதேசத்து எண்ணெய்க் கிணறின் பாதுகாப்புப் புத்தகத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வந்து அலமாரியில் வைத்திருக்கிறார்கள். அது படிக்கப்படவில்லை.
டோனி ஹேவார்ட் பதவி ஏற்ற புதிதில், “என்ன செலவானாலும் பரவாயில்லை; பாதுகாப்பை பலப்படுத்துவதுதான் என் முதல் வேலை” என்று உடைவாளின் மீது சபதம் எடுத்துக்கொண்டுதான் களத்தில் இறங்கினார். பிறகு பிபியின் பொருளாதாரப் பிரச்னைகளையும் தொழில் போட்டிகளையும் பார்த்தவுடன், செலவைக் குறைப்பதுதான் முதல் வேலை என்று கொள்கை மாறிவிட்டது. தொடர்ந்து சிறு சிறு விஷயங்களில் ஐந்தும் பத்துமாக சிக்கனம் பிடிக்கத் தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் காற்றோடு போய், திரும்பத் திரும்பக் கிடைத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, பிரச்னைகள் மூடி மறைக்கப்பட்டு, கடைசியில் ஒரு நாள் துரப்பண மேடையே எரிந்து ஐயாயிரம் அடிக் கடலில் மூழ்கியது.
முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால் ?
பிரிட்டிஷ் பெட்ரோலியம் தன் இமேஜை வளர்த்துக் கொள்வதற்காகக் கடந்த பத்து வருடத்தில் செலவழித்த தொகை அதிகம். தான்தான் சுற்றுச்சூழல் பாதுகாவலன் என்று அறிவித்துக்கொண்டு, கம்பெனி லோகோவையே பச்சை நிறத்தில் ராஜராஜேஸ்வரி சக்கரம் மாதிரி மாற்றிக்கொண்டது. சொற்ப அளவில் சோலார் செல்கள் நிறுவிவிட்டு, பசுமைப் புரட்சி செய்துவிட்டோம் என்று முழக்கியது. ‘கார்பன் கால் சுவடு’ என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்தியதே பிபிதான்.
இந்த விளம்பரங்களின் பயனாக பிபிக்கு தங்க எஃபி உள்படப் பல பசுமை விருதுகளும், அதன் தலைவருக்கு மகாத்மா பட்டமும் கிடைத்தன. அந்த லாபி செலவையெல்லாம் பாதுகாப்புக்குச் செலவிட்டிருந்தால், இன்றைக்கு வளைகுடா கடற்கரை தன் இயல்பான மரகதப் பச்சையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்; இப்படி பிளாக் அண்ட் ஒயிட் படமாகியிருக்காது.
உத்தமர் ஒபாமாவின் இமேஜும் அடி பட்டு நசுங்கியிருக்கிறது. துரப்பண மேடைகளைக் கண்காணிக்க வேண்டியது MMS என்கிற கனி வள மேலாண்மைத் துறை. அதுவோ எண்ணெய் லாபிகளுக்குப் பணிந்து தன் மேற்பார்வைப் பொறுப்புகளையெல்லாம் சிறுகச் சிறுக எண்ணெய்க் கம்பனிகளிடமே விட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது !
இப்படித்தான், கட்ரினா புயல் வந்தபோதும் கவர்மெண்ட் அங்கே கண்ணில் தட்டுப்படவே இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் சாம்பார் சாதப் பொட்டலம் விற்பது முதல் அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுவிட்டு அரசாங்க இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரத்தின் ஒவ்வொரு பல்லாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரமே ஒரு நாள் இயந்திரம் கிறீச்சென்று நின்றுவிடப் போகிறது !
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க பிபி சில கோடி டாலர் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் உதவித் தொகை வினியோகிப்பதையெல்லாம் அவுட் சோர்ஸிங்கில் விட்டுவிட்டு “அதோ, அந்த ஆளைக் கேட்டுக்குங்க” என்று கை காட்டிவிட்டுக் கம்பி நீட்டிவிட்டார்கள். அந்த ஆளைப் பார்த்தால், அமுக்கராக் கிழங்கு மாதிரி இருக்கிறார்.
எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்து கொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்துக்கு வளைத்து உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ, நம்முடைய சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கும் ஜியாலஜி மாடல்களுக்கும் சிக்காமல் சிரிக்கிறது.
நிர்வாகவியலில் டிஸாஸ்டர் ரெக்கவரி என்று ஒரு பாடம் உண்டு. அதில் படித்ததையும் விண்வெளி ஓடம் வெடித்ததையும் மங்களூர் விமானம் விழுந்ததையும் மெக்ஸிகோ எண்ணெய் கசிந்ததையும் கற்பனையாக நம் லோக்கல் சூழ்நிலையில் பொருத்திப் பார்த்தால் சில ஜோசியங்கள் சொல்லலாம் :
நாளைக்கே நம் கல்பாக்கம்,கூடங்குளம் போன்ற ஒரு அணு உலையில் ஒரு விபத்து - கடவுள் தவிர்க்கட்டும் - நடந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சில வருடங்களுக்கு செய்தியில் என்னென்ன வெளி வரும் ? ஊகிப்பது எளிது :
1) சரியாக இதே காரணத்தால், இதே போன்ற விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரிட்டையர் ஆன தாத்தா கமிட்டி ஒன்று பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிக்கை கொடுத்திருக்கும். அந்த அறிக்கைக் காகிதம் பீச்சில் வேர்க் கடலைக் கூம்புகள் தயாரிக்கப் போயிருக்கும்.
2) விபத்து நடந்த சமயம், பொறுப்பானவர்கள் அனைவரும் லீவில் போயிருப்பார்கள். அல்லது அலுவலக ஜீப்பை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் டவுனுக்கு சினிமா பார்க்கப் போயிருப்பார்கள்.
3) கதிரியக்க அலாரம் சர்க்யூட்டில் ஒரு ஐசி சில்லு புகைந்து போய் வேலை செய்யவில்லை என்று தெரிய வரும். உக்ரைனிலிருந்துதான் ஸ்பேர் பார்ட் வரவேண்டும். ஆறு மாதம் முன்பே இண்டெண்ட் போட்டாகிவிட்டது. உக்ரைனிலோ, உள்நாட்டுக் கலவரம்.
4) அவசரத்துக்கு சில கெய்கர் கவுண்ட்டர்களாவது வாங்கி வைக்கலாம் என்றால், பட்ஜெட் இல்லை. கிடைத்த சொற்பத் தொகையும் ஒரு ரியாக்டர் திறப்பு விழாவுக்காக செலவாகிவிட்டது. பிரதமரே வந்து ரிப்பன் வெட்டினார்.
5) அந்த நேரம் பார்த்து, தீயணைப்பு நிலையத்தின் டெலிபோன் வேலை செய்யவில்லை.(ஆமாம். ரோடு தோண்டுகிறார்கள்). மூன்று தீயணைப்பு வண்டிகளில் ஒன்று ரிப்பேர், மற்றொன்றில் டீசல் இல்லை.
6) ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர்தான். மற்ற இடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமல் 2003-லிருந்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்கோ, என்னத்திற்கோ காத்திருக்கின்றன. கோர்ட்டில் கேஸ் இருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும் ?
7) விபத்து நடந்து முதல் சில நாட்கள் வரை, மீட்புப் பணிகளுக்கு யார் இன் சார்ஜ் என்பதே தெரியாமல் குழப்பம் நிலவும். ஒன்று, தலைக்குத் தலை நாட்டாமை செய்வார்கள். அல்லது ‘திகைப் பூண்டை மிதித்தது போல்’ செயலற்று நிற்பார்கள்.
8 ) லோக்கல் போலீஸ், மத்திய போலீஸ், சிபிஐ, இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஆசாமிகள், தீயணைப்புத் துறை, மாநில அரசு, மத்திய உள் துறை, வெளித் துறை, பாதுகாப்பு, அணு சக்தி, சட்ட அமைச்சகம், சப் காண்ட்ராக்டர்கள் எல்லோருமே புகுந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றுவார்கள். கடைசியில் தப்பு யார் பேரில் என்ற கேள்வி வரும்போது அத்தனை பேரும் வட்டமாகச் சுற்றி நின்று, தத்தமக்கு இடது பக்கம் இருப்பவரை நோக்கி விரல் நீட்டுவார்கள்.
9) என்ன செய்தால் நிலைமையை உடனே கட்டுப்படுத்தலாம் என்பது, நிலையத்தில் வேலை செய்யும் சில அடி மட்டத்து டெக்னிஷியன்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அவர்களுக்கு அதைச் சொல்வதற்குத்தான் வாய் இருக்காது, சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இருக்காது. பாம்பேயிலிருந்து ப்ளேன் பிடித்து வந்திருக்கும் பெருந் தலைகள் வெற்றுக் கருத்து சொல்லிக் கொண்டிருக்கும் சப்தத்தில் மற்ற எல்லாம் அடிபட்டுவிடும்.
10) பாதிக்கப்பட்டவர்களின் கொள்ளுப் பேரன்கள் நம்பிக்கை இழக்காமல் வாய்தாவுக்கு வாய்தா கோர்ட்டுக்குப் போய் வருவார்கள்.
அதற்கு அடுத்த விபத்திலும் மேற்கண்டவை அனைத்தும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே நடக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
http://www.boston.com/bigpicture/2010/06/oil_in_the_gulf_two_months_lat.html#sthash.U4OAB85V.dpuf


Sunday, December 30, 2012

இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.

மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? 
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)