Showing posts with label வாழ்வு. Show all posts
Showing posts with label வாழ்வு. Show all posts

Saturday, March 2, 2013

மரணமில்லா நிரந்தர வாழ்வு நிம்மதியை தருமா?


கடந்த நூற்றாண்டில் மட்டும் அமெரிக்காவில் சராசரி ஆயுள் 47 வயதிலிருந்து 77-ஆக உயர்ந்திருக்கிறது. 2050-ம் ஆண்டில் சராசரி மனிதன் சராசரியாக 87 வயது வரை வாழ்வான். மனித ஆயுளில் பத்து வருடம் கூடப் போகிறது. சொத்துக்குக் காத்திருக்கும் மகன்கள் பாடு திண்டாட்டம்தான்.
மேலே சொன்னது சராசரி வயது. ஆனால் அதிகபட்சம் ஒருவர் எவ்வளவு வருடம் வாழலாம்? இப்போது சுமார் 120 வருடம் என்று கருதப்படுகிறது. இதுவும் அதிகரித்து வரக் கிழங்கள் உலகை வலம் வரப் போகின்றன.
எப்படிச் சொல்கிறார்கள்? உள்ளே சமையலறையில் பல டெக்னாலஜிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டெம் செல் தொழில் நுட்பம் அவற்றில் ஒன்று. ஸ்டெம் செல்கள் என்பவை மற்ற செல்களைத் தயாரிக்க மூலப் பொருட்கள். இதய செல்லாகவோ, நுரையீரல் செல்லாகவோ எலும்பாகவோ கிட்னியாகவோ அவை வடிவம் எடுக்க வல்லவை. இதை மட்டும் கூர் தீட்டிவிட்டால் செத்த உறுப்புக்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். பின் பக்கம் முதுகு சொறிய மூன்றாவது கை தேவையென்றாலும் வளர்த்துக்கொள்ளலாம்.
முதுமை என்றால் என்ன என்பதை அறுதியிடுவதே சற்றுக் கடினமான செயல். நம் உடம்பின் செல்களுக்கெல்லாம் வயசானால் நமக்கும் வயசாகிவிட்டது என்று குத்து மதிப்பாகச் சொல்லலாம். நம் செல்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் பிரிந்து புதிதாகப் பிறந்துகொண்டே இருக்கின்றன; அவற்றின் டி.என்.ஏ பிரதி எடுக்கப்படுகிறது. டெலோமியர்கள் என்பவை க்ரோமசோம்களின் கொடுக்கு நுனியில் இருக்கும் டி.என்.ஏ சரடுகள். ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ தன்னைப் பிரதி எடுக்கும்போது, அதன் வால் கொஞ்சம் வெட்டுப்படுகிறது. நடு வயது மங்கையின் கூந்தல் நுனி போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேதாரமாகிக் கடைசியில் செல் பிரிவதையே நிறுத்திவிடுகிறது; நமக்கு சீனியர் சிட்டிசன் சலுகைகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.
செல் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு, டெலோமியர்கள் வாலை இழக்காமல் பத்திரமாகப் போய்ச் சேருவது அவசியம். இதை வலுப்படுத்த டெலோமெரேஸ் என்ற நொதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு செல்களை சேதப்படாமல் பிரதி எடுக்க முடியும். (அவசரப்படாதீர்கள்; இந்த டெக்னாலஜி பத்திரமாவதற்கு நாள் இருக்கிறது. இதில் ஈடுபட்ட எலிகளுக்கு கான்சர் வந்துவிட்டது!)
ஸோமாடிக் ஜீன் சிகிச்சை என்று நம் மரபீனி அளவிலேயே வெட்டி ஒட்டி, இதய நோய்கள் போன்ற பரம்பரை வியாதிகளை உதற முடியும். டீ க்ரே என்பவர், இன்னும் பத்து வருடத்தில் எலிகளை ஏறக்குறைய சிரஞ்சீவியாக வைத்திருக்க முடியப் போகிறது என்று சொல்லி அதிர வைத்தார். அதற்குப் பத்து வருடம் கழித்து, மனிதர்கள். நம் ஆயுளில் இருபது வருடம் கூட்ட ஸ்பெஷல் லேகியம் வரப் போகிறதாம்.
இதெல்லாம் அவசரக் குடுக்கை அறிவிப்பு என்று சொல்பவர்களும் நிறையப் பேர். நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை, ஆயுள் அதிகரிப்பு மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறது. காரணம், நாம் தின்னத் தெரியாமல் எண்ணைப் பண்டங்களைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கிறோம். உடல் பருமன், நம் வாழ்நாளை சுருக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் கொழுப்பைக் கரைக்கவும் ஒரு மாத்திரை கண்டுபிடிக்காமலா போவோம்? சராசரி வயது மெல்லவாவது அதிகரித்து நூற்றாண்டு இறுதிக்குள் 85 அல்லது 90-ஐத் தொட்டுவிடும் என்கிறது இல்லினாய் பல்கலைக் கழகத்தின் குறிப்பு ஒன்று. எது எப்படியோ, எதிர்காலத்தில் பெரிய தட்டுப்பாடு ஒன்று வரப் போகிறது : சாவுக்குத் தட்டுப்பாடு!
இருபதாம் நூற்றாண்டிலேயே ஸ்டெடியாக வாழ்நாள் அதிகரித்து வந்ததன் பயனைப் பார்க்கிறோம். நம் அரசியல்வாதிகள் எல்லாம் பழுத்து மூத்து, பார்லிமெண்டில் போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சீனியர் குடிமக்களின் மருத்துவ செலவுகள், அல்சைமர் மறதிகள், மூட்டு வலி, முதியோர் இல்லம், வயாகரா என்று செய்திகளில் தினசரி அடிபடும் ஏராளமான விஷயங்களில் இந்த வாழ்நாள் நீடிப்பு ஒரு சப் டெக்ஸ்ட்டாகப் பொதிந்திருக்கிறது.
மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.
பயோ டெக்னாலஜியும் சாஃப்ட்வேர் மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறது - ஏழை நாடுகளுக்கு அவுட் சோர்ஸிங் செய்து மலிவான ஆராய்ச்சி, இன்னும் விழித்துக்கொள்ளாத சட்டங்கள், நிறையப் பணம், பரம ரகசியம்!
பணம் சம்பாதிப்பதில் வாழ்நாளைத் தொலைத்த வயசாளிகள், ரிட்டையர்மெண்டுக்குப் பிறகு மறு வாழ்க்கை பெறுவார்கள். தோலை இறுக்கி, மினுக்கிக் கொள்வார்கள். கம்ப்யூட்டரில் தங்கள் வளர்சிதை மாற்றங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். கடையிலிருந்து நவீன ஸ்பேர் பார்ட்களை வாங்கிப் பொருத்திக்கொண்டு ஷைன் அடிப்பார்கள். அவற்றில் சில, ஸ்மார்ட் ட்ரக் என்னும் புத்திசாலி மருந்துகளை வேளா வேளைக்குத் தயாரித்து ரத்தத்தில் கலக்கும்.
வாழ்நாள் நீடிப்பு சிகிச்சைகள், வயதானவர்களின் மருத்துவ செலவுகளைக் கண்டபடி அதிகரிக்கப் போகின்றன. குண்டானவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்நாளுக்கு காரண்டி கொடுக்கத் தயக்கம் இருக்கப் போகிறது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் நம் பின்னாலேயே வந்து கண்காணித்து, நாம் தின்னும் ஒவ்வொரு உருளைக் கிழங்கு போண்டாவையும் குறித்து வைத்துக்கொண்டு பிரீமியத்தை ஏற்றப் போகிறார்கள்.
ஒரு சின்னக் கணக்கு: அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி தாத்தா பாட்டிகள். ஒவ்வொருவரும் வருடத்துக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்து மூப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஒரு ட்ரில்லியன் டாலர் ஆகிவிடுகிறது. இதனால்தான் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு இப்போதே ஜொள்ளு சொட்டுகிறது.
மூவா மருந்துகளின் திறனும் விலையும் ஏறிக்கொண்டே போகப் போகின்றன. முதல் கட்டத்தில் பணக்கார பிசினஸ் புள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள், இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்களுக்குத்தான் கட்டுப்படி ஆகும். அவர்கள் வீட்டு டிரைவர்களும் தோட்டக்காரர்களும் காலமாகி, அவர்களுடைய பிள்ளைகள் கிழவனார் வீட்டில் வேலைக்குச் சேருவார்கள்.
நம் தாத்தாக்களும் அவர்களுடைய தாத்தாக்களும் ஒரே சமயத்தில் உலகில் வாழ்வார்கள். ஒருவரும் லேசில் ரிட்டையர் ஆக மாட்டார்கள். எழுபது வயதான பாட்டி, தன் பிரசவத்திற்கு லீவு எடுப்பார். மற்றொரு முனையில், அரும்பு மீசை - முகப்பரு பருவம் இருபத்தைந்து முப்பது வயது வரை தொடரும். ‘எல்லோருமே 200 வயது வாழ்ந்தால், அவர்கள் முதல் நூற்றாண்டு வாழ்க்கையில் சாதித்ததெல்லாம் அற்பமாகும். வருமானம், சொத்து, ஸ்டேட்டஸ் எல்லாம் 100 வயதுக்கு மேலேதான் கிடைக்கும்’ என்கிறார் கென்னத் போல்டிங்.
இப்போதே ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை செய்கிறார்கள். இவர்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்தால்தானே எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று இளைஞர்கள் பொருமுகிறார்கள். இதனால் அவர்களுடைய விடலைப் பருவமே நீடிக்கப்படுகிறது. வேலை தேடி அலைந்து, நிரந்தரக் கல்லூரி மாணவனாகவே நீண்ட வருடங்கள் கழிகின்றன. கல்யாண வயது தள்ளிப் போகிறது; செக்ஸ் இன்னும் சுதந்திரமாகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது; நாட்டுக்கே நரைத்துக்கொண்டிருக்கிறது!
கணவன்-மனைவி உறவுதான் குட்டிச் சுவராகப் போகிறது : எதிர்காலத்தில் விவாக ரத்துக்கள் அதிகரிக்கும். இந்தப் பெரு வாய், பேருடம்புப் பெண்ணுடன் (அல்லது பிறந்த நாளைக்கூட நினைவு வைக்க முடியாத சோம்பேறி ஆணுடன்) இன்னும் 20, 30 வருடம் வாழ வேண்டுமா என்ற ஆயாசம்தான் இப்போது பல விவாக ரத்துக்களின் காரணம். இதுவே இன்னும் 60, 70 வருடம் இருக்கிறது என்று ஆகிவிட்டால் சகித்துக் கொள்வதற்கு சான்ஸே இல்லை!
சுமார் 25-30 வருடத்துக்கு ஒரு முறை பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி அவ்வப்போது சீராகப் பொறுப்பைக் கை மாற்றிக் கொடுப்பது நம் நாகரீகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியம். ரேடியோவை ஆன் செய்தால் இன்னும் தியாகராஜ பாகவதர் பாட்டே ஒலித்துக்கொண்டிருந்தால் உலகம் என்ன ஆவது?
இன்று வரை இருபது முப்பது வயதில் இருப்பவர்களுக்கு, பெரியவர் திடீரென்று மண்டையைப் போடுவதால் அல்லது போடப் போவதால், அவர் வாழ்நாளில் சேகரித்த சொத்து கைக்கு வருகிறது. இளைஞர்களுடைய மேற்படிப்பு, கல்யாணம், வீடு வாங்குதல், புதிய பிசினஸ் முயற்சிகள் என்று பல விதங்களில் வளர்ச்சியை ஃபைனான்ஸ் பண்ணுவது வயதானவர்களின் மரணம்தான்.
இனிமேல் வயசாளிகளெல்லாம் இன்னும் அதிக வயசாகி, அந்தப் பணத்தை இறுக முடிந்துகொள்ளப் போகிறார்கள்; தங்களுடைய நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் சில அந்தரங்கமான சக்திகளையெல்லாம் மிகுந்த செலவில் பெருக்கிக் கொள்ளப் போகிறார்கள்; இளைஞர்கள் பெட்ரோல் பங்க்கிலோ, மெக்டொனால்ட்ஸிலோ பகுதி நேர வேலை செய்துகொண்டு காத்திருக்கப் போகிறார்கள்!
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தது இருபது வயதுகளில். ஐன்ஸ்டைன் e = mc2-ஐக் கண்டுபிடித்தது, போட்டோக்களில் காணப்படும் பம்பைத் தலை வயதில் அல்ல; இருபதுகளில்தான். உலகெங்கும் சுதந்திரப் போராட்டங்கள், விடுதலைப் புரட்சிகள், வேகமான மாற்றங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்தவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர்களே.
பயோ இஞ்சினியரிங்கில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, அந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளப் பணமும் படைத்த மேற்கத்திய நாடுகளில் வயோதிக விஞ்ஞானத்தின் தயவில் எல்லோரும் வாக்கிங் ஸ்டிக்குடன் நடப்பார்கள். அந்த வசதி இல்லாத ஏழை நாடுகளில் எல்லோரும் சீக்கிரமே சாக, இளைஞர்களின் விகிதம் அதிகரிக்க, நாளைய உலகின் முன்னேற்றங்கள், புரட்சிகள் அனைத்தும் ஏழை நாடுகளிலிருந்துதான் புறப்படப் போகின்றன.

(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)



Sunday, December 30, 2012

இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.

மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? 
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)