Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, September 28, 2013

தமிழிழத்திற்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் யார்?


திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. இனப்படுகொலைச் சகோதரர்களான மோடியையும், ராஜபக்சவையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை. 

மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 


மோடிக்கான ஆதரவு, இந்து பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அது, இலங்கையில் சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரிப்பதைப் போன்றது. மோடியை ஆதரிக்கும் தமிழர், தென்னிலங்கையில் பிறந்திருந்தால், ராஜபக்ஷவை ஆதரித்திருப்பார். ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்களவர், இந்தியாவில் பிறந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார். இவர்கள் பேசும் மொழி மட்டுமே வேறு. கொள்கை ஒன்று தான்.

புலிகளின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

(நன்றி : கலையகம்   )

Wednesday, September 19, 2012

காங்கிரஸும், பி.ஜே.பி-யும் ஒன்னு அறியாத ஈழப்போராட்டவாதிகளின் வாயில் மண்ணு.

இந்தியாவில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ராஜபட்ச பல வழக்கமான எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று(புதன்கிழமை) மாலையில் அவர் தில்லி வந்தார்.  

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடுத்து அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் அவர் வந்தார். சிவப்புக் கம்பள வரவேற்பை மத்திய அரசு அளித்தது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று  மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு ராஜபட்சவுக்கு பிரதமர் இரவு விருந்து அளிக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலையில் தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்கிறார். அங்கு அமைய இருக்கும் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

கங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று மறுபடியும் நிரூபித்து உள்ளது எனவும் எதிர்கட்சியான பி.ஜே.பி புலம்பியது அட ராஜபட்சேவை வரச் சொன்னதே வருங்கால பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்ற சுஜ்மா சுவராஜ் தானுங்கே அப்புறம் மத்தியபிரதேசம் பி.ஜே.பி ஆளும் மாநிலம் அங்குதானே புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.தமிழர்கள் மீது அக்கறையுள்ள பி.ஜே.பி அரசு தடுக்க வேண்டியது தானே என்ற உண்மையை போட்டு சில ஊடகங்கள் உடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் துடித்து போய் அப்படியெல்லாம் இல்லை நாங்க ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமானவர்கள் பழைய வரலாற்றை பாருங்கள் என பச்சை சந்தர்ப்பவாத பொய்யை கூசாமல் சொல்கிறார் பாருங்கள்.
////சென்னை, செப். 5: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடையத் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் இலங்கை அரசையும், அதற்கு துணைபோன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றனர்.///

அடப்பாவிகளா பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லை?? “இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரே கொள்கைதானே? 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றர்களாம் ஆனால் உண்மை என்ன??.

பி.ஜே.பி. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர். (4.2.2009 ல் ஜூனியர் விகடனில் வெளியான பேட்டி)

 “ இந்திய - இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பில் கங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி - யை ச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பி.ஜே.பி -யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்ரி சாரியும் சென்று வந்தனர். இவர்களுடைய பயணத்துக்கு அரசியல் காரணங்களோடு பொருளாதார, வர்த்தக விவகாரங்களும் காரணம். இந்தியாவும் இலங்கையும் உள்ளார்ந்த பொருளாதாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகளோடு, அரசியல் விவகாரங்கள் குறித்தும் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

சேஷாத்ரி சாரியிடம் இது குறித்து பேசினோம்.
“இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவில்லாத நாடுகள் என்றால். இலங்கையும் பூட்டானும் தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு.பொருளாதார ஒப்பந்தங்களைப் போட நல்ல சூழ்நிலை வரவேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்து தான் முடிவு செய்யப்பட்டது.

நாங்கள் இலங்கையில் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான் இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி -யின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்‌ஷேவையும் அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்‌ஷேவையும் சந்தித்துப் பேசினோம். இப்போது புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் போராடிக் கொண்டு இருக்கிறது. இதில் கிட்டதட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தமிழர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய வசதிகளை செய்து, அவர்களுடைய நம்பிக்கையை அரசுத் தரப்பு பெறவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன் அங்கு ராணுவம் அல்லாத,சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். எற்கனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிகையாக வைக்கபட்டது! ஆனால், இப்படி நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஓர் ஆபத்தும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தான அச்சம் நிலவுகிறது.

அதிபர் ராஜபக்‌ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி -யாக இருந்த காலத்தியேயே அவரை கவனித்து வருகிறோம். பி.ஜே. பி ஆட்சியில் 1999 -ல் பொக்ரான்  அணுகுண்டுச் சோதனை நடந்தபோது, அவர் டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவருடைய விஜயத்துக்கு அப்போதைய அதிபர் சந்திரிகா போன்றவர்கள எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜபக்‌ஷேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இதனால் ராஜபக்‌ஷே இருக்கிறவரை பிரச்சனையில்லை. இலங்கையில் எல்லோரையும் அரவணைத்துப் போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் சிங்களவாதத்தைக் கடைபிடிக்கும் சக்திகள் அதிகாரத்துக்கு வந்தால், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மொழி, மத வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்க அரசியல் சாசனம் மூலமாக நிரந்தரத் தீர்வு காணக் கோருகிறோம்.

ராஜபக்‌ஷே ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் எந்தையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு இங்கே அதிகாரம் கொடுப்பதைப் போல் இலங்கையில் மொழிவாரியாகவோ இனவாரியாகவோ இல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். இதம் மூலம் உள்ளூர் மக்கள் இன, மொழி வேறுபாடில்லாமல் பலனடைய வாய்ப்பிருக்கிறது! என்றவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

“விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பி.ஜே.பி முதலில் சாஃப்டாக இருந்ததே? பால் தாக்கரே போன்றவர்கள் பிரபாகரனை ஹீரோவாக நினைக்கிறார்களே? தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களை பாதுஇகாக்கும் என்று சொல்லப்படுகிறதே?”

“ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம். இதில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை பி.ஜே.பி-யும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராணுவத் தீர்வு காண முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குறிப்பாக, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள். அதோடு, மற்ற தமிழ் அமைப்புகளையும் அழித்து விட்டு, சர்வாதிகார அமைப்பாகச் செயல்படுகின்றனர். இது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதல்ல. அரசியல் தீர்வுக்குப் புலிகள் எதிராக இருக்கின்றனர். தமிழர்கள், சட்டப்படியான அதிகாரம் பெற விரும்புகிறார்கள். புலிகளால் இதற்குத் தடை ஏற்படுகிறது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு பலன் கிடைக்கும்!”

“இலங்கையில் இனி சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லப்படுகிறதே...”

“ இது தவறான வாதம். இலங்கைத் தமிழர்களுக்கு, தாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். இலங்கையில் அந்நாட்டு அரசுகளும் பல தவறுகளைச் செய்துள்ளன. விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளும் தவறுகள் செய்தது. இலங்கையில் சிங்கள மொழியோடு தமிழும் அலுவலக மொழியாக உள்ளது. தமிழர்களும் அரசியலில் பங்கெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற்றுத்தான் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முன்னுக்கு வர முடியும். சிங்கள மக்களை எதிர்த்து, தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது!” என்றார் சேஷாத்ரி சாரி.

சேஷாத்ரி சாரியோடு இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் ரவ்னி தாக்கூரும் சாரியின் கருத்துகளையே எதிரொலிக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானம் குறித்து தாக்கூரிடம் கேட்டோம்.

“ விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறோம். அவர்களுடைய உரிமைகள் கிடைப்பதற்கும் நாம் ஆதரவு கொடுப்போம். பஞ்சாப்பில் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பூண்டோடு அழித்தோம். இப்போது பஞ்சாப் மற்ற மாநிலங்களை விடச் சிறப்பாக இருக்கிறது. அதே மாதிரி இலங்கைத் தமிழர்கள், ‘விடுதலைப்புலிகள்தான் எதிர்காலம்’ என்று நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது!” என்று முடித்தார்.

சரோஜ் கண்பத்
_ ஜூனியர் விகடன்


பின்குறிப்பு: இந்த பேட்டி வெளியானது  (4.2.2009 ல் ஜூனியர் விகடனில்) அதே ஆண்டு . 2009-ல் மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றகளாம்(!?) நம்ம தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அடித்து விடுகிறார்.இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்தை புரிந்துக் கொள்ள இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். கானல் நீரில் மீனை தேடுகின்ற தமிழக ஈழ ஆதரவு போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்வர்களா???

Tuesday, December 27, 2011

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

இறைவன் குர்ஆனில்
“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .

 “நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்” 
(அல்குர் ஆன் 49:11)

டிஸ்கி நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.