Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Saturday, January 17, 2015

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?

உலக நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிற பின்னணி தெரியுமா? ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும் உள்நாட்டுஅரசியலையும் மாற்றும் பின்னணி கொண்டது.

ஒவ்வொரு நாட்டிலும் உளவுத்துறை செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டதுறையாக இருந்தாலும் வெளிநாட்டு அரசியலை தன் சொந்த நாட்டிற்க்கு சாதமாக மாற்றிக் கொள்ளும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது என்பதே உண்மை.
உதாரணமாக இஸ்ரேலின் மொஸாதைக் கூறலாம்.

பாலஸ்தீனப் போராளிகளை உளவு பார்க்க நியமிக்கப்பட்ட மொஸாத் இன்று மிகப் பெரும் அளவில் தன் கிளைகளைப் பரப்பி உள்ளது. 2000 பேர் நேரடியாகவும் பல்லாயிரக்கணக்கில் மறைமுகமாகவும் இதில் வேலை செய்கின்றனர்.

உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பான மொஸாத் தேவைப்பட்டால் அரசியல் கொலைகளைச் செய்வதற்கு கூட அதிகாரம் பெற்றது. இஸ்ரேல் அரசு நான்கில் ஒரு பங்கு பட்ஜெட்டை மொஸாதிற்கு ஒதுக்குகிறது.

மொஸாதின் நெருங்கிய கூட்டாளி அமெரிக்க உளவு அமைப்பான CIA.இஸ்ரேலின் வெற்றிக்கு CIA- வின் பங்கு அதிகம்.

உங்களை சற்றே திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால், தீவிரவாதிகளை உருவாக்குவதிலும் அவர்களை ஊக்குவித்து வழிகாட்டுவதிலும் உளவுத்துறை வெற்றி பெற்றுள்ளது.
உளவுத்துறைக்குத் தெரியாமல் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய முடியாது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று. அதாவது உளவுத்துறை நினைத்தால் ஆயுத சப்ளையைத் தடுக்க முடியும். ஆனால் ஆயுத வியாபாரம் மிகப் பெரும் தொழில் என்பதால் அதை விட்டு விடுகின்றனர். உளவுத்துறையின் நீண்ட காலத் திட்டத்திற்காக தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களை பலிகடா ஆக்குவது.

உளவுத்துறைகளின் தீவிரவாதச் செயல்கள் புதிதல்ல. அவற்றின் சதித் திட்டங்களும் உலகறிந்தவையே!

உளவுத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டறிவு நூல்களை படித்துப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும்.

Tuesday, December 9, 2014

வெடிகுண்டு மிரட்டல் - இளம் பெண் சரண்யா கைது!

மதுரை: மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி இந்நெரம்.காம் )

Wednesday, July 16, 2014

இலங்கையில் இனக்கலவரம்: நடந்தது என்ன?

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை 2009ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு மட்டுப்பட்டு பேரினவாதிகளின் பார்வை இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள்மீது திரும்பியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்குத் திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும்.

பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொது பலசேனா’ எனும் இயக்கமானது ஊர் ஊராகக் கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந்நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளைப் பல விதமாகத் துவேசத்தோடு பரப்பியது.

புனித பௌர்ணமி தினங்களில் பௌத்த விகாரைகளில் பௌத்த போதனைகளோடு சொல்லப்படும் பௌத்த பிக்கு ஞானசார தேரரின் வசீகரிக்கும் துவேசப் பேச்சால் மயங்கியவர்கள் அவரைப் பின்பற்றி அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். அவரைப் பின்பற்றும் கூட்டம் இலங்கை முழுவதும் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் பொதுபலசேனாவின் உத்தியோகப்பூர்வமான அலுவலகங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளரும் மஹிந்த ராஜபக்?ஷவின் சகோதரருமான கோதபாய ராஜபக்?ஷவின் தலைமையில் நாட்டின் பிரதான நகரங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் பெண்களும் பேரினவாதிகளால் இன்னல்களுக்குள்ளாகிய சம்பவங்களும் பதிவாகிக் கொண்டேயிருந்தன. ஹலால் உணவுகள் தொடர்பான சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. பேரினவாதிகள் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை எரித்தனர். பௌத்த பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களை இயங்க அனுமதிக்காது மூடச் செய்தனர்.

இவ்வாறான நிலையில் பௌத்த தேசத்தில் எங்கும் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிட்டவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் சச்சரவுகள் என வரும்போது பொறுமை காக்கவும் ஒதுங்கிச் செல்லவும் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்தச் சச்சரவுகளுக்கும் வழியில்லாத நிலையில் ஏதேனும் சிறு பொறியாவது கிட்டாதா எனப் பொதுபலசேனா இயக்கம் காத்திருந்தது.

தர்கா நகர், அளுத்கம, பேருவளை பகுதிகள்முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள். இவை இலங்கையின் மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையோர பிரதேசங்கள் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களின் பிரதானத் தொழிலாக வியாபாரத்தைச் சொல்லலாம். இரத்தினக்கல் வியாபாரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். சர்வதேச அறபிக் கல்லூரியான ஜாமிய்யா நளீமிய்யா கல்லூரி இங்கிருக்கிறது. புராதனப் பெருமை வாய்ந்த பல பள்ளிவாசல்கள் இங்கிருக்கின்றன. இப்பிரதேசங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டவை. ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப் பட்டால், தப்பிச் செல்ல ஒரு தரைவழி மாத்திரமே உள்ள பிரதேசங்கள் என்பதால் இங்கு வாழும் முஸ்லிம் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது எளிது.

ஜூன் 12, வியாழக்கிழமை, பௌத்தர்களின் புனித தினமான பொஸொன் பௌர்ணமி. தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரர் பகல் நேரம், மோட்டார் வாகனமொன்றில் தனது சாரதியுடன் தெருவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எதிரே முஸ்லிம் இளைஞர்கள் இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டியின் சாரதியான சிங்களவர், அந்த இளைஞர்களைத்
தூஷண மொழியில் மோசமாகத் திட்டுகிறார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் கோபமாகத் திட்டச் சத்தம் கேட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்துசாரதியையும் பிக்குவையும் பத்திரமாக அனுப்பிவைக்கின்றனர்.
மாலை நேரம் பேச்சுவாக்கில் பொதுபலசேனா உறுப்பினர் ஒருவரிடம் பகலில் நடந்த நிகழ்வை சாரதி விவரிக்கின்றார். அவர்கள் காவல் நிலையம் சென்று முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் சேர்ந்து ஒரு பௌத்த பிக்குவை மோசமாகத் தாக்கினர் என்று முறைப்பாடும் செய்தனர். சிங்கள ஊடகங்களுக்கு இவ்விடயத்தைத் தெரிவித்தனர். அவையும் இச்செய்திக்கு முன்னுரிமை வழங்கி, பிக்கு வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் காட்சியையும் காட்டி, முழு இலங்கைக்கும் விடயத்தைத் தெரிவுபடுத்தின.

தம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாகக் காவல்நிலையம் சென்று உண்மை நிலையை எடுத்துரைத்தனர் என்ற போதிலும் போலிஸ் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் சிங்கள ஊடகங்கள் செய்தி அறிவிக்கவே பொதுபலசேனா இயக்க உறுப்பினர்களும் இன்னுமொரு இனவாத இயக்கமான இராவண பலய இயக்க உறுப்பினர்களும் சேர்ந்து அளுத்கம காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். அந்த நான்கு இளைஞர்களையும் உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்று இறுதியில் கொழும்பு - காலி பிரதான வீதியின் போக்குவரத்து நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்தது. பதற்றமான சூழல் எங்கும் நிலவியது. அரசு சில அமைச்சர்களை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர்களின் வாகனங்களுக்கும் தாக்குதல்கள் நடத்தவே, உடனடியாக இலங்கை போலிஸ்

மாஅதிபர் என்.கே. இலங்ககோன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விஜயம் செய்தார். கண்ணீர்க் குண்டுப் பிரயோகத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு காவல் துறையைப் பணித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் நடத்தப்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர். இரவு 10.30 மணியளவில் முற்றாகச் சீரடைந்ததாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலிஸால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 13, 2014 - வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். அவர்களை 25ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளையிடுகிறார். இளைஞர்களின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத் தரணிகள், இளைஞர்கள் சிறையில் வைத்துக் காவல் துறையினரால் தாக்குதல்களுக்குள்ளாகியதைச் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நீதவான், அவர்களைத் தனித் தனிச் சிறையிலடைக்குமாறு கட்டளையிடுகின்றார்.

ஜூன் 15, 2014 - ஞாயிற்றுக்கிழமை புனித பொஸொன் பௌர்ணமி தினத்தன்று பௌத்த பிக்கு தாக்குதலுக்குள்ளானதைக் கண்டித்துப் பொதுபலசேனா இயக்கம், அளுத்கம பிரதேசத்தில் ஒரு மாநாடும் பேரணியும் நடத்தவிருப்பதான தகவல் கசிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் அச்சமான சூழ்நிலை பரவுகிறது. உடனே செயற்படும் முஸ்லிம் தலைமைகள் 'பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் தற்போதைய சூழ்நிலையில் இப்பிரதேசத்தில் கூட்டங்களையும் பேரணியையும் நடத்துமானால், அது ஆபத்தினை ஏற்படுத்தும்' எனத் தெளிவுபடுத்தி, இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி போலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் மகஜரொன்றைக் கையளிக்கின்றனர்.

இக்கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் எனப் பல அமைப்புக்கள் கையெழுத்திட்டிருந்தன. என்றபோதும் அன்று அக்கூட்டத்துக்கோ, பேரணிக்கோ தடை விதிக்கப்படவில்லை. அன்றே அவற்றுக்குத் தடை விதித்திருந்தால் பல அழிவுகளையும் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் எனப் போலிஸ் மாஅதிபர் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டதன்படி இராவண பலய, புத்த சாசன கமிட்டி, பொதுபலசேனா இயக்கம் ஆகியவை ஒன்றுசேர்ந்து கூட்டத்தை நடாத்தின. நாடுமுழுவதிலிருந்தும் திரண்டு வந்திருந்த மேற்படி இயக்க உறுப்பினர்களின் முன்னிலையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளரான கலகொட அத்தே ஞானசேர தேரர் இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக மிகக் கொச்சையான மொழியில் உரையாற்றுகிறார். அந்த உரை கூட்டத்தை உசுப்பேற்றுகிறது.
கூட்ட முடிவில், முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் சித்தரித்த புத்தபிக்கு தங்கியிருக்கும் விகாரைக்கு, முஸ்லிம் பிரதேசங்களினூடாகப் பேரினவாத உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஊர்வலம் செல்லும் வீதியோரமாக அமைந்திருக்கும் பள்ளிவாசல்மீதும் அங்கு தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீதும் ஊர்வலத்தில் வந்த பேரினவாதிகள் குழு தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கற்களாலும் தடிகளாலும் தாக்கத் தொடங்குகிறது.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல் சேதமுறாதவண்ணம் தாக்குதலைச் சமாளிக்க அரணாக நின்று காயமடைகின்றனர். அதற்கு மேலும் பொறுமைகாக்க இயலாத முஸ்லிம் இளைஞர்கள் பதிலுக்கு ஆயுதங்களேதும் இல்லாத நிலையில் கற்களைக்கொண்டு திருப்பித் தாக்குகின்றனர். இதனால் வெருண்டோடும் பேரினவாதப் பௌத்த இளைஞர்கள் நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொள்கின்றனர். கடைகளை உடைத்துப் பெறுமதியானவற்றை எடுத்துக் கொண்டு மீதமானவற்றைச் சேதப்படுத்திக் கடைகளை முற்றுமுழுதாக எரித்துவிடுகின்றனர். நிலைமையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே அப்பிரதேசத்தில் மாலை 6.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

அளுத்கம, பேருவளை, மருதானை, வெலிப்பிட்டிய, அம்பேபிட்டிய ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமலிலிருந்த போதிலும்கூட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களிலிருக்கும் பள்ளிவாசல்களும் எரிக் கப்படவே, கலவரக்காரர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிய முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து வந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிறு நள்ளிரவு 12.30ஐத் தாண்டியபோது வன்முறையாளர்கள் குழு வெலிப்பிட்டிய பள்ளி வாசலுக்கு வந்து தம் தாக்குதலை ஆரம்பிக்கிறது. பள்ளிவாசலையும் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டி அரணாக முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பள்ளிவாசலுக்கு வெளியே கைகோர்த்து நிற்கின்றனர். அவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காவலுக்கு இருந்த ஆண்கள் எவரும் பின்வாங்கவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

ஜூன் 16, 2014 - திங்கட்கிழமை விடிவதற்குள்ளாகக் கடந்த ஒரு இரவில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பதுக்கும் அதிகமான வீடுகளும் இருபதுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களும் எண்ணிக்கையிலடங்காத வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களும் சேதப்படுத்தப்பட்டும் எரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இங்கு போலிஸ், விஷேட காவற்படையின் முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் வந்து வன்முறைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலிலிருக்கிறது. பட்டினியோடும் காயமடைந்தும் இருக்கும் மக்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து உலர் உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் ஆடைகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. என்றபோதும் அவை எவையும் பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச் சேரவில்லை.

அதே தினம் பகலில், வெலிப்பன்ன எனும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பலபிடிய பிரதேசத்தில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதான நகர்களோடு, அப்பிரதேசங்களைச் சுற்றியுள்ள சிறிய முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் அன்றைய தினம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிக்கொண்டேயிருந்ததோடு பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

தர்கா நகரில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இராணுவமே செயற்பட்டு வருவதை எல்லோரும் கண்டுகொண்ட வேளையில் நகரின் நிலை குறித்துக் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்து, பள்ளிவாசல் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியபோது, ‘வீதிக்கு வீதி இராணுவத்தை அனுப்பிப் பாதுகாப்பு தருகிறோம்’ என்று பாதுகாப்பு அமைச்சு பதில் அளித்தது.

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்தும் நிலவியது. ஜூன் 17, 2014 செவ்வாய்க்கிழமை, மக்கள் தாம் தஞ்சம் புகுந்திருந்த இடங்களிலேயே அச்சத்தோடும் பட்டினியோடும் பொழுதைக் கழித்தனர். நள்ளிரவு தாண்டியதும் மீண்டும் வெலிப்பன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது.

அரசாங்கம் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த நான்கு போலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறிக் கைவிரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்ன பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் நூறுக்கும் அதிகமான காடையர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினர். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றுக்குள் பிரவேசித்துக் காவலாளியாக நின்ற தமிழ் முதியவரைக் கொன்றுவிட்டுப் பண்ணையை எரித்தனர்.

மேலும் வெலிப்பன்ன பள்ளிவாசல் தாக்குதலுக் குள்ளாகியுள்ளதோடு, முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. விடிந்ததும் அங்கு விஷேட அதிரடிப்படை வந்து சேர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனவே, காலை எட்டு மணி முதல் பகல்

12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தன. ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் தர்கா நகர் பிரதேசத்துக்குச் சென்ற சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவின் ஊடகவியலாளர் கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. அப்பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஜூன் 18, 2014 - புதன்கிழமை அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் அமலிலிருந்த ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் இன்னுமொரு முஸ்லிம் பிரதேசமான கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுத் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நள்ளிரவு சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டுப் பேருவளை, அல் ஹுமைஸரா கல்லூரியில் எங்கும் செல்ல வழியற்றுத் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி, அங்கு வந்த அரச உயரதிகாரிகள் கட்டளையிட்டார்கள். ஒன்றும் செய்ய வழியற்ற மக்கள் செல்ல மறுக்கவே அங்கு சலசலப்பு உண்டானது. சிறிது பதற்றமான சூழ்நிலை உருவானதும் உடனே அரச உயரதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
அன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சர்கள் சிலரோடு பேருவளைக்கு விஜயம் செய்தார். இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்களையும் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து வழமை போலவே ‘விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும்’ என்ற பதிலை அளித்துவிட்டுத் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவுமில்லை.
பாரிய இனக்கலவரக் காலப்பகுதியில் நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பல அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அளுத்கம, தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மருந்தகம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதே போலப் பதுளை, கஹட்டோவிட்ட, குருந்துவத்த, வரக்காபொல, பாணந்துறை நகரங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்த காரணத்தால், மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில், காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள்மீது ஆசிட் தாக்குதல் இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்பட்டது. படு காயப்பட்ட நிலையில் போலிஸார் இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் எனும் பிக்கு, கடத்தப்பட்டுக் கை, கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்டார். 

அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், தாக்கியவர்கள் அவருக்குக் கத்னா (சுன்னத்) செய்ய முயற்சித்துள்ளமை வைத்தியப் பரிசோதனைகளை வைத்தும் காயங்களை வைத்தும் தெளிவானது. அதற்கு முன்னரும்கூடப் பொதுபலசேனா இயக்கத்தினால் பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தார். காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்கூட இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வந்ததால் வைத்தியசாலையிலும் இவருக்குப் போலிஸ் காவல் வழங்கப்பட்டது.
எரிக்கப்பட்ட NO LIMIT ஆடை விற்பனை நிலையம்

பொதுபலசேனா இயக்கத்தால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வந்த ‘NO LIMIT - நோ லிமிட்’ எனும் பெரிய ஆடை விற்பனை நிலையம், 21.06.2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டி முற்றுமுழுதாக எரிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன.
கலவரம் தோன்றி, நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் அண்மைய வன்முறை நிகழ்வுகளின் காரணமாக மனச்சோர்வுக்காளான நிலையிலும் கொந்தளித்த நிலையிலும் காணப்பட்டபோது இலங்கையின் முக்கியத் தலைமைகள் கூறிய கருத்துக்கள், மக்களை மென்மேலும் அசௌகரியத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் ஆளாக்கியுள்ளன.
சிங்கள இனவாதிகளால் தக்கப்படும் இஸ்லாமியருக்கு சொந்தமான மெடிக்கல்

இலங்கையின் நிலவரத்தில் உடனடியாகப் பங்குகொண்டு அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது பலசேனா இயக்கமும் அதன் செயலாளருமான ஞானசார தேரோதான் குற்றவாளி எனப் பகிரங்க மாகத் தெரிந்த பிறகும்கூட “இந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளியை இனங்கண்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்” எனக் கூறியிருப்பதுவும் இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டங்களை மறுத்ததும் சம்பவங்களின் பின்னணியில் அவர் இருப்பாரோ எனப் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த ஏதுவாகியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டிருக்கும் பொது சன உறவுகள், பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா “ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து தந்தால் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் தயார்” எனப் பகிரங்கமாக மேடைகளில் முழங்கினார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், தனக்குப் பொறுப்பான பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் அப்பிரதேசங்களுக்குச் செல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தார். காரணம் கேட்டபோது “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் காரணமாக என்னால் ஊர் செல்ல முடியவில்லை. இனிமேல்தான் செல்ல வேண்டும்” (செய்தி மூலம்: விடியல், 17-06-2014, 17:58) என்றார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், உடனே எந்த முயற்சி எடுத்தேனும் அதைத் தடுக்க வேண்டியவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்தார். வன்முறைகள் நடைபெற்ற பிரதேசங்களுக்கு உடனடியாக இவர் சமூகமளிக்கவில்லை. இதனால் நாட்டின் முஸ்லிம் சமூகம், அவரைத் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வற்புறுத்தியது. ‘முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கினால், பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ எனவும் கூறித் தனது பதவியைப் பாதுகாத்துக் கொண்டார்.

வன்முறை நிகழ்ந்த நாட்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே கலவரம் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிட மறுத்தன. Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் வன்முறை குறித்தான தகவல்களையும் சம்பவங்களையும் உடனடியாகப் பகிர்ந்து கொண்டதால் பல சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்ததோடு, இலங்கையைத் தாண்டி சர்வதேசரீதியிலும்கூட இந்த அநீதியை உடனடியாகத் தெரியப்படுத்த முடிந்தது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தியா, லண்டன், குவைத், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இன வன்முறைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் மறுநாளே பதிவு செய்யப்பட்டன. சர்வதேசம் முழுவதும் இலங்கையின் தற்போதைய இனக் கலவர வன்முறைச் செய்திகள் பரவியதும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. இதனால், பல இஸ்லாமிய நாடுகள் ‘உடனடியாக வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லையானால், இலங்கையருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர நேரிடும்’ என அரசை அச்சுறுத்தின.

இப்பொழுது உலகம் முழுவதிலிருந்தும் இலங்கையை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியானது‘வன்முறை களுக்கும் அசம்பாவிதச் சம்பவங்களுக்கும் காரணமான வர்கள் யார்?’ என்பதாகும். இங்கு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது, அரசின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் பொதுபலசேனா இயக்கம், இராவண பலய இயக்கம், ஜாதிக ஹெல உருமய கட்சியின் உறுப்பினர்களேயன்றி நாட்டின் ஒட்டுமொத்தச் சிங்களவர்களுமல்ல.

ஏனெனில் வன்முறையின்போது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்த எத்தனையோ சிங்கள இன மக்களும்கூடப் பேரினவாதிகளால் படுமோசமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களைத் தனது வாகனத்திலேற்றி வந்து காப்பாற்றிய, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவர். முஸ்லிம்களைக் காப்பாற்றப் போய் இவரும் இவரது வாகனமும்கூடப் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. நடந்த அசம்பாவித நிகழ்வுக்கு மிகவும் மனம் வருந்திய பல சிங்களவர்கள் பொதுபலசேனா அமைப்பை இலங்கையில் தடை செய்யும்படியே கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் குடும்பத்தை காக்கும் முயற்சியில் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவரின் காரும் கண்களும் தாக்குதலுக்குள்ளாகி நிற்கிறார்.

கிட்டத்தட்ட 20 மில்லியன்கள் அளவான மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடேயாகும். இந்நிலையில் யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் மக்கள்மீது பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கம் திணிக்கும் அழுத்தம் சொல்லி மாளாது.

இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் வீதிகளின் பெயர்ப் பலகைகளை, படையோடு சென்று அழித்துச் சிங்களப் பெயர்களுக்கு மாற்றுவது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளைச் சேதப்படுத்துவது, பள்ளிவாயில்களுக்குள் அசுத்தங்களை எறிவது, பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம்களைத் தாக்குவது, ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பலவற்றையும் எந்தத் தயக்கமுமின்றி முஸ்லிம்கள்மீது பிரயோகித்துக் கொண்டேயிருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முஸ்லிம்களின் கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அது ஒரு எச்சரிக்கைச் செய்தி. ‘மே மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முஸ்லிம் பெண்களைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவனமாக இருந்துகொள்ளுங்கள்’ என அக்குறுஞ்செய்தி சொன்னது. யாரால் அனுப்பப்பட்டது எனத் தெரியாதபோதும் இச்செய்தி நாடெங்கிலும் முஸ்லிம்களிடத்தில் ஒருவிதப் பதற்றத்தைத் தோற்று வித்தது. இரகசியத் தகவல் வெளியானதை அறிந்த பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அக்குறுஞ்செய்தி ஒரு வதந்தி என அறிவித்தது. (ஆதாரம் - விடிவெள்ளி வாரப் பத்திரிகை, 2014.05.22, பக்கம் - 08)

தமது திட்டம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டமையால் அப்போது பொதுபலசேனா அமைப்பு எவ்விதச் செயற்பாட்டிலும் இறங்காமல் அமைதியாக இருந்தது. ஆனால் அதற்குச் சரியாக ஒரு மாதம் கழித்து, குறுந்தகவலில் சொன்னது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சருமான கோதபய ராஜபக்?ஷவும் நாட்டில் இல்லாத நேரத்தில் தனது இன அழிப்பு வேலையை வெற்றிகரமாக மேற்கொண்டது பொதுபலசேனா இயக்கம். அப்பொழுதே குறுந்தகவலைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருந்தால் பல அழிவுகளைத் தடுத்திருக்கலாம் என்பது பலரதும் கருத்தாக அமைந்திருக்கிறது .

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 21.06.2014 அன்று முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்தபின் ஊடகங்கள் ஊடாகவும் தனது Twitter வழியாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். இன, மத ரீதியாகத் தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவார்களானால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி போலிஸாருக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில வெளிநாட்டுச் சக்திகள் தமது நலனுக்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முனைகின்றன. சட்டம் ஒழுங்கை யாரும் தமது கையில் எடுத்துச் செயல்பட முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்?ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர்மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர்மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர்; கடத்தப்படுவர்; கைது செய்யப்படுவர்; காணாமல் போவர்.

முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால்கூடக் கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும் நிலைப்பாடும் பேரினவாதத் தலைமைகளிடம் இருந்தது. ஆனால் அண்மைய வன்முறைகளின்போது தான் தனது நாட்டு ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும்கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை யுத்தத்தில் வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும் இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக்கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.

கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப்போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப்போகிறார்கள். வாழ்க்கையும் இருப்பிடங்களும் தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப்போகிறது.
இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவரத் தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் ‘அதியுயர் கௌரவ விருது!’

நன்றி: http://www.kalachuvadu.com/issue-175/page17.asp 
நன்றி : எம். ரிஷான் ஷெரீப்

இலங்கை - கறுப்பு ஜூன் 2014 - முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் பின்னணியும் என்கிற கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு இது.

Wednesday, May 28, 2014

தினமலர் புகழும் (கோடாரி கம்பு) நஜ்மா ஹெப்துல்லா யார்?

தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் பாசிச பத்திரிக்கையான தினமலர் ஒரு முஸ்லிமை பற்றி ஆஹா ஒஹோ என்று புகழ்வது ஒன்றே போதுமானது அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள.

அவர் யார் தெரியுமா அவர் குடும்பம் பாரம்பரியம் தெரியுமா? என அளந்திருக்கிறது தினமலர். பிரமாண்டங்கள் எல்லாம் புனிதமானவை அல்ல.சிறுபான்மைக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்கிற பெயர் அடையாளத்துடன் தனது மரத்தை வெட்டும் விசுவாசமான கோடாரி கம்பு பி.ஜே.பிக்கு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை புரிந்துதான் தினமலர் துள்ளி குதிக்கிறது. இனி அவர் குரல் ஒலிக்கும் கிழிக்கும் என்று.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கிடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் இந்த சிறுபான்மைத்துறை அமைச்சர்- நஜ்மா ஹெப்துல்லா.நஜ்மா என்கிற இந்த கோடாரி கம்பு ஆர்.எஸ்.எஸ் ஸின் குரு கோல்வால்கர் சொன்னதை தான் திரும்ப வாந்தி எடுத்திருக்கிறார்.

குருஜி கோல்வால்கர் எழுதிய வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (we or our nation hood defined) என்ற நூலில்.

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருந்தல் வேண்டும். என்கிறார்.

சரியான அரசியல் அறிவுள்ள ஜனநாயக சக்திகள் புரிந்துக் கொள்வார்கள். பி.ஜே.பி அரசு ஒருபோதும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்காது வேண்டுமென்றால் இன்னும் எப்படி இவர்களை ஒடுக்க முடியும் என்கிற செயல்பாட்டில் இருக்கும் என்பதை. அதுதான் பி.ஜே.பி யின் அசல் ஆன்மா.

Sunday, December 29, 2013

இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம்...!

எச்சரிக்கை:  நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம். என்ற தலைப்பில் காலச்சுவடில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்களின் கட்டுரை இது.நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது உங்களோடும் பகிந்து கொள்கிறேன்.
எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரைகளில் கட்டாயமாகச் செய்துதீரவேண்டிய காரியம் ஒன்று உண்டு. டி.ஸ். எலியட் கூறிய ஒரு வசனத்தை எப்படியாவது கட்டுரையில் தக்க இடத்தில் செருகிவிட வேண்டும். அதை நான் முதலிலேயே செய்துவிடுகிறேன். அவரின் Waste Land நூலில் இப்படி ஒரு வாக்கியம் வரும்: ‘முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பார்கள், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாகத் திருடுவார்கள்’. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. இந்தக் கட்டுரையின் உட்பொருளுடன் ஒத்துப்போக நான் அங்கங்கே கேட்டவற்றையும் படித்தவற்றையும் திருடி, திருத்தி, உருமாற்றி எழுதியிருக்கிறேன். ஆங்கிலப் பாதிரியார் William Ralph Inge (1860-1954) சொன்னதுபோல எல்லா அசல் ஆக்கங்களுமே மூலத் தடங்கள் மறைக்கப்பட்ட அபகரிப்புகள்.

வெங்காயம் விலை ஏறிவிட்டது என்ற செய்தியை நுகர்பொருட்கள் பயன்படுத்துகிறவர்கள் பரபரப்பூட்டாத செய்கையாகப் பத்திரிகையில் படிப்பதுபோல்இன்றைக்கு இலக்கியத் திருட்டு தினமும் நடக்கும் சாதாரணச் செய்தியாகிவிட்டது. உலகில் எங்கேயாவது ஒரு இடத்தில் இலக்கியத் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது, இந்தப் பத்தியைக் கணினியில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தைவான் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் Andrew Yang பதவி துறப்பு செய்திருக்கிறார் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அவர் செய்த குற்றம் அவரின் நாட்டின் இராணுவ இரகசியங்களைக் காசுக்கு எதிரிகளுக்கு விற்றதல்ல. பிரதான சீனாவின் விடுதலை சேனையைப் பற்றி இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை இவரின் சொந்தக் கைவண்ணம் அல்ல. களவாடப்பட்டது.

ஒரு காலகட்டத்தில் இலக்கியத் திருட்டு அப்படி ஒரு பெரிய பாரமான குற்றமல்ல. எல்லோருமே எல்லோரிடமிருந்து தாராளமாகச் சிந்தனைகள், கருத்துப் படிவங்கள், வாக்கியங்கள், வசனங்களை இரவல் வாங்கினார்கள். தயங்காமல் தூக்கி எடுத்தார்கள். சேக்ஸ்பியர் பிற படைப்பாளிகளின் வரிகளை மட்டுமல்லாமல் தன் நாடகக் கதாபாத்திரங்கள், கதைப்பின்னல்கள், (A Midsummer Night's Dream, Twelfth Night தவிர) இலக்கியப் படிமங்கள் முதலியவற்றைச் செவ்விலக்கியங்களிலிருந்தும் அவருடைய சமகாலத்துப் படைப் பாளிகளிடமிருந்தும் கூசாமல் எடுத்துக்கொண்டார். அவருடைய Henry VI நாடகத்தின் 6,033 வரிகளில் 4,144 வரிகள் சொந்தக் கைவேலை அல்ல. இதனால் ஆங்கில இலக்கிய மாணவர்கள் தளர்ச்சியடைந்து அழைப்பு மையங்களுக்கு வேலை தேடிப் போகப்போவதில்லை. பொழுதுபோக்குக்காக ஆங்கில இலக்கியத்தில் ஈடுபட்டவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம். நமக்கு, நன்கு அறியப்பட்ட உதாரணம் கம்பர் இராமாயணத்தை வால்மீகியைத் தழுவி எழுதியது.

இந்தக் கட்டத்தில் இலக்கியத் திருட்டு என்ற பதத்திற்குப் பின்னால் இருக்கும் ஆங்கில வார்த்தையின் சொற்பிறப்பியல் (etymology) பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இலக்கியக் களவு பழமையான காரியம். எழுத்துக் கலாச்சாரம் வந்த பிறகு மட்டுமல்ல வாய்மொழி நாகரிகப் படிமமாக இருந்த நாட்களிலும் இந்தச் செய்கை இருந்திருக்கிறது. ஆனால் அதை அடையாளப்படுத்தும் வார்த்தை முதலாம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலச் சொல்லான plagiarism என்பதன் மூலம் இலத்தீன் சொல் plagiarius. இதன் பொருள் ஒரு குழந்தையை அல்லது வேறு ஒருவரின் அடிமையைக் கடத்துபவர். சுருங்கச் சொல்லப்போனால் கடத்தல்காரன், அபகரிப்பவன். ஒருவிதத்தில் திருடன். இலக்கியத்துடன் இந்த வார்த்தையை இணைத்து இதைப் பயன்படுத்தியவர் அதிகம் பிரபலமல்லாத ரோம நாட்டைச் சேர்ந்த கவிஞரான விணீக்ஷீtவீணீறீ. அதுமட்டுமல்ல காப்புரிமைக்காக முதன்முதலாகப் பணம் கேட்டவரும் அவர்தான். இந்தச் செயல் வால்மீகி, கம்பரிடம் இராமாயணத்திற்குக் கூலி கேட்டமாதிரி. அவருடைய கவிகளைத் திருடியவரிடம் வெகுமானம் கேட்டு எழுதிய செய்யுளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய வார்த்தையிலேயே தருகிறேன்:

Fame has it that you, Fidentinus, recite my books to the crowd as if none other than your own.//If you’re willing that they be called mine, I’ll send you the poems for free.//If you want them to be called yours, buy this one, so that they won’t be mine.

தற்படைப்பாற்றல் (originality) ஒரு அறிவியல் சொத்துரிமையாக இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் காப்புரிமைச் சட்டமும் அமுலாக்கப்பட்டது. படைப்பாளி புதிது ஆக்கும் ஆற்றலுடையவர் மட்டுமல்ல அவரின் பிரதிகள், சிந்தனைகள், கருத்துகள், தனி நபரின் அறிவியல் சொத்தாகக் கருதப்பட்டது. அத்துடன் இந்தத் தனிச் சொத்துக்களை உருவாக்கிய அவரே அதன் உரிமையாளர். ஆகவே அவரின் கதைகள், அபிப்பிராயங்கள், படைப்புகள், நூல்களை விற்று சம்பாதித்து வாழ்க்கை நடத்தலாம் என்ற கருத்தும் உருவானது.

ஆங்கில அடிச்சொல் வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் இலக்கியத் திருட்டு என்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. திருட்டு இலக்கியத்தில் மட்டுமல்ல, சினிமா, இசை, ஓவியம், நடனம், முனைவர் மற்றும் ஆவண ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் உண்டு. ஆகையினால் இலக்கியத் திருட்டு என்பதைவிட ஆக்க, அல்லது படைப்பு அபகரிப்பு என்பதுதான் சரியான சொல்லாகப்படுகிறது.
ஆக்க அபகரிப்பில் பல வகைகள் உண்டு. ஒன்று அப்படியே அப்பட்டமாக வரிக்கு வரி, வசனத்திற்கு வசனம், பத்தி பத்தியாகப் பிற நூல்களிலிருந்து அப்படியே தூக்கிவிடுவது. இதைத்தான் காவியா விசுவநாதன் செய்திருந்தார். How Opal Mehta Got Kissed, Got Wild, and Got a Life என்ற அவரின் நாவல் Megan McCafferty எழுதிய Sloppy Firsts ñŸÁ‹ Second Helpings என்ற புதினங்களிலிருந்து திருடப்பட்டது. இரண்டாவது வகை சூட்சுமமானது. உதாரணம் மூலம் விளக்குகிறேன். மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முத்துமோகன் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் மார்க்ஸின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த எடுத்துக்காட்டு உங்களுடைய ஆராய்ச்சிக்கும் உகந்ததாக இருக்கிறது. முத்துமோகன் சுட்டிக்காட்டிய பகுதியை நீங்கள் மார்க்ஸின் மூலத்தைப் படிக்காமல் ஏதோ நீங்கள்தான் இதனைக் கண்டுபிடித்த மாதிரி அப்படியே உங்களது கட்டுரையில் புகுத்திவிடுகிறீர்கள். இதுவும் ஒரு ஆக்க அபகரிப்புதான். ஆனால் மிக நுண்மையானது. இதை இரண்டாம் நிலை ஆக்க அபகரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான நுண்ணயம் வாய்ந்த இரவல் வாங்கல்கள் பெரும்பாலும் சர்வகலாசாலை ஆய்வறிக்கைகளில் காணக்கிடைக்கும். கல்லூரிகளில் நடக்கும் அறிவியல் திருட்டு, ஆராய்ச்சி மோசடிகள் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

திருடுவதற்கும் திரும்ப மீள எழுதுவதற்கும் வித்தியாசமுண்டு. ஆகையினால் இரண்டையும் ஒன்றாக எண்ணிவிடாதீர்கள். சில வேளைகளில் இந்த மீள் எழுதல் மூலத்தையும் மிஞ்சிவிடுகிறது, தலைகீழாக்குகிறது. கவிழ்த்தும்விடுகிறது. இரண்டு ஆங்கில உதாரணங்கள். Arthur Laurentsஇன் இசைநாடகமான West Side Story சேக்ஸ்பிரியரின் Romeo and Julietஐ தழுவியது. சேக்ஸ்பிரியரின் இந்தக் காதல் கதைக்கு மூலப்படிவம் பாபிலோன் நாட்டு காதலர்கள் பற்றிப் பொது யூகம் 43 முன் தொடங்கி பொது யூகம் 17/18 வரை வாழ்ந்த ரோமாபுரிக் கவிஞர் ளிஸ்வீபீ எழுதிய Pyramus and Thisbe, என்ற கவிதையாகும். ஆனால் Arthur Laurents வெறும் புளித்துப்போன காதல் கதையாக்காமல் 50களின் நீயுயோர்கின் இரு பதின்ம வயது தாதாக்களின் உள்சண்டை மோதலாக இந்த இசைக்கூத்து சொல்லப்படுகிறது. போர்டோ ரீக்கோ இளைஞர்களுக்கும் போலீஷ் அமெரிக்க வாலிபர்களுக்குமிடையே காணப்பட்ட இன உலைவு இந்த இசைநாடகத்தில் பிரத்தியட்சமாகத் தலை தூக்கி நிற்கிறது. சேக்ஸ்பிரியரின் மூலத்தில் இந்த இன முரண்பாடு இல்லை. மற்றது Elsie V. Aidinoff இன் நாவலான The Garden. ஆதாம் ஏவாள் கதையைப் பின்பற்றி எழுதப்பட்டது. ஆனால் வேதாகம கதைக்கும் நாவலுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. பழைய ஏற்பாட்டு கதையில் சர்ப்பம்தான் வில்லன். ஆனால் எடினொவ்வின் மீள்சொல்லலில் கடவுள்தான் அச்சமூட்டுகிற, கோரமான ஆளாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமா வில்லன் போல் வெள்ளை வேட்டியும் குத்துவாளுடனும் நிற்கிறார். இந்தக் கடைசி வரி மூலத்தில் இல்லை. உங்கள் உணர்ச்சியை ஈர்க்க நான் சும்மா சேர்த்துக்கொண்டது. அதுமட்டுமல்ல ஏவாள் தந்தையர் மரபுக்கு இணங்கி நடக்கிற மாதுவாகச் சித்தரிக்கப்படவில்லை. சுய அறிவுள்ள சுட்டிப் பெண்ணாகத் தோன்றுகிறார். கனியைச் சுவைத்ததினால் மானிடம் கருணையிலிருந்து வீழ்ச்சி அடையவில்லை. விமோசனம் அடைகிறது. கிறிஸ்தவ வேதம் எழுதியவர்கள் நினைத்துப் பார்க்காத செயல் இது. மோசமான மீள் எழுதல்களும் உண்டு. Shashi Tharoor Þ¡ The Great Indian Novel. இந்தியக் காவியமாகிய மகாபாரதத்தை இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பின்னணிக்குத் தாரூர் உருசெப்பம் செய்திருந்தார். விளைவு நாவல் குழந்தைத் தனமாகக் காணப்படுகிறது. அசலிலிருக்கும் தார்மீக இருவுளப்போக்கு தாரூரின் புதுவடிவில் இல்லை.

கிறிஸ்டோபர் புக்கரின் The Seven Basic Plots: Why We Tell Stories என்ற நூலின் தலைப்பில் காணப்படுவதுபோல் ஏழே ஏழு தொல்கதை அமைப்புருக்கள் (archetype) இருக்கிறதென்கிறார். அவையாவன: அரக்கரை ஆட்கொள்வது, தேடல், நீள்பயணமும் திரும்புகையும், குடிசைவாசி குபேரனாவது, மறுவாழ்வு, மகிழ்ச்சி தரும் கதைகள், துன்ப காவியங்கள். என்னதான் இலக்கிய கர்த்தாக்கள் தங்களுடைய படைப்புகள் தங்களுடைய சுயமான எண்ணங்கள், தற்படைப்பாற்றல்கள் என்று கூறினாலும் அவர்களுடைய எழுத்துவீச்சு இந்தக் குறுகிய ஏழு அல்லது மிஞ்சிப்போனால் ஒரு பத்து தொல்கதை அமைப்புருக்களுக்கிடையேதான் செயல்படுகின்றன, சுழல்கின்றன. வேதாந்தி Ludwig Wittgenstein வேறு கட்டத்தில் சொல்லியது இங்கேயும் பொருந்தும்: தற்படைப்பாற்றல் என்பது தெரிந்தவற்றை வேறுவிதமாக வரிசைப்படுத்துவதாகும். தற்படைப் பாற்றல் பற்றிய வரையறை எப்போதுமே நிரந்தரமானதல்ல. ஒருவரின் மனந்திறந்த புகழுரை இன்னொருவரின் பதிப்புரிமை. ஒருவிதத்தில் மற்றைய ஆக்கங் களிலிருந்து திருடாதவர்கள் ஒருவருமே இல்லை.

இன்றைய பிரபல ஆங்கிலேயே எழுத்தாளர்களான P.D.James, Graham Swift, Ian McEwan, Andrew Motion ஏதோ ஒருகட்டத்தில் மற்றவர்களின் இலக்கியத்திலிருந்து களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். Harry Potter நாவல்கள் எழுதிய R.K. Rowling கூட தப்பவில்லை. அமெரிக்கரான Nancy Stouffer அவர் 1984இல் எழுதிய The Legend of Rah and the Muggleதான் ஹாரி பாட்டர் நாவல்களுக்கு முதுப்பிரதி (ur-tex) என்கிறார். டான் பிரவுன் விசிறிகளுக்கு அவரை நீதிமன்றம்வரை இழுத்தது ஞாபகத்தில் இருக்கும். இவரின் சதித்திட்ட நாவலான The Da Vinci Code îƒèÀ¬ìò The Holy Blood and the Holy Grail Michael என்ற சரித்திர நூலிலிருந்த சில சம்பவங்களைத் திருடியதாக Baigent and Richard Leigh வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அப்படி டான் பிரவுன் களவாடிய சம்பவம் இயேசு திருமணமானவராக மகதலேனா நாட்டு மரியாளுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தது. கிறிஸ்தவ திருமறையிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட ஆகமமான The Gospel of Philipä படித்தவர்களின் இரத்த அழுத்தம் இந்த வெளிப்பாட்டினால் பாதிக்கப்படப்போவதில்லை.

ஆக்க அபகரிப்பு தனி ஆளின் முற்றுரிமை அல்ல. ஆட்சியாளர்களும் செய்வதுண்டு. அதிகம் யோசிக்காமலேயே நினைவுக்கு வருவது ஈராக் யுத்தத்திற்குச் சாதகமாக முன்னாள் ஐக்கிய ராஜிய பிரதமர் டோனி பிளையர் தயாரித்த ஆதாரச் சான்று. ஐயத்துக்குரிய ஆவணக்கோப்பு (dodgy dossier) என்று ஊடகத்தினால் எள்ளலாக நாமம் சூட்டப்பட்ட இந்தப் பத்திரம் Ibrahim al-Marashi என்ற முதுகலை மாணவரின் Iraq's Security and Intelligence Network: A Guide and Analysis என்ற ஆய்வேட்டிலிருந்து திருடப்பட்டது. மூன்றாவது வகுப்பு மாணவன்கூட விடாத பிழையை அரசு செய்திருக்கிறது. மூலத்திலிருந்த அச்சுப் பிழைகள் அப்படியே பிரித்தானிய அரசு அறிக்கையிலும் காணப்பட்டது.
படைப்புகள் களவாடப்பட்டது என்று நிரூபிக்கப் பட்டபோது குற்றவாளிகள் சொல்லும் சாக்குப் போக்கு இவற்றில் ஒன்றாக இருக்கும்: ஐயோ நான் தெரிந்து செய்யவில்லை; அந்தப் புத்தகத்தையே நான் படிக்கவில்லை; யார் அந்தக் கதாசிரியர் கேள்விப்படவே இல்லையே. கைசலிக்க எழுதிய களைப்பினால் மேற்கோள் குறிகள் போட மறந்துவிட்டேன். இன்றைய கணினி நாட்களில் இற்றைப்படுத்தப்பட்ட சாக்கு நீண்ட நேரம் திரையைப் பார்த்ததினால் கண்கள் தொய்ந்துவிட்டன. ஆகையினால் அடிக்குறிப்புகள் சேர்க்க மறந்துவிட்டேன். இவற்றைவிட திருடிய இரண்டு படைப்பாளிகள் சொன்ன விடை புதிதாகவும் அசலான எண்ணமாகவும் எனக்குப்படுகிறது. இந்த இரண்டுக்குமே சொந்தக்காரர்கள் ஜெர்மனிய நாட்டவர்கள். ஒருவர் அரசியல்வாதி மற்றவர் பதின்ம இலக்கியம் எழுதுகிறவர். Bonn University ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரின் முனைவர் ஆராய்ச்சி திருடப்பட்டது என்று அவரின் முனைவர் பட்டம் சர்வகலாசாலையின் கல்வித் தகமையின் நாணயத்திற்குக் களங்கம்

விளைவிக்கிறது என்று ரத்து செய்த போது Jorgo Chatzimarkakis சொன்னது: ‘நான் திருடியதாகச் சொன்ன அதே வார்த்தைகளை வேறுவிதமாகப் பொழிப்புரை செய்திருக்கிறேன். எல்லாப் பனுவல்களுமே பரஸ்பர ப்பிரதியுறவுகொண்டவை’ (intertextual). இவர் அறிவியல் ஆய்வேட்டிலிருந்து திருடிய மூன்றாவது ஜெர்மனிய அரசியல்வாதி. எல்லா அரசியல் வாதிகளுக்கும் நேர்மையுணர்வில் ஏதோ ஒரு தொளதொளப்பு இருக்கும்போல் தெரிகிறது. தமிழக அரசியல்வாதிகளுக்கு 3நி ஏலம். ஜெர்மனியர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

கதாசிரியர் Helene Hegemann சொன்ன விளக்கம் இதைவிட மேலானது. இவர் எழுதிய Axolotl Roadkill என்ற நாவல் Strobo என்ற நூலின் சாயல்கள் இருப்பதாக அம்பலப் படுத்தப்பட்டபோது சளைக்காமல் இவர் சொன்ன பதில்: "நான் அபகரித்த சங்கதிகளை மூலத்தைப் பார்க்கிலும் முற்றும் வேறான தனித்தன்மை வாய்ந்த சூழமைவில் பொருத்தியிருக்கிறேன். மூலத்திலிருந்து எடுத்த பொருட்களுக்குப் பொருத்தமான கதை ஓட்டத்தை எனது நாவலில் உருவாக்கியதுதான் புதுமை".இவரின் நாவலில் கதாபாத்திரம் சொல்லும் ஒரு வசனம் இன்றைய மீள் கலப்புறு கலாச்சாரத்தின் எண்ணத்துடன் இசைந்துபோகிறது, ஒத்துப்போகிறது: "பெர்லின் நகரில் எல்லாவற்றையும் எல்லாவற்றுடனும் கலந்துவிடுகிறோம். என்னுடைய உள்ளார்ந்த நோக்கை எதிரொலிக்கும், என்னுடைய கற்பனையை வேகமாக தூண்டிவிடும் எந்த நாவலானாலும் சினிமாவானாலும் இசையானாலும் ஒளிப்படமானாலும் கவிதையானாலும் அப்படியே சிரமம் இல்லாமல் திருடிவிடுவேன்".

அறிவியல் சொத்துரிமையை இன்றைய கணினி, வலைத்தள நாட்களில் கண்காணிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இன்றைய தலைமுறை இணயத்திலிருந்து கத்தரித்து ஒட்டும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். மீள் சேர்த்திணைவு (re-mix) இவர்களுக்கு சாம்பாரும் இட்லியும்போல் இயல்பானவை. மறு கலவையாக்குவதில் எது தக்கவை எது தகாதவை என்பதில்கூட இவர்களிடையே தடுமாற்றம் இருக்கிறது. நன்னெறி சார்ந்த ஒழுக்க நெறிப் பிரச்சினையாக இவர்களுக்குத் தெரிவதில்லை. ஒருவிதத்தில் வார்த்தைகள், எண்ணங்கள், கருத்துக்கள் தனி ஆளுக்குச் சொந்தமானவை அல்ல. பொதுவானவை. இவற்றைப் பார்க்கும் பார்வையிலும் வெளிப்படுத்தும் விதத்திலும்தான் படைப்பாளியின் தனித்தன்மை தெரிகிறது. இந்தத் தனித்தன்மைகூட ஒரு இருளார்ந்த, மங்கலான சமாச்சாரம். தற்படைப்பாற்றல் என்பது படித்த, கேட்ட, அறிந்த ஆதாரங்களை, மறைத்து, மூடி, புதைத்துவிடுவதே. ஆகையினால் இன்றைய பிரச்சினை மூலப்படிவம் பற்றியதல்ல, நேர்மை பற்றியது. படைப்பாளியின் உள் எண்ணம் பற்றியது. ஆக்கியோனின் இலக்கிய யோக்கியதை பற்றியது. இதில்தான் காவியா விஸ்வநாதனும் இவரைப் போன்ற மற்ற இலக்கியத் திருடர்களும் தவறிவிடுகிறார்கள்.

கடைசியாக, படைப்பாளிகள் கேட்க விரும்பாத, அவர்களுக்கு வருத்தமுண்டாக்கும், உளமுறிவு தரும் சில மேற்கோள் வாசகங்களை இங்கே தந்து இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். Roland Barthes எழுதிய The Library of Babel என்ற வாசகசாலை பற்றிய சிறுகதையில் அங்கே காணப்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றி வர்ணிக்கும்போது அவை மாற்றீடு செய்ய முடியாதவை, தனித்தன்மையானவை என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய அடுத்த வசனம் கவனத்திற்குரியது. தான் படைப்பது எல்லாம் அசலைவிட மிஞ்சிய அசல் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்குக் கவலை தரும். அந்த வரி: ‘ஆனால் அந்த நூல்களிடையே காணப்படும் வித்தியாசங்கள், ஒரு சில கால்புள்ளிகளும் சில எழுத்துக்களுமே’. வேண்டுமென்றே எல்லோரையும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க இதழாளர் James Atlas சொன்னதையும் இங்கு நினைவூட்டுகிறேன்: ‘எந்த இலக்கியமுமே திருட்டுதான்’. இதையே வேறுவிதமாக பொதுயூகத்திற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எபிரேய பிரசங்கியார் சொல்லி இருந்தார். இந்தப் பிரசங்கியார் குவளை அரைபாதி நிரம்பியது என்று நினைக்கிறவர் என்றுபடுகிறது. அவர் பண்டைய நாட்களில் பிரகடனப்படுத்திய வார்த்தைகள்: ‘சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை’.

நன்றி : காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-165/page21.asp )

Friday, April 5, 2013

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!

ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

(நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#7)

Wednesday, March 6, 2013

அண்ட புளுகன் மாலைமலரும் ஆகாச புளுகன் தினமணியும்

ஒரு பொய்யை தொடர்ந்து சொல் உண்மையாகிவிடும். கோயபல்ஸ் 
ஒரு பொய்யை தினமும் சொல் உண்மையாகிவிடும். தினமணி,மாலைமலர்,தினப்பத்திரிக்கை

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.

இதே சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தினமனி,தினமலர், மாலைமலர் போன்ற ஊடகங்கள் சுறுசுறுப்பாகி கொட்டை எழுத்தில் 

இஸ்லாமிய தீவிரவாதி கைது கூடங்குளம் 
அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா? 

என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டையே பயமுறுத்தி இருக்கும். இதை எதோ மிகைப்படுத்தி சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முந்தைய அவர்களின் நடைமுறை அதுதான்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்டபோது தினமலர் வெளியிட்ட புகைப்படம்
“அணு உலை மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு” இப்படித்தான் செய்தி வந்தது.

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்ட செய்தியை மிகவும் அமுக்கி வாசித்ததும் இல்லாமல் இந்த பயங்கரவாதியையும் முஸ்லிமாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்த ஊடக நரித்தனத்தோடு யானையை சோற்றில் மறைக்க நினைத்த சதியை பாருங்கள்.சங்கரை ஷாருக்கான் ஆக்கிய மாலைமலரும்,தினமணியும்.



மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங். இவன் அண்ட புளுகன் என்றால் ஆகாச புளுகன் தினமணியில் - ஷாருக்கான் என்பவன் கைது.முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் அசிங்கப் பட்டு போய் விடுகிறது. ஆனாலும் இவர்கள் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தை தீவிரவாதிகளாக்கி திட்டமிட்டு குறிவைத்து இயங்குகிறார்கள். 



மேலே உள்ளது தினந்தந்தி

உள்ளே சொல்வது... //வெடிகுண்டு போன்ற பொருளை//, 
ஆனால்... தலைப்பில்.. அந்த "போன்ற" மட்டும் மிஸ்ஸிங்..!

மேலும் சில ஆங்கில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமாக வந்த செய்திகள் இந்த பத்திரிக்கைகளில் எங்குமே ஷாருக்கான் என்கிற பெயர் இடம் பெற வில்லை.

பார்க்க சுட்டிகள்:

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F316055%2Fone-more-held-planting-bomb.html&h=zAQFSknm3

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fnews%2Futs%2Fman-arrested-over-planting-of-bomb-like-object-in-puducherry_832031.html&h=WAQFuk0qW

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnews.outlookindia.com%2Fitems.aspx%3Fartid%3D791089&h=JAQExa8e4

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Fwire-news%2Fone-more-held-for-planting-bomb-like-substancetrain_833253.html&h=7AQHUheXq

Saturday, February 23, 2013

தீவிரவாதம் தீர்வை தருமா?

“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)

Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.

 ‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற  “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’

நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!

இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக்  கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.

இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)

இறைவன் கூறுகிறான் திருக்குர்ஆனில்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.

தீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.

எனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: மிஷ்காத்)

அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.
அநீதிக்கு அறமே தீர்வு.

(Reference :நூல்: எங்கெ அமைதி )