Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Wednesday, May 21, 2014

வீரசிவாஜியா? பார்ப்பன அடிமையா?

சிவாஜியை வீரசிவாஜி என பாடப்புத்தகத்திலும், இந்துத்துவவாதிகளும் ஒரு நூற்றாண்டுக்காலமாக நம்மீது போலியான கட்டமைப்பை திணித்து நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன? சிவாஜி பிராமண இருண்டகால,வேதகால ஆட்சியை நிறுவ முயன்று தோற்றுப் போன ஒரு பிராமண அடிமை சிவாஜி.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க அணியினர்  சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ மராட்டிய மாதிரி ஆட்சியை தங்கள் கனவாக கொண்டிருக்கும் அதே பாணியில் ஆட்சி அமைக்க துடிக்கும் அந்த முன்மாதிரி ஆட்சியின் அவலங்களையும் சிவாஜியின் உண்மை தோற்றத்தையும் விரிவாக பார்ப்போம் இந்த பதிவின் ஊடாக.

சாதி என்பது தொட்டுத் தொட்டு பற்றித் படரும் ஆற்றல் மிக்கது. அது தேச ஒற்றுமைக்கு பரம விரோதமானதாகும். சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ வைதீகப் பழமையில் கட்டியெழுப்பப்பட்டதால் அதனினுடைய மரண அணுக்களும் அதற்குள்ளயே இருந்திருக்கிறது. சாதி வேற்றுமைகளையும் விரோதங்களையும் உயிரெனப் பாதுகாத்த இந்து கலகம் தோய்ந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை இந்தியா முழுக்க நிலைநாட்டத்தான் சிவாஜி விரும்பினார். அது மணலைக் கயிறாகத் திரிப்பதற்கொப்பான நடைபெறாத விஷயமாகும். இந்தியாவை போன்ற ஒரு பெரும் கண்டத்தை முழுக்க சாதி வேற்றுமைகளாலும் மனிதநேய உணர்வின்மையும் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய மனித சக்தியாலும் முடியாது. இவ்வாறு சீரழிந்து செல்லரித்துப்போன ஒரு சமுதாய அமைப்பை உள்ளடக்கிய பிராமணக் கொடுங்கோன்மைக்கு இந்தியாவை அடிமை கொள்ளத் தான் பதினெட்டாவது நூற்றாண்டில் சிவாஜி என்கிற பிராமண அடிமையைக் கொண்டு முயற்சித்தனர்.

புரோகிதக் கொடுங்கோன்மையின் அநியாயங்களைச் சகிக்க முடியாமல் மக்கள் மூச்சுத்திணறித் துடித்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தேசிய அபிலாஷைகளும் கோட்பாடுகளும் மிதித்து நசுக்கப்பட்டன. சாதியின் அடிமைத்தனமும் அவமானமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. பேஷ்வாக்களும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செல்வம் குவிக்க மக்களுடைய சொத்துக்களைப் பிழிந்தெடுத்தனர். சுதந்திர மனிதனின் அவனுடைய பாதுகாப்பின் கடைசி தொங்கு நூலும் அறுக்கப்பட்டது. உண்மையில் பிரிட்டீஷ்காரர்கள் பிராமண அடிமை சிவாஜியின் மராட்டிய தேசத்தை கைப்பற்றியது அவர்களுக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. “மராட்டிய மக்கள் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சோம்பலாக இருந்துவிட்டதால் மராட்டியத்தை கைப்பற்றுவது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.

சிவாஜி சிறு வயதிலிருந்தே பிராமணர்களிடம்தான் வளர்ந்தார். தந்தை தன்னுடைய மேலாளரான பிராமணனிடம் சிவாஜியை ஒப்படைத்து எங்கோ போய்விட்டார். வைதிக மதத்திலும் விக்கிரக பூஜையிலும் ஆழந்த பக்தி நம்பிக்கைகொண்ட ஒரு சிறுவனாக சிவாஜி வளர்ந்தார். சிவாஜியிடம் அடிக்கடி பாவனிதேவியின் அருள் வெளிப்பட்டதாகவும் , சிவாஜிக்கு இடுக்கண்நேரும் போதெல்லாம் தேவியின் அறிவுரை கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் பல பேர் நம்பினர். இது சிவாஜியின் தலைமையைப் பலப்படுத்த புரோகிதர்கள் பரப்பிய கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

ஒரு நாட்டின் நிறுவனர் என்ற அருகதை பெற்ற சிவாஜி தன்னுடைய இளம்பருவத்துப் பிராமணத்தைக் கைவிட முடியாதவராக இருந்தார். எனவே தன்னையும் தன்னுடைய நாட்டையும் புரோகிதக் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துவிட்டார். நாட்டை பிராமணர்களுக்கோ கோவில்களுக்கோ காணிக்கையாக்குவது, அல்லது தானமாகக் கொடுப்பது, சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு சத்திரிய பதிவியை ஏற்பது, திவான்களும் ஆலோசகர்களுமாக இருப்பதற்கு பிராமணர்களுக்கு உரிமையிருக்கிறதென்று அங்கீகரிப்பது போன்றவை வாலி, வாமனன் காலத்திலிருந்து நவீன திருவிதாங்கூர் வரலாறுவரை பிராமண நுகத்தடியை சுமக்கும் சடங்குகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப்படும் பிராமணராவர். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டைக் கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு ‘ பிரம்மஸ்வம்’ அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக் கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில்-மிலிடெரி ஆட்சியின் மிகமுக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் - மிலிடெரி ஆட்சியின் ஆகப்பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரியுமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்காளயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றிகிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப் போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதைகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

அமைச்சரவையில் மதவிஷயங்களுக்கான அமைச்சராக பண்டிட்ராவ் என்ற ஒரு பிராமணர் இருந்தார். சாதிச் சட்டங்களையும் ஆச்சாரங்களையும் நடைமுறைப்படுத்துவது, சிவில் - கிரிமினல் சட்டங்களை அமுலாக்குவது, அரண்மனையைச் சார்ந்த தர்மஸ்தாபனங்களை நிர்வகிப்பது போன்றவை பண்டிட் ராவின் பொறுப்பிலிருந்தன.

பிராமணர்கள் அனைவருக்கும் அவரவர்களின் புலமைக்கேற்ப ஆண்டுதோறும் காணிக்கையும் நன் கொடைகளும் அளிக்கப்பட்டன. வாழக்கைப்பாட்டிற்காக எந்தப் பிராமணனும் நாட்டைவிட்டு வெளியே செல்ல நேரவில்லை. இந்தத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையான நிதிவைப்பிலிருந்து கிடைக்கும் ஆண்டுவருவாய் மட்டும், ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது ஐந்து லட்சம் ரூபாய் இருந்ததாம்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்க்கத் தன்னுடைய ‘பட்டாபிஷேகத்தை’ (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கெளரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஏழுகோடி அக்காலத்திலேயே செலவழிக்கப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்றுசிரியர்கள்.

சாத்திர முறைப்படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்சபரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார் இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க சிவாஜியைப் புரோகிதர்கள் அனுமதிக்கவில்லையென்பது மட்டுமின்றி, சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர்.

சிவாஜியின் அனைத்துப் போர்களிலும் பிரபுக்கள் மகத்தான சேவையாற்றினர். பிரபுக்களுக்குப் பாரம்பரியத்திற்கேற்ப இருந்த சாதிப் பதவியில் எத்தகைய இறக்கங்களையும் செய்யக் கூடாது என்று மன்னரின் கட்டளை இருந்தபோதிலும் பிராமணர்கள் பிரபுக்களை சாதியில் தரம் குறைப்பதற்காக புராணங்களில் இடைச் செருகலாக புதிய வாக்கியங்களை எழுதிச் சேர்த்தனர். பேஷ்வாக்களின் ஆட்சி துவங்கிய பிறகு பிரபுக்களுக்கு புதிய உத்தியோகங்கள் எதுவும் அளிக்கப்படாமல் அவர்களுடைய உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. மன்னர்களும் பேஷ்வாக்களும் சாஸ்திரங்களின் அனைத்து அநீதிகளையும் அதர்மங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்கினர். பேஷ்வா பூனாவில் ஒரு மதநீதிமன்றத்தை நிறுவி பிராமணர்களை நீதிபதிகளாக்கினார்.

“ இந்துச் சட்ட நியுணரான ஒரு சாஸ்திரி அதன் தலைமை நீதிபதியாக இருந்தார் மத அடிப்படையிலான,சாதி அடிப்படையிலான, எல்லா வழக்குகளையும் அந்த நீதிமன்றம் விசாரனை செய்து தீர்ப்பளித்தது. உடன்கட்டை ஏறுதலும் (சதி) பால்ய விவாகங்களும் முன்னை விட கூடுதலாக ஊக்குவிக்கப்பட்டன. இறந்துபோனவர்களின் மனைவி மட்டுமின்றி அவருடைய வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டனர்.

சிவாஜி காலமான பிறகு பேஷ்வாவும் பிராமண நண்பர்களும் சேர்ந்து மூத்த புதல்வரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது புதல்வருக்கு மகுடம் சூட்டினர். மன்னர் பேஷ்வாவின் கட்டுப்பாட்டில் சொந்த அரண்மனையிலேயே ஒரு கைதியைப் போல் ஆகிவிட்டார். பேஷ்வாக்கள் ஆட்சி அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக்கி கையப்படுத்தினர். இத்தகைய வஞ்சகச் செயல்கள் காரணமாக மக்களுக்குள் உறங்கிக் கிடந்த கோபமும் கலகமும் வெடித்துக் கிளம்பின. ரஜபுத்திரத் தலைவர்கள் அவரவர்களின் மாவட்டங்களில் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். அமைச்சரவை ஒழிந்துவிட்டது. சிவாஜி இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் அவருடைய பேரரசும் நொறுங்கிச் சிதைந்துவிட்டது.

சிவாஜியின் காலத்திலும் பேஷ்வாக்களின் காலத்திலும் மக்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கினைக்கவும் கல்வியில் முன்னேற்றவும் புத்திசாலித்தனமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிராமண அதிகாரிகளின் பணப் பேராசையில் இருந்து  யாரும் தப்ப முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தை ஈவிரக்கமின்றிப் பிழிந்தெடுத்தனர். கடைசி பேஷ்வா பிராமணரின் வீழ்ச்சியின் போது அவர் ஐந்து கோடிரூபாய் சம்பாதித்திருந்தார்.

References
Chapter XIII
Ranade's Rise of Maratha Power - 36,10,50,51
J.Sarkar's Sivaji and his times page : 431,430,435, 432,17,8,429,430, 431
C.A.kincaid and parasnis History of Maratha people Vol. 3 page 243,175,233.

Monday, November 5, 2012

சிவாஜி கணேசன் : ஒரு நடிப்பின் கதை

“ இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர், நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம் : இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்;  அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச் சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும்  சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்துக் கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் செய்யத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும்  உயர்குடி நாயகனாக, பக்தர்கள் மீது பழமையை நிலை நாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கணவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியை திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் தந்தையாக என்று ஏகப்பட்ட தந்தைகளாக சிவாஜி நடித்தார்; நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழஇயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் - என்று என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

சிவாஜியும் மிகை நடிப்பும்

அதை மிகை நடிப்பு என்பாரின் விமர்சனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்திலும் அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்குக் குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்குக் காரணம் என்று கூறி விட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர்  அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்திவிட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது. முதலில் ஜாடிக்கேற்ற மூடி ; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு - அது முற்றத் தொடங்கியது.
‘ பாரசக்தி’ கால சமூகப் பின்னணி

‘பாரசக்தி’ தயாரிப்பாளருக்குப் பண உதவி செய்த எவிஎம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 - இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது.  மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன. அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூகநோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்ற நட்சத்திரங்கள்ப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. கங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான  அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொருபுறம் மொழிவழி மாநிலங்களுக்கான  போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி - இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின்  குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னுறுத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி

இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம் மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு - வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 - களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி 60 - களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் திரை நட்சத்திரமாகி விட்டார்.

அவரது ‘இமேஜு’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்குத் ‘தீனி’ போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள் ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’களுக்கும் இதுவே இலக்கணம். எம்.ஜி.ஆர். ரஜினியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப்பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமல்ஹாசனுக்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டகதையும், வித்தியாசமான மேக் -அப்பும், மணிரத்தினம் - சங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை - தனது நடிப்பாற்றலால் - தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களில் வெற்றியை வைத்து, வெற்றி பெறும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னது தான் எனத் தமக்குத்தாமே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர். திரையுலகில் திறமையும் - சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர். நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான - சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க முன் வைத்த தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப்பாசம், மொழி - இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
சிவாஜி கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும்

சிவாஜி தனது நடிப்புத்திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளைப் பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை -  எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போலவே, அவரும் சமகாலச் சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும், பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், கங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் - உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் - வாழ்க்கையும், இமேஜூம் கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொண்டு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாகப் புகை விடுவது, கம்பளி போர்த்திய உடலுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ -நளினமாகவோ நடந்து வருவது போன்ற சாதனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியைப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான் வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நடசத்திரம்

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களை வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதை சரிக்கட்ட சிவாஜியும், எம்ஜிஆரும் 70 -களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். அதன் பின்னர் 80 - களின் துவக்கத்தில் பேரன் - பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீ தேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடனும் ஆடிப்பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது .அதன்பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை’  ‘தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப்பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90 -களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ‘இளைய தளபதி விஜய்’ ன் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார்.
உயர்ந்த மனிதரின் இறுதிக் காட்சி

இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ்பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத்திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா - சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்குத் தனது பேத்தியைக் கொடுப்பதில் முழுச் சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. தனது நடிப்புச் சாம்ராச்சியத்தில் அடங்கிக் கிடந்த ஒரு நடிகையும், புதுப்பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த் தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்குச் சமமாக எப்படிச் சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக்கூடும்.

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய்கூடச் சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் - நடிக்கும் தேவை ஏற்படவில்லை.

Reference : நூல் :சினிமா திரை விலகும் போது.

Monday, September 24, 2012

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள்.

ஊடக பலமும், ஆட்சி ஆதிகார பலமும் இருந்தால் குதிரையை கழுதையாக்க முடியும் கழுதையை குதிரையாக்க முடியும் என்பதற்கான நிகழ்கால ஆதாரம் தான் இந்த சீக்கிய சிறுபான்மை இனத்தினர். வீரஞ்செறிந்த சீக்கியர்களை அப்படியே எதிர்மறையாக காமெடி பீஸ்களாக மாற்றி கேலிக்குரிய சித்திரமாக உருமாற்றி “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் இந்த ஊடகங்களால் பரப்பப்பட்டு,வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). உண்மையில் இந்த சீக்கியர்கள் யார் வரலாற்று பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.
மாரட்டியத்தில் பிராமணப் புரோகிதர்களின் தலைமையில் ஓர் இந்து போரரசை நிறுவ  சிவாஜி முயற்சித்த காலத்தில் வடமேற்கு இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு தேசியப்புத்தெழுச்சி அங்கும்  துவங்கியது. முகலாயர்களின் ஆட்சியின்கீழ் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு துடித்துக்கொண்டிருந்தவர்களும்,சாதிய பாகுபாடுகள் மற்றும் விக்கிரக பூசைகளின் அடிமைத்தனத்திலும். அறியாமையிலும் வீரியமிழந்தவர்களுமாக அன்றாடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த, பாமரர்களான கிராமத்து மக்களும் மலைவாழ் மக்களும், தேச பக்தர்களாகவும் போராளிகளாகவும் உயிர்ப்பலியாளர்களாகவும் ஆக்கப்பட்டு ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் பணி அங்கு துவக்கப்பட்டிருந்தது.
பத்தாவது குருவான குருகோவிந்த் 1675-ல் தான் சீக்கியர்களின் தலைவாரனார். சிவாஜியைப் போல் மக்களுடைய அரசியல் விருப்பங்களை மறந்துவிட்டு வைதிகப் பழமைச்சக்திகளை ‘அஸ்திவாரம்’ போட்டு பலப்படுத்த குருகோவிந்த் முயற்சிக்கவில்லை. காலமெல்லாம் இந்தியாவின் உண்மையான அனைத்துத்தேசிய இயக்கங்களுடையவும் உயிரும் சக்தியுமாக விளங்கிய உண்மையான மகான்களெல்லாம் அறிவுறுத்திய மகத்தான உயர்ந்த கோட்பாடுகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தேசத்தை உருவாக்க குருகோவிந்த் முடிவெடுத்தார். கொள்கைகள், கூட்டுப்படுகொலைகள் மலிந்த 15,16,17 ஆகிய நூற்றாண்டுகளில் கூட இஸ்லாம் சமயத்திற்குச் சாதகமான செல்வாக்கு பலம் இல்லாமலில்லை.அக்காலத்தில் வடஇந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்களும் மகான்களும் இஸ்லாம் சமயத்தின் மகத்துவத்தால் உத்வேகம் பெற்றனர். பொருளற்ற சாதி வேற்றுமைகள் நாசகரமானவை என்றும். பூசை புனஸ்காரம் போன்ற சடங்குகளால் ஆன்மீகப் பலன் கிட்டாது என்றும் கடவுளைப் பல பெயர்களிலும் உருவங்களிலும் வழிபடுவது தவறானதும் மூடத்தனமானதும் என்றும் மக்கள் தீவிரமாக உணரத் துவங்கினர்.

இந்து சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளும் கெடுதல்களும் இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் நிறுவனராகும் நலவாய்ப்புப் பெற்றவர் குருநானக் ஆவார். வழிபடுவதற்கு கண்னுக்குத் தெரியாத ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகவும், வாய்மைக் குணம், தூய வாழ்க்கை, நற்செயல்கள், கடவுளிடத்தில் முழுமையான பக்தியும் அடைக்கலமும் ஆகியவைதான் மோட்சத்திற்கான பாதை என்று குருநானக் போதித்திருக்கிறார். இந்த உலகில் அமைதிக்கும் மறு உலகில் மோட்சத்திற்கும் சாமான்ய உலகியல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு போகத் தேவையில்லை என்று அவர் கூறினார். பல ஆண்டுகள் ஒரு தியாகியும் துறவியும் தவசியுமாக அலைந்து திரிந்த பிறகும் உண்மையான எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய குருநானக் மீண்டும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் உருவாக்கிய மத அடிப்படை சமுதாய,அரசியல் அடிப்படையிலான நியதிகளும் ஆட்சிமுறையும்தான் சீக்கியர்களை இன்றைக்கும் ஒரு ஒருங்கினைந்த சமுதாயமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜி பாவானிதேவியின் அருள் பெற்றவர் என்று கூறி புரோகிதர்கள் நம்பவைத்ததைப் போல், குருகோவிந்த் காளிதேவியின் அருள்பெற்றவர் என்று நம்பவைக்கவும் புரோகிதர்கள் முயற்சித்தனர். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில பிராமணர்களின் தலைமையில் ஒரு நரபலி மேற்கொண்டர்கள். நல்வாய்ப்பால் கள்ளங்கபடமற்றவரும் தைரியசாலியுமான குருகோவிந்த் இதற்கு எல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தன்னுடைய நாட்டையும் மக்களையும் விக்கிரக பூசைக்கும் புரோகிதத் தந்திரங்களுக்கும் அடிமைப்படுத்த அவர் மறுத்துவிட்டார். நான் உங்களைச் சாசுவதமான கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். வேறெதையும் திரும்பிப் பார்க்காமல் அந்தக் கடவுளிடம் மட்டும் அடைக்கலம் நாடுங்கள். அவனுடைய பாதுகாப்பில் வாழுங்கள் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் அவர் உயிர் நீத்தார்.

சீக்கியர்களின் முக்கியமான நம்பிக்கைப் பிரமாணங்கள்:

1. சாசுவதமான ஒரே கடவுளை மட்டும் நம்புங்கள்

2. விக்கிரகங்களையோ, சவக்கல்லறைகளையோ, மரங்களையோ, பூதங்களையோ வழிபடாதீர்கள். ஏழைகளுக்கு உதவுவதோடு, அகதிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.

3. சாதிகள், தொழில் போன்ற பாகுபாடுகளைப் பார்க்காமல் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களைப் போல் வாழ வேண்டும்.

4. ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு எப்போதும் அயுதங்களுடன் இருக்க வேண்டும். பகைவனுக்குப் பயந்து ஓடிவிடக் கூடாது. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

5. கற்பு நெறி, ஆன்மபலம், கட்டுப்பாடு, கொடையுள்ளம்,கடவுளுக்கும் நாட்டுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் குணம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட தூய வாழ்க்கையை மேற்க் கொள்ள வேண்டும்.

6. எல்லா விஷயங்களிலும், தலைமைக் குழுவான ‘கல்சா’ விடம்தான் உயரதிகாரம் இருக்க வேண்டும்.

7. பத்து குருமார்களின் போதனைகள் உள்ளிட்ட நூல்தான் மதப்பிரமாணம்.

8. ஐந்து சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு குழு வேறு யாரை வேண்டுமானாலும் சீக்கியர்களாக்கி குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லாவிதமான ஆன்மீக ஆசிகளுக்கும் உரிமையிருக்கிறது.

10. எல்லோரும் நம்பிக்கையுடன் உழைத்து வாழவேண்டும். சோம்பேறிகளுடனும், கெட்டவர்களுடனும் சேரக்கூடாது.

11. இந்தப் புதிய வாழ்க்கையில் நுழைபவர்கள் எல்லோரையும் சீக்கியர்கள் (சிங்கங்கள்) என்று அழைக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குள்ளயே 80,000 பேர் குருகோவிந்தின் ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். அவர்களுடைய எண்ணிக்கையும் நாளாவட்டத்தில் பெருகியது. இந்தச் சட்டங்கள் அமுலாகியபோது  சீக்கியர்களின் சங்கத்தில் சேர்ந்த ஏராளமான பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். பழைய அனாச்சாரங்களிலும் சாதி வேற்றுமைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து போனதை குருகோவிந்த் வரவேற்றார். அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைக்கிராம மக்களும்,மலைவாழ் மக்களும் சீக்கிய சங்கத்தில் சேர்க்கப்பட்டு நாட்டின் கெளரவமிக்க குடிமக்களாக உயர்த்தப்பட்டனர்.

“சீக்கியர்கள் ராஜபுத்திர வீரர்களைப் போல் தன்மானமும் துணிச்சலுமிக்க ஒரு  மக்கள்  சமுதாயமாக உருமாறினர்.ஒரே சமுதாயம்.ஒரே நம்பிக்கை,ஒரே சமூக வாழ்க்கை,ஒரே அரசியல் அபிலாஷைகள் போன்றவாற்றல் சீக்கியர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.இந்த நவீனமயமாக்கத்தின் ஆழ்ந்த பலன் உடனடியாக வெளிப்பட்டது. சீக்கியர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தும், ஒத்துழைத்தும், வாழுகின்ற துணிகரம் மிக்க மக்களாக உருவாயினர்.அக்கிரமங்களும் ஒடுக்குமுறைகளும் தென்பட்ட இடங்களிலெல்லாம் சீக்கியர்கள் பாய்ந்து சென்று வலிவற்ற எளியோர்களைப் பாதுகாத்தனர். உணவைப் பங்கிட்டு புசித்தும், தள்ளாமை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் தாங்கியும் தழுவியும் குளிப்பாட்டியும் துணிகளைத் துவைத்தளித்தும், மகிழ்ச்சியுடனும் அன்புடனும் ஒருவரை ஒருவர் வரவேற்றும், ஒரே உடன்பிறப்புக்களைப் போல் சீக்கியர்கள் வாழத் துவங்கினர்.”
குருகோவிந்த் அவர்கள் சீக்கியர்களை வலுவான ஒருங்கினைந்த சமுதாயமாக உருவாக்கினார். அடிமைத்தனத்தில் வீழ்ச்சியுற்றுக்கிடந்த மக்கள் சுதந்திரமும், ஜனநாயகமும்,நீதியும்,தியாக உணர்வும் பெற்றனர். முகலாயர்களின் சர்வாதிகாரத்தின் கீழும், இந்து மதத்தின் அவமானத்தைச் சுமந்தும் நிராதரவாக வாழ்ந்து கிடந்த மக்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வெளிப்பட ஆரம்பித்தன. சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், நாட்டுக்காகவும் வாழவும் உயிர்த்தியாகம் செய்யவும் மகத்தான உத்வேகம் பெற்றனர்.

அவர்களைச் சுற்றி காடென வளர்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்தும் அனாச்சாரங்களில் இருந்தும் அவர்கள் விடுதலையடைந்தனர். துணிகரச் செயல்கள் புரிய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். இவ்வாறு வீழ்ச்சியுற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சீக்கியர்கள் காலாகாலத்திற்கு முன்னுதாரண்மாகத் திகழ்ந்தனர்.பிராமணர்கள் கட்டியெழுப்பிய மாரட்டியம் இதற்கு நேர் எதிரான சமூக அமைப்பாக இருந்தது. நம்முடைய நாடு பிராமணக் கொடுங் கோன்மையில் இருந்து தப்பிவிட்டதாகச் சொல்லக்கூடிய தருணம் வரவில்லை. இந்தியாவின் ஏனைய மக்களைப் போலவே சீக்கியர்களையும் அது இன்றளவும் அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கிறது.
(Reference : Chapter XIV - C.A.Natesan & Co., Guru Govind Page 22)

தினமனி,தினமலர், போன்ற ஊடகங்கள் சிறுபான்மையினரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் இயல்புக்கு மாறாக சிறுபன்மையினரை சித்தரிப்பதும் எதோ இயல்பானது எதார்த்தமானது என புரிந்துக் கொள்ளாதீர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணி இவைகளுக்கு உண்டு.