Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Monday, September 24, 2012

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள்.

ஊடக பலமும், ஆட்சி ஆதிகார பலமும் இருந்தால் குதிரையை கழுதையாக்க முடியும் கழுதையை குதிரையாக்க முடியும் என்பதற்கான நிகழ்கால ஆதாரம் தான் இந்த சீக்கிய சிறுபான்மை இனத்தினர். வீரஞ்செறிந்த சீக்கியர்களை அப்படியே எதிர்மறையாக காமெடி பீஸ்களாக மாற்றி கேலிக்குரிய சித்திரமாக உருமாற்றி “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் இந்த ஊடகங்களால் பரப்பப்பட்டு,வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). உண்மையில் இந்த சீக்கியர்கள் யார் வரலாற்று பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.
மாரட்டியத்தில் பிராமணப் புரோகிதர்களின் தலைமையில் ஓர் இந்து போரரசை நிறுவ  சிவாஜி முயற்சித்த காலத்தில் வடமேற்கு இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு தேசியப்புத்தெழுச்சி அங்கும்  துவங்கியது. முகலாயர்களின் ஆட்சியின்கீழ் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு துடித்துக்கொண்டிருந்தவர்களும்,சாதிய பாகுபாடுகள் மற்றும் விக்கிரக பூசைகளின் அடிமைத்தனத்திலும். அறியாமையிலும் வீரியமிழந்தவர்களுமாக அன்றாடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த, பாமரர்களான கிராமத்து மக்களும் மலைவாழ் மக்களும், தேச பக்தர்களாகவும் போராளிகளாகவும் உயிர்ப்பலியாளர்களாகவும் ஆக்கப்பட்டு ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் பணி அங்கு துவக்கப்பட்டிருந்தது.
பத்தாவது குருவான குருகோவிந்த் 1675-ல் தான் சீக்கியர்களின் தலைவாரனார். சிவாஜியைப் போல் மக்களுடைய அரசியல் விருப்பங்களை மறந்துவிட்டு வைதிகப் பழமைச்சக்திகளை ‘அஸ்திவாரம்’ போட்டு பலப்படுத்த குருகோவிந்த் முயற்சிக்கவில்லை. காலமெல்லாம் இந்தியாவின் உண்மையான அனைத்துத்தேசிய இயக்கங்களுடையவும் உயிரும் சக்தியுமாக விளங்கிய உண்மையான மகான்களெல்லாம் அறிவுறுத்திய மகத்தான உயர்ந்த கோட்பாடுகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தேசத்தை உருவாக்க குருகோவிந்த் முடிவெடுத்தார். கொள்கைகள், கூட்டுப்படுகொலைகள் மலிந்த 15,16,17 ஆகிய நூற்றாண்டுகளில் கூட இஸ்லாம் சமயத்திற்குச் சாதகமான செல்வாக்கு பலம் இல்லாமலில்லை.அக்காலத்தில் வடஇந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்களும் மகான்களும் இஸ்லாம் சமயத்தின் மகத்துவத்தால் உத்வேகம் பெற்றனர். பொருளற்ற சாதி வேற்றுமைகள் நாசகரமானவை என்றும். பூசை புனஸ்காரம் போன்ற சடங்குகளால் ஆன்மீகப் பலன் கிட்டாது என்றும் கடவுளைப் பல பெயர்களிலும் உருவங்களிலும் வழிபடுவது தவறானதும் மூடத்தனமானதும் என்றும் மக்கள் தீவிரமாக உணரத் துவங்கினர்.

இந்து சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளும் கெடுதல்களும் இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் நிறுவனராகும் நலவாய்ப்புப் பெற்றவர் குருநானக் ஆவார். வழிபடுவதற்கு கண்னுக்குத் தெரியாத ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகவும், வாய்மைக் குணம், தூய வாழ்க்கை, நற்செயல்கள், கடவுளிடத்தில் முழுமையான பக்தியும் அடைக்கலமும் ஆகியவைதான் மோட்சத்திற்கான பாதை என்று குருநானக் போதித்திருக்கிறார். இந்த உலகில் அமைதிக்கும் மறு உலகில் மோட்சத்திற்கும் சாமான்ய உலகியல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு போகத் தேவையில்லை என்று அவர் கூறினார். பல ஆண்டுகள் ஒரு தியாகியும் துறவியும் தவசியுமாக அலைந்து திரிந்த பிறகும் உண்மையான எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய குருநானக் மீண்டும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் உருவாக்கிய மத அடிப்படை சமுதாய,அரசியல் அடிப்படையிலான நியதிகளும் ஆட்சிமுறையும்தான் சீக்கியர்களை இன்றைக்கும் ஒரு ஒருங்கினைந்த சமுதாயமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜி பாவானிதேவியின் அருள் பெற்றவர் என்று கூறி புரோகிதர்கள் நம்பவைத்ததைப் போல், குருகோவிந்த் காளிதேவியின் அருள்பெற்றவர் என்று நம்பவைக்கவும் புரோகிதர்கள் முயற்சித்தனர். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில பிராமணர்களின் தலைமையில் ஒரு நரபலி மேற்கொண்டர்கள். நல்வாய்ப்பால் கள்ளங்கபடமற்றவரும் தைரியசாலியுமான குருகோவிந்த் இதற்கு எல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தன்னுடைய நாட்டையும் மக்களையும் விக்கிரக பூசைக்கும் புரோகிதத் தந்திரங்களுக்கும் அடிமைப்படுத்த அவர் மறுத்துவிட்டார். நான் உங்களைச் சாசுவதமான கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். வேறெதையும் திரும்பிப் பார்க்காமல் அந்தக் கடவுளிடம் மட்டும் அடைக்கலம் நாடுங்கள். அவனுடைய பாதுகாப்பில் வாழுங்கள் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் அவர் உயிர் நீத்தார்.

சீக்கியர்களின் முக்கியமான நம்பிக்கைப் பிரமாணங்கள்:

1. சாசுவதமான ஒரே கடவுளை மட்டும் நம்புங்கள்

2. விக்கிரகங்களையோ, சவக்கல்லறைகளையோ, மரங்களையோ, பூதங்களையோ வழிபடாதீர்கள். ஏழைகளுக்கு உதவுவதோடு, அகதிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.

3. சாதிகள், தொழில் போன்ற பாகுபாடுகளைப் பார்க்காமல் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களைப் போல் வாழ வேண்டும்.

4. ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு எப்போதும் அயுதங்களுடன் இருக்க வேண்டும். பகைவனுக்குப் பயந்து ஓடிவிடக் கூடாது. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

5. கற்பு நெறி, ஆன்மபலம், கட்டுப்பாடு, கொடையுள்ளம்,கடவுளுக்கும் நாட்டுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் குணம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட தூய வாழ்க்கையை மேற்க் கொள்ள வேண்டும்.

6. எல்லா விஷயங்களிலும், தலைமைக் குழுவான ‘கல்சா’ விடம்தான் உயரதிகாரம் இருக்க வேண்டும்.

7. பத்து குருமார்களின் போதனைகள் உள்ளிட்ட நூல்தான் மதப்பிரமாணம்.

8. ஐந்து சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு குழு வேறு யாரை வேண்டுமானாலும் சீக்கியர்களாக்கி குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லாவிதமான ஆன்மீக ஆசிகளுக்கும் உரிமையிருக்கிறது.

10. எல்லோரும் நம்பிக்கையுடன் உழைத்து வாழவேண்டும். சோம்பேறிகளுடனும், கெட்டவர்களுடனும் சேரக்கூடாது.

11. இந்தப் புதிய வாழ்க்கையில் நுழைபவர்கள் எல்லோரையும் சீக்கியர்கள் (சிங்கங்கள்) என்று அழைக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குள்ளயே 80,000 பேர் குருகோவிந்தின் ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். அவர்களுடைய எண்ணிக்கையும் நாளாவட்டத்தில் பெருகியது. இந்தச் சட்டங்கள் அமுலாகியபோது  சீக்கியர்களின் சங்கத்தில் சேர்ந்த ஏராளமான பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். பழைய அனாச்சாரங்களிலும் சாதி வேற்றுமைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து போனதை குருகோவிந்த் வரவேற்றார். அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைக்கிராம மக்களும்,மலைவாழ் மக்களும் சீக்கிய சங்கத்தில் சேர்க்கப்பட்டு நாட்டின் கெளரவமிக்க குடிமக்களாக உயர்த்தப்பட்டனர்.

“சீக்கியர்கள் ராஜபுத்திர வீரர்களைப் போல் தன்மானமும் துணிச்சலுமிக்க ஒரு  மக்கள்  சமுதாயமாக உருமாறினர்.ஒரே சமுதாயம்.ஒரே நம்பிக்கை,ஒரே சமூக வாழ்க்கை,ஒரே அரசியல் அபிலாஷைகள் போன்றவாற்றல் சீக்கியர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.இந்த நவீனமயமாக்கத்தின் ஆழ்ந்த பலன் உடனடியாக வெளிப்பட்டது. சீக்கியர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தும், ஒத்துழைத்தும், வாழுகின்ற துணிகரம் மிக்க மக்களாக உருவாயினர்.அக்கிரமங்களும் ஒடுக்குமுறைகளும் தென்பட்ட இடங்களிலெல்லாம் சீக்கியர்கள் பாய்ந்து சென்று வலிவற்ற எளியோர்களைப் பாதுகாத்தனர். உணவைப் பங்கிட்டு புசித்தும், தள்ளாமை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் தாங்கியும் தழுவியும் குளிப்பாட்டியும் துணிகளைத் துவைத்தளித்தும், மகிழ்ச்சியுடனும் அன்புடனும் ஒருவரை ஒருவர் வரவேற்றும், ஒரே உடன்பிறப்புக்களைப் போல் சீக்கியர்கள் வாழத் துவங்கினர்.”
குருகோவிந்த் அவர்கள் சீக்கியர்களை வலுவான ஒருங்கினைந்த சமுதாயமாக உருவாக்கினார். அடிமைத்தனத்தில் வீழ்ச்சியுற்றுக்கிடந்த மக்கள் சுதந்திரமும், ஜனநாயகமும்,நீதியும்,தியாக உணர்வும் பெற்றனர். முகலாயர்களின் சர்வாதிகாரத்தின் கீழும், இந்து மதத்தின் அவமானத்தைச் சுமந்தும் நிராதரவாக வாழ்ந்து கிடந்த மக்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வெளிப்பட ஆரம்பித்தன. சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், நாட்டுக்காகவும் வாழவும் உயிர்த்தியாகம் செய்யவும் மகத்தான உத்வேகம் பெற்றனர்.

அவர்களைச் சுற்றி காடென வளர்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்தும் அனாச்சாரங்களில் இருந்தும் அவர்கள் விடுதலையடைந்தனர். துணிகரச் செயல்கள் புரிய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். இவ்வாறு வீழ்ச்சியுற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சீக்கியர்கள் காலாகாலத்திற்கு முன்னுதாரண்மாகத் திகழ்ந்தனர்.பிராமணர்கள் கட்டியெழுப்பிய மாரட்டியம் இதற்கு நேர் எதிரான சமூக அமைப்பாக இருந்தது. நம்முடைய நாடு பிராமணக் கொடுங் கோன்மையில் இருந்து தப்பிவிட்டதாகச் சொல்லக்கூடிய தருணம் வரவில்லை. இந்தியாவின் ஏனைய மக்களைப் போலவே சீக்கியர்களையும் அது இன்றளவும் அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கிறது.
(Reference : Chapter XIV - C.A.Natesan & Co., Guru Govind Page 22)

தினமனி,தினமலர், போன்ற ஊடகங்கள் சிறுபான்மையினரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் இயல்புக்கு மாறாக சிறுபன்மையினரை சித்தரிப்பதும் எதோ இயல்பானது எதார்த்தமானது என புரிந்துக் கொள்ளாதீர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணி இவைகளுக்கு உண்டு.

Monday, March 26, 2012

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந்த கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்தும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விட்டும் மின்தடை ஏற்படுகிறது.

இதே போல் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்டத்திலும் இதே நிலை. இங்கெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஷிப்டுகள் நடத்தி வந்தவர்கள் தற்பொழுது ஒரு ஷிப்டு கூட நடத்த முடியாத நிலை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில் பல சிறுதொழில் நிறுவனங்களும், கடுமையான பதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொழிற்சாலைகளை தொடர்ந்து விவசாயிகளும் மின்தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்லூரிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு மின்சார வாரியம் 1994- 98 முதல் 2000- 01 வரையிலான காலங்களில் ஆண்டொன்றுக்கு சுமார் 350 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்துள்ளது. இடையில் 2000-01 இல் 4851 கோடி நஷ்டமும் மீண்டும் 20001- 2002 இல் 112.5 கோடி லாபமும் அடைந்துள்ளது. அதன் பிறகு 2002- 03 முதல் தொடர்ந்து 1110 கோடியில் ஆரம்பித்து 2010- 11ல் 11,733 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருங்காலத்தில் இந்த நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

31.3. 2011 முடிவு வரை மின்சார வாரியம் அடைந்துள்ள நஷ்டம் 53, 298 கோடி; அத்துடன் 2012-2013 ஆண்டுக்கான நஷ்டம் 14547 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரி கட்ட மின்சார வாரியம், மின்கட்டண உயர்வை பயனீட்டாளர்களின் தலையில் சுமத்தவதற்கான அனுமதி வேண்டி மின்சார ஆணையத்திடம் கோரியுள்ளது. 2001- 02 வரை மின்சார வாரியமும், அரசுமே மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அறிவித்து வந்துள்ளது. இந்த உயர்வு தொழிற்சாலைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே என்றாலும் வாரிய வருவாய் உபரியாகவே இருந்துள்ளது.

ஆனால் 2003 இலிருந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது புதிய மின்நிலையங்களை நிறுவுவது, மின்சார உற்பத்தி, விநியோகம், பயனீட்டுக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது, பற்றக்குறையைப் போக்க தனியாரிடமிருந்து மினசாரம் கொள்முதல் செய்வது, கொள்முதல் விலையை நிர்ணயிப்பது போன்ற அனைத்து நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சர்வ வல்லமை படைத்த நீதிமன்ற அதிகாரத்துடனான ஓர் அமைப்பாக உருவானது. அதன் பிறகுதான் வாரியத்தின் நஷ்டமும் செழித்து வளந்து இருப்பதைப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

எனவே மின்வாரியம் அடைந்த நஷ்டத்திற்கும் தற்பொது நிலவும் மின் பற்றாக்குறைக்கும் காரணம் ஆணையத்தின் செயல்பாடுகளே என்று உணர முடியும். 2001- 02 முதல்தான் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்கத் தொடங்கின. மின்சார வாரியத்தின் விலை ரூ.2.64 /யூனிட் இருக்கும் பொழுது தனியாரிடம் வாங்கிய மினசாரத்தின் விலை அதிகபட்சம் ரூ.10.48 ஆக உள்ளது. எனவே இதில் தனியார் கொள்ளை லாபம் அடைகின்றனர். சுமார் 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்காமலே ரூ.250 மானிய விலையில் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
 மின்வாரியத்தின் புதிய நிலையங்களை அமைப்பதற்கோ, பழைய நிலையங்களைச் சரிவரப்பராமரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, உற்பத்தி மின்கடத்தல்,விநியோகம் போன்ற நிலைகளில் ஏற்படும் மினசார இழப்பைச் சரி செய்யவோ ஆணையம் எந்த முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை.
மாறாக எப்பொழுதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தனியாரிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்வதும், தனியாரிடம் போகும் ஒப்பந்தத்தில் மின்சாரம் வழங்கினாலும் இல்லையென்றாலும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைத் தனியாருக்கு வாரியம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொள்முதல் விலையை உயர்த்துவதும் வழக்கமாக உள்ளது.

மின்வாரியம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயாமல் இழப்புகளைச் சரி செய்யவும் நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு 9741 கோடி மின்கட்டண உயர்வு செய்ய வேண்டி ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் அரசிடம் இருந்திருந்தால் பால் விலையையும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்திய போதே உயர்த்தியிருப்பார்கள்.

தற்பொழுது மின்சார ஆணையமும் இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பல்வேறு முக்கிய நகரங்களில் பயனீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கருத்து கேட்டு வருகிறது. தெருத் தெருவாக ஒவ்வொரு பயனீட்டாளரிடமும் கேட்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் ஒன்றிய அளவிலாவது கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். எனவே இது வேறும் கண் துடைப்பு நாடகம் தான் என்று தெரிகிறது.

எனவே ஆணையம் உடனடியாகத் தலையீட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரியத்துக்கு ஆணையிட வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு, வாரியம், ஆணையம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மக்கள் தலையில் மின் கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே இந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும்.

மின் வாரியம் மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் துயரைத் துடைப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் போர்க்கோலம் பூணுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி.

மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிர்வாகத்தைச் சீர்செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உற்பத்தி, மின்கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இழப்புகளைக் குறைக்க வேண்டும்.
தெரு விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்.

தனியார் மற்றும் அரசு சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

நன்றி: ஆ சுப்பிரமணி
(கட்டுரையாளர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் ஆவார்.)