Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

Sunday, January 27, 2013

பல்பு எரிகிறதா என்று பாருங்கள்


பங்காளிப் பகைவர்களை மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற உத்வேகத்தில் ஏகப்பட்ட விளக்குகளைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் விடுவது நம்ம ஊர்ப் பண்ணையார்கள் மட்டுமல்ல, பணக்கார உலகத்துக்கே பொதுவான குணம் இது என்கிறார், லீ பில்லிங்ஸ் (ஸீட் மாகசீன்).
நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் உயரத்திலிருந்து செயற்கைக் கோளின் விழி வழியே நம்மை நாமே பார்க்கும்போது, மனித நாகரீகத்தின் உன்னதமான சில தருணங்கள் தென்படுகின்றன : சீனப் பெருஞ் சுவர், எகிப்தின் பிரமிடுகள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மைலாப்பூர் ரயில் நிலையம். பச்சை- பழுப்பு செஸ் கட்டம் போல் வயல்கள்; அவற்றின் நடுவே நேராக ஓடும் நெடுஞ்சாலைகள்… இதனுடன் கூடவே பல மனித அநாகரீகங்களும் தென்படுகின்றன. புகை கக்கும் தொழிற்சாலை சிம்னிகள், ராட்சச வாய் கடித்த சமூசா போல் கல் குவாரி காண்ட்ராக்டர்களால் சேதப்பட்ட குன்றுகள் என்று பலவற்றை கூகிள் எர்த்தில் பார்க்க முடிகிறது.
தென்கொரியாவும், வடகொரியாவும்
அரை புத்திசாலி, அரை முட்டாள் இனம் ஒன்று இந்த கிரகத்தில் வாழ்வதற்கான அடையாளங்கள் அனைத்தும் சாட்டிலைட்டிலிருந்து தெரிகின்றன. ஆனால் அந்த செயற்கைக் கோள் அரை சுற்று சுற்றி இரவின் கருமைக்குள் போய்விட்டால், நம் நாகரீகத்துக்கு அடையாளமாக ஒன்றே ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிகிறது: மின்சார விளக்குகள்.
1962-ல் விண்வெளிக்குப் போன (சே !) முதல் அமெரிக்கர் ஜான் க்ளென். அவர் ஆஸ்திரேலியாவிற்கு மேலாகப் பறந்தபோது, பெர்த் நகரின் மக்கள் ஒரு பரிசோதனை செய்தார்கள். தங்கள் ஊரில் எல்லோரிடமும் சொல்லி வைத்து, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளக்குகளை ஆன் பண்ணி வைத்தார்கள். ஜான் இதை மேலிருந்து கவனித்து, வெளிச்சத் தீவு ஒன்று தெரிவதை உறுதிப்படுத்தினார்.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுவதற்கு, அவர்கள் இரவில் எரிக்கும் மின்சார லைட்களின் எண்ணிக்கை ஒரு முக்கியமான அளவுகோல். உதாரணமாக, தென் கொரியாவில் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றுச் செல்வ வளம் கொழிக்கிறது. இரவு நேரத்தில் சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஜோதி மயமான முந்திரிப் பருப்பு மாதிரி இருக்கிறது. ஆனால் பாவம், கம்யூனிஸ்ட் பிடியில் சிக்கிய வட கொரியாவோ இருளடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் வசிக்கும் வீடுகளில் மட்டும்தான் விளக்கு எரிகிறது.
இது ஃபோட்டோ; அன்றைய பொருளாதார நிலவரம். பல வருடங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் ஒரு நாடு முன்னேறியிருக்கிறதா, பின்னேறியிருக்கிறதா என்பதை ஊகிக்க முடியும். சோவியத் யூனியனின் சோசலிச ஏழ்மை நீங்கி, ரஷ்யா படிப்படியாக சுபிட்சம் பெற்ற வரலாறே சாட்டிலைட் படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற, இரவு நேர வெளிச்சங்களும் அதிகரிக்கின்றன.
இத்தனைக்கும் இந்தப் படங்கள் அமெரிக்க விமானப் படையின் வயசான சாட்டிலைட்கள் எடுத்தவை. ஒரு சதுர கிலோமீட்டருக்குக் குறைவான பொருட்கள் அதன் கண்ணுக்குத் தெரியாது !
ப்ரௌன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார வல்லுனர்கள் ஹெண்டர்ஸன், வேய்ல் என்பவர்கள், தங்கள் மாணவர்களை மாடு மாதிரி வேலை வாங்கி, கடந்த பல வருட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் : ஒரு நாட்டின் GDP என்னும் மொத்த உற்பத்தியும் மின்சார விளக்கு எரிப்பதும் நேரடியாகத் தொடர்பு உடையவை.
இதில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உபயோகமான புள்ளி விவரம் இருக்கிறது. ஏழை நாடுகளில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படாத இண்டஸ்ட்ரியில்தான் நடக்கின்றன; பில் போடாமல் டாக்ஸ் கட்டாமல் சந்துக்கு சந்து நடத்தப்படுகிற  கம்பெனிகள்தான் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. அரசாங்கப் புள்ளி விவரங்கள் எல்லாம் இருநூறு சதவீதம் தள்ளித்தான் காட்டும்! எனவே செயற்கைக்கோள் படங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார அளவீடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்
1992 முதல் 2003 வரை உள்ள தகவல்களைப் பார்த்தால், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்க அறிக்கைகள் யாவும் அழுது வடிந்தன; நாட்டின் ஜி.டி.பி சுருங்கிக் கொண்டே வருவதாகத் தெரிவித்தன. ஆனால் இரவு நேர சாட்டிலைட் படங்கள் சொல்லும் கதையே வேறு; காங்கோவின் பொருளாதாரம் உண்மையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தனையும் வரி கட்டாத நிழல் பொருளாதாரம் ! இதற்கு நேர் மாறாக, மியான்மர் சர்வாதிகாரிகளைக் கேட்டால், ‘இந்த சூ-சியைப் பிடித்து ஜெயிலில் போட்ட அன்றிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தால் நாளுக்கு நாள் நாடு இருளடைந்து வருவது தெரிகிறது.
கிராமப்புறத்து வயல்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் வருடங்களில், அருகிலுள்ள நகரங்களில் விளக்குகளின் பிரகாசமும் அதிகரிக்கிறது. விவசாயிகள் உபரி வருவாயில் ட்ராக்டர் முதல் டி.வி வரை வாங்குகிறார்கள். நைட் க்ளப்களிலும் மதுக் கடைகளிலும் விடிய விடியக் கூட்டம் இருக்கிறது. மாறாக, வான் பொய்த்து விவசாயி வாடினால் சிட்டியில் விளக்கணைந்து விடுகிறது !
பழங்கால மிலிட்டரி செயற்கைக் கோள்களை அவ்வளவாக நம்ப முடியாதுதான். மேகம் மறைப்பது, நிலா வெளிச்சம், மின்னல் என்று பலவிதத் தொந்தரவுகளால் சாட்டிலைட் படங்கள் மாசடைகின்றன. இருந்தும், புள்ளி விவரங்களே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை அளவிட ஏதோ ஒரு ஆதாரம் இருப்பது நல்லதுதானே? இதனால் நாஸாவிடம் கேட்டு இரவு நேர விளக்குகளை இன்னும் தெளிவாகப் படம் எடுப்பதற்காகவே ‘நைட்சாட்’ என்று ஒரு செயற்கைக் கோள் விடுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நைட்சாட் வந்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நம் ஊரின் கரண்ட் இல்லாமல் விளக்குகள் எப்படி ஒளிர்ந்து மங்குகின்றன என்று கவனிப்பது சுவாரசியமான பொழுது போக்காக இருக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)


Monday, March 26, 2012

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந்த கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்தும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விட்டும் மின்தடை ஏற்படுகிறது.

இதே போல் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்டத்திலும் இதே நிலை. இங்கெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஷிப்டுகள் நடத்தி வந்தவர்கள் தற்பொழுது ஒரு ஷிப்டு கூட நடத்த முடியாத நிலை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில் பல சிறுதொழில் நிறுவனங்களும், கடுமையான பதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொழிற்சாலைகளை தொடர்ந்து விவசாயிகளும் மின்தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்லூரிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு மின்சார வாரியம் 1994- 98 முதல் 2000- 01 வரையிலான காலங்களில் ஆண்டொன்றுக்கு சுமார் 350 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்துள்ளது. இடையில் 2000-01 இல் 4851 கோடி நஷ்டமும் மீண்டும் 20001- 2002 இல் 112.5 கோடி லாபமும் அடைந்துள்ளது. அதன் பிறகு 2002- 03 முதல் தொடர்ந்து 1110 கோடியில் ஆரம்பித்து 2010- 11ல் 11,733 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருங்காலத்தில் இந்த நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

31.3. 2011 முடிவு வரை மின்சார வாரியம் அடைந்துள்ள நஷ்டம் 53, 298 கோடி; அத்துடன் 2012-2013 ஆண்டுக்கான நஷ்டம் 14547 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரி கட்ட மின்சார வாரியம், மின்கட்டண உயர்வை பயனீட்டாளர்களின் தலையில் சுமத்தவதற்கான அனுமதி வேண்டி மின்சார ஆணையத்திடம் கோரியுள்ளது. 2001- 02 வரை மின்சார வாரியமும், அரசுமே மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அறிவித்து வந்துள்ளது. இந்த உயர்வு தொழிற்சாலைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே என்றாலும் வாரிய வருவாய் உபரியாகவே இருந்துள்ளது.

ஆனால் 2003 இலிருந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது புதிய மின்நிலையங்களை நிறுவுவது, மின்சார உற்பத்தி, விநியோகம், பயனீட்டுக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது, பற்றக்குறையைப் போக்க தனியாரிடமிருந்து மினசாரம் கொள்முதல் செய்வது, கொள்முதல் விலையை நிர்ணயிப்பது போன்ற அனைத்து நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சர்வ வல்லமை படைத்த நீதிமன்ற அதிகாரத்துடனான ஓர் அமைப்பாக உருவானது. அதன் பிறகுதான் வாரியத்தின் நஷ்டமும் செழித்து வளந்து இருப்பதைப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

எனவே மின்வாரியம் அடைந்த நஷ்டத்திற்கும் தற்பொது நிலவும் மின் பற்றாக்குறைக்கும் காரணம் ஆணையத்தின் செயல்பாடுகளே என்று உணர முடியும். 2001- 02 முதல்தான் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்கத் தொடங்கின. மின்சார வாரியத்தின் விலை ரூ.2.64 /யூனிட் இருக்கும் பொழுது தனியாரிடம் வாங்கிய மினசாரத்தின் விலை அதிகபட்சம் ரூ.10.48 ஆக உள்ளது. எனவே இதில் தனியார் கொள்ளை லாபம் அடைகின்றனர். சுமார் 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்காமலே ரூ.250 மானிய விலையில் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
 மின்வாரியத்தின் புதிய நிலையங்களை அமைப்பதற்கோ, பழைய நிலையங்களைச் சரிவரப்பராமரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, உற்பத்தி மின்கடத்தல்,விநியோகம் போன்ற நிலைகளில் ஏற்படும் மினசார இழப்பைச் சரி செய்யவோ ஆணையம் எந்த முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை.
மாறாக எப்பொழுதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தனியாரிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்வதும், தனியாரிடம் போகும் ஒப்பந்தத்தில் மின்சாரம் வழங்கினாலும் இல்லையென்றாலும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைத் தனியாருக்கு வாரியம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொள்முதல் விலையை உயர்த்துவதும் வழக்கமாக உள்ளது.

மின்வாரியம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயாமல் இழப்புகளைச் சரி செய்யவும் நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு 9741 கோடி மின்கட்டண உயர்வு செய்ய வேண்டி ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் அரசிடம் இருந்திருந்தால் பால் விலையையும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்திய போதே உயர்த்தியிருப்பார்கள்.

தற்பொழுது மின்சார ஆணையமும் இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பல்வேறு முக்கிய நகரங்களில் பயனீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கருத்து கேட்டு வருகிறது. தெருத் தெருவாக ஒவ்வொரு பயனீட்டாளரிடமும் கேட்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் ஒன்றிய அளவிலாவது கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். எனவே இது வேறும் கண் துடைப்பு நாடகம் தான் என்று தெரிகிறது.

எனவே ஆணையம் உடனடியாகத் தலையீட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரியத்துக்கு ஆணையிட வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு, வாரியம், ஆணையம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மக்கள் தலையில் மின் கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே இந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும்.

மின் வாரியம் மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் துயரைத் துடைப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் போர்க்கோலம் பூணுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி.

மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிர்வாகத்தைச் சீர்செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உற்பத்தி, மின்கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இழப்புகளைக் குறைக்க வேண்டும்.
தெரு விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்.

தனியார் மற்றும் அரசு சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

நன்றி: ஆ சுப்பிரமணி
(கட்டுரையாளர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் ஆவார்.)