Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, April 2, 2015

உமர் இப்னு கத்தாப் (ரலி) எளிமையான வல்லரசர்

உமர் இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலாம். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக் வயதில் இளையவரான உமறும் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அநேகமாக கி.பி. 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்.
துவக்கத்தில் உமறு, முஹம்மது நபி (சல்) அவர்களுடைய, புதிய மார்க்கத்திற்கும் கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். (தூய பவுல்-கிறிஸ்தவத்தில் சேர்ந்த நிகழ்ச்சிக்கு ஒப்பாகக் கருதத்தக்கது). முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராய் உமறு ஆகி அன்னாரின் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.
தமக்குப் பின்னால் யார், பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே முஹம்மது நபியவர்கள் 632 ஆம் ஆண்டில் காலமானார்கள். உடனேயே உமறு தயக்கம் எதுவுமின்றி முஹம்மது நபியவர்களில் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர் பதவி ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்தார். இதனால், பதவிப் போட்டி தவிர்க்கப்பட்டு, அபூபக்கர் முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முடிந்தது.
உமறு கி.பி. 634 இல் பதவியேற்று, 644 வரை பதவியில் இருந்தார். அந்த ஆண்டில் அவரை பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் குத்திவிட்டான். மரணப் படுக்கையில், உமறு தமக்குப் பின் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க அறுவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து (அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று) ஏற்பாடு செய்தார். இவ்வாறாக, மீண்டும் பதவிக்கான ஆயுதப் போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலீபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர்கள் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்கள்.
உமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான், அரபுகளுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவியேற்ற சிறிது காலத்தில், அப்போது பைஸாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி கண்டனர். அதே ஆண்டு டமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஜெரூசலேமும் சரணடைந்தது. கி.பி. 641 -க்குள், பாலஸ்தீன் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றி கொண்டு, இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். 639 இல் பைஸாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது.
உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. கி.பி. 641-க்குள் ஈராக் முழுமையும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது. அது மட்டுமல்ல அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுத்தது. நஹாவந்துப் போரில், கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644 இல் காலமானார். அப்போதே, கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டு விட்டது. உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்ரிக்காவை நோக்கி அவை முன்னேறின. உமறு அவர்களுடைய வெற்றிகளின் பரப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை நிரந்தரமாகவும் இருந்தன என்பதுதான். ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்றாலும், இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையாக அரபு மயமாகின என்பதுடன், இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.
தம்முடைய படைகள் வெற்றி கொண்ட இப்பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்வதற்குரிய தக்க திட்டங்களை உமறு வகுக்க வேண்டியதாயிற்று. அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகி கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் உமறு முடிவெடுத்தார். பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேருமாறு செய்யக்கூடாது என்றும் அன்னார் வழி செய்தார்கள். (இதிலிருந்து அரபிகளில் போர் வெற்றிகளுக்கு தேசிய விரிவாக்கம் நோக்கமாக இருந்ததே தவிர, அவை (மதத்தைப் பரப்பும்) புனிதப் போர் அல்ல என்பது மேற்கண்டவற்றிலிருந்து தெளிவாகும். எனினும், மத அம்சமும் இல்லாமலில்லை)
உமறுடைய சாதனைகள் நிச்சயமாக எவர் மனதிலும் ஆழ்ந்து பதிந்து நிற்கக் கூடியவை. முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு அன்னார் முக்கியமான காரண புருஷராக விளங்குகிறார்கள். அவர்களுடைய வேகமான வெற்றிகள் இல்லாதிருந்தால், இஸ்லாம் இன்றிருக்கும் அளவுக்குப் பரவியிருக்குமா என்பது சந்தேகம்தான். அன்றியும், அன்னார் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் பல இன்றும் அரபுத் தன்மையுடையதாகவே இருக்கின்றன. இவ்வளர்ச்சிகளை முக்கியமாக இயக்கி வைத்தவர் என்ற நிலையில் முஹம்மதுஅவர்களுக்குப் பெருமளவு புகழுண்டு. எனினும், உமறு அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிப்பது பெருந்தவறாகும். உமறு கண்ட வெற்றிகள் முஹம்மது நபி தந்த ஊக்கத்தினால் மட்டுமல்ல (இஸ்லாமிய ஆட்சியின்) ஓரளவு விரிவாக்கம நிச்சயமாக நிகழக்கூடியதுதான். ஆனால் உமறு அவர்களின் ஒளிமிக்க தலைமையின் கீழ் வெற்றி கண்ட அளவுக்கல்ல.
உமறு அவர்களின் தலைமையின் கீழ் அரபுகள் வெற்றி கொண்ட நிலங்கள் அவற்றின் பெரும் பரப்பையும் அவை நிலையாக அவர்கள் ஆட்சியில் இருந்துவரும் கால அளவையும் கொண்டு கணக்கிட்டால், அவர் சீசர், சார்லமான் ஆகியோரின் வெற்றிகளைவிட உறுதியான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை என்கிற the 100 (நூறு பேர்) புத்தகத்திலிருந்து நூலாசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவரின் கருத்துக்களை மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன் இப்பதிவில்.


Sunday, December 29, 2013

பொருளை விட்டு அருளைத் தேடியவர்: சஹாபாக்கள் வரலாறு.

நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:272)

சுஹைப் (ரலி) ரோமபுரியிலிருந்து மக்கா வந்து இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இறைத்தூதரை ஆழமாக நேசித்தவர். இறைநெறியை வாய்மையாகப் பின்பற்றியவர்.

நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தவுடன் சுஹைபிற்கு மக்காவில் இருப்பு கொள்ளவில்லை. மதீனா செல்வதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். ஒருநாள் மதீனா செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்ட செய்தி அறிந்த மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆவேசமடைந்து அவரைப் பின்தொடர்ந்து மடக்கி விடுகின்றனர்.

“ சுஹைபே! நீரோ வெளியூரிலிருந்து வந்தவர் உமது சொத்துக்கள் எல்லாம் எங்களது பணத்தால் உருவானவை. நீர் மதீனா செல்வதாயிருந்தால் உம்முடைய உடமைகளையும் செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என குறைஷியர் கூறியதைக் கேட்ட சுஹைப் (ரலி) அவர்கள் “ உங்களுக்கு எனது செல்வமும் சொத்துக்களும்தான் தேவை என்றால் அவற்றை இழப்பதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதைக் கேட்ட மக்காத்து இறைநிராகரிப்பாளர்கள் அதிர்ந்து போயினர். சுஹைபோ எவ்விதச் சலனமுமில்லாமல் மதீனா நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

மதீனா சென்றடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) சுஹைபை வரவேற்று பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:207)

“சுஹைபே! உமது வியாபாரம் வெற்றி அடைந்து விட்டது” என வாழ்த்து கூறி நபியவர்கள் வரவேற்றார்கள்.

இதே சுஹைப் அவர்கள், உமருக்கு அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக இமாமத் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஜனாசா தொழுகையையும் சுஹைபே முன்னின்று நடத்தினார்கள்.

இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் படிப்பினைகள்:

இறைவழியில் அனைத்தையும் துறப்பது நஷ்ட்டமல்ல: லாபம்தான் என்பதை உணர்ந்து செயல்படுத்திக் காட்டியவர் சுஹைப் (ரலி). தற்காலிக வாழ்வை விட நிரந்தரமான மறுமை வாழ்விற்கு முன்னுரிமை அளித்தவர்.

Sunday, November 17, 2013

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது.



பாகிஸ்தான் பிரிந்த நேரம். இந்திய முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு அசாதரணமான சூழ்நிலை நிலவிய தருணம். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் இன்றைக்கு காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருந்த அன்றைய சூழலில் முஸ்லிம்களிடையே இந்நாட்டின் மீதான நம்பிக்கையை எப்படி கொண்டு வருவது? 

ஒரு தலைவர் வேண்டும். அவர் நம்பிக்கை வளர்ப்பவராக அரவணைத்து செல்பவராக இருத்தல் வேண்டும். இந்த இடத்தை அருமையான நிரப்பினர் நேரு. 1948-ஆம் ஆண்டு, ஒரு இக்கட்டான சூழலில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் உரையாற்றுகின்றார் நேரு. தி ஹிந்து இதழ் தமிழில் வெளியிட்டிருந்த அந்த பேச்சு உண்மையில் கண்ணீர் மல்க செய்தது. என்னவொரு அருமையான பேச்சு அது!!! 

நேரு இல்லாத இந்தியா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதை இந்த பேச்சை படித்த பிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். நீங்களும் படியுங்கள், உங்கள் சந்ததியினருக்கும் படிக்க கொடுங்கள்..


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. 

இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும்.
சுமுகமாக உடன்படுவோம்...
சுமுகமாக மாறுபடுவோம்

உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். உங்களை யெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள் மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம், மாறுபடுவதற்காவது சுமுகமாக ஒப்புக்கொள்ள வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம், எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீள்திறன் கொண்டதே இளமை

உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நம் ஆன்மா அவமானப் படுத்தப்பட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்ட முதியவர்களுக்குப் பட்டதெல்லாம் போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களை யும் பார்த்ததற்குப் பிறகும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கொடுமை. நாமெல்லாம் சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருந்தால், அந்த வடுவை அகற்றுவதில் இப்போதே நம்மால் வெற்றிபெற முடியும்.
நொறுங்கிப்போன கனவுகள்; உறுதியான லட்சியங்கள்

என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடு வதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் பலம்

இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள். அவற்றின் வழியாக, தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள்; இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக் கூடிய அவளுடைய மாபெரும் திறன்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். 

இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய். காலம்காலமாகச் செழித்தோங்கிய அவளுடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால், பிற இடங்களிலிருந்து திரட்டி அதன் மூலம் தன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத அளவுக்குப் பலம் மிக்கவள் அவள். அதே போல் அந்த நீரோட்டங்களிலிருந்து தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள். மேலும், இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது.
நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?

நம் பாரம்பரியம்குறித்தும், அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை கொடுத்த நம் முன்னோர்கள்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இந்த வரலாறுகுறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்களும் இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்துகொண்டு, எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த வரலாறுகுறித்துப் பெருமை கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. 

தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை, நீங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வால் ஏன் நம்மைப் பிரிக்க வேண்டும்?
வரலாற்றோடு விளையாடுதல்

அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு நாட்டின் உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னைப் பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான், அதிக அளவுக்கு என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். 

வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட நாம் முயற்சித்ததுதான் நம்மைச் சாய்த்துவிட்ட பேரழிவுக்குக் காரணம். பூகோளத்துடனோ, வரலாற்றை உருவாக்கும் வலுவான போக்கு களுடனோ விளையாடுவதென்பது அவ்வளவு எளி தல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் நாம் உருவாக்கினோமென்றால், அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பாகிஸ்தான் நமக்கு ஏன் முக்கியம்?

ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற விதத்தில். இருந்தாலும், பெரும் எண்ணிக்கையி லான நபர்களின் உணர்வை அது அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நான் நம்புகிறேன். ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன். நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் கழுத்தை நெரித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப் பட்டிருக்கிறோம். மற்ற எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும், நமது இயல்பை நாம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறியும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை அடித்துக்கொள்ள நேரிடும். 

இந்த இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று ஒன்று கிடையவே கிடையாது. நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் நாம், பார்த்தும் பார்க்காமல் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது.

பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் அப்போது சம்மதித்திருக்க வேண்டும்? எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த நிலையில் தடுக்க முயல்வதைவிட, அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் அதனுடன் நெருக்கமான, நட்புணர்வு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால், தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன்.

பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான எந்த ஒரு ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது, பல நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இல்லாமல் ஆக்கிவிட்டு வரக் கூடாது.
ஒரே உலகத்தை நோக்கி…

நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் எல்லாருடைய மனதிலும் பாகிஸ்தான் பற்றி ஓடிக்கொண்டிருக்கும். அதுகுறித்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம். உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக்கூடும். எந்தத் திசையில் பார்ப்பது, என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எல்லா மதங்களையும் எல்லா விதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி னாலும் அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலானதும் மற்ற மார்க்கத்தினரையெல்லாம் புறவினத்தாராகக் கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான ஒன்றுதான். இருந்தாலும், இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் தாவிச் செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் நவீனச் சிந்தனைகளுக்கு சரிவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் பின்செல்வதற்கு சாத்தியமே இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். வலுவான போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் குழப்பங்களைக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி மதிப்பதாகத்தான் இருக்கும். ஆனால், தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை கொண்டிருக்குமே தவிர, கிணற்றுத் தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் அறிவுத்திறனில் நம்பிக்கை வைத்திருக்கும் தேசியமாக இருக்கும்; சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்க தேசியமாக இருக்கும்; சர்வதேசத் தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுக்கும் தேசியமாக இருக்கும். 

‘ஒரே உலகம்’என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் ‘உலக நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான்.
மதமும் கல்வியும்

இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். 

கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. இருந்தும், நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்கள், குறிப்பிட்ட விதத்தில் முடிவெடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்தும் என்பது உண்மைதான். நீங்களெல்லாம் உங்களை அந்நியர்களாகக் கருதாதீர்கள். எல்லாரையும் போலவே ரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே. இந்தியா வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.

உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உரிமைகள் தாமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வதற்கு உங்கள் எல்லாரையும் நான் வரவேற்கிறேன்; எல்லாரையும் போலவே நீங்களும் அதன் பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். துன்பங்களையும் துயரங்களை யும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்? 
   
1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை
தமிழில்: ஆசை
நன்றி : தி இந்து Published: November 14, 2013

Friday, July 19, 2013

நூல் அறிமுகம் : பாட நூல்களில் பாசிசம் வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.



பாசிசம் எப்போதும் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து இயங்குகிறது. 1930களில் இத்தாலியில் பாசிஸ்ட்டுகள் நடத்திய ’பலில்லா’ அவான் கார்டி பள்ளிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இவற்றை நேரில் சென்று பார்த்து வியந்து குறிப்புகள் எழுதியதும் இதற்காக முசோலினையை நேரடியாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பச்சை மனங்களில் விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்கள் இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடு.செத்துப்போனவர்களும் இறந்தகாலங்களும் இன்று வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. இந்துத்துவவாதிகளுக்கு வரலாறு ஒரு பாதுகாப்பான ஆயுதம்.

’நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். சின் குருஜி கோல்வால்கர். இந்துத்துவ பா.ஜ.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக அவர்கள் இந்தக் கருத்துக்களை தமது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் பயிற்றுவித்து வந்தனர். வித்யா பாரதி, சரஸ்வதி சிசு மந்திர் முதலான பெயர்களில் நாடெங்கும் சுமார் 60.000 பள்ளிகள் வரை அவர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின்னர் மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிய உடன் மாநில அரசுப் பள்ளிகளுக்கான பாடநூற்களை இந்த நோக்கில் உருவாக்கினர்.

பாடநூற்களைப் பரிசீலிப்பதற்காக Ncert யால் (கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழு ) நியமிக்கப்பட்ட தேசியக் குழு (National Steering Commitee of Text Books - 1996) இவர்களது பாடநூற்களைக் குறித்து கடுமையாக எச்சரித்தது. தேச பக்தி என்ற பெயரில் படிப்படியாகப் பச்சைக் குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைப்பதே இந்நூற்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது என்று மதிப்பீட்டுக் குழு இவர்களது பாடநூற்களைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தவுடன் தீவிர இந்துத்துவாதியும் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குக் குருபூஜை செய்பவருமான முரளி மனோகர் ஜோஷி வசம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. UGC (பல்கலைக் கழக மாணியக் குழு) ncert, cbse (உயர்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம்), ICHR (வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு) முதலான உயர்கல்வி அமைப்புகளில் இருந்த மதச்சார்பற்ற கல்வியாளர்களையும், வரலாற்றறிஞர்களையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் வகுப்பு வெறியர்களையும் ஜோஷி நியமித்தர்.

இந்த நூல்

வரலாற்றைக் கையிலெடுத்தார்கள்

இல்லாத குதிரைகளில் சவாரி செய்யும் இந்துத்துவம்

வரலாற்றின் பெயரால் முஸ்லிம் வெறுப்பு

மீண்டும் மீண்டும் கொலை செய்யப்படும் காந்தியடிகள்


இப்படி நான்கு தலைப்புகளில் இந்நூலில் மிக ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறார். பாடப்புத்தங்களில் இருக்கும் அபத்தமான வரலாற்று திரிபுகளை அறிய வாசிக்க வேண்டிய நூல்.

நூல் :
பாட நூல்களில் பாசிசம். வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு : சுயமரியாதை இயக்கம்

Tuesday, October 30, 2012

மாற்று திறனாளி : பார்வையற்ற போராளி.!

நபித்தோழர்கள் வரலாறு : அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.


உலகின் முதல் இஸ்லாமிய அரசு (யத்ரிப்) மதீனாவில் நிறுவப்பட்டது. தூய்மையான, நன்மை மிகுந்த, அமைதியான சமூகம் நிலைபெற்றது...!


பள்ளிவாசல், மார்க்கெட் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறுவிய அண்ணலார் (ஸல்) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த பொறுப்பை வழங்கினார்.

என்னதெரியுமா?


நாள்தோறும் ஐவேளையும் இறைவனின் புகழ்பாடி, வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே எனப் பிரகடனம் செய்து, சத்தியத்துக்குச் சான்று பகர்ந்து, இறைவனின் அடியார்களை இறையில்லத்தின் பக்கம், தொழுகையின் பக்கம், வெற்றியின் பக்கம் அழைக்கும் உன்னத பொறுப்பு அது...!


ஆம். முஅத்தின் என்கிற பெருமைமிக்க, சிறப்பான, கண்னியமான பொறுப்பு அது. அந்தப் பொறுப்பு தமக்கு கிடைக்காதா என பெரும் பெரும் தோழர்களும் ஏக்கத்துடன் இருந்த நேரத்தில் அந்த சிறப்புமிக்க பொறுப்பை அடிமையாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, ஏற்றம் பெற்ற பிலால் (ரலி) அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) வழங்கினார் என்பது நான் அனைவரும் அறிந்த உண்மை.
பிலால் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமித்து பார்வையற்றவர் மீதான ஏளனப் பார்வையை திருத்தியமைத்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களும் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களும் இந்த மகத்தான பணியை பகிர்ந்து கொண்ட பாங்கும் அலாதியானது. மதீனத்து மக்களை தொழுகைக்கு வருமாறு வெண்கலக் குரலில் அழைப்பார், பிலால் (ரலி). இறையச்சமும், நேசமும் ஏக்கமும் கலந்த அழைப்பு அது..!

இவ்வாறு தொழுகையாளிகள் சேர்ந்து விடும்போது, கணீர் குரலில் ‘இகாமத்’ சொல்வார், இப்னு உம்மு மத்தூம். கொஞ்சம் மனக்கண்ணில் அந்தக் காட்சியை இருத்திப் பாருங்கள்..!

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இமாமாக தொழுகைக்குத் தலைமையேற்று நிற்க, இந்த மாநிலம் கண்ட மகத்தான மனிதர்கள் அவருக்குப் பின்னே தொழுவதற்காக நிற்க, ‘தொழுகை நிலை பெறுகிறது’ என அறிவிக்கிறார் இப்னு உம்மு மக்தூம்...! ஆஹா! அதனை விட நற்பெறு, அருள்வளம் வேறு உண்டா?

சில சமயம் அப்துல்லாஹ் இப்னு மக்தூம் மக்களை தொழுகைக்கு அழைப்பார். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொல்வார்கள். ரமளானின் போது அவர்களிருவரும் சிறப்பு வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். ஒருவர் ஸஹர்  செய்வதற்காக நேரம் நெருங்கி விட்டதாக அறிவிப்பார். மற்றவர் ஃபஜர் தொழுகைக்கான பாங்கை விடுப்பார். பிலால் (ரலி) அவர்கள் மக்களை ஸஹருக்கு எழுப்புவார். அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அழைப்பு விடுப்பார்கள்.
முஹம்மது நபி (ஸல்) மதீனாவை விட்டு எங்காவது செல்லும் போது சில சமயம் மதீனாவில் தம்முடைய கலீஃபாவாக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமிப்பார்கள் இவ்வாறு பத்து முறை பெறுப்பேற்றுள்ளார்கள். மக்கத்து வெற்றியின் போதும் கூட அவர் மீது இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பத்ருப் போர் முடிந்ததும் அறப்போரில் ஈடுபடுவது குறித்து ஒரு வசனம் அருளப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விடுபவர்களை விட (காயிதீன்) போரில் ஈடுபடும் போராளிகள் (முஜாஹிதீன்) சிறந்தவர்கள் என அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது. இறைவழியில் போரிடுவதை ஊக்குவிப்பதற்காகவும், ஊற்சாகமூட்டுவதற்காகவும், வீட்டில் தங்கி விட்ட காயிதீன்களை உசுப்பி களத்தில் குதிக்கத் தூண்டும் விதத்திலும் அந்த வசனம் இருந்தது.

இந்த வசனத்தை கேட்டதும் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமின் முகம் வாடி விட்டது முஜாஹிதீன்களுக்கு கிடைக்கும் உயர் சிறப்பு தமக்குக் கிடைக்காமல் போகின்றதே என அவர் மனம் வெதும்பினார். உடனே நபிகள் நாயகத்திடம் விரைந்தார் : “இறைத்தூதரே! என்னால் போரிட முடியும் எனில், நான் நிச்சயமாக போர் புரிவேனே...! என்றார். தம்மைப் போல பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் போர்களில் கலந்து கொள்ள இயலாதவர்களின் நிலை என்ன? அது குறித்து தெளிவுபடுத்தி வசனம் அருளுமாறு இறைவனிடம் மன்றாடினார்.

இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கிற வகையில் சில வசனங்கள் அருளப்பட்டது.அது பின்வருமாறு

ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.(திருக்குர்ஆன் 4:95)

அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்கும் அறப்போர் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் துளிர்த்தெழுந்தது. இறைவனிடம் மன்றாடி அறப்போர் பற்றிய வசனத்தில் விதிவிலக்கு பெறத்தான் செய்தார். என்றாலும் அவருக்குள்  அறப்போர் மீதான ஆசை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. பார்வையற்றவரான அவரால் போர்க்களத்தில் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கேள்வியும் அவருக்குள் திரும்பத் திரும்ப எழத்தான் செய்தது.

என்றாலும் தோழர்கள் எல்லாரும் போர் புரியப் போகும் போது தாம் மட்டும் வீட்டில் தங்கி இருப்பதா? என்கிற கேள்வி அவரை வாட்டியது. மகத்தான நிகழ்வுகள் கண் முன்னால் அரங்கேறும் போது, வரலாற்றில் மைல்கற்களாக இருக்கக் கூடிய தருணங்கள் கண் முன்னாலேயே கழியும் போது அவரால் வாளாயிருக்க முடியவில்லை.

யோசித்து யோசித்து ஒரு தீர்வு கண்டார், அவர். இனி ஒரு போரிலிருந்தும் விலகி இருக்க மாட்டேன் என உறுதி பூண்டு அண்ணலாரிடம் ஒடோடிச் சென்றார். “ என்னை இரண்டு வரிசைகளுக்கு நடுவே நிறுத்தி, என்னிடம் கொடியை கொடுத்து விடுங்கள். நான் நம் அணியின் கொடியை உயர்த்திப் பிடிப்பேன். பாதுகாப்பேன். எனக்கு பார்வை கிடையாது என்பதால் நான் எங்கும் ஓடிப் போய் விட மாட்டேன்” என்பார்.

ஹிஜ்ரி பதினான்காம் ஆண்டில் பாரசீகர்கள் மீது மிகப்பெரும் போர் தொடுக்க முடிவு செய்கிறார், உமர் (ரலி). இதையோட்டி ஆளுநர்களுக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்புகின்றார். உமர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று சாரி சாரியாக நாலா புறங்களிலிருந்தும் மக்கள் மதீனாவில் குவியத் தொடங்கினார்கள். அறப்போர் செய்கின்ற ஆர்வத்துடன்,ஷஹீத் ஆகிற ஆசையுடன் அணி திரண்ட போராளிகளை வரிசையில் ஒரு பார்வையற்ற முஜாஹிதும் இருந்தார். அவர்தான் அப்துல்லாஹ் இப்னு மக்தூம்.

இந்தப் படைக்குத் தளபதியாக சஆத்இப்னு அபி வக்காஸ் அவர்களை நியமித்தார், உமர் (ரலி). படையினருக்கு முக்கிய வழிகாட்டுதல்களைக் கொடுத்து, வாழ்த்தி, பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.

 இந்தப் படை காதிஸியாவை சென்றடைந்த போது போர்க்கவச ஆடை அணிந்து மிடுக்காகவும் எடுப்பாகவும் தெரிந்தார், அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம். முஸ்லிம்களின் கொடியை கையில் ஏந்திச் செல்வேன். எந்நிலையிலும் அதனை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன்  என் சபதம் செய்திருந்தார், இப்னு உம்மு மக்தூம்.

போர்க்களத்தில் இரண்டு அணிகளும் மோதின. மூன்று நாட்கள் தொடர்ந்து போர் நடந்தது. முஸ்லிம்கள் பங்கேற்ற போர்களிலேயே மிகவும் கடினமான,தீவிரமான போர்களில் ஒன்றாக அது வரலாற்றில் இடம் பெற்றது. மூன்றாவது நாள் முடிவதற்குள் முஸ்லிம்கள் வெற்றிப் பெற்று விட்டனர். அன்றைய வல்லரசு வீழ்ந்தது. ராணுவ பலம் வாய்ந்ததாக போற்றப்பட்ட பராசீக அரசு சரிந்தது.

இதற்கு விலையாக நூற்றுக்கணக்கான போராளிகள் இன்னுயிர் ஈந்து தியாகம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவராக இப்னு உம்மு மக்தூம். போர்க்களத்தில் கைகளில் இஸ்லாமியக் கொடியை உறுதியாகப் பற்றிப் பிடித்தவாறு கிடந்த அவரது முகத்தில் புன்னகை...!

சுவனத்து தோட்டங்களையும், சலசலவேன ஓடுகிற நதிகளையும் கண்டதால் மலர்ந்த புன்னகையோ...!

Thursday, August 16, 2012

அந்த அரேபிய வீரம்...!

வரலாற்று புத்தகங்களை படிக்கும்போது சில நிகழ்ச்சிகள் மனதை பற்றிக் கொள்ளும் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த குறிப்பிட்ட சாதனையாளர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் பதிவது இயல்பானது. ஆனால் சில நேரங்களில் வரலாற்று சம்பவங்களில் ஆள் யார் என்றே தெரியாது அந்த பாத்திரத்திற்கு பெயரும் இருக்காது ஆனால் மனதில் பதிந்து விடும் அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சம்பவம் தான் இந்த பதிவு.


புகழ்பெற்ற போர்வீரரும், கவிஞருமான  ‘துரைத் இப்னுல்-ஸிம்மா முதுமை அடைந்து  இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு முஸ்லிம் காலம் தொடங்கிய பின் வரை வாழ்ந்தவர். இளமைக்காலத்தில் ஒரு நாள் காட்டரபிகள் வழக்க கொள்ளைத் தக்குதலுக்குத் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தார். மொட்டையான ஹிஜாஸ் மலைக் கணவாயின் முகட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது கிழே திறந்த பள்ளத்தாக்கில் ஒரு குதிரை வீரன் கையில் ஈட்டியுடன் ஓட்டகத்தின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். ஒட்டகத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். துரைத் தமது ஆட்களில் ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் குதிரை வீரனிடம் விரைந்து சென்று, தக்குதல் கூட்டம் வருவதாகவும், பெண்ணையும் ஒட்டகத்தையும் விட்டு விட்டு ஓடிப்போய் உயிர் பிழைக்குமாறும் உரக்கக் கூறுமாறு சொன்னார் அவ்வாறே அந்த ஆள் தமது குதிரையைச் செலுத்திக் கூவிக்கொண்டு சென்றான். குதிரைவீரன் அமைதியாக ஒட்டகக் கயிற்றைப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு, குதிரையைத் திருப்பி, குதிரையில் வருபவனை நோக்கித் தாவிச் சென்று,ஈட்டியை அவன் நேஞ்சில் பாய்ச்சிக் குதிரையிலிருந்து கீழே வீழ்த்தினான். பின் திரும்பிச் சென்று ஒட்டகக்கயிற்றைத் தன் கையில் வாங்கிக்கொள்ள, இருவரும் ஏதும் நடவாதது போல் தொடர்ந்து சென்றார்கள்.



துரைத் கணவாய் வழியே இறங்கித் தமது குதிரையைச் செலுத்திச் சென்றபோது அந்தப் பயணிகள் இருவரும் அவர் பார்வையில் படவில்லை. ஆனால் தாம் அனுப்பிய வீரன் திரும்பி வராததால் மற்றொரு வீரனை அனுப்பினார். அவனையும் அந்தக் குதிரைவீரன் முன் போலவே குத்தித் தள்ளினான். மூன்றாவதாக ஒரு வீரனுக்கும் இதே கதி நேர்ந்தது. ஆனால், இந்த முறை குதிரை வீரனின் ஈட்டி எதிரி வீரனின் உடலில் பாய்ந்தபோது ஒடிந்துபோயிற்று. கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் குதிரைவீரன் மீண்டும் பெண் அமர்ந்துள்ள ஒட்டகக்கயிற்றைப் பிடித்துக் கொள்ள அவர்கள் பயணம் தொடர்ந்தது.


அருகருகே அவர்கள் சவாரி செய்தபோது குதிரைவீரன் பின்வரும் கவிதையைப் பெண்ணிடம் கூறினான்:

அமைதியாகச் சவாரிசெய், என் அழகுப் பெண்ணே
பாதுகாப்பாய் பத்திரமாய் அமைதியாய்.
நம்பிக்கை,மற்றும் மலர்ச்சிகொள்
அச்சம் எதுவும் வேண்டாம்.
எதிரியிடமிருந்து நான் ஓட முடியாது
அவன் என் ஆயுதத்தைச் சுவைக்கும் வரை.
என் தாக்குதலின் வேகத்தைக் காண்பான்
யாரும் உனக்கு தீங்கிழைக்க வந்தால்.


மூன்று வீரர்களும் திரும்பி வராததைக் கண்டு வியப்படைந்த துரைத் தாமே குதிரையில் விரைந்தார். மூன்று வீரர்களின் உடல்களையும் வழியில் அடுத்தடுத்துக் கண்டார். தமக்கு முன்னே அந்தக் குதிரைவீரன் ஆயுதமற்றவனாய், நடைவேகத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு,பெண் அமர்ந்துள்ள ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து நடத்திச் செல்வதைக் கண்டார்.


குதிரைவீரன் தன் எதிரியே என்றாலும் அவனது அஞ்சா நெஞ்சம் கண்டு வியப்பு நிறைந்து துரைத் அவனருகே குதிரையைச் செலுத்தினார். ‘வீரனே, உன்னைப் போன்ற ஒருவனுக்கு மரணத்தைத் தரக்கூடாது. ஆனால் என் ஆட்கள் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ நிராயுதபாணியாக இருக்கிறாய். என் ஈட்டியைப் பெற்றுக் கொள், நண்பனே. என் ஆட்கள் உன்னைத் தொடராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்,’ என்று அவர் கூறினார்.

(அக்கால காட்டரபிகள் (பதூயின்கள்) வீரம்,தீரம்,கெளரவம் போன்ற சில பண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதைக் காட்ட,க்ளப் பாஷா தம்முடைய ‘முஹம்மது நபி (ஸல்) வாழ்வும் காலநிலையும்’ (த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் முஹம்மத்) என்ற தமது புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி)

Wednesday, March 21, 2012

’மானி’ மதம் தோன்றி மறைந்த விதம்.


மூன்றாம்(216- 276) நூற்றாண்டைச் சேர்ந்த மதம் மானி (manichaeism) இதனை நிறுவியவர் மானி என்பவர்.இந்த மதம் அடையாளமில்லாமல் இன்று அற்று போய் விட்டாலும்.நான்காம் நூற்றாண்டுகளில் அது செல்வாக்கின் உச்சகட்டத்தை எட்டி கிறிஸ்தவத்திற்கு ஒரு போட்டி மதமாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய இந்த மதம் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் வரையிலும் பரவியிருந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இம்மதம் நிலைத்திருந்தது. மானி தோற்றுவித்த இந்த மதம்,முந்தைய மதங்களின் பலவற்றினுடைய கொள்கைகளின் கூட்டிணைப்பாக விளங்கியது. சொராஸ்டர் (Zoroaster),புத்தர், இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்மையான அருட்போதர்கள் என்று மானி கருதினார். எனினும் அவர்களில் எவரையும் விட மிக முழுமையான அருள் வெளிபாட்டுச் செய்தி (Revelation) தமக்குப் பின்னாளில் கிடைத்தாக அவர் கூறிக் கொண்டார்.

மானியின் மதத்தில் புத்த,கிறித்தவ சமய அம்சங்களும் அடங்கியிருந்த போதிலும், அந்த கோட்பாடு (மேலை நாடுகளின்) கருத்தை கவரும் முறையில் இருந்தது. அக்கோட்பாடு நன்மை, தீமை என்ற இரு பொருள்வாதக் கோட்பாட்டைக் கொண்ட பார்சி சமய துவைத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர்கள் என்ற அடிப்படையை கொண்டது.

‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் மானிக்கு உடன்பாடில்லை “இந்த உலகை ஒரே கடவுள் ஆளவில்லை. இருவேறு சக்திகளுக்கிடையிலான இடைவிடாத போராட்டத்தின் களமாகவே உலகம் விளங்கிறது.இந்த இரு சக்திகளில் ஒன்று தீய நேறி, இதனை இருளாகவும் பருப்பொருளாகவும் மானி உருவகித்துக் காட்டுகிறார். இன்னொன்று நன்னெறி இதனை ஒளியாகவும் ஆன்மாகவும் அவர் காட்டுகிறார்.

மானிக்கே சமய இறைமையியலை விரித்துரைத்தால் பதிவு ரொம்ப நீளமாக போய் விடும். எனினும் மனிதனின் ஆன்மாவை நன்னெறியோடும், அவனது உடலை தீயநெறியோடும் அவர்கள் இணைத்துக் கண்டதன் விளைவாக இனப் பெருக்கத்திற்காகக் கூட பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மானிக்கே மதவாதிகள் நம்பினார்கள். புலாலுண்ணுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் அது தடை செய்கிறது.

இத்தகைய கடுமையான கட்டுத் திட்டங்களைக் கொண்ட ஒரு கோட்பாடு, செல்வாக்குப் பெறுவதும்,பெருமளவு மக்களின் ஆதரவைப் பெறுவதும் கடினம் என உங்களுக்கு எண்ணத் தோன்றுகிறதா?. ஆனால் மானிக்கே மத திருச்சபையின் பாமர உறுப்பினர்களுக்கு இந்த கடுமையான தடைகள் உரியன அல்ல. அவை வீடு பேற்றுக் கெனத் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு சிறிய உயர் குழுவினர்க்கு (The Elect) மட்டுமே அவை உரியவை.
‘கேட்பவர்கள்’ (The Hearers) என்றழைக்கப்படும் பாமர உறுப்பினர்கள் மனைவியரை (அல்லது ஆசை நாயகிகளை) வைத்துக் கொள்ளலாம்; குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்தலாம். புலால் உண்ணலாம்; மது அருந்தலாம். அவர்கள் பல்வேறு மத சடங்குகளை அனுசரிக்க வேண்டும். “உயர் குழு” வினை ஆதரிக்க அவர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்குச் சுமத்தப்பட்ட அறநெறிகள் அளவுக்கு மீறிக் கடுமையானவை அல்ல. இதில் மானிக்கே மதத்தின் ஒரு கிளைப் பிரிவினராகிய கேத்தாரி (Cathari) போன்றவர்கள் பாமரர்களுக்கு வாழக்கையில் மேலும் பல சுதந்திரங்களையும் அளித்தனர்.

மானி 216 ஆம் ஆண்டில் மெசப்பொட்டேமியாவில் பிறந்தார். அப்போது அந்த நாடு பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கிறித்துவக் கோட்பாட்டின் தீவிரச் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த ஒரு சிறிய சமயக் கிளையின் பின்னணியில் மானி வளர்ந்தார். அவருக்கு 12 ஆம் வயதிலேயே மத வெளிப்பாடுகள் தோன்றியதாகக் கூறினார். இருபதாம் வயதிலேயே அவர் தமது புதிய சமயத்தைப் போதிக்கலானார். அவரது சொந்த நாட்டில் முதலில் அவர் வெற்றி பெறவில்லை. அதனால் அவர் வடமேற்கு இந்தியாவுக்குச் சென்றார். அங்கு ஓர் உள்நாட்டு அரசரைத் தம் மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிக் கண்டார்.

242 ஆம் ஆண்டில் மானி பாரசீகம் திரும்பினார்.அங்கு முதலாம் ஷாப்பூர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஷாப்பூர் மானிக்கே சமயத்திற்கு மாறவில்லையாயினும், அவருக்கு மானியிடம் ம்திப்பு ஏற்பட்டது. அதனால் பாரசீகப் பேரரசு முழுவதிலும் அவரது புதிய மதத்தை போதிப்பதற்கு அரசர் அனுமதியளித்தார்.அடுத்த 30 ஆண்டுகள் வரை, முதலாம் ஷாப்பூர், முதலாம் ஹார்மிஸ்டு ஆகியோரின் ஆட்சியின் கீழ் மானி  தமது மதத்தை தங்கு தடையின்றி போதித்தார்.

அவருக்கு ஏராளமான ஆதரவளர்கள் தோன்றினர்.எனினும் மானியின் வெற்றி கண்டு சஸ்ஸானிடு அரசுகளின் ஆட்சியில் அரசமதமாக அதிகாரத்திலிருந்த பார்சி மதக் குருமார்கள் பொறமை கொண்டனர். முதலாம் பஹ்ராம் அரசர் 276 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடம் ஏறியதும் மானி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். 26 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த பிறகு அவர் இறந்தார். 

மானி தம் வாழ்நாளில் ஏராளமான நூல்கள் எழுதினார். ஒரு நூலை பாரசீக மொழியிலும் மற்ற நூல்களை ஒரு செமிட்டிக் மொழியாகிய சிரியக் (Syriac) மொழியிலும் எழுதினார்.
                                             சிரியக் மொழியின் உயிர் எழுத்துக்கள்

அந்த நூல்கள் மானிக்கே மதத்தின் வேத நூல்களாக மதிக்கப்பட்டன. மானிக்கே மதம் அற்றுப் போனதும், இந்த வேத நூல்களும் மறைந்து போயின.ஆயினும் இவற்றுள் சில இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டன.
                                   கண்டெடுக்கப்பட்ட சிதைந்த மானி மத வேதநூல்கள்
மானியின் ஆயூட் காலத்திலேயே அவரது மதத்திற்கு இந்தியா முதல் ஐரோப்பா வரையில் ஆதரவாளர்கள் ஏற்பட்டனர்.அவர் இறந்த பின்னரும் இந்த மதம் தொடர்ந்து வளர்ந்து மேற்கே ஸ்பேயின் தொடங்கி கிழக்கே சீனா வரையிலும் பரவியது. கிறிஸ்துவ மதம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாக ஆனதும், மனிக்கே சமயம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. 600 ஆம் ஆண்டு வாக்கில்,மேலை நாடுகளிலிருந்து மானிக்கே மதம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டது.

ஆனால் மொசப்பொட்டேமியாவிலும், ஈரானிலும் மானிக்கே மதம் தொடர்ந்து  வலுவாகவே இருந்தது. அங்கிருந்து அது மத்திய ஆசியாவுக்கும், துருக்கிஸ்தானுக்கும் மேற்குச் சீனாவுக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில், மேற்குச் சீனாவின் ஒரு கனிசமான பகுதியையும், மங்கோலியாவையும் ஆண்டு வந்த “ உய்கூர்” களின் (Uighurs) அரசு மதமாகவும் ஆகியது. இந்த மதம் சீனாவிலும் நுழைந்து, கடற்கரை வரைப் பரவி,அங்கிருந்து தைவான் தீவையும் எட்டியது . ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் மறுமலர்ச்சியடைந்து தோன்றியதும்,அதன் வலிமையான கொள்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மானிக்கே மதம் வீழ்ச்சியடையலாயிற்று.
ஒன்பாதம் நூற்றாண்டிலிருந்து மத்திய ஆசியாவிலும் இந்த மதம் வீழ்ச்சியடையலாயிற்று. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளுக்குப் பிறகு அங்கும் அது அடியோடு அழிந்தது.

இதற்கிடையில், ஐரோப்பாவில் மானிக்கே மதத்திலிருந்து தோன்றி பல்வேறு கிளை மதங்கள் எழுந்தன. அதில் கிழக்கு ஐரோப்பியக் கிளை மதங்களில் மிக முக்கியமானது கேத்தாரி (Cathare) என்ற பிரிவாகும். இது ஃபிரெஞ்சு நகராகிய ஆல்பியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனால் இந்தக் கிளை மதத்தினரை ஆல்ஜென்சியர்கள்(Albigensians) என்றும் அழைத்தனர். 12 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறிப்பாகத் தெற்கு ஃபிரான்சில் இந்தப் பிரிவு பெருமளவு பரவியது.
ஆல்பிஜென்சியர்களின் கோட்பாடு மானிக்கே மதக் கோட்பாட்டை பெரிதும் ஒத்திருந்தபோதிலும் அவர்கள் தங்களை கிறித்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கிருஸ்தவ மரபுத் திருசபையினர் அவ்ர்களைப் புறச் சமயத்தினர் என ஒதுக்கினர். இறுதியாக மத்திய காலத்துப் போப்பாண்டவர்களிலேயே சமயச் சகிப்புணர்வு மிகக் குறைந்தவர் எனக் கருதப்பட்ட மூன்றாம் இன்னசன்ட் போப்பாண்டவர் (Pope Innocent-111) இந்த மதத்தினருக்கு எதிராக சிலுவைப்போர் தொடுக்கும்படி ஆணையிட்டார்.

1209 ஆம் ஆண்டில், இந்த சிலுவைப்போர் தொடங்கியது. 1244 ஆம் ஆண்டில் பயங்கர உயிர்ப் பலிக்கும்,தென் ஃபிரான்சின் பெரும்பகுதியின் நாசத்திற்கும் பிறகு ஆல்பிஜென்சியர்கள் அடியோடு ஓடுக்கப்பட்டனர். எனினும், கோத்தாரி மதம் இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.
சிலுவைப் போரில் மானி மதத்தினர் கொல்லப்படுகிறார்கள் (பழைய ஓவியம்)
இன்றைய தலைமுறைக்கு மானி மதம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது. ஆனால் அழிந்த வரலாறுகளை தெரிந்துக் கொள்வதின் மூலம் இன்றைய தலைமுறையினர்க்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.

ஆதரங்கள்
http://en.wikipedia.org/wiki/Mani_(prophet)
http://looklex.com/e.o/mani.htm
Iranian Religions: Manichaeism