Tuesday, September 10, 2013

உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிப் பகுதிகள்
ஒரு நண்பர் அல்லது உறவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால். அவரை பகைத்துக் கொள்ளாமலும். முடிந்தவரை தாஜா செய்து மிகைப்படுத்தி புகழ்ந்து தமது சொந்த காரியங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இன்றைய மக்களை பார்க்கிறோம். ஆனால் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் இத்தகைய பண்பு சுத்தமாக இருக்கவிலை. எனென்றால் அவர்கள் சுத்தமான சத்தியவான்களாக இருந்தார்கள். நேர்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழிக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள்.

“மார்க்கம் என்பது நஸீஹத் - வாய்மையும் நலம் நாடுவதுமாகும்” இவ்வாறு மூன்று முறை அண்ணலார் கூறினார்கள். “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது?” என்று கேட்டோம். அதற்கு அண்ணலார் “ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், அவனது திருமறைக்கும், முஸ்லிம்களின் சமூக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: தமீமுத் தாரீ (ரலி) நூல்: முஸ்லிம் )

உமர் (ரலி) அவர்கள் கிலாஃபத் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். கலீஃபாவின் தோழர்களான அபூ உபைதா (ரலி), முஆத்பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக உமர் (ரலி)  அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். ஆட்சியில் அமர்ந்திருக்கும் உமர் (ரலி) மீது நல்லெண்ணமும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்குத் துணைபோக வேண்டும் என்ற ஆர்வமும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. அக்கடிதம் பின்வருமாறு:

“அபூ உபைதாபின் ஜர்ராஹ், முஆத்பின் ஜபல் ஆகியோரின் சார்பாக உமர் (ரலி) அவர்களுக்கு எழுதும் கடிதம். தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை சீர்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவராக இருந்தீர்கள் என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதோ தங்களில் தோள்களில் ஏராளச் சுமைகள்...! முழு சமுதாயத்திற்கும் பயிற்சி அளிக்கும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள்; சாதாரண பாமர மக்களும் வருவார்கள்; பகைவர்களும் வருவார்கள்; நண்பர்களும் வருவார்கள். எல்லோருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே தங்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்!

மக்கள் அனைவரும் வல்ல இறைவனின் முன்நிற்கும் நாளை - இதயங்கள் அஞ்சி நடுங்கும் நாளை நினைத்துப் பாருங்கள்! இறையாணையைத் தவிர வேறு எந்த வாதமும் அங்கே துணைவராது. அந்நாளில் அந்த வல்ல இறைவனின் கருணையை எதிர்பார்த்த வண்ணமும், கிடைக்கப்போகும் அவனது தண்டனைக்கு அஞ்சிய வண்ணமும் மக்கள் இருப்பார்கள்.

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” எனும் நபிமொழியைக் கேட்டுள்ளோம்.

இந்த கடிதம் முற்றிலும் தங்களின் நன்மையைக் கருதியே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இதனை சரியான கோணத்தில் பார்ப்பீர்கள்; தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.”

இப்படிக்கு
அபூஉபைதா, முஆத்பின் ஜபல்

இந்தக் கடிதத்திற்கு உமர் (ரலி) அவர்கள் பின்வரும் பதிலளித்தார்கள்:

“ அன்புத் தோழர்களே! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. நான்  இதற்கு முன் என் தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்வதில் அக்கறை உள்ளவனாக இருந்தேன் என்றும், இப்பொழுது சமுதாயப் பொறுப்புகள் என் தலையில் விழுந்துள்ளன என்றும்; உயர் தகுதி கொண்டவர்கள், சாதாரண மக்கள், நண்பர்கள் - பகைவர்கள் உட்பட என் அவைக்கு வரும் எல்லோரும் நீதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளீர்கள். மேலும் இப்படிப்பட்ட நிலையில் என் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.

அருமைத் தோழர்களே! நான் இதற்கு என்ன பதில் சொல்வது? உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே! எதேனும் வலிமையோ ஆற்றலோ கிடைக்குமெனில் அதை எனக்கு அந்த ஏக இறைவன்தான் அருள வேண்டும்.

இறுதிநாளைப்பற்றியும் எச்சரித்துள்ளீர்கள். முன்னோர்கள் எச்சரிக்கப்பட்டதைப் போல உங்கள் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இரவும் பகலும் மாறி மாறி வருவதன் மூலம் அந்த இறுதித் தீர்ப்புநாள் வெகுவிரைவாக வந்து கொண்டிருக்கிறது. அது தூரமாக இருந்தவற்றை நெருக்கமாக்குகிறது; நவீனமான ஒவ்வொன்றையும் பழையதாக்குகிறது; முன்னறிப்புச் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் அது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. உலகம் முடிந்து மறுமை தோன்றும் அப்பொழுது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர்; அல்லது நரகம் புகுவர்!

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” என்ற நபிமொழியை முன்னறிவிப்பை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது உங்களைக் குறிக்கவில்லை என நம்புங்கள்! இந்தக் காலமும் அத்தகைய கயவர்கள் தோன்றும் காலமாக இல்லை. அந்தக் காலம் வரும்போது மக்கள் தங்கள் உலகியல் நலனுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்: உலகியல் நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அஞ்சுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் தான் முன்னறிவிப்பில் சொல்லப்பட்ட  நயவஞ்சகம் தோன்றும்.

இறுதியாக, அந்தக் கடிதத்தைக் குறித்து நான் ஏதும் தவறாக நிகைக்கக்கூடாது என்றும் எழுதியிருந்தீர்கள். தோழர்களே! நீங்கள் உண்மையானவர்கள்; நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள்! உங்களின் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை.”

இப்படிக்கு
உமர்பின் கத்தாப்

ஆதார நூல்கள்: கிதாபுல் காரஜ்,
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே..

1 comment:

  1. சலாம்,

    நல்ல பதிவு...நண்பர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டாக உள்ளது.

    என் தளத்தில்:ஊதா கலரு ரிப்பன்
    http://tvpmuslim.blogspot.in/2013/09/blog-post_18.html

    ReplyDelete