Friday, August 31, 2012

குஜராத் பெண் அமைச்சரின் கொடூரம்

2002 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இந்தியாவின் புகழுக்குத் தீராத களங்கம் விளைந்த ஆண்டு. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி வெளிநாடுகளுக்குச் செல்வேன் என பாரதப் பிரதமரே கவலைப்பட்ட ஆண்டு  அது.

கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையை இந்தியா ஒளிர்கிறது; VIBRANT GUJARAT என என்னதான் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டி, வாய்மாலம் பேசி மறைக்க முயன்றாலும் அது என்றுமே மறைந்து போகாத பாவக் கறை படிந்த சோக வரலாறு என்பது தெளிவாகிக் கொண்டே இருக்கின்றது.

இந்த இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி, முன்பு தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளிகளான குஜராத் அரசின் குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் மாயாபென் கோட்னானி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சரணைடைந்து இதற்கான ஆதாரம். குஜராத் கலவரம் என்பது ஓர் எதிர்வினையன்று. குஜராத் அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை என்பது இந்த நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் அன்மைக்கால வரலாற்றில் மிகக் கொடூரமானன் முறையில் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை அரசு பயங்கரவாதத்திற்கு ஒரு வலுவான ஆதாரம். 2002 இல் நரோதாபாட்டியா,நரோதாகாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரத்தில் 106 பேர்
கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையில்,அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என சாட்சிகள் தெரிவித்திருந்தும்கூட மாநிலக் காவல் துறை இவர்களை வேண்டுமென்றே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. மாயாவைப் பாதுகாக்க அனைத்துவிதமான உதவிகளையும் நரேந்திர மோடி அரசு செய்து கொடுத்தது. அதுமட்டுமல்ல அதற்குப் பின்னர் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டும் மாயாவின் தண்ணிகரற்ற ’சேவைகளுக்கு’ மதிப்பளித்தார் நரேந்திர மோடி.
எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் மாயாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்தது குஜராத் மாநிலக் காவல் துறை. நரோதாபாட்டியாவில் வன்முறை நடைபெற்றபோது அங்கு மாயா காரில் வந்து இறங்கினார். கூரிய வாள்கள்,தாடி போன்ற பயங்கர ஆயுதங்களை விநியோகித்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை நெருப்பிலிட்டுக் கொல்ல வன்முறை வெறி பிடித்த கயவர் கூட்டத்துக்குக் கட்டளை பிறப்பித்தார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருந்தும் கூட காவல் துறை அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்திய பிறகே தீயிலிட்டுக் கொளுத்தினார்.

உச்ச நீதிமனறம் இதில் தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ’ஜன சங்கர்ஷ் மன்ச்’ எனும் அமைப்பு, சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்கள் மாயாவுக்கு எதிரான வலுவான ஆதாரமாகத் திகழ்ந்தது. முன்னாள் குற்றப் புலானாய்வுத்துறை அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த இரண்டு செல்பேசி நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரமாக்கி, ஜன சங்கர்ஷ் மன்ச்சின் வழக்குரைஞர் முகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்களின் முலம், சம்பவம் நடைபெற்றபோது நான் காந்தி நகரில் இருந்தேன் என்ற மாயாவின் வாக்குமூலம் பொய்யானது.

முன்பு மாயாபென் கோட்னானிக்கும் ஜெய்தீப் பட்டேலுக்கும் சிறப்பு விசாரணைக் குழு நேரில் வரும்படி அறிவிக்கை அனுப்பியும்கூட அவர்கள் நேரில் வராமல் தலைமறைவானார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் அமைச்சராக உள்ள ஒருவர் மாநிலத்தில் எங்கு பதுங்கி உள்ளார் என்பது கூட ஓர் அரசுக்குத் தெரியமலா இருக்கும்? ஒரு போதும் இல்லை. அவர்கள் அரசின் பாதுகாப்பில்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் முன் பிணை கேட்டு அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அவர்கள் அணுக வேண்டிய கட்டாயம் வந்தது.

சிறப்பு விசாரணைக் குழுவின் நேர்மையான விசாரணைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனும் நிபந்தனையுடன் அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தால் வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் சரணடைந்தார்கள் என்பது தெளிவு. தலைமறைவாக இருந்த காலம் முழுவதும் அவர்கள் மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். தாமாகப் பதவி விலகவும் இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. செஷன்ஸ் நீதிமனறம் வழங்கிய முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னர்தான் அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகினர்.

குஜராத் இனப்படுகொலை குறித்த விசாரணைகலை திசை திருப்பும் நடவடிக்கைகளை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. ஜன சங்கர்ஷ் மன்ச் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த அதே ஆவணங்களைத்தான் குஜராத் அரசி நியமித்த நானாவதி - கே.ஜி.ஷா - அக்‌ஷய் மேத்தா விசாரணை ஆணையத்திடமும் அளித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆவணங்களை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது நானாவதி குழு.

அக்‌ஷய் மேத்தா குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, நரோதாபாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எந்தவித ஆதாரங்களையும் ஆவ்ணங்களையும் பார்க்காமலேயே பிணை வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.இதனைத் தெஹல்கா புலனாய்வுக் குழு நடத்திய இரகசிய விசாரனையின்போது முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கியே ஒப்புக் கொண்டுள்ளார். நீதிபதி ஷா மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்துக்கு மாநில அரசு மேத்தாவை நியமித்தபோது இவர் அரசுக்குச் சாதகமானவர்; ஒருதலைப்பட்சமானவர்; இவரிடம் நீதி கிடைக்காது; வேறு ஒரு நடுநிலையான நீதிபதியை நியமிக்க வேண்டும் எனக்கூறி இதனை ஜனசங்கர்ஷ் மன்ச் எதிர்த்தது. ஜனசங்கர்ஷ் மன்ச் பரிந்துரைத்த ஒருவரைக்கூட நீதிபதியாக நியமிக்க மோடி அரசு ஒத்துக் கொள்ளவில்லை.

தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.

இன்று இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் பயங்கர சூழலிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமரசமின்றி போராடிய நடுநிலைவாதிகள், ’ஜனசஙகர்ஷ் மன்ச்’ அமைப்பினர், தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய், போன்ற வீரமங்கைகளும் நீதி வழங்குவதில் எச்சரிக்கை உணர்வுடன் திகழுகின்ற நீதிபரிபாலனமும் நமக்கு தருகின்ற ஆறுதலும் நிவாரணமும் சாதாரணமானதன்று.


Thursday, August 23, 2012

மது ஒரு பொதுத்தீமை (மீள் பதிவு)

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.
மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது. 

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.

டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 


கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்

மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

Saturday, August 18, 2012

உலக மனிதமே இசுலாத்தின் சாரம்!

அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துகள். வாங்கே எல்லோரும் கொண்டாடுவோம். அன்பை பகிர்ந்து கொள்வோம்.
பழ.கருப்பையா அவர்கள்
மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான்.ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.

உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்! வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும். உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்!அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது.

நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின. இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். 

இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை. பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.
முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை. 
திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்!  இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!  

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே.அவற்றை இறைவனா போட்டான்? 

இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.  

ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது. இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. 
ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான். 

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்! அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை. கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார். 

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல். தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. 

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது. 

தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! 
இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது. 

(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்! 

மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை! 

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்! இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்! 

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது! 

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை. 

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்! 
எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார். 

"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது! 

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார். 

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது! 

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்! 

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு! 

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!
பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை. 


பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள். ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது. 
ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது! இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். 
ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்.
இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். 
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்? 

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும் பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. 
நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது. "யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. 
நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே. உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான். உலக மனிதமே இசுலாத்தின் சாரம். 
நன்றி : பழ. கருப்பையா Dinamani.com.

Thursday, August 16, 2012

அந்த அரேபிய வீரம்...!

வரலாற்று புத்தகங்களை படிக்கும்போது சில நிகழ்ச்சிகள் மனதை பற்றிக் கொள்ளும் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த குறிப்பிட்ட சாதனையாளர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் பதிவது இயல்பானது. ஆனால் சில நேரங்களில் வரலாற்று சம்பவங்களில் ஆள் யார் என்றே தெரியாது அந்த பாத்திரத்திற்கு பெயரும் இருக்காது ஆனால் மனதில் பதிந்து விடும் அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சம்பவம் தான் இந்த பதிவு.


புகழ்பெற்ற போர்வீரரும், கவிஞருமான  ‘துரைத் இப்னுல்-ஸிம்மா முதுமை அடைந்து  இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு முஸ்லிம் காலம் தொடங்கிய பின் வரை வாழ்ந்தவர். இளமைக்காலத்தில் ஒரு நாள் காட்டரபிகள் வழக்க கொள்ளைத் தக்குதலுக்குத் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தார். மொட்டையான ஹிஜாஸ் மலைக் கணவாயின் முகட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது கிழே திறந்த பள்ளத்தாக்கில் ஒரு குதிரை வீரன் கையில் ஈட்டியுடன் ஓட்டகத்தின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். ஒட்டகத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். துரைத் தமது ஆட்களில் ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் குதிரை வீரனிடம் விரைந்து சென்று, தக்குதல் கூட்டம் வருவதாகவும், பெண்ணையும் ஒட்டகத்தையும் விட்டு விட்டு ஓடிப்போய் உயிர் பிழைக்குமாறும் உரக்கக் கூறுமாறு சொன்னார் அவ்வாறே அந்த ஆள் தமது குதிரையைச் செலுத்திக் கூவிக்கொண்டு சென்றான். குதிரைவீரன் அமைதியாக ஒட்டகக் கயிற்றைப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு, குதிரையைத் திருப்பி, குதிரையில் வருபவனை நோக்கித் தாவிச் சென்று,ஈட்டியை அவன் நேஞ்சில் பாய்ச்சிக் குதிரையிலிருந்து கீழே வீழ்த்தினான். பின் திரும்பிச் சென்று ஒட்டகக்கயிற்றைத் தன் கையில் வாங்கிக்கொள்ள, இருவரும் ஏதும் நடவாதது போல் தொடர்ந்து சென்றார்கள்.துரைத் கணவாய் வழியே இறங்கித் தமது குதிரையைச் செலுத்திச் சென்றபோது அந்தப் பயணிகள் இருவரும் அவர் பார்வையில் படவில்லை. ஆனால் தாம் அனுப்பிய வீரன் திரும்பி வராததால் மற்றொரு வீரனை அனுப்பினார். அவனையும் அந்தக் குதிரைவீரன் முன் போலவே குத்தித் தள்ளினான். மூன்றாவதாக ஒரு வீரனுக்கும் இதே கதி நேர்ந்தது. ஆனால், இந்த முறை குதிரை வீரனின் ஈட்டி எதிரி வீரனின் உடலில் பாய்ந்தபோது ஒடிந்துபோயிற்று. கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் குதிரைவீரன் மீண்டும் பெண் அமர்ந்துள்ள ஒட்டகக்கயிற்றைப் பிடித்துக் கொள்ள அவர்கள் பயணம் தொடர்ந்தது.


அருகருகே அவர்கள் சவாரி செய்தபோது குதிரைவீரன் பின்வரும் கவிதையைப் பெண்ணிடம் கூறினான்:

அமைதியாகச் சவாரிசெய், என் அழகுப் பெண்ணே
பாதுகாப்பாய் பத்திரமாய் அமைதியாய்.
நம்பிக்கை,மற்றும் மலர்ச்சிகொள்
அச்சம் எதுவும் வேண்டாம்.
எதிரியிடமிருந்து நான் ஓட முடியாது
அவன் என் ஆயுதத்தைச் சுவைக்கும் வரை.
என் தாக்குதலின் வேகத்தைக் காண்பான்
யாரும் உனக்கு தீங்கிழைக்க வந்தால்.


மூன்று வீரர்களும் திரும்பி வராததைக் கண்டு வியப்படைந்த துரைத் தாமே குதிரையில் விரைந்தார். மூன்று வீரர்களின் உடல்களையும் வழியில் அடுத்தடுத்துக் கண்டார். தமக்கு முன்னே அந்தக் குதிரைவீரன் ஆயுதமற்றவனாய், நடைவேகத்தில் குதிரையைச் செலுத்திக் கொண்டு,பெண் அமர்ந்துள்ள ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து நடத்திச் செல்வதைக் கண்டார்.


குதிரைவீரன் தன் எதிரியே என்றாலும் அவனது அஞ்சா நெஞ்சம் கண்டு வியப்பு நிறைந்து துரைத் அவனருகே குதிரையைச் செலுத்தினார். ‘வீரனே, உன்னைப் போன்ற ஒருவனுக்கு மரணத்தைத் தரக்கூடாது. ஆனால் என் ஆட்கள் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ நிராயுதபாணியாக இருக்கிறாய். என் ஈட்டியைப் பெற்றுக் கொள், நண்பனே. என் ஆட்கள் உன்னைத் தொடராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்,’ என்று அவர் கூறினார்.

(அக்கால காட்டரபிகள் (பதூயின்கள்) வீரம்,தீரம்,கெளரவம் போன்ற சில பண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதைக் காட்ட,க்ளப் பாஷா தம்முடைய ‘முஹம்மது நபி (ஸல்) வாழ்வும் காலநிலையும்’ (த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் முஹம்மத்) என்ற தமது புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி)

Monday, August 13, 2012

ஆமைகள் புகுந்த வீடு விளங்கும் ஆன விளங்காது...!

ஆமவடை
ஆமைகள் புகுந்த வீடு விளங்குமா?
கல்லாமை,இல்லாமை,பொல்லாமை,இயலாமை,தீண்டாமை,பொறாமை போன்ற ஆ(மை)கள் மனங்களில் வீடுகளில் குடியிருக்கும்  வரை விளங்கவே விளங்காது.

குறிப்பாக பொறாமை புகுந்த மனதுடைவர்கள் ஒருபோதும் அமைதி அடையமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டு மனம் உடைந்து போவார்கள்.அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா வகையிலும் முயல்வார்கள்.அவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும்,உயிர்,உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவும் முற்படுவார்கள். இவ்வாறு அடுத்தவர்களை அழிக்க முயல்கையில் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் நற்பெயருக்கு அவர்களே களங்கம் தேடிக் கொள்வார்கள். எனவே தான் முஹம்மது நபி (ஸல்), “நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது”(நூல்:அபூதாவூத்) எனக் கூறினார்கள்.

பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கோரும்படியும் (திருக்குர்ஆன் :113:5) கட்டளையிடுகிறது.

பொறாமை போன்ற கொடுமையான என்னங்கள் புகாத ஆன்மாவே வெற்றிபெறும்!

ஒரு அரபுக் கவிஞர் இப்படி பாடுகிறார்:
அவர்கள் என் இறப்பின் மீதும்
பொறமை கொள்கிறார்கள்
அடப்பாவமே!
சாகும் வரை
பொறாமையின் பிடியிலிருந்து
நான் தப்பமாட்டேன் போலும்.

மற்றொரு கவிஞர் பாடுகிறார்:
உன் அருகில் அமர்ந்திருப்பவர்களிடம்
உனது கவலையை வெளிப்படுத்தாதே
அவர்கள் பொறாமைக்காரர்கள்
உன் கண்ணீரில் குளிர்காய்பவர்கள்

இன்னும் சில ஆமைகள் இருக்கின்றன இவைகள் புகாத மனங்கள் விளங்காது.
வாய்மை,பொறுமை,நிலைகுலையாமை போன்றவை.

நல்ல காரியங்கள் செய்யும்போது அதை நோக்கி அவதூறான விமர்சனங்கள் வரும்போது பொறுமையுடன் நிலைகுலையாமல் சந்திக்காதவரை வெற்றி பெற முடியாது.

மேலை நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார்:
“எது சரியோ அதைச் செய் பின்னர், இழிவான விமர்சனங்களுக்காக நீ திரும்பி நில்”

கவனத்தில் கொள்ளுங்கள்: உங்களைப் பற்றிய அவதூறுகளைப் படிப்பவர்களில் பாதிப் பேர் அவற்றை மறந்து விடுவார்கள். மீதிப் பேர் அவற்றை ஆர்வத்துடன் படிக்க மாட்டார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை அந்த அவதூறுகளைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. காரணமும் புரியாது.

அறிஞர் ஒருவர் கூறுகிறார்:

என்னைப் பற்றியோ, உன்னை பற்றியோ நினைக்க மக்களுக்கு நேரமில்லை. அவர்கள் தமது வாழ்க்கை அத்தியாவசிய தேவைகளை தேடுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு தாகம் ஏற்பட்டால் போதும்; எனது இறப்பையும் மறந்து விடுவார்கள் உனது இறப்பையும் மறந்து விடுவார்கள்.

Tuesday, August 7, 2012

மதக்கொள்கைகளை திட்டாதீர்கள்(‘Respect For all religions’)

மத இழிவு கூடாது

உணர்வுகளில் மிக மென்மையானது சமய உணர்வு. எளிதில் தூண்டப்படுவது; உணர்ச்சிகளை விரைவாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கலவரங்களைத் தூண்டும் சக்தி படைத்தது.எனவே சமயங்களைப் பழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.(பார்க்க குர்ஆன் 6:108)..

மறுப்பதும் மதிப்பதும்

சமயங்களுக்கு இடையில் கருத்து ஒற்றுமைகளும் உண்டு’ வேற்றுமைகளும் உண்டு. கருத்து வேறுபாடு கொள்வதற்கும், கருத்துகளை ஏற்க மறுப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு. எம்மதமும் சம்மதம் என்று ஒரு கருத்து பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தைச் சொல்பவர்களின் நோக்கம் தூய்மையானது.ஒற்றுமை, நல்லிணக்கம்,மனித நேயம் ஆகியவற்றை மலரச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருத்தைக் கூறி வருகிறார்கள். ஆனால் அடிப்படை விடயங்களிலேயே சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இறைக்கோட்பாடு, மனிதன் பற்றிய கோட்பாடு, நன்மை-தீமை பற்றிய விளக்கங்கள், இறப்புக்கு பின்னுள்ள நிலை ஆகியவை பற்றி சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அதே வேளையில் ஒழுக்கம்,மனிதநேயம் போன்ற விடயங்களில் ஒத்த கருத்துகளும் காணப்படுகின்றன. எனவே எம்மதமும் சம்மதம் எனக் கூறுவதை விட. ‘எம்மதமும் மரியாதைக்குரியது ‘Respect For all religions’ எனக் கூறுவதே உண்மைக்கு நெருக்கமானது எவராலும் பின்பற்றக் கூடியது. எனவே எல்லா சமயங்களையும் மதிப்போம் என்ற உணர்வே அமைதிக்கு வழிவகுக்க கூடியது.

விமர்சனம் வேறு; இழிவுபடுத்துவது வேறு!

சமயங்களை பழிப்பது தவறு; விமர்சனம் செய்வது தவறல்ல. உணர்வுகளைத் தூண்டாத வகையில், இழிவுபடுத்தும் நோக்கமின்றி அறிவுப் பூர்வமான விமர்சனங்களைச் செய்வது தடை செய்யப்பட்டதல்லஎந்த கொள்கையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

“நபியே! விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!” (குர்ஆன் 16: 125)

சமயங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை; எனவே விமர்ச்னமே கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். இது அறிவுத் தேக்கத்திற்கும், சமயங்களின் பெயரால் செய்யப்படும் அநீதிகள் நீடிக்கவுமே துணைபுரியும். இன்னொரு பிரிவினரோ ‘ என் கடவுளை இழிவுபடுத்துவதே’என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றனர். மக்களை மோதவிட்டு, பிரிவினைகளை ஏற்படுத்தி வகுப்புவாதத்தை வளர்ப்பதே இவர்களின் நோக்கம்.

தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாத இவர்கள்,எதிர்மறையாகச் சிந்தித்து செயல்பட்டுப் பழகிப் போனவர்கள்.இவ்விரண்டு நிலைகளுமே ஆபத்தானவை.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையும் எழுதுவது, பேசுவது சமூக அமைதியைக் குலைக்கும். எல்லாவகைச் சுதந்திரங்களும் வரையறைக்கு உட்பட்டவையே! உடையின்றி உலா வருவதை மனித உரிமை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கனவன் மனைவியாக இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் செய்யும் காரியத்தை நடுத்தெருவில் செய்வதை எந்தச் சட்டமும் அனுமதிக்காது. சாலையில் விரும்பியபடி வாகனம் ஓட்ட சாலை விதிகள் அனுமதிக்காது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசாங்க இரகசியத்தை வெளியிட மாட்டார்கள். நாட்டின் நலன் கருதி இராணுவ இரகசியங்கள் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும்.

‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் தம் மனசாட்சிப்படி சுதந்திரம் உடையவர்கள், என்றே இந்திய அரசியல் சாசனம் 25(1) பிரிவு கூறுகிறது. எனவே முழுமையான சுதந்திரம் என ஒன்று கிடையாது. ஆகவே கருத்துச் சுதந்திரம் எனும் ஆயுதத்தை கவனமாகவும் பொறுப்பு உணர்வோடும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சீர்திர்த்தம் ஏற்படுவதற்குப் பதிலாக சீர்குலைவே ஏற்படும்.

. தன்னுடைய மதத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்ட நூலைத் தடை செய்ய வேண்டும் என்கிறான்; ஆனால் பிற மதங்களைத் தாக்கி எழுதப்பட்ட நூல்களை தடை செய்யாதே-அது கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்காதே என்கிறான்.

. தன்னுடைய சமுதாயம் கொடுமைக்கு உள்ளானால் வன்முறை, கொடூரம், மனித உரிமை மீறல் எனக் கூக்குரல் இடுகிறான். ஆனால் பிற சமூகங்கள் அநீதிக்கு உள்ளானால் மெளனமாக இருக்கின்றான். அல்லது ஒரு படி மேலே போய், இது அவர்களுக்குத் தேவைதான்; நல்ல பாடம் என்கிறான்.

. தன்னுடைய மதத்தில் பிடிப்புள்ளவர்களை ‘ஆன்மீகவாதி’ என்கிறான். ஆனால் பிற மதப் பற்றாளர்களை அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்,பத்தாம் பசலிகள் என்கிறான்.

. தன்னுடைய மதம் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டால் ‘ஆன்மீகம்  தழைக்கிறது’ என்கிறான். வெளிநாட்டில் தோன்றி மதம் தன் நாட்டில் வந்தாலோ ‘அந்நியமதம் அந்நியக் கலாச்சாரம், என்கிறான்.

. தன்னுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை போராளிகள், விடுதலை வீரர்கள் என்கிறான். ஆனால் மற்றவர் செய்தால் ‘பிரிவினைவாதி, பயங்கரவாதி’ என்கிறான்.

. ஒரே வகையான குற்றம்! ஆனால் ஓர் இனத்தவருக்கு அதிக தண்டனை; இன்னோர் இனத்தவருக்கு குறைந்த தண்டனை மூன்றாவது இனத்தவர்க்கோ விடுதலை!

. ஒரே மாதிரியான வேலை. ஒருவருக்கு அதிக கூலி; மற்றவர்க்கு குறைந்த கூலி

இத்தகைய இரட்டை நிலைகள் சமூகத்தின் அமைதியைக் குலைக்கும். மதம்,மொழி,இனம்,நாடு,பால் ஆகியவற்றின் அடிபப்டையிலும், உறவு, நட்பு, விருப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் வேறுபாடுகளை காட்டுவது அமைதியை ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும். இன்று உலகில் (பதிவுலகில்) நிலவும் பல குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் முக்கிய காரணமாகும்.

எங்கே அமைதி என்கிற புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதியிலிருந்து இந்த கட்டுரையை எடுத்திருக்கிறேன் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் குறிப்பாக பதிவுலகில் உள்ள நண்பர்கள் படிக்க வேண்டிய நூல்.

Monday, August 6, 2012

தென்கச்சியார் சிந்தனைகள்.

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் தனது கிராமிய பாணிப்பேச்சு வசீகாரத்தால் தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இஸ்லாமிய சிந்தனைகளில் சில.


திருக்குர்ஆன் பத்தியும் நபிகள் நாயகம் பத்தியும் வானொலியில் மக்களுக்குச் சொல்றதுக்காகவே நிறைய படிச்சேன். அதனால பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி எனக்கு மனப்பாடம் ஆயிடுச்சு.குர்ஆன்ல 114 அத்தியாயங்கள்,6666 வசனங்கள்! அதே போல் நபிகள் நாயகம் இந்த உலகத்துல வாழ்ந்தது 22,330 நாளகளும் ஆறு மணி நேரமும். பிறை கணக்குப்படி 63 ஆண்டுகள்.


ஒன்னு குர்ஆனைப் படிச்சுட்டு அது சொல்றபடி நடக்கணும். அது ஒரு வழி. இன்னொரு வழி,குர்ஆனைப் படிச்சுட்டு நல்ல வழியில் நடக்கறவங்களைப் பாத்துக் கத்துக்கணும். இது இரண்டுதான் சாத்தியம். குர்ஆனைப் படிக்க முடிஞ்சா படிச்சுப் புரிஞ்சுக்கலாம். அதப் படிக்க முடியலன்னா, அதப் படிச்சு நல்ல வழியில் நடப்பவர்களைப் பாத்துக் கத்துக்கணும்.

நபிகள் நாயகம் அப்படி நடந்து காட்டியவர்தானே. நபிகள் நாயகத்திடம் ஒரு பணியாளர் வேலை பாத்தாரு.அனசுன்னு பேரு.அவரு சொல்றாரு. நான் நபிகள் நாயகத்துகிட்ட பத்து வருஷம் வேல பார்த்தேன். ஒரு நாள் கூட என்னக் கடிஞ்சு ஒரு வார்த்தை கூட அவர் பேசினதில்ல.கோபப்பட்டு என்னைத் திட்டியதில்லன்னு அவரு சொல்றாரு.அதெல்லாம் பாடம் நமக்கு. அனஸ் மேலும் சொல்றாரு. நபிகள் நாயகம் மக்கள்கிட்ட எப்படி நடந்துக்குவாருன்னு நான் கவனிச்சு வந்திருக்கேன். சலாம் சொல்வதில் அவர்  முந்திக் கொள்வார். அது பெரிய பண்பு இஸ்லாத்துல. யாரைப் பார்த்தாலும் சலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள். அந்த பண்பை நபிகள் நாயகத்துகிட்ட பாத்தேன்னு அந்தப் பணியாள் சொல்றாரு. அதே போல யாரேனும் கையைப் புடிச்சுப் பேசினா அவரு கையை விடுவிக்கறதுக்கு முந்தி நாபிகள் நாயகம் கையை விடுவிச்சுக்க மாட்டார். இதெல்லாம் மனோதத்துவ ரீதியான, உளவியல் ரீதியான மனிதப் பண்புகள்.

இப்படியேல்லாம் மனிதன் இருந்தா உலகம் ஏன் இப்படி இருக்கு? அமைதி பூங்கவாக இருக்க வேண்டிய உலகம் ஆயுத பூங்காவாக மாறிக்கிட்டிருக்கே!

முகச் சுளிப்பால் கூட அடுத்தவருக்குக் கஷ்டம் தரக்கூடாதுன்னு நபிகள் நாயகம் சொல்லியிருக்காரு. இன்னும் ஒரு படி மேலே போய் பூண்டு சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குப் போகாதீங்கன்னு சொல்லியிருக்காரு-பூண்டு ஒடம்புக்கு நல்லது. ஆனாலும் அதன் மூலம் வருகிற வாசனை பக்கத்தில் நின்று தொழுபவருக்கு அசெளகரியமா இருக்கலாம். அந்த அளவுக்கு நுட்பமா நபிகள் நாயகம் வழிகாட்டியிருக்காரு.

இப்படியெல்லாம் இருந்தா அந்த மனிதன்தான் இறைவனுடைய பிரதிநிதி. இப்படிப்பட்ட உயர்ந்த பன்புகளுடன் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிரதிநிதியாய் வரணும்னுதான் இஸ்லாம் விரும்புது. அப்படி வாழ்ந்தால் உலகில் சிக்கல் இருக்காது, பிரச்சனை இருக்காது. உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.


(21.2.09 அன்று சென்னையில் ‘திருக்குர்ஆன் உங்களுடையதே’ சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்கச்சி சுவாமிநாதனின் உரையிலிருந்து சில பகுதிகள்)

Sunday, August 5, 2012

காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்.1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.

ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.

ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்."

ஒருமுறை கலீஃபா உமருல் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சில கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹாத்திப் இப்னு அபீபல் தஆ என்பவரது பணியாள்களாக இருந்தனர்.முசைனா குலத்தைச் சேர்ந்த ஒருவரது ஓட்டகத்தைத் திருடி அறுத்து சாப்பிட்டு விட்டனர் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர்களை விசாரணை செய்தார் உமர்(ரலி) ஐயத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன்பே கலீஃபா அனைவரையும் திரும்ப அழைத்தார்.திருடியதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்து விசாரித்தார். கொடிய வறுமை மற்றும் பட்டினி காரணமாகவே இதனைச் செய்தாக அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அது உண்மைதான் என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்ட கலீஃபா உமர் அவர்களின் முதலாளியான ஹாதிப் இப்னு அபீபல் தஆவை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவரிடம் கூறினார்:

"நீங்கள் இவர்களிடம் கடினமாக வேலை வாங்கியுள்ளீர்கள். ஆனால் வாழ்வதற்குத் தேவையான கூலியை வழங்கவில்லை.அதுதான் இவர்கள் திருடத் தூண்டுகோலாய் அமைந்தது. எனவே இவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனைக்குத் தகுதியானவர் நீங்கள்தாம். நான் உங்கள் மீது பெரும் பாரம் ஒன்றைச் சுமத்தியே தீருவேன்."

உமரூல் ஃபாரூக் 400 திர்ஹம் விலையுள்ள அந்த ஒட்டகத்தின் மதிப்பைவிட இருமடங்கு தொகையை அதன் உரிமையாளருக்குத் தருமாறு ஹாதிப் இப்னு அபீபல் தஆவுக்கு ஆணையிட்டார். திருடிய தொழிலாளிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்து விட்டார்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கலீஃபா உமர் நடைமுறைப்படுத்திய நீதிக்காகத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்தார்; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...?

Wednesday, August 1, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-3

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
பதிவின் இரண்டாவது பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம்.

1. திட்டமிடல்

எழுதுதல் திட்டமிடலுடன் ஆரம்பமாகிறது.இது கையிலுள்ள விடயம் தொடர்பாக எதனை? எப்படி? எழுத வேண்டும் எனச் சிந்திப்பதை குறிக்கும். வழங்கவுள்ள கருத்துக்களின் முழு எல்லைகளை வகுத்துக் கொள்ளல்,குறிப்புகளை எடுத்தல்,அட்டவணைகளைத் தயாரித்தல் என்பனவும் இதிலடங்கும்.சிந்தனைகளையும் அவற்றுக்கு ஆதாரமான விபரங்களையும் குறித்து வைத்துக்கொள்வதன் மூலம்.அவற்றில் சிலவற்றை எழுத மறப்பதையும் அல்லது ஒழுங்கினமான அமைப்பில் அமைவதையும் தவிர்க்க முடியும். முதலாவது சொல்லை எழுதும் முன் இடம்பெறும் சிந்தனை,சொற்தெரிவு,கற்பனை ஆகியன முழு ஆக்கத்தினையும் எழுதுவதன் நுட்பங்களைப் போன்றே முக்கியத்துவம் பெறுகின்றன.

2. முதற் பிரதியை எழுதுதல்

எழுத ஆரம்பிக்கும்போது நாம் முதலாவது பிரதியைச் சுருக்க்மான வடிவத்தில் தயாரிக்கின்றோம்.இப்பபிரதியில் தேவைக்கு அதிகமான சொற்களோ அல்லது எடுத்துச் சொல்லப்படும் கருத்துக்களைச் சிக்கலாக்கும் தெளிவற்ற சொற்களோ இருக்கக் கூடாது.இப்பிரதியைத் தயாரிக்கும் போது வாசகர்களையும்,முக்கியமான கருத்துகளை விளங்கிக் கொள்வதில் அவர்களுக்குள்ள ஆற்றலையும் நாம் மனதிற் கொள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் விவரண உதாரணங்கள் நிறைய சந்தர்ப்பங்களில் சிக்கலான கருத்துக்களைத் தெளிவுபடுத்த உதவுகின்றன.

எழுத்தாக்கத்தின் அடிப்படையே இந்த முதற்பிரதியாகும். எனவே இதனைத் தயாரிப்பதற்குச் செலவாகும் நேரம் வீணாகுவதில்லை.முதற் பிரதி தயாரான பின்னர், கருத்துக்கள்,உதாரணங்கள்,எழுத்துநடை போன்ற எடுத்தாளப்படக்கூடிய அம்சங்களை இனங்காணும் பொருட்டு, அதனை நாம் மீள் பார்வை செய்ய வேண்டும்.இதனால், திருத்தம் செய்யும்போது இவ்வம்சங்களை ஒழுங்குப்படுத்த இயலும்.பிரதி சரிவர அமையாவிடின் அதன் ஒரு பகுதியோ அல்லது முமுயாகவோ தூக்கியெறியவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3.மீள்பரிசீலனை செய்தல்

நமது முதற் பிரதியைக் கணிசமான அளவுக்கு மேம்படச் செய்யும்.தெளிவற்ற கருத்துக்களைத் தெளிவாக்கவும் அநாவசிய விபரங்களைக் களையவும் இது உதவும். ஆயினும் முதலாவது பிரதியை உறுதிப்படுத்தும் ஒரு செய்ல்முறையாக மீள்பரிசீலனைக் கொள்ளக் கூடாது. மாறாக இறுதி ஆக்கத்தைப் படைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இதனைக் கருத வேண்டும்.எழுதப்பட்ட கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய நிலை சாதாரணமாக இக்கட்டத்தில் ஏற்படுவதுண்டு.கருத்து குழப்பநிலைகலை நீக்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பமாகவும் இது அமையும்.

4. பிரதியை சரிபார்த்தல்

ஒரு முறையோ பல முறைகளோ முதலாம் பிரதி மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்,இறிதிப் பிரதி தயாராகும்.இவ்விறுதிப் பிரதி இலக்கண,எழுத்து மற்றும் நிறுத்தல் குறிகள் விடுபட்டுள்ளதா என கவனித்து திருத்தம் செய்ய வேண்டும். “சரி பார்த்தல்” (Proof reading) நேரமில்லையெனில் எழுவதற்கே நேரமில்லை என்பதை குறிக்கும்.

5.எழுத்தளரின் இடர்கள் (Writer' s Block)

நாம் எழுத நினைக்கும் விடயம் சம்பந்தமாக ஒரு சொல்லக்கூடத் தொடர்ந்து எழுதவோ,நினைக்கவோ முடியாது தடைப்பட்டு விடுவது போன்ற ஒரு நிலையைக் குறிப்பிடவே ‘எழுத்தளரின் இடர்’ என்று சொல்லுகின்றோம். இந்நிலைமையைச் சமாளிப்பதற்கு சில அழகிய உதாரணங்களைப் பார்ப்போம்.

. ஒரு கருத்து இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும் விதமாகத் தொடர்ச்சியாக எழுதுவதற்கு நம்மை வலுக்காட்டாயப்படுத்திக் கொள்ளலாம். (தொடர் பதிவுகள் போன்றவை) 

. நமது இந்த சிக்கலான நிலை குறித்து எழுத்தர்வமுள்ள  நண்பர்களுடன் பேசலாம் அவ்வாறு செய்யும் பொழுது புதிய வழிகாட்டல்களும் பொருளட்க்கம் பற்றிய புதிய அணுகு முறைகளும் கிடைக்கலாம்.

. நாம் எழுவதிலிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு வேறு விடயங்களில் கவனத்தை செலுத்தி விட்டு. பின்னர் புது ஊக்கத்துடன் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம்.

6. உதவிக் குறிப்புகள்

சிறந்த எழுத்தாக்கத்துக்கான சில துணைக் குறிப்புகள் பின்வருமாறு:

1. உண்மைகளின் அடிப்படையில் வசனங்களை அமைக்க. எளிமையான,சுருக்கமாக,திருத்தமாகக் கூறுக.

2. கடின கலைச் சொற்களைத் தவிர்க்க. அதிகம் பயன்படுத்தப்பட்டு புளித்துப் போன சொற்களையும் சொற் தொடர்களையும் தவிர்க்க.

3.பெயர்ச் சொற்களை விட கூடுதலான வினைச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை உறுதிப்படுத்துக.

4.பெயர்களை வினைகளாக மாற்றுவதன் மூலம் தேவையற்ற சொற்களை நீக்குக.

5. பெயர்,பெயர் அடைச் சொற்களை வினைச் சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம்.

6. எழுவாய் செயலை ஆற்றும் வகையில் செய்வினை வாக்கியங்களை உபயோகிக்க.

7. ஒரே சொல் மீள வருதலைத் தவிர்க்க ஒத்த கருத்துடைய வேறு சொல்லை உபயோகிக்கலாம்.

8.முக்கியமான சொற்களையும், பொருத்தமான கருத்துக்களையும் ஒரு தாளில் அல்லது கணினியில் குறித்துக் கொண்டு நமது முதலாவது பிரதித் தயரிப்பை ஆரம்பிக்கவும்.தொடரொழுங்கு,வரிசைப்படுத்துதல் என்பன பற்றி முதலில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. உப பிரிவுகளாகப் பின்னர் வகைப்படுத்தலாம்.

முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: ”சொற்களில் சிறந்தவை திருத்தமான, சுருக்கமான சொற்களாகும்.”

எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள அனைத்து சகோதரர்களும் சிறந்த முறையில் எழுதி எழுத்தாளர்களாக உயர என் வாழ்த்துகள் (முற்றும்)