Sunday, September 30, 2012

அமைதியாக இருந்தால் அமைதி வருமா?

“தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்.” - எட்மண்ட் பர்க்

“ உண்மையை அறிந்த பின்னரும் உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்.” - மார்டின் லூதர் கிங்

இன்று உலகில் வன்முறைகளும் அநீதிகளும் குற்றங்களும் தலைவிரித்தாடுகின்றன ஆனால் இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காதவரையில் எவரும் அநீதிகளைப் பற்றி  கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாதவரை அநீதிகள் ஒருபோதும் ஒழியாது அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால் தான் நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக்கூடாது.

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்தும் அநீதியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:110)

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.(திருக்குர்ஆன் 3:104)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  வசனங்கள் நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமுதாயமே சிறந்தது என்றும், வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன. அநீதிகளுக்கு எதிராக நம்மால் முடிந்தா அலவுக்குப் போராட வேண்டும்.

“தீமையை கண்டால் கைகளால் தடு!  அது முடியாதபோது நாவினால் தடு! அதுவும் முடியாத போது மனத்தளவில் தடு! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். பொதுமக்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மனிதநேயர்கள், மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

“ கொடுங்கோல் ஆட்சியாளர்க்கு முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் (ஜிஹாத்) ஆகும்” என்றார்கள் நபிகள் நயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

அநீதிக்கு எதிராக மக்கள எழுப்பும் குரல் ஆதிக்கசக்திகளைக் கலக்கமடையச் செய்யும் சக்தி படைத்தது எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய எண்னிக்கையினர் குரல் எழுப்புவதால் என்ன ப்யன் என்று கருதிவிடக்கூடாது. ஜாதி மதம், மொழி, இனம் பாராது அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தீயவர்கள் தீமை புரிவதற்காகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது நன்மைக்காக நல்லவர்கள் ஒன்று சேரத் தயங்குவதேன்?

அநீதிகளுக்கு எதிரான குரல் வலுவாகவும், தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். ஆதிக்கக் காரர்களைத் திகில் அடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்பும் போராட்டமும் விளக்கக் கூட்டங்களும் அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் உண்மை நிலை பற்றி மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு செய்து வரும் பல அடாவடித்தனங்களைப் பற்றி தெரியாது. பாலஸ்தீனர் பிரச்னையில் இஸ்ரேல் அரசு நியாயமாக நடந்து கொள்வதாகவும், பாலஸ்தீனர்களே அநீதிகளைப் புரிவதாகவும் அமெரிக்க மக்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இது போலவே பல அரசுகள் தாம் செய்யும் தவறுகளை மக்கள் அறியாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

அநீதிகள் புரிபவர்கள் நமது சமூகத்தவாரயினும் அவர்களை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும். ‘எனது தேசம் எது செய்தாலும் ஆதரிப்பேன் (My nation right or wrong) என்பது இன வெறியாகும் (Chauvinism)

" ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?” என ஒருவர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகளார் அவர்கள், இல்லை! மாறாக, தன் சமூகத்தார் கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறி, என்றார்கள்.

அடுத்தவர் செய்யும் தவறுகளை ஆவேசமாகக் கண்டிக்கிறோம். ஆனால் நமது நாடு, நமது சமூகம் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். தமது சமூகத்தைக் கண்டிப்பது தேசத்துரோகம், மதத்துரோகம்.இனத்துரோகம் என்று அக்ருதுகிறோம். ஆனால் இந்த இனவெறிச் சிந்தனை அவர்களையே அழித்து விடும் என்பதை அவர்கள் உனர்வதில்லை. தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு தட்டிக் கேட்கப் படாத மனிதர்கள் அழிந்து போனது போல நாடுகளும் சமூகமும் அழியும்.

”எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவன் ஆவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழவான்” (நூல்: அபூதாவூது) என்றார்கள் நபிகள நாயகம் அவர்கள்.

அநீதிக்கு எதிராக வெளிநாட்டவர் எழுப்பும் குரலை விட உள்நாட்டினர் (அதே சமூத்தவர்) எழுப்பும் குரலே வலுமிக்கது. ஆட்சியாளர்களும் அக்கிரமக்காரர்களும் தமது சமூகத்தினரின் எதிர்ப்புக்கே அதிகம் அஞ்சுகின்றனர்.
இன்று உலக மக்கள் அதிகம் எதிர்க்க வேண்டியது வல்லரசுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையை. உலகில் எவருக்கும் அஞ்சமாட்டோம்; எந்தத் தர்மத்திற்கும் கட்டுப்பட மாட்டோம்; எந்த நாட்டையும் எந்த வேளையிலும் எந்த வகையிலும் தாக்குவோம்; அங்குள்ளவர்களைச் சிறை பிடிப்போம்; சித்திரவதை செய்வோம் எனச் செயல்படுகின்றன. ஐ.நா. சபை, உலக வங்கி, சர்வதேச நிதியம் (IMF), சர்வதேச அணுசக்தி கழகம் (International Atomic Energy Agency) ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு தாதவைப் போல் நட்ந்து கொள்கின்றன. ஐ.நா. சபை (UNO) என்பது அமெரிக்க ஐக்கிய  சபை ஆகி விட்டது (USO= United States Organization) உலகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபை அமெரிக்க, ஐரோப்பிய நலன்களைப் பாதுகாக்கும் சபையாக ஆகிவிட்டது. தன்னிச்சையாகச் செயல்படுதல் (Unilatelalism) ஏகாதிபத்தியம் (Imperialism), இரட்டை நிலை (Double standard) ஆகியவையே வல்லரசுகளின் செயல்பாட்ட்ன் அடிப்படைகள்.

நமது நாடு உட்பட உலகின் பல நாடுகள் வல்லரசுகளின் அரசு பயங்கரவாதத்தை (State Terrorism) கண்டிக்க மறுக்கின்றன. வல்லரசுகளிடமிருந்து கிடைக்கும் கடன், தொழில்நுட்ப உதவி,ஆயுதவிற்பனை ஆகியவை இவர்களை மெளனமாக்கி விடுகின்றன. வல்லரசுகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்துஐ.நா.பாதுகாப்புசபை,பொதுச்சபை,
அணுசக்திக்கழகம ஆகியவற்றில்  வல்லரசுகளுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுகின்றன. 

அரபுக்களை  நசுக்கி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவைக் கண்டிக்க அரபு நாடுகளே தயாராக இல்லை. அரபு ஆட்சியளர்களுக்கு மன்னராட்சியையும், குடும்ப, சர்வதிகார ஆட்சியையும் காப்பற்றிக் கொள்ள அமெரிக்காவின் தயவு தேவை. எனவே அவர்கள் மெளனம் காப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆகவே இத்தகைய தருணங்களில் பொதுமக்கள், அறிவுஜீவிகள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் மதம், சித்தாந்தம், நாடு  ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதோடு காலப் போக்கில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் வழிவகுக்கும்.

Friday, September 28, 2012

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.பாகம் -1

 சொற்பொழிவாற்றல்

1. உள்ளடக்கத்தைத் திட்டமிடலும் தயாரித்தலும்
  அ. படிப்படியான அணுகுமுறை
  ஆ. பயன்படும் தன்மையை அதிகரித்தல்

2. ஒப்புவிக்கும் நுட்பங்கள்: முக்கிய அம்சங்கள்
   அ. பயிற்சி
   ஆ. உடல் மொழி, குரல் மூல மற்றும் பார்வை மூலத் தொடர்பு
   இ. பேச்சை நிறுத்துதல்
    ஈ. சொற்பொழிவாளரின் சுய தோற்றம்

3. கேள்வி -பதில்: சவால்களும் சந்தர்ப்பங்களும்
4. பயன்படும் சொற்பொழிவிற்கான மாதிரிகள்
5. சொற்பொழிவிற்கான சரிபார்க்கும் பட்டியல் (Cheek List)

1. உள்ளடக்கத்தை திட்டமிடுவதும் தாயாரிப்பதும்
     அ. படிப்படியான அணுகுமுறை
1. ஆரம்பத்தில் கருத்தில் கொள்ள  வேண்டியவை
 கேட்போரை அறிந்துகொள்ளுங்கள்

ஓரு உரையை திட்டமிடுவதற்கு முன் முதலாவதாக கேட்போரைப் பற்றி அறிந்துக் கொள்வது அந்த மக்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? சமூக வாழ்நிலை சூழல் இவைகள் தெரிந்திருந்தால் மிக அழகாக அவர்களில் ஒருவனாக நின்று நாம் பேச முடியும்.நேர காலத்தோடு வந்து பிந்திச் செல்வது, கேட்போருடன் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்தவும் அதனால் பேச்சின் மூலம் மேலும் சிறந்த கருத்து பரிமாற்றம் நிகழவும் உதவும்.மாற்று கருத்துடையோருடன் உரையாடுவதினால் அவர்களது கருத்துக்களையும் பெயர்களையும் எமது சொற் பொழிவில் குறிப்பிடுவதன் மூலம் அவர்களது அபிப்பிராயங்களை நாம் மதிப்பதை எடுத்துக் காட்டலாம். சொற்பொழிவில் வழங்கப்பட்ட கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்கும் இது போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடியும்.

பேச்சின் கட்டமைப்பு 
 ஒரு சொற்பொழிவின் பொதுவான மாதிரியொன்றை புறவரை (out line) கிழே தரப்படுகின்றது. ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களுக்குமே பொருத்தமானதென இதனைக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட  சந்தர்ப்பம் அல்லது தலைப்பு காரணமாக வேறொரு கட்டமைப்பிலான சொற்பொழிவு, தேவைப்படலாம். எப்போதும் நன்கு தொகுக்கபட்ட ஒன்றிணைந்த ஒரு சொற்பொழிவின் மூலம் நமது செய்தியைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

விஷயத்தை எடுத்துக் கூறல் 

பேச்சின் தொனிப்பொருளை எடுத்துக் கூற வேண்டும். அதன் அடிப்படை அம்சங்களை விவரித்து அதன் தலைப்பை விளக்க வேண்டும் ஒரு பிரச்சனை சமூகத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது எனவும், கேட்போர் இது பற்றி ஏன் அக்கறை செலுத்த வேண்டும் விளக்க வேண்டும்.

பொருளை பகுத்தாய்தல்

வரலாற்றுப் பின்னணியை விளக்கி கடந்த காலத்திலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை எடுத்து கூறலாம். நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தின் அடிப்படையைக் கொள்ளாமல் சொல்லப்படும் விஷயங்களின் அடிப்படையில் பேச்சின் உள்ளடக்கத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக அமையும். நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனையானது இன்று ஏன் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது என்பதை கேட்பவர்கள் தெளிவாக விளங்க வேண்டும்.

முந்தைய தீர்வுகள் பற்றி விளக்குதல் 

சாத்தியமாகுமிடங்களில், குறிப்பான கடந்த காலச் சம்பவங்களைப் பரீசீலனை செய்யலாம். அவை நமது சமூகத்திருலிருந்தோ அல்லது பிற சமூகத்திற்கு தொடர்புள்ளதாக இருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அவற்றின் வெற்றி அல்லது தோல்வியின் அடிப்படையில் ஆராயுங்கள். பிரச்சனை முற்றிலும் புதிதாக இருந்தால் கடந்த காலப் பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுக் கலந்துரையாடலாம்.

நன்கு திட்டமிட்ட ஒரு உரையானது திருப்திகரமான முன்னுரையுடன் ஆரம்பிப்பதோடு, முக்கியமான அம்சங்களை கொண்டதாக இருக்கும். அத்தோடு பொருத்தமான முடிவை அல்லது  சாராம்சத்தை வழங்குவதோடு, குறித்து ஒதுக்கப்பட்ட கால இடைவெளியில் அது நிறைபெறும். நமது முழுப் பேச்சையும் சமர்ப்பிப்பதற்குரிய விதத்தில் நாம் நமது நேரத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேவையான போது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் கருத்துக்களையும் தரவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. சொற்களை தேர்ந்தெடுத்தால்
  
முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த சொற்களை எப்போதும் பயன்படுத்துங்கள். முதிர்ச்சியுறாத மொழிப் பாவனை நம்மைப் பண்படாதவராக உடனே இனங்காட்டிவிடும். நிகழ்காலப் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடை பிரயோகம்,
எளிமையான மக்களுக்கு விளங்கும் சந்தர்ப்பவங்களும் இருக்கவே செய்கின்றன ஆயினும் அவை கவனமாகத் தெரிவு செய்யப்பட்டுப் பயன்படுத்த வேண்டும்.

முறையாக பயனப்டுத்தபடுகிற பயந்தரக்கூடிய “நேர்த்தியான சொற்பொழிவுக்குரிய சில சுருக்கமான மாதிரிகள் கிழே தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்களை அழுத்தி மீண்டும் கூறுவது. (சிறப்பாக மூன்று முறை)

* சொற்களை தெர்வு செய்யும் போது ஓசை ஒழுங்குடன் கூடிய போக்கைக் கருத்திற் கொள்வது.

* பேச்சு தாளத்தோடு அமையும் வண்ணம் எதுகை, மோனைகளை பயன்படுத்தலாம்.

ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு மக்கள் நினைவிற் கொள்ளத்தக்க சாதுரியமான வசனத் தொடர்களைப் பிரயோகித்தல்.

சிக்கலான கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு உவமையணிகள், உருவகங்கள் ஒப்பீடுகள்,குட்டிக்கதைகள் முதலியவற்றை பயனபடுத்துதல்.

பேச்சாளர் கொண்டுள்ள  நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும் புள்ளி விவரங்களைக் கையாள வேண்டும்.

அறிவையும் உணர்வையும் எழிச்சியுறச் செய்யும் செய்வினை, செயல்வினைகளை உபயோகப்படுத்தலாம்.

ஆரமபத்தில் கேட்போர் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கூற்றுகளை முன்வைத்தல். இறுதியில் நாம் பேசிய எடுத்துக் கொண்ட கருப்பொருளை கேட்போரிடமும் நன்கு பதியச் செய்து நினைவிலிருத்தக் கூடிய முடிவுரையை வழங்குதல்.

அதேவேளை சில கூற்றுகள் பேச்சின் போது தவிர்க்கப்பட வேண்டும். அவைகளை அடுத்த தொடரில் பார்ப்போம். (தொடரும்)

Thursday, September 27, 2012

‘ ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!


ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் “இம்மா” (ஆமாம் சாமி போடுகிறவர்களாக, மற்றவர்களின் நடத்தையைப் பார்த்து தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்கின்றவர்களாக,சுயபுத்தி இல்லாத அடிவருடிகளாக) ஆகிவிடாதீர்கள்.

மக்கள் நல்லது செய்தால் நாமும் நல்லவற்றில் ஈடுபடுவோம்; நன்மையானவற்றை செய்வோம். ஆவர்கள் அநீதி இழைத்தால் நாமும் ஆநீதி இழைப்போம் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள். அதற்கு மாறாக உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.மக்கள் நல்லவற்றில் ஈடுபட்டால் நன்மையானவற்றில் ஈடுபடுவது உம் மீது கட்டாயமாகும். ஆவர்கள் தீயவற்றில் ஈடுபடுவார்களேயானால் அநீதி இழைக்காதீர்கள். அறிவிப்பாளர் : ஹுஸைஃபா (ரலி) நூல்: திர்மிதி.

ஹதீஸ் விளக்கவுரை.

1. எவருக்கு தம்முடைய கருத்தில் நிலைத்து நிற்கின்ற ஆற்றலும் பண்பும் சக்தியும் இல்லையோ, அறிவார்ந்த விவகாரங்களில் மற்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் இம்மஅ என்று அரபியில் சொல்வார்கள். உயர்வு நவிற்சிக்காக இங்கு ‘தே’ என்கிற எழுத்தும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெண்ணை ‘இம்மத்’ என்று சொல்வதில்லை.

2. மற்றவர்கள் எதனைத் தீர்மானிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே நீர் எடுக்கிற எல்லா முடிவுகளும் அமையும் எனில் அது எந்த வகையிலும் பொருத்தமான நடத்தை ஆகாது. மற்றவர்கள் எங்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே  அவர்களுடன் நம்முடைய நடத்தையும் தீர்மானிக்கப்படும் என்பது உகந்த மனப்பான்மை கிடையாது. அதற்கு மாறாக உங்களுக்கு என ஏதாவதொரு கருத்தோ அல்லது ஆற, அமர யோசித்து எடுக்கப்பட்ட  முடிவோ இருக்க வேண்டும். அந்த முடிவிலும் அணுகுமுறையிலும் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும். தவறான நபர்களின் தவறான செயல்கள் பின்பற்றப்படுவதற்கான தகுதி பதைத்தவை அல்ல.

3. அதாவது உம்முடன் மோசமாக நடந்து கொள்கின்றவர்களுடன் நீரும் எல்லை மீறி விடக்கூடாது. அவர்கள் மீது அநீதி இழைத்து விடக்கூடாது. எவராவது உம் மீது அக்கிரமம் இழைத்தால் கொதித்துப் போய் அநீதி இழைத்து விடக்கூடாது. எந்த நிலையிலும் எல்லை தாண்டி விடக்கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமெனில் உம்முடைய பதிலடி எந்த வகையிலும் எல்லை தாண்டி விடக் கூடாது. வரம்புகளை எக்காரணத்தை முன்னிட்டும் மீறக் கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடியாக அக்கிரமம் இழைப்பது எந்த வகையிலும் அழகு கிடையாது. இந்த விஷயத்தில் இஸ்லாம் விதிக்கின்ற பொறுப்புகளையும் கடமைகளையும் முழுமையாகப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அக்கிரமம் இழைக்கப்படும் போது அதனை மன்னித்து மறந்து விடுகிற அணுகுமுறையை மேற்கொண்டு  அக்கிரமம் இழைத்தவரை மன்னித்து விடுவதே விரும்பத்தக்கதாகும். அண்ணல் நபிகளார் (ஸல்) எந்த காலத்திலும் எவரிடமும் தனிப்பட்ட முறையில் பழிக்குப் பழி வாங்கியது கிடையாது. அக்கிரமம் இழைத்தவரை மன்னிப்பதோடு நின்று விடாமல் இன்னும் ஒருபடி மேலாக சென்று அவருக்கு நன்மை செய்தால் அது மிக உயர்வான நடத்தையாகக் கருதப்படும்.
   
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 42: 40)

Tuesday, September 25, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)

பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

இறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.

* வசைமாரிப் பொழிந்தவர்களை

* அவதூறுகள் கிளப்பியவர்களை

* கொலை செய்ய முயன்றவர்களை

* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை

* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை

ஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.

ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.

(நன்றி :எங்கே  அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி)

Monday, September 24, 2012

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள்.

ஊடக பலமும், ஆட்சி ஆதிகார பலமும் இருந்தால் குதிரையை கழுதையாக்க முடியும் கழுதையை குதிரையாக்க முடியும் என்பதற்கான நிகழ்கால ஆதாரம் தான் இந்த சீக்கிய சிறுபான்மை இனத்தினர். வீரஞ்செறிந்த சீக்கியர்களை அப்படியே எதிர்மறையாக காமெடி பீஸ்களாக மாற்றி கேலிக்குரிய சித்திரமாக உருமாற்றி “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் இந்த ஊடகங்களால் பரப்பப்பட்டு,வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). உண்மையில் இந்த சீக்கியர்கள் யார் வரலாற்று பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.
மாரட்டியத்தில் பிராமணப் புரோகிதர்களின் தலைமையில் ஓர் இந்து போரரசை நிறுவ  சிவாஜி முயற்சித்த காலத்தில் வடமேற்கு இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு தேசியப்புத்தெழுச்சி அங்கும்  துவங்கியது. முகலாயர்களின் ஆட்சியின்கீழ் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு துடித்துக்கொண்டிருந்தவர்களும்,சாதிய பாகுபாடுகள் மற்றும் விக்கிரக பூசைகளின் அடிமைத்தனத்திலும். அறியாமையிலும் வீரியமிழந்தவர்களுமாக அன்றாடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த, பாமரர்களான கிராமத்து மக்களும் மலைவாழ் மக்களும், தேச பக்தர்களாகவும் போராளிகளாகவும் உயிர்ப்பலியாளர்களாகவும் ஆக்கப்பட்டு ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் பணி அங்கு துவக்கப்பட்டிருந்தது.
பத்தாவது குருவான குருகோவிந்த் 1675-ல் தான் சீக்கியர்களின் தலைவாரனார். சிவாஜியைப் போல் மக்களுடைய அரசியல் விருப்பங்களை மறந்துவிட்டு வைதிகப் பழமைச்சக்திகளை ‘அஸ்திவாரம்’ போட்டு பலப்படுத்த குருகோவிந்த் முயற்சிக்கவில்லை. காலமெல்லாம் இந்தியாவின் உண்மையான அனைத்துத்தேசிய இயக்கங்களுடையவும் உயிரும் சக்தியுமாக விளங்கிய உண்மையான மகான்களெல்லாம் அறிவுறுத்திய மகத்தான உயர்ந்த கோட்பாடுகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தேசத்தை உருவாக்க குருகோவிந்த் முடிவெடுத்தார். கொள்கைகள், கூட்டுப்படுகொலைகள் மலிந்த 15,16,17 ஆகிய நூற்றாண்டுகளில் கூட இஸ்லாம் சமயத்திற்குச் சாதகமான செல்வாக்கு பலம் இல்லாமலில்லை.அக்காலத்தில் வடஇந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்களும் மகான்களும் இஸ்லாம் சமயத்தின் மகத்துவத்தால் உத்வேகம் பெற்றனர். பொருளற்ற சாதி வேற்றுமைகள் நாசகரமானவை என்றும். பூசை புனஸ்காரம் போன்ற சடங்குகளால் ஆன்மீகப் பலன் கிட்டாது என்றும் கடவுளைப் பல பெயர்களிலும் உருவங்களிலும் வழிபடுவது தவறானதும் மூடத்தனமானதும் என்றும் மக்கள் தீவிரமாக உணரத் துவங்கினர்.

இந்து சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளும் கெடுதல்களும் இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் நிறுவனராகும் நலவாய்ப்புப் பெற்றவர் குருநானக் ஆவார். வழிபடுவதற்கு கண்னுக்குத் தெரியாத ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகவும், வாய்மைக் குணம், தூய வாழ்க்கை, நற்செயல்கள், கடவுளிடத்தில் முழுமையான பக்தியும் அடைக்கலமும் ஆகியவைதான் மோட்சத்திற்கான பாதை என்று குருநானக் போதித்திருக்கிறார். இந்த உலகில் அமைதிக்கும் மறு உலகில் மோட்சத்திற்கும் சாமான்ய உலகியல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு போகத் தேவையில்லை என்று அவர் கூறினார். பல ஆண்டுகள் ஒரு தியாகியும் துறவியும் தவசியுமாக அலைந்து திரிந்த பிறகும் உண்மையான எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய குருநானக் மீண்டும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் உருவாக்கிய மத அடிப்படை சமுதாய,அரசியல் அடிப்படையிலான நியதிகளும் ஆட்சிமுறையும்தான் சீக்கியர்களை இன்றைக்கும் ஒரு ஒருங்கினைந்த சமுதாயமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜி பாவானிதேவியின் அருள் பெற்றவர் என்று கூறி புரோகிதர்கள் நம்பவைத்ததைப் போல், குருகோவிந்த் காளிதேவியின் அருள்பெற்றவர் என்று நம்பவைக்கவும் புரோகிதர்கள் முயற்சித்தனர். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில பிராமணர்களின் தலைமையில் ஒரு நரபலி மேற்கொண்டர்கள். நல்வாய்ப்பால் கள்ளங்கபடமற்றவரும் தைரியசாலியுமான குருகோவிந்த் இதற்கு எல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தன்னுடைய நாட்டையும் மக்களையும் விக்கிரக பூசைக்கும் புரோகிதத் தந்திரங்களுக்கும் அடிமைப்படுத்த அவர் மறுத்துவிட்டார். நான் உங்களைச் சாசுவதமான கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். வேறெதையும் திரும்பிப் பார்க்காமல் அந்தக் கடவுளிடம் மட்டும் அடைக்கலம் நாடுங்கள். அவனுடைய பாதுகாப்பில் வாழுங்கள் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் அவர் உயிர் நீத்தார்.

சீக்கியர்களின் முக்கியமான நம்பிக்கைப் பிரமாணங்கள்:

1. சாசுவதமான ஒரே கடவுளை மட்டும் நம்புங்கள்

2. விக்கிரகங்களையோ, சவக்கல்லறைகளையோ, மரங்களையோ, பூதங்களையோ வழிபடாதீர்கள். ஏழைகளுக்கு உதவுவதோடு, அகதிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.

3. சாதிகள், தொழில் போன்ற பாகுபாடுகளைப் பார்க்காமல் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களைப் போல் வாழ வேண்டும்.

4. ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு எப்போதும் அயுதங்களுடன் இருக்க வேண்டும். பகைவனுக்குப் பயந்து ஓடிவிடக் கூடாது. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

5. கற்பு நெறி, ஆன்மபலம், கட்டுப்பாடு, கொடையுள்ளம்,கடவுளுக்கும் நாட்டுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் குணம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட தூய வாழ்க்கையை மேற்க் கொள்ள வேண்டும்.

6. எல்லா விஷயங்களிலும், தலைமைக் குழுவான ‘கல்சா’ விடம்தான் உயரதிகாரம் இருக்க வேண்டும்.

7. பத்து குருமார்களின் போதனைகள் உள்ளிட்ட நூல்தான் மதப்பிரமாணம்.

8. ஐந்து சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு குழு வேறு யாரை வேண்டுமானாலும் சீக்கியர்களாக்கி குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லாவிதமான ஆன்மீக ஆசிகளுக்கும் உரிமையிருக்கிறது.

10. எல்லோரும் நம்பிக்கையுடன் உழைத்து வாழவேண்டும். சோம்பேறிகளுடனும், கெட்டவர்களுடனும் சேரக்கூடாது.

11. இந்தப் புதிய வாழ்க்கையில் நுழைபவர்கள் எல்லோரையும் சீக்கியர்கள் (சிங்கங்கள்) என்று அழைக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குள்ளயே 80,000 பேர் குருகோவிந்தின் ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். அவர்களுடைய எண்ணிக்கையும் நாளாவட்டத்தில் பெருகியது. இந்தச் சட்டங்கள் அமுலாகியபோது  சீக்கியர்களின் சங்கத்தில் சேர்ந்த ஏராளமான பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். பழைய அனாச்சாரங்களிலும் சாதி வேற்றுமைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து போனதை குருகோவிந்த் வரவேற்றார். அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைக்கிராம மக்களும்,மலைவாழ் மக்களும் சீக்கிய சங்கத்தில் சேர்க்கப்பட்டு நாட்டின் கெளரவமிக்க குடிமக்களாக உயர்த்தப்பட்டனர்.

“சீக்கியர்கள் ராஜபுத்திர வீரர்களைப் போல் தன்மானமும் துணிச்சலுமிக்க ஒரு  மக்கள்  சமுதாயமாக உருமாறினர்.ஒரே சமுதாயம்.ஒரே நம்பிக்கை,ஒரே சமூக வாழ்க்கை,ஒரே அரசியல் அபிலாஷைகள் போன்றவாற்றல் சீக்கியர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.இந்த நவீனமயமாக்கத்தின் ஆழ்ந்த பலன் உடனடியாக வெளிப்பட்டது. சீக்கியர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தும், ஒத்துழைத்தும், வாழுகின்ற துணிகரம் மிக்க மக்களாக உருவாயினர்.அக்கிரமங்களும் ஒடுக்குமுறைகளும் தென்பட்ட இடங்களிலெல்லாம் சீக்கியர்கள் பாய்ந்து சென்று வலிவற்ற எளியோர்களைப் பாதுகாத்தனர். உணவைப் பங்கிட்டு புசித்தும், தள்ளாமை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் தாங்கியும் தழுவியும் குளிப்பாட்டியும் துணிகளைத் துவைத்தளித்தும், மகிழ்ச்சியுடனும் அன்புடனும் ஒருவரை ஒருவர் வரவேற்றும், ஒரே உடன்பிறப்புக்களைப் போல் சீக்கியர்கள் வாழத் துவங்கினர்.”
குருகோவிந்த் அவர்கள் சீக்கியர்களை வலுவான ஒருங்கினைந்த சமுதாயமாக உருவாக்கினார். அடிமைத்தனத்தில் வீழ்ச்சியுற்றுக்கிடந்த மக்கள் சுதந்திரமும், ஜனநாயகமும்,நீதியும்,தியாக உணர்வும் பெற்றனர். முகலாயர்களின் சர்வாதிகாரத்தின் கீழும், இந்து மதத்தின் அவமானத்தைச் சுமந்தும் நிராதரவாக வாழ்ந்து கிடந்த மக்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வெளிப்பட ஆரம்பித்தன. சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், நாட்டுக்காகவும் வாழவும் உயிர்த்தியாகம் செய்யவும் மகத்தான உத்வேகம் பெற்றனர்.

அவர்களைச் சுற்றி காடென வளர்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்தும் அனாச்சாரங்களில் இருந்தும் அவர்கள் விடுதலையடைந்தனர். துணிகரச் செயல்கள் புரிய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். இவ்வாறு வீழ்ச்சியுற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சீக்கியர்கள் காலாகாலத்திற்கு முன்னுதாரண்மாகத் திகழ்ந்தனர்.பிராமணர்கள் கட்டியெழுப்பிய மாரட்டியம் இதற்கு நேர் எதிரான சமூக அமைப்பாக இருந்தது. நம்முடைய நாடு பிராமணக் கொடுங் கோன்மையில் இருந்து தப்பிவிட்டதாகச் சொல்லக்கூடிய தருணம் வரவில்லை. இந்தியாவின் ஏனைய மக்களைப் போலவே சீக்கியர்களையும் அது இன்றளவும் அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கிறது.
(Reference : Chapter XIV - C.A.Natesan & Co., Guru Govind Page 22)

தினமனி,தினமலர், போன்ற ஊடகங்கள் சிறுபான்மையினரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் இயல்புக்கு மாறாக சிறுபன்மையினரை சித்தரிப்பதும் எதோ இயல்பானது எதார்த்தமானது என புரிந்துக் கொள்ளாதீர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணி இவைகளுக்கு உண்டு.

Saturday, September 22, 2012

தமிழி(NHM Writer')ல் எவ்வாறு எழுதுவது?

தமிழி(NHM Writer')ல்  எவ்வாறு எழுதுவது?

நீங்கள் பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப், ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். 

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  1. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  1. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  1. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  1. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  1. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  1. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் பார்க்க கிழே உள்ளது மாதிரி

மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தங்கிலிஷ் முறையில் தட்டச்சு செய்ய Alt Key மற்றும் 2 யையும் சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி நீங்கள் பேஸ்புக்,டிவிட்டர்,ஸ்கைப்,ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். வாழ்த்துகள்.

நன்றி: சகோதரர்  Faizal K.Mohamed 


Wednesday, September 19, 2012

காங்கிரஸும், பி.ஜே.பி-யும் ஒன்னு அறியாத ஈழப்போராட்டவாதிகளின் வாயில் மண்ணு.

இந்தியாவில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ராஜபட்ச பல வழக்கமான எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று(புதன்கிழமை) மாலையில் அவர் தில்லி வந்தார்.  

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடுத்து அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் அவர் வந்தார். சிவப்புக் கம்பள வரவேற்பை மத்திய அரசு அளித்தது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று  மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு ராஜபட்சவுக்கு பிரதமர் இரவு விருந்து அளிக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலையில் தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்கிறார். அங்கு அமைய இருக்கும் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

கங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று மறுபடியும் நிரூபித்து உள்ளது எனவும் எதிர்கட்சியான பி.ஜே.பி புலம்பியது அட ராஜபட்சேவை வரச் சொன்னதே வருங்கால பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்ற சுஜ்மா சுவராஜ் தானுங்கே அப்புறம் மத்தியபிரதேசம் பி.ஜே.பி ஆளும் மாநிலம் அங்குதானே புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.தமிழர்கள் மீது அக்கறையுள்ள பி.ஜே.பி அரசு தடுக்க வேண்டியது தானே என்ற உண்மையை போட்டு சில ஊடகங்கள் உடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் துடித்து போய் அப்படியெல்லாம் இல்லை நாங்க ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமானவர்கள் பழைய வரலாற்றை பாருங்கள் என பச்சை சந்தர்ப்பவாத பொய்யை கூசாமல் சொல்கிறார் பாருங்கள்.
////சென்னை, செப். 5: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடையத் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் இலங்கை அரசையும், அதற்கு துணைபோன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றனர்.///

அடப்பாவிகளா பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லை?? “இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரே கொள்கைதானே? 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றர்களாம் ஆனால் உண்மை என்ன??.

பி.ஜே.பி. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர். (4.2.2009 ல் ஜூனியர் விகடனில் வெளியான பேட்டி)

 இந்திய - இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பில் கங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி - யை ச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பி.ஜே.பி -யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்ரி சாரியும் சென்று வந்தனர். இவர்களுடைய பயணத்துக்கு அரசியல் காரணங்களோடு பொருளாதார, வர்த்தக விவகாரங்களும் காரணம். இந்தியாவும் இலங்கையும் உள்ளார்ந்த பொருளாதாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகளோடு, அரசியல் விவகாரங்கள் குறித்தும் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

சேஷாத்ரி சாரியிடம் இது குறித்து பேசினோம்.
“இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவில்லாத நாடுகள் என்றால். இலங்கையும் பூட்டானும் தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு.பொருளாதார ஒப்பந்தங்களைப் போட நல்ல சூழ்நிலை வரவேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்து தான் முடிவு செய்யப்பட்டது.

நாங்கள் இலங்கையில் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான் இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி -யின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்‌ஷேவையும் அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்‌ஷேவையும் சந்தித்துப் பேசினோம். இப்போது புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் போராடிக் கொண்டு இருக்கிறது. இதில் கிட்டதட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தமிழர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய வசதிகளை செய்து, அவர்களுடைய நம்பிக்கையை அரசுத் தரப்பு பெறவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன் அங்கு ராணுவம் அல்லாத,சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். எற்கனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிகையாக வைக்கபட்டது! ஆனால், இப்படி நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஓர் ஆபத்தும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தான அச்சம் நிலவுகிறது.

அதிபர் ராஜபக்‌ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி -யாக இருந்த காலத்தியேயே அவரை கவனித்து வருகிறோம். பி.ஜே. பி ஆட்சியில் 1999 -ல் பொக்ரான்  அணுகுண்டுச் சோதனை நடந்தபோது, அவர் டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவருடைய விஜயத்துக்கு அப்போதைய அதிபர் சந்திரிகா போன்றவர்கள எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜபக்‌ஷேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இதனால் ராஜபக்‌ஷே இருக்கிறவரை பிரச்சனையில்லை. இலங்கையில் எல்லோரையும் அரவணைத்துப் போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் சிங்களவாதத்தைக் கடைபிடிக்கும் சக்திகள் அதிகாரத்துக்கு வந்தால், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மொழி, மத வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்க அரசியல் சாசனம் மூலமாக நிரந்தரத் தீர்வு காணக் கோருகிறோம்.

ராஜபக்‌ஷே ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் எந்தையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு இங்கே அதிகாரம் கொடுப்பதைப் போல் இலங்கையில் மொழிவாரியாகவோ இனவாரியாகவோ இல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். இதம் மூலம் உள்ளூர் மக்கள் இன, மொழி வேறுபாடில்லாமல் பலனடைய வாய்ப்பிருக்கிறது! என்றவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

“விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பி.ஜே.பி முதலில் சாஃப்டாக இருந்ததே? பால் தாக்கரே போன்றவர்கள் பிரபாகரனை ஹீரோவாக நினைக்கிறார்களே? தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களை பாதுஇகாக்கும் என்று சொல்லப்படுகிறதே?”

“ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம். இதில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை பி.ஜே.பி-யும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராணுவத் தீர்வு காண முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குறிப்பாக, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள். அதோடு, மற்ற தமிழ் அமைப்புகளையும் அழித்து விட்டு, சர்வாதிகார அமைப்பாகச் செயல்படுகின்றனர். இது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதல்ல. அரசியல் தீர்வுக்குப் புலிகள் எதிராக இருக்கின்றனர். தமிழர்கள், சட்டப்படியான அதிகாரம் பெற விரும்புகிறார்கள். புலிகளால் இதற்குத் தடை ஏற்படுகிறது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு பலன் கிடைக்கும்!”

“இலங்கையில் இனி சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லப்படுகிறதே...”

“ இது தவறான வாதம். இலங்கைத் தமிழர்களுக்கு, தாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். இலங்கையில் அந்நாட்டு அரசுகளும் பல தவறுகளைச் செய்துள்ளன. விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளும் தவறுகள் செய்தது. இலங்கையில் சிங்கள மொழியோடு தமிழும் அலுவலக மொழியாக உள்ளது. தமிழர்களும் அரசியலில் பங்கெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற்றுத்தான் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முன்னுக்கு வர முடியும். சிங்கள மக்களை எதிர்த்து, தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது!” என்றார் சேஷாத்ரி சாரி.

சேஷாத்ரி சாரியோடு இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் ரவ்னி தாக்கூரும் சாரியின் கருத்துகளையே எதிரொலிக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானம் குறித்து தாக்கூரிடம் கேட்டோம்.

“ விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறோம். அவர்களுடைய உரிமைகள் கிடைப்பதற்கும் நாம் ஆதரவு கொடுப்போம். பஞ்சாப்பில் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பூண்டோடு அழித்தோம். இப்போது பஞ்சாப் மற்ற மாநிலங்களை விடச் சிறப்பாக இருக்கிறது. அதே மாதிரி இலங்கைத் தமிழர்கள், ‘விடுதலைப்புலிகள்தான் எதிர்காலம்’ என்று நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது!” என்று முடித்தார்.

சரோஜ் கண்பத்
_ ஜூனியர் விகடன்


பின்குறிப்பு: இந்த பேட்டி வெளியானது  (4.2.2009 ல் ஜூனியர் விகடனில்) அதே ஆண்டு . 2009-ல் மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றகளாம்(!?) நம்ம தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அடித்து விடுகிறார்.இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்தை புரிந்துக் கொள்ள இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். கானல் நீரில் மீனை தேடுகின்ற தமிழக ஈழ ஆதரவு போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்வர்களா???