Tuesday, December 9, 2014

வெடிகுண்டு மிரட்டல் - இளம் பெண் சரண்யா கைது!

மதுரை: மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி இந்நெரம்.காம் )

Friday, December 5, 2014

இவரா? இந்த பாபரா? ராமர் கோயிலை இடித்திருப்பார்?

மக்களை மதரீதியாக பிரித்து தங்களின் அதிகார அரசியல் தொழிலை வளர்ப்பதற்காக கால் நூற்றாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன், இராமர் கோயில்.

இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் மதவெறிக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 
ஒரு சமூகத்தை தொடர்ச்சியாக குற்றவாளி சமூகமாக முன்னுறுத்தி அவர்களை எதிரிகளாக கட்டமைத்து அரசியல் செய்ய முனைகிற பாசிச தன்மைகளை ஹிட்லர் முசோலினிடம் நேரடியாக சென்று பாடம் பயின்று நடைமுறைப் படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறுகிறது ஆனாலும் ஜனநாயக சக்திகள் நடுநிலையாளர்களின் உதவியுடன் முறியடிப்போம் விரைவில்.