Sunday, December 29, 2013

இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம்...!

எச்சரிக்கை:  நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம். என்ற தலைப்பில் காலச்சுவடில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்களின் கட்டுரை இது.நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது உங்களோடும் பகிந்து கொள்கிறேன்.
எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரைகளில் கட்டாயமாகச் செய்துதீரவேண்டிய காரியம் ஒன்று உண்டு. டி.ஸ். எலியட் கூறிய ஒரு வசனத்தை எப்படியாவது கட்டுரையில் தக்க இடத்தில் செருகிவிட வேண்டும். அதை நான் முதலிலேயே செய்துவிடுகிறேன். அவரின் Waste Land நூலில் இப்படி ஒரு வாக்கியம் வரும்: ‘முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பார்கள், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாகத் திருடுவார்கள்’. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. இந்தக் கட்டுரையின் உட்பொருளுடன் ஒத்துப்போக நான் அங்கங்கே கேட்டவற்றையும் படித்தவற்றையும் திருடி, திருத்தி, உருமாற்றி எழுதியிருக்கிறேன். ஆங்கிலப் பாதிரியார் William Ralph Inge (1860-1954) சொன்னதுபோல எல்லா அசல் ஆக்கங்களுமே மூலத் தடங்கள் மறைக்கப்பட்ட அபகரிப்புகள்.

வெங்காயம் விலை ஏறிவிட்டது என்ற செய்தியை நுகர்பொருட்கள் பயன்படுத்துகிறவர்கள் பரபரப்பூட்டாத செய்கையாகப் பத்திரிகையில் படிப்பதுபோல்இன்றைக்கு இலக்கியத் திருட்டு தினமும் நடக்கும் சாதாரணச் செய்தியாகிவிட்டது. உலகில் எங்கேயாவது ஒரு இடத்தில் இலக்கியத் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது, இந்தப் பத்தியைக் கணினியில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தைவான் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் Andrew Yang பதவி துறப்பு செய்திருக்கிறார் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அவர் செய்த குற்றம் அவரின் நாட்டின் இராணுவ இரகசியங்களைக் காசுக்கு எதிரிகளுக்கு விற்றதல்ல. பிரதான சீனாவின் விடுதலை சேனையைப் பற்றி இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை இவரின் சொந்தக் கைவண்ணம் அல்ல. களவாடப்பட்டது.

ஒரு காலகட்டத்தில் இலக்கியத் திருட்டு அப்படி ஒரு பெரிய பாரமான குற்றமல்ல. எல்லோருமே எல்லோரிடமிருந்து தாராளமாகச் சிந்தனைகள், கருத்துப் படிவங்கள், வாக்கியங்கள், வசனங்களை இரவல் வாங்கினார்கள். தயங்காமல் தூக்கி எடுத்தார்கள். சேக்ஸ்பியர் பிற படைப்பாளிகளின் வரிகளை மட்டுமல்லாமல் தன் நாடகக் கதாபாத்திரங்கள், கதைப்பின்னல்கள், (A Midsummer Night's Dream, Twelfth Night தவிர) இலக்கியப் படிமங்கள் முதலியவற்றைச் செவ்விலக்கியங்களிலிருந்தும் அவருடைய சமகாலத்துப் படைப் பாளிகளிடமிருந்தும் கூசாமல் எடுத்துக்கொண்டார். அவருடைய Henry VI நாடகத்தின் 6,033 வரிகளில் 4,144 வரிகள் சொந்தக் கைவேலை அல்ல. இதனால் ஆங்கில இலக்கிய மாணவர்கள் தளர்ச்சியடைந்து அழைப்பு மையங்களுக்கு வேலை தேடிப் போகப்போவதில்லை. பொழுதுபோக்குக்காக ஆங்கில இலக்கியத்தில் ஈடுபட்டவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம். நமக்கு, நன்கு அறியப்பட்ட உதாரணம் கம்பர் இராமாயணத்தை வால்மீகியைத் தழுவி எழுதியது.

இந்தக் கட்டத்தில் இலக்கியத் திருட்டு என்ற பதத்திற்குப் பின்னால் இருக்கும் ஆங்கில வார்த்தையின் சொற்பிறப்பியல் (etymology) பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இலக்கியக் களவு பழமையான காரியம். எழுத்துக் கலாச்சாரம் வந்த பிறகு மட்டுமல்ல வாய்மொழி நாகரிகப் படிமமாக இருந்த நாட்களிலும் இந்தச் செய்கை இருந்திருக்கிறது. ஆனால் அதை அடையாளப்படுத்தும் வார்த்தை முதலாம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலச் சொல்லான plagiarism என்பதன் மூலம் இலத்தீன் சொல் plagiarius. இதன் பொருள் ஒரு குழந்தையை அல்லது வேறு ஒருவரின் அடிமையைக் கடத்துபவர். சுருங்கச் சொல்லப்போனால் கடத்தல்காரன், அபகரிப்பவன். ஒருவிதத்தில் திருடன். இலக்கியத்துடன் இந்த வார்த்தையை இணைத்து இதைப் பயன்படுத்தியவர் அதிகம் பிரபலமல்லாத ரோம நாட்டைச் சேர்ந்த கவிஞரான விணீக்ஷீtவீணீறீ. அதுமட்டுமல்ல காப்புரிமைக்காக முதன்முதலாகப் பணம் கேட்டவரும் அவர்தான். இந்தச் செயல் வால்மீகி, கம்பரிடம் இராமாயணத்திற்குக் கூலி கேட்டமாதிரி. அவருடைய கவிகளைத் திருடியவரிடம் வெகுமானம் கேட்டு எழுதிய செய்யுளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய வார்த்தையிலேயே தருகிறேன்:

Fame has it that you, Fidentinus, recite my books to the crowd as if none other than your own.//If you’re willing that they be called mine, I’ll send you the poems for free.//If you want them to be called yours, buy this one, so that they won’t be mine.

தற்படைப்பாற்றல் (originality) ஒரு அறிவியல் சொத்துரிமையாக இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் காப்புரிமைச் சட்டமும் அமுலாக்கப்பட்டது. படைப்பாளி புதிது ஆக்கும் ஆற்றலுடையவர் மட்டுமல்ல அவரின் பிரதிகள், சிந்தனைகள், கருத்துகள், தனி நபரின் அறிவியல் சொத்தாகக் கருதப்பட்டது. அத்துடன் இந்தத் தனிச் சொத்துக்களை உருவாக்கிய அவரே அதன் உரிமையாளர். ஆகவே அவரின் கதைகள், அபிப்பிராயங்கள், படைப்புகள், நூல்களை விற்று சம்பாதித்து வாழ்க்கை நடத்தலாம் என்ற கருத்தும் உருவானது.

ஆங்கில அடிச்சொல் வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் இலக்கியத் திருட்டு என்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. திருட்டு இலக்கியத்தில் மட்டுமல்ல, சினிமா, இசை, ஓவியம், நடனம், முனைவர் மற்றும் ஆவண ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் உண்டு. ஆகையினால் இலக்கியத் திருட்டு என்பதைவிட ஆக்க, அல்லது படைப்பு அபகரிப்பு என்பதுதான் சரியான சொல்லாகப்படுகிறது.
ஆக்க அபகரிப்பில் பல வகைகள் உண்டு. ஒன்று அப்படியே அப்பட்டமாக வரிக்கு வரி, வசனத்திற்கு வசனம், பத்தி பத்தியாகப் பிற நூல்களிலிருந்து அப்படியே தூக்கிவிடுவது. இதைத்தான் காவியா விசுவநாதன் செய்திருந்தார். How Opal Mehta Got Kissed, Got Wild, and Got a Life என்ற அவரின் நாவல் Megan McCafferty எழுதிய Sloppy Firsts ñŸÁ‹ Second Helpings என்ற புதினங்களிலிருந்து திருடப்பட்டது. இரண்டாவது வகை சூட்சுமமானது. உதாரணம் மூலம் விளக்குகிறேன். மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முத்துமோகன் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் மார்க்ஸின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த எடுத்துக்காட்டு உங்களுடைய ஆராய்ச்சிக்கும் உகந்ததாக இருக்கிறது. முத்துமோகன் சுட்டிக்காட்டிய பகுதியை நீங்கள் மார்க்ஸின் மூலத்தைப் படிக்காமல் ஏதோ நீங்கள்தான் இதனைக் கண்டுபிடித்த மாதிரி அப்படியே உங்களது கட்டுரையில் புகுத்திவிடுகிறீர்கள். இதுவும் ஒரு ஆக்க அபகரிப்புதான். ஆனால் மிக நுண்மையானது. இதை இரண்டாம் நிலை ஆக்க அபகரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான நுண்ணயம் வாய்ந்த இரவல் வாங்கல்கள் பெரும்பாலும் சர்வகலாசாலை ஆய்வறிக்கைகளில் காணக்கிடைக்கும். கல்லூரிகளில் நடக்கும் அறிவியல் திருட்டு, ஆராய்ச்சி மோசடிகள் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

திருடுவதற்கும் திரும்ப மீள எழுதுவதற்கும் வித்தியாசமுண்டு. ஆகையினால் இரண்டையும் ஒன்றாக எண்ணிவிடாதீர்கள். சில வேளைகளில் இந்த மீள் எழுதல் மூலத்தையும் மிஞ்சிவிடுகிறது, தலைகீழாக்குகிறது. கவிழ்த்தும்விடுகிறது. இரண்டு ஆங்கில உதாரணங்கள். Arthur Laurentsஇன் இசைநாடகமான West Side Story சேக்ஸ்பிரியரின் Romeo and Julietஐ தழுவியது. சேக்ஸ்பிரியரின் இந்தக் காதல் கதைக்கு மூலப்படிவம் பாபிலோன் நாட்டு காதலர்கள் பற்றிப் பொது யூகம் 43 முன் தொடங்கி பொது யூகம் 17/18 வரை வாழ்ந்த ரோமாபுரிக் கவிஞர் ளிஸ்வீபீ எழுதிய Pyramus and Thisbe, என்ற கவிதையாகும். ஆனால் Arthur Laurents வெறும் புளித்துப்போன காதல் கதையாக்காமல் 50களின் நீயுயோர்கின் இரு பதின்ம வயது தாதாக்களின் உள்சண்டை மோதலாக இந்த இசைக்கூத்து சொல்லப்படுகிறது. போர்டோ ரீக்கோ இளைஞர்களுக்கும் போலீஷ் அமெரிக்க வாலிபர்களுக்குமிடையே காணப்பட்ட இன உலைவு இந்த இசைநாடகத்தில் பிரத்தியட்சமாகத் தலை தூக்கி நிற்கிறது. சேக்ஸ்பிரியரின் மூலத்தில் இந்த இன முரண்பாடு இல்லை. மற்றது Elsie V. Aidinoff இன் நாவலான The Garden. ஆதாம் ஏவாள் கதையைப் பின்பற்றி எழுதப்பட்டது. ஆனால் வேதாகம கதைக்கும் நாவலுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. பழைய ஏற்பாட்டு கதையில் சர்ப்பம்தான் வில்லன். ஆனால் எடினொவ்வின் மீள்சொல்லலில் கடவுள்தான் அச்சமூட்டுகிற, கோரமான ஆளாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமா வில்லன் போல் வெள்ளை வேட்டியும் குத்துவாளுடனும் நிற்கிறார். இந்தக் கடைசி வரி மூலத்தில் இல்லை. உங்கள் உணர்ச்சியை ஈர்க்க நான் சும்மா சேர்த்துக்கொண்டது. அதுமட்டுமல்ல ஏவாள் தந்தையர் மரபுக்கு இணங்கி நடக்கிற மாதுவாகச் சித்தரிக்கப்படவில்லை. சுய அறிவுள்ள சுட்டிப் பெண்ணாகத் தோன்றுகிறார். கனியைச் சுவைத்ததினால் மானிடம் கருணையிலிருந்து வீழ்ச்சி அடையவில்லை. விமோசனம் அடைகிறது. கிறிஸ்தவ வேதம் எழுதியவர்கள் நினைத்துப் பார்க்காத செயல் இது. மோசமான மீள் எழுதல்களும் உண்டு. Shashi Tharoor Þ¡ The Great Indian Novel. இந்தியக் காவியமாகிய மகாபாரதத்தை இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பின்னணிக்குத் தாரூர் உருசெப்பம் செய்திருந்தார். விளைவு நாவல் குழந்தைத் தனமாகக் காணப்படுகிறது. அசலிலிருக்கும் தார்மீக இருவுளப்போக்கு தாரூரின் புதுவடிவில் இல்லை.

கிறிஸ்டோபர் புக்கரின் The Seven Basic Plots: Why We Tell Stories என்ற நூலின் தலைப்பில் காணப்படுவதுபோல் ஏழே ஏழு தொல்கதை அமைப்புருக்கள் (archetype) இருக்கிறதென்கிறார். அவையாவன: அரக்கரை ஆட்கொள்வது, தேடல், நீள்பயணமும் திரும்புகையும், குடிசைவாசி குபேரனாவது, மறுவாழ்வு, மகிழ்ச்சி தரும் கதைகள், துன்ப காவியங்கள். என்னதான் இலக்கிய கர்த்தாக்கள் தங்களுடைய படைப்புகள் தங்களுடைய சுயமான எண்ணங்கள், தற்படைப்பாற்றல்கள் என்று கூறினாலும் அவர்களுடைய எழுத்துவீச்சு இந்தக் குறுகிய ஏழு அல்லது மிஞ்சிப்போனால் ஒரு பத்து தொல்கதை அமைப்புருக்களுக்கிடையேதான் செயல்படுகின்றன, சுழல்கின்றன. வேதாந்தி Ludwig Wittgenstein வேறு கட்டத்தில் சொல்லியது இங்கேயும் பொருந்தும்: தற்படைப்பாற்றல் என்பது தெரிந்தவற்றை வேறுவிதமாக வரிசைப்படுத்துவதாகும். தற்படைப் பாற்றல் பற்றிய வரையறை எப்போதுமே நிரந்தரமானதல்ல. ஒருவரின் மனந்திறந்த புகழுரை இன்னொருவரின் பதிப்புரிமை. ஒருவிதத்தில் மற்றைய ஆக்கங் களிலிருந்து திருடாதவர்கள் ஒருவருமே இல்லை.

இன்றைய பிரபல ஆங்கிலேயே எழுத்தாளர்களான P.D.James, Graham Swift, Ian McEwan, Andrew Motion ஏதோ ஒருகட்டத்தில் மற்றவர்களின் இலக்கியத்திலிருந்து களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். Harry Potter நாவல்கள் எழுதிய R.K. Rowling கூட தப்பவில்லை. அமெரிக்கரான Nancy Stouffer அவர் 1984இல் எழுதிய The Legend of Rah and the Muggleதான் ஹாரி பாட்டர் நாவல்களுக்கு முதுப்பிரதி (ur-tex) என்கிறார். டான் பிரவுன் விசிறிகளுக்கு அவரை நீதிமன்றம்வரை இழுத்தது ஞாபகத்தில் இருக்கும். இவரின் சதித்திட்ட நாவலான The Da Vinci Code îƒèÀ¬ìò The Holy Blood and the Holy Grail Michael என்ற சரித்திர நூலிலிருந்த சில சம்பவங்களைத் திருடியதாக Baigent and Richard Leigh வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அப்படி டான் பிரவுன் களவாடிய சம்பவம் இயேசு திருமணமானவராக மகதலேனா நாட்டு மரியாளுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தது. கிறிஸ்தவ திருமறையிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட ஆகமமான The Gospel of Philipä படித்தவர்களின் இரத்த அழுத்தம் இந்த வெளிப்பாட்டினால் பாதிக்கப்படப்போவதில்லை.

ஆக்க அபகரிப்பு தனி ஆளின் முற்றுரிமை அல்ல. ஆட்சியாளர்களும் செய்வதுண்டு. அதிகம் யோசிக்காமலேயே நினைவுக்கு வருவது ஈராக் யுத்தத்திற்குச் சாதகமாக முன்னாள் ஐக்கிய ராஜிய பிரதமர் டோனி பிளையர் தயாரித்த ஆதாரச் சான்று. ஐயத்துக்குரிய ஆவணக்கோப்பு (dodgy dossier) என்று ஊடகத்தினால் எள்ளலாக நாமம் சூட்டப்பட்ட இந்தப் பத்திரம் Ibrahim al-Marashi என்ற முதுகலை மாணவரின் Iraq's Security and Intelligence Network: A Guide and Analysis என்ற ஆய்வேட்டிலிருந்து திருடப்பட்டது. மூன்றாவது வகுப்பு மாணவன்கூட விடாத பிழையை அரசு செய்திருக்கிறது. மூலத்திலிருந்த அச்சுப் பிழைகள் அப்படியே பிரித்தானிய அரசு அறிக்கையிலும் காணப்பட்டது.
படைப்புகள் களவாடப்பட்டது என்று நிரூபிக்கப் பட்டபோது குற்றவாளிகள் சொல்லும் சாக்குப் போக்கு இவற்றில் ஒன்றாக இருக்கும்: ஐயோ நான் தெரிந்து செய்யவில்லை; அந்தப் புத்தகத்தையே நான் படிக்கவில்லை; யார் அந்தக் கதாசிரியர் கேள்விப்படவே இல்லையே. கைசலிக்க எழுதிய களைப்பினால் மேற்கோள் குறிகள் போட மறந்துவிட்டேன். இன்றைய கணினி நாட்களில் இற்றைப்படுத்தப்பட்ட சாக்கு நீண்ட நேரம் திரையைப் பார்த்ததினால் கண்கள் தொய்ந்துவிட்டன. ஆகையினால் அடிக்குறிப்புகள் சேர்க்க மறந்துவிட்டேன். இவற்றைவிட திருடிய இரண்டு படைப்பாளிகள் சொன்ன விடை புதிதாகவும் அசலான எண்ணமாகவும் எனக்குப்படுகிறது. இந்த இரண்டுக்குமே சொந்தக்காரர்கள் ஜெர்மனிய நாட்டவர்கள். ஒருவர் அரசியல்வாதி மற்றவர் பதின்ம இலக்கியம் எழுதுகிறவர். Bonn University ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரின் முனைவர் ஆராய்ச்சி திருடப்பட்டது என்று அவரின் முனைவர் பட்டம் சர்வகலாசாலையின் கல்வித் தகமையின் நாணயத்திற்குக் களங்கம்

விளைவிக்கிறது என்று ரத்து செய்த போது Jorgo Chatzimarkakis சொன்னது: ‘நான் திருடியதாகச் சொன்ன அதே வார்த்தைகளை வேறுவிதமாகப் பொழிப்புரை செய்திருக்கிறேன். எல்லாப் பனுவல்களுமே பரஸ்பர ப்பிரதியுறவுகொண்டவை’ (intertextual). இவர் அறிவியல் ஆய்வேட்டிலிருந்து திருடிய மூன்றாவது ஜெர்மனிய அரசியல்வாதி. எல்லா அரசியல் வாதிகளுக்கும் நேர்மையுணர்வில் ஏதோ ஒரு தொளதொளப்பு இருக்கும்போல் தெரிகிறது. தமிழக அரசியல்வாதிகளுக்கு 3நி ஏலம். ஜெர்மனியர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

கதாசிரியர் Helene Hegemann சொன்ன விளக்கம் இதைவிட மேலானது. இவர் எழுதிய Axolotl Roadkill என்ற நாவல் Strobo என்ற நூலின் சாயல்கள் இருப்பதாக அம்பலப் படுத்தப்பட்டபோது சளைக்காமல் இவர் சொன்ன பதில்: "நான் அபகரித்த சங்கதிகளை மூலத்தைப் பார்க்கிலும் முற்றும் வேறான தனித்தன்மை வாய்ந்த சூழமைவில் பொருத்தியிருக்கிறேன். மூலத்திலிருந்து எடுத்த பொருட்களுக்குப் பொருத்தமான கதை ஓட்டத்தை எனது நாவலில் உருவாக்கியதுதான் புதுமை".இவரின் நாவலில் கதாபாத்திரம் சொல்லும் ஒரு வசனம் இன்றைய மீள் கலப்புறு கலாச்சாரத்தின் எண்ணத்துடன் இசைந்துபோகிறது, ஒத்துப்போகிறது: "பெர்லின் நகரில் எல்லாவற்றையும் எல்லாவற்றுடனும் கலந்துவிடுகிறோம். என்னுடைய உள்ளார்ந்த நோக்கை எதிரொலிக்கும், என்னுடைய கற்பனையை வேகமாக தூண்டிவிடும் எந்த நாவலானாலும் சினிமாவானாலும் இசையானாலும் ஒளிப்படமானாலும் கவிதையானாலும் அப்படியே சிரமம் இல்லாமல் திருடிவிடுவேன்".

அறிவியல் சொத்துரிமையை இன்றைய கணினி, வலைத்தள நாட்களில் கண்காணிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இன்றைய தலைமுறை இணயத்திலிருந்து கத்தரித்து ஒட்டும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். மீள் சேர்த்திணைவு (re-mix) இவர்களுக்கு சாம்பாரும் இட்லியும்போல் இயல்பானவை. மறு கலவையாக்குவதில் எது தக்கவை எது தகாதவை என்பதில்கூட இவர்களிடையே தடுமாற்றம் இருக்கிறது. நன்னெறி சார்ந்த ஒழுக்க நெறிப் பிரச்சினையாக இவர்களுக்குத் தெரிவதில்லை. ஒருவிதத்தில் வார்த்தைகள், எண்ணங்கள், கருத்துக்கள் தனி ஆளுக்குச் சொந்தமானவை அல்ல. பொதுவானவை. இவற்றைப் பார்க்கும் பார்வையிலும் வெளிப்படுத்தும் விதத்திலும்தான் படைப்பாளியின் தனித்தன்மை தெரிகிறது. இந்தத் தனித்தன்மைகூட ஒரு இருளார்ந்த, மங்கலான சமாச்சாரம். தற்படைப்பாற்றல் என்பது படித்த, கேட்ட, அறிந்த ஆதாரங்களை, மறைத்து, மூடி, புதைத்துவிடுவதே. ஆகையினால் இன்றைய பிரச்சினை மூலப்படிவம் பற்றியதல்ல, நேர்மை பற்றியது. படைப்பாளியின் உள் எண்ணம் பற்றியது. ஆக்கியோனின் இலக்கிய யோக்கியதை பற்றியது. இதில்தான் காவியா விஸ்வநாதனும் இவரைப் போன்ற மற்ற இலக்கியத் திருடர்களும் தவறிவிடுகிறார்கள்.

கடைசியாக, படைப்பாளிகள் கேட்க விரும்பாத, அவர்களுக்கு வருத்தமுண்டாக்கும், உளமுறிவு தரும் சில மேற்கோள் வாசகங்களை இங்கே தந்து இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். Roland Barthes எழுதிய The Library of Babel என்ற வாசகசாலை பற்றிய சிறுகதையில் அங்கே காணப்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றி வர்ணிக்கும்போது அவை மாற்றீடு செய்ய முடியாதவை, தனித்தன்மையானவை என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய அடுத்த வசனம் கவனத்திற்குரியது. தான் படைப்பது எல்லாம் அசலைவிட மிஞ்சிய அசல் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்குக் கவலை தரும். அந்த வரி: ‘ஆனால் அந்த நூல்களிடையே காணப்படும் வித்தியாசங்கள், ஒரு சில கால்புள்ளிகளும் சில எழுத்துக்களுமே’. வேண்டுமென்றே எல்லோரையும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க இதழாளர் James Atlas சொன்னதையும் இங்கு நினைவூட்டுகிறேன்: ‘எந்த இலக்கியமுமே திருட்டுதான்’. இதையே வேறுவிதமாக பொதுயூகத்திற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எபிரேய பிரசங்கியார் சொல்லி இருந்தார். இந்தப் பிரசங்கியார் குவளை அரைபாதி நிரம்பியது என்று நினைக்கிறவர் என்றுபடுகிறது. அவர் பண்டைய நாட்களில் பிரகடனப்படுத்திய வார்த்தைகள்: ‘சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை’.

நன்றி : காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-165/page21.asp )

பொருளை விட்டு அருளைத் தேடியவர்: சஹாபாக்கள் வரலாறு.

நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:272)

சுஹைப் (ரலி) ரோமபுரியிலிருந்து மக்கா வந்து இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இறைத்தூதரை ஆழமாக நேசித்தவர். இறைநெறியை வாய்மையாகப் பின்பற்றியவர்.

நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தவுடன் சுஹைபிற்கு மக்காவில் இருப்பு கொள்ளவில்லை. மதீனா செல்வதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். ஒருநாள் மதீனா செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்ட செய்தி அறிந்த மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆவேசமடைந்து அவரைப் பின்தொடர்ந்து மடக்கி விடுகின்றனர்.

“ சுஹைபே! நீரோ வெளியூரிலிருந்து வந்தவர் உமது சொத்துக்கள் எல்லாம் எங்களது பணத்தால் உருவானவை. நீர் மதீனா செல்வதாயிருந்தால் உம்முடைய உடமைகளையும் செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என குறைஷியர் கூறியதைக் கேட்ட சுஹைப் (ரலி) அவர்கள் “ உங்களுக்கு எனது செல்வமும் சொத்துக்களும்தான் தேவை என்றால் அவற்றை இழப்பதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதைக் கேட்ட மக்காத்து இறைநிராகரிப்பாளர்கள் அதிர்ந்து போயினர். சுஹைபோ எவ்விதச் சலனமுமில்லாமல் மதீனா நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

மதீனா சென்றடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) சுஹைபை வரவேற்று பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:207)

“சுஹைபே! உமது வியாபாரம் வெற்றி அடைந்து விட்டது” என வாழ்த்து கூறி நபியவர்கள் வரவேற்றார்கள்.

இதே சுஹைப் அவர்கள், உமருக்கு அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக இமாமத் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஜனாசா தொழுகையையும் சுஹைபே முன்னின்று நடத்தினார்கள்.

இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் படிப்பினைகள்:

இறைவழியில் அனைத்தையும் துறப்பது நஷ்ட்டமல்ல: லாபம்தான் என்பதை உணர்ந்து செயல்படுத்திக் காட்டியவர் சுஹைப் (ரலி). தற்காலிக வாழ்வை விட நிரந்தரமான மறுமை வாழ்விற்கு முன்னுரிமை அளித்தவர்.