Friday, March 29, 2013

ஒரு நடிகை உண்மையான நாயகியாக: Firaaq (2009) – திரைப்பார்வை


முதலில் ஒரு வண்டி நிற்கிறது வண்டியில் இருந்து உடல்கள் கொட்டப்படுகிறது. இருவர் அந்த உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வண்டியிலும் பிணக்குவியல் வந்து கொட்டிவிட்டு போகிறது.
எல்லாமே இஸ்லாமியர்களின் உடல். அந்த குவியலில் ஓர் இந்து பெண்ணின் உடலை பார்த்தவுடன் அடக்கம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு கோபம் வந்து இறந்த உடலென்றும் பார்க்காமல் கடப்பாரையால் வெட்ட போகின்றான். இப்படி தொடங்குகிறது முதல் காட்சி. நடித்தவர்கள் நம்ம ஊர் நாசரும் இன்னொரு இந்தி நடிகரும்.
ஒரு நடிகையாக நடிக்காமலும் தன்னால் திரைக்குப்பின்னாலும் சாதிக்க முடியும் என நிருபித்திருக்கிறார் “அழகி” நந்திதா தாஸ். அவர் எடுத்து கொண்ட கதைக்களம் குஜராத் கலவரம்.
Firaaq – என்ற உருது வார்த்தைக்கு பிரிவும் விருப்பமும் என பொருள்படும். இந்த படம் நந்திதா தாஸ் முதன் முறையாக அவர் இயக்கி இருக்கும் படம். எழுத்து இன்னொருவருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார். இது தொடக்கம், முடிவு இல்லாதை கதை என்ற ப்ரேமுக்குள் வராமல் சில சம்பவங்களின் தொகுப்பாக எடுத்து இருக்கிறார்.
முதலில் சமீர் என்ற இஸ்லாமிய பணக்கார இளைஞன் இந்து பெண்ணை திருமணம் செய்தவன். கலவரத்தில் அவனுடைய கடை சூறையாடப்பட்டுவிட மேலும் போகும் இடமெல்லாம் அவனுடைய அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய சூழ்நிலை. கணவன் மனைவி இருவரும் பயந்து வீட்டை காலி செய்து டெல்லிக்கு இடம்பெயர முடிவெடுத்து செயல்படுகின்றனர்.
இரண்டாவதாக மிடில்க்ளாஸ் இந்து குஜராத்தி குடும்பம். கலவரத்தின் போது கதவை தட்டிய இஸ்லாமிய பெண்ணை வீட்டிற்குள் விட்டு காப்பாற்றாமல் விட்டதால் குற்ற உணர்ச்சியுடன் தனக்கு தானே சூடு போட்டுக்கொள்ளும் குடும்பதலைவி, கடைகள் சூறையாடலின் போது கூட்டத்தோடு கூட்டமாக திருடிம் அவன் கணவன், ஏற்கனவே கற்பழிப்பு கேஸ் குற்றம் சாட்டப்பட்ட அவனின் தம்பி.
கலவரத்திற்கு பயந்து வெளியே தங்கியிருந்து வீட்டிற்கு வந்தால் வீடு நாசமாக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய குடும்பம். வீடு நாசமாக்கபட்டதற்கு இஸ்லாமிய பெண் பக்கத்து வீட்டு பெண்ணையே சந்தேகப்படுவது என போகிறது.
இன்னொன்று மதங்களை கடந்து பழகும் இஸ்லாமிய பழம் பாடகர் மற்றும் அவர் சந்திக்கும் கலவரம்.
கண்முன்னே குடும்பம் எல்லோரும் கொல்லப்பட தந்தை மட்டும் வெளியே கொல்லப்பட்டது தெரியாமல் தந்தையை தேடும் சிறுவன்.
இதற்கிடையில் பழிவாங்கவும், பாதுகாப்புகாகவும் துப்பாக்கியை தேடும் சில இஸ்லாமிய ஆண்கள்.
இப்படி பல தளத்தில் கதை நகர்கிறது. அங்கங்கே தொட்டுக்கொண்டு இறுதியில் படம் முடிகிறது.
பாடகராக நடித்துள்ள நஸ்ருதீன் ஷா அருமையாக நடித்துள்ளார். அதிலும் டிவி பார்த்த பின்பு அவர் கலங்குவது அருமை.
நடுத்தர இந்து குடும்பத்தலைவியாக தீப்தி நாவலின் நடிப்பு பிரமாதம். அனாதை இஸ்லாமிய சிறுவனுக்கு ஆதரவு கொடுப்பதாகட்டும் தான் தாக்கப்பட்டு அதை பார்த்து அந்த சிறுவன் தப்பிக்கும் போது இயலாமையினால் கோபப்படுவதாகட்டும். சிறப்பாக செய்துள்ளார்.
இந்த கலவரங்களில் போலிஸின் பங்கும், அவர்கள் இஸ்லாமியர்களிடம் “ வேண்டும் என்றால் பாகிஸ்தான் போங்க” என்பது எல்லாம் கலவரத்தின் சில காட்சிகளை படம் பிடித்து காட்டுகிறது.
தெருவோர சாப்பாட்டுக்கடைக்காரன் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த மதவெறியை தன்னிடம் சாப்பிடும் பணக்கார முஸ்லீமிடம் இந்து என நினைத்து வெளிப்படுத்தும் இடமும் பிறகு சமாளிப்பதுவும் ரசிக்கதக்கது.
இறுதியாக நம்பிக்கையூட்டும் விதமாக சில காட்சிகளை முடித்துவைப்பது நன்றாக இருக்கிறது.
ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் – நம்ம ஆள் கலக்கியிருக்கிறார்,
கலை – லோ பட்ஜெட் படம் போல. பரவாயில்லை.
இசை – தேவையான இடங்களில் அமைதி காத்திருக்கிறது.
ஒரு கலவரத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்பதை விட சந்தர்ப்பங்களில் அந்த மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுகாட்டியிருக்கும் படம். கலவரத்திற்கு பின்னான சாதாரண மக்களின் வாழ்க்கையை காட்டியிருக்கும் படம் இது. உலக அளவில் சில விருதுகளையும் வென்றுள்ளது.
கலவரத்தின் நிழல்
பார்க்க வேண்டிய படம்.
Firaaq – Bire Eye view for Gujarat Riot in ordinary peoples life.

Friday, March 15, 2013

எனது உடற்பயிற்சி பதிவை திருடிய மாலைமலர்.

திருட்டுகளில் மோசமான திருட்டு ஒருவரின் எழுத்துகளை திருடுவது அதிலும் உடலை வருத்தி பயிற்சி செய்து காட்டிய உழைப்பையும் திருடி இருக்கிறது மாலைமலர் என்கிற முன்னணி பத்திரிக்கை. எங்கு எடுத்தது என்று போடுவது அல்லது நன்றி போடுவது தானே எழுத்துலக ஒழுங்கு
பார்க்க ஸ்கிரின் ஷாட்
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். 

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. 

திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. 

அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம். 

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......

இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.


மேலேயுள்ள எழுத்துக்கள் அப்படியே நான் எழுதியது பார்க்க எனது பதிவு

http://www.valaiyugam.com/2011/02/2.html

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2

பதிவர்களுக்கு அவசர(வைரஸ்) எச்சரிக்கை.

உங்கள் தளத்தை உடான்ஸ் திரட்டியில் இணைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள் அதில் மால்வேர்(Malwarae ) வைரஸ் இருப்பதாக எச்சரிக்கிறது. அதனால் உங்கள் தளம் கூகுள் குரும் இயங்கு தளத்தில் ஓபான் ஆகாது.

எனது தளம் அப்படித்தான் எச்சரித்தது அதனை நீக்கிய பிறகு தான் வேலை செய்தது பார்க்க ஸ்கிரின் ஷாட்.

உடான்ஸ் திரட்டியை நீக்குவது எப்படி?

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.


இதை எளிமையாக கண்டுபிடிக்க f3 பட்ட்னை கீ போர்டில் அழுத்தி   மேலே வரும் பாக்ஸில் கொடுத்தால் எளிமையாக கண்டுபிடித்து விடலாம் பார்க்க ஸ்கிரின் ஷாட்


கிழேயுள்ள உடான்ஸ் கோடிங்கை கண்டுபிடித்து அழித்து விடுங்கள் அதன்பிறகு வைரஸ் எச்சரிக்கை வராது. இந்த வைரஸ் எச்சரிக்கை கூகுள் குரும் இயங்குதளத்தில் மட்டும் தான் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Mozila Fair Fox போன்ற இயங்குதளங்களில் வருவதில்லை.

Wednesday, March 6, 2013

அண்ட புளுகன் மாலைமலரும் ஆகாச புளுகன் தினமணியும்

ஒரு பொய்யை தொடர்ந்து சொல் உண்மையாகிவிடும். கோயபல்ஸ் 
ஒரு பொய்யை தினமும் சொல் உண்மையாகிவிடும். தினமணி,மாலைமலர்,தினப்பத்திரிக்கை

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.

இதே சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தினமனி,தினமலர், மாலைமலர் போன்ற ஊடகங்கள் சுறுசுறுப்பாகி கொட்டை எழுத்தில் 

இஸ்லாமிய தீவிரவாதி கைது கூடங்குளம் 
அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா? 

என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டையே பயமுறுத்தி இருக்கும். இதை எதோ மிகைப்படுத்தி சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முந்தைய அவர்களின் நடைமுறை அதுதான்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்டபோது தினமலர் வெளியிட்ட புகைப்படம்
“அணு உலை மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு” இப்படித்தான் செய்தி வந்தது.

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்ட செய்தியை மிகவும் அமுக்கி வாசித்ததும் இல்லாமல் இந்த பயங்கரவாதியையும் முஸ்லிமாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்த ஊடக நரித்தனத்தோடு யானையை சோற்றில் மறைக்க நினைத்த சதியை பாருங்கள்.சங்கரை ஷாருக்கான் ஆக்கிய மாலைமலரும்,தினமணியும்.மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங். இவன் அண்ட புளுகன் என்றால் ஆகாச புளுகன் தினமணியில் - ஷாருக்கான் என்பவன் கைது.முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் அசிங்கப் பட்டு போய் விடுகிறது. ஆனாலும் இவர்கள் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தை தீவிரவாதிகளாக்கி திட்டமிட்டு குறிவைத்து இயங்குகிறார்கள். மேலே உள்ளது தினந்தந்தி

உள்ளே சொல்வது... //வெடிகுண்டு போன்ற பொருளை//, 
ஆனால்... தலைப்பில்.. அந்த "போன்ற" மட்டும் மிஸ்ஸிங்..!

மேலும் சில ஆங்கில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமாக வந்த செய்திகள் இந்த பத்திரிக்கைகளில் எங்குமே ஷாருக்கான் என்கிற பெயர் இடம் பெற வில்லை.

பார்க்க சுட்டிகள்:

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F316055%2Fone-more-held-planting-bomb.html&h=zAQFSknm3

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fnews%2Futs%2Fman-arrested-over-planting-of-bomb-like-object-in-puducherry_832031.html&h=WAQFuk0qW

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnews.outlookindia.com%2Fitems.aspx%3Fartid%3D791089&h=JAQExa8e4

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Fwire-news%2Fone-more-held-for-planting-bomb-like-substancetrain_833253.html&h=7AQHUheXq

Tuesday, March 5, 2013

மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!


திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில்  வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா?  போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும்   கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Monday, March 4, 2013

இலாஹ் - இறைவன். சொற்பொருள் ஆய்வு.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

பல இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்களுடைய இறைமையியல் தத்துவங்கள் சரியாக தெரியாமல் இருக்கிறார்கள். விளைவு தர்ஹா வழிபாடு போன்ற ஒரிறைக்கு எதிரான திசை நோக்கி போய் விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான விளக்கமளிப்பதற்காகவே இப்பதிவு.


குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘இலாஹ்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.


அலீஃப், லாம், ஹே என்பது இந்தச் சொல்லின் மூலமாகும். இந்த மூலத்தைக் கொண்டு அகராதியில் வந்துள்ள சொற்கள் பின்வருவன:

اله اذا تحير
வியப்பும் ஆச்சரியமும் கொண்டான்.

الهت الى فلان اي سكنت اليه
அவனுடைய பாதுகாப்பில் சென்று அல்லது அவனுடன் தொடர்பு கொண்டு நான் அமைதியும் திருப்தியும் அடைந்தேன்.

اله الرجل يأله اذا فرغ من امر نزل به فألهه به غيره اي لجاره
மனிதன் ஏதோ துன்பம் அல்லது துயரத்தின் வருகையால் அச்சமுற்றான். அடுத்தவன் அவனுக்கு அடைக்கலம் வழங்கினான்.

اله الرجل اتجه اليه لشلة شوقه اليه

மனிதன் அடுத்தவன் மீது கொண்டுள்ள ஆர்வ மிகுதியின் காரணத்தால் கவனிப்பைச் செலுத்தினான்.

اله الفضيل اذا ولع بأمه
காணாமல் போய் விட்ட ஒட்டகத்தின் குட்டி தாயைக் கண்டதும் தழுவிக் கொண்டது.

لاه يليه ليها ولاها اذا احتجب
மறைவாகி ஒளிந்து கொண்டது. மேலும் உயர்ந்து நின்றது.

اله الهة والوهة والوهية عبد
வழிபட்டேன்

இந்தப் பொருள்களின் தோற்றுவாயை நன்கு கூர்ந்து கவனிக்கும்போது அலஹ அல்லது லஹு இலாஹத்தன் உடைய பொருள் வழிபாடு என்பதாகவும் இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும், இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும் எந்த அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்றால் -

1. மனித மனத்திலே வழிபாட்டிற்கான முதன்மையான தூண்டுதல் தேவையான பேரில் ஏற்படுகிறது. யாரேனும் ஒருவரைக் குறித்து அவர் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவர், சஞ்சலமான காலங்களில் அமைதியை அளிப்பவர் எனும் எண்ணம் தோன்றாதவரை மனிதன் யாரையும் வழிபட நினைக்கவே மாட்டான்.

2. அதன்பின் தேவைகளைப் பூர்த்தியாக்குபவன் என ஒருவரை மனிதன் எண்ணிக் கொண்டு விட்டால் அந்த எண்ணத்துடன் அவரைத் தன்னைவிட உயர்ந்தவர் என்றும், படித்தரத்தில் மட்டுமின்றி எல்லாவிதத்திலும் அவருடைய மேன்மையை ஏற்றுக் கொண்டு வலிமையிலும் அதைகாரத்திலும் அவனையே முதல்வன் என்றும் ஏற்றுக் கொண்டுவிடுவது ஒரு பிரிக்க முடியாத பந்தமாகி விடுகிறது.

3. அதன் பின்னர் இதுவும் ஓர் உண்மையே. அதாவது - காரண காரியங்களின் தொடர்பாக எந்தப் பொருளைக் கொண்டு பொதுவாக மனிதனின் தேவைகள் பூர்த்தியாகின்றனவோ, எந்தத் தேவைக்குரிய செயல்பாடுகள் அனைத்தும் மனிதனின் கண்ணெதிரே அல்லது அவனுடைய அறிவின் எல்லைக்குள்ளே நிற்கின்றனவோ அதை வழிபட வேண்டும் என்கிற உணர்வு அவனுக்குள்ளே ஏற்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, எனக்கு செலவழிக்கப் பணம் தேவைப்படுகிறது. நான் ஒருவரிடம் சென்ரு வேலை கேட்கிறேன். அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எனக்கு ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறார். அதற்குரிய கூலியும் தருகிறார். இந்த செயல்கள் யாவும் என்னுடைய புலன்களின், அறிவின் எல்லைக்கு உள்ளேயே  நடைபெறுகின்றன. என்னுடைய தேவைகளை அவர் எவ்வாறு பூர்த்தியாகினார் என்பது எனக்கு தெரியும். எனவே அவர் வணக்கத்திற்குரியவர் எனும் கற்பனை கூட என் உள்ளத்தில் தோன்றுவதில்லை.

வணங்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள்ளத்தில் எந்த நிலையில் ஏற்படுமென்றால் ஒருவரின் ஆளுமையின் மீதோ அல்லது அவரது வலிமையின் மீதோ திரை விழுந்திருக்க வேண்டும். அதனால்தான் வணக்கத்திற்குரியோன் எனும் பொருளில் மேன்மை மட்டுமின்றி மறைவு, வியப்பு, பிரமிப்பு போன்ற கருத்துக்களும் அடங்கியுள்ளன.

4. தேவைகளின்போது அவற்றைப் பூர்த்தியாக்குபவன், ஆபத்துகளின்போது அடைக்கலம் தரக்கூடியவன், மனக் கலக்கத்தின் போது அமைதியை நல்குபவன் என்று யாரைப் பற்றி மனிதன் நம்பிக்கை கொண்டுள்ளானோ அவனை நோக்கித் தனது பற்றுதலையும் கவனத்தையும் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே வணக்கத்துக்குரியவன் என்பதற்கான இலாஹ் எனும் சொல் எந்தேந்தப் பொருளின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளனவோ அவை வருமாறு: தேவையைப் பூர்த்தியாக்குபவன், அடைக்கலம் தருபவன், அமைதி அளிப்பவன், மேன்மையானவன், அதிகாரமுள்ளவன்.

எத்தைகைய அதிகாரங்களுக்கும் வலிமைக்கும் அவன் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்றால் அந்த வணக்கத்திற்குரியோன் தேவைகளை நிறைவேற்றுபவன்ம் ஆபத்தில் பாதுகாப்பு அளிப்பவன்ம் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆளுமையைக் கொண்டவன் அல்லது பொதுப் பார்வைக்கு வாரதவன், மேலும் மனிதனின் ஆழ்ந்த் பற்றுதலுக்குரியவன் - இப்படியெல்லாம் திகழும் அளவுக்கு அவனுடைய அதைகாரங்களும் வலிமையும் இருக்க வேண்டும்.

அறியாமைக்கால மக்களின் ‘இலாஹ்’ குறித்த கண்ணோட்டம்

இலாஹ் எனும் சொல்லின் அகாரதிப் பொருளைக் கண்டோம். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது அராபியர்களும் பழங்குடி மக்களும் இறைமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தனர்; அவர்களின் அந்தக் கருத்தை குர்ஆன் எப்படி மாற்றி அமைக்க விரும்பியது என்பதைத்தான்.

 وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِّيَكُونُوا لَهُمْ عِزًّا
தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(குர்ஆன் 19:81)

وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ
தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். (குர்ஆன் 36:74

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலிருந்தும் என்ன தெரிகிறது என்றால் அறியாமைக்கால அராபியர்களும் பழங்குடி மக்கள் எதனைக் கடவுள் என்று சொல்லி வந்தார்களோ அவை தங்களின் ஆதரவாளர்கள் என்றும், கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும் தமக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் என்றும், அவர்களின் உதவியைக் கொண்டு, தம் அச்சத்தை விட்டும் தோல்விகளை விட்டும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் நினைத்திருந்தார்கள்.

  وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِن ظَلَمُوا أَنفُسَهُمْ ۖ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِن دُونِ اللَّهِ مِن شَيْءٍ لَّمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ
அவர்களுக்கு நாம் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கு இழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை. (அல்குர்ஆன்: 11:101)

 وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ

  أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
 إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحدٌ ۚ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள். (குர்ஆன் 16:20,21,22 )

  وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۘ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ ۚ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ


அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (குர்ஆன் 28 :88)

  أَلَا إِنَّ لِلَّهِ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ


கவனத்தில் கொள்க! வானங் களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ் வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர். (குர்ஆன் 10:66)

இந்த வசனங்களிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.ஒன்று, அறியாமைக் கால மக்கள் யாரைக் கடவுள் என்று கூறினார்களோ அவர்களை அந்த மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அழைத்தார்கள். அதாவது பிரார்த்தனை செய்தார்கள்.

இரண்டு, அவர்கள் ஜின்களையும்,வானவர்களையும்,தெய்வங்களையும் மட்டுமில்லாமல் மரணித்தவர்களையும் கடவுளாய்க் கருதி அழைத்து வந்தனர். أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறியமாட்டார்கள், எனும் வசனத்திலிருந்து நன்கு தெளிவாகிறது.

மூன்று, அந்த தெய்வங்கள் அவர்களுடைய துஆவைக் கேட்பவர்களாகவும் அவர்களுக்கு உதவிபுரிய ஓடியாடிச் செல்வதற்கு அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர் என்றும் அவர்கள் நம்பி வந்தனர்.

இங்கே அவர்கள் தம் கடவுளிடம் எதிர்பார்க்கின்ற துஆவின் கருத்தையும் அவர்களுடைய உதவி புரியும் தன்மையையும் நினைவில் பதிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எனக்கு தாகம் எடுக்கிறது. தண்ணீர் கொண்டுவரும்படி நான் என் பணியாளனை அழைக்கிறேன். அல்லது நான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவரை அழைக்கிறேன். இங்கே அவை துஆவின் கருத்தில் வருவதில்லை; பணியாளோ மருத்துவரோ கடவுளாகி விடுவதுமில்லை. ஏனெனில் இவை யாவுமே காரண காரியங்களின் அடிப்படையில் வருகிறதே தவிர அதனைக் கடந்து அல்ல.


ஆனால் நான் தாகமெடுத்த நிலையிலோ நோய்வாய்ப்பட்டபோதோ பணியாளையோ மருத்துவரையோ அழைப்பதற்குப் பதிலாக யாரோ ஓர் இறைநேசரை அல்லது ஒரு தெய்வத்தை அழைக்கிறேன் என்றால் நிச்சயமாக அவர்களை நான் கடவுளாக்கி இறைஞ்சினேன் என்று பொருளாகும். ஏனெனில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் ஏதோ ஒரு சமாதியில் அடக்கப்பட்ட இறைநேசரை அழைப்பதன் பொருள், எல்லாவற்றையும் கேட்பவராகவும் பார்ப்பவராகவும் அவரை நான் கணித்துக் கொண்டேன் என்றாகிறது. இக்காரண காரிய உலகின் மீது அவர்களுடைய ஆட்சியதிகாரம் செல்வதாகவும், அதைக் கொண்டே அவர்கள் என்னிடம் தண்ணீரை அனுப்பும் சக்தியை, என் நோய் தீர்க்கும் ஆற்றலைப் பெற்று உள்ளனர் என்றும் நான் நினைக்கிறேன் என்றாகிறது.

அதே போலாந்த நிலையில் ஏதோ ஒரு தெய்வத்தை அழைப்பதற்குரிய பொருள்;என்னவேன்றால் தண்ணீரின் மீதோ நோயின் மீதோ அதற்கு அதிகாரம் உள்ளது; இயல்புக்கு அப்பாற்பட்டு காரன காரியங்களை இயக்கும் வல்லமை பெற்றுள்ளது என்பதாகும். இயல்புக்கு அப்பாற்பட்ட அதிகாரமும் சக்தியும் அந்தக் கடவுளுக்கு உண்டு என்ற கருத்தின் அடிப்படையில்தான் துஆ -பிரார்த்தனை செய்யப்படுகிறது. இது மோசடியாகும்.

(இன்ஷா அல்லாஹ் இன்னும் விரிவாக அடுத்த பாகத்தில் தொடரும்)

(Reference :குர் ஆன் ஹதீஸ்
நூல் : அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்.

Saturday, March 2, 2013

மரணமில்லா நிரந்தர வாழ்வு நிம்மதியை தருமா?


கடந்த நூற்றாண்டில் மட்டும் அமெரிக்காவில் சராசரி ஆயுள் 47 வயதிலிருந்து 77-ஆக உயர்ந்திருக்கிறது. 2050-ம் ஆண்டில் சராசரி மனிதன் சராசரியாக 87 வயது வரை வாழ்வான். மனித ஆயுளில் பத்து வருடம் கூடப் போகிறது. சொத்துக்குக் காத்திருக்கும் மகன்கள் பாடு திண்டாட்டம்தான்.
மேலே சொன்னது சராசரி வயது. ஆனால் அதிகபட்சம் ஒருவர் எவ்வளவு வருடம் வாழலாம்? இப்போது சுமார் 120 வருடம் என்று கருதப்படுகிறது. இதுவும் அதிகரித்து வரக் கிழங்கள் உலகை வலம் வரப் போகின்றன.
எப்படிச் சொல்கிறார்கள்? உள்ளே சமையலறையில் பல டெக்னாலஜிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டெம் செல் தொழில் நுட்பம் அவற்றில் ஒன்று. ஸ்டெம் செல்கள் என்பவை மற்ற செல்களைத் தயாரிக்க மூலப் பொருட்கள். இதய செல்லாகவோ, நுரையீரல் செல்லாகவோ எலும்பாகவோ கிட்னியாகவோ அவை வடிவம் எடுக்க வல்லவை. இதை மட்டும் கூர் தீட்டிவிட்டால் செத்த உறுப்புக்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். பின் பக்கம் முதுகு சொறிய மூன்றாவது கை தேவையென்றாலும் வளர்த்துக்கொள்ளலாம்.
முதுமை என்றால் என்ன என்பதை அறுதியிடுவதே சற்றுக் கடினமான செயல். நம் உடம்பின் செல்களுக்கெல்லாம் வயசானால் நமக்கும் வயசாகிவிட்டது என்று குத்து மதிப்பாகச் சொல்லலாம். நம் செல்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் பிரிந்து புதிதாகப் பிறந்துகொண்டே இருக்கின்றன; அவற்றின் டி.என்.ஏ பிரதி எடுக்கப்படுகிறது. டெலோமியர்கள் என்பவை க்ரோமசோம்களின் கொடுக்கு நுனியில் இருக்கும் டி.என்.ஏ சரடுகள். ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ தன்னைப் பிரதி எடுக்கும்போது, அதன் வால் கொஞ்சம் வெட்டுப்படுகிறது. நடு வயது மங்கையின் கூந்தல் நுனி போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேதாரமாகிக் கடைசியில் செல் பிரிவதையே நிறுத்திவிடுகிறது; நமக்கு சீனியர் சிட்டிசன் சலுகைகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.
செல் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு, டெலோமியர்கள் வாலை இழக்காமல் பத்திரமாகப் போய்ச் சேருவது அவசியம். இதை வலுப்படுத்த டெலோமெரேஸ் என்ற நொதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு செல்களை சேதப்படாமல் பிரதி எடுக்க முடியும். (அவசரப்படாதீர்கள்; இந்த டெக்னாலஜி பத்திரமாவதற்கு நாள் இருக்கிறது. இதில் ஈடுபட்ட எலிகளுக்கு கான்சர் வந்துவிட்டது!)
ஸோமாடிக் ஜீன் சிகிச்சை என்று நம் மரபீனி அளவிலேயே வெட்டி ஒட்டி, இதய நோய்கள் போன்ற பரம்பரை வியாதிகளை உதற முடியும். டீ க்ரே என்பவர், இன்னும் பத்து வருடத்தில் எலிகளை ஏறக்குறைய சிரஞ்சீவியாக வைத்திருக்க முடியப் போகிறது என்று சொல்லி அதிர வைத்தார். அதற்குப் பத்து வருடம் கழித்து, மனிதர்கள். நம் ஆயுளில் இருபது வருடம் கூட்ட ஸ்பெஷல் லேகியம் வரப் போகிறதாம்.
இதெல்லாம் அவசரக் குடுக்கை அறிவிப்பு என்று சொல்பவர்களும் நிறையப் பேர். நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை, ஆயுள் அதிகரிப்பு மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறது. காரணம், நாம் தின்னத் தெரியாமல் எண்ணைப் பண்டங்களைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கிறோம். உடல் பருமன், நம் வாழ்நாளை சுருக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் கொழுப்பைக் கரைக்கவும் ஒரு மாத்திரை கண்டுபிடிக்காமலா போவோம்? சராசரி வயது மெல்லவாவது அதிகரித்து நூற்றாண்டு இறுதிக்குள் 85 அல்லது 90-ஐத் தொட்டுவிடும் என்கிறது இல்லினாய் பல்கலைக் கழகத்தின் குறிப்பு ஒன்று. எது எப்படியோ, எதிர்காலத்தில் பெரிய தட்டுப்பாடு ஒன்று வரப் போகிறது : சாவுக்குத் தட்டுப்பாடு!
இருபதாம் நூற்றாண்டிலேயே ஸ்டெடியாக வாழ்நாள் அதிகரித்து வந்ததன் பயனைப் பார்க்கிறோம். நம் அரசியல்வாதிகள் எல்லாம் பழுத்து மூத்து, பார்லிமெண்டில் போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சீனியர் குடிமக்களின் மருத்துவ செலவுகள், அல்சைமர் மறதிகள், மூட்டு வலி, முதியோர் இல்லம், வயாகரா என்று செய்திகளில் தினசரி அடிபடும் ஏராளமான விஷயங்களில் இந்த வாழ்நாள் நீடிப்பு ஒரு சப் டெக்ஸ்ட்டாகப் பொதிந்திருக்கிறது.
மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.
பயோ டெக்னாலஜியும் சாஃப்ட்வேர் மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறது - ஏழை நாடுகளுக்கு அவுட் சோர்ஸிங் செய்து மலிவான ஆராய்ச்சி, இன்னும் விழித்துக்கொள்ளாத சட்டங்கள், நிறையப் பணம், பரம ரகசியம்!
பணம் சம்பாதிப்பதில் வாழ்நாளைத் தொலைத்த வயசாளிகள், ரிட்டையர்மெண்டுக்குப் பிறகு மறு வாழ்க்கை பெறுவார்கள். தோலை இறுக்கி, மினுக்கிக் கொள்வார்கள். கம்ப்யூட்டரில் தங்கள் வளர்சிதை மாற்றங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். கடையிலிருந்து நவீன ஸ்பேர் பார்ட்களை வாங்கிப் பொருத்திக்கொண்டு ஷைன் அடிப்பார்கள். அவற்றில் சில, ஸ்மார்ட் ட்ரக் என்னும் புத்திசாலி மருந்துகளை வேளா வேளைக்குத் தயாரித்து ரத்தத்தில் கலக்கும்.
வாழ்நாள் நீடிப்பு சிகிச்சைகள், வயதானவர்களின் மருத்துவ செலவுகளைக் கண்டபடி அதிகரிக்கப் போகின்றன. குண்டானவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்நாளுக்கு காரண்டி கொடுக்கத் தயக்கம் இருக்கப் போகிறது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் நம் பின்னாலேயே வந்து கண்காணித்து, நாம் தின்னும் ஒவ்வொரு உருளைக் கிழங்கு போண்டாவையும் குறித்து வைத்துக்கொண்டு பிரீமியத்தை ஏற்றப் போகிறார்கள்.
ஒரு சின்னக் கணக்கு: அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி தாத்தா பாட்டிகள். ஒவ்வொருவரும் வருடத்துக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்து மூப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஒரு ட்ரில்லியன் டாலர் ஆகிவிடுகிறது. இதனால்தான் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு இப்போதே ஜொள்ளு சொட்டுகிறது.
மூவா மருந்துகளின் திறனும் விலையும் ஏறிக்கொண்டே போகப் போகின்றன. முதல் கட்டத்தில் பணக்கார பிசினஸ் புள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள், இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்களுக்குத்தான் கட்டுப்படி ஆகும். அவர்கள் வீட்டு டிரைவர்களும் தோட்டக்காரர்களும் காலமாகி, அவர்களுடைய பிள்ளைகள் கிழவனார் வீட்டில் வேலைக்குச் சேருவார்கள்.
நம் தாத்தாக்களும் அவர்களுடைய தாத்தாக்களும் ஒரே சமயத்தில் உலகில் வாழ்வார்கள். ஒருவரும் லேசில் ரிட்டையர் ஆக மாட்டார்கள். எழுபது வயதான பாட்டி, தன் பிரசவத்திற்கு லீவு எடுப்பார். மற்றொரு முனையில், அரும்பு மீசை - முகப்பரு பருவம் இருபத்தைந்து முப்பது வயது வரை தொடரும். ‘எல்லோருமே 200 வயது வாழ்ந்தால், அவர்கள் முதல் நூற்றாண்டு வாழ்க்கையில் சாதித்ததெல்லாம் அற்பமாகும். வருமானம், சொத்து, ஸ்டேட்டஸ் எல்லாம் 100 வயதுக்கு மேலேதான் கிடைக்கும்’ என்கிறார் கென்னத் போல்டிங்.
இப்போதே ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை செய்கிறார்கள். இவர்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்தால்தானே எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று இளைஞர்கள் பொருமுகிறார்கள். இதனால் அவர்களுடைய விடலைப் பருவமே நீடிக்கப்படுகிறது. வேலை தேடி அலைந்து, நிரந்தரக் கல்லூரி மாணவனாகவே நீண்ட வருடங்கள் கழிகின்றன. கல்யாண வயது தள்ளிப் போகிறது; செக்ஸ் இன்னும் சுதந்திரமாகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது; நாட்டுக்கே நரைத்துக்கொண்டிருக்கிறது!
கணவன்-மனைவி உறவுதான் குட்டிச் சுவராகப் போகிறது : எதிர்காலத்தில் விவாக ரத்துக்கள் அதிகரிக்கும். இந்தப் பெரு வாய், பேருடம்புப் பெண்ணுடன் (அல்லது பிறந்த நாளைக்கூட நினைவு வைக்க முடியாத சோம்பேறி ஆணுடன்) இன்னும் 20, 30 வருடம் வாழ வேண்டுமா என்ற ஆயாசம்தான் இப்போது பல விவாக ரத்துக்களின் காரணம். இதுவே இன்னும் 60, 70 வருடம் இருக்கிறது என்று ஆகிவிட்டால் சகித்துக் கொள்வதற்கு சான்ஸே இல்லை!
சுமார் 25-30 வருடத்துக்கு ஒரு முறை பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி அவ்வப்போது சீராகப் பொறுப்பைக் கை மாற்றிக் கொடுப்பது நம் நாகரீகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியம். ரேடியோவை ஆன் செய்தால் இன்னும் தியாகராஜ பாகவதர் பாட்டே ஒலித்துக்கொண்டிருந்தால் உலகம் என்ன ஆவது?
இன்று வரை இருபது முப்பது வயதில் இருப்பவர்களுக்கு, பெரியவர் திடீரென்று மண்டையைப் போடுவதால் அல்லது போடப் போவதால், அவர் வாழ்நாளில் சேகரித்த சொத்து கைக்கு வருகிறது. இளைஞர்களுடைய மேற்படிப்பு, கல்யாணம், வீடு வாங்குதல், புதிய பிசினஸ் முயற்சிகள் என்று பல விதங்களில் வளர்ச்சியை ஃபைனான்ஸ் பண்ணுவது வயதானவர்களின் மரணம்தான்.
இனிமேல் வயசாளிகளெல்லாம் இன்னும் அதிக வயசாகி, அந்தப் பணத்தை இறுக முடிந்துகொள்ளப் போகிறார்கள்; தங்களுடைய நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் சில அந்தரங்கமான சக்திகளையெல்லாம் மிகுந்த செலவில் பெருக்கிக் கொள்ளப் போகிறார்கள்; இளைஞர்கள் பெட்ரோல் பங்க்கிலோ, மெக்டொனால்ட்ஸிலோ பகுதி நேர வேலை செய்துகொண்டு காத்திருக்கப் போகிறார்கள்!
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தது இருபது வயதுகளில். ஐன்ஸ்டைன் e = mc2-ஐக் கண்டுபிடித்தது, போட்டோக்களில் காணப்படும் பம்பைத் தலை வயதில் அல்ல; இருபதுகளில்தான். உலகெங்கும் சுதந்திரப் போராட்டங்கள், விடுதலைப் புரட்சிகள், வேகமான மாற்றங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்தவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர்களே.
பயோ இஞ்சினியரிங்கில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, அந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளப் பணமும் படைத்த மேற்கத்திய நாடுகளில் வயோதிக விஞ்ஞானத்தின் தயவில் எல்லோரும் வாக்கிங் ஸ்டிக்குடன் நடப்பார்கள். அந்த வசதி இல்லாத ஏழை நாடுகளில் எல்லோரும் சீக்கிரமே சாக, இளைஞர்களின் விகிதம் அதிகரிக்க, நாளைய உலகின் முன்னேற்றங்கள், புரட்சிகள் அனைத்தும் ஏழை நாடுகளிலிருந்துதான் புறப்படப் போகின்றன.

(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)