Saturday, September 28, 2013

தமிழிழத்திற்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் யார்?


திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. இனப்படுகொலைச் சகோதரர்களான மோடியையும், ராஜபக்சவையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை. 

மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 


மோடிக்கான ஆதரவு, இந்து பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அது, இலங்கையில் சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரிப்பதைப் போன்றது. மோடியை ஆதரிக்கும் தமிழர், தென்னிலங்கையில் பிறந்திருந்தால், ராஜபக்ஷவை ஆதரித்திருப்பார். ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்களவர், இந்தியாவில் பிறந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார். இவர்கள் பேசும் மொழி மட்டுமே வேறு. கொள்கை ஒன்று தான்.

புலிகளின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

(நன்றி : கலையகம்   )

Tuesday, September 10, 2013

உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிப் பகுதிகள்
ஒரு நண்பர் அல்லது உறவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால். அவரை பகைத்துக் கொள்ளாமலும். முடிந்தவரை தாஜா செய்து மிகைப்படுத்தி புகழ்ந்து தமது சொந்த காரியங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இன்றைய மக்களை பார்க்கிறோம். ஆனால் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் இத்தகைய பண்பு சுத்தமாக இருக்கவிலை. எனென்றால் அவர்கள் சுத்தமான சத்தியவான்களாக இருந்தார்கள். நேர்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழிக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள்.

“மார்க்கம் என்பது நஸீஹத் - வாய்மையும் நலம் நாடுவதுமாகும்” இவ்வாறு மூன்று முறை அண்ணலார் கூறினார்கள். “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது?” என்று கேட்டோம். அதற்கு அண்ணலார் “ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், அவனது திருமறைக்கும், முஸ்லிம்களின் சமூக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: தமீமுத் தாரீ (ரலி) நூல்: முஸ்லிம் )

உமர் (ரலி) அவர்கள் கிலாஃபத் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். கலீஃபாவின் தோழர்களான அபூ உபைதா (ரலி), முஆத்பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக உமர் (ரலி)  அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். ஆட்சியில் அமர்ந்திருக்கும் உமர் (ரலி) மீது நல்லெண்ணமும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்குத் துணைபோக வேண்டும் என்ற ஆர்வமும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. அக்கடிதம் பின்வருமாறு:

“அபூ உபைதாபின் ஜர்ராஹ், முஆத்பின் ஜபல் ஆகியோரின் சார்பாக உமர் (ரலி) அவர்களுக்கு எழுதும் கடிதம். தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை சீர்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவராக இருந்தீர்கள் என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதோ தங்களில் தோள்களில் ஏராளச் சுமைகள்...! முழு சமுதாயத்திற்கும் பயிற்சி அளிக்கும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள்; சாதாரண பாமர மக்களும் வருவார்கள்; பகைவர்களும் வருவார்கள்; நண்பர்களும் வருவார்கள். எல்லோருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே தங்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்!

மக்கள் அனைவரும் வல்ல இறைவனின் முன்நிற்கும் நாளை - இதயங்கள் அஞ்சி நடுங்கும் நாளை நினைத்துப் பாருங்கள்! இறையாணையைத் தவிர வேறு எந்த வாதமும் அங்கே துணைவராது. அந்நாளில் அந்த வல்ல இறைவனின் கருணையை எதிர்பார்த்த வண்ணமும், கிடைக்கப்போகும் அவனது தண்டனைக்கு அஞ்சிய வண்ணமும் மக்கள் இருப்பார்கள்.

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” எனும் நபிமொழியைக் கேட்டுள்ளோம்.

இந்த கடிதம் முற்றிலும் தங்களின் நன்மையைக் கருதியே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இதனை சரியான கோணத்தில் பார்ப்பீர்கள்; தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.”

இப்படிக்கு
அபூஉபைதா, முஆத்பின் ஜபல்

இந்தக் கடிதத்திற்கு உமர் (ரலி) அவர்கள் பின்வரும் பதிலளித்தார்கள்:

“ அன்புத் தோழர்களே! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. நான்  இதற்கு முன் என் தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்வதில் அக்கறை உள்ளவனாக இருந்தேன் என்றும், இப்பொழுது சமுதாயப் பொறுப்புகள் என் தலையில் விழுந்துள்ளன என்றும்; உயர் தகுதி கொண்டவர்கள், சாதாரண மக்கள், நண்பர்கள் - பகைவர்கள் உட்பட என் அவைக்கு வரும் எல்லோரும் நீதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளீர்கள். மேலும் இப்படிப்பட்ட நிலையில் என் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.

அருமைத் தோழர்களே! நான் இதற்கு என்ன பதில் சொல்வது? உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே! எதேனும் வலிமையோ ஆற்றலோ கிடைக்குமெனில் அதை எனக்கு அந்த ஏக இறைவன்தான் அருள வேண்டும்.

இறுதிநாளைப்பற்றியும் எச்சரித்துள்ளீர்கள். முன்னோர்கள் எச்சரிக்கப்பட்டதைப் போல உங்கள் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இரவும் பகலும் மாறி மாறி வருவதன் மூலம் அந்த இறுதித் தீர்ப்புநாள் வெகுவிரைவாக வந்து கொண்டிருக்கிறது. அது தூரமாக இருந்தவற்றை நெருக்கமாக்குகிறது; நவீனமான ஒவ்வொன்றையும் பழையதாக்குகிறது; முன்னறிப்புச் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் அது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. உலகம் முடிந்து மறுமை தோன்றும் அப்பொழுது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர்; அல்லது நரகம் புகுவர்!

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” என்ற நபிமொழியை முன்னறிவிப்பை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது உங்களைக் குறிக்கவில்லை என நம்புங்கள்! இந்தக் காலமும் அத்தகைய கயவர்கள் தோன்றும் காலமாக இல்லை. அந்தக் காலம் வரும்போது மக்கள் தங்கள் உலகியல் நலனுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்: உலகியல் நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அஞ்சுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் தான் முன்னறிவிப்பில் சொல்லப்பட்ட  நயவஞ்சகம் தோன்றும்.

இறுதியாக, அந்தக் கடிதத்தைக் குறித்து நான் ஏதும் தவறாக நிகைக்கக்கூடாது என்றும் எழுதியிருந்தீர்கள். தோழர்களே! நீங்கள் உண்மையானவர்கள்; நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள்! உங்களின் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை.”

இப்படிக்கு
உமர்பின் கத்தாப்

ஆதார நூல்கள்: கிதாபுல் காரஜ்,
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே..

Saturday, September 7, 2013

ஹிட்ஸ் தான் வாழ்க்கையா?: வேண்டாம் பகட்டு.

பொருளீடுட்டுதல், குடுப்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல்- இதுவே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகிவிட்டது. தன்னையும், தன் குடும்பத்தரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு, நேரம் ஆகியவற்றை தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள் புனிதம் பெறுகின்றன.

மக்களின் பாராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செயல்பவர்களால் தீமைகளே விளைகின்றன.
இவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பார்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகக் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப்படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.

போதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவார். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.

தொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.

எனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள். பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 2:264)

பகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (அல்குர்ஆன் 76:8,9 )

இன்ஷா அல்லாஹ் நாம் பகட்டுக்காக செயல்படாமல் இறை பொறுத்தத்திற்காக செயல்படுவோம்.