Tuesday, February 28, 2012

விஷ உணவும்,கடன் பயங்கரவாதமும்-2

இந்த பதிவின் முதல் பகுதியை பார்வையிட இங்கே அழுத்துங்கள் இன்னும் சிறிது கடன் பயங்கரவாதத்தை பற்றி பார்ப்போம்.
“1995 அல்லது 1996-இல் நாங்கள் வாங்கியது என்னவோ 5 பில்லியன் டாலர் மட்டுமே. இதுவரை 16 பில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்து விட்டோம் . ஆனால் இன்னும் 28 பில்லியன் டாலர் பாக்கி இருக்கிறது என்கிறார்கள்.அந்திய நிறுவனங்களின் அநியாயவட்டி விகிதம்தான் 28பில்லியன் டாலர் ஆகிவிட்டது. உலகிலேயே மோசமான பொருள் எது என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிதான் அது.(”2008-இல் ஒகினாவாவில்நடந்த ஜி8 உச்சி மாநாட்டில் நைஜீரியா நாட்டு அதிபர் ஒபாஸஞ்சோ வயித்தெறிச்சலுடன் கூறியது.)

நைஜர் என்கிற ஆப்பிரிக்க நாடு கல்வி,மருத்துவம் ஆகிய துறைகளுக்கு ஒதுக்குகின்ற தொகையைவிட மூன்றுமடங்கு அதிகமான தொகையை கடன் தவணையும் வட்டியையும் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக மூன்றாம் உலக நாடு தன்னுடைய பணத்தில் 42 சதவீதத்தை கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது.28 சதவீதத்தை ராணுவத்துக்கும் 16 சதவீத்த்தை ஆட்சி செயல்பாடுகளுக்கும் ஒதுக்குகின்றது.இவ்வாறாக மருத்துவம், சுகாதாரம், கல்வி, சாலைவசதி, உள்கட்டமைப்பு,மின்சாரம், குடிநீர்வசதி போன்றவற்றை எஞ்சிய 13 சதவீதத் தொகையில் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்...! இதன் விளைவாக மிக முக்கியமான துறையான கல்வித்துறைக்கு இரண்டு சதவீதத்தொகையே ஒதுக்கப்படுகின்றது.இதுதான் மிக மிக வேதனையான கண்டிக்கத்தக்க நிலை!

சமீப ஆண்டுகளில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகளே...!

ஸஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகள் மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் (100 கோடி) டாலர்கள் வட்டியாகவே கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.


இதன் காரணமாக இந்த நாடுகள் பற்பல மோசமான பக்கவிளைவுகளை சந்தித்து திக்குமுக்காடிப் போய் நிற்கின்றன.

இதுவரை இந்த ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் இரண்டு கோடி மக்கள்(இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்குச் சமம்) எய்ட்ஸால் உயிரிழந்துள்ளார்கள்.இந்தப் பத்தாண்டு முடிவதற்குள் ஆப்ரிக்காவில் 4 கோடி எய்ட்ஸ் அனாதைகள் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டடுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

23 ஆப்ரிக்க நாடுகள் இவ்வாறு மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நின்றாலும் கடன், வட்டி ஆகியவற்றுக்கு செலவிடும் தொகையில் கால பங்கை மட்டுமே உடல்நலம், மருத்துவ வசதி போன்றவற்றுக்காக செலவிடுகிறார்கள்.

கடன் கொடுத்த வங்கிகள் இதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.தங்களிடம் முதலீடு செய்துள்ள பணக்கார வாடிக்கையாளர்கள் கொழுக்க வேண்டும்; பெரும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கிற ஒற்றை இலக்கு.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு இறந்து போகும் கென்யா தேசத்து இளம் விதவை குறித்தும் அவள் விட்டுச் சென்ற ஐந்து அனாதைக் குழந்தைகள் குறித்தும் அவர்களுடைய பதிவேட்டில் எதுவும் எழுதப்படுவதில்லை. ஆனால் கொலைப் பட்டினி கிடந்து மூச்சைவிட்ட அந்த விதவைத்தாயும் அவளுடைய குழந்தைகளும் கட்டாயத்தின் காரணமாக சாப்பிட்ட ஜி.எம்.உணவு பற்றிய விவரம் அவர்களின் பதிவேட்டில் எழுதப்படும் (அதென்ன ஜி.எம் உணவு என்கிறீர்களா? Genetically Modified Food- அதாவது உயிர் மூலக்கூறுகள் திருத்தப்பட்ட உணவு இவற்றை உண்பதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது இதுவரை ஆராய்ந்தறியப்படவில்லை. இதனால் வளர்ந்த நாட்டு மக்கள் இதனை உண்பதில்லை.ஆனால் லாபம் சமபாதிக்கின்ற நோக்குடன் இந்த உணவுத் தானியங்களும் உணவு திணிக்கப்படுகின்றது.)
பட்டினியும் பஞ்சமும் மிகப்பெரும் மனிதத் துயரமாக இருக்கலாம்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மனித துயரத்தையும் தங்களின் வணிக நலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. உலகில் மற்ற நாடுகள் ஒதுக்கித் தள்ளிய, விலை கொடுத்து வாங்க மறுத்த ஜி.எம்.உணவுகளை வலுக்கட்டாயமாக ஆப்ரிக்க மக்களுக்கு விற்று விடடார்கள்; விநியோகித்தார்கள்.தேர்வு செய்யும் உரிமை பிச்சைக்காரனுக்கு உண்டா, என்ன?


350 கோடி மக்கள் அன்றாடம் பசியாறவே பெரிதும் திண்டாடுகிறார்கள். ஆப்பிரிக்க மக்களிடம் உணவாக விஷக்காய்கறிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் பணம் படைத்தவர்களோ மாதம்தோறும் உதட்டுச் சாயத்துக்காக 66 பில்லியன் டாலர்கள்,கொறிப்புத் தீனிக்காக 92 பில்லியன் டாலர்கள் என வாரி இறைக்கிறார்கள்.

போதக்குறைக்கு ஏற்கனவே நொறுக்கப்பட்டு விட்ட பொருளாதார நிலையை இன்னும் சீரழிக்கும் வகையில் வளரும் நாடுகள் மீதான போருக்காக மாதம் தோறும் 40 பில்லியன் டாலர்கள் வாரி இறைக்கப்படுகிறது.

மெரில் லிஞ்சு என்கிற நிறுவனம் சில வருடங்களுக்கு முன் நடத்திய சர்வேயில் வெளியான குறிப்பு ஒன்று.இன்று உலகில் பத்து லட்சம் டாலர்கள் வருமானத்தை (மாளிகைகள் போன்ற வீடுக்ள், நிலபுலன்,தோப்புத்துறவு போன்ற அசையா சொத்துக்களைத் தவிர்த்து விட்டு சுளையான நிதிவருமானம் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க) ஈட்டுகின்றவர்களின் ஒட்டுமோத்த சொத்து மதிப்பு 2003 லேயே 28.8 டிரில்லியன் டாலர்களாக ஆகிவிட்டது என்று இந்நிறுவனம் கணித்துள்ளது.

உலகில் வறுமை எப்படிப் பங்கிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்ற ஆய்வையும் பாருங்கள்.

பரம ஏழைகளின் எண்ணிக்கை 110 கோடி இருக்கும் இதில் 40 கோடி பேர் தெற்காசியாவில் இருக்கிறார்கள். சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் 32 கோடி பேர் இருப்பார்கள். கிழக்கு ஆசியாவில் 27 கோடி. உலகின் எஞ்சிய பகுதிகளில் 11 கோடி.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு டாலர் கூட சம்பாதிக்க இயலாத தனிநபர்கள் வளர்ந்த நாடுகளில் அறவே கிடையாது என்றே உலக வங்கி தீர்மானித்து விட்டுள்ளது. ஆனால் உண்மைநிலையோ அதற்கு முற்றிலும் நேர்மாறானது.

1988-இலிருந்து 1993 வரை நாடுகளுக்கு மத்தியிலே மட்டும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து விட்டது. அடிமட்டத்தில் இருக்கின்ற 5 சதவீத ஏழைகள் இன்னும் அதிகமாக பரம ஏழை ஆனார்கள். அவர்களின் வருமானத்தில் 25 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால் கொழுத்த செல்வந்தர்களின் வருமானமோ 20 சதவீதம் வளர்ந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வின் பலவிதமான பரிமாணங்களை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

50 மில்லியனுக்கும் (5 கோடி) குறைவான மக்களுடைய வருமானம் 270 கோடி மக்களின் வருமானத்துக்குச் சமம். அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் பத்து சதவீத மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினரை விட அதிகமாக பணம் சம்பதிக்கின்றார்கள்.

அமெரிக்க சமூகத்தில் பத்து சதவீத மேல்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வருமானம் உலகின் 43 சதவீத ஏழைகளின் ஓட்டுமொத்த வருமானத்துக்கு இணையானது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் 200 கோடி மக்களின் ஒட்டுமொத்த வருமானத்துக்கு இணையாக 3 கோடி அமெரிக்கர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்.

அமெரிக்காவுக்குள்ளேயும் கூட ஏழை-செல்வந்தர் இடைவேளி பேருவம் கொண்டுள்ளது. ஒரு சதவீத செல்வந்தர்கள் அடிமட்ட 95 சதவீத மக்களின் ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் முற்று பெறும் (இறைநாடினால்)
கடன் பயங்கரவாதம்: தீர்வு என்ன?

Monday, February 27, 2012

கடன் பயங்கரவாதமும் குட்டி போடும் கூட்டு வட்டியும்!

காட்சி:1
இடம்: அமெரிக்க தூதரகம்.


ஆயுதாங்கிய காவலர்கள்,ரகசிய தொலைக்காட்சி காமிராக்கள்,இரண்டு அடுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள்,மெடல் டிடெக்டர்கள் எல்லாவற்றையும் மீறி கழிப்பறை வழியாக மூன்று மூகமுடி அணிந்த நபர்கள் தூதரக அதிகாரியைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

சரியாக அதே நேரத்தில் தூதரக அலுவலக வாயிலிலும் துப்பக்கிச் சண்டை..!

இரண்டே நிமிடங்களில் முழு அலுவலகமே மூகமுடி மனிதர்களின் கையில்...!

தூதரக அதிகாரி,அவரின் மனைவி,துணை அதிகாரி,பி.ஆர்.ஒ.என அறுவரை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

சில கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் பணயக் கைதிகளை ஒரு நாளுக்கு ஒருவர் என்கிற ரீதியில் கொன்று விடுவோம் அல்லது முழு கட்டடத்தையே தரைமட்டமாக்கி விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

காட்சி : 2
இடம் : ஒரு ஏழை நாட்டின் விமான நிலையம்


நீலவானில் வட்டமிட்டபடி வந்து தரையிறங்குகிறது சிறப்பு போயிங் 737 விமானம் பளபளவென மின்னும் கருப்பு கோட்,கருப்பு கண்ணாடி,கருப்பு டை,கருப்பு ஷூவுடன் மூன்று மிடுக்கான அதிகாரிகள் விமானத்திலிருந்து இறங்குகின்றார்கள்.

நிதி அமைச்சக அதிகாரிகள் கும்பிடு போடாத குறையாக,மிகுந்த பணிவுடனும் அடக்கவொடுக்கத்துடனும் அவர்களை பளபள மகிழுந்துகளில் அழைத்துச் செல்கிறார்கள்.

வறட்சி,ஊழல்,நிர்வாகச் சீர்கேடு,பங்குச்சந்ததை வீழ்ச்சி,அந்நிய செலாவணிப் பற்றாக்குறை,தேசிய உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சி என எல்லாமாகச் சேர்ந்து ஒட்டுமொத்த தேசப் பொருளாதார நிலை தத்தளித்துக் கொண்டிருந்தது....

பசி பட்டினிச்சாவு, பஞ்சம் என மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்- குளுகுளு அறையில் கூடிய மிடுக்கான அதிகாரிகள்- ஐ.எம்.எப்-உலக வங்கியின் மூத்த அதிகாரிகள் எனச் சொல்லவும் வேண்டுமா- நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் 50 பில்லியன் டாலர் கடன் தரத்தயார் என அறிவிக்கிறார்கள்.அதே மூச்சில் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிடத் தொடங்குகிறார்கள்.

என்ன நடக்கும்?


முதல் காட்சி எப்படி முடியும்? மூகமுடி மனிதர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அதிரடிப் படையினாரல் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

பயங்கர தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகத்தில் பரபரப்பாக செய்தி வெளியாகும்.

இரண்டாவது காட்சி...? ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சேவைக்காக மிடுக்கான அதிகாரிகளுக்குப் பெரும் பரிசு தரப்படுகிறது.

கடன் பொறியில் சிக்கிய நாட்டின் வருமானம் முழுமையாக முடக்கப்படுகின்றது. அதன் வருவாய் ஈட்டும் திறனும் மடக்கப் படுகின்றது.

கடன் கொடுத்த நிறுவனங்களோ 50 பில்லியன் டாலரை விட பல மடங்குத் தொகையை அடுத்த பத்தாண்டுகளில் ஈட்டிவிடுவர். கடனை அறிவித்த அதிகாரிகளோ போனஸ்,பதவி உயர்வு என செழிப்பார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் ஏழை நாடுகளின் மீது இத்தகைய ‘பொருளாதார வளர்ச்சியை’- கொழுத்த முதலாளிகளுக்கும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கும் வளர்ச்சியை- திணித்திருக்கிறார்கள்.

இந்த ‘வளர்ச்சி’மேற்குலகுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளையோ அடிமையாக்கி விடும்.

இந்த வகையில் இந்தப் பன்னாட்டு கடன் முதலைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை தங்களின் கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
கடன்கள், பன்னாட்டு நிதியுதவி,கடன் நிவாரணம்- எல்லாமே எப்போது வழங்கப்படும்? ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் முன்வைக்கும் நிபந்தனைகளையும் விதிகளையும் அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே இவையேல்லாமே கிடைக்கும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை நிறுவப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? பொருளாதார சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் உள்நாட்டு வணிகத்தைத் திறந்து விடுங்கள்; சந்தையை தாரளமயமாக்குங்கள்; அடிப்படையான இயற்கை வளங்களையும், முக்கியமான, இன்றியமையாத துரைகளையும், சேவைகளையும் தனியார்மயமாக்குங்கள் என்று நிபந்தனை விதிக்கப்படும்.

கழுத்தை நெரிக்கும் வட்டி விகிதம் தாறுமாறாக எகிறும் போது உடல்நலம், மருத்துவம்,கல்வி, போக்குவரத்துவசதி,சாலைவசதி போன்ற சேவைத்துறைகள் மீதுதான் கை வைக்கப்படும்.

இந்த துறைகளுக்கு அரசு மானியங்களும், முதலீடுகளும், நிதியுதவிகளும், சலுகைகளும் நிறுத்தப்படும்.இது கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

அதே சமயம் இந்த நாடுகளை ‘பொருளாதார நெருக்கடியிலிருந்து’ காப்பாற்றிய வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த லாபம் சம்பாதிக்கும்.

மனிதனால் உருவாக்கப்படுகிற பெரும் துயரங்களான போர்கள் மூளும்போது கூட முதலீடு செய்வதற்கான பணம் வைத்திருப்பவர்களின் காட்டில் மழைதான்...! பணம் பண்ணுகின்ற அருமையான வாய்ப்புகளாக போர்கள் ஆக்கப்பட்டுவிட்டன.
பத்தாண்டுகளுக்கு முன்பே முதுபேரும் பொருளாதார வல்லுநர் ஜே.டபிள்யூ.ஸ்மித் எச்சரித்தார்: “ஒரு சமூகத்தின் உபரி உற்பத்தி முழுவதையும் விழுங்கிக் கொள்கின்ற வகையில் கடன் பொறியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் கூட்டுவட்டி பெருமளவுக்கு வளர்வதைத் தடுக்காமல் விட்டுவிட்டோமெனில் கடன் பொறியை யாதொன்றாலும் கட்டுப்படுத்தவும் முடியாது: அதனை நிர்வகிக்கவும் முடியாது.மிகப்பெரும் கொடுமையாக பேருவம் எடுத்துவிடும்; எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

ஆண்டுக்கு 20 சதவீதம் என்கிற கணக்கில் கூட்டுவட்டி குட்டி போட்டுக் கொண்டே போகிறது.1973-இல் 100 பில்லியன் டாலராக இருந்த மூன்றாம் உலகக் கடன் 1993-இல் 1.5 டிரில்லியனாக ஊதிப்பெருகி விட்டது. (1.5 டிரில்லியன் டாலரில் 400 மில்லியன் டாலர்தான் கடனாக வழங்கப்பட்ட தொகை.மற்றதெல்ல்லாம் கூட்டு வட்டி...!) மூன்றாம் உலகக் கடன் நிலை இதே போல ஆண்டுக்கு 20 சதவீதம் கூட்டு வட்டியாக வளர்வது நீடித்தால் அது பதினெட்டு ஆண்டுகளுக்குள் 117 டிரில்லியன் ஆகிவிடும்; 34 ஆண்டுகளில் 13.78 குவாட்ரில்லியன் ஆகிவிடும்.”

ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடிக்குச் சமம்...! அம்மாடி....! மலைக்க வைக்கிறதா? அதைவிட திகைப்படையச் செய்கிற,இரத்தத்தை உறைய வைக்கக் கூடிய இன்னொரு உண்மையும் உண்டு.

இந்தக் கடன் பொறி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உபரி உற்பத்தி அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பதுதான் அது. கடன்பொறி ஒரு நாட்டின் உழைப்பை மட்டும் உறிஞ்சுவதில்லை.அதன் இரத்தத்தையே உறிஞ்சி சக்கையாகப் பிழிந்து விடுகிறது.
கடன் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் இத்தகைய பயங்கரவாதம் குழந்தைகளின் எதிர்காலத்தை அபகரிக்கிறது; நோயாளிகளைக் கை விடுகிறது; உழைப்பாளிகளை அடிமைகளாக்குகிறது.இதுதான் கடன் பயங்கரவாதம்...!

உலக வங்கிக் கடனால் உருவான வறுமை காரணமாக ஒரு நாளுக்கு 24 பிலிப்பைன்ஸ் குழ்ந்தைகள் செத்து மடிகிறார்கள்.

உணவோ மருந்தோ வாங்க சக்தியின்றி, பணம் இன்றி மூன்றாம் உலக நாடுகளில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் செத்து மடிகிறார்கள்.அந்த குருத்துகளின் பெற்றோரால் நாள் முழுக்க இருபது மணிநேரம் உழைத்தாலும் ஒரு நாளுக்கு 2 டாலரை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியாது.

நாற்றமடிக்கும் சாக்கடைகளும், தேங்கி நிற்கும் குட்டைகளுமாக வாழ்வதற்கே தகுதியில்லாத சேரிகள் இன்று மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே பல்கிப் பெருகி விட்டன.

டிஸ்கி  வங்கியில் கொள்ளையிட்டவர்களை என்கவுண்டர் செய்தவர்கள் மக்களை வட்டியின் மூலம் கொல்லுகின்ற வங்கிகளின் கொள்ளை அதிகாரிகளை யார் கொல்வது.

பின்குறிப்பு: இதன் தொடர் (இறைநாடினால்)கடன் பயங்கர வாதம் தீர்வு என்ன? தொடரும்.

References:டாக்டர் மன்சூர் துர்ரானி
பேராசிரியர். மலிக் முஹம்மத் ஹுஸைன்

Thursday, February 23, 2012

அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைகள்.

ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆளும் ஆப்கானிய அமெரிக்க ஆதரவு கர்சாய் தமைமையிலான பொம்மை அரச படையின் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி ஏழு பேர் மரணித்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே அமெரிக்க வல்லாதிக்க படையினரால் தொடர்ந்து சித்தாந்த வன்மையான வெறியுடன் ஆரங்கேறியிருக்கின்றன சமீபத்தில் இறந்த ஆப்கானிய போராளிகளின் சடலத்தின் மீது சிறுநீர் கழித்து தங்களின் சிறுமைத்தனமான புத்தியை நிறுபித்திருந்தது நினைவிருக்கலாம்.


காபூலின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு அமெரிக்க படைத்தளத்தின் முன்னர் குவிந்த மக்கள் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அந்த படைத்தளத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர். ஜலாலாபாதில் அதிகமாக அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
                     ஊடகங்களின் உணப்பார்வை குர்ஆன் எரித்ததாக புகாராம் புகாரு? 
அமெரிக்கா இராணுவம் தான் தடுத்து வைதிருப்பவர்களிடமிருந்து கைப்பற்றிய அல் குர்ஆன் பிரதிகள உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது .அல் குர்ஆன் எரிப்பு ,அவமதிப்பு சம்பவங்கள் அமெரிக்க வதை முகாம்களில் அதிகமாக இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . ஆர்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


இதுபோன்ற அசிங்கமான செயல்களுக்கு அந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

Tuesday, February 21, 2012

ஆத-னால் காதல் செய்வீர்(வாழ்க்கை துணையை மட்டும்)-2

இந்த பதிவின் முதல்பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்.
முதலில் தகாத கள்ள உறவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இளைஞர்கள் திருமணத்தை தள்ளி போடாமல் அனுமதிக்கப்பட்ட இல்வாழ்க்கையில் இணைவது தான் சரியான தீர்வை தரும்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றோர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; (புகாரி 1905)

அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் 
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.(புகாரி 
5066)


இல்லறம் என்பது உறுதியான ஓப்பந்தம். உரிமைகள் கடமைகள் என்னும் அடித்தளத்தின் மீது இந்த ஒப்பந்தம் அமையப் பெறுகிறது. எனவே கள்ள உறவு என்பது ஒப்பந்தத்தை மீறி துணையின் உரிமையைப் பறிக்கும் கயமைச் செயலாகும். திருமணம் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும். மணம் முடிக்கப் போகின்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுடன் தமது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் திருமணத்திற்கு முன்னரே வெளிப்படுத்தி விட வேண்டும்.


பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவர்களை மணமுடித்து வைக்கக்கூடாது. 
ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். 
'(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மெளனமே அவளுடைய அனுமதி' என்றார்கள்.(புகாரி 6971,5137)


கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (புகாரி:6964)


திருமணத்திற்கு முன்னரே இல்லற வாழ்வின் பொறுப்புகள்,கடமைகள், பிரச்னைகள் பற்றித் தெளிவாக அறிந்திருப்பின் இல்லற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் எதிர்கொண்டு சமாளிக்கலாம். உணர்வுக்கு மதிப்பளித்து உரிமைகளை வழங்கி வாழ வேண்டும். நீயா? நானா? என்ற போட்டியில் இறங்காமல் நீயும் நானும் என்ற நிலையில் வாழ வேண்டும். 

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் மருத்துவரின் ஆலோசனைகளையும் பெறலாம். கணவனும் மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த வருமானமே இருந்தாலும் சொந்த நாட்ட்டிலேயே வேலை செய்ய வேண்டும். அல்லது குடும்பத்தோடு வெளிநாடுகளில் தங்குமளவிற்குத் தகுதிகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வீடுகளில் உறவினரான ஆடவர்களோடு பழகுவதிலும் இடைவெளி தேவை. தடையற்ற கலப்பு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ‘கணவருடைய சகோதரருடன் தனிமையில் பேசலாமா?’ என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘அது மரணத்திற்கு (அழிவிற்குச்) சமம்’ என்றார்கள்.

அலுவலகங்களில் அந்நியர்களிடம் சொந்த விசயங்களைப் பேசக்கூடாது. குறிப்பாக தனது துணையைப்பற்றி குறைவாகப் பேசக்கூடாது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களைத் தனிமையில் சந்திப்பதும் கூடாது.  ‘ஒரு அந்திய ஆடவருடன் ஒரு பெண் தனிமையில் சந்திக்கும் போது அங்கு மூன்றாவதாக சைத்தான் உள்ளான்’ என்ற நபிமொழியை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.

பணம், வசதி, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தமது கற்பை இழந்து விடக்கூடாது. விலை கொடுத்து வாங்கும் ஆடம்பரப் பொருட்களுக்காக விலை மதிப்பற்ற கற்பை இழக்கலாமா? தேவைகளுக்காக வாழ்ந்தால் பிரச்னைகள் வராது. ஆசைக்காக வாழ்ந்தால் அது அழிவுதான். 

காம உணர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.எவ்வாறு கட்டுப்பாடற்ற உணவு உடல் ஆரோக்கியத்தை அழித்து விடுகின்றதோ அதுபோல கட்டுப்படற்ற காமம் சமூகத்தையே சின்னாபின்னமாக்கி விடுபவை.

சரி செய்ய முடியாத அளவிற்கு இல்லற வாழ்வு சிக்கலாக இருந்தால் மணவிலக்குப் பெறுவது பொருத்தமான செயலாகும். மணவிலக்குச் சட்டவிதிகளை இறுக்கமாக வைத்திருப்பதனால் மணவிலக்குகளை தடுத்து விடமுடியும் என்பது பொய்யான வாதமாகும்.இவர்கள் மணவிலக்குப் பெற இயலாச் சூழலில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த உரிமையை பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. 

பார்க்க: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 
ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'சரி! அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'ஆம்' என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (புகாரி.5276)

கள்ள உறவுகளை தடுப்பதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. ஒழுக்க மாண்புகள் ஆன்மீக சிந்தனைகள், இறையச்சம் ஆகியவற்றை மக்களிடம் விதைக்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.கள்ள உறவில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது நமது பிரச்னை அல்ல என்று ஒதுங்கி விடக்கூடாது.

பொற்றோர்களும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஒழுக்க மாண்புகளைப் போதிக்க வேண்டும். நானம்,சுயமரியாதை, கற்பு,நேர்மையான வாழ்வு ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும். வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும். இறைக் கட்டளையின்படி வாழ்ந்து இறை உவப்பைப் பெறுவதே அந்த லட்சியமாகும்.ஒழுக்கத்தை இழந்தால்,கற்பை விலை பேசினால்,பிறன்மனை நாடினால் எங்ஙனம் இறை உவப்பை பெற முடியும்?.

Sunday, February 19, 2012

கள்ளக்காதல் ஓர் உளவியல் பார்வை

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.

இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூடா உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன. இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்பு இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர். இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால். எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன. மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.

பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.

படிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியலாம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.

வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவிலக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.

திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை. ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல்,ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ,அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.

அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.

அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.


வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர். சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.

தீர்வுகள்


குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.“ ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விடச் சிறந்த உறவு எதுமில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணம் என்பது புனிதமானது. அது ஒரு அறச் செயல்,வழிபாடு. அதனை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்வது விபரீதத்தில்தான் முடியும்.


முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள் 
“திருமணம் இறைநம்பிக்கையில் ஒரு பகுதி”(நூல் பைஹகி)
“ திருமணம் என்பது எனது வழிமுறை”(இப்னு மாஜா)
“தாம்பத்திய உறவும் ஒரு அறமே” (முஸ்லிம்)


وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَِ
 “....அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான். மேலும் , தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றினான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்!” (குர்ஆன் 7:176)


எனவே நாயைபோல் அலையாமல் தீய இச்சைகளிலிருந்து மனதைத் தடுத்து கள்ள உறவுகளிலிருந்து தப்புவதற்கான தீர்வுகளை அடுத்த பதிவில் (இறைநாடினால்) விரிவாக பார்போம். தொடரும்

Saturday, February 18, 2012

ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற மனிதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. “அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்டுச் செல்வதற்காக வந்திருக்க்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்னென்ன தோன்றுகிறதோ அவற்றை எல்லாம் கேளுங்கள்” என்று கூறினார்கள்.


வந்த மனிதர் சுமார் 23 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார்.அவை அனைத்தும் கருத்தான கேள்விகள். அவற்றிக்கு நபி (ஸல்) அளித்த பதிகள் மிகவும் பொருத்தமாகவும் தத்துவம் நிறைந்தவையாகவும் உள்ளன. இந்த நீளமான ஹதீஸ் முஸ்னத் அஹ்னத் எனும் தொகுப்பில் உள்ளது.


நீங்களும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.இவை போன்ற கேள்விகள் உங்கள் சிந்தையில் என்றாவது தோன்றியது உண்டா, இந்த அறிவுரைகள் முன்னரே உங்கள் வாழ்க்கையில் இடம்பெற்று இருக்கின்றனவா என்பது பற்றி உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு பதிலைத் தேடிக் கொள்ளுங்கள்.


வந்தவர்:    மக்கள் அனைவரிலும் நானே அறிவுஞானம் மிக்கவனாக இருக்க விரும்புகிறேன்


நபியவர்கள்:  அல்லாஹ்வை அஞ்சி நடந்திடு;மக்களிலேயே அறிவுஞானம் மிக்கவனாக நீ ஆகலாம்


வந்தவர்:  மக்கள் அனைவரிலும் நானே செல்வந்தனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:   நீ நிறைமனம் உடையவனாக இரு.மக்கள் அனைவரிலும் நீ செல்வந்தனாக ஆகலாம்.


வந்தவர்:  மக்கள் அனைவரிலும் நானே நீதிமிக்கவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:   உனக்கு விரும்புவதையே பிறருக்கு விரும்பு அப்பொழுது மக்களிலேயே நீதி மிக்கவனாக நீ ஆகலாம்.


வந்தவர்:   மக்கள் அனைவரிலும் நானே சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:   மக்களுக்கு நற்பயன் அளிப்பவனாக நீ ஆகு. அப்பொழுது மக்களிலேயே சிறந்தவனாக நீ ஆகலாம்.


வந்தவர்:   மக்கள் அனைவரை விடவும் நானே அல்லாஹ்விடத்தில் தனிச்சிறப்பு உடையவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:  அல்லாஹ்வை நீ அதிகம் நினைவுகூர்ந்து கொண்டே இரு. அப்பொழுது மக்கள் அனைவரிலும் அவன் பக்கம் நெருக்கம் உடையவனாக நீ ஆகலாம்.


வந்தவர்:  எனது இறைநம்பிக்கை நிறைவானதாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:  நற்குணத்தை கடைப்பிடி. அப்பொழுது உனது இறைநம்பிக்கை நிறைவாக இருக்கும்.


வந்தவர்:  நான் இஹ்ஸான் எனும் அழகிய வழிபாடு செய்பவர்களின் கூட்டத்தில் உள்ளவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:  இறைவனை-நீ பார்ப்பது போன்ற உணர்வுடன் வணங்கிடு.நீ அவனைப் பார்க்கவில்லை என்றாலும் நிச்சயமாக அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் (எனும் உறுதியுடன் வணங்கிடு) இப்படிப்பட்ட நிலைக்கு நீ உயர்ந்து விட்டால் அழகிய வழிபாடு செய்பவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நீ ஆகலாம்.


வந்தவர்:  இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:   இறைவன் விதித்துள்ள கடமைகளை நிறைவேற்று. அப்பொழுது அவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களின் கூட்டத்தில் நீயும் ஒருவனாக ஆகலாம்.


வந்தவர்:   பாவங்களை விட்டும் பரிசுத்தமான நிலையில் இறைவனை (மறுவுலகில்) நான் சந்திக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:    குளிப்பது கடமையாகி விட்டால் குளித்து முழுமையாக சுத்தமாகி விடு. பாவங்களிலிருந்தும் தூய்மையானவனாக நீ அவனைச் சந்திப்பாய்.


வந்தவர்:   மறுமை நாளில் ஒளியுடன் எழுப்பப்பட நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:  எவருக்கும் நீ அநீதி இழைத்திடாதே! அப்பொழுது மறுமை நாளில் நீ ஒளியுடன் எழுப்பப்படுவாய்.


வந்தவர்:  மறுமை நாளில் எனது இறைவன் எனக்குக் கருணை புரிந்திட நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:  உனக்கும் பிற மனிதர்களுக்கும் நீ கருணை புரிந்திடு.மறுமை நாளில் இறைவன் உனக்குக் கருணை புரிவான்.


வந்தவர்:   மக்கள் அனைவரிலும் கண்ணியம் உடையவனாக இருக்க நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:  உனது எந்தப் பிரச்னையையும் பிற மனிதர்களிடம் முறையிடாதே. மக்கள் அனைவரிலும் கண்ணியம் உடையவனாக நீ ஆகலாம்.


வந்தவர்:  மக்கள் அனைவரிலும் ஆற்றலுடையவனாக இருக்க நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:  இறைவனை முழுவதுஞ்சார்ந்து வாழ்ந்திடு. நீயே மக்கள் அனைவரிலும் ஆற்றல் மிக்கவனாக ஆகலாம்.


வந்தவர்:  இறைவன் எனக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்கிட வேண்டும் என நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:   எப்போழுதும் துய்மையுடன் நீ இருந்திடு. இறைவன் உனக்கு அதிகம் வாழ்வாதாரம் வழங்குவான்.


வந்தவர்:   இறைவன் அவனது -தூதரின் அன்பைப் பெற்றவர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.


நபியவர்கள்:  இறைவன் அவனது -தூதரையும் நீ நேசித்திடு. அவ்விருவரின் அன்பைப் பெற்றோர் கூட்டத்தில் நீ சேர்ந்திடலாம்.


வந்தவர்:    மறுமை நாளில் இறைவன் அவனது -தூதரின் கோபத்திற்கு ஆளாகாதிருக்க நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:   இறைவனின் படைப்புகள் மீது நீ கோபம் கொள்ளாதே .மறுமை நாளில் இறைவன் அவனது -தூதரின் கோபத்திற்கு  நீ ஆளாக மாட்டாய்.


வந்தவர்:    என் பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப் பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:  விலக்கப்பட்ட ஹரமான உணவுகளை நீ தவிர்த்திடு.உனது பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படும்.


வந்தவர்:    மறுமை நாளில் இறைவன் எனது பாவங்களை மறைத்திட வேண்டும் என நான் விரும்புகிறேன்.


நபியவர்கள்:    உலகில் உன் சகோதரர்களின் பாவங்களை நீ மறைத்திடு. மறுமை நாளில் உன் பாவங்களை இறைவன் மறைத்து விடுவான்.


வந்தவர்:  பாவங்களிலிருந்து (அல்லது குற்றங்கலிலிருந்து) ஈடேற்றம் அளிக்க வல்லது எது?


நபியவர்கள்:   (பாவத்தை எண்ணி) அழுவதும் அடக்கமும் பிணிகளும்


வந்தவர்:   எந்த நன்மை இறைவனிடத்தில் மகத்துவம் மிக்க்கது?


நபியவர்கள்:  நற்குணம்,பணிவு, சோதனைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது.


வந்தவர்:  எந்தத் தீமை இறைவனிடத்தில் மிகவும் கடுமையானது?


நபியவர்கள்:  கெட்ட குணமும் வடிகட்டிய கஞ்சத்தனமும்


வந்தவர்:  இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவனின் கோபத்தைத் தணிக்க வல்லவை யாவை?


நபியவர்கள்:    மறைமுகமான தர்மமும் உறவினர்களுடன் இணைந்து வாழ்வதும்.


வந்தவர்:  மறுமை நாளில் நரக நெருப்பைத் தணிக்கவல்லவை யாவை?


நபியவர்கள்:  இவ்வுலகத்தில் சோதனைகளின் மீதும் துன்பங்களின் மீதும் பொறுமை கொள்வது.


(நன்றி சமரசம்16-29 பிப்ரவரி 2012 மாத இதழ்)

Thursday, February 16, 2012

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து!

 பேரானந்தம் பெருந்துயரம் இவ்விரு காரணங்களால்தான் மனித உணர்ச்சிகள் பற்றி எரிகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் மூடத்தனமான அவக்கேடான இரண்டு சப்தங்களை வெளிப்படுத்துவதிலிருந்துத் தடுக்கப் பட்டுள்ளேன்: ஏதேனும் ஒரு நன்மை ஏற்படும்போது (மகிழ்ச்சியில் சப்தமிடுவதிலிருந்து)ம் ஏதேனும் ஒரு துன்பம் நேரும் போது (ஒப்பாரி வைப்பதிலிருந்தும்)ம் தடுக்கப்பட்டுள்ளேன்.


لِكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍِ
“உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்!” (குர்ஆன் 57:23)
மேலும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “துன்பம் ஏற்பட்ட உடனேயே மேற்கொள்ளப்படுவதுதான் பொறுமை.” (புகாரி).

இன்பம் துன்பம் ஆகிய இரண்டு நிலைகளிலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவன்தான் ‘வீரன்’ எனும் சொல்லுக்குத் தகுதியானவன். உணர்ச்சிகளுக்கு கடிவாளமிடுவதன் மூலம் உண்மையில் அவன் தனது ஆன்மாவிற்கு நிம்மதியையும், வெற்றியையும் சுவைக்கச் செய்து விட்டான். இறைவன் மனிதப் பன்புகள் குறித்து திருமறையில் கூறுகிறான்:


وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي ۚ إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌِ
“நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடைக் கூடியவனாகவும் பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான்” (குர்ஆன் 11:10)

இறைவனை வணங்கக் கூடியவர்கள் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் காண்பார்கள் நல்லது நடக்கும் போது இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.சோதனைகள் வரும்போது பொறுமையை மேற்கொள்வார்கள்.

எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மனிதனை எளிதில் சாகடித்து விடும்; அது அவனை தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவன் கோபம் கொள்ளும் போது வெறிபிடித்தவனைப் போல மாறி விடுவான்; பிறரை மிரட்டுவான்.சுயக்கட்டுப்பட்டை இழந்து, மூச்சு வாங்கி,நிலை தடுமாறுவான். மற்றவர்களுக்கு அநீதியிழைப்பான். அதைப்போல மகிழும் போது எல்லை மீறி,தன்னையே மறந்து விடுவான்.

எவர் மீதாவது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டால் அவரைத் திட்டித் தீர்த்து விடுவான். அவர் செய்த நல்ல காரியங்களையெல்லாம் மறந்து, அவரது பெயருக்குக் களங்கம் ஏற்ப்படுத்துவான். அதே நேரம் எவரையாவது நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு மரியாதைப் பதக்கங்களை அணிவித்து அழகு  பார்ப்பான்; அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று விடுவான்.

உன் நண்பனை அளவோடு நேசி! ஒருநாள் அவன் உன் பகைவனாக மாறலாம்.

உன் பகைவனை அளவோடு வெறு! ஒரு நாள் அவன் உன் நண்பானாக ஆகலாம்.

“இறைவா கோபம், மகிழ்ச்சி இரண்டு நிலைகளிலும் நான் நடுநிலையுடன் செயல்பட உன்னிடம் வேண்டுகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள்.

எனவே, உணர்ச்சிகளை அடக்கி, அறிவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும்,ஒவ்வொன்றுக்கும் அதன் தகுதியறிந்து முக்கியத்துவம் அளிப்பவரும்தான் உண்மையை உண்மையாக உணர்ந்தவர்; நேர்வழியை அறிந்தவர்; சத்தியப் பதையில் நடப்பவர்.

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ ۚ 
إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌِ

“நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துக் கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம்.” குர்ஆன் 57:25)

இஸ்லாமிய மார்க்கம் சமநிலைப் பண்புகளையும், ஒழுக்க நெறிகளையும் கொண்டு வந்திருக்கிறது.நேர்மையான, நடுநிலையான தூய வாழ்க்கை நெறியை நமக்குத் தந்திருக்கிறது.

“இவ்வாறே உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’-சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம்.” குர்ஆன் 2:143)

சட்டங்களில் நீதி நலைநாட்டப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நமது உணர்வுகளிலும் செயல்பாடுகளிலும் நடுநிலையை மேற்கொள்வது அவசியம். ஏனெனில், மார்க்கம், உண்மை,சட்டங்கள், செயல்கள், வார்த்தைகள், பண்புகள் ஆகிய அனைத்திலும் நடுநிலை,நீதி,நேர்மை,-இதுவே மார்க்கத்தின் அடிப்படை.


وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُِ
“மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.” 
(குர் ஆன் 6:115)


தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1141559Wednesday, February 15, 2012

தமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2

இந்த பதிவின் முதல் பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கடவுளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் கடவுளின் பணியாள் அல்லது அடிமை என்பதே தேவதாசியின் பொருளாகும். பூஜை, புனஸ்காரங்களின் போது கடவுளின் சன்னதி முன்பு நடனமாடுவதையே அவர்கள் முக்கியப் பணியாகக் கொண்டிருந்ததால் ‘நடனமாது’எனவும் அழைக்கப்படடனர். வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடு கொண்ட ஆடையை அணிந்த நாட்டிய பெண்ணாக வர்ணிக்கிறது.


ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. “காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே” என்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது. 


சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.
தமிழ்நாட்டில் கவனத்தில் கொள்ளதக்க நிலையில் இவர்கள் இருந்து வந்தனர். இதைப் பற்றி இடைக்கால தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் கானக் கிடைக்கும் செய்திகள் தேவதாசி முறை பற்றி விளக்குகின்றன.கி.பி.1004 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில், ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.


அதே போல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் இது போன்ற நடனமாதுக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.பெண்கள் தேவதாசிகளாக பல்வேறு வழிமுறைகளின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செங்கல் பட்டு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், அங்குள்ள நெசவாளர்கள் தங்களது மூத்தபெண் குழந்தையை தேவதாசியாக அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.சில கர்ப்பிணிப் பெண்கள் அக்காலங்களில் தங்களுக்கு சுகப்பிரசவம் வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால் தனது மூத்த பெண் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொள்வர். குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பெண் குழந்தைகளை தேவதாசியாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


இவ்வாறு தேவதாசியாக அர்ப்பணிக்கப்படும் பெண், கோவில் நிர்வாகிகளின் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். அர்ப்பணம் செய்யப்படும் பெண் 6 வயது முதல் 8 வயதிற்குட்பட்டவளாக இருக்க வேண்டும். அப்பெண் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது கோயில் பூசாரி திருமனச் சடங்குகளை செய்வார். மேலும் கடவுளுக்காக/ தெய்வத்திற்காக தாலியை அப்பெண்ணின் கழுத்தில் அணிவிப்பார். அதன் பின்னர் நட்டுவன் அல்லது நடன ஆசிரியர் அப்பெண்ணுக்கு இசை மற்றும் நாட்டியம் கற்றுக் கொடுக்கத் துவங்குவார்.
தேவதாசி சமூகம் பொதுவாக மூத்த பெண் குழந்தைகளை தேவதாசியாக அர்ப்பணம் செய்துவிட்டு மற்றவர்களை அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனமுடிப்பர் அல்லது அவர்கள் தேவதாசியாக மாற அனுமதிப்பார்கள் தேவதாசிக்கு பெண் குழந்தை இல்லையெனில் தங்களது உறவினர்களிலிருந்து தத்தெடுப்பர் அல்லது அவளது சாதிலிருந்து அல்லது பிற சாதிலிருந்து விலைக்கு வாங்கி அர்ப்பணிப்பார்கள்.


20 ஆம் நூற்றாண்டில் தேவதாசி தடைச் சட்டம் தமிழகத்திற்கு முன்பாக லாகூர்,டெல்லி,ஆக்ரா,பேஷவார் போன்ற பகுதிகளில் நடைமுறைக்கு வந்ததால். அங்கிருந்தவர்கள் தேவதாசிமுறை அனுமதிக்கப்பட்ட பிற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதன்மூலம், பெரும்பாலான பெண்கள் சென்னையிலுள்ள பைகிராஃப்ட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, முஹம்மது ஹுசைன் தெரு மற்றும் பக்சின் அலி தெரு போன்ற பகுதிகளில் குடியேறினர்.


1927-இல் 20,000 தேவதாசிகள் சென்னையில் குடியேறியதுடன் தங்களுக்கென சங்கமும் துவக்கினர். தங்களை இத்தொழிலில் ஈடுபடுத்தியவரை அந்த சங்கம் கடுமையாக கண்டித்தது. அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. டாகடர் முத்துலெட்சுமி ரெட்டி இச்சமூகத்துடன் இணைந்து இக்கேடுகெட்ட நடைமுறையை எதிர்த்து குரலெழுப்பினார்.இதனை ஒழிப்பதற்காக கடுமையாக போராடி சட்டமன்றத்தில் குரலெழுப்பினார். இதற்காக சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்தினார். தேவதாசி முறையை எதிர்த்து ‘இந்திய மாதர் சங்கமும்’ அவர்களது அதிகாரப்பூர்வ ஏடான “ஸ்தீரீ தர்மாவும்” பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
1927-இல் இந்த சங்கங்கள் டாக்டர் ரெட்டியை இது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்ரும்படி வற்புறுத்தின. அதேவேளை, ஜூலை 8,1927-இல் சிதம்பரத்தில் சிங்கராம் பிள்ளை தலைமையில் தேவதாசிகள் மாநாடும் நடைபெற்றது. மற்றுமொரு மாநாடு செளத்ரி V.கோனம்பாள் தலைமையில் நவம்பர் 2,1927-இல் கோவையில் மணிமேகலை சங்கம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது.


சென்னை சட்டமன்றத்தில் நவம்பர் 4, 1927-இல் டாக்டர் ரெட்டி கோயில்களில் தவறான காரியங்களுக்காக இளம்பெண்களும், சிறுகுழந்தைகளும் தேவதாசியாக அனுமதிக்கப்படுவதை எதிர்த்து சட்டமியற்ற முன்மொழிந்த போது தேவதாசிகளில் ஒரு பகுதியினர் அதனைக் கடுமையாக எதிர்த்த கூத்தும் நடந்தது. இத்தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னை மற்றும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள தேவதாசிகள் இதனை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தினர்.


தேவதாசிகளின் பெருமையை உணர்த்தும் வகையில் டாக்டர் ரெட்டியின் தீர்மானத்திற்கு எதிராக T.துரைக் கண்ணம்பாள் என்ற சென்னை தேவதாசிகளின் அமைப்பின் செயலர் தலைமையில் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேவதாசிகளின் நினைவாக, “தேவதாசி நினைவு 1927” என்றழைக்கப்பட்ட மாதிரி நினைவூட்டு சென்னை அரசின் சட்ட உறுப்பினர் சி.பி. ராமசாமி அய்யரிடமும், வளர்ச்சித்துறை அமைச்சர் ரெங்கநாத முதலியாரிடமும் அளிக்கப்பட்டது.


இறுதியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் அஞ்சாமை மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாக இந்த சட்டம்,பிப்ரவரி 1,1929-இல் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் “சென்னை ஹிந்து அறநிலையத்துறைச் சட்டம் 1929” என அழைக்கப்பட்டது.


இருப்பினும் தேவதாசி முறையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930- இல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.


60 வருடங்களுக்கு முன்பே சட்டமியற்றி தடுக்கப்பட்டிருத்தாலும் இன்றும் இம்முறை தொடர்வதை இதன் முதல் பதிவை இங்கே அழுத்தி வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
References:
Samarasam Tamil Fortnightly
http://tawp.in/r/7ma
படங்கள் கூகுள்
தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1141316

Monday, February 13, 2012

தேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை

பொட்டு கட்டிவிடுதல் அல்லது தேவதாசி முறை என்று சொல்லப்படுகின்ற இந்த பழக்கம் 1947ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது.இருப்பினும் தேவதாசி முறை தமிழ்நாட்டில் உள்ள வேலூர்,திருவள்ளூர்,விழுப்புரம் மாவட்டங்களிலும்,ஆந்திராவிலும், கர்நாடாகவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசினால்,“பேசுபவரது நாக்கு எரிந்துவிடும்” என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தனர்.ஆனால் நாளடைவில் தேவதாசிகளை மன்னர்களும்,நிலபிரபுக்களும்,முக்கியப் பிரமுகர்களும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது இது வக்கிரமானது, அக்கிரமமும் கூட.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிலபடித்த அறிஞர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை வெறுக்கதக்க ஒன்றாகக் கருதி அதனை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்பத் துவங்கினர். காஞ்சிபுரம் ஆரிய மிஷன் செயலர் ராமச்சந்திரன் தேவதாசி முறையை எதிர்த்து பகிரங்கமாகக்குரல் எழுப்பினார். இந்த பழக்கத்தை தடை செய்யவும், பருவமடையாத குழந்தைகள் அர்ப்பணிக்கப்பட்டால் அவர்களை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் ஒன்றை அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு செயலர் தாதாபாய் 1912 செப்டம்பர் 18ல் “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

“தேவதாசி ஒழிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்” என காந்திஜி தனது ஹரிஜன் இதழில் எழுதினார்.இதனால் இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930-ல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.

சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் கூட சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறை இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவதாசி முறை கூடாது என்று சட்டம் இருப்பதால் சம்பிரதாயம், விமர்சையாகப் பின்பற்றப்படுவதில்லை.ஆனாலும் அந்த சம்பிரதாயம் மக்களிடையே வழக்கொழிந்து போய்விடவில்லை.காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.
தேவதாசி பெண், திருமண உறவில்லாமல் அவருக்கு பிறந்த குழந்தைகள்

தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால் மற்றவர்களால் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டது. ஒர் உதாரணத்தைப் பார்ப்போம். பழனியம்மள் என்பவர் 14 ஆண்டுகாலம் ராஜன் என்பவருடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் உன்னை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று ராஜன் பிரிந்து சென்று விட்டார். பழனியம்மாள் எந்த உரிமையும் கொண்டாட முடியாமல் அவர் இப்போது தவித்து வருகிறார். விவசாய கூலியாகப் பணியாற்றி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு ஒரு சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. 25 வயதான அவர் சிறுமியாக இருக்கும் போது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது பெற்றோர் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டனர். அவர் தேவதாசியாகி விட்டார். தேவதாசிகள் அனைவரின் முகப்பெழுத்தும் ‘எம்’ என்பதுதான். மாரியம்மாவைக் குறிக்கும் எழுத்துதான் எம் என்பதாகும். உண்மையில் தேவதாசிகள் அனைவரின் பொதுப் பெயரும் மாரியம்மா தான்.

ராஜவேணி என்ற ஏழுவயதுச் சிறுமியும் மாரியம்மாவுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்திலி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ள ராஜவேணிக்கு,நித்திய சுமங்கலி’ சடங்கு செய்துவைக்க வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக உள்ளனர். ராஜவேணிக்கு பொட்டுக்கட்டும் சடங்கை செய்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை.ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது என்கிறார்.
கிருஷ்ணவேணி உளுந்தூர்பேட்டையில் படித்து வருகிறார்.15 வயதான அவர், அவர்களது பெற்றோருக்கு இரண்டாவது மகள்.அந்திலி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-அஞ்சலி தம்பதியினரின் மூத்தமகள் ராஜலட்சுமி ஆவார்.ராஜலட்சுமியின் கணவர் சிறுது காலத்திற்கு முன் தற்கொலை செய்து  கொண்டார். இந்த அதிர்ச்சிலிருந்து அந்த குடும்பம் மீளவில்லை. கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் ஏற்படும் என்று நினைக்கின்ற அளவுக்கு அஞ்சலியிடம் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் தனது இளையமகள் கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்ற முடிவுக்கு அஞ்சலி வந்துள்ளார்.அவரது கணவர் ராமகிருஷ்ணரும் இதற்கு உடன்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராத திடீர் திருப்பமாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் இப்பிரச்சனையை மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் ஆஸ்டல் ஒன்றில் தங்கிப் படித்து வருகிறார்.

பின்குறிப்பு:
இதனுடைய தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தேவதாசி முறை- வரலாற்று பார்வை (இறைநாடினால்) விரைவில் எழுதுகிறேன்.


ஆதாரங்கள்:
1. http://tehelka.com/story_main4.asp?filename=Ne071704Reluctant.asp
2. http://www.paramparai.eu/html/prod02r4.htm
3.The Lord's last consort
தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1140873

Sunday, February 12, 2012

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களால் ஐந்தாம் கலீஃபா என்று வர்ணிக்கப்பட்டவர்கள்.நீதிமிக்க நான்கு  காலீஃபாக்களின் ஆட்சிக்கு பிறகு சீரழிந்து போன அரசியலை திருத்தி இஸ்லாமிய ஆட்சிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி அதன் பலன்களை மக்களுக்கு வழங்கி சுவைக்க செய்தவர். அரச குடும்பத்தில் பிறந்த இவரது இளமைப் பருவத்தில் இவரது தந்தை எகிப்தின் மிக முக்கிய மாநிலம் ஒன்றின் ஆளுநராக பதவி வகித்தார்.உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) தகுந்த வயதை அடைந்தபோது, உமையாக்களின் கீழ் அவரும் அளுநராக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையினர் கொடுத்திருந்த பெருந்தோட்டங்களில் பெரும்பகுதி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமாக இருந்தது.உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்த சொத்துக்களிலிருந்து ஆண்டுதோறும் ஐம்பதினாயிரம் அஷ்ரஃபிகள் வருமானம் கிடைத்தாக ஒரு மதீப்பீடு கூறுகிறது.எனவே அவர் ராஜபோகத்தில் மூழ்கியிருந்தது இயல்பானதே.அவரது உணவும் உடைகளும் வாகனங்களும் பழக்கவழக்கங்களும் ஒர் அரச குமாரனின் உணவு, உடைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒத்திருந்தன.

இத்தகைய அவரது வாழ்க்கை நிலைமைகள் அவர் பிற்காலத்தில் மேற்கொள்ளவிருந்த பெரும்பணிகளை எவ்வகையிலும் குறிப்பால் உணர்த்தக் கூடியவைகளாக அமையவில்லை. ஆனால் அவரது தயார் ‘உமர் (ரலி)’ அவர்களின் பேத்தியாவார். ‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியாவதற்குள்,உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) பிறந்தார்கள்.அவர் பிறந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள்-உற்ற தோழர்களில் பெரும்பாலோரும் அவர்களைப் பின்பற்றிய தாபீஈன்களும் உயிர்வாழ்ந்திருந்தனர்.

அவரது கல்வி ஹதீஸ்,பிக்ஹுக் கலைப் பயிற்சியோடு தொடங்கியது விரைவிலேயே அவர் முதல்தர முஹத்திஸாகவும் (புரட்சியாளர்) பிக்ஹு கலைவல்லுநராகவும் திகழ்ந்தார்.எனவே,எனவே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது காலத்திலும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்திலும் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தவை எவை என்றும்,கிலாஃபத்துக்குப் பின்னர் முடியாட்சி தோன்றிய பின் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்றும் அறிவுரீதியாகப் புரிந்துக் கொள்வது அவருக்குச் சிரமமாக இருக்கவில்லை.

இஸ்லாத்துக்கு முரணான மாற்றங்களை அவரது நெருங்கிய மூதாதையரே கொண்டுவந்திருந்தமையால்,நடைமுறையில் அவர் பல மூட்டுக்கட்டைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.இம்மாற்றங்களின் விளைவாக அவரது உற்றார் உறவினர்களுக்கு மட்டுமின்றி,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பல பயன்களும் சலுகைகளும் கிடைத்திருந்தன.இவ்வாறான சூழ்நிலையில் அவரது குடும்பப் பெருமை, சொந்தநலன்கள்,அவரது குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவை காரணமாக,அவர் தம் மனச்சான்றையும் அறிவையும் உலகாயதப் பயன்களுக்காக அர்ப்பணித்து,உண்மை,நீதி,அறம் ஆகிய பண்புகளைப் பொருட்படுத்தாமல் ஃபிர்அவ்னைப் போல ஆட்சி செலுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் 37 வயதை எட்டிய நிலையில்,எதிர்பாராத விதமாக அரியணை கிட்டியபோது,தமது தலையில் சுமத்தப்பட்ட பெரும் பொறுப்பினை உணர்ந்தார்.எதிர்பாராத இந்நிகழ்ச்சி அவருள் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திற்று.நீண்டகாலம் ஆழ்ந்து சிந்தித்து அனைத்தையும் திட்டமிட்டு இஸ்லாமிய வழியை ஏற்றுக் கொண்டவர் போல அவர் எவ்வித சிரமமும் இன்றி ஜாஹிலிய்யத் (அறியாமைக் காலம்) காட்டிய வழிக்கெதிராக இஸ்லாமிய வழியை எளிதில் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அரியணையை (ஆட்சிப் பொறுப்பை) அவர் பாரம்பரியச் சொத்தாகப் பெற்றாலும், மக்களின் உறுதிமொழியை பெறுமுன் அவர்,மக்கள் தம் விரும்பிய ஒருவரைத் தங்கள் கஃலீபாவாகத் தேர்வு செய்து கொள்வதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் உண்டு என்று தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்தார்.ஆனால்,மக்கள் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களையே தம் தலைவராகத் தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆதலால் அவர் இஸ்லாமிய கிலாஃபத்தின் (மக்கள் பிரதிநிதித்துவ) பெரும் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாயிற்று. அவர் ஆட்சிபீடத்தில் அமர்ந்த உடனேயே போலியாட்சி அகம்பெருமையையும் மன்னராட்சி எதேச்சாதிகார மனேபாவத்தையும் அரசவைப் படாடோபங்களையும் அதிகாரத்தின் மற்றெல்லா வெளிப்படைக் காட்சிகளையும் நீக்கிவிட்டு,ஆரம்ப கால கலீஃபாக்கள் நடத்திய எளிய வாழ்க்கையை மேற்கொள்ள உறுதிபூண்டார்.

அடுத்து அவர், அரச குடும்பத்தினர் அனுபவித்து வந்த சலுகைகள்,சிறப்புரிமைகள் மீது கவனம் செலுத்தி,அவர்களை சாதாரண முஸ்லிம்களின் மட்டத்துக்குக் கொண்டு வந்தார்.அவர்,தமக்குச் சொந்தமான தோட்டங்கள் உட்பட அரச குடும்பங்களுக்குச் சொந்தமான தோட்டந் துரவுகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிட்டார். சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்ட அசையும்,அசையா சொத்துக்கள் யாவற்றையும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதன் விளைவாக அவரது சொந்த வருமானம் பெரிதும் பாதிப்புற்றது. ஆண்டுதோறும் அவர் பெற்று வந்த 50,000 அஷ்ரஃபிகள் 200 ஆகக் குறைந்தன. அதுவுமின்றி அரசுக் கருவூலத்திலிருந்து தமக்கோ தம் குடுமபத்துக்கோ ஓரு காசு செலவிடுவதையும் அவர் சட்டவிரோதமாகவே கருதினார்.கலீஃபாவாக (மக்கள் பிரதிநிதியாக) தாம் ஆற்றிய சேவைக்கு எவ்வித ஊதியத்தையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். சுருங்கச் சொன்னால் இப்பொழுது அவரது வழ்க்கையே முழுமையாக மாற்றமடைந்து விட்டது.கிலாஃபத்தை ஏற்குமுன் அவர் ஒர் அரசகுமாரனைப் போல வாழ்ந்தார்.ஆனால் அதன் பின்னர் அவர் முற்றிலும் மாறி ஒரு சராசரி மனிதர் ஆனார்.

குடும்பத்தையும் குடும்ப அலுவல்களையும் ஒழுங்குபடுத்திய பின்னர்,அவர் ஆட்சிமுறையில் சீர்திருத்தம் செய்தார் நீதியற்ற ஆளுநர்களை அகற்றிவிட்டு நேர்மையானவர்களை ஆளுநர்களாக நியமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மக்களின் வாழ்க்கை,சொத்து,கண்ணியம் ஆகியவற்றின் மீது வரையறையில்லாத அதிகாரம் செலுத்தி வந்த அரசாங்க அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்து,நீதி நியாயப்படி நடக்கச் செய்து,சட்டமுறை சார்ந்த ஆட்சியை நிலைநாட்டினார்.வரிவிதிப்பு தொடர்பான கொள்கையை முற்றாக மாற்றி அமைத்து சட்ட முரணான வரிகளை ஒழித்துக்கட்டியதுடன் உமையாக்கள் மதுபான வடிசாலைகள் மீது விதித்திருந்த வரிகளையும் ஒழித்துவிட்டார்.ஜகாத் சேகரிக்கும் முறையையும் அவர் சீராக்கி திருத்தியமைத்து, பொது வேலைகளுக்குப் பயன்படத்தக்கதாக அரசுக் கருவூலத்தைத் திறந்துவிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்காக அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து மேலும் அநீதி நிகழா வண்ணம் நிலைமையைச் சீராக்கினார்; சட்டமுரணாக கைப்பற்றப்பட்டிருந்த அவர்களது வணக்கத் தலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தார்; அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவித்தார்.ஷரியத் சட்டப்படி அவர்களுக்குரிய உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழ்ங்கினார்.

பொது மக்களுக்கு கல்வி அறிவூட்டுவதற்காகப் பரந்த அளவிலான ஏற்பாடுகளைச் செய்து,நுண்ணறிவாளர்கள் குர்ஆன்,ஹதீஸ் மீதும் பிக்ஹு சட்டத்துறை மீதும் கவனம் செலுத்துமாறு செய்தார்.இதன் வாயிலாக வலிமைமிக்கதொரு அறிவியல் இயக்கம் தோன்றச் செய்தார்.இதன் விளைவாக பிற்காலத்தில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் ஷாபி  ஈ(ரஹ்)அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் போன்ற பேரறிஞர்கள் தோன்றினர்.

இவ்வாறாக அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியின் நோக்கத்தை அவர் நிறைவேற்றினார்.
   الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.
(அல் குர்ஆன் 22:41)

அக்காலத்தில் ரோம ராஜ்யமே,முஸ்லிம்களுக்கு எதிரான பலம்வாய்ந்த அரசாக இருந்தது.அந்த நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் இடையே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக நிலவிய அரசியல் தகராறு இன்னும் தீரவில்லை. ஆனால் ரோம இராஜ்ஜியம் கூட உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உயர்ந்த ஒழுக்க சீலத்தினால் கவரப்பட்டது. கலீஃபா அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தபொழுது ரோமச் சக்கரவர்த்தி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

“துறவி ஒருவர் உலக இன்பங்களைத் துறந்து ஏகாந்தமான ஒரிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு இருந்தால் நான் கிஞ்சிற்றும் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் இந்த மனிதனின் காலடியில் ஒரு மாபெரும் பேரரசே இருக்க அவர் அதனை ஒதுக்கி விட்டு ஒரு பக்கீரின் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது”

இரண்டரை ஆண்டுகாலமாக பாடுபட்டு அறியாமைக் கால ஆட்சிமுறையாக மாறிப்போன அரசியல் வாழ்கையின் பல்வேறு துறைகளையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தார். விரைவிலேயே உமையாக்கள்,இவ்விறைபக்தி மிக்க மனிதருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். இஸ்லாத்தின் வாழ்க்கை எழுச்சியில் அவர்கள் தமது சுகபோக வாழ்வின் சரிவை,மரணத்தைக் கண்டனர். ஆதலால் அதன் மறுமலர்ச்சிப் பணியினை அவர்களால் சகிக்க முடியவில்லை. இறுதியில் கலீஃபாவுக்கு எதிராக அவர்கள் சதி செய்தனர். 39 வயதே ஆன இளைய கலீஃபாவை நஞ்சூட்டிக் கொன்றனர்.


தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1140408

Monday, February 6, 2012

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!

உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139073

Sunday, February 5, 2012

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இவர்களை தெரிந்துக் கொள்வோம்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஒர் அறிமுகம்

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் பிறந்தவர்.(பிறப்பு ஹி.661(கி.பி.1262) அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தில் படிந்திருந்த எல்லா மாசுகளையும் அகற்றி,அதன் வாழ்க்கை முறையில் நுழைந்திருந்த தீமைகளை நீக்கி அதனைத் தூய உருவில் உலகுக்கு எடுத்துக் காட்டினார்.

அவர் தம் விமரிசனங்களில் சிறியவரோ,பெரியவரோ-யார் மீதும் தயவுதாட்சண்யம் காட்டவில்லை மக்களின் மரியாதைக்கும் பக்திக்கும் உரியவர்கள்கூட இமாம் அவர்களின் கண்டனத்திலிருந்து தப்ப முடியவில்லை.பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமய ஆங்கீகாரம் பெறப்பட்டு ஆலிம்களும் பொருட்படுத்தாத நிலையில் சமூகத்தில் நிலவிய தவறான பழக்கவழக்கங்களை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மிகக் கடுமையாக சாடினார்.

அவர் இவ்வாறு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்து ஒளிவு மறைவின்றித் தம் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தமையால் அவருக்கு எதிராக ஓர் உலகமே திரண்டெழுந்தது அதன் காரணமாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இன்றும்கூட பெருமளவு ஆலிம்களால் அன்பாகவும் இதமாகவும் நினைவுகூறப்படுவதில்லை. அதலால் நிறைய மார்க்க சகோதரர்களுக்கு இமாவர்களின் அறிமுகம் அற்றுப் போனது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்களால் விமர்சிக்கப்பட்டு மனம்நொந்த அக்கால அறிஞர்கள் பலர் அவரை விசாரணைக்கு உடபடச் செய்து பன்முறை சிறைக்கு அனுப்பினர். இமாவர்கள் கல்வித்துறையில் உயர்ந்த நிலையை அடைந்திருந்ததோடு,உண்மையை எடுத்துரைப்பதிலிருந்து உலகில் எந்த சக்தியும் அவரைத் தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு மன உறுதி படைத்தவராகவும் மிளிர்ந்தார் இதனால் வெஞ்சிறை சித்ரவதை அனுபவித்து சிறையிலேயே மரணிக்கவும் நேர்ந்தது.(இறப்பு ஹி.728 (கி.பி.1327)

இமாவர்களின் காலகட்டத்தில் இஜ்திஹாத்- (இஸ்லாமிய ஆராய்ச்சி) என்பது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டதோடு,பொருளற்ற அன்றைய (பித்அத்) புதிய கொள்கைகள் ஷரீஅத்தின் ஒரு பகுதியாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனது தூதரின் வழிமுறையின் பாலும் எவரும் இஸ்லாமிய மக்களின் கவனத்தை ஈர்க்கத் துணியவில்லை.அவதூறுக்கு அஞ்சி யாவரும் வாளாவிருந்தனர்.

அறியாமையிலும் ஒழுக்கக் கேட்டிலும் ஆழ்ந்திருந்த பொதுமக்களும் உலகாசையும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட ஆலிம்களும்,கொடிய காட்டுமிராண்டி ஆட்சியாளர்களும் இணைந்து ஏற்படுத்தியிருந்த தீய சூழலுக்கு எதிராக சீர்திருத்தம் வேண்டி எவரும் குரல் எழுப்புவது எளிதான செயலாக இருக்கவில்லை இருள்மிக்க அந்த யுகத்தில் குர்ஆன்,ஹதீஸ் ஒளியை ஏந்தி சீர்திருத்தக் குரல் எழுப்பிய ஒரே செம்மல் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே (அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக).

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஆளுமை, மற்றும் சிறப்புகள்.


இமாவர்கள் குர்ஆனை ஆழ்ந்து நோக்கும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஹதீஸ் கலையில் அவர் ஓர் இமாமின் தகுதிநிலையை அடைந்திருந்தார். இமாம் இப்னு தைமிய்யா அவர்களுக்கு தெரியாத,அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்த ஹதீஸும் ஹதீஸே அல்ல எனும் அளவுக்கு அவரது ஹதீஸ் பற்றிய அறிவு ஆழ்ந்து விரிந்திருந்தது. இஸ்லாமியச் சட்டத்துறையில் அவர் அதிகாரபூர்வமான வல்லுநர் என்று உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார்.

அக்காலகட்டத்தில் பகுத்தறிவுவாத கலை சார்ந்த தர்க்கவியல்,தத்துவவியல், இறைமையியல் ஆகிய துறைகளில் நியுணர்களாகத் திகழ்ந்தவர்களை இமாவர்கள் அவர்கள் விஞ்சியவராகவும் விவாதத்தில் எளிதாகத் தோல்வியுறச் செய்யும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். மேலும் யூத கிறிஸ்தவ வேத நூல்கள் பற்றியும் அவர்களின் சமயப் பிரிவுகள் பற்றியும் ஆழ்ந்த அறிவு இருந்தது.அதன் காரணமாக,“ விவிலிய நூலில் (Bible) வருகின்றவர்களைப் பற்றி ஆராய விரும்பும் எவரும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் ஆய்வுகளை ஒதுக்கிவிட்டுத் தமது ஆராய்ச்சிகளை நடத்த முடியாது” என்று கோல்ட்ஸிஹர் எனும் அறிஞர் கூறியுள்ளார்.


இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களது மறுமலர்ச்சிப் பணியினை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.


1.அன்று செல்வாக்கில் இருந்த கிரேக்க தர்க்கவியலையும் தத்துவவியலையும் அதன் பொய்மையையும் பலஹீனங்களையும் தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டினார்.இஸ்லாமிய உம்மத்தில் கிரேக்க தத்துவத்திற்கு இருந்த முக்கியதுவத்தை உடைத்து எறிந்தார்.

2.இஸ்லாத்தின் கொள்கையை விளக்குவதற்குப் பொதுவான அறிவு வழியையே கடைப்பிடித்தார். அது இயல்பானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் குர்ஆன்,சுன்னாவின் நோக்கத்துக்கு ஏற்றதாகவும் இருந்தது. எனவே அவரது அணுகுமுறை இணையற்றதாக விளங்கிற்று. சமய அறிவு படைத்தவர்கள், இஸ்லாமியக் கட்டளைகளை எடுத்துக் கூற முடிந்ததே தவிர அவற்றுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க முடியவில்லை.

3. அவர் விடாப்பிடியாக பழைமைகளைப் பின்பற்றும் கொள்கைக்கு (தக்லீத்) வலிமையான எதிர்ப்புக் குரல் எழுப்பியது மட்டுமின்றி முன்னைய இமாம்களின் வழியில் இஜ்திஹாதையும் மேற்கொண்டார்.அவர் குர்ஆனிலிருந்தும் நபிவழியிலிருந்தும் நபித் தோழர்களின் வாழ்க்கையிலிருந்தும் நேரடியாக அகத்தூண்டுதலைப் பெற்றதோடு, பல்வேறு மத்ஹபுகளையும் திறனாய்வு செய்து சட்டவிதிகளை திருத்தினார்.
இவ்வறாக அவர் இஜ்திஹாதின்(இஸ்லாமிய ஆராய்ச்சி)  வாயிலைத் திறந்து விட்டதுமன்றி, அத்துறையில் ஒருவர் தன் ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்பதற்கும் வழிகாட்டினார்.

4.இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இம்மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டதோடு அன்று இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்திருந்த தாத்தாரிய கும்பலின் நாசவேலைக்கும் இழிசெயல்களுக்கும் எதிராக வாளையும் ஏந்தினார். தாத்தாரியரின் தவிர்க்க முடியாத தாக்குதலிலிருந்து அதுவரை தப்பியிருந்த எகிப்து,சிரியா ஆகிய நாடுகளின் மக்களை பார்த்து தாத்தாரியரின் படையெடுப்பை தைரியமாகவும் வீரத்தோடும் எதிர்த்து நிற்க வேண்டுமென வேண்டினார்.

தாத்தாரியர் என்ற பெயரைக் கேட்டாலே பொதுமக்கள் அச்சத்தால் நடுநடுங்கி,இறப்பை எதிர்நோக்குவது போல அவர்களை எதிர்நோக்க அஞ்சுவர் என்று வரலாறு கூறுகிறது. ஆனால்,இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மக்களிடையே ஜிஹாத் உணர்ச்சியைத் தூண்டி அவர்களுக்கு வீரத்தையும் நம்பிக்கையும் ஊட்டினார்.

பின்குறிப்பு:
தாத்தாரிய மங்கோலிய படையெடுப்பை பற்றியும் அதனால் அன்றைய இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட அழிவை பற்றியும் ஓர் பதிவு வலையுகத்தில் (இன்ஷாஅல்லாஹ்) விரைவில்.

தமிழ்மண ஓட்டு போட  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138843