Sunday, November 17, 2013

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது.



பாகிஸ்தான் பிரிந்த நேரம். இந்திய முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு அசாதரணமான சூழ்நிலை நிலவிய தருணம். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் இன்றைக்கு காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருந்த அன்றைய சூழலில் முஸ்லிம்களிடையே இந்நாட்டின் மீதான நம்பிக்கையை எப்படி கொண்டு வருவது? 

ஒரு தலைவர் வேண்டும். அவர் நம்பிக்கை வளர்ப்பவராக அரவணைத்து செல்பவராக இருத்தல் வேண்டும். இந்த இடத்தை அருமையான நிரப்பினர் நேரு. 1948-ஆம் ஆண்டு, ஒரு இக்கட்டான சூழலில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் உரையாற்றுகின்றார் நேரு. தி ஹிந்து இதழ் தமிழில் வெளியிட்டிருந்த அந்த பேச்சு உண்மையில் கண்ணீர் மல்க செய்தது. என்னவொரு அருமையான பேச்சு அது!!! 

நேரு இல்லாத இந்தியா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதை இந்த பேச்சை படித்த பிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். நீங்களும் படியுங்கள், உங்கள் சந்ததியினருக்கும் படிக்க கொடுங்கள்..


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. 

இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும்.
சுமுகமாக உடன்படுவோம்...
சுமுகமாக மாறுபடுவோம்

உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். உங்களை யெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள் மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம், மாறுபடுவதற்காவது சுமுகமாக ஒப்புக்கொள்ள வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம், எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீள்திறன் கொண்டதே இளமை

உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நம் ஆன்மா அவமானப் படுத்தப்பட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்ட முதியவர்களுக்குப் பட்டதெல்லாம் போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களை யும் பார்த்ததற்குப் பிறகும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கொடுமை. நாமெல்லாம் சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருந்தால், அந்த வடுவை அகற்றுவதில் இப்போதே நம்மால் வெற்றிபெற முடியும்.
நொறுங்கிப்போன கனவுகள்; உறுதியான லட்சியங்கள்

என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடு வதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் பலம்

இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள். அவற்றின் வழியாக, தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள்; இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக் கூடிய அவளுடைய மாபெரும் திறன்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். 

இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய். காலம்காலமாகச் செழித்தோங்கிய அவளுடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால், பிற இடங்களிலிருந்து திரட்டி அதன் மூலம் தன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத அளவுக்குப் பலம் மிக்கவள் அவள். அதே போல் அந்த நீரோட்டங்களிலிருந்து தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள். மேலும், இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது.
நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?

நம் பாரம்பரியம்குறித்தும், அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை கொடுத்த நம் முன்னோர்கள்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இந்த வரலாறுகுறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்களும் இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்துகொண்டு, எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த வரலாறுகுறித்துப் பெருமை கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. 

தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை, நீங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வால் ஏன் நம்மைப் பிரிக்க வேண்டும்?
வரலாற்றோடு விளையாடுதல்

அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு நாட்டின் உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னைப் பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான், அதிக அளவுக்கு என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். 

வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட நாம் முயற்சித்ததுதான் நம்மைச் சாய்த்துவிட்ட பேரழிவுக்குக் காரணம். பூகோளத்துடனோ, வரலாற்றை உருவாக்கும் வலுவான போக்கு களுடனோ விளையாடுவதென்பது அவ்வளவு எளி தல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் நாம் உருவாக்கினோமென்றால், அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பாகிஸ்தான் நமக்கு ஏன் முக்கியம்?

ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற விதத்தில். இருந்தாலும், பெரும் எண்ணிக்கையி லான நபர்களின் உணர்வை அது அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நான் நம்புகிறேன். ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன். நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் கழுத்தை நெரித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப் பட்டிருக்கிறோம். மற்ற எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும், நமது இயல்பை நாம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறியும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை அடித்துக்கொள்ள நேரிடும். 

இந்த இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று ஒன்று கிடையவே கிடையாது. நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் நாம், பார்த்தும் பார்க்காமல் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது.

பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் அப்போது சம்மதித்திருக்க வேண்டும்? எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த நிலையில் தடுக்க முயல்வதைவிட, அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் அதனுடன் நெருக்கமான, நட்புணர்வு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால், தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன்.

பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான எந்த ஒரு ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது, பல நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இல்லாமல் ஆக்கிவிட்டு வரக் கூடாது.
ஒரே உலகத்தை நோக்கி…

நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் எல்லாருடைய மனதிலும் பாகிஸ்தான் பற்றி ஓடிக்கொண்டிருக்கும். அதுகுறித்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம். உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக்கூடும். எந்தத் திசையில் பார்ப்பது, என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எல்லா மதங்களையும் எல்லா விதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி னாலும் அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலானதும் மற்ற மார்க்கத்தினரையெல்லாம் புறவினத்தாராகக் கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான ஒன்றுதான். இருந்தாலும், இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் தாவிச் செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் நவீனச் சிந்தனைகளுக்கு சரிவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் பின்செல்வதற்கு சாத்தியமே இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். வலுவான போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் குழப்பங்களைக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி மதிப்பதாகத்தான் இருக்கும். ஆனால், தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை கொண்டிருக்குமே தவிர, கிணற்றுத் தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் அறிவுத்திறனில் நம்பிக்கை வைத்திருக்கும் தேசியமாக இருக்கும்; சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்க தேசியமாக இருக்கும்; சர்வதேசத் தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுக்கும் தேசியமாக இருக்கும். 

‘ஒரே உலகம்’என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் ‘உலக நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான்.
மதமும் கல்வியும்

இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். 

கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. இருந்தும், நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்கள், குறிப்பிட்ட விதத்தில் முடிவெடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்தும் என்பது உண்மைதான். நீங்களெல்லாம் உங்களை அந்நியர்களாகக் கருதாதீர்கள். எல்லாரையும் போலவே ரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே. இந்தியா வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.

உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உரிமைகள் தாமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வதற்கு உங்கள் எல்லாரையும் நான் வரவேற்கிறேன்; எல்லாரையும் போலவே நீங்களும் அதன் பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். துன்பங்களையும் துயரங்களை யும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்? 
   
1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை
தமிழில்: ஆசை
நன்றி : தி இந்து Published: November 14, 2013

Saturday, November 16, 2013

ஆப்கானிய தாலிபான் போராளிகளின் கவிதைகள்.

தாலிபான் என்ற சொல், இன்று தீவிரவாதத்துக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் மறுபெயராக மாறியுள்ளது. தமது நாட்டின் மீதும் அதன் வாயிலாகப் பண்பாட்டின் மீதும் அந்நிய சக்திகள் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிரான பாதுகாப்பு இயக்கமே தாலிபான். ‘மனிதர்களுக்காவே மதம்’ என்ற அடிப்படையை வசதியாக மறந்து ‘மதத்துக்காவே மனிதர்கள்’ என்ற ‘நம்பிக்கை’யைக் கொள்கையாகக் கொண்ட இந்த இயக்கம், அதை நிலைநாட்டுவதையே தனது குறிக்கோளகக் கருதியது. மனித உயிர்களைப் பலிகொண்டது; பலி கொடுத்தது. அப்படிப் பலியானவர்களும் பலியாகத் தயாராக இருந்தவர்களுமான ‘முஜாஹித்தீன்கள்’ கவிதை எழுதுபவர்களாகவும் இருந்திருப்பது வியப்பளிக்கும் முரண்.


முதலில் சோவியத் ஆக்கிரமிப்பின்போதும் தொடர்ந்து அமெரிக்க முற்றுகையின்போதும் தமது மதத்தையும் மரபையும் காப்பாற்றப் ‘புனிதப்’ போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி ஊடகங்கள் நமக்கு அளித்த சித்திரம் அவர்கள் கொடூரர்கள், மதவெறியர்கள், தீவிரவாதிகள் என்பது. பிறத்தியார் பார்வைக்குச் சரியானது என்று தோன்றும் இந்தச் சித்திரத்தில் கவனிக்கப்படாத உண்மையின் பகுதியும் உண்டு. அவர்கள் தரப்பில் நின்று பார்த்தால் அவர்கள் போராளிகள், அந்நிய ஊடுருவலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் ஈடுபட்டவர்கள். அந்தத் தரப்பிலிருந்தே இந்தக் கவிதைகள் எழுதப்பட்டன.
மென்னுணர்வற்றவர்கள் என்று சொல்லப்பட்ட இவர்களுக்குள் கவிதையின் ‘கருணைச்சுனை’ கசிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவிதைகள் காட்டுகின்றன. இவற்றில் பலவும் ரகசியமாக எழுதப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்பட்டவை. கழிப்பறைக் காகிதங்களிலும் கைக்கு அகப்பட்ட தாள்களிலும் எழுதப்பட்டவை. பெரும்பாலும் போலிப் பெயர்களில் எழுதப்பட்டவை.


ஆப்கானிஸ்தானில் சமாதான சகஜ நிலை பெயரளவுக்காவது திரும்பிய பின்னர் இந்தக் கவிதைகள் தேடித் திரட்டித் தொகுக்கப்பட்டன. இவை காதலை, நட்பை, போரை, மதத்தை எல்லாவற்றுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானைப் பற்றிப் பேசுபவை. எந்தச் செய்தி அறிக்கையையும் விட உணர்ச்சிகரமாக முற்றுகைச் சூழலைச் சித்திரித்தவை. மிர்னவஸ் ரஹ்மானியும், ஹமீத் ஸ்டானிக்ஸாயும் திரட்டி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த கவிதைகளைப் பதிப்பித்தவர்கள் அலெக்ஸ் ஸ்டிரிக்வான் லின்ஸ்கோஸ்டெனும் ஃபெரிக்ஸ் குஹேனும். தொகுப்பு ‘தாலிபான்களின் கவிதை’ (Poetry of the Taliban). மேற்சொன்ன நூலிருந்து தேர்ந்தெடுத்துத் தமிழாக்கம் செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன.
(நன்றி: குறிப்பும் மொழிபெயர்ப்பும்: சுகுமாரன்)

நான் இன்னும்அழைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு மெழுகுவர்த்தியைப் போல வெளியரங்கத்தில் சிரிக்கிறேன்; அந்தரங்கத்தில் அழுகிறேன்

ஒரு அலறலைப் போல வெறுமனே களகளத்து நான் மறைந்து போகிறேன்
எதிரி நடுநடுங்கி என்னிடமிருந்து தப்பியோடினாலும்
நான் புதைக்கப்படும்போது உறுதியாக அழவே செய்வான் 
ஆனால், என் பேச்சைக் கேளுங்கள்,
என் சாவுக்குப் பின்னும் 
நான் நிலைத்து நிற்பேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
நான் மறைந்துவிட்டதாகத் தெரிந்தாலும்
மனதுக்குள் எப்போதும் தோன்றிக்கொண்டே இருப்பேன்
புல்லைப் போல உலர்ந்து போகமாட்டேன்
பேனாவின் நாவால் இன்னும் பேசிக்கொண்டே இருப்பேன்
இறைவன் விரும்பினால் எடுத்துக்காட்டாக ஒரு பாடத்தை 
உங்களுக்குக் கற்பிப்பேன் அதை நீங்கள் மறக்கவே முடியாது.

அப்துல் பஸீர் எப்ராத் (1990)
காத்திருத்தல்

உன்னை எதிர்பார்த்துக்கொண்டே என் இரவுகளைக் கழிக்கிறேன்

நீண்ட இரவுகளைக் காத்திருப்பிலேயே கழிக்கிறேன்

உன் வாசலில் ஒரு பரிசாரகனாக
பிரிவின் விஷம் நிறைந்த கோப்பைகளை 
இப்போதும் காலியாக்கிக் கொண்டிருக்கிறேன்
உனது துக்கத்தால், எப்போதும் என் சட்டைமீது விழும்
வெதுவெதுப்பான கண்ணீர் அருவியை உற்பத்தி செய்கிறேன்.

பெயரிலி (1990)
என் இறைவனே!


என் மகத்தான இறைவனே, இது நரகமா, இல்லை உலகமா?
என் மகத்தான இறைவனே, இது விசுவாசமா அல்லது கொடூரமா?
என் இதயத்திலிருந்து கசிந்து ஒழுகுகிறதே குருதி, 
இது கொள்ளைநோயின் உதிரமா என் மகத்தான இறைவனே?
எல்லாத் தருணங்களிலும் 
குற்றச்சாட்டின் தீச்சுவாலையால் பொசுங்குகிறேனே,
இது போட்டியாலா அல்லது தோழமையாலா, என் மகத்தான இறைவனே?
வலியின் கடுமையால் கண்ணீர் பெருகுகிறதே, 
இது என்ன விதமான சோதனை, என் மகத்தான இறைவனே?
என் உதடுகளிலிருந்து சிரிப்பு அகன்று போகிறதே,
இது எந்த எதிரியின் தீய பிரார்த்தனையால், என் மகத்தான இறைவனே?
நான், எப்ராத், என் நண்பர்களுக்கும் பகையாக மாறுகிறேனே,
இது யாருடைய துரதிருஷ்டப் புலரி என் மகத்தான இறைவனே?

அப்துல் பஸீர் எப்ராத் (1990)
விடை பெறுகிறேன்
அன்பான அம்மா, உன்னிடம் விடை பெற்றுச் செல்ல அனுமதி கொடு.

இனியும் இங்கிருக்க மாட்டேன், விடை பெறுகிறேன்

வெள்ளையர்கள் என் வீட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்
இனியும் எந்தக் காரணத்துக்காகவும் என்னால் இங்கிருக்க முடியாது
நமது மரியாதையுடனும் புனிதத்துடனும் அவர்கள் விளையாடுகிறார்கள்
நாணுகிறது என் மனசாட்சி
இந்த நொடிதான் வெளியேறிச் சென்று போராடப் பொருத்தமானது.

ஆலம் குல் நசேரி (2007)
நாயகன்
எந்தச் சோதனையும் அவசியமில்லை


நான் ஆப்கானியன் நான் ஆப்கானியன்

வரலாறு சான்று சொல்கிறது
நான் நாயகன் நான் நாயகன் என்று
நான் கருணை மிகுந்தவன் என்றுஎன்னைத் தாக்குபவர்களுக்கு அப்படியானவனல்லன் என்றும்.
நான் புயல் நான் புயல்
என் வாழ்வை என் தாயகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்
அடிமைத்தனத்தை என்னால் ஏற்கமுடியாது
ஏனெனில் நான் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமை
நான் முஸ்லிம் நான் முஸ்லிம்
கால நகர்வில் காணாமற் போகிறது என் வழி
ஒடுக்கப்படுகிறார்கள் முஸ்லிம்கள்
நான் வருந்துகிறேன் நான் வருந்துகிறேன்
மிலேச்சர்களைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?
நான் ஆப்கானிய சந்ததி
நான் மிர்வாயிஸ் கான் நான் மிர்வாயிஸ் கான் ஆப்கானியர்கள் நமது பழைய வரலாற்றை மீட்டெடுத்தால்
நான் ஒமாராகவே இருக்க வேண்டும்
இதுவே என் நீண்ட கால ஆசை.

ஒமார் (2007)

* இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈரானும் ஒருங்கிணைந்த பேரரசைக் கற்பனை செய்த பாஷ்தூன் சர்வாதிகாரி மிர்வாயிஸ் ஹோடகி.

(நன்றி- காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-167/page56.asp )

Tuesday, November 12, 2013

அரபி பெண்களை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?

பிறப்பின் அடிப்படையில் மனிதனை இழிவாக கருதுகிற பார்ப்பனியவாதிகள். உலகில் பிறந்த அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து ஒரே ஒரு ஜோடியிலிருந்து பல்கி பெருகியவர்கள் என்று சொல்லக் கூடிய இஸ்லாமியக் கொள்கையை திரித்து இஸ்லாத்திலும் மனிதர்களை பிரித்து கூறுபோடும் பார்ப்பனீயம் இருப்பதாக போலி பரப்புரைகளை பலமுறை சந்தித்திருக்கிறேன். அதுபோலவே இணையத்தில் நீண்ட வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ வாதிகள் அரபி முஸ்லிம்பெண்களை இந்திய முஸ்லிம் ஆண்கள் மணக்க முடியுமா? என்று அடித்த வாய்ச்சவடால்களை முறியடிக்கிறது இக்கணொளி.
முஸ்லிம்கள் இதுநாள்வரை தேச எல்லை கடந்து மலாய், இந்தோனேஷியா,ஆப்பிரிக்கா ஐரோப்பிய இனகலப்பு திருமணம் முடித்திருந்தாலும். அரேபிய பெண்களை திருமணம் முடிக்க முடியுமா என்று சவடால் அடித்தவர்கள் இன்னொரு செய்தியையும் தருகிறேன்.
இந்திய ஆண் மலாய் பெண் திருமணம்
34 சவூதி பெண்கள் ஆஃப்கன் வங்காளிகளை மணந்துள்ளனர்!

ரியாத்: கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பார்க்க: செய்தி http://www.inneram.com/news/middle-east/3253-34-saudi-ladies-married-bangalis-and-pakistanis.html)

Friday, November 8, 2013

சவூதி அரேபியாவில் என்ன நடக்கிறது?


சவுதி நிதாக்கத்
அதிர்வலைகள் – தலையங்கம்

சவுதி அரேபியா! வரலாற்று பாரம்பரியமிக்க ஒரு பழமையான நாடு.
சமீபத்தில் ஒட்டு மொத்த உலகின் பார்வையையும், குறிப்பாக மீடியாக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது இந்த நாடு. காரணம் அது நடைமுறைப்படுத்த துடிக்கும் நிதாக்கத் சட்டமாகும். இச்சட்டம்  பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சட்டம் என்ன கூறுகின்றது?

அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 27 மில்லியன்.

இதில் 16 மில்லியன் மக்கள் நாட்டு குடிமக்கள். வெளிநாட்டிலிருந்து தங்களை பதிவு செய்துக் கொண்ட மக்களின் எண்ணிக்கை 9 மில்லியன்.

இதை கடந்து சுமார் 20 லட்சம் மக்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன. (பி.பி.சி)

சட்டவிரோதமாக சவுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற ஆணையை சவுதி பிறப்பித்து.

கடந்த 7 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு ஜுலை 3-2013 இறுதி கெடுவை அறிவித்தது சவுதி.

ஆனால் நிர்வாக ரீதியாக பெரும் நெருக்கடி நீடித்ததாலும் 15 சதவிகிதங்களுக்கு குறைவாகவே பணிகள் முடிந்திருந்ததாலும் காலகெடுவை நீடிக்க வேண்டிய நிலை சவுதி நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. அடுத்த காலகெடுவை சவுதி நிர்வாகம் அறிவித்தது நவம்பர் 3, 2013.

புதிய நிர்வாக ஆண்டான முஹர்ரம் 1435 முதல் நாள் முதல் சவுதி அரசின் தேடுதல் பணி தொடங்கும் என்று அறிவிப்புகள் தொடர்ந்து வந்தவண்ணமிருந்தன.

காலகெடு நீடிக்கப்படுமா…? படாதா…? போன்ற மனக்குழப்பங்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. மாறுபாடான – வதந்திக்கு நிகரான – பதிவுகள் மக்களை இன்னும் பயமுறுத்தியது.

நவம்பர் 4, 2013 எவ்வித காலகெடுவும் நீடிக்கப்படாமல் முறையற்ற வெளிநாட்டவர்களை கைது செய்யும் படலம் துவங்கியது. அரப் நியுஸ் செய்திப்படி முதல் நாள் கிட்டத்தட்ட 5000 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜித்தாவில் மட்டும் 4000 நபர்களும், இதர பல பகுதிகளில் 1000 நபர்கள் வரை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதினா, லைலா அஃப்லாஜ், அல்பாஹா, ஹஃப்ரல்பாதின் போன்ற பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடப்பதாகத் தெரிகின்றது. சவுதியின் தலைநகரான ரியாத் நிலவரம் குறித்த செய்திகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. ஆனாலும் மிக பரப்பரப்பாக இருக்கும் பத்ஹா வெறிச்சோடி கிடக்கின்றது.
சுமார் ஐந்து லட்சம் வீடுகளை சோதனையிட முறைப்படுத்தியுள்ளதாகவும், முறையாக தங்குமிடத்திற்கான ஆட்கள் மட்டும் அங்கு தங்கியுள்ளார்களா…? என்ற சோதனையே முதலில் துவங்கும் என்றும் அதிகாரி்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத்தின் பெண் ஆய்வாளர்களை வைத்து வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட செய்தியை அந்த அமைச்சக அதிகாரிகள் அழுத்தமாக மறுத்துள்ளனர்.

கடுமையான தொழில் மற்றும் வர்த்தக நெருக்கடியை ஒரே நாளில் சந்தித்துள்ளது சவுதி அரேபியா. பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வணிக நிறுவனங்களும் பிஸினஸ் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.

சவுதி அரேபியாவின் முக்கிய உணவாக கருதப்படும் குப்ஸ் என்ற ரொட்டி வகை உணவை தயாரிக்கும் பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. பால் போன்ற அன்றாடத் தேவையை நிறைவேற்ற முடியாத சூழல் தற்போது நிலவுவதால் கடுமையான விலைவாசி ஏற்றம் ஏற்படும் அபாயத்தையும் மக்கள் உணர்ந்துள்ளனர். வினியோகத்திற்கு ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் இத்தகைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் இங்கு சிந்திக்க வேண்டிய ஒன்று.

இப்படியான ஒரு நெருக்கடியை ஒரே நாளில் இந்த நாடு சந்திக்கும் வேலையில் நிக்காத் சட்டத்தின் நெருக்கடியை எதிர்த்து இந்தோனேஷியவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் உள்ளிருப்பு போராட்டம் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய செய்தியையும் அரபுநியுஸ் வெளியிட்டுள்ளது.

எங்களின் பணி ஆவனங்களை முறைப்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தோனேஷிய மக்கள் அதை வெளிப்படையாக பத்திரிக்கை செய்தியில் அறிவித்துள்ளனர்.
சவுதி நாட்டையே ஒரு நெருக்கடிக்குள் தள்ளியுள்ள இந்த நிக்காத் சட்டமும், அதை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் வெளிநாட்டவர்களை கடுமையாக பாதித்துள்ளன. முறையான ஆவனங்களை சமர்பித்து இக்காமாவிற்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவில்லாதது. பல்வேறு பெரிய நிறுவனங்களின் பணியாளர்களுக்கே இதுவரை இக்காமா கிடைக்காத நிலையும் தொடர்கின்றது. இக்காமா இல்லாவிட்டாலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் எழுத்து ஆவனம் பணியாளர்களிடம் இருக்க வேண்டும். (Thanks to GN.)

சவூதி அரசின் நடவடிக்கைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தான். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தவர்கள் இவர்கள். பெரும் அந்நிய செலவானிகளை ஈட்டித் தந்த இம்மக்களுக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் மறுவாழ்வுக்காக என்ன செய்ய காத்திருக்கின்றன இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
அந்த வகையில் அதிகமான வளைகுடா தொழிலாளர்களை கொண்ட கேரளா மாநிலம் வளைகுடா நாடுகளில், குறிப்பாக சவூதியில் அதிகளவில் வசிக்கும் மலையாள நாட்டவர், சவூதி அரசின் நிதாக்கத் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டோர் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குரிய விமானக் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் என்று அமைச்சர் கே சி ஜோசஃப்  அறிவித்துள்ளார். தாயகம் திரும்பக் கருதும் கேரளத்தவர் சவூதியிலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினால், மாநில அரசு சார்பில் அவருக்கு விமானச் சீட்டு கிடைக்கும் என்றும், இவ்வாறு கேரளம் திரும்பும் தாய்நாட்டு அன்னியர்களுக்கு மறுவாழ்வுக்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது வரவேற்க்கத்தக்கது.