Saturday, November 16, 2013

ஆப்கானிய தாலிபான் போராளிகளின் கவிதைகள்.

தாலிபான் என்ற சொல், இன்று தீவிரவாதத்துக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் மறுபெயராக மாறியுள்ளது. தமது நாட்டின் மீதும் அதன் வாயிலாகப் பண்பாட்டின் மீதும் அந்நிய சக்திகள் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிரான பாதுகாப்பு இயக்கமே தாலிபான். ‘மனிதர்களுக்காவே மதம்’ என்ற அடிப்படையை வசதியாக மறந்து ‘மதத்துக்காவே மனிதர்கள்’ என்ற ‘நம்பிக்கை’யைக் கொள்கையாகக் கொண்ட இந்த இயக்கம், அதை நிலைநாட்டுவதையே தனது குறிக்கோளகக் கருதியது. மனித உயிர்களைப் பலிகொண்டது; பலி கொடுத்தது. அப்படிப் பலியானவர்களும் பலியாகத் தயாராக இருந்தவர்களுமான ‘முஜாஹித்தீன்கள்’ கவிதை எழுதுபவர்களாகவும் இருந்திருப்பது வியப்பளிக்கும் முரண்.


முதலில் சோவியத் ஆக்கிரமிப்பின்போதும் தொடர்ந்து அமெரிக்க முற்றுகையின்போதும் தமது மதத்தையும் மரபையும் காப்பாற்றப் ‘புனிதப்’ போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி ஊடகங்கள் நமக்கு அளித்த சித்திரம் அவர்கள் கொடூரர்கள், மதவெறியர்கள், தீவிரவாதிகள் என்பது. பிறத்தியார் பார்வைக்குச் சரியானது என்று தோன்றும் இந்தச் சித்திரத்தில் கவனிக்கப்படாத உண்மையின் பகுதியும் உண்டு. அவர்கள் தரப்பில் நின்று பார்த்தால் அவர்கள் போராளிகள், அந்நிய ஊடுருவலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் ஈடுபட்டவர்கள். அந்தத் தரப்பிலிருந்தே இந்தக் கவிதைகள் எழுதப்பட்டன.
மென்னுணர்வற்றவர்கள் என்று சொல்லப்பட்ட இவர்களுக்குள் கவிதையின் ‘கருணைச்சுனை’ கசிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவிதைகள் காட்டுகின்றன. இவற்றில் பலவும் ரகசியமாக எழுதப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்பட்டவை. கழிப்பறைக் காகிதங்களிலும் கைக்கு அகப்பட்ட தாள்களிலும் எழுதப்பட்டவை. பெரும்பாலும் போலிப் பெயர்களில் எழுதப்பட்டவை.


ஆப்கானிஸ்தானில் சமாதான சகஜ நிலை பெயரளவுக்காவது திரும்பிய பின்னர் இந்தக் கவிதைகள் தேடித் திரட்டித் தொகுக்கப்பட்டன. இவை காதலை, நட்பை, போரை, மதத்தை எல்லாவற்றுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானைப் பற்றிப் பேசுபவை. எந்தச் செய்தி அறிக்கையையும் விட உணர்ச்சிகரமாக முற்றுகைச் சூழலைச் சித்திரித்தவை. மிர்னவஸ் ரஹ்மானியும், ஹமீத் ஸ்டானிக்ஸாயும் திரட்டி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த கவிதைகளைப் பதிப்பித்தவர்கள் அலெக்ஸ் ஸ்டிரிக்வான் லின்ஸ்கோஸ்டெனும் ஃபெரிக்ஸ் குஹேனும். தொகுப்பு ‘தாலிபான்களின் கவிதை’ (Poetry of the Taliban). மேற்சொன்ன நூலிருந்து தேர்ந்தெடுத்துத் தமிழாக்கம் செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன.
(நன்றி: குறிப்பும் மொழிபெயர்ப்பும்: சுகுமாரன்)

நான் இன்னும்அழைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு மெழுகுவர்த்தியைப் போல வெளியரங்கத்தில் சிரிக்கிறேன்; அந்தரங்கத்தில் அழுகிறேன்

ஒரு அலறலைப் போல வெறுமனே களகளத்து நான் மறைந்து போகிறேன்
எதிரி நடுநடுங்கி என்னிடமிருந்து தப்பியோடினாலும்
நான் புதைக்கப்படும்போது உறுதியாக அழவே செய்வான் 
ஆனால், என் பேச்சைக் கேளுங்கள்,
என் சாவுக்குப் பின்னும் 
நான் நிலைத்து நிற்பேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
நான் மறைந்துவிட்டதாகத் தெரிந்தாலும்
மனதுக்குள் எப்போதும் தோன்றிக்கொண்டே இருப்பேன்
புல்லைப் போல உலர்ந்து போகமாட்டேன்
பேனாவின் நாவால் இன்னும் பேசிக்கொண்டே இருப்பேன்
இறைவன் விரும்பினால் எடுத்துக்காட்டாக ஒரு பாடத்தை 
உங்களுக்குக் கற்பிப்பேன் அதை நீங்கள் மறக்கவே முடியாது.

அப்துல் பஸீர் எப்ராத் (1990)
காத்திருத்தல்

உன்னை எதிர்பார்த்துக்கொண்டே என் இரவுகளைக் கழிக்கிறேன்

நீண்ட இரவுகளைக் காத்திருப்பிலேயே கழிக்கிறேன்

உன் வாசலில் ஒரு பரிசாரகனாக
பிரிவின் விஷம் நிறைந்த கோப்பைகளை 
இப்போதும் காலியாக்கிக் கொண்டிருக்கிறேன்
உனது துக்கத்தால், எப்போதும் என் சட்டைமீது விழும்
வெதுவெதுப்பான கண்ணீர் அருவியை உற்பத்தி செய்கிறேன்.

பெயரிலி (1990)
என் இறைவனே!


என் மகத்தான இறைவனே, இது நரகமா, இல்லை உலகமா?
என் மகத்தான இறைவனே, இது விசுவாசமா அல்லது கொடூரமா?
என் இதயத்திலிருந்து கசிந்து ஒழுகுகிறதே குருதி, 
இது கொள்ளைநோயின் உதிரமா என் மகத்தான இறைவனே?
எல்லாத் தருணங்களிலும் 
குற்றச்சாட்டின் தீச்சுவாலையால் பொசுங்குகிறேனே,
இது போட்டியாலா அல்லது தோழமையாலா, என் மகத்தான இறைவனே?
வலியின் கடுமையால் கண்ணீர் பெருகுகிறதே, 
இது என்ன விதமான சோதனை, என் மகத்தான இறைவனே?
என் உதடுகளிலிருந்து சிரிப்பு அகன்று போகிறதே,
இது எந்த எதிரியின் தீய பிரார்த்தனையால், என் மகத்தான இறைவனே?
நான், எப்ராத், என் நண்பர்களுக்கும் பகையாக மாறுகிறேனே,
இது யாருடைய துரதிருஷ்டப் புலரி என் மகத்தான இறைவனே?

அப்துல் பஸீர் எப்ராத் (1990)
விடை பெறுகிறேன்
அன்பான அம்மா, உன்னிடம் விடை பெற்றுச் செல்ல அனுமதி கொடு.

இனியும் இங்கிருக்க மாட்டேன், விடை பெறுகிறேன்

வெள்ளையர்கள் என் வீட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்
இனியும் எந்தக் காரணத்துக்காகவும் என்னால் இங்கிருக்க முடியாது
நமது மரியாதையுடனும் புனிதத்துடனும் அவர்கள் விளையாடுகிறார்கள்
நாணுகிறது என் மனசாட்சி
இந்த நொடிதான் வெளியேறிச் சென்று போராடப் பொருத்தமானது.

ஆலம் குல் நசேரி (2007)
நாயகன்
எந்தச் சோதனையும் அவசியமில்லை


நான் ஆப்கானியன் நான் ஆப்கானியன்

வரலாறு சான்று சொல்கிறது
நான் நாயகன் நான் நாயகன் என்று
நான் கருணை மிகுந்தவன் என்றுஎன்னைத் தாக்குபவர்களுக்கு அப்படியானவனல்லன் என்றும்.
நான் புயல் நான் புயல்
என் வாழ்வை என் தாயகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்
அடிமைத்தனத்தை என்னால் ஏற்கமுடியாது
ஏனெனில் நான் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமை
நான் முஸ்லிம் நான் முஸ்லிம்
கால நகர்வில் காணாமற் போகிறது என் வழி
ஒடுக்கப்படுகிறார்கள் முஸ்லிம்கள்
நான் வருந்துகிறேன் நான் வருந்துகிறேன்
மிலேச்சர்களைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?
நான் ஆப்கானிய சந்ததி
நான் மிர்வாயிஸ் கான் நான் மிர்வாயிஸ் கான் ஆப்கானியர்கள் நமது பழைய வரலாற்றை மீட்டெடுத்தால்
நான் ஒமாராகவே இருக்க வேண்டும்
இதுவே என் நீண்ட கால ஆசை.

ஒமார் (2007)

* இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈரானும் ஒருங்கிணைந்த பேரரசைக் கற்பனை செய்த பாஷ்தூன் சர்வாதிகாரி மிர்வாயிஸ் ஹோடகி.

(நன்றி- காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-167/page56.asp )

No comments:

Post a Comment