Friday, January 15, 2016

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டா ?

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு : ஜல்லிக்கட்டா? மஞ்சு விரட்டா?

மிழகத்தில் கி.மு 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை  வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.