Tuesday, December 9, 2014

வெடிகுண்டு மிரட்டல் - இளம் பெண் சரண்யா கைது!

மதுரை: மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி இந்நெரம்.காம் )

Friday, December 5, 2014

இவரா? இந்த பாபரா? ராமர் கோயிலை இடித்திருப்பார்?

மக்களை மதரீதியாக பிரித்து தங்களின் அதிகார அரசியல் தொழிலை வளர்ப்பதற்காக கால் நூற்றாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன், இராமர் கோயில்.

இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் மதவெறிக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 
ஒரு சமூகத்தை தொடர்ச்சியாக குற்றவாளி சமூகமாக முன்னுறுத்தி அவர்களை எதிரிகளாக கட்டமைத்து அரசியல் செய்ய முனைகிற பாசிச தன்மைகளை ஹிட்லர் முசோலினிடம் நேரடியாக சென்று பாடம் பயின்று நடைமுறைப் படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறுகிறது ஆனாலும் ஜனநாயக சக்திகள் நடுநிலையாளர்களின் உதவியுடன் முறியடிப்போம் விரைவில்.

Sunday, July 20, 2014

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்...!

மிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
த்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை  கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
(நன்றி - வினவு )

Wednesday, July 16, 2014

இலங்கையில் இனக்கலவரம்: நடந்தது என்ன?

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை 2009ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு மட்டுப்பட்டு பேரினவாதிகளின் பார்வை இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள்மீது திரும்பியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்குத் திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும்.

பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொது பலசேனா’ எனும் இயக்கமானது ஊர் ஊராகக் கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந்நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளைப் பல விதமாகத் துவேசத்தோடு பரப்பியது.

புனித பௌர்ணமி தினங்களில் பௌத்த விகாரைகளில் பௌத்த போதனைகளோடு சொல்லப்படும் பௌத்த பிக்கு ஞானசார தேரரின் வசீகரிக்கும் துவேசப் பேச்சால் மயங்கியவர்கள் அவரைப் பின்பற்றி அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். அவரைப் பின்பற்றும் கூட்டம் இலங்கை முழுவதும் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் பொதுபலசேனாவின் உத்தியோகப்பூர்வமான அலுவலகங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளரும் மஹிந்த ராஜபக்?ஷவின் சகோதரருமான கோதபாய ராஜபக்?ஷவின் தலைமையில் நாட்டின் பிரதான நகரங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் பெண்களும் பேரினவாதிகளால் இன்னல்களுக்குள்ளாகிய சம்பவங்களும் பதிவாகிக் கொண்டேயிருந்தன. ஹலால் உணவுகள் தொடர்பான சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. பேரினவாதிகள் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை எரித்தனர். பௌத்த பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களை இயங்க அனுமதிக்காது மூடச் செய்தனர்.

இவ்வாறான நிலையில் பௌத்த தேசத்தில் எங்கும் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிட்டவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் சச்சரவுகள் என வரும்போது பொறுமை காக்கவும் ஒதுங்கிச் செல்லவும் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்தச் சச்சரவுகளுக்கும் வழியில்லாத நிலையில் ஏதேனும் சிறு பொறியாவது கிட்டாதா எனப் பொதுபலசேனா இயக்கம் காத்திருந்தது.

தர்கா நகர், அளுத்கம, பேருவளை பகுதிகள்முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள். இவை இலங்கையின் மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையோர பிரதேசங்கள் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களின் பிரதானத் தொழிலாக வியாபாரத்தைச் சொல்லலாம். இரத்தினக்கல் வியாபாரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். சர்வதேச அறபிக் கல்லூரியான ஜாமிய்யா நளீமிய்யா கல்லூரி இங்கிருக்கிறது. புராதனப் பெருமை வாய்ந்த பல பள்ளிவாசல்கள் இங்கிருக்கின்றன. இப்பிரதேசங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டவை. ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப் பட்டால், தப்பிச் செல்ல ஒரு தரைவழி மாத்திரமே உள்ள பிரதேசங்கள் என்பதால் இங்கு வாழும் முஸ்லிம் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது எளிது.

ஜூன் 12, வியாழக்கிழமை, பௌத்தர்களின் புனித தினமான பொஸொன் பௌர்ணமி. தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரர் பகல் நேரம், மோட்டார் வாகனமொன்றில் தனது சாரதியுடன் தெருவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எதிரே முஸ்லிம் இளைஞர்கள் இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டியின் சாரதியான சிங்களவர், அந்த இளைஞர்களைத்
தூஷண மொழியில் மோசமாகத் திட்டுகிறார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் கோபமாகத் திட்டச் சத்தம் கேட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்துசாரதியையும் பிக்குவையும் பத்திரமாக அனுப்பிவைக்கின்றனர்.
மாலை நேரம் பேச்சுவாக்கில் பொதுபலசேனா உறுப்பினர் ஒருவரிடம் பகலில் நடந்த நிகழ்வை சாரதி விவரிக்கின்றார். அவர்கள் காவல் நிலையம் சென்று முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் சேர்ந்து ஒரு பௌத்த பிக்குவை மோசமாகத் தாக்கினர் என்று முறைப்பாடும் செய்தனர். சிங்கள ஊடகங்களுக்கு இவ்விடயத்தைத் தெரிவித்தனர். அவையும் இச்செய்திக்கு முன்னுரிமை வழங்கி, பிக்கு வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் காட்சியையும் காட்டி, முழு இலங்கைக்கும் விடயத்தைத் தெரிவுபடுத்தின.

தம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாகக் காவல்நிலையம் சென்று உண்மை நிலையை எடுத்துரைத்தனர் என்ற போதிலும் போலிஸ் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் சிங்கள ஊடகங்கள் செய்தி அறிவிக்கவே பொதுபலசேனா இயக்க உறுப்பினர்களும் இன்னுமொரு இனவாத இயக்கமான இராவண பலய இயக்க உறுப்பினர்களும் சேர்ந்து அளுத்கம காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். அந்த நான்கு இளைஞர்களையும் உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்று இறுதியில் கொழும்பு - காலி பிரதான வீதியின் போக்குவரத்து நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்தது. பதற்றமான சூழல் எங்கும் நிலவியது. அரசு சில அமைச்சர்களை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர்களின் வாகனங்களுக்கும் தாக்குதல்கள் நடத்தவே, உடனடியாக இலங்கை போலிஸ்

மாஅதிபர் என்.கே. இலங்ககோன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விஜயம் செய்தார். கண்ணீர்க் குண்டுப் பிரயோகத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு காவல் துறையைப் பணித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் நடத்தப்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர். இரவு 10.30 மணியளவில் முற்றாகச் சீரடைந்ததாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலிஸால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 13, 2014 - வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். அவர்களை 25ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளையிடுகிறார். இளைஞர்களின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத் தரணிகள், இளைஞர்கள் சிறையில் வைத்துக் காவல் துறையினரால் தாக்குதல்களுக்குள்ளாகியதைச் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நீதவான், அவர்களைத் தனித் தனிச் சிறையிலடைக்குமாறு கட்டளையிடுகின்றார்.

ஜூன் 15, 2014 - ஞாயிற்றுக்கிழமை புனித பொஸொன் பௌர்ணமி தினத்தன்று பௌத்த பிக்கு தாக்குதலுக்குள்ளானதைக் கண்டித்துப் பொதுபலசேனா இயக்கம், அளுத்கம பிரதேசத்தில் ஒரு மாநாடும் பேரணியும் நடத்தவிருப்பதான தகவல் கசிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் அச்சமான சூழ்நிலை பரவுகிறது. உடனே செயற்படும் முஸ்லிம் தலைமைகள் 'பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் தற்போதைய சூழ்நிலையில் இப்பிரதேசத்தில் கூட்டங்களையும் பேரணியையும் நடத்துமானால், அது ஆபத்தினை ஏற்படுத்தும்' எனத் தெளிவுபடுத்தி, இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி போலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் மகஜரொன்றைக் கையளிக்கின்றனர்.

இக்கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் எனப் பல அமைப்புக்கள் கையெழுத்திட்டிருந்தன. என்றபோதும் அன்று அக்கூட்டத்துக்கோ, பேரணிக்கோ தடை விதிக்கப்படவில்லை. அன்றே அவற்றுக்குத் தடை விதித்திருந்தால் பல அழிவுகளையும் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் எனப் போலிஸ் மாஅதிபர் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டதன்படி இராவண பலய, புத்த சாசன கமிட்டி, பொதுபலசேனா இயக்கம் ஆகியவை ஒன்றுசேர்ந்து கூட்டத்தை நடாத்தின. நாடுமுழுவதிலிருந்தும் திரண்டு வந்திருந்த மேற்படி இயக்க உறுப்பினர்களின் முன்னிலையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளரான கலகொட அத்தே ஞானசேர தேரர் இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக மிகக் கொச்சையான மொழியில் உரையாற்றுகிறார். அந்த உரை கூட்டத்தை உசுப்பேற்றுகிறது.
கூட்ட முடிவில், முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் சித்தரித்த புத்தபிக்கு தங்கியிருக்கும் விகாரைக்கு, முஸ்லிம் பிரதேசங்களினூடாகப் பேரினவாத உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஊர்வலம் செல்லும் வீதியோரமாக அமைந்திருக்கும் பள்ளிவாசல்மீதும் அங்கு தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீதும் ஊர்வலத்தில் வந்த பேரினவாதிகள் குழு தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கற்களாலும் தடிகளாலும் தாக்கத் தொடங்குகிறது.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல் சேதமுறாதவண்ணம் தாக்குதலைச் சமாளிக்க அரணாக நின்று காயமடைகின்றனர். அதற்கு மேலும் பொறுமைகாக்க இயலாத முஸ்லிம் இளைஞர்கள் பதிலுக்கு ஆயுதங்களேதும் இல்லாத நிலையில் கற்களைக்கொண்டு திருப்பித் தாக்குகின்றனர். இதனால் வெருண்டோடும் பேரினவாதப் பௌத்த இளைஞர்கள் நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொள்கின்றனர். கடைகளை உடைத்துப் பெறுமதியானவற்றை எடுத்துக் கொண்டு மீதமானவற்றைச் சேதப்படுத்திக் கடைகளை முற்றுமுழுதாக எரித்துவிடுகின்றனர். நிலைமையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே அப்பிரதேசத்தில் மாலை 6.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

அளுத்கம, பேருவளை, மருதானை, வெலிப்பிட்டிய, அம்பேபிட்டிய ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமலிலிருந்த போதிலும்கூட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களிலிருக்கும் பள்ளிவாசல்களும் எரிக் கப்படவே, கலவரக்காரர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிய முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து வந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிறு நள்ளிரவு 12.30ஐத் தாண்டியபோது வன்முறையாளர்கள் குழு வெலிப்பிட்டிய பள்ளி வாசலுக்கு வந்து தம் தாக்குதலை ஆரம்பிக்கிறது. பள்ளிவாசலையும் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டி அரணாக முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பள்ளிவாசலுக்கு வெளியே கைகோர்த்து நிற்கின்றனர். அவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காவலுக்கு இருந்த ஆண்கள் எவரும் பின்வாங்கவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

ஜூன் 16, 2014 - திங்கட்கிழமை விடிவதற்குள்ளாகக் கடந்த ஒரு இரவில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பதுக்கும் அதிகமான வீடுகளும் இருபதுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களும் எண்ணிக்கையிலடங்காத வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களும் சேதப்படுத்தப்பட்டும் எரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இங்கு போலிஸ், விஷேட காவற்படையின் முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் வந்து வன்முறைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலிலிருக்கிறது. பட்டினியோடும் காயமடைந்தும் இருக்கும் மக்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து உலர் உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் ஆடைகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. என்றபோதும் அவை எவையும் பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச் சேரவில்லை.

அதே தினம் பகலில், வெலிப்பன்ன எனும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பலபிடிய பிரதேசத்தில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதான நகர்களோடு, அப்பிரதேசங்களைச் சுற்றியுள்ள சிறிய முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் அன்றைய தினம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிக்கொண்டேயிருந்ததோடு பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

தர்கா நகரில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இராணுவமே செயற்பட்டு வருவதை எல்லோரும் கண்டுகொண்ட வேளையில் நகரின் நிலை குறித்துக் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்து, பள்ளிவாசல் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியபோது, ‘வீதிக்கு வீதி இராணுவத்தை அனுப்பிப் பாதுகாப்பு தருகிறோம்’ என்று பாதுகாப்பு அமைச்சு பதில் அளித்தது.

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்தும் நிலவியது. ஜூன் 17, 2014 செவ்வாய்க்கிழமை, மக்கள் தாம் தஞ்சம் புகுந்திருந்த இடங்களிலேயே அச்சத்தோடும் பட்டினியோடும் பொழுதைக் கழித்தனர். நள்ளிரவு தாண்டியதும் மீண்டும் வெலிப்பன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது.

அரசாங்கம் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த நான்கு போலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறிக் கைவிரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்ன பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் நூறுக்கும் அதிகமான காடையர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினர். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றுக்குள் பிரவேசித்துக் காவலாளியாக நின்ற தமிழ் முதியவரைக் கொன்றுவிட்டுப் பண்ணையை எரித்தனர்.

மேலும் வெலிப்பன்ன பள்ளிவாசல் தாக்குதலுக் குள்ளாகியுள்ளதோடு, முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. விடிந்ததும் அங்கு விஷேட அதிரடிப்படை வந்து சேர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனவே, காலை எட்டு மணி முதல் பகல்

12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தன. ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் தர்கா நகர் பிரதேசத்துக்குச் சென்ற சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவின் ஊடகவியலாளர் கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. அப்பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஜூன் 18, 2014 - புதன்கிழமை அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் அமலிலிருந்த ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் இன்னுமொரு முஸ்லிம் பிரதேசமான கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுத் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நள்ளிரவு சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டுப் பேருவளை, அல் ஹுமைஸரா கல்லூரியில் எங்கும் செல்ல வழியற்றுத் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி, அங்கு வந்த அரச உயரதிகாரிகள் கட்டளையிட்டார்கள். ஒன்றும் செய்ய வழியற்ற மக்கள் செல்ல மறுக்கவே அங்கு சலசலப்பு உண்டானது. சிறிது பதற்றமான சூழ்நிலை உருவானதும் உடனே அரச உயரதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
அன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சர்கள் சிலரோடு பேருவளைக்கு விஜயம் செய்தார். இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்களையும் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து வழமை போலவே ‘விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும்’ என்ற பதிலை அளித்துவிட்டுத் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவுமில்லை.
பாரிய இனக்கலவரக் காலப்பகுதியில் நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பல அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அளுத்கம, தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மருந்தகம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதே போலப் பதுளை, கஹட்டோவிட்ட, குருந்துவத்த, வரக்காபொல, பாணந்துறை நகரங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்த காரணத்தால், மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில், காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள்மீது ஆசிட் தாக்குதல் இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்பட்டது. படு காயப்பட்ட நிலையில் போலிஸார் இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் எனும் பிக்கு, கடத்தப்பட்டுக் கை, கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்டார். 

அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், தாக்கியவர்கள் அவருக்குக் கத்னா (சுன்னத்) செய்ய முயற்சித்துள்ளமை வைத்தியப் பரிசோதனைகளை வைத்தும் காயங்களை வைத்தும் தெளிவானது. அதற்கு முன்னரும்கூடப் பொதுபலசேனா இயக்கத்தினால் பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தார். காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்கூட இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வந்ததால் வைத்தியசாலையிலும் இவருக்குப் போலிஸ் காவல் வழங்கப்பட்டது.
எரிக்கப்பட்ட NO LIMIT ஆடை விற்பனை நிலையம்

பொதுபலசேனா இயக்கத்தால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வந்த ‘NO LIMIT - நோ லிமிட்’ எனும் பெரிய ஆடை விற்பனை நிலையம், 21.06.2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டி முற்றுமுழுதாக எரிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன.
கலவரம் தோன்றி, நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் அண்மைய வன்முறை நிகழ்வுகளின் காரணமாக மனச்சோர்வுக்காளான நிலையிலும் கொந்தளித்த நிலையிலும் காணப்பட்டபோது இலங்கையின் முக்கியத் தலைமைகள் கூறிய கருத்துக்கள், மக்களை மென்மேலும் அசௌகரியத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் ஆளாக்கியுள்ளன.
சிங்கள இனவாதிகளால் தக்கப்படும் இஸ்லாமியருக்கு சொந்தமான மெடிக்கல்

இலங்கையின் நிலவரத்தில் உடனடியாகப் பங்குகொண்டு அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது பலசேனா இயக்கமும் அதன் செயலாளருமான ஞானசார தேரோதான் குற்றவாளி எனப் பகிரங்க மாகத் தெரிந்த பிறகும்கூட “இந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளியை இனங்கண்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்” எனக் கூறியிருப்பதுவும் இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டங்களை மறுத்ததும் சம்பவங்களின் பின்னணியில் அவர் இருப்பாரோ எனப் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த ஏதுவாகியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டிருக்கும் பொது சன உறவுகள், பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா “ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து தந்தால் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் தயார்” எனப் பகிரங்கமாக மேடைகளில் முழங்கினார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், தனக்குப் பொறுப்பான பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் அப்பிரதேசங்களுக்குச் செல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தார். காரணம் கேட்டபோது “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் காரணமாக என்னால் ஊர் செல்ல முடியவில்லை. இனிமேல்தான் செல்ல வேண்டும்” (செய்தி மூலம்: விடியல், 17-06-2014, 17:58) என்றார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், உடனே எந்த முயற்சி எடுத்தேனும் அதைத் தடுக்க வேண்டியவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்தார். வன்முறைகள் நடைபெற்ற பிரதேசங்களுக்கு உடனடியாக இவர் சமூகமளிக்கவில்லை. இதனால் நாட்டின் முஸ்லிம் சமூகம், அவரைத் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வற்புறுத்தியது. ‘முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கினால், பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ எனவும் கூறித் தனது பதவியைப் பாதுகாத்துக் கொண்டார்.

வன்முறை நிகழ்ந்த நாட்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே கலவரம் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிட மறுத்தன. Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் வன்முறை குறித்தான தகவல்களையும் சம்பவங்களையும் உடனடியாகப் பகிர்ந்து கொண்டதால் பல சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்ததோடு, இலங்கையைத் தாண்டி சர்வதேசரீதியிலும்கூட இந்த அநீதியை உடனடியாகத் தெரியப்படுத்த முடிந்தது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தியா, லண்டன், குவைத், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இன வன்முறைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் மறுநாளே பதிவு செய்யப்பட்டன. சர்வதேசம் முழுவதும் இலங்கையின் தற்போதைய இனக் கலவர வன்முறைச் செய்திகள் பரவியதும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. இதனால், பல இஸ்லாமிய நாடுகள் ‘உடனடியாக வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லையானால், இலங்கையருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர நேரிடும்’ என அரசை அச்சுறுத்தின.

இப்பொழுது உலகம் முழுவதிலிருந்தும் இலங்கையை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியானது‘வன்முறை களுக்கும் அசம்பாவிதச் சம்பவங்களுக்கும் காரணமான வர்கள் யார்?’ என்பதாகும். இங்கு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது, அரசின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் பொதுபலசேனா இயக்கம், இராவண பலய இயக்கம், ஜாதிக ஹெல உருமய கட்சியின் உறுப்பினர்களேயன்றி நாட்டின் ஒட்டுமொத்தச் சிங்களவர்களுமல்ல.

ஏனெனில் வன்முறையின்போது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்த எத்தனையோ சிங்கள இன மக்களும்கூடப் பேரினவாதிகளால் படுமோசமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களைத் தனது வாகனத்திலேற்றி வந்து காப்பாற்றிய, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவர். முஸ்லிம்களைக் காப்பாற்றப் போய் இவரும் இவரது வாகனமும்கூடப் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. நடந்த அசம்பாவித நிகழ்வுக்கு மிகவும் மனம் வருந்திய பல சிங்களவர்கள் பொதுபலசேனா அமைப்பை இலங்கையில் தடை செய்யும்படியே கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் குடும்பத்தை காக்கும் முயற்சியில் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவரின் காரும் கண்களும் தாக்குதலுக்குள்ளாகி நிற்கிறார்.

கிட்டத்தட்ட 20 மில்லியன்கள் அளவான மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடேயாகும். இந்நிலையில் யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் மக்கள்மீது பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கம் திணிக்கும் அழுத்தம் சொல்லி மாளாது.

இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் வீதிகளின் பெயர்ப் பலகைகளை, படையோடு சென்று அழித்துச் சிங்களப் பெயர்களுக்கு மாற்றுவது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளைச் சேதப்படுத்துவது, பள்ளிவாயில்களுக்குள் அசுத்தங்களை எறிவது, பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம்களைத் தாக்குவது, ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பலவற்றையும் எந்தத் தயக்கமுமின்றி முஸ்லிம்கள்மீது பிரயோகித்துக் கொண்டேயிருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முஸ்லிம்களின் கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அது ஒரு எச்சரிக்கைச் செய்தி. ‘மே மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முஸ்லிம் பெண்களைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவனமாக இருந்துகொள்ளுங்கள்’ என அக்குறுஞ்செய்தி சொன்னது. யாரால் அனுப்பப்பட்டது எனத் தெரியாதபோதும் இச்செய்தி நாடெங்கிலும் முஸ்லிம்களிடத்தில் ஒருவிதப் பதற்றத்தைத் தோற்று வித்தது. இரகசியத் தகவல் வெளியானதை அறிந்த பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அக்குறுஞ்செய்தி ஒரு வதந்தி என அறிவித்தது. (ஆதாரம் - விடிவெள்ளி வாரப் பத்திரிகை, 2014.05.22, பக்கம் - 08)

தமது திட்டம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டமையால் அப்போது பொதுபலசேனா அமைப்பு எவ்விதச் செயற்பாட்டிலும் இறங்காமல் அமைதியாக இருந்தது. ஆனால் அதற்குச் சரியாக ஒரு மாதம் கழித்து, குறுந்தகவலில் சொன்னது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சருமான கோதபய ராஜபக்?ஷவும் நாட்டில் இல்லாத நேரத்தில் தனது இன அழிப்பு வேலையை வெற்றிகரமாக மேற்கொண்டது பொதுபலசேனா இயக்கம். அப்பொழுதே குறுந்தகவலைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருந்தால் பல அழிவுகளைத் தடுத்திருக்கலாம் என்பது பலரதும் கருத்தாக அமைந்திருக்கிறது .

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 21.06.2014 அன்று முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்தபின் ஊடகங்கள் ஊடாகவும் தனது Twitter வழியாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். இன, மத ரீதியாகத் தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவார்களானால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி போலிஸாருக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில வெளிநாட்டுச் சக்திகள் தமது நலனுக்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முனைகின்றன. சட்டம் ஒழுங்கை யாரும் தமது கையில் எடுத்துச் செயல்பட முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்?ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர்மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர்மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர்; கடத்தப்படுவர்; கைது செய்யப்படுவர்; காணாமல் போவர்.

முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால்கூடக் கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும் நிலைப்பாடும் பேரினவாதத் தலைமைகளிடம் இருந்தது. ஆனால் அண்மைய வன்முறைகளின்போது தான் தனது நாட்டு ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும்கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை யுத்தத்தில் வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும் இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக்கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.

கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப்போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப்போகிறார்கள். வாழ்க்கையும் இருப்பிடங்களும் தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப்போகிறது.
இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவரத் தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் ‘அதியுயர் கௌரவ விருது!’

நன்றி: http://www.kalachuvadu.com/issue-175/page17.asp 
நன்றி : எம். ரிஷான் ஷெரீப்

இலங்கை - கறுப்பு ஜூன் 2014 - முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் பின்னணியும் என்கிற கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு இது.

Friday, June 13, 2014

அயோத்தி : இருண்ட இரவு (நூல் அறிமுகம்)

அயோத்தி – பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு – சான்றுகள் – ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!

பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு !

ரலாற்றில் பல்வேறு சமூக காரணங்களால் தோற்றுவிக்கப்படும் பாரதூரமான முரண்பாடுகளை, குறிப்பிட்ட சமூகம் தீர்க்காத வரையில் அது ஆறாத வடுவாக மட்டுமல்ல உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆழமான புண்ணாகவும் அழுகிக் கொண்டிருக்கும்.
சுவாரஸ்யத்தை படைப்பதான முகாந்திரத்தில், திட்டமிட்டே அரசியல்  நீக்கம் பெற்ற அல்லது மக்களுக்கு எதிரான அரசியலின் எழுத்துக்களால் மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகளை ஒருக்காலும் உள்ளன்போடு தொட முடிந்ததில்லை. மார்க்சிய/ சமூகவியல் ஆய்வு நூல்களே அந்த பணியை நிறைவு செய்து வருகின்றன.

கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.

1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கலவர விதை அதற்கும் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டது. 1949-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவில் திருட்டுத்தனமாக பாபர் மசூதியின் சுற்று சுவரை எறிக் குதித்து, அதன் வாயில் கதவை உடைத்து குழந்தை ராமன் சிலை நிறுவப்பட்டது. ராமன் சிலையை மசூதிக்குள் கொண்டு ஓடியவர் ஒரு சாது. வைணவ அகோரியான அவரது பெயர் அபிராம் தாஸ்.

‘அயோத்தி: இருண்ட இரவு’ நூல் அபிராம் தாஸின் இறப்பிலிருந்து நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது. உணவுக்கே சிரமப்பட்ட தனது யதார்த்த நிலையிலிருந்து தப்பித்து, துறவு நிலை தரும் சில சௌகரியங்களுக்காக துறவியானவர் அபிராம் தாஸ். மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவிய அபிராம் தாஸுக்கு சில தனிப்பட்ட கணக்குகள் இருந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமன் கோயிலாக மாறினால் கிடைக்கும் காணிக்கையும், வருமானமும் பற்றியே அவரது சிந்தை சுழன்றது. இது அவரை மேலும் மேலும் இந்து மகா சபையின் திட்டத்துக்குள் உந்தித் தள்ளியது.

அபிராம் தாஸுடன் பாபர் மசூதிக்குள் நுழைய இருந்தவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் என்ற அயோத்தி நகர இந்து மகா சபை தலைவன். இறுதி நேரத்தில் அபிராம் தாஸை தனித்து விட்டு விட்டு அதே காலத்தில் கொல்கத்தாவில் நடந்த இந்து மகா சபை மாநாட்டிற்கு சென்று விட்டான். பரமஹன்ஸின் முடிவு அதிர்ச்சி அளித்தாலும், தனது ஒன்று விட்ட சகோதரரின் துணையுடன் இந்த சதிகார பணியை செய்து முடித்தார், அபிராம் தாஸ்.

பாபர் மசூதி இடிப்பை போன்றே மசூதிக்குள் சிலையை நிறுவியதும் விரிந்த அரசியல் சதித் திட்டத்தின் பகுதியே. அதனை அபிராம் தாஸின் தனிப்பட்ட ஆதாய நோக்கத்தில் விளைந்தது என்று மட்டும் சொல்ல முடியாது. காந்தி கொலையால் முடங்கியிருந்த இந்து மகா சபை – ஆர்.எஸ்.எஸ் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை; இல்லையேல் தனிமைப்பட நேரும் என்ற ஆபத்தை உணர்ந்திருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு சொல்லிக்கொள்ளுமளவு பெரிய செல்வாக்கு கிடையாது.
என்ன செய்தாவது இந்துக்களை திரட்ட வேண்டிய பதட்டத்தில் இருந்தார்கள். தனது சதி நோக்கத்தை மக்களிடம் மறைக்கின்ற அதே நேரத்தில், அந்த சதியையே மாபெரும் பொற்கால மீட்பு நடவடிக்கையாக பேசுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இது காந்தி கொலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்கிறார்கள் நூலாசிரியர்கள். காந்தி கொலை பகலில் செய்யப்பட்டது என்றால் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவும் குற்றச் செயல் இரவிலே நிகழ்த்தப்பட்டது.

பாபர் மசூதிக்குள் ராமன் சிலை நிறுவப்படுவதற்கு முன் உள்ள சூழல் பற்றிய நூலின் பதிவு முக்கியமானது. அது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியின் பிரச்சார உத்தியை பல வகைகளில் நினைவுபடுத்தும் ஒன்று. பா.ஜ.க என்றொரு அரசியல் கட்சி அப்போது இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை காங்கிரசே பூர்த்தி செய்தது.

அயோத்திக்கு ஒரு இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸில் ஐக்கியமாகியிருந்த சோசலிஸ்ட்கள் தனி அணியாக செயல்பட முடியாது என்ற நிலைமை உருவானது. இதை பயன்படுத்திக் கொண்டு காங்கிரசின் வலதுசாரிப் பிரிவு, கட்சியில் புதிய விதிகளை ஏற்படுத்தி சோசலிஸ்ட்டுகளை வெளியேற்றினார்கள். இந்த சோசலிஸ்ட்டுகள் தன்மையில் இப்போதிருக்கும் சமூக நீதிக் கட்சிகளை ஒத்தவர்கள். அகையால் இவர்களது பெயரில் சோசலிசம் இருப்பதை வைத்து மட்டும் முடிவு செய்ய கூடாது. அதே நேரம் இந்த பெயரவளவு சோசலிசத்தை கூட இந்துமதவெறியர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. சியாமா பிரசாத் முகர்ஜி (பின்னாளில் பா.ஜ.கவின் தாய் கட்சியான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்), பட்டேல் ஆகியோரின் வெளிப்படையான ஆதரவோடும் நேருவின் மவுன ஒப்புதலோடும் காங்கிரசிலிருந்து சோசலிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அபிராம் தாசு திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

அப்படி வெளியேறியவர்கள் காங்கிரஸ் கட்சி மூலம் பெற்ற சட்டமன்ற/அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவிகளை உதறினார்கள். அப்படி ஒரு சோசலிஸ்டின் முடிவால் அயோத்தி நகரம் அமைந்திருக்கும் பைசலாபாத்தில் தேர்தல் வந்தது. மீண்டும் போட்டியிட்ட அவர் பெயர் ஆச்சார்ய நரேந்திர தேவ்.  அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் பாபா ராகவ தாஸ். இவர் உ.பியின் முதல்வராக இருந்த கோவிந்த வல்லப் பந்த்தின் ஆசி பெற்றவர். வல்லப பந்த் மோடியின் ஆதர்சமான வல்லபாய் படேலின் தீவிர ஆதரவாளர்.

இந்தியாவிலே நடந்த மதவெறி ஊட்டப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களில் இதுவும் முன்னோடியானது என்று சொல்லலாம். இந்து உணர்வை ஊட்டி தேர்தலில் அறுவடையை செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸுக்கு தேர்தல் முடிவு அளித்தது. நரேந்திர தேவ் ஒரு நாத்திகர்; பாபா ராகவா தாஸ் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்று மக்களிடம் அன்றைய உ.பி காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாபா ராகவ தாஸை வெளிப்படையாக ஆதரித்து இந்து மகா சபையும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. தேர்தலில் தேவ் வீழ்த்தப்பட்டார்.

வெற்றி பெற்ற பாபா ராகவதாஸ் தலைமையில் அந்த வருட அனுமன் ஜென்ம உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அங்கு ஒரு விசித்திரமான முடிவை அறிவித்தார் ராகவதாஸ். அது இந்து மகா சபை தயாரித்த அறிக்கை. ‘அனுமன் ஜென்ம உற்சவத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன் அந்த வருட ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை கொண்டாடப் போகிறோம்’ என்றார். இந்த அறிவிப்பின் முதல் பகுதியை விட அதன் அடுத்த பகுதி இந்து மகா சபையின் நோக்கத்தை அறியத் தருகிறது. ‘ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை ஒன்பது நாட்கள் நடத்துவது என்றும், ஒன்பதாம் நாள் குழந்தை ராமனை அவன் ‘பிறப்பிடத்துக்கு’ செல்ல பக்தர்கள் அனைவரும் கேட்டுக் கொள்வது’ என்றும் அறிவித்தார், ராகவ தாஸ். அதாவது ஒன்பதாம் நாள்  இவர்கள் கேட்டுக் கொள்வதை அடுத்து ராமன் எழுந்து இவர்கள் கண்ணெதிரே தனது பிறந்த இடமான பாபர் மசூதிக்குள் சென்று அமர்வாராம். மக்கள் இப்படி வித்தியாசமான ‘அற்புத நிகழ்வுக்காக’ ஏங்க வைக்கப்பட்டார்கள். இந்த அற்புதத்தின் மறைவிலேயோ வெறி கொண்ட ஓநாய்கள் காத்துக் கொண்டிருந்தன.

ஒன்பது நாள் திருவிழாவின் இறுதியில் அவர்கள் ‘எதிர்பார்த்தது’ போல எதுவும் நடக்கவில்லை. குழந்தை ராமன் தானாக மசூதிக்குள் சென்று அமர்ந்து விடுவான் என்பதை மக்கள் ஏமாந்தது போல தாமும் ஏமாற, ஆர்.எஸ்.எஸ் என்ன அசடுகளின் கூடாரமா? எனில், ஆர்.எஸ்.எஸின் ஏமாற்றம் தான் என்ன? தமது வெறியூட்டும் நடவடிக்கைகளுக்கு பலியாகி கூட்டத்திலிருந்து யாராவது ஒருவர் ராமன் சிலையை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் ஓடுவார் என்ற ஆர்.எஸ்.எஸின் எதிர்பார்ப்பு தான் உண்மையில் பொய்த்து போனது. நாடகத்தின் உச்சம் தானாக அரங்கேற மறுப்பதால் திருவிழாவை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்தார்கள். ஏமாந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கி ஆற்றுபடுத்தினர். பதின்மூன்றாம் நாளும் இந்து மகா சபை ‘எதிர்பார்த்தது’ நடக்காமல் போகவே தமது திட்டத்தை வேறுவிதமாக நிறைவேற்ற துடித்தனர்.

இதற்காக ஒரு கூட்டத்தை ஜாம்பவன் கோட்டையில் கூட்டினர். கே.கே.நாயர், இந்து மகா சபை தலைவர்கள் கோபால் சிங் விஷாரத், ராமச்சந்திர பரமஹன்ஸ், அபிராம் தாஸ் மற்றும் சில சாதுக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திலே தான் திருட்டுத்தனமாக மசூதிக்குள் சிலையை நிறுவும் திட்டத்தை தீட்டினர். பகலில் சிலையை வைத்தால் அரசு நிர்வாகத்துடன் தேவையற்ற மோதல் ஏற்படும் என்று கே.கே நாயர் எச்சரித்தார். எனவே திருட்டுத்தனமாக சிலையை இரவில் நிறுவினால் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை அளிப்பதாக கே.கே. நாயர் உறுதி அளித்தார். கே.கே.நாயரின் இந்த ஆலோசனையை கூட்டம் ஆமோதித்தது.

இவையெல்லாம் நூலாசிரியர்களின் வளமான கற்பனைகள் அல்ல. பல்வேறு ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் அபிராம் தாஸின் சீடர் சத்தியேந்திர தாஸ் முதற்கொண்டு இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் அளித்த வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டவை. மசூதிக்குள் சிலையை நிறுவும் பொறுப்பு அபிராம் தாஸிடமும், ராமச்சந்திர பரமஹன்சிடமும் (மசூதிக்குள் சிலை நிறுவப்பட இருந்த கடைசி மணித்துளியில் அபிராம் தாஸை தனியே தவிக்க விட்டுவிட்டு ஓடியவர்) ஒப்படைக்கப்பட்டது.
இங்கு முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முதலில் ஒன்பது நாட்கள் என்று தீர்மானிக்கப்பட்டு பிறகு அற்புதம் நிகழ தவறியதால் பதின்மூன்று நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட ராமன்-சீதை கல்யாணம் நடைபெற்ற ராம சபுத்ரா (மேடை) எனப்படுகின்ற கூரை வேயப்படாத மாடத்தின் பின்னணி குறித்த தகவல்களை நாம் பார்க்க வேண்டும்.

இது பாபர் மசூதி வளாகத்துக்குள்ளே அமைந்திருக்கிறது. 1857-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்களின் கலகத்தை நாமறிவோம். ஆங்கிலேய அரசை உ.பியின் மகந்துகள் (தலைமைப் பொறுப்பு வகிக்கும்  அகோரிகள்) ஆதரித்து நின்றனர். அதற்கு கைம்மாறாக ஏராளமான நிலங்களை மகந்துகளுக்கு அளித்தனர், ஆங்கிலேயர்கள். ஒரு அகோரி, பாபர் மசூதியின் அருகாமையில் சிறிது நிலத்தை வரப்பிட்டு மேடை அமைத்தார். அந்த இடத்தை அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கியது ஆங்கிலேய அரசு. இப்படிப்பட்ட துரோகிகளாக இருக்கும் அகோரிகள்தான் இந்துமதவெறியர்களின் ஆன்மீக அடியாட்படையாக இன்றும் இருக்கிறார்கள்.
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

ஆங்கிலேயன் வழங்கிய இடத்தை வைத்து அங்கு தான் முதலில் ராமன் பிறந்தார் என கதை கட்டி கோயில் எழுப்ப முயன்றனர். அதற்கு பைசாபாத் மாவட்ட அதிகாரி கே.கே நாயர் அனுமதி அளித்தார். கே.கே. நாயரின் உதவியாளர் குருத்தாட் சிங் இந்துக்களும், முஸ்லிம்களும் அருகருகே வழிபாடு செய்து கொள்ளட்டும் என்று அறிவித்தார். எனினும் பைசாபாத் துணை நிலை நீதிபதி இதற்கு அனுமதிக்கவில்லை. இந்த முதல் முயற்சியே விரிந்து பிறகு பாபர் மசூதியை கபளீகரம் செய்வது என்ற நிலைக்கு இந்துத்துவ சக்திகளின் கைகளுக்கு சென்றது.

பாபர் மசூதியை இரவில் காவல் காத்து வந்த போலீஸுக்கு கையூட்டு அளிக்கப்பட்டது. பிறகு சுவரில் தொத்தி ஏறிக் குதித்து அபிராம் தாஸ் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரர் (இந்து மகா சபையின் உள்ளூர் தலைவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் கடைசி நிமிடத்தில் பின் வாங்கியதால் அந்த இடத்தை நிரப்பியவர்) ஆகியோர் மசூதியின் பூட்டை உடைத்தனர். அங்கு அவர்களை எதிர்கொண்ட மெளல்வி இஸ்மாயிலை அடித்து துவைத்து துரத்தினர். பிறகு விடியும் வரை காத்திருந்தனர். விடியற்காலையில் ராமன் சிலைக்கு முன்னால் தீபத்தை ஏற்றினர். அயோத்தி காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘ காலையில் மசூதிகுள்ளே ஒளி தெரிந்தது; அது பொன்னிறமாக இருந்தது’ என்று காலையில் மசூதியின் பாதுகாப்பை ஏற்றிருந்த போலிஸ்காரர் விவரித்திருந்தார். அயோத்தியில் ராமன் ‘தோன்றியதற்கு’ இதனையே ஆதாரமாகக் காண்பிக்கத் தொடங்கினர்,

 இந்துத்துவவாதிகள்.
ராமன் தோன்றிய அற்புதத்தை காண அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பார்க்க விரிவான ஏற்பாடுகளை இந்து மகா சபை செய்தது. மிகவும் தாமதமாக 23-ந் தேதி 10.30 மணிக்கு கே.கே நாயர் உ.பி அரசுக்கு அயோத்தி நிலைமை பற்றி அறிக்கை அளித்தார். அதில் ‘சில இந்துக்கள் மசூதிக்குள் சிலையை நிறுவி விட்டார்கள். பூசைகள் செய்து சிலையை அகற்ற எந்த பூசாரியும் முன்வரவில்லை. எனவே சிலையை அகற்ற முடியாது’ என்று அறிக்கையில் தெரிவித்தார், நாயர். இதனை சான்றாதாரங்களுடன் நூலில் தந்துள்ளனர் நூலாசிரியர்கள்.
பிள்ளையார் பால் குடித்தார், மேரியம்மா அழுதார், சாயிபாபா காலெண்டரிலிருந்து விபூதி கொட்டுகிறது என்றெல்லாம் இன்றைக்கும் இத்தகையத அற்புதங்கள் ஆங்காங்கே கடைவிரிக்கப்படுகின்றன. 

உள்ளூர் அளவில் வசூல் செய்ய பயன்பட்ட இந்த மோடிமஸ்தான் வேலையைத்தான் இந்துமதவெறியர்கள் நாடெங்கும் செய்வதற்கு அயோத்தியில் செய்தனர்.

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுக்கும் கருணாநிதி, ஜெயயலலிதாவை போல இந்தியப் பிரதமர் நேரு, உ.பியின் பிரதமர் ( இது பகடி அல்ல; அன்று மாகாணங்களின் தலைவர்கள் பிரதமர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர் – இந்த குறிப்பும் நூலில் உள்ளது) கோவிந்த் வல்லப் பந்திற்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸின் சூழ்ச்சிக்கு பலியாகி பாபர் மசூதி முன்பு குவிந்திருந்த மக்களை படையை அனுப்பி வெளியேற்றி விட்டு சிலையை அகற்றுவதை எதிர்த்தார், மத்தியில் உள்துறை பொறுப்பை வகித்த வல்லபாய் பட்டேல். இதை பகிரங்கமாக கண்டிக்கவோ இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத நேருவோ ‘ உ.பி காங்கிரசுக்குள் மதவாதம் புகுந்து விட்டது’ என்று வருணித்தார். தன்  கோபத்தை உ.பியின் பிரதமர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உணர்த்த அவரை சந்திக்க பின்னாட்களில் மறுத்தார நேரு.  இதைத் தாண்டி இவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இவரைத்தான் மதச்சார்பின்மையின் சிற்பி என்கிறார்கள்.

மதவெறி பிடித்தாட்டிய உ.பி. காங்கிரசில் அன்று எழுந்த நிதானக் குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது. பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த ராம சபூத்ராவில் கோயில் கட்ட இந்து மதவெறியர்கள் முயன்ற போது அவர்களுக்கு எதிராக பைசாபாத் மாவட்ட அதிகாரியான கே.கே. நாயரிடம் புகார் மனு அளித்தார். அடுத்த நாள் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த வாசகங்களை சொல்லி சொல்லி அக்ஷய் பிரம்மச்சாரியை  உதைத்துள்ளனர், இந்து மகா சபையினர். பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த கல்லறை தோட்டத்தை இந்து மத வெறியர்கள் சிதைத்த போதும் உடனடியாக அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு போனார், அக்ஷய் பிரம்மச்சாரி. அதன் பிறகே மசூதியை காவல் காக்க அரசு இரு காவலர்களை அனுப்பியது.
மசூதிக்குள் சிலையை வைத்த பிறகு கே.கே.நாயர் அதற்கு உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தி உ.பியின் உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு விடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அயோத்தியில் இருந்தே துரத்தப்பட்டார் பிரம்மச்சாரி. 

என்றாலும் இந்து மகா சபையின் பல்வேறு நடவடிக்கைகளை தன்னந்தனியாக எதிர்த்தார். இறுதியில், மசூதியை கோயிலாக மாற்றும் முயற்சிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நூலை பற்றிய ஒரு பறவை பார்வை மட்டுமே.
தமது அளப்பரிய தகவல்களால் குறிப்பிட்ட அந்த வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு அனுபவத்தை நூலசிரியர்கள் தருகிறார்கள் என்றால் அது மிகையில்லை. சாவர்க்கர், டி.ஜி. தேஷ் பாண்டே, மகந்த் திக் விஜய் நாத் உட்பட இந்து மகாசபை தலைவர்களின் எண்ண ஓட்டத்தையும், நடவடிக்கைகளையும் பல்வேறு ஆவணங்கள், ஆதாரச் சான்றுகள் மூலம் இந்தியாவின் இளைய தலைமுறை மதச்சார்பின்மையின்  முக்கியத்துவத்தை எதிர்மறையில் புரிந்து கொள்ள தந்து உதவியிருக்கிறார்கள், நூலாசிரியர்கள்.
பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைக்க தனது வலைபின்னலில் இருந்த கீழ்நிலை ஊழியர்களை கொண்டு தேர்ந்த திட்டமிடலுடன் செய்து முடித்த இந்து மகா சபை, அதே ஆண்டின் ராம நவமியை சிறப்பாக கொண்டாடியது. உ.பியின் மொரதாபாத்தில் பேசிய இந்து மகா சபையின் தலைவர்  என்.பி காரே இவ்வாறு குறிப்பிட்டார். ”காந்தி ஜெயந்திக்கு கூடியவர்கள் வெறும் இருநூறு பேர். ஆனால், இந்து மகா சபையின் கூட்டத்துக்கு இங்கு திரண்டிருப்போர் இருபதாயிரம் பேர்” (பக்க எண்: 159) என்றார்.

அக்ஷய் பிரம்மச்சாரி தனித்து போராடியதற்கும், இந்து மகா சபை தலைவரின் இந்த கூற்றுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய பிணைப்பில் காலம் உருண்டோடியது. இந்து மதவெறியை மாய்க்கும் போராட்டத்தை வலுவிழக்க அன்று காங்கிரஸ் நேரடியாக ஒத்துழைத்தது; இன்று தனது பொருளாதார கொள்கைகளால் மறைமுக உதவியை செய்திருக்கிறது. காங்கிரஸ் வேறு பா.ஜ.க வேறல்ல என்ற உண்மையை மக்கள் உணரும் போது மட்டுமே இந்தியாவில் இந்துமதவெறி முற்றிலும் ஒழிக்கப்படும். அது வரை பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு கருத்தளவில் இந்நூல் உதவி செய்யும்.

புதிய கலாச்சாரம் இதழிலில் இதன் ஆங்கில நூல் அறிமுகக் கட்டுரையை பார்த்து விட்டு (இதை முன்னுரையில் புதிய ஜனநாயகம் இதழ் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.) “விடியல் பதிப்பகம்” இதனை உரிய அனுமதியுடன் தமிழாக்கி தந்திருக்கிறது. அதற்காக விடியலுக்கு நன்றி. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது.

(நன்றி-வினவு)


Tuesday, June 10, 2014

சிபிஎம் போலி கம்யூனிஸ்ட்களால் தெருவில் வீசப்பட்ட மூத்த தோழர் டேப் காதர்’


கட்சிக்காக உழைத்தவர்களை கடைசி காலத்தில் கருவேப்பிலையாக்கி விடுவதில் பொதுவுடமைக் கட்சி களும் விதிவிலக்கல்ல. இதற்கு நிகழ்கால சாட்சி ‘டேப் காதர்’

தஞ்சையைச் சேர்ந்த ‘டேப் காதர்’ கம்யூனிஸ்ட் கட்சி இடது வலதாக பிரிவதற்கு முன்பிருந்தே செங்கொடி ஏந்தியவர். தமிழகம் முழுவதும் சிவப்பு மேடைகளில் கட்சிக் கொள்கைகளை ‘டேப்’ (தப்பு வாத்தியத்தைப் போன்ற இசைக் கருவி) அடித்து முழங்கியதாலேயே இவர் ‘டேப் காதர்’ ஆனார்.
1945-களில் கும்பகோணத்தில், மாடுகளுக்கான நூல் கயிறு தயாரிக் கும் தொழிலை செய்துவந்தார் ‘டேப் காதர்’. அப்போது வேலைக் கேற்ற ஊதியம் தரவில்லை என்பதற் காக தோழர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். அந்தப் போராட்டம்தான் ‘டேப் காதரை’ பொதுவுடமை சித்தாந்தவாதியாக மாற்றியது. அதன்பிறகு, பல போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட ‘டேப் காதர்’, கும்பகோணம் நகர கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் அளவுக்கு உயர்ந்தார்.

1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப் பட்டபோது தலைமறைவானவர், ஒரு வருட காலம் மும்பையில் இருந்துவிட்டு மீண்டும் தஞ்சை திரும்பினார். 1962-ல் கம்யூனிஸ்ட் கட்சி இவரை முழுநேர ஊழியராக அழைத்தது. ஆனால், கட்சி கொடுக்கும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை கவனிக்க முடியாது என்பதால் பகுதி நேர ஊழியனாக மட்டுமே இருக்க சம்மதித்தார் காதர். அதன்பிறகு பல தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றிக்காக தமிழகம் முழுக்க டேப் அடித்து முழங்கி இருக்கிறார்.
 அந்த நாட்களில், தியாகி சிவராமன் நாடக மன்றம் என்ற பெயரில் காணி நிலம், யாருக்கு இந்த நிலம்? உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் நடத்தி பிரபலமானார் காதர். ஊர் ஊராக போய் காதர் டேப் அடித்துப் பாடியதால் கட்சி வளர்ந்தது. ஆனால் குடும்பம் அவரை வெறுத்தது. இதனால் ஆதரவற்ற ஜீவனாகிப்போனார் காதர். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட காதருக்கு இப்போது, தஞ்சை சரஸ்வதி நகரில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

எழுந்து உட்காரக் கூட முடியாத நிலையில் நம்மிடம் பேசினார் காதர். ‘லெவி’ (ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்சிக்கு கொடுப்பது) கொடுத்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சியில நீடிக்க முடியும். ஆனா, நான் 20 வருஷமா கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கிவிட்டேன். ஒதுங்கிட்டேன்னு சொல்றதவிட ஒதுக்கீட்டாங்கன்னு சொல்றதுதான் சரி.
இப்போதிருக்கிற கம்யூனிஸ்ட்கள் மிதவாதிகளா மாறிட்டாங்க. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் உண்மையான சோசலிஸ சமுதாயத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்திருந்தும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்கள் அதை நம்புகிறார்கள். அதனாலேயே நான் ஒதுங்கீட்டேன்.

வெளிநாட்டு சம்பாத்தியம், வசதியான வீடுகளில் சம்பந்தம் என்று ஆகிவிட்டதால் நான் டேப் அடித்துப் பாடியதை மனைவியும் பிள்ளைகளும் அவமானமா நெனைச்சு என்னை ஒதுக்கி வைச்சிட்டாங்க.
இப்ப, மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள்தான் என்னை கவனிச்சிக்கிறாங்க. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நரக வாழ்க்கையோ’’ என்றார்.

டேப் காதரை தனது வீட்டில் தங்கவைத்திருக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளியான மகஇக தோழர் ராஜேந்திரன் நம்மிடம் ‘’ஐயாவுக்கு தொண்ணூறு வயசு ஆகுது. இப்ப இருக்கிற கம்யூனிஸ்ட் காரர்களுக்கு இவரு யாருன்னே தெரிய மாட்டேங்குது.

சிபிஎம் ஆபீஸ்ல இருந்த இவரை அங்கிருந்து வெளியேத்தி விட்டுட்டாங்க. அப்புறமா வேளாங் கண்ணி ஹாஸ்டல்ல இருந்தாரு. படுத்த படுக்கை ஆகிட்டதால அவங்களும் வெளியேத்தீட்டாங்க. தனியா வீடுபிடிச்சு தங்கவைக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால, கடந்த ஒரு வருஷமா நானும் என் மனைவியும்தான் எங்க அப்பா மாதிரி இவரை எங்க வீட்டிலயே வைச்சு பார்த்துட்டு வர்றோம்’’ என்றார்.
எந்தத் தியாகத்தையும் செய்யாதவர்கள் ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதும் தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்களை முகவரியை பறித்துக் கொண்டு மூலையில் தூக்கி எறிவதும் அரசியலுக்கே உரிய அக்மார்க் அடையாளம் போலிருக்கிறது!

(நன்றி தி இந்து தமிழ் நாளிதழ்)
காதரை தனது வீட்டில் வைத்து பராமரிக்கும்  மகஇக தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.

Wednesday, May 28, 2014

தினமலர் புகழும் (கோடாரி கம்பு) நஜ்மா ஹெப்துல்லா யார்?

தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் பாசிச பத்திரிக்கையான தினமலர் ஒரு முஸ்லிமை பற்றி ஆஹா ஒஹோ என்று புகழ்வது ஒன்றே போதுமானது அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள.

அவர் யார் தெரியுமா அவர் குடும்பம் பாரம்பரியம் தெரியுமா? என அளந்திருக்கிறது தினமலர். பிரமாண்டங்கள் எல்லாம் புனிதமானவை அல்ல.சிறுபான்மைக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்கிற பெயர் அடையாளத்துடன் தனது மரத்தை வெட்டும் விசுவாசமான கோடாரி கம்பு பி.ஜே.பிக்கு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை புரிந்துதான் தினமலர் துள்ளி குதிக்கிறது. இனி அவர் குரல் ஒலிக்கும் கிழிக்கும் என்று.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கிடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் இந்த சிறுபான்மைத்துறை அமைச்சர்- நஜ்மா ஹெப்துல்லா.நஜ்மா என்கிற இந்த கோடாரி கம்பு ஆர்.எஸ்.எஸ் ஸின் குரு கோல்வால்கர் சொன்னதை தான் திரும்ப வாந்தி எடுத்திருக்கிறார்.

குருஜி கோல்வால்கர் எழுதிய வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (we or our nation hood defined) என்ற நூலில்.

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருந்தல் வேண்டும். என்கிறார்.

சரியான அரசியல் அறிவுள்ள ஜனநாயக சக்திகள் புரிந்துக் கொள்வார்கள். பி.ஜே.பி அரசு ஒருபோதும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்காது வேண்டுமென்றால் இன்னும் எப்படி இவர்களை ஒடுக்க முடியும் என்கிற செயல்பாட்டில் இருக்கும் என்பதை. அதுதான் பி.ஜே.பி யின் அசல் ஆன்மா.

Wednesday, May 21, 2014

வீரசிவாஜியா? பார்ப்பன அடிமையா?

சிவாஜியை வீரசிவாஜி என பாடப்புத்தகத்திலும், இந்துத்துவவாதிகளும் ஒரு நூற்றாண்டுக்காலமாக நம்மீது போலியான கட்டமைப்பை திணித்து நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன? சிவாஜி பிராமண இருண்டகால,வேதகால ஆட்சியை நிறுவ முயன்று தோற்றுப் போன ஒரு பிராமண அடிமை சிவாஜி.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க அணியினர்  சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ மராட்டிய மாதிரி ஆட்சியை தங்கள் கனவாக கொண்டிருக்கும் அதே பாணியில் ஆட்சி அமைக்க துடிக்கும் அந்த முன்மாதிரி ஆட்சியின் அவலங்களையும் சிவாஜியின் உண்மை தோற்றத்தையும் விரிவாக பார்ப்போம் இந்த பதிவின் ஊடாக.

சாதி என்பது தொட்டுத் தொட்டு பற்றித் படரும் ஆற்றல் மிக்கது. அது தேச ஒற்றுமைக்கு பரம விரோதமானதாகும். சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ வைதீகப் பழமையில் கட்டியெழுப்பப்பட்டதால் அதனினுடைய மரண அணுக்களும் அதற்குள்ளயே இருந்திருக்கிறது. சாதி வேற்றுமைகளையும் விரோதங்களையும் உயிரெனப் பாதுகாத்த இந்து கலகம் தோய்ந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை இந்தியா முழுக்க நிலைநாட்டத்தான் சிவாஜி விரும்பினார். அது மணலைக் கயிறாகத் திரிப்பதற்கொப்பான நடைபெறாத விஷயமாகும். இந்தியாவை போன்ற ஒரு பெரும் கண்டத்தை முழுக்க சாதி வேற்றுமைகளாலும் மனிதநேய உணர்வின்மையும் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய மனித சக்தியாலும் முடியாது. இவ்வாறு சீரழிந்து செல்லரித்துப்போன ஒரு சமுதாய அமைப்பை உள்ளடக்கிய பிராமணக் கொடுங்கோன்மைக்கு இந்தியாவை அடிமை கொள்ளத் தான் பதினெட்டாவது நூற்றாண்டில் சிவாஜி என்கிற பிராமண அடிமையைக் கொண்டு முயற்சித்தனர்.

புரோகிதக் கொடுங்கோன்மையின் அநியாயங்களைச் சகிக்க முடியாமல் மக்கள் மூச்சுத்திணறித் துடித்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தேசிய அபிலாஷைகளும் கோட்பாடுகளும் மிதித்து நசுக்கப்பட்டன. சாதியின் அடிமைத்தனமும் அவமானமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. பேஷ்வாக்களும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செல்வம் குவிக்க மக்களுடைய சொத்துக்களைப் பிழிந்தெடுத்தனர். சுதந்திர மனிதனின் அவனுடைய பாதுகாப்பின் கடைசி தொங்கு நூலும் அறுக்கப்பட்டது. உண்மையில் பிரிட்டீஷ்காரர்கள் பிராமண அடிமை சிவாஜியின் மராட்டிய தேசத்தை கைப்பற்றியது அவர்களுக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. “மராட்டிய மக்கள் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சோம்பலாக இருந்துவிட்டதால் மராட்டியத்தை கைப்பற்றுவது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.

சிவாஜி சிறு வயதிலிருந்தே பிராமணர்களிடம்தான் வளர்ந்தார். தந்தை தன்னுடைய மேலாளரான பிராமணனிடம் சிவாஜியை ஒப்படைத்து எங்கோ போய்விட்டார். வைதிக மதத்திலும் விக்கிரக பூஜையிலும் ஆழந்த பக்தி நம்பிக்கைகொண்ட ஒரு சிறுவனாக சிவாஜி வளர்ந்தார். சிவாஜியிடம் அடிக்கடி பாவனிதேவியின் அருள் வெளிப்பட்டதாகவும் , சிவாஜிக்கு இடுக்கண்நேரும் போதெல்லாம் தேவியின் அறிவுரை கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் பல பேர் நம்பினர். இது சிவாஜியின் தலைமையைப் பலப்படுத்த புரோகிதர்கள் பரப்பிய கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

ஒரு நாட்டின் நிறுவனர் என்ற அருகதை பெற்ற சிவாஜி தன்னுடைய இளம்பருவத்துப் பிராமணத்தைக் கைவிட முடியாதவராக இருந்தார். எனவே தன்னையும் தன்னுடைய நாட்டையும் புரோகிதக் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துவிட்டார். நாட்டை பிராமணர்களுக்கோ கோவில்களுக்கோ காணிக்கையாக்குவது, அல்லது தானமாகக் கொடுப்பது, சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு சத்திரிய பதிவியை ஏற்பது, திவான்களும் ஆலோசகர்களுமாக இருப்பதற்கு பிராமணர்களுக்கு உரிமையிருக்கிறதென்று அங்கீகரிப்பது போன்றவை வாலி, வாமனன் காலத்திலிருந்து நவீன திருவிதாங்கூர் வரலாறுவரை பிராமண நுகத்தடியை சுமக்கும் சடங்குகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப்படும் பிராமணராவர். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டைக் கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு ‘ பிரம்மஸ்வம்’ அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக் கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில்-மிலிடெரி ஆட்சியின் மிகமுக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் - மிலிடெரி ஆட்சியின் ஆகப்பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரியுமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்காளயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றிகிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப் போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதைகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

அமைச்சரவையில் மதவிஷயங்களுக்கான அமைச்சராக பண்டிட்ராவ் என்ற ஒரு பிராமணர் இருந்தார். சாதிச் சட்டங்களையும் ஆச்சாரங்களையும் நடைமுறைப்படுத்துவது, சிவில் - கிரிமினல் சட்டங்களை அமுலாக்குவது, அரண்மனையைச் சார்ந்த தர்மஸ்தாபனங்களை நிர்வகிப்பது போன்றவை பண்டிட் ராவின் பொறுப்பிலிருந்தன.

பிராமணர்கள் அனைவருக்கும் அவரவர்களின் புலமைக்கேற்ப ஆண்டுதோறும் காணிக்கையும் நன் கொடைகளும் அளிக்கப்பட்டன. வாழக்கைப்பாட்டிற்காக எந்தப் பிராமணனும் நாட்டைவிட்டு வெளியே செல்ல நேரவில்லை. இந்தத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையான நிதிவைப்பிலிருந்து கிடைக்கும் ஆண்டுவருவாய் மட்டும், ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது ஐந்து லட்சம் ரூபாய் இருந்ததாம்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்க்கத் தன்னுடைய ‘பட்டாபிஷேகத்தை’ (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கெளரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஏழுகோடி அக்காலத்திலேயே செலவழிக்கப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்றுசிரியர்கள்.

சாத்திர முறைப்படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்சபரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார் இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க சிவாஜியைப் புரோகிதர்கள் அனுமதிக்கவில்லையென்பது மட்டுமின்றி, சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர்.

சிவாஜியின் அனைத்துப் போர்களிலும் பிரபுக்கள் மகத்தான சேவையாற்றினர். பிரபுக்களுக்குப் பாரம்பரியத்திற்கேற்ப இருந்த சாதிப் பதவியில் எத்தகைய இறக்கங்களையும் செய்யக் கூடாது என்று மன்னரின் கட்டளை இருந்தபோதிலும் பிராமணர்கள் பிரபுக்களை சாதியில் தரம் குறைப்பதற்காக புராணங்களில் இடைச் செருகலாக புதிய வாக்கியங்களை எழுதிச் சேர்த்தனர். பேஷ்வாக்களின் ஆட்சி துவங்கிய பிறகு பிரபுக்களுக்கு புதிய உத்தியோகங்கள் எதுவும் அளிக்கப்படாமல் அவர்களுடைய உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. மன்னர்களும் பேஷ்வாக்களும் சாஸ்திரங்களின் அனைத்து அநீதிகளையும் அதர்மங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்கினர். பேஷ்வா பூனாவில் ஒரு மதநீதிமன்றத்தை நிறுவி பிராமணர்களை நீதிபதிகளாக்கினார்.

“ இந்துச் சட்ட நியுணரான ஒரு சாஸ்திரி அதன் தலைமை நீதிபதியாக இருந்தார் மத அடிப்படையிலான,சாதி அடிப்படையிலான, எல்லா வழக்குகளையும் அந்த நீதிமன்றம் விசாரனை செய்து தீர்ப்பளித்தது. உடன்கட்டை ஏறுதலும் (சதி) பால்ய விவாகங்களும் முன்னை விட கூடுதலாக ஊக்குவிக்கப்பட்டன. இறந்துபோனவர்களின் மனைவி மட்டுமின்றி அவருடைய வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டனர்.

சிவாஜி காலமான பிறகு பேஷ்வாவும் பிராமண நண்பர்களும் சேர்ந்து மூத்த புதல்வரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது புதல்வருக்கு மகுடம் சூட்டினர். மன்னர் பேஷ்வாவின் கட்டுப்பாட்டில் சொந்த அரண்மனையிலேயே ஒரு கைதியைப் போல் ஆகிவிட்டார். பேஷ்வாக்கள் ஆட்சி அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக்கி கையப்படுத்தினர். இத்தகைய வஞ்சகச் செயல்கள் காரணமாக மக்களுக்குள் உறங்கிக் கிடந்த கோபமும் கலகமும் வெடித்துக் கிளம்பின. ரஜபுத்திரத் தலைவர்கள் அவரவர்களின் மாவட்டங்களில் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். அமைச்சரவை ஒழிந்துவிட்டது. சிவாஜி இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் அவருடைய பேரரசும் நொறுங்கிச் சிதைந்துவிட்டது.

சிவாஜியின் காலத்திலும் பேஷ்வாக்களின் காலத்திலும் மக்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கினைக்கவும் கல்வியில் முன்னேற்றவும் புத்திசாலித்தனமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிராமண அதிகாரிகளின் பணப் பேராசையில் இருந்து  யாரும் தப்ப முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தை ஈவிரக்கமின்றிப் பிழிந்தெடுத்தனர். கடைசி பேஷ்வா பிராமணரின் வீழ்ச்சியின் போது அவர் ஐந்து கோடிரூபாய் சம்பாதித்திருந்தார்.

References
Chapter XIII
Ranade's Rise of Maratha Power - 36,10,50,51
J.Sarkar's Sivaji and his times page : 431,430,435, 432,17,8,429,430, 431
C.A.kincaid and parasnis History of Maratha people Vol. 3 page 243,175,233.