Tuesday, June 10, 2014

சிபிஎம் போலி கம்யூனிஸ்ட்களால் தெருவில் வீசப்பட்ட மூத்த தோழர் டேப் காதர்’


கட்சிக்காக உழைத்தவர்களை கடைசி காலத்தில் கருவேப்பிலையாக்கி விடுவதில் பொதுவுடமைக் கட்சி களும் விதிவிலக்கல்ல. இதற்கு நிகழ்கால சாட்சி ‘டேப் காதர்’

தஞ்சையைச் சேர்ந்த ‘டேப் காதர்’ கம்யூனிஸ்ட் கட்சி இடது வலதாக பிரிவதற்கு முன்பிருந்தே செங்கொடி ஏந்தியவர். தமிழகம் முழுவதும் சிவப்பு மேடைகளில் கட்சிக் கொள்கைகளை ‘டேப்’ (தப்பு வாத்தியத்தைப் போன்ற இசைக் கருவி) அடித்து முழங்கியதாலேயே இவர் ‘டேப் காதர்’ ஆனார்.
1945-களில் கும்பகோணத்தில், மாடுகளுக்கான நூல் கயிறு தயாரிக் கும் தொழிலை செய்துவந்தார் ‘டேப் காதர்’. அப்போது வேலைக் கேற்ற ஊதியம் தரவில்லை என்பதற் காக தோழர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். அந்தப் போராட்டம்தான் ‘டேப் காதரை’ பொதுவுடமை சித்தாந்தவாதியாக மாற்றியது. அதன்பிறகு, பல போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட ‘டேப் காதர்’, கும்பகோணம் நகர கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் அளவுக்கு உயர்ந்தார்.

1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப் பட்டபோது தலைமறைவானவர், ஒரு வருட காலம் மும்பையில் இருந்துவிட்டு மீண்டும் தஞ்சை திரும்பினார். 1962-ல் கம்யூனிஸ்ட் கட்சி இவரை முழுநேர ஊழியராக அழைத்தது. ஆனால், கட்சி கொடுக்கும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை கவனிக்க முடியாது என்பதால் பகுதி நேர ஊழியனாக மட்டுமே இருக்க சம்மதித்தார் காதர். அதன்பிறகு பல தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றிக்காக தமிழகம் முழுக்க டேப் அடித்து முழங்கி இருக்கிறார்.
 அந்த நாட்களில், தியாகி சிவராமன் நாடக மன்றம் என்ற பெயரில் காணி நிலம், யாருக்கு இந்த நிலம்? உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் நடத்தி பிரபலமானார் காதர். ஊர் ஊராக போய் காதர் டேப் அடித்துப் பாடியதால் கட்சி வளர்ந்தது. ஆனால் குடும்பம் அவரை வெறுத்தது. இதனால் ஆதரவற்ற ஜீவனாகிப்போனார் காதர். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட காதருக்கு இப்போது, தஞ்சை சரஸ்வதி நகரில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

எழுந்து உட்காரக் கூட முடியாத நிலையில் நம்மிடம் பேசினார் காதர். ‘லெவி’ (ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்சிக்கு கொடுப்பது) கொடுத்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சியில நீடிக்க முடியும். ஆனா, நான் 20 வருஷமா கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கிவிட்டேன். ஒதுங்கிட்டேன்னு சொல்றதவிட ஒதுக்கீட்டாங்கன்னு சொல்றதுதான் சரி.
இப்போதிருக்கிற கம்யூனிஸ்ட்கள் மிதவாதிகளா மாறிட்டாங்க. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் உண்மையான சோசலிஸ சமுதாயத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்திருந்தும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்கள் அதை நம்புகிறார்கள். அதனாலேயே நான் ஒதுங்கீட்டேன்.

வெளிநாட்டு சம்பாத்தியம், வசதியான வீடுகளில் சம்பந்தம் என்று ஆகிவிட்டதால் நான் டேப் அடித்துப் பாடியதை மனைவியும் பிள்ளைகளும் அவமானமா நெனைச்சு என்னை ஒதுக்கி வைச்சிட்டாங்க.
இப்ப, மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள்தான் என்னை கவனிச்சிக்கிறாங்க. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நரக வாழ்க்கையோ’’ என்றார்.

டேப் காதரை தனது வீட்டில் தங்கவைத்திருக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளியான மகஇக தோழர் ராஜேந்திரன் நம்மிடம் ‘’ஐயாவுக்கு தொண்ணூறு வயசு ஆகுது. இப்ப இருக்கிற கம்யூனிஸ்ட் காரர்களுக்கு இவரு யாருன்னே தெரிய மாட்டேங்குது.

சிபிஎம் ஆபீஸ்ல இருந்த இவரை அங்கிருந்து வெளியேத்தி விட்டுட்டாங்க. அப்புறமா வேளாங் கண்ணி ஹாஸ்டல்ல இருந்தாரு. படுத்த படுக்கை ஆகிட்டதால அவங்களும் வெளியேத்தீட்டாங்க. தனியா வீடுபிடிச்சு தங்கவைக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால, கடந்த ஒரு வருஷமா நானும் என் மனைவியும்தான் எங்க அப்பா மாதிரி இவரை எங்க வீட்டிலயே வைச்சு பார்த்துட்டு வர்றோம்’’ என்றார்.
எந்தத் தியாகத்தையும் செய்யாதவர்கள் ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதும் தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்களை முகவரியை பறித்துக் கொண்டு மூலையில் தூக்கி எறிவதும் அரசியலுக்கே உரிய அக்மார்க் அடையாளம் போலிருக்கிறது!

(நன்றி தி இந்து தமிழ் நாளிதழ்)
காதரை தனது வீட்டில் வைத்து பராமரிக்கும்  மகஇக தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete