Monday, May 30, 2016

நண்டு சாப்பிடுகிறவரா? நீங்கள்? அப்ப இதை படியுங்கள்.

சாப்பிட கூட வந்த நண்பர் இன்ஸான் 
நான் ஒரு நண்டுப் பிரியன் ஊருக்குப் போனால் ஒரே நண்டா சாப்பிடுவேன். விமான நிலையத்தில் என் மனைவி அப்படி இவரு கிளம்பிட்டாரு நண்டு இனம் அழியாமல் தப்பித்தது என்று சிரிக்க வைத்து கிண்டல் பண்ணும் அளவுக்கு சாப்பிடக் கூடியவன் அதே பழக்கம் சவூதி வந்தும் தொடர்கிறது. வாரத்திற்க்கு ஒருமுறை நண்டு சாப்பிட தவறுவது இல்லை.

சரி சொந்தக் கதையை விட்டுபுட்டு விஷயத்திற்க்கு வருகிறேன் நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இணையத்தில் படித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது நீங்களும் படித்துப் பாருங்களேன்.

இரத்த சோகையை தடுக்குமாம்.
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

முடக்கு வாதம் முடித்து வைக்கும் நண்டு.
செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா? செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான எலும்புகளை ஏற்படுத்துமாம்.
காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

முகப்பருக்களை போக்கும்.
பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் கொழுப்பை குறைக்க வல்லது.
கொலஸ்ட்ரால் நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

இதய நோய்களை தடுக்கும்.
நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

கர்ப்பக் காலத்தில் நண்டு சாப்பிடக் கூடாது ஆனால்.
கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஜிங்க் உணவு நண்டு
கடல் நண்டு அனைத்திலுமே ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அதிலும் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும் என்கிறது ஆய்வு.

எங்கே கிளம்பிட்டிங்க? நண்டு சாப்பிடவா? வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றிதான் சாப்பிட்டு பாருங்களேன். 

Saturday, May 14, 2016

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...!

அவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர் யோகாசன கலைகளை நன்கு அறிந்தவர்.

ஒரு மாணவன் அவரிடம் யோக கலைகளை கற்றுக் கொண்டிருந்தான். ஆசிரியர் மாணவர் என்கிற உறவை தாண்டி மனது விட்டு பேசும் நல்ல நண்பர்களாவும் இருந்தார்கள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் அந்த மாணவன் சொன்னான்:

ஆசிரியரே! எனக்கு சாரசரி வாழ்வு பிடிக்கவில்லை இந்த உலகை துறந்து எங்காவது மலையடிவாரங்களில் பக்கம் இயற்கையோடு இயற்கையாக தனியாக, துறவியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு விடமாட்டார்கள் என்றுதான் பயப்படுகிறேன் என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.

“ஏன்?” உன்னை விட மாட்டார்கள் என்றார் ஆசிரியர்

“அவர்களுக்கு என் மீது அளவில்லாப் பாசம் கொள்ளை அன்பு. என்னைப் பிரிந்து அவர்களால் இருக்கவே முடியாது” என்றான் அவன் சற்றே கர்வத்துடன்.

“ அதை சோதித்து பார்க்கலாமா என்றார் ஆசிரியர் அமைதியாக.

மாணவன் அதற்குச் சம்மதித்தான். ஆசிரியர் அவனுக்குச் செத்தது போலவே கிடக்கும் ஒரு உயர்தர யோகாசன வித்தையைக் கற்றுக் கொடுத்து வீட்டிற்க்குப் போய் அதனை செய்யுமாறு சொன்னார்.

மறுநாள் காலை அவன் தன் வீட்டில் செத்தது போலவே கிடந்தான். செய்தியறிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். வீட்டின் அழுகுரல் தெரு முழுவதும் கேட்டது.

ஆசிரியர் அந்த வீட்டை அடைந்தார் அவர்களை பார்த்துச் சொன்னார்:

“ இவருக்குப் பதிலாக உங்களில் யாராவது ஒருவர் உயிரைத் தர முன்வந்தால் போதும், இப்போது இவரை உயிர்ப்பிக்க எனது யோகா சக்தியால் முடியும்.”

அதைக் கேட்டு ஒவ்வொருவராகப் பின்வாங்கினார்கள். தாங்கள் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் கடமைகள் பற்றி ஒவ்வொருவரும் பலவிதக் காரணங்களைக் கூறி அவருக்கு விளக்கினார்கள்.

கடைசியில் அவரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:

” அவருக்கு பதில் யாரும் சாக வேண்டாம். அவர் இல்லாமலேயே நாங்கள் காலத்தைக் கழிப்போம்.”

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவதில்லை என்கிறது இந்த ஜென் தத்துவ சிறுகதை.

Friday, May 6, 2016

வாட்ஸ் அப் வாழ்க்கை.


முன் கடந்து போவோரின்

முகம் காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

எண்ணம் எனக்கு புரியவில்லை.

தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி

உள்ளங்கையில் தான் உலகம்.

என் கைபேசி காதலியானாள்- நான்

கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாமக் கோழி கூவிய பின்னும்,

கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,

வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப

Hai என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

'அப்பா'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,

Status பார்த்து ரசித்தேன்,

profile பார்த்து வியந்தேன்,

Picture Msg பார்த்து லயித்தேன்,

video பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,

மாமி பொறித்த அப்பளம்,

தங்கை வீட்டு தக்காளிச்சோறு,

மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

அமிர்தம் தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,

நானாய் அழுதேன்,

நானாய் வியந்தேன்,

நானாய் ரசித்தேன்-ஏனோ

நான்,

நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட

Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

கீமோஜியில் கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

என் முன்னே எவருமில்லை.,

சுற்றமும், நட்பும்

உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்

சொந்தமே.,

இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.

நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய்.,,,   தவம் கிடக்கிறது...!

(வாட்ஸ் அப் புலம்பல் )