Wednesday, November 30, 2011

கொலவெறி பாடலும் மன்மத ராசாவும்...

கொலவெறி பாடலை கேட்டீங்களா..? கேட்டீங்களா..?
என்று எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெங்களு(கர்நாடகா)ரை சேர்ந்த முஹம்மது அயாஸ் என்கிற நண்பர் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.
கனடாவில் மில்லியன் கணக்கில் பார்த்து இருக்கிறார்கள் You Tube,Face Book, இதுலே போய் பாருங்க ஹிட்ஸை காசு வாங்கமாலே அந்த பாடலுக்கு மார்க்கேட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.


இந்த பாடல் வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் சொன்னார். நான் பதிலுக்கு ஆமா
கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற அனைத்து மாநிலத்தாரின் மனதையும் இந்த பாடல் கொள்ளைக் கொண்டு இணைத்து விட்டதால்.அனைத்து மாநில நதிகளையும் தேசியமயமாக்க போகிறார்கள் இனி தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது இனி காவிரி தங்குதடையின்றி தமிழகத்திற்காக திறந்து விடப்படும் முல்லை பெரியாறு அணையை மாற்றி கட்டும் யோசனையை கைவிடப்பட்டது அப்படித்தானே என்றேன் அவரிடம் பதிலில்லை.


சூர்யா ஜொதிகா,செல்வராகவன் சோனியா அகர்வால் இவர்களின் திருமணத்தை பத்திரிக்கைகள் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் திருமணங்கள் என்ற ரீதியில் எழுதப் படுகின்ற கவர்ஸ்டோரி செய்திகளை தொடர்ச்சியாக படிப்பதினால் எற்படுகின்ற சிந்தனை இழப்பு இது. 


கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப் போல!


இந்த காதுலே வாங்கி அந்த காதில் விட்டுட்டு போகிற பாடலுக்காக இவ்வளவு கொலவெறியான ஆய்வு தேவையா? “கொசு அடிக்க குண்டாந்தடியா?” இது போன்ற பாடல்கள் கொசுவுக்கு நிகரானவை என்பதெல்லாம் உண்மைதான்.ஆனால் கொசுவின் வலிமையை அதன் தோற்றத்தை வைத்தா கணிக்க முடியும்? அது பரப்பும் தொற்று நோயல்லவா அதன் உண்மையான வலிமை.

நன்றாக நினைவிருக்கிறது 2003 வருட இறுதியில் ஹிட் ஆன மன்மத ராசா படப் பாடல் திரும்பிய திசையெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது கொலவெறி பாடலை பாடிய தனுஷ் அன்று கொலவெறியோடு ஆடிய பாடல் அது. பல தளங்களில் அந்தப் பாடல் அக்கால பகுதியில் பல அதிர்வுகளை ஏற்படுத்திதை யாரும் மறுக்க முடியாது.
காதல் காம வெறியோடு அதி வேகமான இசையுடன் புழுதி பறக்க ஆடுவதற்காக தெர்ந்தேடுத்த இடம் (லொகேஷன்) எந்த இடம் தெரிகிறதா? (அதை தெரிந்து என்ன ஆகப் போகுது என்கிறீர்களா?) இந்தியாவின் கோலார் தங்க சுரங்கம்,உலக அளவில் 2-வது ஆழமான சுரங்கம் முதல் ஆழமான சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.


இவர்கள் இந்த இடத்தில் காமவெறியோடு ஆடுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே சுரங்க நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுவதாக அறிவித்து ஆயிரகணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து இதே பகுதியில் அவர்களை ஒருவேளை உணவு இல்லாமல் அலைய விட்டது.அதில் பெரும்பான்மை தொழிலாளர்கள் தமிழர்கள் என்று வெளிவந்த செய்திகளை இந்த பாடல், ஆடல் பற்றிய முக்கியத்துவமற்ற செய்திகள் ஆக்கிரமித்து கோலார் தங்க சுரங்கத்தை விட ஆழமான பள்ளத்தில் குழி தோண்டி புதைத்தன.

நிழலை பார்த்து நிஜத்தை விளங்கி நகர்ந்து போகும் வரை பிரச்சனையில்லை
ஆனால் நிஜங்கள் நிழல்கள் போல் மாற ஆசைப்படுவது ஆபத்தானது. அந்தந்த பட நாயகனாக நாயகியாக தன்னை எண்ணிக் கொள்வது அதேப்போன்று அசிங்கமாக பொதுவில் ஆடுவது இது ஒருவகையான மனநோய் அல்லவா?


மன்மத ராசா பாடலை பார்த்த பொற்றோர்கள், ஆசிரியர்கள் இதே போன்று ஆடை உடுத்தி தன் மகனை, மகளை ஆடவைத்து பார்ப்பதையே லட்சியமாக கொண்டதை மறக்க முடியவில்லை 2003 வருட அனைத்து ஸ்கூல் ஆண்டு விழாவிலும் இந்த ஆடையே அணிந்துக் கொண்டு அசிங்கமாக ஆடாத மாணவ மாணவிகள் பாவம் செய்தவர்கள். 

நடிகன் நடிகைகளை கெட்ட முன்மாதிரியாக கொண்டு அவர்களின் நடை உடை, ஆபாச காட்சிகள் இவற்றை சிறு வயதில் இருந்த உணவோடு சேர்த்து ஊற்றி வளர்த்து விட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் காமத்தை திருடும் திருடா திருடியாக மாறி ஒடிப் போகும் போது. சமூக மானம் போயிடுச்சு, குடும்பம் மானம் போயிருச்சுன்னு ஒப்பாரி வைத்து என்ன பலன்.?!

அதிலும் இந்த இலங்கை ஈழதமிழ் சமூகம் படத்திற்கும் பாடலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கே! 1999ல் எனது ஊர் பக்கத்தில் மண்டபம் அகதிகள் கேம்பில் உள்ள ஈழத்தை சேர்ந்த நண்பனின் காதலி யாழ்ப்பானத்தில் இருந்தார் அவரிடமிருந்து இவனுக்கு கடிதம் வரும்.எப்படி தெரியுமா?

அன்புள்ள அத்தான் அவர்களுக்கு தங்கள் அனுப்பிய கடிதமும் காதலுக்கு மரியாதை பாட்டு புத்தகமும் பெற்றுக் கொண்டேன் அடுத்த முறை விஜய்யின் புதிய பாடல் புத்தகங்களை அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.ரொம்ப முக்கியம் அங்கு வாழ்வா சாவான்னு போராட்டம் நடந்துகிட்டு இருக்கு மூதேவி நீ இங்கு அகதியாக அடிப்படை வசதியில்லாமல் இருக்கே இதுலே பாடல் ஒரு கெடான்னு வாய் விட்டு கேட்டு இருக்கிறேன் அதற்கு என்ன மச்சான் செய்ய சொல்றே அவ விருப்பட்டு கேக்குற மறுக்க முடியுமா? என்பான்.

 சினிமாபாடல் ஆடல் இவைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் வரை இந்த சமூகம் மட்டுமல்ல எந்த சமூகமும் வெளங்கவே வெளங்காது எப்புடியும் நாசமாக போங்க... என்று திட்டி இருக்கிறேன்.


இது போன்ற பாட்டுப் புத்தகங்கள்,பாட்டுப் புத்தக கடைகள் ஒழிந்து விட்டன ஆனால் அந்த இடத்தை இணைய தளங்களும் பிளாக்கர்களும் தத்தேடுத்து அறிவியல் உச்சக் கட்ட தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அழகான வடிவங்களில் டிசைன் பன்னி செவ்வனே தங்களின் பணியை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  “எந்த சமூகம் இசையில் லயித்து முழ்கி போகிறதோ அந்த சமூகத்திற்க்கு மீட்சி என்பதே கிடையாது என்று சொல்லுகிற சீன தத்துவம் நினைவுக்கு வருகிறது.”


அவர்களின் தலைவனின் புகழ்படுவதற்கு கூட டப்பாங்குத்து பாடலின் துணையை நாடும் அவலம் இங்கு கணொளி சாட்சியாக.


இசையால் எவ்வளவு பாதிப்புகள்

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது


2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர்களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது

3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! ! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது ஏழைகளை சாகடிக்கும் விலைவாசி பிரச்சினை,கூடாங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை இவை பற்றி எழுதுகிற பதிவுகளை பதிவளர்களை புறக்கணித்து விட்டு இந்த பாடலுக்கு சர்வதேச அளவில் ஐம்பது இலட்சம் ஹிட் கொடுப்பது ஆபத்தானதாக தெரியவில்லையா? இந்த பாடலுக்கு கிடைத்த ஊடக வரவேற்பு சமகால சமூக அவலங்களுக்கு கிடைப்பதில்லையே ஏன்?

உணவு,உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் போராடிக் கொண்டு இருந்த (இருக்கிற) காலங்களில் யாரும் கவிதை, கதை, பிளாக் நடத்தி புகழ் பெற வேண்டுமேன்பதை விருப்புவது இல்லை வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் வாழ்க்கை போராட்டத்திற்கே நேரம் சரியாக இருக்கிறது என்பதாக கூட வைத்துக் கொள்ளலாம்.

நல்ல உணவு,உடை, வேலைவாய்ப்பு வசதியான வாழ்க்கை போன்ற விஷயங்கள் கைகூடிய பிறகு அடுத்த கட்டமாக கவிதை,கதை, பிளாக்கர் புகழ் இவைகளை நாடி மனம் செல்லும் இவை தவறில்லை பழையதை மறக்காமல் நினைவு வைத்து சமகால சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் வரை.

கொலவெறி பாடலைப் பற்றி ஆளுக்காளு பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த உன்னதமான பணியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன் இதோ அந்த பாடலுக்கான கணொளி என்ற ரீதியில் பதிவு இடுகிறார்கள் நானும் அந்த ஜோதியில் கலந்து அது சம்பந்தப் பட்ட தலைப்பில் எழுத விட்டால் இந்த பாவத்தை எங்கு கொண்டு போய் தொலைப்பது.என்ற கவலை ஆட்கொள்ளவே இப்பதிவு.

Wednesday, November 23, 2011

முதன்முறையாக வார இதழில் என் பதிவுகள்.

வலைப்பூ ஆரம்பித்து (Wednesday, 17 November 2010) கடந்த நவம்பர் 17 ம் தேதியோடு ஒரு வருடம் முடிவடைந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பு 17 ம் தேதியே பதிவு போடததற்கு காரணம் எனக்கு வருட கொண்டாட்டங்களின் மீது விருப்பமில்லை அதனால் தவிர்த்தேன்.

நன்றி என்கிற இந்த முதல் பதிவிலிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக பயனுள்ள விடயங்களை இணையத்தின் ஊடாக சொல்ல ஆசைப்பட்டேன்.
கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் (எல்லா புகழும் இறைவனுக்கே)

என்னுடைய பதிவுகள் பதிவுலகை கடந்து ஜனரஞ்சக ஊடகமான வாரப் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கின்றன அந்த மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


சவூதி வரை வந்த சாதீயம் என்ற பதிவை மீடியா வாய்ஸ் என்ற

வாரப் பத்திரிக்கையில் மூலம் முதன்முறையாக வெளியிட்டு என் பதிவுகள் பலருக்கு போய்ச் சேர உதவினார்கள் அவர்களுக்கும் நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள்.

இந்த பதிவு சுயபெருமையடிப்பதற்காக அல்ல. நல்ல விடயங்களை இணையத்தில் எழுதக் கூடிய நண்பர்களுக்கு இது ஊக்கத்தை கொடுக்க கூடியதாய் இருக்கும் என்ற நம்ம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன் 

Monday, November 21, 2011

வளைகுடா வீட்டு வேலைக்கு வரும் விட்டில் பூச்சி பெண்கள்

ளைகுடா நாடுகளில் நிறைய பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். நன்றாக படித்து விட்டு படிப்புக்கேற்றார் போல் வளைகுடாவில் வேலை செய்கிற கணவனோடு ஒன்றாக இருந்து பாதுகாப்பான நல்ல சூழலில் வேலை செய்பவர்கள்.

மைக்ரோ பேமிலி சூழலால் இவர்களுக்கும் சில சிரமங்கள் இருக்கின்றன. நான் எனது மனைவியை சவூதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருந்த காலத்தில் மற்ற நண்பர்கள் எப்படி இங்கு சமாளிக்கிறார்கள் என்று அறிவதற்காக புதிதாக குடும்பத்தை அழைத்து வந்திருந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியிடம் பேச்சு கொடுத்தேன்.

என்னம்மா சவுதி எப்படி இருக்கு? வசதிகள் எப்படி? என்று கேட்டது தான் போதும் யாராவது இந்த கேள்வியை கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தது போன்று கடகடவென்று சலிப்போடு பதில் சொன்னார். கை குழந்தையோடு இவுக கூட்டிகிட்டு வந்துட்டாக ஊரில் இருந்தவரை மாமியார், அவரின் மூன்று தங்கைகள் இப்படி மாத்தி மாத்தி தூக்கி வைத்துக் கொள்வார்கள். குழந்தை இருந்த சிரமமே தெரியவில்லை.

ஆனால் இங்கு யாரும் இல்லை. நான் தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேலையும் செய்ய முடியவில்லை அழுது கொண்டே இருக்கிறான். அக்கம் பக்கத்து வீடுகளிலும் தெரிந்தவர்கள் இல்லை. பேச்சு துணைக்கு ஆள் இல்லை காலையில் டூட்டிக்கு போகிறவர் மாலை தான் வீட்டுக்கு வருகிறார் போரடிக்குது ரொம்ப கஷ்டமுண்ணே என்றார்.

அவரிடம் ஆறுதல் சொல்லும் விதமாக இணைய வசதி இருக்குலே ஒரு பிளாக் ஆரம்பித்து  விடுங்கள். ஏற்கனவே நிறைய சகோதரிகள் (சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமால், பயணிக்கும் பாதை அஸ்மா, குட்டி சுவர்க்கம் ஆமினா, இனிய வசந்தம் அயிஷா அபுல்,டிரங்குப் பேட்டி ஹுஸைனம்மா, என் இனிய தமிழ் மக்களே அன்னு) சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களோடு இணைய நட்பும் ஏற்படும். அப்புறம் உங்களுக்கு நேரமே கிடைக்காது என்று சொன்னேன்.

இப்படி தனிமை, வேலைப்பளு, பாருங்கே எல்ல வேலைகளையும் நானே செய்ய வேண்டியதாகி இருக்கு போன்ற கஷ்டங்கள் இரண்டாம் பிரிவினருடன் ஒப்பிடும் போது சாதராணமானவை. 

இரண்டாவது பிரிவினர் மருத்துவமனைக்கு தாதிகளாக(நர்ஸாக) வேலைக்கு வரும் பெண்கள், வீட்டு வேலைக்கு வரும் பணிப் பெண்கள். நர்ஸாக வருபவர்களுக்கு ஒரளவுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்கிறது. ஆனால் வீட்டில் தங்கி வேலை பார்க்கும் வீட்டு வேலைக்கார பெண்களின் பணிச்சூழல் பயங்கரமானது. நான் ஆரமபத்தில் லேசு மாசாக அவர்களின் கஷ்டங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் ‘நிஷாந்தி’ என்கிற இலங்கையை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்னை சந்தித்த பிறகு அதன் முழு கஷ்டத்தையும் உணர்ந்தேன். அரபிகளில் இவ்வளவு மட்டமான மிருகங்களும் இருக்கிறார்கள்  என்பதை தெரிந்துக் கொண்டேன்.

சவுதி அரசாங்கம் நடத்தும் இஸ்லாமிய குர்ஆனிய வகுப்புகளில் அரபி இலக்கணம் படிப்பதற்காக நான் சேர்ந்து இருந்தேன். எங்களுக்கு தமிழ் பிரிவு ஆசிரியராக இருந்த இலங்கை மெளலவியுடன் நான் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டேன் அவர் குர்ஆன் இலக்கனம் கற்று தருவார். நான் அதிகாலையில் அவருக்கு யோகா உடற்பயிற்சி இவைகளை கற்றுக் கொடுப்பேன் இப்படி நட்பு இறுக்கமாகி அவர் குடும்பத்தில் ஒருவனாகி அவர் கூடவே திரிந்தேன்.

பொதுவாக இலங்கை தமிழர்கள் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம். அவர்கள் தூய தமிழ் பேசும் அழகு இருக்கே கேட்டுகிட்டே இருக்கலாம். நாம் எறங்கி என்று சொல்வதை அவர்கள் இறங்கி என்று சரியாக உச்சரிப்பார்கள். அவர்கள் அந்த தமிழில் நம்மை திட்டினாலும் கோபம் வராது. திட்டும் போதும் கூட அவர்களின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பேன். அவர் குர்ஆன் வகுப்பு எடுக்கும் போது நமக்குத் தெரியும் என்று சொல்லுவதற்குப் பதிலாக எங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பிப்பார். அப்போது நான் மெளலவி உங்களுக்கு தெரியும் .ஆனால் எங்களுக்கு தெரியாதுல்லே என்று சீண்டுவேன்.

சில நேரங்களில் பஞ்சாயத்துக்கள் அவரிடம் வரும். பாதிக்கப்பட இலங்கை,பிலிப்பினி, இந்தோனேஷியா பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விவாகரங்களாக இருக்கும், சிலர் போனில் இவரை தொடர்பு கொள்வர்கள். ஒரே நாளில் பல இடங்களில் வகுப்பு எடுப்பதால் அவர் பிஸியாக இருப்பர் அதுபோன்ற சமயங்களில் என்னை அனுப்பி அவர்களை சந்திக்க சொல்வார். அப்படி ஒரு நாள் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவரை சந்தித்தேன்.

இலங்கை ரெஸ்டராண்ட் போ அங்கு அந்த பெண் வருவார். இந்தா நம்பர் என்று அவரின் மொபைல் நம்பரை தந்தார்.அங்கு காத்திருந்தேன் மொபைல் சினுங்கியது. அஸ்ஸாமு அலைக்கும் என்று ஸலாம் சொன்னார் ஸலாம் தவறாக சொல்லும் போதே கவனித்தேன். அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் சாந்தியும் சமாதனமும் உண்டதாவதாக என்று பொருள். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்கள் மீது மரணம் உண்டாவதாக என்று பொருள்.(இதுபோன்று முஹம்மது நபி (ஸல்) காலத்தில் யூதர்கள் அறிந்தே சொன்ன வரலாறு உண்டு.) தன்னை பாத்திமா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் வெளியில் நிற்கிறேன் என்றார். சரி இதோ வருகிறேன் என்று நான் வெளியேறும் போதே அவரை பார்த்து விட்டேன். பதட்டத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்.

சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு மவுனமாக இருந்தார் தலைகுனிந்து இருந்தார். மறுபடியும் கேட்டேன் என்ன பிரச்சனை உங்களுக்கு சும்மா சொல்லுங்க உங்க கூடப் பிறந்த சகோதரனாக நினைத்து சொல்லுங்க. எங்களால் முடிந்தால் கண்டிப்பாக உதவுவோம்.

தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். நான் இங்கு ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்கிறேன் காலையிலிருந்து இரவு 12 மணி வரை வேலை என்றவரிடம். சரிங்க லேபர் வேலைக்கு வந்த எல்லோரும் அப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு பிரச்சனையா? என்றேன். நிமிர்ந்து பார்த்து கலங்கிய கண்களோடு பேச ஆரம்பித்தார் அது பிரச்சனை இல்லேண்ணே என் அரபி முதலாளிக்கு ஐந்து பசங்க. என்னை இரவில் தூங்க விடாம தினமும் மாறி மாறி வந்து............

அட வெறி நாய்களா! இதை அந்த வெறி நாய்களை பெற்ற தகப்பன் கிட்ட சொன்னீங்களா? என்று நான் கேட்க அவர் "சொல்லிட்டேன் கண்டுக் கொள்ளவேயில்லை. ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய் விட்டான் அந்த கிழவன். ஒரு நாள் நான் சமைக்கும் போது பின்புறமாக வந்து உரசிக் கொண்டு கட்டி புடித்தான். நான் எதிர்ப்பு தெரிவித்த போது என்னை ஒங்கி அறைந்து விட்டு தூக்கி கொண்டு போய்...............

என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு சவூதிச் சட்டப்படி தலையை வெட்டி விடுவார்கள் அப்படியிருந்தும் எப்படி துனிகிறார்கள்? என்ற கேள்வி மனதை துளைத்தது.



இந்தோனேஷியா பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்ததற்காக அரபியின் தலை வெட்டப்படுகிறது 

ஆனால் அவரை என்ன செய்தாவது காப்பற்ற வேண்டும் என்று மனது துடித்தது. சரி நீங்க வீட்டுக்கு போங்க அரபி போன் நம்பர், ஏரியா அட்ரஸ் சொல்லுங்க நாளைக்கு வர்றோம்.
போன் நம்பரும் அட்ரஸும் கொடுத்து விட்டு போனார். அவரை அன்று அந்த வீட்டுக்கு அனுப்பக் கூட எனக்கு மனமில்லை. இன்றும் இரவு வருமே  என்ன செய்வார் இவர் என்று நினைத்துக் கொண்டே மெளலவியிடம் விசயத்தை சொன்னேன் அவர் நாளை காலை அவனை சந்திப்போம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை அவளின் அலறல் சத்தம் கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எப்போது விடியும் என்று காத்திருந்தேன்.

மறுநாள் காலை அவர் கொடுத்த அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து போய் சேர்ந்தோம். மெளலவி காரை பார்க் பன்னி விட்டு வந்து விடுகிறேன். நீ முன்னாடி போயி அவன் கிட்ட பேசிக்கிட்டு இரு நான் வந்து விடுகிறேன் என்று காரை நிறுத்த போய் விட்டார். நான் கதவை தட்டினேன். ரிமோட்டால் உட்கார்ந்து கொண்டே கதவை திறந்தவர் (பத்தல்) உள்ளே வா என்றார்.

உள்ளே போனேன் என்ன விஷயம் என்ன வேனும். உங்க வீட்டுலே பாத்திமான்னு ஒரு பெண் வேலை பார்க்கிறாங்களே அவங்க என் சொந்தக்காரவுங்க அவங்க ஊருக்கு போகனும்னு சொல்றாங்க அவங்கள (ல்வு ஜாமா) தயவு செய்து அனுப்பி வையுங்கள்.(ஜஸாக்கல்லாஹ் கைர) அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை செய்வான் என்றேன்.

கோபம் தலைக்கேறிய கிழட்டு அரபி (கஃல்ப் மீன் அந்தே )  நீ யாருடா நாயே அவ  கள்ளகாதலணா,  அவகூட எத்தனை தடவை படுத்தே என்று கத்திக் கொண்டே காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி எறிந்ததில் என் முகத்தில் பட்டு கிழே விழுந்தது.துப்பாக்கி எடுத்து உன்னை சுடுகிறேன் பாரு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது. மெளலவி உள்ளே வந்தார். ஏன் அவனை அடித்தாய் என்று அதட்டினார். நாங்க யார் தெரியுமா? அங்குள்ள பிரபலமான மதகுருவின் பெயரைச் சொல்லி அவரின் மாணவர்கள் என்றதும் அவன் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.

மௌலவி அவனை, ‘‘இன்னும் இரண்டு நாட்களில் வருவேன். அவள் ஊருக்கு போறதுக்கு டிக்கேட் எடுத்து வை. இல்லை, சட்டப்படி உன்னை சந்திப்பேன்’’ என்று எச்சரித்தார். அந்த பெண், அனைத்தையும் அழுத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாளே, பாத்திமாவிடமிருந்து போன். ‘‘அண்ணே, நான் வீட்டைவிட்டு ஒடிவந்து விட்டேன். இங்கே ஒரு ரெஸ்டாரென்டில் நிற்கிறேன். தயவு செய்து கூட்டிட்டு போங்கள்’’ என்றார்.

எனக்கு கோபமாக வந்தது. வீட்டு வேலைக்கு வருபவர்கள் சொந்த ஊர் திரும்பவேண்டும் என்றால், முதலாளி ஒப்புதல் தேவை. திருடிவிட்டதாகவோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவோ புகார் செய்தால் நமக்குத்தான் சிக்கல். ‘‘இரண்டு நாளில் முடியவேண்டிய காரியத்தை இப்படி பண்ணிட்டீங்களே’’ என்று கடிந்து கொண்டேன். பாத்திமாவின் உண்மையான பெயர், நிஷாந்தி. வேலைக்காக முஸ்லிம்போல நடித்திருக்கிறார்.

பிறகு நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி, விமான கட்டணம் வசூல் பண்ணி, நிஷாந்தியை ஏர்லங்கா பிளைட்டில் ஏற்றி விட்டோம். மனம் நிம்மதியடைந்தது. ஆனால், ஒரு நிமிடம்கூட அது நீடிக்கவில்லை. புதிதாக வந்திறங்கிய இலங்கை விமானத்திலிருந்து, கூட்டம் கூட்டமாக இலங்கை பெண்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

‘‘வளைகுடா நாடுகளுக்கு வரும் இலங்கை பெண்களில், ஆண்டுதோறும் குறைந்தது 100 பேராவது இயற்கை விபத்துக்கள், பாலியல் பாலத்கார கொலைகள், நேரடித் தக்குதல்கள் போன்றவற்றிக்கு பாலியாகி சடலமாக திரும்புகிறார்கள்.’’ என்கிறது இலங்கை காவல்துறை. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக ஆதிகாரப்பூர்வ செய்தியில், 2009&ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010&ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்நியச் செலவாணி என்ற ஒன்றுக்காக மட்டும் ஆண்டுதோறும் இப்படி நூற்றுகணக்கானவர்களை பலிகொடுத்து வருகிறது இலங்கை அரசு. இங்கே, வீட்டு வேலைக்காக வரும் பெண்கள், அரபிகளால் மட்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. அந்த வீட்டில் டிரைவர்களாக வேலை பார்க்கும் நம்மூர் ஆட்களாலும் சீரழிக்கப்படுகிறார்கள். இது மட்டுமில்லை. சில பெண்கள் முதலாளியின் கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். இவர்களை நம்மூர் ஆட்கள், குறிப்பாக கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி வைத்து, பலான தொழிலே செய்து வருகிறது. 

பாலியல் பலாத்காரங்களுக்கு அரபுச் சட்டப்படி பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்கிறார்கள். அப்படி இருந்தும் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்தவரை இதற்கான அடிப்படைக் காரணம் முதிர் ‘கண்ணன்கள்’தான். இங்கே திருமணத்தின்போது, பெண்ணுக்குத்தான் வரதட்சனை கொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய பணக்காரனும், அவனுக்கு சமமான குடும்பத்தில் பெண் எடுத்து வரதட்சனை கொடுக்க தயங்குகிறான். அதே சமயம், வசதி குறைவான பெண்ணையும் அந்தஸ்து கருதி திருமணம் செய்வதில்லை. எனவே, சவுதி முழுக்க ஏகப்பட்ட முதிர்கண்ணன்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக்கொண்டால், நரகம்தான்.

‘‘சட்டம்தான் கடுமையாயிற்றே, நீங்கள் புகார் கொடுத்தால் என்ன?’’ என்று கேட்கலாம். நடைமுறையில் பல விஷயங்கள் நமக்கு சாத்தியமில்லை. பழங்குடி இனத்தவரை ஏவிவிட்டு நம்மைக் கொலை செய்யக்கூட அரபிகள் தயங்குவதில்லை. எனவேதான் வாயை மூடிக்கொண்டோம். வயிற்றுப் பிழைப்புக்காக வரும் பெண்ணொருத்தி, கடுமையான வேலைகளுக்கு நடுவே ஒவ்வொரு நாளும் ஐந்து பேரால் பலாத்காரத்துக்கு உள்ளாவதை நினைத்துப் பாருங்கள். இது ஒரு சாம்பிள்தான். கண்ணுக்கு தெரியாதவை ஏராளம்.

படத்தில் இருப்பவரின் பெயர் மனோகரன் பவானி (வயது 31)இரண்டு குழந்தைகளுக்கு தாய். நல்ல கண்பார்வையோடு இங்கு வந்தவர் இரண்டு வருட சம்பள பாக்கியை கேட்ட குற்றத்திறகாக அரபி ஒருவனால் கண்களில் ராசயன கலவையை ஊற்றப்பட்டு பார்வை இழந்து நாடு திரும்பி குருடாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
டிஸ்கி
இனவெறி என்றால் என்ன? என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்ட போது நபியவர்கள்
 “தன் இனத்தான் தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவது தான் இனவெறி” என்றார்கள். (நூல்: புகாரி)


"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் ( நூல்:அபூதாவூத்).


சரியான இஸ்லாமியனுக்கு இஸ்லாம் அதை தான் கற்றுத் தந்துயிருக்கிறது
தவறு செய்ய சொல்கிற என் சொந்த மனது கூட எதிரி தான்


பின் குறிப்பு
இந்த கட்டுரையை பரபரப்புக்காக எழுதவில்லை இந்த பதிவை படிக்கிற யாரவது ஒரு பெண் விழிப்புணர்வு அடைந்து வளைகுடாவிற்கு வீட்டு வேலைக்கு வர முன்னே வைத்தகாலை பின்னே வைத்தால் அதுதான் இந்த பதிவுக்கு கிடைத்த உண்மையான வெற்றி

Monday, November 14, 2011

கம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்...

குழந்தை வளர்ப்பு, சமையல் முதலிய ‘முக்கியத்துவமற்ற பணிகளில் மூழ்கி தந்தை, கணவன்,மகன் ஆகியோரின் பாதுகாப்பில் வீடுகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்க்கையைக் கழிப்பவர்கள் தாம் ஹவுஸ் ஒய்ப் என்று சொல்லக்கூடிய குடும்ப பெண்கள் இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது தான் எங்கள் முதல் கடமை என்று சொல்லுகிற கம்யூனிஸ்ட்களும் மேற்கத்திய போலி பெண்ணியவாதிகளும் (எந்த வகையான சுதந்திரத்தை பெற்றுத் தருவார்கள் என்பதை பிறகு பார்ப்போம்)

கம்யூனிஸ்ட்கள் பெண்ணுரிமை பற்றி வாய் திறந்தால் அதில் இஸ்லாமிய பெண்களைப் பற்றியும் பர்தாவைப் பற்றியும் எழுதாமல்இருந்ததில்லை.  சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், முஸ்லிம் சமூகம் பெண்களைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளது எனும் அபத்த சிந்தனைதான் இருதரப்பினரிடமும் காணப்படுகிறது.

ஆனால் நம்ம ஸ்டாலின் பர்தாவை சரியான உடை என்கிறார்.
நூல்: சர்வம் ஸ்டாலின் மயம், என்ற புத்தகத்தில் பக்கம்;135ல் நம்ம ஸ்டாலின் ரோம்ப அருமையாக ஒரு பெண்ணு எப்படியேல்லாம் டிரேஸ் போடனுன்னு தன்னுடைய மகளுக்கு பன்னுன அறிவுரையை பாருங்க, மகளே ஸ்வெத்லானா உடலோடு ஒட்டிக்கொள்ளும் படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்! 

எல்லா நிலைகளிலும் அடக்குமுறைகளுக்கு ஆளான பெண்களுக்கு எடுத்துக் காட்டாக முஸ்லிம் மகளிரைக் காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள் மேற்கத்தியர்கள் அவர்களின் ஆங்கில கட்டுரைகளை தமிழில் அப்படியே காப்பியடித்து வாந்தியெடுக்கும் கம்யூனிஸ்ட்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொள்கிற பிற்போக்குவாதிகள்.

ஒரு ஆணுடன் வாழ்வதை அடிமைத்தனம் என்று நினைக்கிற,கூட்டு கலவி,ஓர்பாலின உறவு,விருப்பட்டவர்களிடம் செக்ஸை பகிர்ந்து கொள்வது என முற்போக்கின் பரிணாம உச்சியில் இருக்கிற மேற்கத்திய முற்போக்கு என்கிற கற்காலத்து பெண்களை பெறுத்தவரை இவர்கள் பிற்போக்குவாதிகள் தான். இவர்கள் முஸ்லிம் பெண்களுக்காகப் பேசும் முழு அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று அடம் பிடிக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் பெண்களை இழிவாகச் சித்தரிப்பதன் மூலம் தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நியாயமானது தான் என்று காட்ட முனைகிறார்கள். பெண்களை அடக்கி ஒடுக்குவதிலிருந்தே இஸ்லாம் எத்துணைக் கொடுமையான மதம் எனத் தெரிகிறதல்லவா என்றும் வினவுகின்றனார்.

முஸ்லிம் பெண்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையற்ற அந்தந்த நாடுகளின் வட்டார பழக்க வழக்க வழிமுறைகளால் பல அநீதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்கவில்லை.அவர்களின் திறமைகளும் ஆற்றல்களும் முழுமையாகப் பயன்படுத்தபடாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதும் உண்மைதான். மார்க்கமின்மைதான் இவர்களின் முதல் பிரச்சனை.

ஆனால் இத்தகையச் சிக்கல்கள் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே உரியன என்பதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறது பெண் விடுதலைக்கு நிறமோ மதமோ சாதியோ இல்லை.மேற்கத்திய,கம்யூனிஸ பெண் விடுதலைக்கு என்ன அளவுகோலை நிர்ணயித்துள்ளார்களோ அந்த அளவுகோலை முழுமையாகப் பின்பற்றி மனநிறைவுடன் வாழும் ஒரு பெண் கூட இல்லை.

உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்.


ஆனால் கம்யூனிஸ்ட்கள் தங்களின் பொற்கால அற்புத ஆட்சி என்று வர்ணிக்கிற சோவியத் யூனியன் ரஷ்ய ஆட்சியில் பெண்கள் பட்ட துயரத்தை சொல்லி மாளாது.கம்யூனிஸ பொருளாதாரத்தின் இயற்கையான இயல்பே இயன்ற அளவு உற்பத்தியை பெருக்குவதேயாகும் அதற்காக சமுதாயத்தின் அத்தனை ஜீவன்களும் ஆலைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும்,கழனிகளிலும் ஆண்களைப் போல்.பெண்களும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
                               அனைத்து கடுமையான வேலைகளிலும் பெண்கள்
ரஷ்ய கம்யூனிஸ அரசு பாய்ச்சல் வளர்ச்சி என்ற பெயரில் குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று காட்டாயப்படுத்தி.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருக்கும் உடல் வலிமையின் வேறுபாட்டை மறந்தது மட்டுமல்ல மனோ நிலையில் உள்ள வேறுபாட்டையும் மறந்து 8 மணிநேரம் வேலை என்பதை தியாகம் செய்யுங்கள் என்று மிரட்டி 16 மணிநேர வேலைகளை வாங்கி அந்த பெண்களை கசக்கி பிழிந்தார்கள்.

பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவதை அவர்களின் குழந்தைகள் தடுத்து விட கூடாது என்பதற்காக மொத்த உற்பத்தியைப் போல் குழந்தைகளும் மொத்தமாகவே ஒரு இடத்தில் வளர்க்கப்பட்டனர். பெண்களுக்கு பிரசவக் காலத்தின்போது மட்டுமே சிறிது ஒய்வு கொடுக்கப்படும்.
 தாயின் பராமரிப்பு இல்லாமல் மொத்தமாக வளர்க்கப்படும் குழந்தைகள் 

பெண்களின் உள்விஷயம் வரை கம்யூனிஸ சர்வதிகார அரசு தலையிட்டது உடலுறவுக்கு அதிக நேரம் செலவிடாதீர்கள் ஆலை உற்பத்தி பாதிக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் மிருகத்தனமான பாலுணர்வுத் தூண்டலுக்கு சமூக அமைப்பே காரணம்.பாலுணர்வினைக் கட்டுப்படுத்த நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.பெண்கள் அனைவரையும் தனக்கு நிகரான தோழனாகவே ஒருவர் கருதவேண்டும் என்று கம்யூனிஸம் கற்றுத் தருகிறது என்கிறார்கள். அதனால் தோழனை ஆலையில் வேலை செய்ய விடு என்று உடலுறவுக்கு ரேஷன் முறையை அமல்படுத்தினார்கள்.

ஒவ்வொரு குடிமகளும்,குடிமகனும் என்னென்ன வேலைகளைச் செய்திட வேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்: இதில் அரசாங்கம் உழைப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு கிஞ்சிற்றும் இடம் தருவதில்லை.மனிதர்களின் இலட்சியம் என்னவாக இருந்திட வேண்டும்,மனிதர்களின் செயல்கள்,சிந்தனைகள் எப்படி இருந்திட வேண்டும் எல்லாவற்றையும் முடிவு செய்வது அரசாங்கமே!

இங்கே நாம் தனி மனிதன் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும்,அரசாங்கம் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சில நேரங்களில் சர்வாதிகாரியாகச் செயலபடுகின்ற தனிமனிதர், நல்லவராக,இரக்க சிந்தை படைத்தவராக தனது நாடு முன்னேறிய ஆக வேண்டும் என்ற ஆசையை உடையவராக தன்னுடைய மனசாட்சிக்கு பயந்தவராக,இதய சுத்தி உடையவராக சட்டங்களை இயற்றுவதற்கு முன் மக்களை கலந்தலோசிப்பவராக இருந்திட வாய்ப்புண்டு.

ஆனால் அரசாங்கம் சர்வாதிகாரியாக இருக்கின்றபோது மேலே சொன்ன இவைகள் மறந்தும் நடந்திட வாய்ப்பில்லை. இதுபோலத்தான் கம்யூனிஸத்தில் இருக்கும் சர்வாதிகாரமும். ஏனெனில் கம்யூனிஸ அரசாங்கம் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப் படுகின்றது. அது தனது இலக்கை அடைய தான் விரும்பும் திட்டங்களை இரும்புக் கரம் கொண்டு மக்கள் மீது திணிக்கின்றது இதன் பெயர் தான் ‘கம்யூனிஸ அரசாங்கத்தின் சர்வதிகாரம்’ என்பது.
சர்வதிகாரம் வீழ்ந்து ஸ்டாலின் உருவச்சிலை மாஸ்கோ தெரு குப்பையில்

இப்போது புரிகிறதா இவர்கள் ஏன் பெண் சுகந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று?


நீங்கள் நல்ல கணவரா? 


உங்கள் மனைவியும் நீங்களும் உற்றதுனை என்ற முறையில் வீடு, குடும்பம் குழந்தைகள் இவர்களை நீ பார்த்துக் கொள் வருமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற முறையில் வேலைகளை பகிர்ந்து செயல்படுகிறீர்களா? 


அல்லது அப்படி செயல்படக் கூடிய சமூக அமைப்பில் நீங்கள் இருக்கிறீர்களா?


மனைவி வீட்டு வேலையும் பார்த்து அலுவலக வேலையும் ஏன் பார்க்க வேண்டும் அப்படியான தேவை எங்களுக்கு இல்லை என்று இருவரும் சேர்ந்து முடிவேடுத்து நீங்கள் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறீர்களா?


தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஆணாதிக்கவாதி பெண் உரிமையை பறிக்கிறவர் கம்யூனிஸ்ட்களின் உயர்ந்தஇலட்சியமான உற்பத்தியை பெருக்குவதற்காக ஆலைகளுக்கு பெண்களை காட்டுத்தனமாக உழைக்க அனுப்ப மறுக்கும் பெண்ணிய விரோதி.


இறுதியாக ஒரு சவால் விடுகிறேன் இங்குள்ள கம்யூனிஸ்ட்களை பற்றியும் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் தான் உழைக்கிறார்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.இதை அவர்களை மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.


வளைகுடா நாடுகளில் உழைக்கும், உழைக்க வந்த கம்யூனிஸ்ட்கள் ஏன்அவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டு பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை பதில் சொல்ல முடியுமா?


கம்யுனிச இயக்கங்களில்/கட்சிகளில் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்கள் பெண்களுக்கு பகிரப்பட்டுள்ளனவா?, எத்தனை பெண் தலைவர்களை கம்யுனிச இயக்கங்களில் நாம் கண்டுள்ளோம்? 


அட போலி கம்யுனிஸ்ட்களை (!?) விடுங்க...தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இயக்கங்களின் தலைமை பொறுப்பை எத்தனை பெண்கள் இதுவரை அலங்கரித்துள்ளனர்? உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என்றால் இதுவரை நாம் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்களில் பெண்களை பார்த்திருக்க வேண்டுமல்லவா? 

Saturday, November 12, 2011

அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைகள்


மானுடத்தின் ரகசியம் நீ!
மலர்ந்த படைப்பின் ஆன்மா நீ!
உயிருடன் இருப்பவன் நீயென்றால்-உன்
உலகை நீயே உருவாக்கு

குருட்டுத் தனமாய்ப் பின்பற்றும்
குணம்தற் கொலையினும் இழிந்ததடா;
வழியை நீயே தேடிச்செல்;
வழிகாட்டியை எதிர் பார்க்காதே!

இலட்சி யத்திற் கப்பால்உன்
இலட்சி யங்கள் விரியட்டும்;
வாழ்க்கை என்பது என்றென்றும்
மாறாப் பயண ஆசையாடா!

இந்த இரவு பகல்களிலே
இறங்கிச் சிக்கிக் கிடக்காதே!
உன்றன் உயர்ந்த இலட்சிய
உலகம் இவற்றிற் கப்பாலே!

படைப்பின் அந்த ரங்கம் நீ
பார்வையில் உன்னை வெளிப்படுத்து!
சுயத்தின் ரகசியம் உணர்ந்துகொள்;
இறைவனின் விளக்க உரையாகு!

நபிகள் நாதர் வாழ்வில்நீ
நடந்தால் நாமே உன்கையில்!
இந்த உலகம் என்ன,விதி
எழுதும் கோலே உன் கையில்!

வாலிப இனத்தின் இதயத்திலே
வல்லூற் றுணர்ச்சி கிளர்ந்துவிட்டால்
அவர்கள் இலட்சியம் இங்கல்ல
அங்கே உயரே வானத்தில்!

உயரப் பறக்கும் பறவையே!
உனது சிறகை முடக்கி விடும்
இரையையைத் தின்று வாழ்வதினும்
இறந்து போவது சிறந்ததடா!

உறுதியான நம்பிக்கை
உலையா முயற்சி பேரன்பு
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
வாகை சூடும் ஆயுதங்கள்!

சுயரத் தத்தின் நெருப்பினிலே
சூடா வதுதான் இளமையாடா!
கடின உழைப்பால் இவ்வாழ்க்கையைக்
கசப்பைத் தேனாய் மாற்றிடடா!


Wednesday, November 9, 2011

சவூதியில் பதிவர்கள் பஸ்ஸர்கள் சந்திப்பு

இனிய மாலைப் பொழுதில் இதமான தென்றல் காற்று வீச (இப்புடியிலாம் பில்டப் கொடுக்காமல்) எளிமையாக எனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி விடுகிறேன் (இங்கே என்ன பேசிக்கிட்டா இருக்கோம்), அதாவது எழுதி விடுகிறேன்.


பதிவுலகப் பழம்பெரும் புலி,  இந்தப் பதிவின் கதாநாயகன் K.V. ராசா அவர்கள்(அவரு தான் அனைவரையும் அழைத்து இருந்தார்) மிகவும் எளிமையான மனிதர் முகம் நோக்கி புகழ வேண்டாம் என்பதற்காக இணையத்தில்.....


பாலராஜன்கீதா என்ற மூத்த பதிவரும்,அல்ஹஸ்ஸா நகரிலிருந்து பதிவர்கள் ஸ்டார்ஜன், சிநேகிதன் அக்பர் மற்றும் அவர்களுடைய ரியாத் வாழ் உறவினர்கள் வந்திருந்தனர். எல்லோருக்கும் முன்பாக 'பஸ்'புகழ் ரோகினி சிவா அவர்களும் வந்திருந்தார்.

வந்திருந்த அனைவரையும் வீடியோவில் பதிந்து விட வேண்டும் என்பதற்காக நண்பர் ராசா கடமையில் கண்ணாக இருக்கிறார்.
பதிவர்கள் பஸ்ஸர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் (அதாங்க, தாடி வைத்திருப்பவன்)
மனம் விட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்த போது (நன்றி நண்பர்களே)
பதிவர்கள் இடமிருந்து வலமாக.ஸ்டார்ஜன்,சிநேகிதன் அக்பர்,ஷாஜஹான்,இப்னு ஹம்துன்,K.V.R ராசா,நான்


பதிவர் ஸ்டார்ஜன் ,சிநேகிதன் அக்பர்,
நடுவில் நான்
நண்பர் இப்னு ஹம்துன்,லக்கி ஷாஜஹான்
நடுவில் நான்
பதிவர் பிளஸ் பஸ்ஸர்கள்.இப்னு ஹம்துன்,
லக்கி ஷாஜஹான்,பாலராஜன் கீதா அவர்கள்

Friday, November 4, 2011

பரிதாபத்துக்குரிய என் சகோதரியே....


பரிதாபத்துக்குரிய என் சகோதரியே
கேமரா கண்களை பார்த்து
வெளிக் கண்கள் சிரித்து
உள் மனதால் அழுது கொண்டிருக்கும்
உன் நிலையை யார் அறிவார்


கந்து வட்டி காரனின்
பச்சையான திட்டுகளிலிருந்து விடுபட
கச்சை கட்டி

கொச்சை மொழி பேசி
எச்சை கல நாய்களின்
இச்சை காசை பெறுகிறாய்
என்பதை யாரறிவார்

பாய்ந்து வரும் காளை
மார்பில் குத்தி விடலாகது
என்பதற்காக ஸ்பாய்னிய கலைஞனின்
ஜிகினா சிவப்பு துணி கை

ஐம்பது ரூபாய் தாளை
மார்பில் காமக்காளை
குத்தி விட வேண்டுமென்பதற்காக
கரகாட்ட கலைஞியின்
ஜிகினா துணி ரவிக்கை
முன்னது உயிர் பிழைப்பிற்காக
பின்னது வயிற்று பிழைப்பிற்காக

மேடையில் பரத நாட்டியம் ஆடும்
மேட்டுக்குடி பெண்களை போன்று
பாத சுவடி வரை இறக்கமான
உடை உடுத்தி ஆடிப்பார்
இறக்கமான உடை
குடிகாரர்களின்
இரக்கத்தை பெற்று தராது
என்ற விடையை அறிவாய்

சுடலை மலை சாமி திருவிழாவுக்கு
விடலை பசங்க வருவது
அரை நிர்வாண உன் உடலை ரசிக்கத்தான்
என்பதை சுடலை சாமியை விட நீ நன்றாக அறிவாயே

உன்னை ஆபாச பண்டமாக்கி
வானி ஒழுக பார்க்கும்
கிழட்டு மிருகங்கள்
காம கிழத்தியாய் உன்னை
பார்த்த பார்வைகள் குருடாகட்டும்
சலங்கைக்கு ஓய்வு கொடு
செருப்புக்கு வேலை கொடு

Tuesday, November 1, 2011

(இப்படியும் ஒரு பொழப்பா) இது இவர்களின் தொழில்..!

அப்பூடியா? உன்மையாகவா? என்ன சொல்றீங்கே? சான்ஸே இல்லை பாஸ் நீங்க சொல்றது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை இப்புடியுமா? பொழைக்கிறார்கள்? என்ற ஆச்சரியம் கலந்த கேள்விகளை நண்பர்கள் அடுக்கினார்கள். வயிற்று பிழைப்பிற்காக சிலர் செய்யும் தொழில்களை சொன்னபோது அவர்களால் நம்பவே முடியவில்லை.
சிறு வயதில் எனக்கு காதர் பாட்ஷா என்ற நண்பன் இருந்தான்.பக்கீர்ஷா
என்ற பிரிவை சேர்ந்தவன் அவனுடைய தந்தை ‘காது குடையும்’ தொழில் செய்பவர் (பகுதி நேரமாக சாம்புரானி புகை போடுவர்) இவனும் அவர் கூடவே திரிவான் இவன் இல்லாமல் அவர் எங்கும் காது குடையும் தொழில் செய்ய போக மாட்டார் இவன் என்னுடைய நண்பன் என்பதால் சிலசமயம் என்னையும் அவர்கள் தொழில் செய்ய போகும் இடத்திற்கு அவன் அழைத்து செல்வான்.

கையில் ஒரு வயர் கூடையில் கொஞ்சம் வென்பஞ்சும், சில காது குடையும் குச்சிகளும், இரண்டு மூன்று பாட்டில்களில் கலர் கலரான திரவங்களும்
இவனின் டவுசர் பாக்கெட்டில் சில பேரீத்த பழங்களும் இருக்கும். ஊரில் பெரும் விவசாய நிலம் வைத்திருக்கும் சில பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்றவுடன் இவர்களுக்காகவே காத்திருந்தது போல் கொள்ள பக்கம் வா என்று சொல்வர்கள் அங்கு கயித்து கட்டிலில் ஒருசாய்ந்து படுத்துக் கொண்டு இவர்களிடம் காதுகளை கொடுப்பார்.

இவனின் தந்தை பஞ்சுகளை குச்சியில் சுத்தி சிவப்பு கலர் திரவத்தில்லேசாக முக்கி காதுகளுக்குள் மெதுவாக விட்டு குடைவார் அந்த காது குடையும் சுகத்தில் கிறங்கி படுத்து கிடக்க மெதுவாக இவர் பேச்சு கொடுப்பார் அய்யா காது குடைந்து ஒரு மாதம் ஆச்சுல்லே பாருங்க நிறைய அழுக்கு சேர்ந்து போச்சு பாருங்க என்று பஞ்சில் வண்டி வண்டியாக அழுக்கை எடுத்து காட்டுவார் அவரும் ஒரக்கண்ணால் பார்த்து விட்டு இவ்வளவு அழுக்க இருக்கு என்று ஆச்சரியமாக பார்ப்பார்.

காது குடையும் வேலை முடிந்தவுடன் கூலியாக மூன்று படி நெல் அளந்து கொடுப்பார் அந்த தானியங்களை வாங்குவதற்காகவே பிரத்யயோகமான பழைய வேட்டியில் செய்யப்பட்ட துணி பை வைத்திருப்பார்கள். இப்படி ஒரு நாளைக்கு நான்கு ஐந்து பேர்களிடம் காது சுத்தம் செய்வார்கள் எல்லோரிடமும் இதே டயலாக்கும் பஞ்சு நிறைய அழுக்கும் எடுப்பார்கள்.

அவர் வைத்திருக்கும் திரவம் அழுக்கை வெளியே எடுத்துக் கொண்டு வந்து விடுகிறது என்று ஆரம்பத்தில் நினைத்தேன் ஆனால் அவர்களின் கேவலமான தொழில் ரகசியத்தை நண்பன் கூட விளையாட்டு தனமாக கூட சென்றதின் மூலம் தெரிந்துக் கொண்டேன். 

ஒருநாள் காது குடையும் போது அந்த ஆண்டை காது குடையும் சுகத்தில் கண்கள் மூடிக்கிடக்க பஞ்சு சுற்றிய குச்சியை இவனின் பக்கம் வைத்தார். இவன் டவுசர் பாக்க்கேட்டில் கையை விட்டு நகக்கண்களில் பேரீச்சம் பழத்தை கிள்ளி எடுத்து அதை பஞ்சில் ஒட்டினால் எனக்கு இவன் டவுசரில் ஏன் பேரீச்சம் பழம் வைத்திருக்கிறான் என்ற ரகசியமும்,காதில் எப்படி வண்டி வண்டியாக அழுக்கு வருகிறது என்ற அவர்களின் பித்தலாட்ட தொழில் ரகசியமும், இவன் இல்லாமல் அவர் ஏன் எங்கும் காது குடைய தனி ஆளாக போவதில்லை என்ற காரணங்களையும் தெரிந்துக் கொண்டேன்.

இன்றும் கூட பல கிராமங்களில் இதுபோன்று தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் வயர் கூடைகளுக்கு பதிலாக லெதர் பேக்கும்.பஞ்சுகுச்சிகளுக்கு மற்றாக பட்ஸ்களும் கூலியாக நெல்லுக்கு பதிலாக காசும். (எதை மாற்றினாலும் பேரீச்ச பழத்தை மாற்றவில்லை அதுதான் அந்த தொழிலுக்கு பொருந்தி வரும்)வாய் நிறைய ஏமாற்று பேச்சுமாக திரிகிறார்கள்.


இவ்வாறு காதில் கண்ட திரவத்தை ஊற்றி காது குடைவது தவறானது என்ற விஷயம் கிராமத்து மக்களுக்கு தெரியாதவரை இவர்களின் பொழப்பு நடக்கும் என்று நினைக்கிறேன். கிராமத்து மக்களை விடுங்கள் படித்த அலுவலகத்தில் வேலை பார்க்கின்றவர்கள் சிலர் பேனாவாலும் பென்சிலாலும் காதுக்குள் விட்டு குடையும் போது இவர்களைவிட அவர்கள் பாதுகாப்பாகத்தான் குடைகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.