Saturday, April 30, 2011

காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்

1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.

ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.

ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்."


ஒருமுறை கலீஃபா உமருல் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சில கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹாத்திப் இப்னு அபீபல் தஆ என்பவரது பணியாள்களாக இருந்தனர்.முசைனா குலத்தைச் சேர்ந்த ஒருவரது ஓட்டகத்தைத் திருடி அறுத்து சாப்பிட்டு விட்டனர் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர்களை விசாரணை செய்தார் உமர்(ரலி) ஐயத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன்பே கலீஃபா அனைவரையும் திரும்ப அழைத்தார்.திருடியதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்து விசாரித்தார். கொடிய வறுமை மற்றும் பட்டினி காரணமாகவே இதனைச் செய்தாக அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அது உண்மைதான் என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்ட கலீஃபா உமர் அவர்களின் முதலாளியான ஹாதிப் இப்னு அபீபல் தஆவை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவரிடம் கூறினார்:

"நீங்கள் இவர்களிடம் கடினமாக வேலை வாங்கியுள்ளீர்கள். ஆனால் வாழ்வதற்குத் தேவையான கூலியை வழங்கவில்லை.அதுதான் இவர்கள் திருடத் தூண்டுகோலாய் அமைந்தது. எனவே இவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனைக்குத் தகுதியானவர் நீங்கள்தாம். நான் உங்கள் மீது பெரும் பாரம் ஒன்றைச் சுமத்தியே தீருவேன்."

உமரூல் ஃபாரூக் 400 திர்ஹம் விலையுள்ள அந்த ஒட்டகத்தின் மதிப்பைவிட இருமடங்கு தொகையை அதன் உரிமையாளருக்குத் தருமாறு ஹாதிப் இப்னு அபீபல் தஆவுக்கு ஆணையிட்டார். திருடிய தொழிலாளிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்து விட்டார்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கலீஃபா உமர் நடைமுறைப்படுத்திய நீதிக்காகத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்தார்; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...?

Friday, April 29, 2011

இஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி? புத்தக அறிமுகம்.


திசை காட்டும் கருவியைக் கையில் வைத்துக் கொண்டு திசையறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஒரு பயணி..!

ஒளி பாய்ச்சும் சுடரைப் பைக்குள் வைத்துக் கொண்டு இருளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஒரு வழிப்போக்கன்...!

இப்படிப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இவர்களுக்கு எப்படி வழிகாட்டுவீர்கள்?

அந்த பணியைத்தான் இந்த நூல் ஆசிரியர் செய்துள்ளார்.

இஸ்ஸாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எதிர்ப்பலைகள் ஆர்ப்பரிக்க என்ன காரணம்?

நாலா புறங்களிலும் அவர்கள் மீது துன்பமும் இழிவும் சூழ்ந்திருப்பது ஏன்?

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிற்போக்குவாதிகள், முரடர்கள், மதவ்வெறியர்கள் என்றெல்லாம் பழி சுமத்தப்பட என்ன காரணம்?

எதிர்ப்பலைகள் ஏற்பட உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், உள்நாட்டளவில் வகுப்புவாத பாசிசமும் மட்டும் தான் காரணமா?

வெளிப்பகையும் வெளிக் காரணமும் தவிர உட்பகையும் உட்காரணமும் எந்த அளவுக்குக் கோலோச்சுகின்றன?

இத்தகைய வினாக்கள் அனைத்தையும் முன்வைத்து -'நோய் நாடி முதல் நாடி..' எனும் அடிப்படையில் முழு சமுதாயத்தையும் ‘ஸ்கேன்’செய்து நோய்க் குறிகளையும் அவற்றுக்கான சிகிச்சைகளையும் அற்புதமாக விளக்கியுள்ளார்
டக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்.

1.இஸ்லாமிய எதிர்ப்பு அலை உருவான விதம்

2.நம்பிகையை இழக்காதே!

3.உணர்ச்சி வசப்படதே!

4.தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம்

5.இதயங்களை வெல்வோம்!

6.அறிவே இன்றைய ஆயுதம்

7.ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்!

8.கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்

9.கொடுத்துப் பெறுங்கள்

10.ஒன்றுபட்டல்...!

11களத்தில் இறங்குவோம்

பதினொன்று தலைப்புகளில் மிக விரிவாக தொகுத்துள்ளார்.

2.நம்பிகையை இழக்காதே! 
என்ற தலைப்பிலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் பலமாக வீசும்போது முஸ்லிம்கள் இரண்டுவிதமான தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்று நம்பிக்கை இழந்து விரக்தி அடைகின்றனர்; அல்லது உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இவை இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி எதிரிகளின் திட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகின்றன.

இஸ்லாத்திற்கு சோதனைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்லவே! ஒவ்வோரு இறைத்தூதரும் சோதனைகளை சந்தித்தே வந்துள்ளனர். ஆது,ஸமூது கூட்டத்தார்,ஃபிரவ்ன், நம்ரூத், ஹாமன், காரூன் ஆகியவர்களின் கொடுமைகளை எதிர்கொண்டுதான் இஸ்லாத்தை இறைத்தூதர்கள் வளர்த்துள்ளனர். மக்கத்து குறைஷியர், மதீனத்து யூதர்கள்,நயவஞ்சகர்கள்,ரோம -பாரசீக சாம்ராஜ்யங்கள், மங்கோலியப் படையேடுப்புகள்,சிலுவை யுத்தங்கள், காலனி ஆதிக்காரர்கள். வல்லரசுகளின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை சமாளித்துதான் இஸ்லாம் வெற்றி பெற்றுள்ளது.

"உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? (அல்குர் ஆன் 2:214)"

உலகில் இஸ்லாம் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் கொள்கைகளும் சோதனைகளை எதிர்கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன.எந்த சோதனைகளும் நெருக்கடிகளும் நிரந்தரமானதல்ல. நமது முயற்சியாலும் இறைவனின் துனையாலும் அவற்றை வெற்றி கொள்ள முடியும். இறைவனின் அருளில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைத்தால் நிலைமைகள் மாறும்.

“அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை;ஊக்கம் குன்றிவிடவில்லை.(அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணித்திடவுமில்லை.நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.”(3:146)

சில வேளைகளில் எதிரிகளின் எதிர்ப்புப் பிரச்சாரமும் இறுதியில் இஸ்லாத்திற்கு சாதகமாக அமைந்து விடுவதுண்டு.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் செல்லுமிடமெல்லாம் அபூலஹபும் உடன் சென்று அவர்களைப் பற்றி பொய்ச் செய்திகளைப் பரப்பியது இஸ்லாம் பற்றிய ஆர்வத்தை மக்களிடையே தூண்டி விட்டு பலர் இஸ்லாத்தில் இணையக் காரணமாக அமைந்தது.

மதீனாவில் இஸ்லாம் பரவ யூதர்களும் ஒரு வகையில் காரணமாக இருந்தனர் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

"ஓர் இறைத்தூதர் வரப்போகிறார். அவரை நாங்கள் ஏற்று அவரின் துணைகொண்டு எங்கள் எதிரிகளை (அவ்ஸ்,கஸ்ரஜ்) வீழ்த்துவோம்" என்று யூதர்கள் அடிக்கடி கூறி வந்தனர். இதனைக் கேட்டுப் பழகிப் போன மதீனத்து மக்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா சென்றபோது நபி (ஸல்) அவர்களைச்  சந்தித்தனர். "ஓர் இறைத்தூதர் வரப்போகிறார் என்று யூதர்கள் கூறிவரும் இறைத்தூதர் இவர்தான் எனவே நாம் முதலில் இவரைப் பின்பற்றி விடுவோம்" எனக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். எனவே மதீனாவில் இஸ்லாத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்களே!

இன்று மேலை நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பப் பட்டு வரும் எதிர்ப்பு அலை இஸ்லாத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டியுள்ளது.குர்ஆனும் இஸ்லாமிய நூல்களும் அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அறிஞர்களைத் தேவாலயங்களுக்கு அழைத்து இஸ்லாமிய உரைகளை நிகழ்த்தச் செய்கின்றனர். அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

"அமெரிக்காவில் அறுபது லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அங்கு ஆண்டுதோறும் 25,000 பேர் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒரு நியுணர் கூறுகின்றார். செப்டம்பர் 11க்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்லதாக சில மற்று மத குருமார்கள் கூறுகின்றர்" (நியூயார்க் டைம்ஸ் 22-10-2001)

எனவே நெருக்கடிகளையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாது துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

7.ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்! 

என்ற அத்தியாத்தில்.
ஊடகத்துறையில் நாம் செய்ய வேண்டியவை என்ற தலைப்பிலிருந்து ஒரு சில வரிகள்.

1. அவதூறுகளைக் களைதல்

ஊடகத்தை அறிந்து கொள்ளுதல்:ஊடகத்தை நடத்துபவர் யார்,அதில் எழுதுபவர்கள் யார்,அவர்களின் சமூக,மத, அரசியல்,சித்தாந்தப் பின்னணிகளையும் அவர்களது முந்தைய எழுத்துகளையும் அறிந்திருந்தால்.

வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்

2.நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும் 

அவதூறுகளுக்கு பதில் கூறுவது,பிறரால் நடத்தப்படும் பத்திரிக்கைகளைச் சார்ந்து நிற்பது என்பன ஒரு நிரந்தரத் தீர்வல்ல.எதுவுமே செய்யாதிருப்பதை விட அதையாவது செய்யலாம் என்ற அளவில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். 
ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு மத,வர்த்தக, அரசியல் பின்னணி இருப்பதால் தங்களின் நலன்களை பாதிக்கும் செய்திகளை அவர்கள் வெளியிட மாட்டார்கள் எனவே கீழ்க்காணும் கூறுகளை உள்ளடக்கிய பத்திரிக்கைகள்,சேனல்கள் ஆகியவை நமக்குத் தேவை.

*  சாதி, மத,இன, மொழி,தேச உணர்வுகளுக்கு அப்பால் நின்று உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும். முஸ்ல்லிம்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் கட்ட வேண்டும்.

* சாதி, மத வட்டார வெறியைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.

* ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ,பலவீனமான மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

* வதந்திகளையும் யூகங்களையும் வெளியிடக் கூடாது. பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவதை விட்டு விட வேண்டும்.

* எல்லா வகையான அநீதிகள், சுரண்டல்கள்,தீமைகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டும்.

* ஆபாசம், மது,சூது, வட்டி,புகை, வன்முறை போன்ற ஒழுக்கச் சிரழிவுகளை ஊக்குவிக்கும் வகையில் செய்திகளோ விளம்பரங்களோ இடம் பெறக் கூடாது.

சுருங்கக் கூறின்,நடுநிலையோடும் நம்பகத்தனமையோடும் எல்லாத் தரப்பினரும் விரும்பக்கூடிய, பார்க்கக்கூடிய தரமான பத்திரிக்கையாக,சேனலாக இருக்க வேண்டும்.இதனைச் செய்ய பொருளாதாரம் ஒரு தடையல்ல.ஆர்வமும் அக்கறையும் துடிப்பும் உள்ளவர்கள் இணைந்து செயலாற்றினால் இது சாத்தியமே.

நூல்
இஸ்லாமிய எதிர்பலைகள்:எதிர்கொள்வது எப்படி...?
ஆசிரியர்
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012

Tuesday, April 26, 2011

ஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.

பயிற்சிக்குள் நுழையும் முன் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன்
இப்பயிற்சியை குறைந்தது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பயிற்சியும் கைகூடும் பலனும் கிடைக்கும்.

வீடியோ பயிற்சியாக சொல்லிக் கொடுப்பதற்கு காரணம் இது போன்ற பயிற்சிகளை ஒரு ஆசிரியர் இல்லாமல் பயிலுவது தவறு. அதனால் விளக்கம் மட்டும் எழுதினால் தவறாக செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற பயத்தினால் முடிந்த வரை சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையினால் தான் வீடியோ பதிவாக இடுகிறேன் மற்றபடி என்னை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் இல்லை.

சரி வாங்க பயிற்சிக்குள் போவோம்


இந்த வீடியோக்களை பாருங்கள்
முதல் நிலை வீடியோ

செய்முறை விளக்கம் முதல் நிலை
முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் விரல்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி வேகமாக அசைக்கவும் பாட்டாம் பூச்சி சிறகுகளை அசைப்பது போல் உள்ள தொற்றம் வருகிற மாதிரி செய்யவும். ஆரம்பத்தில்25 என்னிக்கையில் செய்யலாம்


இரண்டாம் நிலை வீடியோ

இரண்டாவது பயிற்சி செய்முறை விளக்கம்
முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொட முயற்சி செய்யுங்கள் அப்போது கால் இயல்பாக மேலெழும்பும் இப்படியே செய்யவும்.இப்படி ஆரம்பத்தில் 10 முறை செய்யலாம்.
மூன்றாம் நிலை பயிற்சி செய்முறை விளக்கம்
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொடுங்கள்இந்த மூன்றாம் நிலை பயிற்சி செய்வதற்கு முன் முதல்நிலை இரண்டாம் 
நிலை பயிற்சியைக் கொண்டு உங்கள் உடலை தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை போதுமானது.
.

இறுதி நிலைப் பயிற்சி செய்முறை விளக்கம்

முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும். பின்பு, வலது கையால் வலது காலின் உள்ளங்காலையும்,இடது கையால் இடது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திக் கொண்டு, நன்றாக குனிந்து தலையைக் கொண்டு கால் கட்டை விரலைத் தொடவும். இப்படி ஆரம்பத்தில் ஐந்து முறையும் போக போக கூட்டிக் கொண்டே போகலாம்.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்

இது ஒரு யோகா வகை பயிற்சியைச் சார்ந்தது இதை யோகா பயிற்சியாளர்கள் பக்த கோணாசனம் என்பார்கள்.

இப்பயிற்சியினால், சிறுநீரகத்தின் செயற்படு நன்றாக அமையும்.இதனால் சிறுநீரகத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. மூத்திரக் கடுப்பு போன்ற குறைபாடுகளிலிருந்தும் விடுபட இப்பயிற்சி பெரிதும் துணைபுரியும்.

மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும். பிரசவ காலத்தில் சுகப் பிரசவம் ஏற்படவும்,வயிற்றில் கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், கர்ப்பப்பை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவும், பெண்கள் எல்லாருமே இந்த பயிர்சியைச் செய்து பழக வேண்டியது அவசியம்.
சரியாக மர்மஸ்தானத்துக்கு செல்லக்கூடிய நரம்புகளை குறிவைத்து இப்பயிற்சி செய்யப்படுவதால் மர்மஸ்தானம் சம்பந்த நோய்கள் வாரது
இப்பயிற்சி ஆண்மை கோளறுகளை நீக்கி ஆண்மையை அதிகரிக்க செய்யும்.ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டிய மிக முக்கியமான பயிற்சி இது.

இபபதிவில் எதாவது சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

Sunday, April 24, 2011

'கவலைப்படாதே' புத்தக அறிமுகம்.


 அரபு மொழியில் புகழ் பெற்ற எழுத்தாளரான டாக்டர் ஆயிழ் அல்கர்னீயின்
‘லா தஹ்ஸன்’ எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இந்நூல்.ஆயினும் மொழிபெயர்ப்பின் வாடையே இல்லாமல் அழகான தமிழில் வந்திருக்கிறது.

மனித வாழ்க்கையில் ஏற்ப்படுகின்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில்,மிகவும் கவனத்துடன்,படிப்போர் மனதைத் தொடும் வகையில்,சிறந்த முறையில் இந்த நூல் அமைந்துள்ளது.குழப்பம்,தடுமற்றம்,நம்பிக்கையின்மை,பதற்றம்,கவலை,
சோர்வு,துக்கம்,அமைதியின்மை,விரக்தி,ஏமாற்றம்,இழப்பு,தோல்வி ஆகிய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த நூல் அலசுகின்றது.

இனி இந்நூலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு


உழைத்துக் கொண்டே இரு…!

வாழ்க்கையில் வேலயில்லாமல் சும்மா இருப்பவர்கள் தாம் பொய்களையும்,வதந்திகளையும் பரப்புகிறார்கள்.ஏனெனில்,அவர்களது சிந்தனை சிதறிக் கிடக்கிறது.

வேலையில்லாமல் இருப்பவனின் சிந்தனைதான் மிகவும் அபாயகரமானது.
அவனது சிந்தனை ஓட்டுநர் இல்லாமல் பள்ளத்தை நோக்கி வேகமாகச் செல்லும் வாகனத்தைப் போன்றது.அது வலப்பக்கமாகவும் சாயும்.இடப்பக்கமாகவும் சாயும்.

உனது வாழ்க்கையில் வேலை இல்லாத நாளை நீ சந்திக்க நேர்ந்தால் அன்றைய நாளில் கவலை,துக்கம்,துயரம் ஆகியவற்றை எதிர்கொள்ள நீ தயாராக இரு.ஏனெனில்,சோம்பல்,வாழ்க்கையின் இழுப்பறைகளிலிருந்து இறந்தகால,நிகழ்கால,வருங்காலக் கோப்புகளை மெதுவாக இழுத்து உனது சிந்தனைக்குக் கொண்டு வரும்.

அது உன்னைக் குழப்பத்தில் அமிழ்த்தும்.எனவே,எனக்கும் உனக்கும் நான் கூறும் அறிவுரை இதுதான் :வேலையற்று இருப்பதற்குப் பதிலாக,பயன் தரும் வேலைகளில் ஈடுபடு.ஏனெனில்,வேலையில்லாமல் இருப்பது உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமாகப் புதைக்கும் செயல்.மெல்ல மெல்ல சாகடிக்கும் மாத்திரையால் நீ தற்கொலை செய்து கொள்ளும் விபரீதம்.

களைப்பாறுதல் என்பது பிறரது உரிமையைப் புறக்கணித்தலாகும்.சோம்பல். என்பது கைதேர்ந்த திருடன்.இந்த எண்ணப் போர்களில் சின்னாபின்னமாக்கப்பட்டு பலியாகப் போவது உனது அறிவுதான்.
எனவே இப்போதே எழு! தொழு,அல்லதுஓது,அல்லது இறைவனைத் துதி,அல்லது நூல்களைப் படி,அல்லது எழுது,அல்லது உனது அலுவலகத்தை ஒழுங்குபடுத்து,அல்லது வீட்டை அழகுபடுத்து,அல்லது பிறருக்கு உதவு.இப்படி ஏதாவது ஒரு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இரு.

உழைப்பு எனும் கத்தியால் சோம்பலை அறுத்து விடு.நீ இத்தகையப் புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளை நிறைவேற்றினாலே போதும்.உனது வாழ்வில் ஐம்பது சதவீத மகிழ்ச்சி ஏற்பட்டு விடும்.இது உலக மருத்துவர்கள் தரும் உத்தரவாதம்.

சுயசார்பற்று வாழாதே!

பிறரது பண்புகளை உனக்குள் புகுத்தாதே. மற்றவர்களில் நீ மறைந்து போகாதே. இது நிரந்தர வேதனை.பெரும்பாலானோர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே மறந்து விடுகிறார்கள். தங்களது குரல்களை,அசைவுகளை,வார்த்தைகளை,திறமைகளை,நல்ல பண்புகளை மறந்து விடுகிறார்கள்.இறுதியில் தமது இருப்பையும் சுயசார்பையும் இழந்து போலித்தனமாக வாழ்கிறார்கள்;அதனால் அவதியுறுகிறார்கள்.

ஆதி மனிதர் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை,ஒரே வடிவில் இருவர் இருக்க மாட்டார்கள்.பிறகு எப்படி அவர்களது குணங்களும் திறமைகளும் ஒரே மாதிரி இருக்க முடியும்?

நீ மற்றொருவன், உலகில் உன்னைப் போல் வேறு எவரும் பிறந்திருக்க முடியாது.இனி பிறக்கவும் முடியாது.

நீ இவனை விட முற்றிலும் மாறுபட்டவன்.எனவே கண்மூடித்தனமாக இவனைப் பின்பற்ற வேண்டும்,அவனைப் போல வாழ வேண்டும் என உன்னை நீ வற்புறுத்தாதே.

நீ நீயாக வாழு.உனது இயல்பு எதுவோ அதன்படி வாழு.
நீ எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு வாழு.உனது குரலை,பேச்சு நடையை மாற்றாதே.உனது நடை எதுவோ அவ்வாறே நட.அதற்கு மாறு செய்யாதே.வேத அறிவிப்புக்கு ஏற்ப உன்னை நீ செதுக்கு.ஆனால்,உனது இருப்பை வீணாக்கி விடாதே. உனது குணம் என நாங்களும் உன்னைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

உனக்கென ஒரு சுவை உண்டு.உனக்குரிய சுவையை சுவைத்து,நிறத்தை ரசித்து நீ வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.ஏனெனில்,நீ இவ்வாறே படைக்கப் பட்டிருக்கிறாய்.இதுதான் உனது குணம் என நாங்களும் உன்னைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் சுயசார்பற்றவராக இருக்க வேண்டாம்.(நூல்:திர்மிதி)

மனிதர்களின் பண்புகள் மரஞ் செடிகளின் உலகத்திற்கு ஒப்பானது.அவற்றில் சில இனிக்கும்.சில புளிக்கும்.சில உயரமாக இருக்கும்.சில குட்டையாக இருக்கும்.மனிதர்களின் பண்புகளும் இப்படித்தான் அமைந்துள்ளன.எனவே,நீ வாழைப் பழத்தைப் போன்றவனாக இருந்தால்,எட்டிகாயைப் போல மாற நினைக்காதே.

ஏனேனில்,உனது அழகும்,மதிப்பும் நீ வாழைப் பழமாக இருப்பதால் தான் கிடைக்கின்றன.நமது நிறம்,மொழி,திறமை,ஆற்றல் ஆகியவை வேறுபட்டிருப்பது இறைவனது சான்றுகளில் ஒன்று.அவனது சான்றை நீ மறுக்காதே.

நூல்: கவலைப்படாதே
ஆசிரியர்:
டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்
டாக்டர் அ.ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ.,பி.ஹெச்.டி
அரபு மொழி உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை -600012