Sunday, December 30, 2012

இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.

மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? 
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)

Monday, December 10, 2012

கேன்சர் : மருந்து இருந்தால் சொல்லுங்கள்!


சிலருக்கு பெரிய வியாதியாக இருக்கும்; ஆனாலும் மனம் தளராமல் வீரமாக எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்கள். ‘கான்சருடன் போராடி வீர மரணம் எய்தினார்’ என்று ஆபிச்சுவரி கூட வரும். ஆனால் ‘ஸோ அண்ட் ஸோ, பலவீனமாக நோயை எதிர்க்க முயற்சி செய்து பரிதாபமாகச் செத்தார்’ என்று யாரைப் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இவை இரண்டுமே தப்பான பார்வைக் கோணங்கள் என்கிறார், மைக் மார்க்குஸி. (http://www.mikemarqusee.com/?p=870) மைக்கிற்கு, பன்முக மைலோமா(ஒரு வித ரத்தப் புற்று நோய்) பாதித்திருப்பதாக இரண்டு வருடம் முன்னால் கண்டுபிடித்தார்கள்.
கான்சர் போல வியாதி வந்தால் வீர தீரமாக அதை எதிர்த்துப் போர் புரிய வேண்டும். அப்போதுதான் பரணி பாடுவார்கள், பள்ளிப்படைக் கோவில் கட்டுவார்கள். கான்சரை எதிர்க்க முடியவில்லை, வேகமாகப் பரவுகிறது என்றால் நோயாளியிடம்தான் ஏதோ தப்பு இருக்கிறது. மனதில் ‘வில் பவர்’ போதவில்லை என்பார்கள். போரில் தோற்றுப் போய் வில்லைக் கீழே போட்டுவிட்டான் என்பார்கள்.
மொத்தப் பழியையும் பேஷண்ட் மீது போட்டுவிட்டு விலகிக் கொள்ளும் இத்தகைய போக்குகளுக்குப் பின்னால், மேற்கத்திய நாடுகளுக்கே உரிய ‘தான்’ என்ற தனி மனித சுய வழிபாடு இருக்கிறது. வெற்றி-தோல்வி என்று அவர்கள் சுண்டிவிட்ட காசுக்கு இரண்டே பக்கம்தான். ஒவ்வொரு தனி மனிதனின் தகுதிக்கும் ஏற்ப வெற்றியும் தோல்வியும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு, ஏழைகளே காரணம். அதுதான் மார்க்கெட்டின் விதி !
பராக் ஒபாமா, ‘ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தொட்டுவிட்ட கான்சருடன் போராட ஒரு புதிய வியூகம் அமைத்திருக்கிறோம்’ என்கிறார். அவருக்கு முன்னால் நிக்ஸன் ‘இன்னும் பத்து வருடத்தில் கான்சருக்கு ஒரு மருந்து கண்டுபிடித்துவிடுவோம்’ என்றார். அது சொல்லிப் பல பத்து வருடம் ஆயிற்று. ஒபாமா சற்று ஜாக்கிரதையாக ‘நம் வாழ்நாளுக்குள் கான்சரை ஒழிப்போம்’ என்கிறார். நீண்ட ஆயுளுடன் இருக்கப்போகிறோம் என்று யாருக்குத்தான் நம்பிக்கை இல்லை ?
‘கான்சருக்கு எதிரான போர்’ என்பது, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது போல்தான் பயனின்றிக் காற்றில் தோட்டா சுடுவது. முதலில் ஒரு அடிப்படைக் கேள்வி : எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்துச் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலையும் ‘போர்’ என்று உருவகப்படுத்துவது எதனால் ? இது போர் என்றால், எதிரிகள் யார் ? (நல்ல விஷயத்துக்குக் கூட முழு மூச்சாக ‘க்ருஸேட்’ நடத்தும் மேலை நாட்டு சொற் பிரயோகங்களை, ‘ஊர் கூடித் தேர் இழுப்பது’ போன்ற நம் உருவகங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அமைதி விரும்பிகள் ?)
போர் வெறியுடன் ‘புற்று நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கிறோம்’ என்று இறங்குவதில் சற்றே முட்டாள்தனமும், பெரிதே நேர்மைக் குறைவும் தெரிகின்றன. கான்சருக்கு ஒரு தனிப்பட்ட மருந்து அல்லது ஒற்றை சிகிச்சை கண்டுபிடிக்கப்படுவது அவ்வளவு சாத்தியமாகத் தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த கான்சரிலேயே 200 வகைகள் உண்டு. அவற்றின் காரணங்களும் வெவ்வேறானவை.
கான்சருக்கு சஞ்சீவி மலையைக் கொண்டு வருகிறேன் என்று ஒற்றைத் திசையில் உழைப்பையும் பணத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற பல முக்கியமான துறைகள் கவனிக்கப்படாமல் சவலையாகிவிடுகின்றன : வருமுன் காப்பது; விரைவில் கண்டுபிடிப்பது; வந்த பிறகு தரமான சிகிச்சை பரவலாகக் கிடைக்க வழி செய்வது போன்றவையே நம் உடனடித் தேவைகள். இவற்றுக்கு, புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை.
ஆனால், கான்சர் எதிர்ப்புப் பணிகளை, ‘போர்’ என்று வர்ணிப்பதில் பல பேருக்கு சகாயமும் இருக்கிறது, சம்பாத்தியமும் இருக்கிறது.
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
கடந்த 2007-ம் வருடத்தில் பிரிட்டனில் ஆறு சதவீத கான்சர், பணியிடம் சார்ந்து ஏற்பட்டதுதான். இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பிறகு யாரிடம் போய்த் தேர்தல் நிதி வசூல் செய்வதாம் ? எனவேதான் ‘மாமருந்து கண்டுபிடிப்போம்’ என்ற மார்தட்டல்கள்; அவை, உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி !
தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞானமே கான்சரைச் சமாளிப்பதில் கணிசமாக முன்னேறியிருக்கிறது. பிரிட்டனில் கான்சர் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேர் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலும் வாழ்கிறார்கள். ஆச்சரியமான புதிய மருந்துகளை விட, இருக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு சீக்கிரமாகவே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க ஆரம்பிப்பது அவசியம். தரமான சிகிச்சை எல்லோருக்கும் பரவலாகக் கிடைப்பதும் அவசரம். ஆனால் நிலைமை என்ன ?
இங்கிலாந்து-வேல்ஸ் பகுதியில் மட்டும் பெண் கான்சர் நோயாளிகளில் பாதிப் பேருக்குதான் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. அதுவே ஆணாக இருந்தால் முக்கால்வாசிப் பேருக்கு சிகிச்சை கிடைக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் சதவீதக் கணக்கு போட ஆரம்பித்தால், கால்குலேட்டரிலேயே காண்பிக்க முடியாத அளவுக்கு சின்ன எண்ணாகத்தான் இருக்கும். இதையெல்லாம் சரி செய்வதற்கு நம் அமைப்புகளில் மாற்றம் தேவையே தவிர, புதிய மருந்துகள் எதுவும் தேவையில்லை.
நிஜமோ கற்பனையோ, எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் சில பிணக் கழுகுகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. கான்சர் ‘போரிலும்’ அப்படித்தான். கான்சர் நோயாளிகள் வெளி நாட்டுப் பயணம் செல்வதற்கு முன்பு இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முயன்றால் பத்து மடங்கு ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டு ‘கான்சர்தானே ! கவலையே வேண்டாம்’ என்று சுய உதவி நூல்கள் எழுதி சம்பாதிக்கவே ஒரு எழுத்தாளர்-பதிப்பாளர் கூட்டம் இருக்கிறது. மல்ட்டி வைட்டமின் மாத்திரை விற்பவர்கள் முதல் ஆல்டர்னேடிவ் மெடிசின், காந்த சிகிச்சை, சர்வ ரோக நிவாரணக் கற்கள், தலைச்சன் பிள்ளை மண்டை ஒட்டு தாயத்து என்று வித விதமான வியாபாரிகள் செம துட்டு பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடக் கில்லாடிகள் என்று சொல்லத் தக்கவர்கள் பல அல்லோபதி மருந்துக் கம்பெனிகள்தான். மருந்து விலைகள் மட்டுமல்லாது மருந்து ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே இவர்களின் இரும்புப் பிடியில் இறுகியிருக்கின்றன. மற்ற எந்த இண்டஸ்ட்ரியையும் விட மூன்று மடங்கு லாபம். பண வீக்கத்தை விட எப்போதும் ஒரு படி உயரத்திலேயே பயணம் செய்யும் மருந்து விலைகள். கேட்டால் ‘எங்கள் ஆராய்ச்சி செலவுகள் அதிகம்’ என்பார்கள். உண்மை என்னவென்றால் மருந்துக் கம்பெனிகளின் ஆராய்ச்சி வளர்ச்சி செலவுகள், அவர்களுடைய விளம்பரச் செலவு, லாபி செய்வது இவற்றில் பாதிதான். மார்க்கெட்டினால் அதிக பட்சம் எவ்வளவு வலி தாங்க முடியுமோ, அவ்வளவு உயரத்தில் விலையை ஏற்றி வைத்துவிடுகிறார்கள்.
மருந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதில் கூடப் பற்பல வெட்டு, ஒட்டு வேலைகள், ஸ்டாடிஸ்டிக்ஸ் பொய்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ மீடியாவும் கூட்டணி. பாதகமான செய்தியாக இருந்தால் முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளைக் கூட இருட்டடிப்பு செய்துவிடுவது, ஒன்றுமில்லாத விஷயத்தை ‘புரட்சிக் கண்டுபிடிப்பு - இனி நோயாளிகளுக்கு விடிவு காலம்தான்’ என்றெல்லாம் முடி சிலிர்க்கும் கருத்துப் பத்திக் கட்டுரை எழுத வைப்பது என்று அவர்கள் செய்யும் உள் குத்து வேலைகள் ஏராளம்.
கடைசியில், கான்சர் நோயாளிகளுக்கு அடிப்படையான பிரச்னையே அரசாங்கங்கள்தான் என்று தோன்றுகிறது. இன்று உடல் நலப் பாதுகாப்புக்குப் பொது நிதி ஒதுக்கீட்டைப் படிப் படியாகக் குறைத்துக்கொள்ளாத கவர்மெண்ட்டே இல்லை. ஏற்கனவே வேதனையில் குற்றுயிராகக் கிடக்கும் நோயாளிகளைத் தனியார் ஆஸ்பத்திரி - மருந்துக் கம்பெனிகள் முன்னால் ‘இந்தா, சாப்பிடு !’ என்று எலும்புத் துண்டு போல் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே, இந்த வியாதிக்கு ஒரு மருந்து உண்டா ?
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
பின்குறிப்பு: அப்படியே இந்த பதிவையும் படித்துப் பாருங்கள் http://www.islamiyapenmani.com/2012/12/to.html மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்.

Friday, December 7, 2012

18+ எனது மலேசியா சிறை அனுபவம். (மீள்பதிவு)

18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்: 
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு.இங்கே அழுத்துங்கள் மலேசியா கள்ளக் குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்.
மலேசியாவில் சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்.


போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.
                                      சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Sunday, December 2, 2012

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.
கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.
மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.
கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இறுதியாக ஒன்று
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நாம் உடற்பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

1. எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்.

இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் வாழ்த்துகள்.

Friday, November 30, 2012

உடல் எடையை குறைக்க என்ன வழி...?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்(http://well.blogs.nytimes.com/2009/11/04/phys-ed-why-doesnt-exercise-lead-to-weight-loss/).

கையைக் காலை ஆட்டினால் காலரிகள் எரிந்து அதனால் கொழுப்பு குறையும் என்பது உண்மைதான்; சோபாவில் சரிந்து கிடந்து டி.வி பார்ப்பதை விட, எழுந்து நடக்கும்போது அதிக காலரிகள் செலவாவதும் உண்மை. ஆனால் நிமிடத்துக்கு நாலைந்து காலரிகளைத்தான் இப்படி உதிர்க்க முடியும். எண்பத்தைந்து கிலோ மக்களுக்கு இந்த ரேட் போதாது ! உடல் இளைக்க வேண்டுமென்றால், பட்டர் மசாலா கேட்கும் நாக்கைப் பல்லால் கடித்து அடக்க வேண்டும்; பசித்தால் பச்சை முட்டைக்கோஸைத் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால், எடையைக் குறைக்க ஒரே வழி, சற்றேறக் குறைய சாப்பாட்டை நிறுத்துவதுதான் !


கொலராடோ மருத்துவக் கல்லூரியில் செய்த ஓர் ஆராய்ச்சியில் மூன்று விதமான மக்களைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசோதித்தார்கள். முதல் பிரிவினர், காற்றுப் போல் லேசாகக் காணப்பட்ட பந்தய வீரர்கள். இன்னும் சிலர், உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒல்லியான உடல் வாகு கொண்ட அதிர்ஷ்டசாலிகள். கடைசி பிரிவினர் கொழு கொழு குண்டர்கள். எல்லோரையும் மாபெரும் காலரி மீட்டர் அறை ஒன்றில் அடைத்து, மனித உடல் தன் கொழுப்புத் திப்பிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்தார்கள்.
நமக்கு நடமாட சக்தி தருபவை கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இவை இரண்டும்தான். பார்ப்பதற்கு ஓமப் பொடி போல் இருப்பவர்களுக்குக் கூட உடலில் கொழுப்பு செல்கள் ஏராளமாக உண்டு. உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்து சீட்காரர் முறைக்க மாட்டார்.
எக்ஸர்ஸைஸ் செய்யும்போது அந்த நேரத்தில் கொஞ்சம் கொழுப்பு உபயோகிக்கப்படுவது உண்மை. ஆனால் உடற்பயிற்சியை முடித்து தினசரிக் கடமைகளுக்குத் திரும்பின பிறகும், உடல் தொடர்ந்து கொழுப்பை எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்பதுதான் கொலராடோ பரிசோதனையின் நோக்கம். ஃபிட்னஸ் புத்தகங்களில் இதை ஆஃப்டர் பர்ன் என்பார்கள்.
சோதனையில் கலந்து கொண்டவர்களை முதலில் காலரி மீட்டருக்குள் 24 மணி நேரம் புத்தகம் படித்துக்கொண்டு அமைதியாக உட்காரச் சொன்னார்கள். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் தினம் மூன்று வேளை தலப்பாக் கட்டு பிரியாணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே மிதமான வேகத்தில் சைக்கிள் பெடல் போட வைத்தார்கள். உடற்பயிற்சியை மிதமாகச் செய்யும்போதுதான் கொழுப்புகளை உடல் எடுத்துக்கொள்ளும். தலை தெறிக்க ஓடினால் உடனடி சக்தி தேவைப்படுவதால், கார்போ ஹைட்ரேட்களைத்தான் சீக்கிரமாக ரத்தத்தில் அனுப்பி தசைகளுக்கு சக்தி தர முடியும். எக்ஸர்ஸைச் செய்தால் அன்றைக்கு ஆஃப்டர் பர்ன் நிகழ்கிறதா என்று பார்ப்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். கொழுப்பு எரிவதை அளவிடுவதற்கு காலரி மீட்டர்.
கொலராடோ பரிசோதனையில், கலந்துகொண்டவர்கள் யாருக்கும் ஆஃப்டர் பர்ன் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை ! சொல்லப் போனால், ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த அன்றைக்கே அதிகம் கொழுப்பு செலவானதாக சந்தேகம்.
இதன் அடிப்படைச் செய்தி, காலரி சாப்பிட்டால் காலரியை எரித்தே ஆக வேண்டும். அரை மணி நேர உடற்பயிற்சியில் சராசரியாக 200-300 காலரிதான் இழக்க முடியும். டவலால் துடைத்துக்கொண்டு களைப்புத் தீர ஒரு கோக் குடித்தால் அத்தனை காலரியும் திரும்ப வந்துவிடும் !
ஆனால் உடற்பயிற்சியால் பலனே இல்லை என்பதல்ல; கார்டியோ குதிப்புகள் இதயத்துக்கு நல்லது.  எக்ஸர்ஸைஸ் செய்தால் சில பல ஹார்மோன்கள் சுரந்து நம் மூடை உற்சாகமாக்கும். பட்டினியால் குறைத்த எடையை அங்கேயே மெயின்டென்ய்ன் செய்யவும் மிதமான உடற்பயிற்சி உதவும். இதயத் துடிப்பு 105 முதல் 134 வரை இருக்கும்படி செய்யும் எக்ஸர்ஸைஸ்தான் கொழுப்பு கரைக்கும் ரேஞ்ச். ஆனால் மிக முக்கியம், அத்தனை காலரிகளையும் உடனே சாப்பிட்டுத் திரும்ப எடுத்துக் கொண்டுவிடக் கூடாது !
அந்த மசாலா சிப்ஸ் பாக்கெட்டை அப்படியே கொண்டு போய் நாய்க்குப் போடுங்கள்.
பின்குறிப்பு: ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு. பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. கலந்துக் கொள்ளுங்கள் அதனை கான கட்டுரைப் போட்டி இங்கே அழுத்துங்கள்.

Wednesday, November 28, 2012

உங்களுக்கு தெரியுமா சேதி...?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )

Sunday, November 25, 2012

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!

‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?
ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள் ஆச்சரியமானவை. உதாரணமாக, புற்று சேதமடைந்து விட்டாலோ, ஜனத்தொகை பெருத்துவிட்டாலோ வேறு வீடு தேடவேண்டும். இதை எறும்புகள் எப்படிச் செய்கின்றன என்பதில் ஒரு நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.


எறும்புக் கூட்டத்திற்கும் நம் மூளையின் நியூரான் கூட்டத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. ஒரு ஒற்றை நியூரானுக்கு அதிகம் தகவல் நினைவு கிடையாது. ஆனால் நம்முடைய பத்தாயிரம் கோடி நியூரான்களின் தொகுப்புக்கு எத்தனை விஷயம் தெரிந்திருக்கிறது… என்னுடைய ஒரு நியூரானில் ‘சீ’, மற்றொன்றில் ‘னி’, இன்னொன்றில் ‘வா’ என்றெல்லாம் செய்தி பதிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் சீனிவாசன் எனக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்பது மட்டும் மறக்க முடியாமல் நினைவிருக்கிறது.
அதே போல் ஒரு எறும்புக்கு மூளை சின்னதாக இருந்தாலும் எறும்புக் கூட்டத்துக்கு அறிவு அதிகம். ஒவ்வொரு எறும்பும், ஒவ்வொரு நியூரானும் ஒரு தனித்த பிறவி என்றும் சொல்லலாம்; அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என்றும் சொல்லலாம். மத்திய கட்டுப்பாடு இல்லாமலேயே கூட்டாகச் சேர்ந்து அவை எடுக்கும் முடிவுகள், ஒற்றை மனம் எடுத்த முடிவுகள் போல ஒருமித்துத் தெளிவாக இருக்கின்றன.
எனவே, நம் மூளையைப் பற்றின ரகசியங்களை அகழ்ந்தெடுக்க விஞ்ஞானிகள் கைக்கொள்ளும் புதிய கருவி - எறும்புப் புற்று! பிரிட்டனின் பயோ விஞ்ஞானிகளும் கம்ப்யூட்டர் வல்லுனர்களும், இப்போது எறும்புகள், நியூரான்கள் இவை கூட்டாகச் சேர்ந்து எப்படி முடிவெடுக்கின்றன என்பதைத்தான் கூட்டாகச் சேர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதுசாகக் கல்யாணமானவர்கள் மட்டுமில்லாது, எறும்புக் கூட்டமும் தீர்மானிக்க வேண்டிய மிகச் சிக்கலான பிரச்னை, புது வீடு தேடுவது. முதலில் ஒரு ஸ்கவுட் படை போய், புற்று கட்டப் பொருத்தமான இடத்தைத் தேடும். தனித் தனியே அவைகள் கொண்டு வரும் சிபாரிசுகள் சபையில் பரிசீலிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு இடத்திற்கு ஓட்டு கிடைத்தால் அந்த இடம்தான் தேர்ந்தெடுக்கப்படும்.
நமது மூளையின் தனித் தனி நியூரான்கள் சேர்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்பதும் இதைப் போன்றதே. நம் கண் காணும் காட்சியைப் பற்றி மூளை ஒரு தீர்மானத்துக்கு வருவதை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இதை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் ஒரு குரங்கைப் பிடித்து வந்து தாஜா செய்து அதன் விஷுவல் கார்ட்டெக்ஸ் என்ற பார்வை உணரும் பகுதியைக் கவனித்தார்கள். கண் முன்னால் கம்ப்யூட்டர் திரையில் பல புள்ளிகள் பல திசைகளில் அலைந்துகொண்டிருக்கும். அதிக பட்ச புள்ளிகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதைக் குரங்கு சரியாகக் கணித்தால் ஒரு வாழைப்பழம்.
விஷுவல் கார்ட்டெக்ஸில் உள்ள நியூரான்கள் தனித்தனிப் புள்ளிகளைப் பற்றிய தகவல் துணுக்குகளைப் பெறுகின்றன. அதிகமான புள்ளிகளைச் சேகரித்த நியூரான்கள் உற்சாகமாக நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ரசாயன குண்டுகளைச் சுட ஆரம்பிக்கின்றன. சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்ட நியூரான்களின் வேகம் மெல்ல அதிகரித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுடும் ரேட் அதிகரித்தவுடன் குரங்கு ஒரு முடிவுக்கு வருகிறது.
எனவே, முடிவு எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட எறும்புகளோ நியூரான்களோ சம்மதம் தர வேண்டும். இந்த threshold - கடவு ரேகையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். சூழ்நிலையைப் பொருத்து, சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டுமா, அல்லது துல்லியமான முடிவுகள் தேவையா என்பதைப் பொருத்து இந்தக் கடவு ரேகையை முன்னோ பின்னோ தள்ளி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் நாளைக்கு அதே போல் சிந்தித்து முடிவு எடுக்கும் இயந்திரங்களைத் தயாரிக்க முடியும்.
கார்னெல் பல்கலையின் தாமஸ் சீலி, சமுதாயமாகச் சேர்ந்து வாழும் பூச்சியினங்கள் (social insects) என்ற ஐடியாவை மேலும் விரிவு படுத்தி, அரசாங்கங்கள் செயல்படும் விதம் வரையில் கொண்டுபோகலாம் என்கிறார். ‘தேனீக்களின் ஜனநாயகம்’ என்று அவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் அடுத்த வருடம் வெளிவருகிறது.
தேனீக்களிலிருந்து காப்பி அடித்தால் நம்முடைய கூட்டு முடிவுகளும் அரசாங்க நிர்வாகமும் கூட மேம்படும் என்கிறார் சீலி. தேனீயும் எறும்பு போலவே சமுதாயப் பூச்சிதான். பல லட்சம் வருடமாக இந்தப் பூச்சிகள், கூட்டு முடிவுகள் எடுப்பதை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. எனவேதான் இந்தக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டன.
தேனீயுடன் ஒப்பிட்டால் பண்டைய கிரீஸ், ஏதென்ஸ் என்று மனித ஜனநாயகத்துக்கு வெறும் 2500 வயதுதான் சொல்லலாம். இன்னும் நாம் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கத் திணறுவதிலும், மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொள்வதிலும் ஆச்சரியமே இல்லை.
எறும்பும் தேனீயும் நல்ல முடிவுகளை விரைவாக எடுப்பதற்குக் காரணம், அதன் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் மிக எளிமையானவர்கள். பரோபகாரிகள். நம்மைப் போல மறைமுக அஜெண்டா, கோஷ்டிப் பூசல் போன்றவை அவற்றுக்குக் கிடையாது. சுயநலம் இல்லாமல் பொது நலம் எது என்பதை மட்டுமே பார்த்து, சரியான தீர்மானத்தை நோக்கி விரைவில் வந்து குவிந்துவிடும்.  நம் ஜனநாயகத்தில், உடனடிப் பிரச்னைகளில் சிக்கி நீண்ட கால முடிவுகள் தாமதமாகின்றன.
நியூரான்களையும் எறும்புகளையும் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது : தனித்தனியாகப் பார்த்தால் இருப்பதிலேயே புத்திசாலிகளை விட அறிவுத் திறன் அதிகம் கொண்ட குழுக்கள் அமைப்பது எப்படி என்பதுதான் அது.  ஆக, எறும்புப் புற்றைக் கவனித்து அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இரண்டுக்குமே எறும்பு மூளைதான் என்று சொல்ல வருகிறார்களோ ?
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

Saturday, November 24, 2012

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.பாகம் -2அடிப்படை பேச்சு பயிற்சி சம்பந்தமான முதல் பாகத்தை இங்கே அழுத்தி வாசித்து விட்டு தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற தொடரில் ஒரு சிறப்பான பேச்சு எப்படி அமைய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்களை பார்த்தோம். இந்த பகுதியில் நமது சொற்பொழிவில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

“எனக்கு அவ்வளவு சரியாக தெரியாது”
“ நான் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன்”
“ எனக்கு தெரிந்தவரை”
“ நான் இப்படி நம்புகிறேன்”
“ ஒருவரும் இல்லை”
“ எப்போழுதும்”
“ ஒரு பொழுதும் கிடையாது”
“ அனைவரும்”

இது போன்ற யூக அடிப்படையான வார்த்தைகளை தேவைப் படாமல், அவசியமின்றி உபயோகிக்க வேண்டாம்.

சொற்பொழிவுக்கான குறிப்புகளின் அவசியம்

நாம் ஒரு சொற்பொழிவை ஆரம்பிக்கும் முன் அதற்கான குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் எழுதி வைத்திருக்கும் அந்த குறிப்புகளிலிருந்து நாம் பேச்சு திசைமாறி சென்று விடக்கூடாது, நாம் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை விட அந்த சமயத்தில் உதித்த வார்த்தைகள் பயன்படுத்துவதால் நமது சொற்பொழிவு சிறப்பாக போகிறது என்று நாம் நினைத்து கொண்டாலும் சரியே. ஏனேன்றால் குறிப்புகளில் இல்லாதவற்றை பேசும்போது இடையில் தடுமாறும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

நாம் கையில் வைத்திருக்கும் குறிப்புகளை அப்படியே வாசித்து காட்டக்கூடாது அதனை உள்வாங்கி பேச வேண்டும் அதே போல குறிப்புகளை சிலர் மறைக்க முயற்சி செய்வார்கள் அதுவும் தவறு.குறிப்புகளை மறைத்து வைத்து குனிந்து குனிந்து வாசிப்பதை பிறர் தெரியா வண்ணம் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளாதீர்கள் நாம் நிற்பது மேடை பார்வையாளர்களின் கவனம் முழுவதும் உங்கள் மீது தான் இருக்கும். குறிப்புகளை நாம் சிரமம் எடுத்து தயாரித்து இருக்கிறோம் அதை ஏன்? மறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு இருங்கள். பேசும் போது கைகளை எப்படி அசைக்கிறோம் அதிக்கபடியாக அசைக்கிறோமே என்கிற மன எண்ணங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏற்படும் அதை தவிர்க்க குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

ஒப்புவிக்கும் பேசும் நுட்பங்கள் (Delivery Techniques) முக்கியமானவை

சரியான முறையில் ஒப்புவிக்காமல் சின்னபுள்ளைகள் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கிற மாதிரி மூச்சு விடாமல் பேசுவது அழகல்ல மிக சிறந்த குறிப்புகள் கொண்ட பேச்சுகள் இதுபோன்ற தவறான ஒப்புவிக்கும் முறையால் பார்வையாளரின் கவனத்தை பெற முடியாமல் போய்விடும்.

மறுபடியும் நாம் பேசியதை பார்த்து சரிபண்ணிக் கொள்வதற்காக நமது பேச்சை பதிவு செய்து கொள்ளலாம் நமது பேச்சை அசைபோடுவது திரும்ப கேட்பதின் மூலம் நாம் விட்ட குறைகளை அடுத்தமுறை களைய உதவியாக இருக்கும் நமது பேச்சை ஒலியாக பதிந்து கொள்வதின் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது நம் வளர்ச்சியில் அக்கறையுள்ள நண்பர்களிடம் கொடுத்து அந்த பேச்சு எப்படி இருக்கிறது என்பதற்காக சரியான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் மொழி குரல் மற்றும் பார்வை தொடர்புகள் 

உடல் மொழி (Body language)

இராணுவத்தில் ஆள் எடுக்க நிற்பது போல் இல்லாமல் கால்களை ஓட்டி வைத்து அசையாமல் நின்று பேச வேண்டியதில்லை. அதே சமயத்தில் டேபிளில் சாய்ந்து கொண்டும் ஒருசாய்த்து கொணி நின்று கொண்டும் பேசக்கூடாது. இயல்பாக நின்று பேசினால் போதுமானது பேசும்போது முகபாவங்கள் இயல்பாக இருக்க வேண்டும் செயற்கையாக சிரித்தல் அல்லது கோபப்படுவது போல் நடித்தல் இவைகளை தவிர்க்க வேண்டும் அது இயல்பாக பேச்சின் ஓட்டத்தில் வர வேண்டும். பறவை பறக்க ஆரம்பித்த பின் கால்களை மறந்து விடுவது போல் பேச்சில் நாம் இயல்பாக ஒன்றிட வேண்டும்.

பார்வை மூலம் உள்ள தொடர்புகள்

பேச்சின் போது பார்வைகள் மூலம் ஒரு தொடர்பை கேட்பவருக்கும் நமக்கும் இடையே ஏற்ப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் கண்ணியம் பேன வேண்டும் எதிர்ப்பால் பெண்களை குறுகுறுவேன்று பார்த்து விடக்கூடாது அது இயல்பாக இருக்க வேண்டும். ஒருவரை மட்டும் பார்த்து பேசக்கூடாது. ஒருவரை நாம் பார்க்கும் போது அவர் நம்மை பார்த்தால் மற்றவரின் மீது பார்வையை திருப்பி விட வேண்டும். தலைக்கு மேல் ஆகாயத்தை பார்த்து பேசுவது தரையை பார்த்து பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நம்முடைய பேச்சுஒலி மட்டும் வெளியில் பரவினால் போதும் என்கிற மனநிலையோடு பேசக்கூடாது.டி.வி. யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லது பேச்சாளர் நம்மை நோக்கி பேசுவது போல் இருக்கும் அல்லவா அதுபோன்று முயற்சிக்கலாம்.

குரல்


பிறர் கேட்பதற்காகத்தான் பேசுகிறோம் ஒரு சில வார்த்தைகள் வெளியே வந்து மீத வார்த்தைகளை முனுமுனுப்பது போல் மேதுவாக பேசி முழுங்கி விடக்கூடாது. மைக் இல்லையென்றால் அதற்கேற்றவாறு நம் குரல் மட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு கேட்கிற என்பதை ஒரு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


சுருதி

சுருதியை சரி பண்ணுவது அவ்வளவு எளிமையான விடயம் அல்ல சரி செய்வதற்கான முதல் படி சுருதி தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் காண வேண்டும்.அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டிய விடயத்தை அழுத்தி குரல் மட்டத்தை உயர்த்தி பேசக்கூடாது அதே சமயத்தில் கருத்து அழுத்தம் கொடுத்து சொல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் சுருதி மிகவும் குறைந்து விடவும் கூடாது குரல் மட்டம் என்பது நம் சொல்ல வருகின்ற கருத்துக்கு ஏற்றவாறு தேவைபடும்.
நாம்ம்பேசுவதை விட விரைவாக மக்களால் கேட்க முடியும் (சராசரியாக நிமிடத்துக்கு 800 சொற்கள் கேட்கலாம்) ஆனால் 250 சொற்களே பேச முடியும்) அதனால் கேட்பதற்கு ஒன்றுமில்லாமல் நீன்ட நேர இடைவெளி விழுந்தால் கேட்பவரது கவனம் சொற்பொழிவிலிருந்து விலகிச் சென்று ஆட்கள் தான் இங்கு உட்காந்து இருப்பார்கள் மனது வெளியே வேறு சிந்தனையில் இருக்கும்  சாதாரணமாக பேசுவதை விட வேகமாக நாம் பேச வேண்டும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய பேச்சு வேகத்தை நிர்ணயிப்பது கஷ்டம் இருந்தாலும் தெளிவில்லாமலும் உச்சரிப்புச் சொற்களில் தடுமாற்றம் ஏற்படாமல் இயன்றளவு வேகமாக நாம் பேச முயற்சிக்கலாம்.

இடையில் பேச்சை நிறுத்துவது

ஒரு சுவரஸ்யமான விடயத்தை சொல்லும் போது அல்லது சொல்ல வரும்போது இடையில் கொஞ்சம் நிறுத்தி சொல்லும் போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை  ஏற்படுத்தும் முக்கியமான ஒரு விடயத்தை அலசிவிட்டு முடிவு சொல்லும் போதும் சிறிது தாமதித்தும் நிறுத்தி சொல்வது சிறந்த பேச்சுக் கலை.
பேச ஆரம்பிக்க தயக்கம் காட்டுவது போலவே பலர் பேச்சை இறுதியில் எப்படி முடிப்பது என்பதிலும் அதிக தடுமாற்றங்கள் ஏற்பட்டு தயக்கத்தோடு நிறைவு செய்கின்றனர்.


பேச்சு வேகம்

திருத்தமாக பேசுவது சிறந்த சொற்பொழிவுக்கு இதயம் போன்றது ஒவ்வொரு சொல்லும் தெளிவாக உச்சரிக்கப்படுவதுடன் “உம்”  “ஹூம்” “வந்து....”  போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பேச்சை நிறுத்துதல்

சொற்பொழிவை ஆரம்பிக்கும் போது ஏற்படும் தயக்கம் போலவே சொற்பொழிவு முடிவை நெருங்கும் தருணத்தில் எவ்வாறு முடிப்பது என்பதிலும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். “நான் இதுவரை கூறியது என்னவேன்றால்...” என்பது போன்ற வசனங்களை திரும்ப திரும்ப சொல்ல முற்படுவார்கள். எனவே நாம் திட்டமிட்டபடியே பேச்சினை வழங்குவதும் “ இறுதியாக” “முடிவாக...” போன்ற சொற்களை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும் இருக்க முயற்சிக்க வேண்டும். வரையறுக்கப் பட்ட தொடக்கமொன்றையும் முடிவொன்றையும் திட்டமிட்டுக் கொள்வதே இதற்குரிய வழிமுறையாகும். இத்தகைய தொடக்கத்திலும் முடிவிலும் நாடகப்பாணிக்குரிய அம்சம் ஏதும் இருப்பதும் உகந்தது.

(இன்னும் தொடரும்)

Friday, November 23, 2012

உடல் உறுப்புகள் விற்பனைக்கு.


ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.
இந்த திசுப் பொறியியல் என்பது நம் உடலின் செல்கள் அழிந்து போனால் மறுபடி புதுப்பித்து வளர்க்கும் கலை. சேதாரமான உடல் உறுப்புகளை மீண்டும் வளரச் செய்வது உட்பட பலவித சாத்தியங்கள் இதில் உள்ளன. டாரிஸ் டெய்லர் என்பவர் ஒரு எலியின் முழு இதயத்தையே மாவடு போல் ஜாடியில் வைத்து வளர்த்திருக்கிறார்.
எலி இதயத்தோடு டாரிஸ் டெய்லர்
உயிரியல் தவிர எஞ்சினியரிங், மருத்துவம், பொருட்களைப் பற்றிப் படிக்கும் மெட்டீரியல் விஞ்ஞானம், பயோ இன்ஃபர்மாடிக்ஸ் என்ற கணினி வேலை என்று பல துறை வல்லுநர்கள் ஒத்துழைத்து இதை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகள் ஒவ்வொரு தப்படிக்கும் பேடண்ட் வாங்கிப் பூட்டி வைத்து விடாவிட்டால், இந்த இயல் சீக்கிரமே நன்கு வளர்ந்து பெரிய குழந்தையாகிவிடும்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் உடனடிப் பலன் என்ன? உடலில் ஒரு குருத்தெலும்போ, ரத்தக் குழாயோ, மூத்திரப் பையோ சேதமடைந்துவிட்டால் அந்த இடத்தில் புதிய செல்கள் வளர்த்து ரிப்பேர் செய்துவிடலாம். ஆனால் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம், கனம், கடினத் தன்மை கொண்டவை. எனவே திசுக்களை வளர்ப்பது மட்டுமில்லாமல் அவற்றை உயிரியல் லேத் பட்டறையில் கொடுத்து சரியான ஷேப்பில் கடைந்து எடுத்தால்தான் உடலுடன் பொருந்திப் போகும். இங்கேதான் எஞ்சினியரிங் வருகிறது. தேவையான வடிவத்தில் தயாரித்த பாலிமர் வலை, கார்பன் நானோ டியூப்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அதன் மீது செல் வளர்த்து செயற்கை மூக்கு, காது தயாரிக்க முடியும்.
தற்போது ரீஜெனரேட்டிவ் மெடிஸின் என்று மற்றொரு நதியும் வந்து இதில் இணைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் ஆயுதம் ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் என்பவை பச்சைக் களி மண் மாதிரி, ஆதாரமான செல்கள். அவை தேவைக்கேற்றபடி பரிணமித்து இதயம், கிட்னி அல்லது ஈரலாக மாற வல்லவை.
சோதனைச் சாலையில் கண்ணாடித் தட்டில் வைத்து உயிருள்ள செல்களை வளர்க்க முடியும் என்பது, மைக்ராஸ்கோப் கண்டுபிடித்த நாளிலிருந்து தெரிந்த விஷயம்தான். ஆனால் செல்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவது ஒரு சில தடவைகள்தான் நடந்தது. ஹேஃப்ளிக் எல்லை என்பது வரை செல்கள் பிரிந்துவிட்டு அதற்குப் பிறகு சண்டித்தனம் செய்து நின்றுவிடும். க்ரோமசோம்களின் வால் பகுதியில் உள்ள டெலோமியர்கள் படிப்படியாக வெட்டுப்பட்டு சிறுத்துப் போய்விடுவதால் வரும் விளைவு இது. கடைசியாக 1998-ல் ஜெரான் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த டெலோமியர்கள் சேதமாகாமல் செல்லைப் பிரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தார்கள்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் அடிப்படைச் செங்கற்கள், செல்கள். ரத்தம், கொழுப்பு போன்ற திரவப் பொருள்களிலிருந்து பம்ப் வைத்துச் சுழற்றி செல்களைப் பிரித்து எடுத்துவிடலாம். தசை நார்கள் போன்று கெட்டிப்பட்டுவிட்ட பாகங்களிலிருந்து தனிப்பட்ட செங்கல்லை உருவ வேண்டுமென்றால், முதலில் அதை என்ஸைம் வைத்துக் கரைத்து அலச வேண்டும். அதிலிருந்து மாதுளம் பழம் மாதிரி செல்களை உதிர்த்துக்கொள்வார்கள்.
சிவில் எஞ்சினியரிங்கில் ஒரு கான்க்ரீட் கட்டடம் கட்டு முன் தேவையான வடிவத்தில் இரும்புக் கம்பியால் ஃப்ரேம் செய்து கொள்கிறார்களே, அதே பொறியியல் இங்கேயும் தேவை. உதாரணமாக, எலும்புகள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில் இருக்கும். அச்சாக அதே மாதிரி எலும்பு செய்து பொருத்தினால்தான் முழங்கையை மடக்க முடியும்.

இதற்காகக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில், வாயில் பெயர் நுழைய மாட்டாத பேராசிரியை ஒருவர் செயற்கை எலும்புகளை உருவாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அடிப்படையிலிருந்து ஆரம்பித்து தாடை எலும்புகளை உருவாக்கியிருக்கிறார். இதற்கு உதவியது ஸ்டெம் செல்கள்தான். சண்டை போட்டுத் தாடை உடைவதற்கு முன் இருந்த எக்ஸ்ரே படங்களை கம்ப்யூட்டரில் கொடுத்து அதே மாடலில் ஸ்டெம் செல்களை வார்த்து எடுத்தார்கள்.
சி.டி.ஸ்கான் செய்து ஒரு நல்ல டிஜிட்டல் படம் மட்டும் இருந்துவிட்டால் எத்தகைய சிக்கலான ஷேப்பையும் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள். முக்கியமாக, உள் காதின் சின்னஞ் சிறிய சொப்பு போன்ற குருத்தெலும்புகள் செவிச் செல்வத்துக்கு அவசியம். இதற்கு டிஷ்யூ எஞ்சினியரிங்தான் ஒரே நம்பிக்கை.
பயோ ரியாக்டர் என்று இட்லிப் பானை போன்ற பாத்திரம் ஒன்றுக்குள்தான் எல்லாம் வெந்து தயாராகிறது. முதலில் ஒரு துண்டு எலும்பை சுத்தம் செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதைச் செதுக்கி வேண்டிய வடிவத்தில் ஒரு ஃப்ரேம் தயார் செய்துகொள்கிறார்கள். பிறகு சரியான அளவில், வடிவில் இருக்கும் அச்சு ஒன்றுக்குள் அதை இறக்குகிறார்கள். இனி இடைவெளிகளை எல்லாம் செல்களைப் போட்டு நிரப்ப வேண்டும்.
அதற்கு எலும்பு மஜ்ஜை அல்லது தொப்பைக் கொழுப்பிலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட செல்களை உயிரியல் ஃப்ரேமின் மீது படர விடுகிறார்கள். அவை வளர்வதற்கு உரிய ஹார்மோன்கள், ஆக்ஸிஜன், சர்க்கரை மற்ற சத்துப் பொருட்களை வேளா வேளைக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால், செல்கள் நாம் இன்னும் தலைவனின் உடலுக்குள்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இரட்டித்து வளரும். முழுவதும் வளர்ந்தபிறகு ஸ்பேர் பார்ட்டை எடுத்து மனிதனுக்குப் பொருத்த வேண்டியதுதான் பாக்கி.
மிச்சிகனில் மற்றொரு பேராசிரியர் ஹோலிஸ்டர், இட்லிப் பானைக்குப் பதிலாக நம் உடலுக்குள்ளேயே வைத்து செல்களை வளர்க்க முடியுமா என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
மனித உடலிலேயே மிகப் பெரிய பாகம் எது? விடை, நம் தோல்! சிலருக்கு, தீயினாலோ நோயினாலோ தோலின் பெரும் பகுதி சேதாரமாகிவிடுவதுண்டு. முன் காலத்தில் எல்லாம் பேஷண்ட்டை வாழை இலை மீது படுக்க வைத்து மாரியம்மனுக்கு மஞ்சள் காசு முடிந்து வைத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லாமலிருந்தது. இப்போது டிஷ்யூ எஞ்சினியரிங்கில் தோலைத் தனியாக வளர்த்து சீட் கவர் மாதிரி பொருத்தி மூடி விடலாம்.
தோலின் வெளிப் பகுதி மெலனோசைட், லாங்கர்ஹான்ஸ் போன்ற செல்களால் ஆனது. அதற்கு அடியில் கொலாஜன் என்ற நீண்ட இழைகள். (இந்த இழைகளின் அமைப்பைக் கண்டுபிடித்த ராமச்சந்திரன் குழுவினரின் உபயமாக இதற்கு மெட்ராஸ் மாடல் என்று பெயர்!)
செயற்கைத் தோல் வளர்ப்பில் கொலாஜனில் அஸ்திவாரம் போட்டுக்கொண்டு அதன் மேல் தோல் செல்களை விட்டு வளரச் செய்தார்கள். இந்தத் தோல் செல்கள் எடுக்கப்பட்டது, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளின் முக்கியமான பாகத்தின் நுனியிலிருந்து. ஒரு குழந்தையிடமிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்துக்கொண்டு நான்கு ஏக்கர் பரப்பளவுக்குப் புதிய தோல் தயாரிக்க முடியும்! தோலை சேமித்து வைக்கும் முறைகள் இன்னும் செம்மைப் படுத்தப்பட்டால் மீட்டர் கணக்கில் செயற்கைத் தோல் தயாரித்து, கோயம்புத்தூரிலிருந்து பேல் பேலாக ஏற்றுமதி செய்யலாம்.
தற்போது செயற்கையாக வளர்க்கப்பட்ட எலும்புகளை நாய், நரிக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில துணிச்சல் மிக்க மனிதர்களும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசதி எதிர்காலத்தில் பரவலாக எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. ஆபரேஷன் தியேட்டரில் முனியாண்டி விலாஸ் போல “சாருக்கு சூடா ஒரு கிட்னி!” என்று ஆர்டர் கொடுப்பதையும் கேட்கக் கூடும். (அப்புறம் திருட்டு பயமே இருக்காது).
டிஷ்யூவில் காசு இருக்கிறது என்று மோப்பம் பிடித்துவிட்டதால்,  பெய்யெனப் பெய்யும் மழையாய்த் தனியார் முதலீடு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு புதிய கம்பெனி ஆரம்பித்துக் காதும் மூக்கும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ரத்தக் குழாய்களின் உள்ளே இருக்கும் லைனிங்கிற்காக மட்டுமே இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனிகளும் உண்டு. முக எலும்பு, முதுகெலும்புக்காக மற்றொரு கம்பெனி. கல்லீரல், மண்ணீரல் என்றெல்லாம் பெரிய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்