Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, March 30, 2015

மருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்

இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது. என்பது போல்  பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.
ஏன், இதற்கெல்லாம்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி விட்டதே ? ஆம், ஆனால் நாம் அந்த மருந்துகளை எல்லாம் கண் மூடித்தனமாக உபயோகித்துத் தள்ளியதில் எல்லாமே வீரியம் இழந்து நீர்த்துப் போய்விட்டன. பாக்டீரியா கிருமிகள் இப்போது ட்ரக் ரெஸிஸ்டன்ஸ் என்னும் மருந்து எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் வெப் சைட்டுக்குப் போய்ப் பார்த்தால், மருந்துக்குக் கட்டுப்படாத வியாதிகள் பற்றி மானாவாரியாக வெள்ளை அறிக்கைகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.
கனோரியா என்பது, வரக் கூடாத வியாதி. போகக் கூடாத இடங்களுக்குப் போகிறவர்களைப் பீடிக்கும். நேற்று வரை இதை அநாயாசமாகச் சமாளிக்கப் பல மருந்துகள் இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருப்பது ஒரே ஆண்டிபயாடிக். அதுவும் வேகமாகத் தன் வலிமையை இழந்துகொண்டு வருகிறது.
ஆஸ்பத்திரியிலேயே வசித்துக்கொண்டு (என்ன திமிர் !) ஆஸ்பத்திரி மூலமாகவே பரவும் MRSA என்ற கிருமி, ESCAPE என்று சுருக்குப் பெயர் கொண்ட ஆறு கிருமிகளின் கூட்டணி என்று பல கிருமிகளை நாம் ஆண்ட்டி பயாடிக்குகளைக் காட்டிக் காட்டியே வளர்த்துவிட்டோம்.
கிருமி எதிர்ப்பு மருந்துகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும் ? கற்பனை செய்வது கடினமே இல்லை. ஒரு 150 வருடத்துக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம். 14-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் பல முறை சீனாவிலும் ஐரோப்பாவிலும் கறும் சாவு என்ற ப்ளேக் நோய் பரவி, கோடிக் கணக்கில் மரணங்கள். சீனாவின் ஜனத் தொகையில் பாதி, ஐரோப்பிய ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பலி. ஒரு கட்டத்தில் 45 கோடியாக இருந்த உலகத்தின் ஜனத் தொகையே ப்ளேகினால் 36 கோடியாகக் குறைந்துவிட்டது !
இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பெரிய அளவில் தொற்று நோய் வந்துவிட்டால், பணம் பிடுங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் நாலு காலையும் தூக்கி சரணாகதி ஆகிவிடும். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனால் அரசாங்கம் நிலைமையை மேலும் நாசமாக்காமல் இருந்தாலே பெரிய உபகாரம் என்று சொல்லும் அளவுக்குப் பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட ப்ளேக் கலவரத்தைச் சொல்லலாம். ப்ளேக் வந்த பிள்ளை குட்டிகளை பலவந்தமாகப் பிடித்துப் போய்க் கொட்டடியில் அடைத்து, பாதிக்கப்பட்ட வீடுகளை எரித்துத் தள்ளி, கடைகள் தொழிற்சாலைகளை மூடி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது அரசாங்கம். உணவுப் பஞ்சம், மக்கள் கலவரம், ஆர்ச் பிஷப் படுகொலை என்று பற்றி எரிந்தது ரஷ்யா.
நோய்களுக்கு எதிராக நம் ஒரே நம்பிக்கை, கிருமி எதிர்ப்பு மருந்துகள். கடந்த நூறு வருடத்தில் எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடித்து, தொற்று வியாதிகளைத் தோற்று ஓடச் செய்துவிட்டோம். காலரா, டி.பி. உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சுலபமான செலவில்லாத மருந்துகள் இருக்கின்றன…. அதாவது, இருந்தன !
நாம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதால், மேற்படி பாராக்களின் விபரீதங்கள் மறுபடி நேரப் போகின்றன !
சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.
சில வகை சொறி சிரங்குக் கிருமிகள் தங்கள் மேற்பரப்பில், ஆண்டி பயாடிக்குகளைக் கவர்ந்து இழுத்து சிறைப்படுத்த வல்ல ப்ரோட்டின்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன. பெனிசிலின் ஜாதி மருந்துகளில் உள்ள பீடா-லாக்டம் வளையங்களை, கண்ணாடி வளையல் மாதிரி உடைத்து எறிகிற பாக்டீரியாக்களும் உண்டு. இதற்காகவே அவை தனிப்பட்ட என்சைம்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டன. தனக்கு உள்ளே நுழைந்துவிட்ட மருந்தை வாக்குவம் க்ளீனர் வைத்துக்கொண்டு உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கும் பாக்டீரியாவும் உண்டு. இதற்கு இஃப்ளக்ஸ் பம்ப் என்று பெயர்.
உயிர் காக்கும் மருந்துகள் பாக்டீரியாவிடம் புறமுதுகு காட்ட நேர்ந்ததற்கு டாக்டர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என்று எல்லாத் தரப்பினரும் காரணம்.
குறிப்பாக என்ன பாக்டீரியாவினால் வியாதி வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, எம்.பி.பி.எஸ்ஸில் படித்தது அத்தனையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைத்தபோதெல்லாம் சிம்ஸ்-மிம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். குழந்தைகள், கர்பிணிகள் என்று வெவ்வேறு தரப்பினருக்கு இந்த மருந்துதான், இந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும் என்று உப விதிகள் வேறு இருக்கின்றன. ஆனால் பல டாக்டர்கள் பர்ஸை-மன்னிக்கவும் பல்ஸை – பிடித்துப் பார்த்துவிட்டுக் குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஆண்ட்டி பயாடிக்கை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது.
இப்படிச் செய்தால் நோய்க்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்து களத்தில் இறக்கப்பட்டு, தானும் செயல் இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் எத்தைத் தின்றாலாவது பித்தம் தெளிகிறதா என்று பார்க்க, நானாவித மருந்துகளைக் கலந்து போட்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் டாக்டர்களும் சிலர் உண்டு. ‘இந்த வழக்கம் எனக்கில்லை’ என்று அவர்கள் ஸ்டெதஸ்கோப் மீது ஆணையாகச் சொல்லட்டும் ?…
பல கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் வேலைக்கு ஒருவர் சேரும்போதே பைப் ரென்ச் வைத்து மனச்சாட்சியைக் கழற்றிக் கொண்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஸ்கான், எக்ஸ் ரே என்று அப்பாவி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதுடன், அவர்கள் முழ நீளத்துக்கு எழுதிக் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தாலே பலத்த சந்தேகம் தட்டுகிறது: மருந்துக் கம்பெனிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை விசாரணைக் கமிஷன் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் நம்முடைய அத்தனை முட்டாள்தனங்களுக்கும் பாவம், டாக்டர்களையே குறை சொல்வதும் தவறு. நாமும் கள்ளுக் குடித்த குரங்கு போல் தேவையே இல்லாத மருந்து மாத்திரைகளை விழுங்கி நம் உடம்பைப் படாத பாடு படுத்துகிறோம். அன்றைக்கு மருந்துக் கடையில் பத்து வயதே இருக்கும் குழந்தை ஒன்று வந்து “அங்க்கிள் ! ஆம்பிசிலின் கொடுங்க !” என்று கேட்டு வாங்கிச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.
ஒரு முறை ஆண்ட்டி பயாடிக் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், கடைசி வரை சென்று கிருமியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நிறுத்த வேண்டும். அரை குறை வைத்தியம், சுய வைத்தியம் எல்லாம்தான் நமக்கு உடன் பிறப்பு ஆயிற்றே.. டி.பி மாத்திரை முழுங்க முடியாமல் மாடு மாடாக இருக்கிறது என்று பாதியில் கை விட்டுவிட்டால், இருமல் கிருமி உக்கிரமான வடிவில் திரும்பி வந்துவிடும். பல மருந்துகளுக்கு ஒரே நேரத்தில் சவால் விடும் மல்ட்டி ட்ரக் எதிர்ப்பு சக்தியுள்ள MDR பாக்டீரியா வளர்ந்துவிட்டால் பிறகு போக்குவது கடினம்.
அமெரிக்காவில் எம்.டி.ஆர் கிருமியை ‘சூப்பர் பக்’ என்கிறார்கள். (எது எதற்கெல்லாம் சூப்பர் பட்டம் சூட்டுவது என்று விவஸ்தையே இல்லையா ?)
நல்ல பழைய நாட்களில் ஒரு கிராமத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தோன்றினால் அந்த கிராமம் மட்டும்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இப்போது ஜெட் விமானங்களால் உலகமே குக்கிராமம். சூப்பர் கிருமியை நாமே சொகுசாக விமானத்தில் ஏற்றி அவனியெங்கும் பரப்புகிறோம்.
இப்போது ஆடு மாடு கோழி வளர்ப்பதும் மெகா தொழிலாக மாற்றப்பட்டு மாபெரும் பண்ணைகள் வந்துவிட்டன. விஞ்ஞான பூர்வமாக மாடு வளர்க்கிறோம் என்று அவற்றுக்கும் ஏராளமான ஆண்டி பயாடிக்குகளையும் ஆக்ஸிடோசின்களையும் ஊட்டி நாசமாக்கி, கடைசியில் அத்தனை கண்றாவியும் நாம் குடிக்கிற பாலில்தான் வந்து முடிகிறது.
ஒரு சில மருந்துகளை, தொடர்ந்து ஃப்ரிஜ்ஜில் குளிரான சூழ்நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். போலியோ வைரஸ் சொட்டு மருந்துகள் செயல் இழப்பதற்கு நம்ம ஊரின் உலகப் புகழ் பெற்ற பவர்கட்டும் ஒரு காரணம். ஃபாக்டரியில் தொடங்கிக் குழந்தையின் வாய் வரை, மருந்து பயணிக்கும் வழியெங்கும் கோல்ட் செயின் எனப்படும் குளிர் சாதன வசதி தேவை. நாம் அவ்வப்போது இலவச அடுப்பு, இலவச ஆடு என்று பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறோமே தவிர, அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தத் தவறிவிடுகிறோம்.
மருந்துக் கம்பெனிகள் ஒரு காலத்தில் நிறையப் புதுப்புது ஆண்ட்டிபயாடிக்குகளை உருவாக்கின. இப்போது பாக்டீரியா எல்லாம் ஏழை நாடுகளின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு அவர்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று லைஃப் ஸ்டைல் வியாதிகள் பக்கம் கவனத்தைக் குவித்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கு வரும் வியாதிகளில்தான் பணம் இருக்கிறது !
(நன்றி ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள் )

Sunday, July 20, 2014

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்...!

மிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
த்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை  கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
(நன்றி - வினவு )

Friday, November 23, 2012

உடல் உறுப்புகள் விற்பனைக்கு.


ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.
இந்த திசுப் பொறியியல் என்பது நம் உடலின் செல்கள் அழிந்து போனால் மறுபடி புதுப்பித்து வளர்க்கும் கலை. சேதாரமான உடல் உறுப்புகளை மீண்டும் வளரச் செய்வது உட்பட பலவித சாத்தியங்கள் இதில் உள்ளன. டாரிஸ் டெய்லர் என்பவர் ஒரு எலியின் முழு இதயத்தையே மாவடு போல் ஜாடியில் வைத்து வளர்த்திருக்கிறார்.
எலி இதயத்தோடு டாரிஸ் டெய்லர்
உயிரியல் தவிர எஞ்சினியரிங், மருத்துவம், பொருட்களைப் பற்றிப் படிக்கும் மெட்டீரியல் விஞ்ஞானம், பயோ இன்ஃபர்மாடிக்ஸ் என்ற கணினி வேலை என்று பல துறை வல்லுநர்கள் ஒத்துழைத்து இதை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகள் ஒவ்வொரு தப்படிக்கும் பேடண்ட் வாங்கிப் பூட்டி வைத்து விடாவிட்டால், இந்த இயல் சீக்கிரமே நன்கு வளர்ந்து பெரிய குழந்தையாகிவிடும்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் உடனடிப் பலன் என்ன? உடலில் ஒரு குருத்தெலும்போ, ரத்தக் குழாயோ, மூத்திரப் பையோ சேதமடைந்துவிட்டால் அந்த இடத்தில் புதிய செல்கள் வளர்த்து ரிப்பேர் செய்துவிடலாம். ஆனால் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம், கனம், கடினத் தன்மை கொண்டவை. எனவே திசுக்களை வளர்ப்பது மட்டுமில்லாமல் அவற்றை உயிரியல் லேத் பட்டறையில் கொடுத்து சரியான ஷேப்பில் கடைந்து எடுத்தால்தான் உடலுடன் பொருந்திப் போகும். இங்கேதான் எஞ்சினியரிங் வருகிறது. தேவையான வடிவத்தில் தயாரித்த பாலிமர் வலை, கார்பன் நானோ டியூப்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அதன் மீது செல் வளர்த்து செயற்கை மூக்கு, காது தயாரிக்க முடியும்.
தற்போது ரீஜெனரேட்டிவ் மெடிஸின் என்று மற்றொரு நதியும் வந்து இதில் இணைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் ஆயுதம் ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் என்பவை பச்சைக் களி மண் மாதிரி, ஆதாரமான செல்கள். அவை தேவைக்கேற்றபடி பரிணமித்து இதயம், கிட்னி அல்லது ஈரலாக மாற வல்லவை.
சோதனைச் சாலையில் கண்ணாடித் தட்டில் வைத்து உயிருள்ள செல்களை வளர்க்க முடியும் என்பது, மைக்ராஸ்கோப் கண்டுபிடித்த நாளிலிருந்து தெரிந்த விஷயம்தான். ஆனால் செல்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவது ஒரு சில தடவைகள்தான் நடந்தது. ஹேஃப்ளிக் எல்லை என்பது வரை செல்கள் பிரிந்துவிட்டு அதற்குப் பிறகு சண்டித்தனம் செய்து நின்றுவிடும். க்ரோமசோம்களின் வால் பகுதியில் உள்ள டெலோமியர்கள் படிப்படியாக வெட்டுப்பட்டு சிறுத்துப் போய்விடுவதால் வரும் விளைவு இது. கடைசியாக 1998-ல் ஜெரான் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த டெலோமியர்கள் சேதமாகாமல் செல்லைப் பிரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தார்கள்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் அடிப்படைச் செங்கற்கள், செல்கள். ரத்தம், கொழுப்பு போன்ற திரவப் பொருள்களிலிருந்து பம்ப் வைத்துச் சுழற்றி செல்களைப் பிரித்து எடுத்துவிடலாம். தசை நார்கள் போன்று கெட்டிப்பட்டுவிட்ட பாகங்களிலிருந்து தனிப்பட்ட செங்கல்லை உருவ வேண்டுமென்றால், முதலில் அதை என்ஸைம் வைத்துக் கரைத்து அலச வேண்டும். அதிலிருந்து மாதுளம் பழம் மாதிரி செல்களை உதிர்த்துக்கொள்வார்கள்.
சிவில் எஞ்சினியரிங்கில் ஒரு கான்க்ரீட் கட்டடம் கட்டு முன் தேவையான வடிவத்தில் இரும்புக் கம்பியால் ஃப்ரேம் செய்து கொள்கிறார்களே, அதே பொறியியல் இங்கேயும் தேவை. உதாரணமாக, எலும்புகள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில் இருக்கும். அச்சாக அதே மாதிரி எலும்பு செய்து பொருத்தினால்தான் முழங்கையை மடக்க முடியும்.

இதற்காகக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில், வாயில் பெயர் நுழைய மாட்டாத பேராசிரியை ஒருவர் செயற்கை எலும்புகளை உருவாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அடிப்படையிலிருந்து ஆரம்பித்து தாடை எலும்புகளை உருவாக்கியிருக்கிறார். இதற்கு உதவியது ஸ்டெம் செல்கள்தான். சண்டை போட்டுத் தாடை உடைவதற்கு முன் இருந்த எக்ஸ்ரே படங்களை கம்ப்யூட்டரில் கொடுத்து அதே மாடலில் ஸ்டெம் செல்களை வார்த்து எடுத்தார்கள்.
சி.டி.ஸ்கான் செய்து ஒரு நல்ல டிஜிட்டல் படம் மட்டும் இருந்துவிட்டால் எத்தகைய சிக்கலான ஷேப்பையும் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள். முக்கியமாக, உள் காதின் சின்னஞ் சிறிய சொப்பு போன்ற குருத்தெலும்புகள் செவிச் செல்வத்துக்கு அவசியம். இதற்கு டிஷ்யூ எஞ்சினியரிங்தான் ஒரே நம்பிக்கை.
பயோ ரியாக்டர் என்று இட்லிப் பானை போன்ற பாத்திரம் ஒன்றுக்குள்தான் எல்லாம் வெந்து தயாராகிறது. முதலில் ஒரு துண்டு எலும்பை சுத்தம் செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதைச் செதுக்கி வேண்டிய வடிவத்தில் ஒரு ஃப்ரேம் தயார் செய்துகொள்கிறார்கள். பிறகு சரியான அளவில், வடிவில் இருக்கும் அச்சு ஒன்றுக்குள் அதை இறக்குகிறார்கள். இனி இடைவெளிகளை எல்லாம் செல்களைப் போட்டு நிரப்ப வேண்டும்.
அதற்கு எலும்பு மஜ்ஜை அல்லது தொப்பைக் கொழுப்பிலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட செல்களை உயிரியல் ஃப்ரேமின் மீது படர விடுகிறார்கள். அவை வளர்வதற்கு உரிய ஹார்மோன்கள், ஆக்ஸிஜன், சர்க்கரை மற்ற சத்துப் பொருட்களை வேளா வேளைக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால், செல்கள் நாம் இன்னும் தலைவனின் உடலுக்குள்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இரட்டித்து வளரும். முழுவதும் வளர்ந்தபிறகு ஸ்பேர் பார்ட்டை எடுத்து மனிதனுக்குப் பொருத்த வேண்டியதுதான் பாக்கி.
மிச்சிகனில் மற்றொரு பேராசிரியர் ஹோலிஸ்டர், இட்லிப் பானைக்குப் பதிலாக நம் உடலுக்குள்ளேயே வைத்து செல்களை வளர்க்க முடியுமா என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
மனித உடலிலேயே மிகப் பெரிய பாகம் எது? விடை, நம் தோல்! சிலருக்கு, தீயினாலோ நோயினாலோ தோலின் பெரும் பகுதி சேதாரமாகிவிடுவதுண்டு. முன் காலத்தில் எல்லாம் பேஷண்ட்டை வாழை இலை மீது படுக்க வைத்து மாரியம்மனுக்கு மஞ்சள் காசு முடிந்து வைத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லாமலிருந்தது. இப்போது டிஷ்யூ எஞ்சினியரிங்கில் தோலைத் தனியாக வளர்த்து சீட் கவர் மாதிரி பொருத்தி மூடி விடலாம்.
தோலின் வெளிப் பகுதி மெலனோசைட், லாங்கர்ஹான்ஸ் போன்ற செல்களால் ஆனது. அதற்கு அடியில் கொலாஜன் என்ற நீண்ட இழைகள். (இந்த இழைகளின் அமைப்பைக் கண்டுபிடித்த ராமச்சந்திரன் குழுவினரின் உபயமாக இதற்கு மெட்ராஸ் மாடல் என்று பெயர்!)
செயற்கைத் தோல் வளர்ப்பில் கொலாஜனில் அஸ்திவாரம் போட்டுக்கொண்டு அதன் மேல் தோல் செல்களை விட்டு வளரச் செய்தார்கள். இந்தத் தோல் செல்கள் எடுக்கப்பட்டது, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளின் முக்கியமான பாகத்தின் நுனியிலிருந்து. ஒரு குழந்தையிடமிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்துக்கொண்டு நான்கு ஏக்கர் பரப்பளவுக்குப் புதிய தோல் தயாரிக்க முடியும்! தோலை சேமித்து வைக்கும் முறைகள் இன்னும் செம்மைப் படுத்தப்பட்டால் மீட்டர் கணக்கில் செயற்கைத் தோல் தயாரித்து, கோயம்புத்தூரிலிருந்து பேல் பேலாக ஏற்றுமதி செய்யலாம்.
தற்போது செயற்கையாக வளர்க்கப்பட்ட எலும்புகளை நாய், நரிக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில துணிச்சல் மிக்க மனிதர்களும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசதி எதிர்காலத்தில் பரவலாக எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. ஆபரேஷன் தியேட்டரில் முனியாண்டி விலாஸ் போல “சாருக்கு சூடா ஒரு கிட்னி!” என்று ஆர்டர் கொடுப்பதையும் கேட்கக் கூடும். (அப்புறம் திருட்டு பயமே இருக்காது).
டிஷ்யூவில் காசு இருக்கிறது என்று மோப்பம் பிடித்துவிட்டதால்,  பெய்யெனப் பெய்யும் மழையாய்த் தனியார் முதலீடு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு புதிய கம்பெனி ஆரம்பித்துக் காதும் மூக்கும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ரத்தக் குழாய்களின் உள்ளே இருக்கும் லைனிங்கிற்காக மட்டுமே இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனிகளும் உண்டு. முக எலும்பு, முதுகெலும்புக்காக மற்றொரு கம்பெனி. கல்லீரல், மண்ணீரல் என்றெல்லாம் பெரிய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்



Thursday, October 11, 2012

அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

நேற்று பேப்பரில் ஒரு பயங்கரச் செய்தி: நம் கையிலுள்ள மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் அப்பிக் கொண்டிருக்கிறதாம். ஒரு சராசரி மொபைல் போனில் வசிக்கும் கிருமிகளின் எண்ணிக்கை, நம் டாய்லெட் ஸீட்டில் இருப்பதை விட அதிகமாம்! ‘சேச்சே, இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படு பயங்கரச் செய்தி: நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட் ஸீட்டில் இருப்பது போல ஐந்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களால் நாக்கில் எச்சில் தொட்டுப் புத்தகம் புரட்டினால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு க்வெர்ட்டி டம்மி என்று அமெரிக்கத்தனமாக ஒரு பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.
அடுத்ததாக ஏதாவது ஒரு பத்திரிகையில், டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷில் இருப்பதாக எழுதிவிடப் போகிறார்களே என்று கவலையாக இருக்கிறது. அப்படி ஏதாவது செய்தி கண்ணில் பட்டால் உடனே நான் முற்றிலும் நிறுத்திவிடுவேன் - பல் தேய்ப்பதையா, பத்திரிகை படிப்பதையா என்பதை மட்டும்தான் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஏற்கனவே இப்படி ஒரு முற்றுகைச் சூழலில் மனிதன் வசிக்கும்போது, மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு மகா பூச்சாண்டி: குழந்தைகள் பலூன் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், உபரியாக நாலு மிளகாய் பஜ்ஜி தின்றுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை, ஏறக் குறைய நம் தினசரி அலுவல்கள் அனைத்தையும் மனோ வியாதி என்றே அவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்!
.அமெரிக்காவின் பைத்திய வைத்தியர்கள் கழகம் வெளியிடும் DSM எனப்படும் புத்தகம், மன நோய்களைப் பற்றிய பைபிள் என்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது. வியாதிகளின் வர்ணனை, விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் பேஷண்டைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம். இதன் வெளிவர இருக்கும் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றன.
உதாரணமாக, பரீட்சை ஹாலுக்குள் நுழையும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது - இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்!
Temparamental Control Disorder
இந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி உலகத்தில் யாருமே மன ஆரோக்கியத்தோடு இருப்பதாகச் சொல்ல இயலாது. கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் உளவியல் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தித் தள்ளிவிட்டால் அப்புறம் நார்மலான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள். பிறகு அவர்களை வெளியே விட்டுவிட்டு நாம் உள்ளே போய் அடைந்து கொள்ள வேண்டியதுதான்!
ஏதோ புத்தகத்தில்தானே எழுதியிருக்கிறார்கள், எழுதிவிட்டுப் போகட்டுமே என்று இதை விட்டுவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள்தான் எதிர்காலத்து மாஃபியா. ஏனெனில் ஆஸ்பத்திரிச் செலவுகள் எல்லாம் கேத்தன் தேசாய்க்கு மட்டும்தான் இனி கட்டுப்படி ஆகும். இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப் போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ?’ என்று கேட்பார்கள். ஆமாம் என்று சொன்னால் போச்சு - டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்று முத்திரை அடித்து ப்ரீமியத்தை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்கள். தொடர்ந்து இன்ஷ்யூரன்ஸ் குடையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டும். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பது!
இப்படியெல்லாம் பொது அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்பதை ஊகிப்பது எளிது. கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஃபார்மா கம்பெனிகளும் கூட்டுச் சேர்ந்துவிட்டால் தொழிலை விஸ்தரிக்க வேண்டும். அதற்கு, நோய்களை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. பேஷண்ட் வந்தார், மண்டையில் தட்டிப் பார்த்தோம், மருந்து கொடுத்தோம் என்று அனுப்பிவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸுக்காக ஆயிரத்தெட்டு படிவங்களை நிரப்பியாக வேண்டும். படிவத்தில் எழுதுவதற்கு ஒரு வியாதியின் பெயர் வேண்டுமே? அதற்காகத்தான் புதுப் புது வியாதிகளைக் கண்டுபிடித்துப் பெயர் சூட்டு விழா நடத்தியாகிறது.
‘வியாதி’ என்று வகைப்படுத்தினால்தான் நிறைய மருந்து எழுதிக் கொடுக்க முடியும். பிடிப் பிடியாக மாத்திரை எழுதிக் கொடுக்கும் போட்டியில் வென்றால்தான் டாக்டர் அங்க்கிள் குடும்பத்துடன் மொரீஷியஸ் தீவில் விடுமுறை அனுபவிக்க முடியும். விடுமுறையை ஸ்பான்சர் செய்வது யார் என்று சொல்லத் தேவையில்லை. (முன்னொரு காலத்தில் இவர்கள் ஒரு இலவச காம்பிஃப்ளாம் காலண்டர், பேனா ஸ்டாண்டுடன் திருப்தி அடைந்தார்களே?)
சைக்கோஸிஸ் ரிஸ்க் சிண்ட்ரோம் போன்ற பொத்தாம் பொதுவான வில்லைகளை சுலபமாக யார் கழுத்தில் வேண்டுமானாலும் மாட்டிவிடலாம். ஜலதோஷம் வந்தவர்கள் அனைவரையும் ‘நிமோனியாவாக இருக்கலாம், ஆஸ்பத்திரிக்கு வந்து படு’ என்று சொல்வது போலத்தான் இது. இந்த மாதிரி சைக்கியாட்ரிஸ்ட்களிடம் ‘ஏதோ மனது சரியில்லை’ என்று ஆறுதலுக்காக ஒரு முறை போய்விட்டால் போச்சு! உங்களுக்கு ஏதாவது ஒரு வகைப் பைத்தியம் என்று பட்டம் கட்டியே தீருவார்கள். இதெல்லாம் ஒரு முறை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளின் தகவல் தளத்தில் பதிந்துவிட்டால் சுலபத்தில் அதை நீக்க முடியாது. அதை அவர்கள் யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அதன் பிறகு இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதும் கடினம், வேலை கிடைப்பதும் சிக்கலாகிவிடும்.
அதிக வியாதிகள் -> அதிக மருந்துகள் -> அதிக பேடண்ட்டுகள் -> அதிகப் பணம் -> அதிகம் பக்க விளைவுகள் -> இன்னும் அதிக வியாதிகள் என்று சக்கர வட்டமாகத் தன் வாலையே கௌவிக் கொண்டிருக்கும் மலைப் பாம்பு இது.
DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர்.
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது.
அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு.
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.
சீனி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. இல்லத்தரசி ஒருவர் ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.
orthorexia nervosa
உண்மை! விளையாட்டுக்குச் சொல்லவில்லை! இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோய் பீடித்தவர்கள் கடலை எண்ணெய் சொட்டும் பக்கோடா சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிட்ஸா, பர்கர் எல்லாம் தள்ளுபடி. டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போனால் அட்டைப் பெட்டிகளின் மீது கடுகு எழுத்தில் எழுதியிருக்கும் கலோரிகளைப் படித்துப் பார்ப்பார்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்றவற்றைத் தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள்… இதெல்லாம் ஒரு வகை மன வியாதி! ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா!
ம்? அப்படியா? பூச்சி மருந்தில் குளித்த காய்கறிகள், ஜெனடிக் திரிசமன் செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நான் பைத்தியமா? ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நான் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானா?
செயற்கையான ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று இவர்கள் வாதாடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஃபுட் ப்ராஸஸிங் என்பது பல பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி. அதிகம் பதப்படுத்தினால் அதிக மதிப்புக்கூட்டல். எல்லோரும் இயற்கையாக விளைவதைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டால் இடையில் உள்ள பல பேரின் தொழில் படுத்துவிடும்!
இயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் ஜங்க் ஃபுட் தின்று கொண்டு சோபாவில் சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாக இருப்பார்கள். ப்ராய்லர் கோழி மாதிரி கசாப்புக்காகவே வளர்க்கப்படுபவர்கள் இவர்கள்.
மக்கள் சாப்பிடும் பண்டம் அனைத்திலும் அஸ்பர்டேம், யீஸ்ட் நொதிகள், மானோ சோடியம் க்ளூடமேட் போன்ற செயற்கைச் சேர்மானங்களால் நாக்கையும் மனதையும் மரத்துப் போக வைத்துவிட்டால், அவர்கள் கேள்வி கேட்காமல் சொன்ன சொல் கேட்டு நடப்பார்கள். ஷாம்பூ விளம்பரம் முதல் ‘தங்கத் தலைவருக்கே உங்கள் ஓட்டு’ வரை எல்லாவற்றையும் நம்பிப் பின்பற்றுவார்கள். வியாபாரத்துக்கு அதுதான் நல்லது.
யாராவது இதை ஒப்புக் கொள்ள மறுத்தால் எடு, ரப்பர் ஸ்டாம்ப்பை! ஆயிரம் வகைப் பைத்தியங்கள் கைவசம் இருக்கின்றன.
பின்குறிப்பு: ராமன் ராஜா இவர்களின் எழுத்து மிகவும் பிடிக்கும் இவரிடம் நகைச்சுவை பாணியில்  எழுத கற்றுக் கொண்டேன் எனக்கு இவர் ஆசிரியர் அவரை கவுரவப்படுத்தும் விதமாக இக்கட்டுரையை பகிர்கிறேன்.
நன்றி: ராமன் ராஜா
படங்கள் கூகுள்