Tuesday, February 25, 2014

இந்திரா காந்தி கொலையும் உமர் (ரலி) மகனும்...


நீதி என்றால் அது இஸ்லாமிய சட்டம்தான்முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டபோது. அதைத்தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஒரு பெரிய மரம் விழும் போது சில இழப்புகள் ஏற்படுவது இயல்பே’ என்று நியாயப்படுத்தினார் ராஜீவ் காந்தி

அதே போல குஜராத்தில் முஸ்லிம் மீது கொடூரமாக ஏவப்பட்ட தாக்குதல்களை கோத்ரா ரயில் எரிப்புக்கு மக்களின் எதிர்வினை என எளிமைப்படுத்திய நரபலி மோடி போன்ற பாசிஸ ஆட்சியாளர்களின் இலட்சனம் இதுதான்.

ஆனால் ஆட்சியாளர்கள் எப்படி நீதியாக செயல்பட வேண்டும் என்பதை இஸ்லாமிய தூய்மையான ஆட்சியாளர்கள் நிறுபித்த வரலாறுகளை பாருங்கள்.

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் இரண்டாம் கலீஃபா உமர் அவர்களின் மகனுக்கு மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உமர் அவர்களை கொன்றவன் அபுலூலு என்பவன் அபுலூலுவுடைய மகனும் உமர் (ரலி) அவர்களை கொல்ல உடந்தையாக இருந்தான் என்று கருதி உமரின் மகன் அவனைக் கொலை செய்து விட்டார். இதன் காரணமாகவே சட்டத்தை தனிமனிதன் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உமரின் மகனுக்கு இஸ்லாமிய கோர்ட் மரணதண்டனை விதித்தது.

Monday, February 3, 2014

வீடியோ : என்ன கொடுமை இது?


இந்த வீடியோவை பாருங்கள் மனிதர்கள் காலில் மனிதர்கள் விழுவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை இதற்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி பிழைக்கும் மனங்கெட்டவர்கள்.

பிறர் காலில் விழலாமா? விழவும் கூடாது விழவைக்கவும் கூடாது.

"இறைவனுக்கு மட்டுமே (தரையில் நெற்றியை வையுங்கள்) ஸஜ்தா செய்து வணங்குங்கள்"
(அல்குர்ஆன்.53:62)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. காலில் விழுவது மட்டுமல்ல தன் நடந்து வரும்போது எழுந்து நிற்பதை கூட தடுத்தார்கள்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். 

அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

அறியாத சிலர் காலில் விழ முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி:
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். "இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்''என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து "நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். "மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்" என்று கூறினார்கள். 

அறிவிப்பாளர் கைஸ் பின் ஸஅத்ரளியல்லாஹு அன்ஹு 
நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ""எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

Saturday, February 1, 2014

இறைவனிடம் கையேந்துங்கள்:பிரார்த்தனை நூல் வாசிக்க

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது. இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். 

எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர். தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான். எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும் இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம். 

பிரார்த்தனை தான் வணக்கம் 
இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் 
இறைவன் அருகில் இருக்கிறான் 
பிரார்த்தனையின் ஒழுங்குகள் 
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் 
அவசரப்படக் கூடாது 
பாவமானதைக் கேட்கக் கூடாது 
மரணத்தைக் கேட்கக் கூடாது 
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் 
மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது 
வலியுறுத்திக் கேட்க வேண்டும் 
அனைத்தையும் கேட்க வேண்டும் 
இரகசியமாகவும், பணிவாகவும் 
இரவின் கடைசி நேரம் 
ஸஜ்தாவின் போது 
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை 
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ 
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால் 
இறைவனிடம் கையேந்துங்கள்! 

பிரார்த்தனை தான் வணக்கம் 

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ, விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும் அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். 

இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது. 

இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. 

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) 
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364 

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை என்ற பொருள் பட நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

 ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது எனலாம். 

இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்

நம்முடைய இயலாமையை உணர்ந்து நம்மை விட வலிமை மிக்க இறைவனிடம் முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் மனிதர்களில் அதிகம் உள்ளனர். 

தாங்களாகக் கற்பனையாகச் செதுக்கிக் கொண்ட கற்சிலைகளிடம் முறையிடுவோர் உள்ளனர். நம்மை விட கோடானு கோடி மடங்கு தாழ்ந்த நிலையில் தான் அந்தக் கற்சிலைகள் உள்ளன என்பதை அவர்களின் பகுத்தறிவு சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துகின்றனர். 

இறந்தவர்களைப் புதைத்து விட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்திப்பவர்களும் உள்ளனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு அவர் இறந்ததே அசைக்க முடியாத சான்றாக இருந்தும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். 

உயிருடன் வாழும் மகான்கள் எனப்படுவோர் நம்மைப் போலவே உண்பவர்களாக, மலத்தை வயிற்றுக்குள் சுமந்தவராக, நோய், கவலை, முதுமை உள்ளிட்ட எல்லா பலவீனமும் கொண்டவராக இருப்பது பளிச்செனத் தெரிந்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களிடமே பிரார்த்தனை செய்பவர்களையும் நாம் பரவலாகக் காண்கிறோம். 

இன்னும் மிருகங்கள், பறவைகள் மற்றும் அற்பத்திலும் அற்பமான படைப்புகளிடம் பிரார்த்தனை செய்வோரும் மனிதர்களில் உள்ளனர். 

இவை அத்தையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது. 
க நம்மைப் படைத்தவன் க என்றென்றும் உயிரோடிருப்பவன் 
க எந்தத் தேவைகளும் இல்லாதவன் 
க நினைத்ததைச் செய்ய வல்லவன் 
க எந்தப் பலவீனமும் அற்றவன் 

ஆகிய தகுதிகள் ஒருங்கே அமையப் பெற்ற இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன் 7:191-195) 

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 7:197, 198) 

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன் 10:106) 

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 16:20, 21) 

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். 

(அல்குர்ஆன் 22:73) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன் 34:22) 

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. 

(அல்குர்ஆன் 35:13, 14) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர். 

(அல்குர்ஆன் 35:40) 

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 

(அல்குர்ஆன் 40:43) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். 

(அல்குர்ஆன் 46:6) 

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இறைவன் அருகில் இருக்கிறான் சர்வ வல்லமையுடைய இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்கள் கூட தாமாக உருவாக்கிக் கொண்ட இடைத் தரகர்களிடம் பிரார்த்திப்பதைக் காண்கிறோம். 

இறைவன் நம்மை விட்டும் தொலைவில் இருக்கிறான்; நம்மால் நேரடியாக அவனைத் தொடர்பு கொள்ள முடியாது என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். கடவுள் மனிதனை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாக நம்புவது தான் பல தெய்வ வழிபாட்டுக்கும், இறை வழிபாடு புறக்கணிக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம். அந்தக் காரணத்தை களையெடுப்பதற்காகத் தான் நான் அருகிலிருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான். 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!) 

(அல்குர்ஆன் 2:186) 

எந்த அளவுக்கு அருகில் இருக்கிறான்? பத்தடி தூரத்தில் இருக்கிறானா? பார்க்கும் தூரத்தில் இருக்கிறானா? எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறானா? இதைப் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான். மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். 

(அல்குர்ஆன் 50:16) 

ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். 

(அல்குர்ஆன் 56:83, 84, 85) 

கடவுள் தொலைவில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சிலைகளின் முன்னே நிற்பவர்கள், சமாதிகளுக்கு முன்னே மண்டியிடுபவர்கள், சாமியார்களின் கால்களில் விழுபவர்கள் இதை நெருக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவனோ ஒரு மனிதனின் பிடறி நரம்பை விட நெருக்கத்தில் இருக்கிறான். 

ஒரு மகானின் முன்னே ஒருவன் நிற்கிறான். அவர் தனக்கு மிக மிக அருகில் இருப்பதாகவும், கடவுள் அவரை விட தொலைவில் இருப்பதாகவும் எண்ணுகிறான். ஆனால் கண் முன்னே நிற்கும் மகானை விட அந்த மனிதனுக்கு கடவுள், நெருக்கமாக இருக்கிறான். இடைவெளியைக் கற்பனை செய்ய முடியாத நெருக்கத்தில் இருக்கிறான் என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான். 

கடவுள் நெருக்கமாக இருப்பது உண்மை தான். ஆயினும் நாங்கள் அவனிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லையே? அவனது கட்டளைகள் பலவற்றை மீறியுள்ளோமே? நாங்கள் நேரடியாகக் கேட்டால் எங்களை அவன் கோபித்துக் கொள்வானே? அவனது கோபத்தைக் குளிரச் செய்வதற்குத் தான் இடைத் தரகர்களை, சாமியார்களை, ஷைகுமார்களை நாங்கள் நாட வேண்டியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். 

இந்த வாதம் தவறானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் நான் அருகில் இருக்கிறேன், அழைப்பவனின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் எனவும் சேர்த்துச் சொல்கிறான். அழைப்பவன் எவனாயினும் அவனுக்குப் பதிலளிக்கிறேன் என்று பொது அழைப்பு விடுக்கிறான். மகான்கள் மட்டும் நெருங்கும் வகையில் நான் இருக்கவில்லை. சாதாரண மனிதனும் நெருங்கும் வகையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறான். 

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! 

(அல்குர்ஆன் 39:53) 

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 12:87) 

இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எவ்வளவு பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டவனாயினும் அதற்காக இறைவனை விட்டு விலக வேண்டாம்; இறைவன் தர மாட்டான் என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்; எவ்வளவு பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டாலும் அவற்றையும் அல்லாஹ் மன்னிக்கிறான்; அவர்களும் அவனிடத்தில் நேரடியாகக் கேட்கலாம் என்று மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டுகிறான். 

தனக்குத் தகுதியில்லை என்று எண்ணி இறைவனை விடுத்து மற்றவர்களை நாடக் கூடாது எனவும் உணர்த்துகிறான். 

கடவுள் என் மேல் கோபமாக இருக்கிறான்; அதனால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடி ஓடுகிறேன் என்று கூறுவது அறிவுக்கும் ஏற்புடையதாக இல்லை. 

கடவுள் கோபமாக இருக்கிறான் என்பதால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதாகக் கூறினால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்னின்ன மனிதர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று இறைவன் கூறினானா? இதை அவர்கள் சிந்திக்க வேண்டும். 

மனிதர்களைக் குளிரச் செய்வதற்காக அவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அவர்களுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதில் அர்த்தமிருக்கிறது. அவர்கள் பக்குவமாக அவரிடம் கூறி, கோபத்தைத் தணிக்க முயலக் கூடும். மனிதனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக் கூட அறிந்து வைத்திருக்கும் இறைவனுக்கு இத்தகைய இடைத்தரகர்களின் தேவை என்ன? இதைச் சிந்தித்தாலும் இந்தப் போக்கை மக்கள் மாற்றிக் கொள்வார்கள். 

நான் அருகில் இருக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு இறைவன் நிறுத்தவில்லை. எந்த வகையில் அருகில் இருக்கிறேன் என்பதையும் விளக்குகிறான். அழைப்பவரின் அழைப்பை ஏற்பதில் அருகில் இருக்கிறேன்என்று தெளிவுபடுத்துகிறான். பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனுக்கு நமது குரல் எவ்வளவு தெளிவாகச் சென்றடையுமோ அதை விடத் தெளிவாக நமது பிரார்த்தனைகள் அவனைச் சென்றடையும் என்பதே இதன் விளக்கமாகும். 

மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பிர்அவ்னிடம் இறைவன் அனுப்பும் போது, 

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான். 

(அல்குர்ஆன் 20:46) 

என்று சொல்லியனுப்புகிறான். உங்களுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், உங்களுக்கு நடப்பதை நான் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்பது தான். 

நான் அருகில் இருக்கிறேன்; அழைப்பவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று கூறிய பிறகும் அடக்கத்தலங்களில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு, உண்மையை விளக்கும் போதனைகளைப் பல இடங்களில் இறைவன் கூறுகிறான். 

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. 

(அல்குர்ஆன் 30:52) 

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. 

(அல்குர்ஆன் 35:22) 

இறந்தவர்களும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நமக்கு அருகில் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவர்கள் நாம் கூறுவதைச் செவியுற முடியாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். செவியுறவே முடியாதவர்கள் எப்படி பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்பதை, சமாதிகளை வழிபடும் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 

(அல்குர்ஆன் 7:194) 

மிக அருகில் இருந்து கொண்டு அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை விட்டு விட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனங்களில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. 

இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள் கொள்கையாகும். 

பல்வேறு தெய்வங்களை - பெரியார்களை வழிபடக் கூடியவன் கடுமையான, தாங்க முடியாத ஆபத்தைச் சந்திக்கும் போது அவனது வாய்,கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச் சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். கழுத்துக்குச் சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும் எந்தச் சிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான் அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக விளக்குகிறான். 

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். 

(அல்குர்ஆன் 17:67) 

உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். 

(அல்குர்ஆன் 6:40, 41) 

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 10:12) அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். 

(அல்குர்ஆன் 29:65) 

மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள். 

(அல்குர்ஆன் 30:33, 34) 

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன் எனக் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 39:08) 

இறைவன் மிக அருகில் இருப்பதை மனிதனின் உள் மனது ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது. இறைவன் எல்லா மனிதர்களும் நெருங்கக் கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள் க எவர் காலிலும் விழ மாட்டார்கள். 

க காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள். 
க மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள். 
க மதத்தின் பெயராலும், பிள்ளை வரம் என்ற பெயராலும் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள். 
க இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். க எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள். 
க யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். 
க திருட மாட்டார்கள். 
க கொலை செய்ய மாட்டார்கள். 
க பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். 
க லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள். 

இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! 

பிரார்த்தனையின் ஒழுங்குகள் 

இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம். 

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி) நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம் 

எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது. 

அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன? 

ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் 

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 1686 

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். 

அவசரப்படக் கூடாது 

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும். 

நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 6340 

பாவமானதைக் கேட்கக் கூடாது 

பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. 

பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 4918 

மரணத்தைக் கேட்கக் கூடாது 

முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள். 

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) 
நூல்: புகாரி 5671, 6351 

இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுகின்றனர்.   

அல்குர்ஆன் 59:10 

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும். 

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3084 

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள். 

மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது 

பிரார்த்தனை செய்து முடிக்கும் போது, இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால் இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். 

தனது அடிமைத் தனத்தையும், இறைவனின் பேராற்றலையும் உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில் அமைந்த பிரார்த்தனையைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். மற்றவர் பெயரைச் சொல்லி இறைவனை மிரட்டுவது போல் அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்தின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக் கதையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். 

திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. 

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன் 2:37) 

இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். 

(அல்குர்ஆன் 7:23)

 இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திருந்து அறியலாம். 

எனவே அந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும். 

இறைவன் பால் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து, அதனடிப்படையில் இவ்வாறு பிரார்த்திக்கின்றனர். 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். 

(அல்குர்ஆன் 5:35) 

வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாகசாதனமாக உள்ளது என்பர். 

நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவைசாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது. 

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!என்பதன் கருத்தாகும். 

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள். 

வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது. இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். மகான்களும் வஸீலா தேட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருள். 

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள். 

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும். 

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. 

எனவே நல்லறங்கள் எனும் வஸீலா - சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று பொருள் கொண்டால் தான் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட அனைத்து முஃமின்களும் வஸீலா தேட வேண்டும் என்பது பொருந்தும். மகான்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொண்டால் இவ்வசனம் பொருளற்றதாகி விடும். 

வலியுறுத்திக் கேட்க வேண்டும் 

இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது. 

உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: 
புகாரி 6338, 6339, 7464, 7477 

அனைத்தையும் கேட்க வேண்டும் 

சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும். 

திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லாவிட்டால் இறைவனிடம் கேட்பதில்லை. 

தள்ளாத வயதுடையவர்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள். 

ஜக்கரியா நபியவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. 

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்பாக்கியசாலியாக இருந்ததில்லை.

 (அல்குர்ஆன் 19:2, 3, 4) 

சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழிலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை. 

தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம். 

எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை. 

இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல் 

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். 

(அல்குர்ஆன் 7:55) 

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் 

(அல்குர்ஆன் 7:205) 

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன. 

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். 

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும். 

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான். 

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும். 

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். 

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. 

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். 

ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும். 

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இரவின் கடைசி நேரம் 

இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும். 

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494 

ஸஜ்தாவின் போது.. 

அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 744 
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) 
நூல்: முஸ்லிம் 4912 
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ 

தந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. பிள்ளைகள், தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தந்தையரும் தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: 

அபூஹுரைரா (ரலி) 
நூல்: திர்மிதீ 1828 

இது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன. 

பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்... 

நீங்கள் கேளுங்கள், தருகிறேன் என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை. 

இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது. 

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான். 

விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான். 

ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான். 

அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம். 

அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான். 

அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும். 

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள். 

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) 
நூல்: அஹ்மத் 10709 
எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது. 

இந்த ஒழுங்குகளைப் பேணி, இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள் புரிவானாக!


நூலின் பெயர் : இறைவனிடம் கையேந்துங்கள் 

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் 
விலை ரூபாய் : 5.00
pdf பைலாக பதிவிறக்க 
http://www.onlinepj.com/PDF/download.php?file=Iraivnidam-Kaiyenthungal.pdf