Monday, July 20, 2015

Nick Vujicic : (நிக் வ்யூஜெஷிக்) குறையெதுமில்லை...!

"ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா… எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!"

இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை.

1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி… ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடினாள். நர்ஸ்கள் அவளிடம் விஷயத்தைத் தயக்கத்துடன் சொல்ல, கணவர் போரிஸும் கண்ணீருடன் நிற்க, வெடித்து அழ ஆரம்பித்தாள் துஸிகா. நர்ஸ் ஒருத்தி, துணி சுற்றப்பட்ட குழந்தையை துஸிகாவின் அருகில் கொண்டுவந்து வைத்தாள். குழந்தை அழுதது. துஸிகா கதறினாள். ‘வேண்டாம். இவனை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். நான் இவனைப் பார்க்கவே மாட்டேன். 

Tetra-amelia Syndrome -  புரியும்படி சொல்வது என்றால், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தை. சில சமயங்களில் நுரையீரலோ, இதயமோ, வேறு சில பாகங்களோகூட முழு வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். சில கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி அரிதாகப் பிறக்கும். அப்படி பிறந்தவன்தான் நிக். பிறக்கும்போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லை. துஸிகாவும் ஒரு நர்ஸ்தான். 100 பிரசவங்களுக்கு மேல் பார்த்தவர். கர்ப்பத்தின்போது இருமுறை ஸ்கேன் பார்த்தபோதுகூட குறையொன்றும் இல்லை என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள். 

‘பொய் சொல்லிவிட்டார்களோ? குறைகளின் மொத்த உருவமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே. கடவுளே, நாங்கள் செய்த பாவம்தான் என்ன?’ – துஸிகாவும் போரிஸும் சிந்திய கண்ணீருக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. குழந்தை பிறந்தால், தாய்க்குப் பூங்கொத்துகள் குவியும். துஸிகாவுக்கு ஒரு பூங்கொத்துகூட வரவில்லை. குழந்தை, தூக்கத்தில் சிரித்தது. அந்தக் கணத்தில் மனம் சிலிர்க்க, துஸிகா புரிந்துகொண்டாள். எனக்குப் பிறந்திருப்பதே ஒரு பூங்கொத்துதான்.
கைகள், கால்கள் இல்லாதது தவிர, நிக்குக்கு வேறு எந்த உறுப்புகளிலும் பிரச்னை இல்லை. தவிர, இடது கால் மிகச் சிறிய அளவில் துருத்திக்கொண்டிருந்தது. அதில் இரண்டு விரல்கள் ஒன்று சேர்ந்துகிடந்தன. மருத்துவர்கள் அந்த விரல்களை மட்டும் பிரித்துவிட்டார்கள். பிற்காலத்தில் எதற்காவது அந்த இரு விரல்களும் உதவும் எனப் பெற்றோர் நம்பினார்கள். 

ஏதும் அறியாத வயது வரை நிக்குக்கு எதுவும் பிரச்னையாகத் தெரியவில்லை. மூன்று வயதிலேயே ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக்கொண்டு நகர ஆரம்பித்தான். தானியங்கி வீல்சேர் ஒன்றைத் தானாக இயக்கவும் கற்றுக்கொண்டான். இரு விரல்கள் உதவின. ஆனால், வெளி உலகம் தெரியத் தெரிய, அவனுக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க, நிக் விக்கித்து நின்றான். ‘எனக்கு மட்டும் ஏன் கைகள், கால்கள் இல்லை?’ – தங்கள் மகன் அடிக்கடி கேட்க, பெற்றோர் சொன்ன ஒரே பதில், ‘கடவுளிடம் கேள்’!
ஆஸ்திரேலியாவில் உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகள், இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க, சட்டம் அனுமதிக்காது. ஆகவே, நிக்குக்கும் ‘சிறப்புப் பள்ளி’யில்தான் இடம் கிடைத்தது. துஸிகாவுக்கு மனம் உறுத்தியது. உடலில் சில பாகங்கள் குறைவாக இருக்கிறதே தவிர, நிக் மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும்? போராடிப் பார்த்தார். சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நிக் குடும்பத்தினர், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 

அங்கே நிக் இயல்பான பள்ளியில் படிக்கலாம், மருத்துவ வசதிகள் அதிகம், நெருங்கிய உறவினர்களும் இருக்கிறார்கள் என பல காரணங்கள். ஆனால், அமெரிக்கப் பள்ளிச் சூழலில் நிக்கால் ஒன்றவே முடியவில்லை. ஒவ்வொரு பீரியடுக்கும் வேறு வேறு அறைகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இன்னும் பல பிரச்னைகள். நிக், மேலும் சுருங்கிப்போக, பெற்றோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே பெட்டி கட்டினார்கள். இந்த முறை பிரிஸ்பேன்.
1989-ம் ஆண்டு உடல் குறைபாடு உள்ளவர்களும், இயல்பான குழந்தைகளுக்கான பள்ளிகளில் படிக்கலாம் என ஆஸ்திரேலியாவில் சட்டத் திருத்தம் நிறைவேற, அதன்படி அனைவருக்குமான பள்ளியில் நிக் முதல் மாணவனாக அட்மிஷன் பெற்றான். தங்கை வீல்சேரைத் தள்ளிச் செல்ல, நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் செய்தித்தாள்களில் வெளிவர, ஒரே நாளில் பிரபலமும் ஆனான். (1990-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இளம் குடிமகன் விருது கிடைத்தது.) அப்போது நன்கொடைகள் குவிய, அவை நிக்கின் மருத்துவச் செலவுகளுக்கு உதவின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்தார்கள். நிக்குக்குச் சரிப்படவில்லை. ‘நான், நானாகவே இருந்துகொள்கிறேன்’ என்றான்.

ஆனால், சமூகம் அப்படி இருக்கவிடவில்லை. ‘விநோத ஜந்து’போல பார்த்தார்கள் அல்லது பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டினார்கள். எப்போதும் யாருடைய உதவியாவது தேவைப்பட்டது. பள்ளி செல்லப் பிடிக்கவில்லை. ‘பல் துலக்குவது, குளிப்பது, உடை அணிவது… மற்றவர்கள் செய்யும் சாதாரண வேலைகளைக்கூட என்னால் சுயமாகச் செய்ய இயலவில்லை. சாப்பிடுவதுகூட விலங்குகள் போல வாயால் கவ்வி… ச்சே..!’ – நிக் மன அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். ‘இப்படியேதான் வாழ வேண்டுமா? எனக்கு வருங்காலமே கிடையாதா?’ அவநம்பிக்கையும் விரக்தியும் சூழும் கணங்கள் அதிகரித்தன. 10 வயது நிக், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். ‘அதுவாவது என்னால் முடியுமா?’
ஒருநாள் மதிய வேளையில் துஸிகா, நிக்கைக் குளிப்பாட்ட பாத் டப்பில் வைத்தாள். ‘நான் பார்த்துக்கிறேன். வெளியே கதவைச் சாத்திட்டுப் போம்மா’ என்றான். அம்மா நகர்ந்தாள். நிக், தண்ணீர் நிரம்பிய பாத் டப்பினுள் மூழ்கினான். எதிர்மறை எண்ணங்கள் அவனை அழுத்தின. மூச்சை அடக்காமல் நீரைக் குடித்து உயிரைக் கரைக்கும் முயற்சி. கடைசி நொடிகளை எண்ணினான். 10, 9, 8… எதிர்காலமே இல்லாத இந்த வாழ்க்கையை இன்றோடு முடித்துக்கொள்ளலாம். 7, 6, 5… எல்லா வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 4, 3, 2… திடீரென மனக்கண்ணில் ஒரு காட்சி. தந்தையும் தாயும் அவனது கல்லறை முன் நின்று கண்ணீர்விடுவதாக… தம்பியும் தங்கையும் தன் பிரிவால் வாய்விட்டுக் கதறுவதாக. பதறி, திணறி, எகிறி நீருக்கு வெளியே வந்தான். சுவாசம் சீராக, சில நிமிடங்கள் பிடித்தன. கூடவே எண்ணங்களும். குடும்பத்தினர் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படி இவர்களைவிட்டுப் பிரிய நினைத்தேன்? நான் சுயநலவாதி.

அன்று இரவு தன் தம்பி ஆரோனிடம் நிக் சொன்னான்… ‘என் 21 வயதில் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ ஆரோன் புரியாமல் ‘எதற்கு?’ என்றான். ‘அப்போது நான் படித்து முடித்துவிடுவேன். ஆனால், எனக்கு வேலையோ, கேர்ள் ஃப்ரெண்டோ கிடைக்கப்போவது இல்லை. திருமணம் ஆகப்போவதும் இல்லை. அதன்பின் நான் எதற்காக வாழ வேண்டும்?’ ஆரோன், விஷயத்தை தந்தையிடம் சொன்னான். போரிஸ், மயில் இறகு வார்த்தைகளால் நிக்கின் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தார். ‘கடவுள் உன்னை பூமிக்கு இப்படி அனுப்பியிருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. முதலில் அது என்ன எனக் கண்டுபிடி. அதை நிறைவேற்று’ – தந்தையின் வார்த்தைகள் நிக்கை நேர்மறை எண்ணங்களில் நிலைத்து நிற்கச் செய்தன.

தன் உடலில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை என உணர்ந்த நிக், தன் இயல்பை 180 டிகிரி மாற்றினான். குடும்பத்தினரும் நிக்கை ‘சாதாரணமானவனாக’ நடத்த ஆரம்பித்தனர். நிக், தன் தம்பி ஆரோனை அதிகம் வேலை வாங்கும் சமயத்தில் அவன் முறைத்தபடியே, ‘இதுக்கு மேல ஏதாவது வேலை சொன்ன, அந்த டேபிள் டிராயர்ல போட்டு அடைச்சு வெச்சுருவேன்’ என்பான். தங்கை மிச்சேல், ‘பசிக்குது, நிக் உன் குட்டிக்கால் சிக்கன் லெக்பீஸ் மாதிரி இருக்குது. அதையே சாப்பிட்டுரவா?’ என்பாள். 

நிக்கின் உறவுக்காரப் பையன்கள் அவனை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தால், ‘ஆமா, இவன் வேற்றுக்கிரகவாசி. உங்களுக்கு வேணுமா?’ என கலாட்டா செய்வார்கள். இந்தக் கேலிப் பேச்சுகளுக்கு எல்லாம் நிக் வெடித்துச் சிரிப்பான். தன் வாழ்வின் தீராக் கசப்புச் சுவையை, நகைச்சுவையால் எட்டி உதைக்கக் கற்றுக்கொண்டான். மயக்கமா, கலக்கமா என தலைசுற்றிய பொழுதுகளில், உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து மீண்டு வந்தான். உடல் குறைபாடுகளைப் புறம் தள்ளி, சிகரம் தொட்ட முன்னோடிகளின் வாழ்க்கைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.
சக்கி என்பவன், நிக்கின் பள்ளியில் படித்த புஜபல முரட்டு மாணவன். நிக்கிடம் அடிக்கடி  வம்பிழுத்தான். ‘ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?’ என ஒருமுறை அவன் கேட்க, நிக்கும் ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டான். மறுநாள் மதிய இடைவேளையில் மைதானத்தில் மாணவர்கள் குழுமி இருக்க, நிக்கும் சக்கியும் எதிர் எதிரே. நிக்குக்குள் பயம் நிரம்பித் ததும்பியது. ஆசிரியர்கள் யாராவது விஷயம் அறிந்து வந்து சண்டையைத் தடுத்துவிடுவார்கள் என நம்பினான். நடக்கவில்லை. ‘வீல்சேரில் இருந்து இறங்கு’ என்றான் சக்கி. ‘நீயும் முட்டி போட்டுத்தான் மோத வேண்டும்’ என்றான் நிக். சக்கி முட்டி போட்டான். நிக்கை அடித்துப் போட்டான். நிக்குக்கு உடலைப் புரட்டி, முன்நெற்றியை தரையில் பதித்து, அழுத்தி எழுந்து நிற்பதே சிரமமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அடி. நிக், சுருண்டு விழுந்தான். 

‘அய்யோ வேணாம்’ என மாணவிகள் அழ ஆரம்பிக்க, தனக்காக யாரோ சிந்தும் கண்ணீரும், விழுந்த அவமானமும் நிக்கைச் சிலிர்த்தெழச் செய்தன. சிரமப்பட்டு மீண்டும் எழுந்து, தன் உடலைத் தரையில் ஊன்றி, ஓர் ஏவுகணைபோல பாய்ந்து, தன் தலையால் சக்கியின் முகத்தில் கடுமையாக மோதி விழுந்தான். சக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கூட்டம் ஸ்தம்பித்தது. பின் நிக்குக்காக ஆர்ப்பரித்தது. நிக்கோ பதறி, சக்கியிடம் மன்னிப்பு கேட்டான். சக்கி, அங்கே நிற்க முடியாமல் வெளியேறினான். பின் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக!

பயத்தை விழுங்கிவிட்டால் எந்த ஓர் அசாதாரணச் சூழலையும் சமாளிக்கலாம் என நிக்குக்குத் தைரியப் பாடம் கற்றுக்கொடுத்தது காணாமல்போன சக்கியே. அதேபோல லாரா என்கிற பள்ளித்தோழி கேட்ட ஒரு கேள்வி, நிக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. ‘இப்படி எத்தனை காலம்தான் ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்களையே நம்பி இருப்பாய்?’- தோழியின் கேள்வியால் காயப்படாமல் ‘தான் சுதந்திரமாக இயங்கப் பழக வேண்டும்’ என உணர்ந்தான் நிக். பல் துலக்குவதில் இருந்து, குளிப்பது, கழிவறையை உபயோகிப்பது, உடை அணிவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது, இரண்டு விரல்களால் ரிமோட்டை இயக்குவது, கீபோர்டில் டைப் அடிப்பது, குட்டிக் காலை துடுப்பெனச் சுழற்றி நீச்சலடிப்பது என, தினம் தினம் புதிய விஷயங்களை கற்க ஆரம்பித்தான்.
‘அக்கவுன்ட்ஸ் படி. அது உன் வருங்காலத்துக்கு உதவும்’ என்றார் தந்தை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, டிகிரிக்காக நிக் எடுத்த பாடம் அக்கவுன்ட்ஸ் மற்றும் ஃபைனான்ஸ். ஆனால், அவன் மனதில் வேறு ஒரு லட்சியம் வேர்விட்டு இருந்தது. பள்ளியின் வாட்ச்மேனாக இருந்த அர்னால்டு என்பவர், தான் நடத்தும் இளைஞர்களுக்கான கூட்டங்களில் நிக்கைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்தார். ‘என்ன பேச மிஸ்டர் அர்னால்டு?’ ‘உன் சொந்தக் கதையைச் சொல். அதைப் போன்ற தன்னம்பிக்கை தரும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’

நிக் தட்டுத்தடுமாறிப் பேச, கிடைத்த பாராட்டுக்கள் அவனை நிமிர்த்தின. ஒருமுறை பள்ளிக்கு வந்து பேசிய அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ரெக்கி, ‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’ எனச் சொன்னது, நிக்கின் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.

‘சிறுவயதில் அதிசயங்கள் நிகழாதா எனக் காத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது. நானே ஓர் அதிசயம்தான். இத்தனை குறைகள் கொண்ட இவனே இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக வாழ முடிகிறது என்றால், உனக்கு என்ன குறைச்சல் என, உலகத்துக்குப் புரியவைக்கத்தான் கடவுள் என்னை இப்படி அனுப்பியிருக்கிறார். என்னையே உதாரணமாக்கி, என் பேச்சால் எத்தனையோ பேருக்கு ‘நம்பிக்கை ஆக்ஸிஜன்’ ஏற்ற முடியும்’. நிக், ‘தன்னம்பிக்கைப் பேச்சாளராக’ தன் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடிவெடுத்தான்.


வார இறுதிகளில் சர்ச்களில் பிரசங்கம் செய்ய வாய்ப்பு அமைந்தது. ஆனால், தன்னை வெறும் மதபோதகராக அடையாளப்படுத்திக்கொள்ள நிக் விரும்பவில்லை. தன் 17-வது வயதில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் நோக்கம் பள்ளிகளில், கல்லூரிகளில், நிறுவனங்களில், வேறு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சென்று நம்பிக்கை உரையாற்றுவது. நிறுவனத்தின் பெயர் 
Life without Limbs.  பள்ளிகளில் பேச அமைந்த ஆரம்ப வாய்ப்புகள் சொதப்பலாக முடிந்தன. பயத்தில், தொண்டை வறண்டு, வார்த்தைகள் வற்றிப்போயின. பெரிய கூட்டத்தைப் பார்த்தாலே, வியர்த்தது; குரலிலும் நடுக்கம்.


ஆனால், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என நிக், ரிவர்ஸ் கியர் தட்டவில்லை. கூட்டங்களின் மத்தியில் ஆங்காங்கே தன் நண்பர்களை உட்காரவைத்தார். அவர்களை மட்டும் பார்த்து நம்பிக்கையுடன் பேசினார். கடுமையான பயிற்சியால் வார்த்தைகளின் நெசவில் மேடைகள் வசமாயின. இருந்தாலும் ஒவ்வொரு மேடையிலும் ஆரம்ப நொடிகளில் பயம் கவ்வியது. முந்தைய பேச்சுக்குக் கிடைத்த கைத்தட்டல்களை நினைத்துக்கொண்டார். பயப்புயல் வலுவிழக்க, சொற்களால் இதயங்களைச் சூறையாட ஆரம்பித்தார்.

டென்த் கிரேடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ஒரு வாய்ப்பு. நிக், அங்கு இருந்த மேஜை மேல் நின்று பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே மாணவிகள் விசும்ப ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கண்ணீரை மறைக்கத் தலைகுனிந்தனர். ‘எல்லோருமே அழகானவர்களே. நான்கூட’ என நிக் சொன்ன நொடியில், ஒரு மாணவி கண்ணீருடன் ஓடிவந்து நிக்கை அணைத்துக்கொண்டாள். ‘நான்கூட அழகுதான் எனப் புரியவைத்ததற்கு நன்றி’ என அவள் நிக் காதில் கிசுகிசுத்தாள். நிக் தன் தோற்றத்தின் வலிமையை, தன் பேச்சின் வீரியத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்ட நொடி அது.
டீன் ஏஜ் மாணவர்களின் பிரச்னைகளை முற்றிலுமாகப் புரிந்துவைத்திருந்த நிக், ஆஸ்திரேலியாவில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார். அந்த 0.99 மீட்டர் உயரம் உள்ள மனிதனைப் பார்த்ததுமே கூட்டம் உறைந்துபோகும். நிக், ‘யாராவது என்னுடன் கைகுலுக்க வருகிறீர்களா?’ எனச் சட்டெனச் சிரித்தபடியே கேட்டு, பார்வையாளர்களை இயல்பாக்குவார். அதற்குப் பின் தன் கடினமான வாழ்க்கையில் இருந்து தேவையான விஷயங்களை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கூட்டம் நெக்குருகிப்போகும். அரங்கில் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக நம்பிக்கை நிறையும். இறுதியில் கண்ணீர் நிறைந்த தழுவல்கள். 2005-ம் ஆண்டு Young Australian of the Year  விருதுக்கு நிக் பரிந்துரைக்கப்பட்டார். விருது கிட்டவில்லை. ஆனால், வெளிநாட்டில் பேசும் வாய்ப்புகள் கிட்ட ஆரம்பித்தன.
உலகம் சுற்ற ஆரம்பித்தார் நிக். ஆரம்பத்தில் அதற்கும் பணத்தட்டுப்பாடு. ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை. அப்போது நிக் நடித்த ஒரு குறும்படமும் 
(The Butterfly Circus,  சர்வதேச விருதுகளும், நிக்குக்கு சிறந்த நடிகர் விருதும் பெற்றுத் தந்தது. படத்தைக் காண: www.youtube.com/watch?v=p98KAEif3bI) , நிக் பற்றி எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படமும் உலகை ஈர்த்தது.

நிக்குக்கு எட்டுத் திசைகளில் இருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு – தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்குச் சென்று பேசினார். பேச்சின் நடுவே, ‘தோல்விகளில் இருந்து மீண்டு எழுவது எப்படி எனச் சொல்கிறேன்’ என அப்படியே கீழே விழுவார். கூட்டம் பதறும். தன் முன் நெற்றியால் உந்தித் தள்ளி மிகவும் பிரயத்தனப்பட்டு எழுவார். 
அரங்கம் சிலிர்க்கும். வெறும் பணத்துக்காக உலகம் சுற்றாமல், தென் அமெரிக்காவின் வறுமையும் வன்முறையும் பீடித்த பகுதிகள், கொடும் சிறைகள், சீனாவின் ஆதரவற்றோர் இல்லங்கள், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி, வேறு பல நாடுகளின் சேரிகள், இயற்கைச் சீரழிவு நிகழ்ந்த பகுதிகள், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்… என தேடித் தேடிச் சென்று, தன்னம்பிக்கை விதைக்கிறார் நிக். முதல்முறை தென் ஆப்பிரிக்கா சென்றபோது தன் சேமிப்பில் இருந்த 20 ஆயிரம் டாலரை அப்படியே கொடுத்துவிட்டுத் திரும்பினார். இன்னும் பல நல்ல காரியங்களைச் சத்தம் இல்லாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
2011-ம் ஆண்டு World Economic Forum சிறப்பு அழைப்பாளராகப் பேசினார் நிக். இன்னும் பல சர்வதேச மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று உலகில் Tetra-amelia  சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களில் டாப்மோஸ்ட் தன்னம்பிக்கைப் பேச்சாளர் நிக். உலகம் எங்கும் தன்னம்பிக்கை நிறைந்த, வலுவான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நிக்கின் நிரந்தரக் குறிக்கோள். இன்று உலகமே அதிசயித்துப் பார்க்கும் மனிதராக ஜொலிக்கும் நிக், ‘கடவுள் அதிசயம் நிகழ்த்துவார்’ என்ற தனது நம்பிக்கையையும் கைவிடவில்லை. ‘ஆம், நிச்சயம் அதுவும் நடக்கும். எனக்கும் கால்கள் முளைக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஒரு ஜோடி ஷூ வாங்கி அலமாரியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்’!
‘வாழ்க்கையில் எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அமையவே அமையாது’ என்ற கவலைதான், சிறுவயதில் நிக் தற்கொலை முயற்சி செய்ய முக்கியக் காரணம். 2010-ம் ஆண்டு டெக்ஸாஸின் ஓர் இடத்தில் உரையாற்றியபோது அவளைப் பார்த்தார் நிக். கண்டதும் காதல். அன்று மேடையில் வார்த்தைகள் தடுமாறின. அந்தப் பெண்ணின் பெயர் கேனே. அவளை எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் எனத் தோன்றியது. 
மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வலிய ஏற்படுத்தினார். நேசம் வளர்ந்தது. கொஞ்சம் டேட்டிங். ஒருநாள் கடலின் நடுவில் படகின் முகப்பில் ‘டைட்டானிக்’ ஜாக்கும் ரோஸுமாகத் தழுவி நின்றார்கள். அந்தப் பொழுதில் தன் காதலைச் சொல்லி, வாயால் மோதிரமும் அணிவித்தார் நிக். கேனே மகிழ்ச்சியில் திளைத்தார். ‘சில ஆண்களைப் பார்த்ததும் பாய் ஃப்ரெண்ட் ஆக்கிக்கொள்ளலாம் எனத் தோன்றும். ஆனால் நிக்கைச் சந்தித்த முதல் நொடியிலேயே இவரை கணவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது’ என்பது கேனேவின் லவ் மொழி. இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 
2013-ம் ஆண்டு பரிபூரண ஆரோக்கியத்துடன் ஓர் ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பின் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் நிக்கிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது?’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன?’
நிக்-கேனே     காதல்  கதை: www.youtube.com/watch?v=s3QezBvN1BE
Life without Limits -  இது, நிக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகம். Limitless, Stand Strong, Love without  Limits ஆகியவை, நிக்கின் பிற புத்தகங்கள். அனைத்துமே விற்பனையில் சாதனை படைப்பவை. தவிர, No Arms, No Legs, No Worries  என்ற நிக்கின் வாழ்க்கையும் தன்னம்பிக்கை உரைகளும் அடங்கிய டி.வி.டி மிகப் பிரபலம். நிக் ஒருமுறை இந்தோனேஷியா சென்றபோது, அங்கு இருந்த நண்பர், நிக்கின் டி.வி.டி., போலி டி.வி.டி-யாக ஒன்றரை லட்சம் காப்பிகளுக்கும் மேல் விற்றுள்ளதாக வருத்தப்பட்டார். நிக் சிரித்தபடியே சொன்ன பதில், ‘நல்ல விஷயம் மக்களிடம் எந்த வழியில் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!’
நன்றி: புகைப்படங்கள் கூகுள் தேடல், மூலக்கட்டுரை விகடன்

No comments:

Post a Comment