Tuesday, July 21, 2015

விஷம் விதைக்கும் மதவாத அரசியல் வெறுப்பு வணிகர்கள்

ஒரு கட்சியை, கொள்கையை வளர்க்கப் பல வழிகள் உள்ளன. கொள்கைகளைச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி மக்களைத் தம்பக்கம் ஈர்ப்பது ஒரு வழி. இந்த வழிமுறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

மற்றொரு வழி மிக எளிய வழி! ஒரு பொது எதிரியை அடையாளம் காட்டி வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கவைத்து அணி திரட்டுவதுதான் அந்த எளிய வழி!

ஐரோப்பாவில் நீண்ட காலமாக யூதர்களை எதிரிகளாகக் காட்டி அரசியல் நடத்தினர். அதன் உச்சக் கட்டமே ஹிட்லரின் யூத விரோதப் போக்கும் படுகொலைகளும். பின்னர் கம்யூனிசத்தைப் பொது எதிரியாகச் சித்திரித்து மக்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஊட்டி அரசியல் நடத்தினர்.

இப்போது இஸ்லாத்தைப் பொது எதிரியாகச் சித்திரிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் வகுப்புவாதிகளும், பிராந்திய வெறியர்களும் இதனையே பின்பற்றுகின்றனர். ஒரு மதத்தை, இனத்தை, சமூகத்தைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி, வெறுப்பும் துவேசமும் என்றும் நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். 

நல்லிணக்கம் ஏற்பட்டுவிடா வண்ணம் மிகக்கவனமாகக் காரியமாற்றி வருகின்றனர்.
பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வெறுப்புப் பிரச்சாரம் வெகுவேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவில், வெவ்வேறு வார்த்தைப் பிரயோகங்களில் வெறுப்பு விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி, உறக்க மின்றி வாழலாம். ஆனால் தன்மானத்தை இழந்து வாழ முடியாது. எனவே இந்தத் தேர்தலில் அந்தச் சமூகத்தைப் பழிவாங்கு வோம். தக்க பாடம் கற்பிப்போம்.”

“நமது சமூகப் பெண்களை மயக்கிக் காதலித்து அவர்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர்.” (இதற்கு லவ் ஜிஹாத் எனும் நாமகரணம் சூட்டினர்.)

“நீங்கள் ஒரு பெண்ணை மதம் மாற்றினால் நாங்கள் உங்கள் சமூகத்தில் பத்து பெண்களை மதம் மாற்றுவோம்”

“மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது. அங்கே பச்சைக் கொடி மட்டுமே ஏற்றப்படும். மூவர்ணக் கொடி ஏற்றப்படமாட்டாது”

“உத்திரப்பிரதேசத்தையும் இன்னொரு குஜராத்தாக மாற்ற மோடி முயன்றால், அவரைத் துண்டு துண்டாக வெட்டுவோம்”

“மோடியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஒரே இடம் பாகிஸ்தான்”

தாக்கரேக்கள், அமித்ஷா, பிரவீன் தொகாடியா, இம்ரான் மசூத், சாக்ஷி மகராஜ், யோகி அவைத்யராஜ், ஆஸம்கான், வருண்காந்தி, சுப்பிரமணிய சுவாமி, உவைஸி என்று இவ்வெறுப்புப் பேச்சாளர்களின் பட்டியல் நீளும்.

இது தவிர வதந்திகள் மூலமே வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். நமது சமூகத்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மானபங்கப்படுத்தப்படுகின்றனர். பசுக்கள் கொல்லப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீ வைக்கப்படுகின்றன. புனித நூல்கள் எரிக்கப்படுகின்றன, சொத்துகள் அழிக்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகளைப் பரப்புவது அல்லது சிறிய சம்பவங்களை மிகைப்படுத்துவது. அல்லது தனிமனித மோதல்களைச் சமூக மோதல்களாக வர்ணிப்பது.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், முகநூல் வழியாக போலியாகச் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்களோடு ‘ஆதாரப்பூர்வமாக(!)’ செய்திகள் பரப்பப்பட்டு மிகவேகமாக மக்களைச் சென்றடைந்து கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வெறுப்புப் பிரச்சாரத்தின் இரண்டாவது வகை தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாது எப்போதும் செய்யப்படும் நிரந்தரப் பிரச்சாரம்.

‘வரலாற்றுச் சம்பவங்களை வெறியூட்டும்வகையில் எடுத்துச் சொல்லுதல், அவற்றை மிகைப்படுத்துதல், இட்டுக்கட்டிச் சொல்லுதல் என்பன அதில் இருக்கும்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆனால் பெரும்பான்மைச் சமூகம் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்” - இதுபோன்ற பலவகைப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மக்கள் மனதில் நிரந்தரப் பகை, வெறுப்பு விதைக்கப்படுகின்றது. இவ்வகைப் பிரச்சாரங்கள் கல்விக்கூடங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. காலம்சென்ற வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா “வகுப்புவாதம் வகுப்பறைகளில் உருவாகிறது” என்றார். இது தவிர பொதுக்கூட்டங்கள், ஊடகம், வகுப்புவாதிகள் நடத்தும் பயிற்சி முகாம்கள், அவர்கள் நடத்தும் கல்விக் கூடங்கள், அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள்

வாயிலாக வெறுப்புப் பிரச்சாரம் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த இரண்டுவகைப் பிரச்சாரங்களுமே ஆபத்தானவை. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு வேட்டு வைப்பவையாகும். பொதுவாகவே உலகெங்குமுள்ள வகுப்புவாதிகளும் இனவெறியர்களும், மதவெறியர்களும் வெறுப்புவாதத்தையே தமது வலுவான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களை எதிரிகளாகச் சித்திரித்துவிட்டு, அச்சமூகத்தின்மீது தாக்குதல் தொடுத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது அனுதாபம் இல்லாமல் போவதுடன், இது அவர்களுக்குத் தேவைதான் என்ற நிலையும் உருவாகிவிடும்.

ஐரோப்பாவில் நீண்டகாலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமே அவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் இப்பிரச்சாரத்தை மேலும் ஊதிப்பெருக்கினர். இறுதியில் இலட்சக்கணக்கான யூதர்கள் விஷ வாயு
மூலம் கொல்லப்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
 சமீபத்தில் ரவாண்டாவில் டுட்ஸி (ஜிutsவீ) இனத்தவர் மீது உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் அந்த நாட்டின் பல லட்சம் மக்களின் உயிரை வாங்கியது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கு வெறுப்புப் பிரச்சாரமே முதல் காரணமாக உள்ளது.

வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் தேசத்தின் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற முடியும். பதற்றமும் கலவரமும் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும். வகுப்புக் கலவரங்கள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரையே பெற்றுத் தருகின்றது.

உலக மனித உரிமைக் கழகங்கள் வெளியிடும் அறிக்கைகளில் நமது நாட்டில் நடைபெறும் மதக்கலவரங்கள் ஆண்டுதோறும் தவறாது சுட்டிக்காட்டப்படுகின்றன. 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து வெளிநாடு புறப்படத் தயாராக இருந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் “ நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்” என்றார். ”ஒரிஸ்ஸா மாநிலத்தில் காந்தமாலில் நடைபெற்ற கலவரத்தைக் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி என்னிடம் கேட்டபோது, நான் அவமானத்தால் தலைகுனிந்தேன்” என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

நமது நாட்டின் கரும்புள்ளியாகத் திகழும் வகுப்பு மோதல்களையும், அதற்கு ஆதார சுருதியாகத் திகழும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்துவது தேசப்பற்றாளர்களின் கடமையாகும். வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடைசெய்யும் சட்ட விதிகள் ஏராளம் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 125கி இந்திய தண்டனைச் சட்ட விதிகள் 153கி, 292, 293 295கி மூலம் இவற்றைத் தடைசெய்ய முடியும். ஆனால் வழக்கம்போலவே இச்சட்ட விதிகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. தொகாடியா மீது 19 வழக்குகள் உள்ளன. உவைஸி மீது பல வழக்குகள் உள்ளன. இருப்பினும் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் தொடரவே செய்கின்றன.

இவ்வழக்குகளுக்காக இவர்கள் தண்டனை பெறுவதில்லை. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்கும். தேர்தல் பிரச்சாரம் செய்ய சில நாள்களுக்குத் தடைவிதிக்கும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்பார். அத்தோடு விவகாரம் முடிந்துவிடும். வகுப்புப் பிரச்சாரம் செய்தால் பதற்றம் மேலும் அதிகமாகும் என்பதால் அவரைக் கைது செய்யாமலிருப்பதே மேல் என்று மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்படும். சில வேளைகளில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இவை கண்டுகொள்ளாமல் விடப்படும்.

நல்லிணக்கம், அமைதி இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசுக்கு இதனைத் தடைசெய்வது கடினமான செயல் அல்ல. வாக்குவங்கியில் கவனம் செலுத்துவதே இவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைகிறது.

வெறுப்புப் பிரச்சாரத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமில்லாமல் உண்மைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் முறியடிக்கவேண்டும். அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளுக்குத் தக்க பதில் அளிக்கவேண்டும். “லவ் ஜிஹாத்’ மூலமாக எத்தனைபேர் மதம் மாறினார்கள்?” என்று கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியாது. ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்கள் மிகைப்படுத்தப்படும் சதி அம்பலமாகிவிடும்.

பாஜகவின் முக்கியத் தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வியும் ஷா நவாஸ் ஹுஸைனும் மதம் கடந்த திருமணம்தான் புரிந்துள்ளனர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. வதந்திகளை உடனுக்குடன் முறியடிப்பது அரசு ஊடகங்களின் தலையாயப் பொறுப்பாகும். மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது என்றால் உளவுத்துறை சந்தேகத்தின் பெயரால் கைதுசெய்த பயங்கரவாதிகளில் எத்தனை பேர் மதரஸா மாணவர்கள்? என்று கேள்வி எழுப்பினால் அவர்களால் பதில்தர முடியாது.

முஸ்லிம்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றால் சச்சார் கமிஷன் அறிக்கையில் கல்வி, பொருளாதாரம், நில உடைமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தலித்களைவிடப் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறதே..! என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

வெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுவது கூடாது. சட்டத்தின் துணை கொண்டும், அறிவின் துணை கொண்டும் அவற்றை முறியடிக்கவேண்டும். வரலாற்றில் பல தவறுகள் நடந்துள்ளன என்பது உண்மையே! அவற்றை நியாயப்படுத்திப் பேசுவதும் தவறு. வரலாற்றை முன்னிறுத்தித் துவேசத்தை வளர்ப்பதும் தவறு. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வது எனப் புறப்பட்டால் எந்த நூற்றாண்டுவரை பின்னோக்கிச் செல்வது? வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று இனி அத்தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வதே நமது கடமையாகும்.

வெறுப்புப் பிரச்சாரங்களைப் பற்றிப் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஆபத்தானது. “வசு தைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று அமெரிக்காவில் முழங்கும் நமது பிரதமர் அந்தத் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டும் காணாதிருப்பது ஏனோ? வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசும் பிரதமர் இவற்றிற்கு முட்டுக்கட்டைபோடும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும். அப்போதுதான் ‘இந்த நாட்டிற்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது (அச்சே தின்)’ என்ற அவரது கூற்று உண்மையாகும்.

கட்டுரையாளர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (நன்றி காலச்சுவடு)

1 comment:

  1. நல்ல பதிவு
    பேப்பர் முதல் விளம்பர பலகைகள் வரை .. பார்வைகளை தாழ்துவதே சிறந்தது .

    ReplyDelete