வலியிலும் வலியானது தாய்மண்ணைப் பிரிந்து அகதிகளாய்ப் புலம்பெயர்வது. ஆக்ரமிப்புப்
போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இனஅழிப்பு வன் முறைகள் ஆகியவற்றின் காரணமாக உயிர்
வாழும் உரிமைக்காகச் சொந்தநாட்டை விட்டு வெளியேறு பவர்கள் அகதிகள் என
அழைக்கப்படுகின்றனர்.
அகதிகள் குறித்த வரைவிலக்கணம் ஐக்கிய நாட்டுச் சபையால் 1951ஆம் ஆண்டுதான்
ஒழுங்குபடுத்தப்பட்டது. இன்று உலகம் முழுக்க சாதிய, இன, மத, மொழிப் பாகுபாடுகள்
காரணமாகவும், அரசியல் பழிவாங்கல் மற்றும் யுத்தங்கள் காரணமாகவும் சுமார் ஐந்து கோடி
பேர் அகதிகளாக உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அகதியான பாலஸ்தீன சிறுவன் |
பாலஸ்தீன மற்றும் தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உலகமெங்கும் அகதிகளாய்ப் பரவி
உள்ளனர். அவர்களில் கணிசமானோர் குடியேறிய நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
பல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் அகதிகள் விஷயத்தைக்
கடந்த காலங்களில் மனிதாபிமானத்துடன் அணுகி இருக்கின்றனர். ஆனால் தற்போது தங்களின்
உள்நாட்டுஅரசியல், சமூகக் கலாச்சாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இறுக்கமான
போக்குகளைக் கடைப்பிடிக்கின்றன.
அகதியான ஈழத் தமிழர்கள் |
அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளைக் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ‘மத்திய தரைக்கடல்
படுகொலைகள்’ வெளிச்சம் போட்டுக் காண்பித் துள்ளன. லிபியாவிலிருந்து ஐரோப்பாவை
நோக்கிப் புறப்பட்ட அகதிகள் படகை இத்தாலியக் கடற்படை விரட்டியடித்தது. அதன் விளைவாக
700க்கும் மேற்பட்டோர் படகு மூழ்கி உயிரிழந்தனர். உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இன்று
அதேபோன்ற படுகொலைகள் இந்தியப் பெருங்கடலிலும் நிகழ்ந்து விடுமோ என அஞ்ச
வேண்டியுள்ளது.
பர்மா எனப்படும் மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படு
கொலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு அஞ்சிப்
பல்லாயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளான பங்களாதேஷுக்கும் தாய்லாந்துக்கும் தப்பி
ஓடுகின்றனர்.
ஆனால், இவர்களை ஏற்க மறுக்கும் அந்நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி அவர்களை
விரட்டுகின்றன. கடல்வழியாகப் படகுகளில் தப்பி வருபவர்களைத் தங்கள் எல்லைக்குள்
நெருங்க விடாமல் தடுக்கின்றன. இதனால் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியாவுக்கும்
இந்தோனேசியாவுக்கும் படகுகளில் திரும்பும் அம்மக்களின் துயரம் கொடுமையானது. ஏற்கனவே
அவர்களுக்கு இந்நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்து வருகின்றன
என்றாலும், அவர்களைத் தொடர்ந்து அனுமதிக்கத் தயங்குகின்றன.
இதனால் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் கடற்கரைக்கருகே சுமார்
எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் படகுகளில் நடுக்கடலில்
தத்தளிக்கின்றனர். உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு ரோஹிங்ய முஸ்லிம்களின்
வரலாற்றையும் தொடர் துன்பத்தையும் பொது விவாதத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பர்மாவில் பௌத்தம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது அடுத்த நிலையில் இஸ்லாம்,
இந்து, கிறிஸ்துவ மதங்கள் இருக்கின்றன. பர்மாவில் 130க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள்
வாழ்கின்றன. அங்கு வாழும் ஆறு கோடி மக்களில் பத்து சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.
இவர்கள் அனைவரும் அம்மண்ணின் மைந்தர்களாவர். 1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மாவில்
இஸ்லாம் பரவியது. பர்மாவுக்கும் பங்களாதேஷ்க்கும் இடைப்பட்ட பகுதியான அராக்
காணில்தான் பெருமளவு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பர்மாவின் மேற்குப்பகுதி மாகாணமான
இங்கு வாழும் முஸ்லிம்கள்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள். கி.பி. 11ஆம்
நூற்றாண்டு பாகன் அரசர்கள் காலத்திலேயே ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத
வன்முறைகள் முதன்முதலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
கட்டாயப் பௌத்த வழிபாடுகளுக்கு வற்புறுத்தப் படல், ஹலால் உணவுகளுக்குத் தடை,
பெருநாள் பண்டிகைகளுக்குத் தடை, கூட்டுத் தொழுகைகளுக்கு நெருக்கடி, கட்டாய
மதமாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அம்மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும்
முடியாத பலவீனமானவர்களாகவே அடிமைப்படுத்தப்பட்டார்கள்.
17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசில் உள்நாட்டுப் போர் மூண்டது.
ஔரங்கசீப்புக்கு எதிராக அவரது சகோதரர்கள் போரிட்டனர். ஔரங்கசீப்பிடம் தோல்வியடைந்த,
அவரது சகோதரர்களில் ஒருவரான ஷுஜாவும் அவரது சிறுபடையினரும் பர்மாவின் அரக்காண்
பகுதிக்குள் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் அரக்காண் பகுதியை ஆண்ட பௌத்த
மன்னன் சண்டதுடாமா கொன்று குவித்தான்.
பல நூற்றாண்டுகளாய்ப் பர்மாவின் ராஜபக்ஷேக்களால் அங்குள்ள முஸ்லிம்கள் விவரிக்க
முடியாத துன்பங்களை அடைந்தனர். பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்கீழ் பர்மா வந்தபோது,
இந்திய முஸ்லிம்கள் பர்மாவுக்கு வணிக ரீதியான பயணங்களை மேற்கொண்டனர். தமிழ்நாட்டைச்
சேர்ந்த பல்வேறு சமூக மக்களுடன் தமிழ் முஸ்லிம்களும் அங்கு குடி பெயர்ந்தனர்.
முதல் உலகப்போருக்குப் பின்னால்தான் அதிக மானோர் பர்மாவுக்கு வந்தனர்.
1930களில்
தலை நகர் ரங்கூனில் இந்தியர்கள் பெரும்பான்மையினராக மாறினர். வியாபாரங்களும்
தொழில்களும் அவர்கள் வசமாயின. ஆங்கிலேயர்களின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பர்மாவில் விடுதலை முழக்கங்கள் வெடித்தன. 1938இல்
உருவான ஆங்கிலேய எதிர்ப்புக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாறியது.
ஆங்கிலேயர் எதிர்ப்பு, இந்தியர் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு என மூன்று
முழக்கங்கள் பர்மாவில் எதிரொலித்தன. இதில் முஸ்லிம்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதில்
பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவிடமிருந்து பிரித்து தனிநாடாக நிர்வகிப்பது என்றும்,
பர்மாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சமஉரிமையும் குடியுரிமையும் கொடுப்பது என்றும்
தீர்மானிக்கப்பட்டது. இதில் இரண்டாவது கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது. அதன்
கொடூரங்களைத்தான் இன்று ரோஹிங்ய முஸ்லிம்கள் அனுபவிக் கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்ரமித்தது. அப்போதும் ஜப்பானியர்கள்
பௌத்த இனவெறியோடு முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். 1948இல் பர்மா
ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான
கலவரங்கள் அரசுப் படுகொலைகளாக மாறின. ராணுவத்தின் துணைகொண்டு பௌத்த இனவாத
இயக்கங்கள் கடந்த 68 ஆண்டுகளாக முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்தி வருகின்றன.
2012ஆம் அண்டு ஐ.நா. பிரதிநிதியாகச் சென்ற யான் கி லீ என்ற பெண்மணி அங்கு
முஸ்லிம்கள் படும் இன்னல்களை அறிக்கையாகத் தயாரித்து உலகின் பார்வைக்குக் கொண்டு
வந்தார். அந்த அறிக்கை பர்மாவில் முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து
கொத்தடிமைகளாக வாழ்வதாகக் கூறியது. இதனைப் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான ஃபாஸிஸ
அமைப்பான ‘969’ இயக்கத்தின் தலைவர் விராது கடுமையாகக் கண்டித்தார். இவரை டைம்
பத்திரிகை தோலுரித்து அம்பலப்படுத்தியது. அவருக்கு ஆதரவாகப் பர்மாவின் அதிபர்
தெய்ன் செய்ன் குரல் கொடுத்தார். அவரைத் தங்களின் வழிகாட்டி எனப் புகழ்ந்தார்.
இதன்மூலம் முஸ்லிம் இனப்படுகொலைகளைப் பர்மாவின் அரசும் ராணுவமும் பகிரங்கமாக
ஆதரிப்பது தெளிவானது.
இதுவரை பர்மாவிலிருந்து புறஅகதிகளாகப் புறப்பட்ட 12 லட்சம் ரோஹிங்ய முஸ்லிம்கள் பல
நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். முன் எப்போதுமில்லாத அளவில் நடைபெறும்
கொடுமைகளால், கூட்டம் கூட்டமாக அகதிகளாக புறப்பட்டு எங்கு செல்வது எனத் தெரியாமல்
தவிக்கிறார்கள். இவர்களின் அவலங்களை ‘ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு
‘ALL YOU CAN DO IS PRAY’ என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
பர்மாவின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவும் இந்தியாவும் வேடிக்கை பார்க்கின்றன. பர்மாவின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய ஆங்சான் சூகியின் மௌனம் இனப்படுகொலைகளைவிடக் கொடுமையானது. அமெரிக்க அதிபர் ஒபாமா ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது. இதுதொடர்பாக தாய்லாந்தில் கூடிய 17 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பெரும்பான்மையான நாடுகள் பர்மாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது ஆறுதலான விஷயம்.
பர்மாவின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவும் இந்தியாவும் வேடிக்கை பார்க்கின்றன. பர்மாவின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய ஆங்சான் சூகியின் மௌனம் இனப்படுகொலைகளைவிடக் கொடுமையானது. அமெரிக்க அதிபர் ஒபாமா ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது. இதுதொடர்பாக தாய்லாந்தில் கூடிய 17 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பெரும்பான்மையான நாடுகள் பர்மாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது ஆறுதலான விஷயம்.
பௌத்த மக்களின் உலகத் தலைவரான தலாய்லாமா பர்மா அரசின் மதவாதத்தைக் கண்டித்து உரத்த
குரல் எழுப்பியிருக்கிறார். அந்த மக்களுக்கு ஆதரவாக உருப்படியாக ஏதாவது
செய்யவேண்டும் என்று ஆங்சான் சூகியை இரண்டு முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
உலக அகதிகள் தினமாக ஜூன் 20ஐ ஐ.நா. சபை கடைப்பிடிக்கிறது. இவ்வாண்டும் அது ஒரு சடங்காகவே கழிந்துவிட்டது. பர்மா, தமிழ் ஈழம், சிரியா, ஏமன் என உலகமெங்கும் சொந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்காகவும் மனிதநேயத்தோடு குரல் கொடுப்போம். கொலையைவிடக் கொடுமையானது அநீதிக்கு எதிரான மௌனம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.
உலக அகதிகள் தினமாக ஜூன் 20ஐ ஐ.நா. சபை கடைப்பிடிக்கிறது. இவ்வாண்டும் அது ஒரு சடங்காகவே கழிந்துவிட்டது. பர்மா, தமிழ் ஈழம், சிரியா, ஏமன் என உலகமெங்கும் சொந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்காகவும் மனிதநேயத்தோடு குரல் கொடுப்போம். கொலையைவிடக் கொடுமையானது அநீதிக்கு எதிரான மௌனம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.
( மூலக்கட்டுரை நன்றி காலச்சுவடு புகைப் படங்கள் கூகுள் )
No comments:
Post a Comment