Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, July 15, 2013

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை (நூல் அறிமுகம்)



இந்த நூலை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று மறுவாசிப்பு செய்தேன். மனதில் பல மற்றங்களை ஏற்படுத்தவல்ல சக்திகொண்ட நூல் இது.

இந்த நூலிருந்து ஒரு சில வரிகள்.

இறைவேதத்தின் மீது கொடுமை புரிவதின் விளைவு: என்கிற தலைப்பிலிருந்து..

குர்ஆன் நன்மைக்கும் நற்பேறுகளுக்கும் அது ஓர் ஊற்று. தீயதையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியதல்ல அது. ஒரு சமுதாயத்தவர் இறைவனுடைய திருமறையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்றால். அவர்கள் உலகில் கேவலத்தையும் அவமானத்தையும் நிச்சயமாக அடைய மாட்டார்கள். அவரகள்மற்றவர்களின் காலடியில் நசுக்கப்படவும் மாட்டார்கள். அவர்களின் கழுத்தில் அடிமைத்தனத்தின் முத்திரை இருக்கவும் முடியாது; அவர்களின் குடுமியை மற்றவர்கள் பிடித்து அவர்களை ஆடு மாடுகளைப் போல விரட்டவும் முடியாது.

இந்த விளைவுகளெல்லாம் திருமறைக்கு அநீதி இழைக்கப்படும்போதுதான் ஏற்படுகின்றன. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் அடைந்த இழிநிலை உங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது. ‘தவ்ராத்’ ’இன்ஜீல்’ எனும் இறைநூல்கள் அவர்களுக்கு அருளப்பட்டிருந்தன. அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது.

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنجِيلَ وَمَا أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; (திருக்குர்ஆன் 5:66 )

ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.(திருக்குர்ஆன் 2:61 ) 

ஆகவே இறைவேதத்தை தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் கேவலமான நிலையிலும், அடிமைத்தனத்திலும், தலைதூக்க முடியாத சூழலிலும் இருக்கிறார்களென்றால், அவர்கள் தின்னமாக இறைவேதத்திற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இழிவுகளெல்லாம் அந்த அநீதியான செயல்களால் ஏற்பட்ட கதிதான் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனுடைய இந்தக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழியைத் தவிர வேறு வழியில்லை அதாவது இறைவேதத்திற்கு அநீதி இழைப்பதை விட்டு விட்டு அதன் கட்டளைகளை முறைப்படி நிறைவேற்ற வேண்டும். இந்த பெருங்குற்றத்திலிருந்து நாம் விலகவில்லை என்றால், இந்த இழிநிலை மாறவே மாறாது - நீங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கல்லூரி திறந்தாலும், உங்கள் வழித்தோன்றல்கள் எல்லோரும் பட்டதாரிகளானாலும், யூதர்களைப் போல் வட்டித் தொழிலில் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் சரியே!

குர்ஆனை அறிவதும் அதன்படி செயல்படுவதும் கட்டாயமாகும்:

நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றை கொண்டு வந்து படிக்க உட்காருகிறான். அதனை படித்தால் மட்டுமே நோய் நீங்கிப்போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அவனுடைய மூளை கெட்டுப் போய்விட்டது - பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அவனை அனுப்புங்கள்” என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா?

குர்ஆனையும் இந்த நிலையில் தான் வைத்திருக்கிறீர்கள் அதனை ஓதுவது மட்டும் போதும் அதனுடைய அறிவுரைக்குத் தக்கபடி நடக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்கள். இப்படியிருக்கும்போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்த தீர்ப்பை வழங்குகிறீர்களோ, அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை.

இப்படியாக அழகிய உவமைகளுடன் மனதை பிடித்து உலுக்கும் கேள்விகளுடன் கூடிய நூல் வாசித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.

Saturday, October 13, 2012

வெற்றியின் விலை என்ன?

வெற்றி என்பது என்ன? தெரு ஒரத்தில் குச்சிநட்டு ஆடினான் அந்தச் சிறுவன். அதன் பின் டெண்டுல்கராக மாறினான். சன்னலே இல்லாத ஒரு குடிசை. அதில் வசித்தான் அந்த எழைச் சிறுவன். ஆரம்பத்தில் வெறும் 30 டாலர் சமபளம். நாளடைவில் 300 கோடிக்கும் அதிகமான  சம்பாத்தியம். இவர்தான் உலக கால்பந்தாட்ட ‘நம்பர் ஒன் ரொனால்டோ’. பசி பட்டினியோடு வாழ்ந்தான் அந்த இளைஞன். மின்விளக்கு வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றிக் கூட படிக்க முடியாத வறுமை. தெருவிளக்கில் படித்தான். வழக்குரைஞராக, நீதிபதியாக வாழ்வில் உயர்ந்தான். தனது உயர்வுக்கு அடையாளமாக இன்றளவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை உருவில் நிற்பவர் முத்துசாமி.

. இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய முயல்வதே வெற்றி.

. 100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது.

. உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை... பேராற்றலைத் தட்டி எழுப்புவது.

. சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல்... மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.

. உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத ‘இயக்கம் Process' விதைகளை விதைக்கும் செயல். விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்.

நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி. நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி. அதே போல, தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.

“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்... என்னால் இயன்றைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.

நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்! இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால் தான், அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன. அதற்கு உந்துகோலாக இருந்தது எது? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.

50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு - “ பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை.”

ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும். அதனால்,

. உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்.

. உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

. உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

உண்மையில், ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் :  ‘ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!’

. வேண்டா வெறுப்பாக... முக்கி முணகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் இறைவன் அவனுக்களித்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்

. யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.

. நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இறுதியாக

உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்

Monday, February 6, 2012

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!

உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139073