Monday, July 15, 2013

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை (நூல் அறிமுகம்)இந்த நூலை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று மறுவாசிப்பு செய்தேன். மனதில் பல மற்றங்களை ஏற்படுத்தவல்ல சக்திகொண்ட நூல் இது.

இந்த நூலிருந்து ஒரு சில வரிகள்.

இறைவேதத்தின் மீது கொடுமை புரிவதின் விளைவு: என்கிற தலைப்பிலிருந்து..

குர்ஆன் நன்மைக்கும் நற்பேறுகளுக்கும் அது ஓர் ஊற்று. தீயதையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியதல்ல அது. ஒரு சமுதாயத்தவர் இறைவனுடைய திருமறையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்றால். அவர்கள் உலகில் கேவலத்தையும் அவமானத்தையும் நிச்சயமாக அடைய மாட்டார்கள். அவரகள்மற்றவர்களின் காலடியில் நசுக்கப்படவும் மாட்டார்கள். அவர்களின் கழுத்தில் அடிமைத்தனத்தின் முத்திரை இருக்கவும் முடியாது; அவர்களின் குடுமியை மற்றவர்கள் பிடித்து அவர்களை ஆடு மாடுகளைப் போல விரட்டவும் முடியாது.

இந்த விளைவுகளெல்லாம் திருமறைக்கு அநீதி இழைக்கப்படும்போதுதான் ஏற்படுகின்றன. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் அடைந்த இழிநிலை உங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது. ‘தவ்ராத்’ ’இன்ஜீல்’ எனும் இறைநூல்கள் அவர்களுக்கு அருளப்பட்டிருந்தன. அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது.

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنجِيلَ وَمَا أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; (திருக்குர்ஆன் 5:66 )

ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.(திருக்குர்ஆன் 2:61 ) 

ஆகவே இறைவேதத்தை தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் கேவலமான நிலையிலும், அடிமைத்தனத்திலும், தலைதூக்க முடியாத சூழலிலும் இருக்கிறார்களென்றால், அவர்கள் தின்னமாக இறைவேதத்திற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இழிவுகளெல்லாம் அந்த அநீதியான செயல்களால் ஏற்பட்ட கதிதான் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனுடைய இந்தக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழியைத் தவிர வேறு வழியில்லை அதாவது இறைவேதத்திற்கு அநீதி இழைப்பதை விட்டு விட்டு அதன் கட்டளைகளை முறைப்படி நிறைவேற்ற வேண்டும். இந்த பெருங்குற்றத்திலிருந்து நாம் விலகவில்லை என்றால், இந்த இழிநிலை மாறவே மாறாது - நீங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கல்லூரி திறந்தாலும், உங்கள் வழித்தோன்றல்கள் எல்லோரும் பட்டதாரிகளானாலும், யூதர்களைப் போல் வட்டித் தொழிலில் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் சரியே!

குர்ஆனை அறிவதும் அதன்படி செயல்படுவதும் கட்டாயமாகும்:

நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றை கொண்டு வந்து படிக்க உட்காருகிறான். அதனை படித்தால் மட்டுமே நோய் நீங்கிப்போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அவனுடைய மூளை கெட்டுப் போய்விட்டது - பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அவனை அனுப்புங்கள்” என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா?

குர்ஆனையும் இந்த நிலையில் தான் வைத்திருக்கிறீர்கள் அதனை ஓதுவது மட்டும் போதும் அதனுடைய அறிவுரைக்குத் தக்கபடி நடக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்கள். இப்படியிருக்கும்போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்த தீர்ப்பை வழங்குகிறீர்களோ, அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை.

இப்படியாக அழகிய உவமைகளுடன் மனதை பிடித்து உலுக்கும் கேள்விகளுடன் கூடிய நூல் வாசித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.

No comments:

Post a Comment