Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

Sunday, September 6, 2015

வேண்டாமே விளம்பர பகட்டு மோகம்...!

பகட்டு, பெருமைக்காக வாழ்தல்...!
பொருளீட்டுதல் , குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல் - இதுவே பெரும்பலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகி விட்டது. தன்னையும் குடும்பத்தாரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு நேரம் ஆகியவற்றைத் தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள புனிதம் பெறுகின்றன.
மக்களின் பராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செய்பவர்களால் தீமைகளே விளையும்.
இவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பவர்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகச் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப் படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.
போதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவர். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.
தொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித்தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.
எனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள்.
பகட்டுக்காக வீண் பெருமைக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. (அல்குர்ஆன் 2:264 )
பகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை (அல்குர்ஆன் 76: 8,9 )
அல்லாஹ்விற்காக மட்டும் அவனுடைய அருளை மட்டும் எதிர்பார்த்து பணிகளை செய்வோம் வெற்றி பெறுவோம்.

Saturday, February 23, 2013

தீவிரவாதம் தீர்வை தருமா?

“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)

Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.

 ‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற  “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’

நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!

இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக்  கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.

இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)

இறைவன் கூறுகிறான் திருக்குர்ஆனில்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.

தீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.

எனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: மிஷ்காத்)

அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.
அநீதிக்கு அறமே தீர்வு.

(Reference :நூல்: எங்கெ அமைதி )

Sunday, September 30, 2012

அமைதியாக இருந்தால் அமைதி வருமா?

“தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்.” - எட்மண்ட் பர்க்

“ உண்மையை அறிந்த பின்னரும் உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்.” - மார்டின் லூதர் கிங்

இன்று உலகில் வன்முறைகளும் அநீதிகளும் குற்றங்களும் தலைவிரித்தாடுகின்றன ஆனால் இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காதவரையில் எவரும் அநீதிகளைப் பற்றி  கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாதவரை அநீதிகள் ஒருபோதும் ஒழியாது அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால் தான் நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக்கூடாது.

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்தும் அநீதியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:110)

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.(திருக்குர்ஆன் 3:104)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  வசனங்கள் நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமுதாயமே சிறந்தது என்றும், வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன. அநீதிகளுக்கு எதிராக நம்மால் முடிந்தா அலவுக்குப் போராட வேண்டும்.

“தீமையை கண்டால் கைகளால் தடு!  அது முடியாதபோது நாவினால் தடு! அதுவும் முடியாத போது மனத்தளவில் தடு! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். பொதுமக்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மனிதநேயர்கள், மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

“ கொடுங்கோல் ஆட்சியாளர்க்கு முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் (ஜிஹாத்) ஆகும்” என்றார்கள் நபிகள் நயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

அநீதிக்கு எதிராக மக்கள எழுப்பும் குரல் ஆதிக்கசக்திகளைக் கலக்கமடையச் செய்யும் சக்தி படைத்தது எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய எண்னிக்கையினர் குரல் எழுப்புவதால் என்ன ப்யன் என்று கருதிவிடக்கூடாது. ஜாதி மதம், மொழி, இனம் பாராது அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தீயவர்கள் தீமை புரிவதற்காகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது நன்மைக்காக நல்லவர்கள் ஒன்று சேரத் தயங்குவதேன்?

அநீதிகளுக்கு எதிரான குரல் வலுவாகவும், தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். ஆதிக்கக் காரர்களைத் திகில் அடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்பும் போராட்டமும் விளக்கக் கூட்டங்களும் அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் உண்மை நிலை பற்றி மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு செய்து வரும் பல அடாவடித்தனங்களைப் பற்றி தெரியாது. பாலஸ்தீனர் பிரச்னையில் இஸ்ரேல் அரசு நியாயமாக நடந்து கொள்வதாகவும், பாலஸ்தீனர்களே அநீதிகளைப் புரிவதாகவும் அமெரிக்க மக்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இது போலவே பல அரசுகள் தாம் செய்யும் தவறுகளை மக்கள் அறியாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

அநீதிகள் புரிபவர்கள் நமது சமூகத்தவாரயினும் அவர்களை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும். ‘எனது தேசம் எது செய்தாலும் ஆதரிப்பேன் (My nation right or wrong) என்பது இன வெறியாகும் (Chauvinism)

" ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?” என ஒருவர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகளார் அவர்கள், இல்லை! மாறாக, தன் சமூகத்தார் கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறி, என்றார்கள்.

அடுத்தவர் செய்யும் தவறுகளை ஆவேசமாகக் கண்டிக்கிறோம். ஆனால் நமது நாடு, நமது சமூகம் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். தமது சமூகத்தைக் கண்டிப்பது தேசத்துரோகம், மதத்துரோகம்.இனத்துரோகம் என்று அக்ருதுகிறோம். ஆனால் இந்த இனவெறிச் சிந்தனை அவர்களையே அழித்து விடும் என்பதை அவர்கள் உனர்வதில்லை. தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு தட்டிக் கேட்கப் படாத மனிதர்கள் அழிந்து போனது போல நாடுகளும் சமூகமும் அழியும்.

”எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவன் ஆவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழவான்” (நூல்: அபூதாவூது) என்றார்கள் நபிகள நாயகம் அவர்கள்.

அநீதிக்கு எதிராக வெளிநாட்டவர் எழுப்பும் குரலை விட உள்நாட்டினர் (அதே சமூத்தவர்) எழுப்பும் குரலே வலுமிக்கது. ஆட்சியாளர்களும் அக்கிரமக்காரர்களும் தமது சமூகத்தினரின் எதிர்ப்புக்கே அதிகம் அஞ்சுகின்றனர்.
இன்று உலக மக்கள் அதிகம் எதிர்க்க வேண்டியது வல்லரசுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையை. உலகில் எவருக்கும் அஞ்சமாட்டோம்; எந்தத் தர்மத்திற்கும் கட்டுப்பட மாட்டோம்; எந்த நாட்டையும் எந்த வேளையிலும் எந்த வகையிலும் தாக்குவோம்; அங்குள்ளவர்களைச் சிறை பிடிப்போம்; சித்திரவதை செய்வோம் எனச் செயல்படுகின்றன. ஐ.நா. சபை, உலக வங்கி, சர்வதேச நிதியம் (IMF), சர்வதேச அணுசக்தி கழகம் (International Atomic Energy Agency) ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு தாதவைப் போல் நட்ந்து கொள்கின்றன. ஐ.நா. சபை (UNO) என்பது அமெரிக்க ஐக்கிய  சபை ஆகி விட்டது (USO= United States Organization) உலகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபை அமெரிக்க, ஐரோப்பிய நலன்களைப் பாதுகாக்கும் சபையாக ஆகிவிட்டது. தன்னிச்சையாகச் செயல்படுதல் (Unilatelalism) ஏகாதிபத்தியம் (Imperialism), இரட்டை நிலை (Double standard) ஆகியவையே வல்லரசுகளின் செயல்பாட்ட்ன் அடிப்படைகள்.

நமது நாடு உட்பட உலகின் பல நாடுகள் வல்லரசுகளின் அரசு பயங்கரவாதத்தை (State Terrorism) கண்டிக்க மறுக்கின்றன. வல்லரசுகளிடமிருந்து கிடைக்கும் கடன், தொழில்நுட்ப உதவி,ஆயுதவிற்பனை ஆகியவை இவர்களை மெளனமாக்கி விடுகின்றன. வல்லரசுகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்துஐ.நா.பாதுகாப்புசபை,பொதுச்சபை,
அணுசக்திக்கழகம ஆகியவற்றில்  வல்லரசுகளுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுகின்றன. 

அரபுக்களை  நசுக்கி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவைக் கண்டிக்க அரபு நாடுகளே தயாராக இல்லை. அரபு ஆட்சியளர்களுக்கு மன்னராட்சியையும், குடும்ப, சர்வதிகார ஆட்சியையும் காப்பற்றிக் கொள்ள அமெரிக்காவின் தயவு தேவை. எனவே அவர்கள் மெளனம் காப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆகவே இத்தகைய தருணங்களில் பொதுமக்கள், அறிவுஜீவிகள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் மதம், சித்தாந்தம், நாடு  ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதோடு காலப் போக்கில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் வழிவகுக்கும்.

Tuesday, September 25, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)

பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

இறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.

* வசைமாரிப் பொழிந்தவர்களை

* அவதூறுகள் கிளப்பியவர்களை

* கொலை செய்ய முயன்றவர்களை

* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை

* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை

ஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.

ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.

(நன்றி :எங்கே  அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி)