Showing posts with label பலன். Show all posts
Showing posts with label பலன். Show all posts

Sunday, September 6, 2015

வேண்டாமே விளம்பர பகட்டு மோகம்...!

பகட்டு, பெருமைக்காக வாழ்தல்...!
பொருளீட்டுதல் , குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல் - இதுவே பெரும்பலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகி விட்டது. தன்னையும் குடும்பத்தாரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு நேரம் ஆகியவற்றைத் தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள புனிதம் பெறுகின்றன.
மக்களின் பராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செய்பவர்களால் தீமைகளே விளையும்.
இவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பவர்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகச் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப் படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.
போதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவர். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.
தொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித்தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.
எனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள்.
பகட்டுக்காக வீண் பெருமைக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. (அல்குர்ஆன் 2:264 )
பகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை (அல்குர்ஆன் 76: 8,9 )
அல்லாஹ்விற்காக மட்டும் அவனுடைய அருளை மட்டும் எதிர்பார்த்து பணிகளை செய்வோம் வெற்றி பெறுவோம்.