Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, August 13, 2012

ஆமைகள் புகுந்த வீடு விளங்கும் ஆன விளங்காது...!

ஆமவடை
ஆமைகள் புகுந்த வீடு விளங்குமா?
கல்லாமை,இல்லாமை,பொல்லாமை,இயலாமை,தீண்டாமை,பொறாமை போன்ற ஆ(மை)கள் மனங்களில் வீடுகளில் குடியிருக்கும்  வரை விளங்கவே விளங்காது.

குறிப்பாக பொறாமை புகுந்த மனதுடைவர்கள் ஒருபோதும் அமைதி அடையமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டு மனம் உடைந்து போவார்கள்.அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா வகையிலும் முயல்வார்கள்.அவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும்,உயிர்,உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவும் முற்படுவார்கள். இவ்வாறு அடுத்தவர்களை அழிக்க முயல்கையில் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் நற்பெயருக்கு அவர்களே களங்கம் தேடிக் கொள்வார்கள். எனவே தான் முஹம்மது நபி (ஸல்), “நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது”(நூல்:அபூதாவூத்) எனக் கூறினார்கள்.

பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கோரும்படியும் (திருக்குர்ஆன் :113:5) கட்டளையிடுகிறது.

பொறாமை போன்ற கொடுமையான என்னங்கள் புகாத ஆன்மாவே வெற்றிபெறும்!

ஒரு அரபுக் கவிஞர் இப்படி பாடுகிறார்:
அவர்கள் என் இறப்பின் மீதும்
பொறமை கொள்கிறார்கள்
அடப்பாவமே!
சாகும் வரை
பொறாமையின் பிடியிலிருந்து
நான் தப்பமாட்டேன் போலும்.

மற்றொரு கவிஞர் பாடுகிறார்:
உன் அருகில் அமர்ந்திருப்பவர்களிடம்
உனது கவலையை வெளிப்படுத்தாதே
அவர்கள் பொறாமைக்காரர்கள்
உன் கண்ணீரில் குளிர்காய்பவர்கள்

இன்னும் சில ஆமைகள் இருக்கின்றன இவைகள் புகாத மனங்கள் விளங்காது.
வாய்மை,பொறுமை,நிலைகுலையாமை போன்றவை.

நல்ல காரியங்கள் செய்யும்போது அதை நோக்கி அவதூறான விமர்சனங்கள் வரும்போது பொறுமையுடன் நிலைகுலையாமல் சந்திக்காதவரை வெற்றி பெற முடியாது.

மேலை நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார்:
“எது சரியோ அதைச் செய் பின்னர், இழிவான விமர்சனங்களுக்காக நீ திரும்பி நில்”

கவனத்தில் கொள்ளுங்கள்: உங்களைப் பற்றிய அவதூறுகளைப் படிப்பவர்களில் பாதிப் பேர் அவற்றை மறந்து விடுவார்கள். மீதிப் பேர் அவற்றை ஆர்வத்துடன் படிக்க மாட்டார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை அந்த அவதூறுகளைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. காரணமும் புரியாது.

அறிஞர் ஒருவர் கூறுகிறார்:

என்னைப் பற்றியோ, உன்னை பற்றியோ நினைக்க மக்களுக்கு நேரமில்லை. அவர்கள் தமது வாழ்க்கை அத்தியாவசிய தேவைகளை தேடுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு தாகம் ஏற்பட்டால் போதும்; எனது இறப்பையும் மறந்து விடுவார்கள் உனது இறப்பையும் மறந்து விடுவார்கள்.

Tuesday, August 7, 2012

மதக்கொள்கைகளை திட்டாதீர்கள்(‘Respect For all religions’)

மத இழிவு கூடாது

உணர்வுகளில் மிக மென்மையானது சமய உணர்வு. எளிதில் தூண்டப்படுவது; உணர்ச்சிகளை விரைவாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கலவரங்களைத் தூண்டும் சக்தி படைத்தது.எனவே சமயங்களைப் பழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.(பார்க்க குர்ஆன் 6:108)..

மறுப்பதும் மதிப்பதும்

சமயங்களுக்கு இடையில் கருத்து ஒற்றுமைகளும் உண்டு’ வேற்றுமைகளும் உண்டு. கருத்து வேறுபாடு கொள்வதற்கும், கருத்துகளை ஏற்க மறுப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு. எம்மதமும் சம்மதம் என்று ஒரு கருத்து பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தைச் சொல்பவர்களின் நோக்கம் தூய்மையானது.ஒற்றுமை, நல்லிணக்கம்,மனித நேயம் ஆகியவற்றை மலரச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருத்தைக் கூறி வருகிறார்கள். ஆனால் அடிப்படை விடயங்களிலேயே சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இறைக்கோட்பாடு, மனிதன் பற்றிய கோட்பாடு, நன்மை-தீமை பற்றிய விளக்கங்கள், இறப்புக்கு பின்னுள்ள நிலை ஆகியவை பற்றி சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அதே வேளையில் ஒழுக்கம்,மனிதநேயம் போன்ற விடயங்களில் ஒத்த கருத்துகளும் காணப்படுகின்றன. எனவே எம்மதமும் சம்மதம் எனக் கூறுவதை விட. ‘எம்மதமும் மரியாதைக்குரியது ‘Respect For all religions’ எனக் கூறுவதே உண்மைக்கு நெருக்கமானது எவராலும் பின்பற்றக் கூடியது. எனவே எல்லா சமயங்களையும் மதிப்போம் என்ற உணர்வே அமைதிக்கு வழிவகுக்க கூடியது.

விமர்சனம் வேறு; இழிவுபடுத்துவது வேறு!

சமயங்களை பழிப்பது தவறு; விமர்சனம் செய்வது தவறல்ல. உணர்வுகளைத் தூண்டாத வகையில், இழிவுபடுத்தும் நோக்கமின்றி அறிவுப் பூர்வமான விமர்சனங்களைச் செய்வது தடை செய்யப்பட்டதல்லஎந்த கொள்கையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

“நபியே! விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!” (குர்ஆன் 16: 125)

சமயங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை; எனவே விமர்ச்னமே கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். இது அறிவுத் தேக்கத்திற்கும், சமயங்களின் பெயரால் செய்யப்படும் அநீதிகள் நீடிக்கவுமே துணைபுரியும். இன்னொரு பிரிவினரோ ‘ என் கடவுளை இழிவுபடுத்துவதே’என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றனர். மக்களை மோதவிட்டு, பிரிவினைகளை ஏற்படுத்தி வகுப்புவாதத்தை வளர்ப்பதே இவர்களின் நோக்கம்.

தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாத இவர்கள்,எதிர்மறையாகச் சிந்தித்து செயல்பட்டுப் பழகிப் போனவர்கள்.இவ்விரண்டு நிலைகளுமே ஆபத்தானவை.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையும் எழுதுவது, பேசுவது சமூக அமைதியைக் குலைக்கும். எல்லாவகைச் சுதந்திரங்களும் வரையறைக்கு உட்பட்டவையே! உடையின்றி உலா வருவதை மனித உரிமை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கனவன் மனைவியாக இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் செய்யும் காரியத்தை நடுத்தெருவில் செய்வதை எந்தச் சட்டமும் அனுமதிக்காது. சாலையில் விரும்பியபடி வாகனம் ஓட்ட சாலை விதிகள் அனுமதிக்காது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசாங்க இரகசியத்தை வெளியிட மாட்டார்கள். நாட்டின் நலன் கருதி இராணுவ இரகசியங்கள் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும்.

‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் தம் மனசாட்சிப்படி சுதந்திரம் உடையவர்கள், என்றே இந்திய அரசியல் சாசனம் 25(1) பிரிவு கூறுகிறது. எனவே முழுமையான சுதந்திரம் என ஒன்று கிடையாது. ஆகவே கருத்துச் சுதந்திரம் எனும் ஆயுதத்தை கவனமாகவும் பொறுப்பு உணர்வோடும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சீர்திர்த்தம் ஏற்படுவதற்குப் பதிலாக சீர்குலைவே ஏற்படும்.

. தன்னுடைய மதத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்ட நூலைத் தடை செய்ய வேண்டும் என்கிறான்; ஆனால் பிற மதங்களைத் தாக்கி எழுதப்பட்ட நூல்களை தடை செய்யாதே-அது கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்காதே என்கிறான்.

. தன்னுடைய சமுதாயம் கொடுமைக்கு உள்ளானால் வன்முறை, கொடூரம், மனித உரிமை மீறல் எனக் கூக்குரல் இடுகிறான். ஆனால் பிற சமூகங்கள் அநீதிக்கு உள்ளானால் மெளனமாக இருக்கின்றான். அல்லது ஒரு படி மேலே போய், இது அவர்களுக்குத் தேவைதான்; நல்ல பாடம் என்கிறான்.

. தன்னுடைய மதத்தில் பிடிப்புள்ளவர்களை ‘ஆன்மீகவாதி’ என்கிறான். ஆனால் பிற மதப் பற்றாளர்களை அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்,பத்தாம் பசலிகள் என்கிறான்.

. தன்னுடைய மதம் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டால் ‘ஆன்மீகம்  தழைக்கிறது’ என்கிறான். வெளிநாட்டில் தோன்றி மதம் தன் நாட்டில் வந்தாலோ ‘அந்நியமதம் அந்நியக் கலாச்சாரம், என்கிறான்.

. தன்னுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை போராளிகள், விடுதலை வீரர்கள் என்கிறான். ஆனால் மற்றவர் செய்தால் ‘பிரிவினைவாதி, பயங்கரவாதி’ என்கிறான்.

. ஒரே வகையான குற்றம்! ஆனால் ஓர் இனத்தவருக்கு அதிக தண்டனை; இன்னோர் இனத்தவருக்கு குறைந்த தண்டனை மூன்றாவது இனத்தவர்க்கோ விடுதலை!

. ஒரே மாதிரியான வேலை. ஒருவருக்கு அதிக கூலி; மற்றவர்க்கு குறைந்த கூலி

இத்தகைய இரட்டை நிலைகள் சமூகத்தின் அமைதியைக் குலைக்கும். மதம்,மொழி,இனம்,நாடு,பால் ஆகியவற்றின் அடிபப்டையிலும், உறவு, நட்பு, விருப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் வேறுபாடுகளை காட்டுவது அமைதியை ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும். இன்று உலகில் (பதிவுலகில்) நிலவும் பல குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் முக்கிய காரணமாகும்.

எங்கே அமைதி என்கிற புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதியிலிருந்து இந்த கட்டுரையை எடுத்திருக்கிறேன் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் குறிப்பாக பதிவுலகில் உள்ள நண்பர்கள் படிக்க வேண்டிய நூல்.