Friday, November 2, 2012

மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!


ஒரு ஜீன் இருக்கிறது - அதன் பெயரைச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. ஏனெனில் அதில் ஒரு தேசீய அவமானமே அடங்கியுள்ளது.
NDM என்பதில் ‘எம்’ என்றால் மெடல்லோ பீட்டா லாக்டமேஸ். இருந்துவிட்டுப் போகட்டும்; இதையெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவது, எம்பிபிஎஸ் படிப்பவர்கள் பட வேண்டிய கவலை. ஆனால் ‘என்டி’ என்றால் நியூ டெல்லி. அங்கேதான் பிரச்னை வருகிறது.
இந்த NDM-1 மரபீனி என்பதற்குக் கையில்லை, காலில்லை. ஆனால் இது ஏதாவது பாக்டீரியாக்களுக்கு உள்ளே போய் உட்கார்ந்துகொண்டால் சில என்சைம் நொதிகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிடும். பிறகு பெரும்பாலான ஆண்ட்டி பயாடிக் மருந்துகளால் அவற்றை அழிக்க முடியாது. ஆண்ட்டி-ஆண்ட்டி பயாடிக் சக்தி! இது ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு வகை பாக்டீரியாவுக்கும் தாவக்கூடியது.
NDM-1 ஊடுருவிய கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்பதால் இது போன்றவைகளை சூப்பர் கிருமி (super bug) என்பார்கள். சமீபத்தில் லான்செட் விஞ்ஞான இதழில் ஒரு அவதூறுக் கட்டுரை வந்திருக்கிறது : ‘இந்தியாவில் போய் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் நியூ டெல்லி சூப்பர் கிருமிகள் பிடித்துக்கொள்ளும், எனவே அங்கே போகாதீர்கள்’ என்கிறது கட்டுரை. சின்ன வயதில் குழந்தைகள் கொல்லைக் கிணற்றில் எட்டிப் பார்த்தால் ‘சோழப் பிரம்மஹத்தி’ பிடித்துக்கொள்ளும் என்று மிரட்டிய பட்டம்மா கிழவியின் ஞாபகம்தான் வருகிறது.
லான்செட் கட்டுரைக்கான ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து தந்தவர் ஒரு கன்னித் தமிழர்; கார்த்திகேயன். எதார்த்தமாக அவர் ஏதோ புள்ளி விவரங்களைத் திரட்டிக் கொடுத்தால், அதற்கு ஒரேயடியாக பேச்சாயி மேக்கப் போட்டு ‘இந்திய ஆஸ்பத்திரிகளே ஆபத்து’ என்று திரித்து விட்டார்கள். இதைக் கண்டு ‘என்னாங்கடா இது இடைச் செருகல்?’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார் கார்த்திகேயன்.
இந்த மாதிரி மிரட்டல் டெக்னிக்குகளின் பின்னணி என்ன என்று சில ஊகங்கள் உள்ளன. சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி!
காஸ்மெடிக் சிகிச்சையிலோ, டாக்டர் சுஸ்ருதர் காலத்திலிருந்தே நாம்தான் அத்தாரிட்டி. அழகு-அறுவை சிகிச்சை என்பது ஐரோப்பாவில் மிகவும் காஸ்ட்லியான விஷயம். 2006-ல் பிரிட்டனிலிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் கீழை நாடுகளுக்கு வந்து தொப்பை, தொங்கு சதை சிகிச்சை செய்து கொண்டு போனார்கள். கத்தியைத் தீட்டிக்கொண்டு காத்திருந்த வைத்தியர்கள், 5 கோடி பவுண்டு மதிப்புள்ள பிசினஸ் வெளி நாட்டுக்குப் போய்விட்டது என்று அரற்றினார்கள்.
சமீபத்தில்தான் அமெரிக்க செனட்டர் ஒருவர் இன்ஃபோசிஸ் போன்ற இந்தியக் கம்பெனிகளை ‘திருட்டு சாமான் விற்கும் கடை’ என்று நாக்கில் நரம்பில்லாமல் ஏசினார். ஒன்று தெளிவாகத் தெரிகிறது: நவீன இந்தியாவைக் கண்டு மேற்கத்தியர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள்!
ஆஸ்பத்திரியில், ஆஸ்பத்திரியால் தொற்றும் வியாதிக்கு நாஸகோமியல் இன்ஃபெக்ஷன் என்பார்கள். இந்த மாதிரி கிரேக்கச் சொற்றொடர்களெல்லாம் அமெரிக்கர்களின் எளிய வாயில் நுழையாது. எனவே சுலபமாக அவர்கள் ஹெல்த் கேர் வியாதி என்றே சொல்கிறார்கள்.
அகில உலகத்துக்கும் தர நிர்ணயம் செய்யும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 17 லட்சம் பேருக்கு நாஸகோமியல் தொற்று நோய் வருகிறது. அதில் 99,000 மரணங்கள் நடக்கின்றன! நம் ஒவ்வொருவருடைய குடலுக்குள்ளும் கோடிக் கணக்கில் சூப்பர் கிருமிகள் இருக்கலாம். எனவே இது ஏதோ இந்தியாவில் மட்டுமே ஆஸ்பத்திரிப் படுக்கை விரிப்புக்கு அடியில் விஷமச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் வியாதி என்று பிரச்சாரம் செய்வது ஒரு வியாபார தந்திரம்தான். 2006-ம் வருடம் டெல்லிக் கிருமியை விடப் பொல்லாக் கிருமி ஒன்று அமெரிக்காவின் டெக்ஸாஸில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு டெக்ஸாஸ் சூப்பர் பக் என்று யாரும் பெயர் வைக்கவில்லை.
ஒரு காலத்தில் பெரும்பாலான கிருமிகளுக்கு பெனிசிலின் போதுமாக இருந்தது. ஆனால் இயற்கையிலேயே பெனிசிலினுக்கு அழியாத கிருமிகள் அபூர்வமாக ஒரு சில இருக்கும். அவற்றைத் தவிர மற்ற எல்லாக் கிருமிகளையும் நாம் ஒழித்துவிட்டோம்; எனவே மருந்துக்குக் கட்டுப்படாத கிருமி வகை மட்டும் டார்வினுக்கு நன்றியுடன் பல்கிப் பெருகுகிறது. விளைவு, பெனிசிலினுக்கு பெப்பே என்று சொல்லும் புதுக் கிருமி! பிறகு அதை விட சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்கை நாடி ஓடுகிறோம்.
சூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு!
மருந்து ரெசிஸ்டன்ஸ் கொண்ட கிருமிகள் பரவுவதற்கு, நாம் அரை குறையாக மருந்து சாப்பிட்டு நிறுத்துவதும் மற்றொரு காரணம். சிறு நீரகப் பாதையில் வரும் கிருமிகளுக்கு 7 முதல் 14 நாள் வரை ஆண்ட்டிபயாடிக் எடுத்துக்கொண்டால்தான் வேரோடு ஒழிக்க முடியும். ஆனால் பல டாக்டர்களே இரண்டு மூன்று நாளைக்கு மட்டும் டோஸ் எழுதிக் கொடுத்து விட்டுவிடுகிறார்கள். (எல்லாம் செல்ஃப் ஃபைனான்சிங் செய்கிற வேலை!) நாமும் ஜுரம் போன்ற புறச் சின்னங்கள் குறைந்தவுடனேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பிரியாணி அடிக்கக் கிளம்பிவிடுகிறோம். அறைகுறையாக அழிக்கப்பட்ட பாக்டீரியா அந்த மருந்துக்கு எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிடும். அடுத்த முறை இன்னும் தீவிரமான ஆண்ட்டி பயாடிக் தேவைப்படும்!
ஆஸ்பத்திரிக் கிருமிகளில் க்ராம் பாசிடிவ், க்ராம் நெகடிவ் என்று இரண்டு வகையும் உண்டு. க்ராம் பாசிடிவுக்கு ஓரளவு மருந்து இருக்கிறது. க்ராம் நெகடிவ்வுக்கு மருதமலையில் மொட்டைதான் ஒரே மருந்து.
நியூயார்க் நகர ஆஸ்பத்திரிகளில் ஒரு பயங்கர க்ராம் நெகடிவ் கிருமி இருக்கிறது. மார்புச் சளி, சிறுநீர்ப் பாதையில் அழற்சி என்று ஆரம்பித்து ரத்ததிலும் தொற்றும். இது வரை மனிதன் கண்டு பிடித்த அத்தனை மருந்துகளும் அதை ஒன்றும் செய்ய முடியாது! இந்த சூப்பர் பூச்சி இப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியிலும் பரவிக் கொண்டிருக்கிறது.
ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிகளால் பரப்பப்படும் நிமோனியாவில் இருபது விழுக்காடு, மருந்தே இல்லாத வகை.
ஃப்ரான்ஸில் ஆஸ்பத்திரியில் அடி வைத்தவர்களில் 7% மக்கள் உபரியாக ஏதாவது கிருமியை வாங்கிக்கொண்டுதான் திரும்புகிறார்கள். இத்தாலியில் வருடா வருடம் 6.7% ஆஸ்பத்திரித் தொற்று; ஏழாயிரம் மரணங்கள் வரை ஏற்பட்டிருக்கலாம். சுவிட்சர்லாந்தில் 7.2%. இந்தியா, பாகிஸ்தான் பற்றி வாய் கிழியப் பேசும் பிரிட்டனில் நூற்றுக்குப் பத்து நோயாளிகள் பில்லையும் கொடுத்துவிட்டு பாக்டீரியாவையும் பெற்றுக்கொண்டுதான் போகிறார்கள்.
மற்றவர்கள் கதை இருக்கட்டும். இந்தியாவின் வண்டவாளம் என்ன? யாருக்கும் சரியாகத் தெரியாது. தொற்று நோய்களுக்கான தேசீய ரெஜிஸ்ட்ரி ஒன்று ஏற்படுத்தி எல்லா ஆஸ்பத்திரிப் பிரச்னைகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் ஒரு ரெக்கார்டும் கிடையாது. பெரும்பாலான மருத்துவ மனைகளில் பத்து முதல் முப்பது சதவிகிதம் வரை தொற்று ஏற்படலாம் என்று ஊகிக்கிறார்கள். அநியாயக் கட்டண ஆஸ்பத்திரிகளில் மட்டும் நோய்த் தொற்று குறைவு - மூன்று சதவிகிதம்தான். பேஷண்டுகள் வரிசையாக வராந்தாவில் பாய் போட்டுப் படுத்திருக்கும் தர்மாஸ்பத்திரிகளில் எவ்வளவு என்பதைக் கார்த்திகேயன்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
ஆனால் இந்தப் புள்ளி விவரங்களிலெல்லாம் ஒரு பிரச்னை. ‘ஆஸ்பத்திரியில் கிடைத்த தொற்று நோய்’ என்பதன் வரையறை என்ன? அதுவே நாட்டுக்கு நாடு, பேட்டைக்குப் பேட்டை மாறுபடுகிறது. லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் 250 பேர் செத்து விழுந்தார்கள். விசாரணை நடந்தது. MRSA என்ற சூப்பர் கிருமியை வாரி வழங்கியது ஆஸ்பத்திரிதான் என்பது தெரிய வந்தது. ஆனால் ஆஸ்பத்திரி ஆவணங்களில் இதைப் பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.
பொதுவாக எந்த ஆஸ்பத்திரியுமே தன்னுடைய நான்கு சுவர்களுக்குள் ஏற்பட்ட தொற்று நோய்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வதில்லை. ரொம்ப அதட்டிக் கேட்டால் ‘எண்ணிக்கையைச் சொல்கிறோம், ஆனால் எங்கள் ஆஸ்பத்திரியின் பெயரை மட்டும் வெளியே விட்டுவிடக் கூடாது’ என்ற கண்டிஷனுடன்தான் தருகிறார்கள்.
ஷிர்லி என்ற பெண் செனட் உறுப்பினரின் தந்தையே லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். ஆஸ்பத்திரிகள் தொற்று நோய்த் தகவல்களைத் தெரிவிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட ஆரம்பித்தார் ஷிர்லி. உடனே ஆஸ்பத்திரிகள் சார்பில் லாபி செய்பவர்கள் பாக்டீரியாவை விட அதிக எண்ணிக்கையில் புறப்பட்டு வந்து, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து சரிக்கட்டி, சட்டத்தின் பல்லைப் பிடுங்கிவிட்டார்கள். ஆஸ்பத்திரி இண்டஸ்ட்ரியின் அரசியல் செல்வாக்கு அப்படிப்பட்டது!
ஆஸ்பத்திரி சூழ்நிலையே ஆண்ட்டி பயாடிக்குகளில் சொட்டச் சொட்ட நனைந்த சூழ்நிலை. அட்மிட் ஆகும் நோயாளிகள் ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பலவீனமாக இருப்பார்கள். எந்த மாதிரி ஆண்ட்டி பயாடிக்குகளை எந்த அளவுக்குக் கொடுக்கிறோம் என்பதை ஆராய்ந்து உணர்ந்து கொடுக்க வேண்டும். ஆஸ்பத்திரித் தொற்று வியாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர், நர்ஸ், வார்டு பாய், டீ கொண்டு வரும் பையன் எல்லாரும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கையை டெட்டால், ஐடியால் போட்டுக் கழுவ வேண்டும். பல சமயம் தண்ணீர்ப் பஞ்சத்தினால் எல்லோரும் சற்று அசால்ட்டாக இருந்துவிடுகிறார்கள்.
கத்தி கத்தரிகள் முதல் பாண்டேஜ் பஞ்சு வரை எல்லாவற்றையும் வெள்ளாவியில் நன்றாக வேக வைக்க வேண்டும். (ஆனால் பணம் பிடுங்குவதற்காக ஈசிஜி, ஈஈஜி என்று அவர்கள் உபயோகிக்கும் விதவிதமான கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்வது கடினம்). ஏர் கண்டிஷனர்களிலிருந்து அவ்வப்போது சுத்தமான புதிய காற்று உள்ளே நுழையும்படி திருப்பி வைக்க வேண்டும். அவற்றின் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் நாஸகோமியல் ஆடிட் என்று தணிக்கை நடத்த வேண்டும்.
எல்லாவற்றுக்கும் முதலில், காசு கொடுத்து மார்க் ஷீட்டைத் திருத்தி டாக்டர், நர்ஸாக வந்தவர்களுக்கு நோய்த் தடுப்பில் முறையாகப் பயிற்சி கொடுக்க வேண்டும்.
Reference : ராமன் ராஜா கட்டுரைகள்

31 comments:

 1. யப்பா... படிக்கவே தலை சுத்துது! அருமையான பயனுள்ள தகவல்கள்!

  ReplyDelete
  Replies
  1. //யப்பா... படிக்கவே தலை சுத்துது!///
   இன்னும் அரசு பொதுமருத்துவமனைகளின் நிலையை இக்கட்டுரையில் சொல்லவில்லை
   அதை படித்தால் மயங்கியே விழுந்து விடுவோம்.

   வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டு இட்டதிற்கும் நன்றி!நன்றி!

   Delete
 2. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

  நண்பர்களிடமும் பகிர்கிறேன்...

  நன்றி...tm11

  ReplyDelete
  Replies
  1. ///நண்பர்களிடமும் பகிர்கிறேன்...//

   நன்றி! நண்பரே பகிர்வுக்கும் தமிழ்மண ஓட்டு இட்டதிற்கும்

   Delete
 3. salam bro...!
  masha allah
  good post bro
  keep it up.....!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. The latest in this series..you must have heard..is the steroid preparation which has been administered to an undisclosed number of people suffering from back pain. This medication is alleged to have triggered meningitis .. and the drug has been traced to a pharmaceutical company in MA. The drug has since been recalled from almost every medical shop all over the USA, and the company has also destroyed the existing stock. But the number of people who have been affected by the drug is in hundreds, and little more than twenty five have vacated the planet also.
  But one thing in fairness must be said of USA
  They have data.
  They cant buy antibiotics,vaccines, steroids etc. over the counter. In India, drop outs in schools engaged by Medical shops give medicines to vulnerable people who also buy them for usurious consultation fees by doctors who also prescribe not unusually unwanted tests.
  In USA, there is a protocol for everything. Doctors are not allowed to decide subjectively. They have to follow a protocol for almost every situation. this does not happen in India.

  Coming back the presence of virus in a few hospitals in New Delhi , the Central Govt, has already examined the issue and denied the speculation.

  However, what do you say of the hygeine in most of the dentists clinics? Are they cleaning their tools after they examine the teeth of one patient. They just put it on the table, and take to to examine another patient? Will they not pass on hepatitis or H1v1 to other patients?

  more on my blog
  sury-healthiswealth.blogspot.com

  subbu thatha.

  ReplyDelete
  Replies
  1. வளர்ந்த நாடுகளிடம் வளரும் நாடுகள் குப்பைகளை காப்பியடிப்பதற்கு இதுபோன்ற நல்ல விடயங்களை காப்பி அடித்தால் சிறந்தாக இருக்கும்

   வருகைக்கும் சிறந்த தகவலுக்கும் நன்றி

   Delete
 5. பயனுள்ள தகவல் இத்தனை படுயங்கர மருத்துவத்தை கட்டிங், வெல்டிங் (அறுவை சிகிட்ச்சை) களுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு மற்றவைகளுக்கு மாற்றுமருத்துவத்தை ஏன் நாடக்கூடாது?
  admin
  www.medimiss.net

  ReplyDelete
  Replies
  1. //மற்றவைகளுக்கு மாற்றுமருத்துவத்தை ஏன் நாடக்கூடாது?////

   நீங்கள் சொல்வது சிறந்த வழி மற்றவைகளுக்கு மாற்று வழிதான் சிறந்தது

   Delete
 6. விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.ஹைதர் அலி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. [ 2 ] பூனைக்கு மணி கட்டுவது யார் ?

  ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.

  சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.

  ஏறக்குறைய நான்காயிரம் வேதிப்பொருட்களை வேறு வேறு கூட்டணிகளில் பயன்படுத்திதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாத்திரைக்கு வெவ்வேறு கம்பெனிகளில் வேறு வேறு பெயர்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய "எங்கள் புராடக்ட்'களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்" என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.

  டாக்டர்களே தாங்கள் நடத்தும் கிளினிக்கிள் மருந்துக் கடைகளை ஏற்படுத்தி சேவை செய்வது பரவலாகக் காணப்பட்டாலும் மருந்து கடை நடத்துனர்களின் போட்டியால் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் டாக்டருக்கு 'பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், ஊக்கத்தொகை, இன்பச் சுற்றுலாவிற்கான பேக்கேஜ், அன்பளிப்புகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை அசத்தி விடுகின்றனர். இதனால் டாக்டரால் பரிந்துரை செய்யும் மருந்துகளை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

  இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை என்பது நமக்கெல்லாம் வியப்பைத் தந்தாலும் அரசால் நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிலோ, அல்லது கூட்டுறவு மருந்து கடை மூலமாகவோ M.R.P விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து கிடைப்பதுதான்.

  மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே !? என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.

  இறுதியாக 'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதால் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமானதொன்றாகும்.

  சேக்கனா M. நிஜாம்
  இறைவன் நாடினால் ! 'பூனைக்கு மணி கட்டுவது' தொடரும்...
  [ பூனைக்கு மணி கட்டுவது - பகுதி 1 ]
  http://nijampage.blogspot.in/2012/11/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. விரிவான பல தகவல்கள் அடங்கிய கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி
   உங்கள் வலைப்பூ கண்டேன் தொடர்கிறேன்
   வலையுகத்தில் நாம் கைகோர்ப்பது சரியான நோக்கத்திற்காக இருக்கட்டும் என்ற என் தலைப்புக்கேற்ற நோக்கத்தோடு கைகோர்ப்போம்

   Delete
 8. //நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு!//

  ஒரு தடவை வைட்டமின் குறைவுக்காக ( ஜிம் போன காலங்களில் )மாத்திரை வாங்கியதில லேடீஸ் கர்ப்பகாலங்களில் சாப்பிடும் மாத்திரையை குடுத்துட்டான் கடைக்கார பயபுள்ள . அப்புறமென்ன எனக்கு தலை சுற்றல் வாந்திதான் .கடைகாரனை உதைக்க போனபோது அவன் சுவர் ஏறி குதித்து ஓடியது தனி கதை ஹி..ஹி... :-))

  ReplyDelete
  Replies
  1. ///லேடீஸ் கர்ப்பகாலங்களில் சாப்பிடும் மாத்திரையை குடுத்துட்டான் கடைக்கார பயபுள்ள//
   ஹா ஹா ஹா கர்ப்ப மாத்திரையா????? அடப்பாவிகளா

   ////அப்புறமென்ன எனக்கு தலை சுற்றல் வாந்திதான் .கடைகாரனை உதைக்க போனபோது அவன் சுவர் ஏறி குதித்து ஓடியது தனி கதை ஹி..ஹி... :-))//

   இதை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை ஆபீஸில் ஏன் கம்யூட்டரைப் பார்த்து சிரிக்கிற என்று கேக்குறாய்ங்க :-))

   Delete
 9. அரசு மருத்துவமனையில் நோய் தொற்றுக்கு பயந்து தனியார் மருத்துவமனை தேடி சென்றால் என்ன வியாதி என்று தெரிந்து கொள்ளவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் மெடிக்கல் ஷாப் தான் நடுத்தர வயது குடும்பத்தினரின் மருத்துவமனையாகிறது.

  நல்ல விழிப்புணர்வு பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ////இந்நிலையில் மெடிக்கல் ஷாப் தான் நடுத்தர வயது குடும்பத்தினரின் மருத்துவமனையாகிறது.//

   கவலைக்குரியது இங்கு தான் ஆபத்து இருக்கிறது மருத்துவத்துறை என்பது காசு பார்க்கும் துறையாக மாறியதின் விளைவு இது

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. அறிய தகவல் அடைங்கிய நல்ல பயணுள்ள தகவல் நன்றி சகோதரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வழக்கமான ஆதரவுக்கும் நன்றி சகோதரரே

   Delete
 11. ஒரு வியாதிக்கு மருத்துவம் தேடி போனால் வேறு ஒரு நோயினை பதிலுக்கு சுமந்து கொண்டு தான் வர வேண்டியுள்ளது. ஹார்ட்டிற்கு ஆஞ்சியோ செய்ய போக அதற்கு ஏற்ற படும் டையினால் கிட்னி செயல்பாடு முரணாகி அதன் பயனாக அப்படியே நெப்ராலஜி டிபார்ட்மெண்டிலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டி இருக்கிறது. மருந்துகளினால் சைட் எஃபெக்ட் என்பதே இப்போதைய நிலைமை. இதில் பாக்டீரியா, வைரஸ் என்று வேறு பாடு பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக சொன்னீர்கள் மருந்துகளின் எதிர்வினைகளுக்கு தனியாக மருத்துவம் பார்ப்பதை என்னவேன்று சொல்வது வேதனை

   நீண்ட காலத்திற்கு பிறகு வருகை தந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி

   Delete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தங்களின் பதிவிற்க்கு நான் எனது நன்றியினை முதலில் சொல்லியாக வேண்டும் மிக அருமையான ஆக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக்கம் தங்களி பல பதிவுகளை நான் எங்களின் adiraitiyawest என்ற எங்களின் வலைத்தளத்தில் எடுத்து பதிந்து வருகிறேன் உங்களின் ஈமெயில் அட்ரஸ் அனுப்பித்தரவும். எனது அட்ரஸ் kmmalik2009@gmail.com தொடர்பு வைத்து கொள்ளவும். வஸ்ஸலாம்

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தங்களின் பதிவிற்க்கு நான் எனது நன்றியினை முதலில் சொல்லியாக வேண்டும் மிக அருமையான ஆக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக்கம் தங்களி பல பதிவுகளை நான் எங்களின் adiraitiyawest என்ற எங்களின் வலைத்தளத்தில் எடுத்து பதிந்து வருகிறேன் உங்களின் ஈமெயில் அட்ரஸ் அனுப்பித்தரவும். எனது அட்ரஸ் kmmalik2009@gmail.com தொடர்பு வைத்து கொள்ளவும். வஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
   உங்கள் ஈமெயிலுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்
   தங்கள் வருகைக்கும் நட்பிற்க்கும் நன்றி

   Delete
 14. பதிவு இப்போ தான் படிச்சேன். அருமை. மாஷா அல்லாஹ். நிறைய சொல்லனும்னு தோணுது. தமிழ்ல டைப் பண்ணா ரெண்டு நாளாகும் :)

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் ..மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான பதிவு..ஜஜாகல்லாஹ் சகோ இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடர்ந்து எழுத அல்லாஹ் உதவிபுரிவானாக..

  ReplyDelete
 16. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

  ReplyDelete
 17. பாய் இப்பெல்லாம் GH க்குப்போணால் மூக்கில் துனிய கட்டிட்டுத்தான் போனும்

  ReplyDelete