Monday, November 5, 2012

சிவாஜி கணேசன் : ஒரு நடிப்பின் கதை

“ இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர், நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம் : இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்;  அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச் சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும்  சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்துக் கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் செய்யத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும்  உயர்குடி நாயகனாக, பக்தர்கள் மீது பழமையை நிலை நாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கணவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியை திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் தந்தையாக என்று ஏகப்பட்ட தந்தைகளாக சிவாஜி நடித்தார்; நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழஇயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் - என்று என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

சிவாஜியும் மிகை நடிப்பும்

அதை மிகை நடிப்பு என்பாரின் விமர்சனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்திலும் அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்குக் குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்குக் காரணம் என்று கூறி விட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர்  அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்திவிட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது. முதலில் ஜாடிக்கேற்ற மூடி ; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு - அது முற்றத் தொடங்கியது.
‘ பாரசக்தி’ கால சமூகப் பின்னணி

‘பாரசக்தி’ தயாரிப்பாளருக்குப் பண உதவி செய்த எவிஎம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 - இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது.  மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன. அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூகநோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்ற நட்சத்திரங்கள்ப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. கங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான  அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொருபுறம் மொழிவழி மாநிலங்களுக்கான  போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி - இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின்  குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னுறுத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி

இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம் மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு - வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 - களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி 60 - களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் திரை நட்சத்திரமாகி விட்டார்.

அவரது ‘இமேஜு’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்குத் ‘தீனி’ போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள் ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’களுக்கும் இதுவே இலக்கணம். எம்.ஜி.ஆர். ரஜினியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப்பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமல்ஹாசனுக்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டகதையும், வித்தியாசமான மேக் -அப்பும், மணிரத்தினம் - சங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை - தனது நடிப்பாற்றலால் - தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களில் வெற்றியை வைத்து, வெற்றி பெறும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னது தான் எனத் தமக்குத்தாமே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர். திரையுலகில் திறமையும் - சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர். நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான - சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க முன் வைத்த தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப்பாசம், மொழி - இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
சிவாஜி கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும்

சிவாஜி தனது நடிப்புத்திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளைப் பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை -  எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போலவே, அவரும் சமகாலச் சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும், பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், கங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் - உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் - வாழ்க்கையும், இமேஜூம் கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொண்டு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாகப் புகை விடுவது, கம்பளி போர்த்திய உடலுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ -நளினமாகவோ நடந்து வருவது போன்ற சாதனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியைப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான் வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நடசத்திரம்

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களை வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதை சரிக்கட்ட சிவாஜியும், எம்ஜிஆரும் 70 -களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். அதன் பின்னர் 80 - களின் துவக்கத்தில் பேரன் - பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீ தேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடனும் ஆடிப்பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது .அதன்பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை’  ‘தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப்பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90 -களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ‘இளைய தளபதி விஜய்’ ன் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார்.
உயர்ந்த மனிதரின் இறுதிக் காட்சி

இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ்பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத்திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா - சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்குத் தனது பேத்தியைக் கொடுப்பதில் முழுச் சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. தனது நடிப்புச் சாம்ராச்சியத்தில் அடங்கிக் கிடந்த ஒரு நடிகையும், புதுப்பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த் தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்குச் சமமாக எப்படிச் சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக்கூடும்.

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய்கூடச் சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் - நடிக்கும் தேவை ஏற்படவில்லை.

Reference : நூல் :சினிமா திரை விலகும் போது.

6 comments:

  1. ஆஹா..அருமையான அலசல்...

    ReplyDelete
  2. சிவாஜி பற்றிய வேறுகோணத்தில் எழுதப்பட்ட பதிவு...நல்லா இருக்கு அண்ணா..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. nallla vithamaana alasal ........


    nantri!
    sako...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல கட்டுரை சகோ

    //பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்குச் சமமாக எப்படிச் சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக்கூடும்.//

    இது மட்டும் தான் தவறு போல உள்ளது

    //

    ReplyDelete
  5. Sivaji was not born with silver spoon when he entered into Movie. He was Poor.

    ReplyDelete
  6. சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் பகிர்வு... நல்ல அலசல்...

    நன்றி...

    ReplyDelete