Friday, July 19, 2013

நூல் அறிமுகம் : பாட நூல்களில் பாசிசம் வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.



பாசிசம் எப்போதும் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து இயங்குகிறது. 1930களில் இத்தாலியில் பாசிஸ்ட்டுகள் நடத்திய ’பலில்லா’ அவான் கார்டி பள்ளிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இவற்றை நேரில் சென்று பார்த்து வியந்து குறிப்புகள் எழுதியதும் இதற்காக முசோலினையை நேரடியாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பச்சை மனங்களில் விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்கள் இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடு.செத்துப்போனவர்களும் இறந்தகாலங்களும் இன்று வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. இந்துத்துவவாதிகளுக்கு வரலாறு ஒரு பாதுகாப்பான ஆயுதம்.

’நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். சின் குருஜி கோல்வால்கர். இந்துத்துவ பா.ஜ.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக அவர்கள் இந்தக் கருத்துக்களை தமது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் பயிற்றுவித்து வந்தனர். வித்யா பாரதி, சரஸ்வதி சிசு மந்திர் முதலான பெயர்களில் நாடெங்கும் சுமார் 60.000 பள்ளிகள் வரை அவர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின்னர் மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிய உடன் மாநில அரசுப் பள்ளிகளுக்கான பாடநூற்களை இந்த நோக்கில் உருவாக்கினர்.

பாடநூற்களைப் பரிசீலிப்பதற்காக Ncert யால் (கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழு ) நியமிக்கப்பட்ட தேசியக் குழு (National Steering Commitee of Text Books - 1996) இவர்களது பாடநூற்களைக் குறித்து கடுமையாக எச்சரித்தது. தேச பக்தி என்ற பெயரில் படிப்படியாகப் பச்சைக் குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைப்பதே இந்நூற்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது என்று மதிப்பீட்டுக் குழு இவர்களது பாடநூற்களைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தவுடன் தீவிர இந்துத்துவாதியும் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குக் குருபூஜை செய்பவருமான முரளி மனோகர் ஜோஷி வசம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. UGC (பல்கலைக் கழக மாணியக் குழு) ncert, cbse (உயர்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம்), ICHR (வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு) முதலான உயர்கல்வி அமைப்புகளில் இருந்த மதச்சார்பற்ற கல்வியாளர்களையும், வரலாற்றறிஞர்களையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் வகுப்பு வெறியர்களையும் ஜோஷி நியமித்தர்.

இந்த நூல்

வரலாற்றைக் கையிலெடுத்தார்கள்

இல்லாத குதிரைகளில் சவாரி செய்யும் இந்துத்துவம்

வரலாற்றின் பெயரால் முஸ்லிம் வெறுப்பு

மீண்டும் மீண்டும் கொலை செய்யப்படும் காந்தியடிகள்


இப்படி நான்கு தலைப்புகளில் இந்நூலில் மிக ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறார். பாடப்புத்தங்களில் இருக்கும் அபத்தமான வரலாற்று திரிபுகளை அறிய வாசிக்க வேண்டிய நூல்.

நூல் :
பாட நூல்களில் பாசிசம். வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு : சுயமரியாதை இயக்கம்

1 comment: